கஅபா ஒரு சிறுவிளக்கம்
ஹமீது ஜா·பர்
ஒன்றைப் பற்றிய கருத்து அல்லது பொருள் அல்லது அபிப்பிராயம் கொள்வது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம். யார் எதைப் பற்றியும் எந்த கருத்தையும் கொள்ளலாம், ஆனால் அதை வெளிப்படுத்தும்போதுதான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆழ்ந்து ஆராயாமல் போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுப் போனால் அது பாமர மக்களை சென்றடையும்போது விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படி பலர்; அறிஞர்கள் என்று தங்களைத் தாங்களே பறைச் சாற்றிக்கொள்பவர்கள் சிலர் செய்ததின் விளைவாக இன்று இஸ்லாம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு வருகிறது. "இஸ்லாம் தறாகப் புரிந்துக்கொள்ளப்பட்ட மிக உயர்வான மார்க்கம்" என்று பெர்னார்ட் ஷா சொன்ன கூற்றை இன்று இஸ்லாமியர்களே நிரூபித்து வருகின்றனர்.
இஸ்லாமிய வணக்க வழிபாடு மாற்று மதத்தவருள் சிலருக்கு ஒரு வித சிலை வணக்கமாகத்தான் தோன்றும், இதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பற்றி புரியாமல் வளர்ந்து அல்லது புரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமே இல்லாத அழகிய முஸ்லிம் பெயரைத் தாங்கிக்கொண்டிருக்கின்ற இஸ்லாமியனுக்கும் அப்படி தோன்றுவது வேதனைக்குரியது. உடல் வளர்ந்திருக்கும் அளவுக்கு உள்ளம் வளரவில்லை என்று சொல்லலாம். அத்தகையவர்கள் பத்து வயது சிறுவனின் நிலையில் இருக்கிறார்கள் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.
மார்க்க அறிஞர் ஒருவரிடம் ஏழு வயது நிறம்பாத சிறுவன் ஒரு கேள்வி கேட்டான். அவன் கேட்ட கேள்வி இதுதான்: எல்லோரையும்போல் நானும் இறைவனை வணங்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனவே 'இறைவன் எங்கே இருக்கிறான்? என்று சொல்லுங்கள். 'மேலே இருக்கிறான், வானத்தில் இருக்கிறான்' என்று அந்த அறிஞர் பதிலைச் சொன்னவுடன், எந்தவிதத் தடையுமில்லாமல், 'என் தாய் தந்தையர் சொல்வதுபோல்தான் நீங்களும் சொல்கிறீர்கள், அவன் வானத்தில் இருந்தால் நாம் வானத்தைப் பார்த்துத்தானே வணங்கவேண்டும்? தரையில் தலையை வைத்து வணங்குகிறீர்களே, அது ஏன்? என்று அடுத்தக் கேள்வி அந்த சிறுவனிடமிருந்து வந்தது.
"மக்களிடம் உரையாடும்போது அவர்களின் பகுத்தறிவுக்குத் தகுந்தவாறு பேசுங்கள்" என்ற நபிக் கருத்தை மறவாத அந்த அறிஞர் சொன்னார், 'மகனே! இறைவன் வானத்தில் இருக்கிறான் என்பது உண்மை, ஆனால் அவன் கால்கள் மண்ணில் எங்கும் இருக்கின்றன. நாம் கண்ணால் அவற்றைப் பார்க்கமுடியாது. நாம் தரையில் தலையை வைத்து வணங்கும்போது நம் முகத்தை அவன் கால்களில் வைக்கிறோம்.'
ஏழு வயது நிறம்பாத சிறுவனுடைய நிலையில் ஐம்பதும் அறுபதும் வயது நிறம்பிய சிறுவர்கள் பலரை மக்களிடையே இன்றும் காணமுடிகிறது. 'உடல் வளர்கிற அதே வேகத்தில் உள்ளமும் வளர்கிறது' என்று உறுதியாகக் கூறமுடியாது. அப்படி வளர்ந்தால் முதியோர் அனைவரும் ஞானிகளாகவும் சிறியோர் அனைவரும் பேதைகளாகவும் இருப்பர்.
ஆரம்பமும் முடிவுமற்ற இறைவனைத் தவிர படைக்கப்பட்ட எந்த ஒன்றும், மனிதனால் வணங்கப்படும் தகுதியற்றது. மலையைப் போன்ற உறுதி வாய்ந்தப் பொருள்; காற்றைப் போன்ற அருவுருவப் பொருள்; தண்ணீரைப் போல் குறைந்த சடத் தன்மைப் பெற்ற பொருள்; மண்ணகத்தைப் போல் தன்னகத்தே ஒளியற்ற பொருள்; சூரியனைப் போல் ஒளிமிக்கப் பொருள்; சந்திரனைப் போல் ஒளியைப் பிரதிபலிக்கும் பொருள்; "அர்ஷை"ப் போல் அதி சிறப்புமிக்கப் பொருள்; அணுவைப் போல் சக்தி வாய்ந்தப் பொருள்; மனிதனைப் போல், மிருகத்தைப் போல் உயிருள்ளப் பொருள் இப்படி கோடிக்கணக்காக உள்ள எந்த பொருளையும் வணங்கக்கூடாது என்பது இஸ்லாத்தின் சட்டம். ஏனெனில் அவை அனைத்தும் படைக்கப்பட்டவை. படைக்கப்பட்ட எந்த ஒன்றையும் படைத்தவன் நிலைக்கு உயர்த்துவது இறைவனின் பிரதிநிதி என்று சிறப்பிக்கப்பட்ட மனிதனின் கீழ்த்தரமான செயலாகும்.
கஅபாவை நோக்கி முஸ்லிம்கள் வணங்குவதை சிலை வணக்கத்துடன் ஒப்பிடுவதை முஸ்லிம் அல்லாதவர்களிடம் குறிப்பாக மேற்கத்திய நாட்டவர்களிடம் இந்த சிந்தனை உள்ளது. இது இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாகவே இருந்துவருகிறது. இதற்கு பதிலலிக்கும் வகையில் பேரறிஞர் மௌலானா அஷ்ர·ப் அலி தஹ்னவி அவர்கள் தமது 'அஷ்ரா·புல் ஜவாப்' என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
கஅபவின்முன் நின்று வணங்குவதும், க·பாவை முன்நோக்கி வணங்குவதும், கஅபா என்று சொல்லப்படும் 60 அடி நீளம், 60 அடி அகலம், 60 அடி உயரம் கொண்ட சதுர வடிவான கட்டிடத்தையோ அல்லது பிறப்பும் இறப்புமற்ற இறைவனின் சமாதி? யை(யோ) அல்ல. தவிர அங்கு யாருடைய சமாதியும் இல்லை. கஅபா என்ற அந்த கட்டிடம் இருந்தாலும் அல்லது அழிந்தாலும் அல்லது இடிக்கப்பட்டாலும் அல்லது சேதப்படுத்தப்பட்டாலும் அல்லது வெறும் நிலமாக இருந்தாலும் கஅபா என்று சொல்லப்படும் அந்த இடத்தை நோக்கியே முஸ்லிம்கள் தொழவேண்டும் என்பது இறைக் கட்டளை.
கஃபா வரைபடம்(KA'BAA PLAN)
கஃபா உள்அமைப்பு(Cross section of Ka'baa)
தொழுகை என்று சொல்லப்படும் இறை வணக்கத்தில் ஓர் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். உலகின் எப்பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் அவர்களது தொழுகையிலும் அந்த ஒழுங்கு ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படவேண்டும். எனவே அத்தகைய ஒழுங்கு இறைவனால் வகுக்கப்பட்டது. எல்லோரும் ஒன்றாக ஒரே ஒழுங்கில் இறைவனை வணங்கும்போது தனி மனிதன் உள்ளத்திலிருந்து வெளிப்படும் சக்தியைவிட பலபேர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் Collective Mental Force மிக சக்தி வாய்ந்தது. இதை அடிப்படையாக வைத்துதான் ஜமாஅத் தொழுகை என்று சொல்லப்படும் கூட்டுத் தொழுகை, கூட்டாக பிரார்த்தனைக் (துஆ) கேட்பது, ஹஜ் போன்றவை கடமையாக்கப்பட்டன. இது மட்டும் காரணம் அல்ல இன்னும் பல வலுவானக் காரணங்கள் உள்ளன. எனவே, இஸ்லாத்தில் சொல்லப்பட்ட அனைத்து செயல்களுக்கும் காரணம் இல்லாமலில்லை. அவற்றில் சில நமக்குத் தெரிகின்றன, பல தெரியவில்லை. தெரியாதது நம்முடைய குற்றம்.
கஃபா
நபிகள் நாயகம் அவர்கள் மதினா வந்தபின் அவர்களும் நபி தோழர்களும் பைத்துல் முகத்தஸி(ஜெரூஸலத்தி)லுள்ள மஸ்ஜித் அக்ஸாவை நோக்கியே 16 மாதங்கள் தொழுது வந்தார்கள். ஒரு நாள் மாலை நேரத்தொழுகை(அஸர் தொழுகை)யின்போது இறை உத்திரவு வரவே மக்காவை நோக்கித் தொழத் தொடங்கினார்கள்.
"(நபியே!) உம்முடைய முகம், அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் 'கிப்லா' (வாகிய மக்கா) வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) 'மஸ்ஜிதுல் ஹராமி'ன் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! விசுவாசிகளே! நீங்களும் எங்கிருந்த போதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக!...." (அல் குர்ஆன் 2: 144)
ஹஜ்ருல் அஸ்வத் - இது கஅபாவின் கிழக்கு மூலையில் தரையிலிருந்து சுமார் 5 அடி உயரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் கஅபாவை ஏழு முறை வலம் வரவேண்டும். இது சொர்க்கத்திலிருந்து வந்ததாக சொல்லப்படுகிறது, உறுதியான ஆதாரம் கிடையாது. இதை முத்தமிடுவது நபி வழி, ஆனால் இதை இறவனாக நினைத்து வணங்கும் வணக்கமல்ல.
ஒரு முறை கலி·பா உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டார்கள். பிறகு கூறினார்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். இருப்பினும், நான் நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால், நான் உன்னை முத்தமிடமாட்டேன்.' (ஆதாரம்:- நூல்: முஸ்லிம்)
ஹஜ்ருல் அஸ்வத்
தமிழ் எப்படி தொன்மைவாய்ந்த மொழியோ அதுபோல் சமஸ்கிருதம் மட்டுமல்ல அரபியும் தொன்மைவாய்ந்த மெழி. ஏறக்குறைய தமிழும் அரபியும் ஒத்த வயதுடைய மொழிகள் என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒரு மொழியின் சில சொல் அதன் ஓசை வேறொரு மொழியில் இருக்கலாம், அதற்காக அந்த சொல்லின் மூலம் இந்த மொழியிலிருந்து வந்தது என்றோ அங்கிருந்து இங்கு போனது என்றோ சொல்லமுடியாது. அதேபோல் ஒரு மொழியில் ஆளப்படும் சொல் வேறொரு மொழியில் விகாரமானப் பொருளைத் தரக்கூடும், அதற்காக இது வளமில்லாத மொழி என்று தீர்மானிக்கமுடியாது. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென்று தனித்தன்மை உள்ளது. எனவே கஅபாவும் கர்ப்பகிரஹமும் ஒன்றல்ல; ஹஜ்ருல் அஸ்வத் என்ற கருப்புக் கல்லும் அஷ்வேத என்ற கருப்பல்லாத (any color) சிவ லிங்கமும் ஒன்றல்ல. எனவே ஒன்றை மற்றொன்றுடன் உரசிப்பார்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
---o0o---
குறிப்பு: இது திண்ணை 29-6-06 இதழில் திரு. சூபிமுகமது எழுதிய கட்டுரைக்குப் பதில்
Friday July 14, 2006 திண்ணையில் வெளிவந்தது.
No comments:
Post a Comment