Thursday, December 23, 2010

சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்

சற்றேரக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன் செல்லி நகரம் என்று அழைக்கப்பட்ட அதிராம்பட்டினத்தில் வாழ்ந்த பெரும் புலவரும் சூஃபி ஞானியுமாகிய செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்கள் தம் நண்பர் கதிர்வேல் உபாத்தியாயருக்கா பழனி முருகனை அதிராம்பட்டினத்திலேயே காட்சித்தரச் செய்தார்.

முருகப்பெருமானைத் தோன்ற செய்வதற்காக எழுதிய பதிநான்குப் பாடல்கள் தொகுப்பை அவரின் வழிதோன்றல்களால் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டு கடந்த 2003ல் ஐந்தாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. என்றாலும் அண்ணாவியாரின் கொள்ளு கொள்ளு கொள்ளுப் பேரன் அதிரை அஷ்ரஃப் அவர்களின் அனுமதியுடன் இதனை ஈங்கு வெளியிடுகிறேன்.




Sunday, November 7, 2010

புலவர் மெய்தீன்








ரசூல்(சல்) அவர்கள்மீது இஷ்க் வைத்த எத்தனையெத்தனைப் பேர்களில் புலவர் பெருமக்கள் ஒரு சாரார், புரவலர்கள் ஒரு சாரார், கவிஞர்கள் ஒரு சாரார். இப்படி எண்ணிலடங்காதவர்கள் எத்தனையோ? அவர்களில் ஒர் சிலரைத் தவிர பெரும்பாலானோர் அறியப்படாமலே இருக்கின்றனர். உலகுக்கு அறிமுகமாகாவிட்டாலும் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சொந்த ஊரிலேயே அறியப்படாமலேயே மண்ணாகிவிட்டனர். அவர்களில் எனதூர் மஞ்சக்கொல்லை என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் வாழ்ந்தவர் புலவர் மெய்தீன்.

நான் சிறுவனாக இருந்த போது எங்களூர் பைத்து சபைக்கு பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். இஸ்லாம் என்றாலே பிரிந்து இருப்பதுதானே. அதனால் நீயா நானா போட்டி வந்து எங்கள் சபை இரண்டாகப் பிரிந்தது. அதில் அவர் தெருவிலிருக்கும் சபைக்கு பாடல்கள் எழுதிக்கொடுத்தார், எங்களுக்கு கவிஞர் மதிதாசன், கவிஞர் நாகூர் சலீம் போன்றவர்கள் பைத்து எழுதிக்கொடுத்தனர்.

ஒவ்வொருத்தரும் அவங்கவங்க ஊரைப் பற்றி, அதன் சிறப்பைப் பற்றி இணையத்தில் எழுதியிருக்கிறார்கள். நாமும் நம் ஊரைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. விளைவு சென்ற ஜூலையில் ஊர் சென்ற போது செய்திகள் சேகரித்தேன். அப்போதுதான் புலவர் மெய்தீனைப் பற்றி நிறைய செய்திகள் கிடைத்தன. எனவே அதை தனிப் பதிகையாக இட முடிவு செய்து இதனைத் தருகிறேன்.

நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அவரைத் தெரியும். மெலிந்த ஒட்டிய உடம்பு, கருப்பு நிரம், அம்மைத் தழும்புள்ள முகம், அளவான மீசை, வெடுக்கென்ற நடை. அவரைப் பார்த்தால் யாரும் புலவர் என்று சொல்லமுடியாது. தன் புலமையை வெளிப்படுத்திக் கொள்ளாத எளிமையானவர். எளிமை தோற்றத்திலும் மட்டுமில்லை, பேச்சிலும் செயலிலும் இருந்தது.

இவரின் பாடல்கள் அனைத்தும் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளவனவாகவே இருந்தன. கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருந்த இவர் தனிப்பட்ட எவர் மீதும் பாடல்கள் புனைந்ததில்லை. எப்போதுமே கருப்புச் சட்டைப் போடும் அவர் நண்பர் பீர் முஹம்மது தந்தை பெரியாரைப் புகழ்ந்து அவரது கொள்கைகளைப் பாராட்டி ஒரு பாடல் எழுதித்தருமாறு ஒரு முறை வினவியபோது, நீ கெஞ்சிக்கூத்தாடினாலும் பெருமானாரைத் தவிர வேறு யார் மீதும் பாடல் புனையமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

கலைமாமணி கவி கா. மு. ஷரீஃபு இவருக்கு உறவினர் மட்டுமல்ல நண்பரும் ஆவார். ஒரு முறை கா. மு. ஷரீஃப் மஞ்சக்கொல்லை வந்திருந்தபோது இங்கே இருந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம் என் கூட மெட்ராஸ் வா, சினிமாவுக்குப் பாட்டு எழுத வாய்ப்பு வாங்கித் தருகிறேன், நிறைய சம்பாதிக்கலாம் என்றழைத்தபோது. எனக்கென்று ஒரு கொள்கை உண்டு, அதை விட்டு நீங்கமாட்டேன், தூய்மையான இஸ்லாத்தின் கொள்கையை விட்டுவிட்டு அசிங்கத்தனமாகப் பாட்டெழுத சொல்கிறாயா? அதை நீயே செய்துக்கொள் என்று மறுத்தவர் நம் புலவர் பெருமான்.

அவரது பாடல்களில் பெரும்பாலனவை நபிகள் கோமானைப் புகழ்ந்ததாகவே இருக்கின்றன, அவைகளில் சில:

"பாடுவோம் பாடுவோமே - புகழ்
பாடுவோம் பாருள
ஆளவந்தோன் நபி மீது......

நாடுவோம் நபி னடை
யதை யொழுக
நலனடைவீர்
பலனடைவீர் - புகழ் பாடுவோம்.."


நபிகள் கோமானைப் பின் பற்றி வாழ்ந்தால் நலன் மட்டுமல்ல பலனும் அடைவீர் எனவே நபிகள்பிரானைப் புகழ்ந்தால் மட்டும் போதாது அவர்களின் வழிமுறையையும் ஏற்று நடக்கவேண்டும் என்று அறிவுறுத்தும் அவர் வேறொரு பாடலில் நபிசொல் மறந்தால் நாம் என்ன நிலைக்கு ஆளாவோம் என்பதையும் எச்சறிக்கத் தவறவில்லை. இதோ:

"நன்கோன் நபிசொல்
நாம் மறந்தோம்
நலிவடைந்தோம் சோதரனே
நன்குணர் வாயே நீயே..!
நன்குணர் வாயே..!!"

"நாயகர் நாளிதுவே - நபி
நாயகர் நாளிது
நாம் புகழ்வோம்
களி கூறி"


என்று மீலாது நபியன்று பாடுவதற்காவே தனிப் பாடல் தீட்டிய புலவர். தன் மனம் சங்கடப்படும்போதெல்லாம் நபிகள் பெருமானார் அவர்களின் உதவியை நாடாமலிருந்ததில்லை.

"இரசூல் நபியே !
இது ஞாயமா - அண்டிடும்
ஏழை மீது கோபமா
இனி ஏது செய்வேன் - இரசூல் நபியே"

"மகா மேதையெனும் விளங்கும் நபியே
மனதோடு உமை நம்பினேன் பாரிலே
சதா நான் துன்பம் காண்பது ஞாயமோ
அதை தீர்க்காத தென்ன மாயமோ

உலகினில் வாழ்ந்த தீமையை மாற்றி
உயர்வினைத் தந்த சாதகரே..!"

என்று நபிகளாரிடம் வினவும் புலவர் நம்மையும் சிந்திக்கச் சொல்கிறார்

"சிந்தித்துப் பாராய் சோதரா - நபி சேவை
சிந்தித்துப் பாராய் சோதரா - நபி சேவையை

வட்டியினால் பல குடும்பத்தை
வாட்டியர் வம்பர்கள் என்றே - ஒரு
சட்டம் வகுத்த நம் தருமராம்
துட்டர்களின் சூதாட்டத்தை
துளைத்தனர் அன்றோ - சோதரா.."


சிந்தனை என்பது மனித சமுதாயத்துக்கு இறைவன் அளித்த அருட்கொடைகளில் ஒன்று. இறைவனே தன் திருமறையில் பல இடங்களில் சிந்தியுங்கள், சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன என்று மொழிகிறான். சிந்தனையினால் பெறும் பயனை நல்வழியில் செலவிடாமல் தீய வழியில் செலவிடவே பலரில் சிலர் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அங்கே அந்த சிலருக்கென்று தனிப் பயன் இருப்பதை வழிநடக்கும் பாமரர்களுக்குத் தெரிவதில்லை. எனவே இப்போதெல்லாம் அறிவை விட அகந்தையே முன்நிற்கிறது. இதை அன்றே எச்சரித்துள்ளார் நம் புலவர் பெருமான். இதோ....

"அல்லாஹ்வின் செயல் எல்லாம் நீ அறிவாய்
அகந்தைக் கொள்ளாதே - நபி
சொல் தள்ளாதே...!

நில்லாது உன் தேகம் எந்நேரம்
நீங்காது சந்தேகம்
பொல்லாத பாவ செயலைப் புரிந்து
பொழுதை வீன் கழிக்காதே
அழுது பின் சலிக்காதே..!

செல்லாது உன் வாதம் - ஆது
அவன் மகன் சத்தாதும்
கல்லான நெஞ்சன் நமுரூது பிர்அவ்ன்
கதி என்ன உணர்ந்தாயோ
நிலை என்ன தெரிந்தாயோ..!

வெல்லாது உன் அறிவு - இறைவன்
விதியினை இது தெளிவு
பாவவினை யனுகா இறையோனை-தொழுது
பலன் பெற முனைவாயா
நலம் மிகும் நினைவாயா..!"


ஆழமான கருத்துக்களை அள்ளித் தெளித்த புலவரவருக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் நெய்னார் முஹம்மது, இவர் டீகடை வைத்திருந்தார் இரண்டாமவர் ஜாஃபர் யூசுஃப், நல்ல அறிவாற்றல் பெற்ற இவர் பல கலைகளில் சிறந்து விளங்கி பலரின் பாராட்டைப் பெற்று முப்பதை நெருங்கும்போது விடைபெற்றுவிட்டார்.

புலவரைப் பற்றிய செய்திகளை சேகரிக்கும்போது அவருடைய புகைப் படம் கேட்டேன், தேடினேன், அவர் வீட்டிலும் இல்லை வேறு எங்கும் கிடைக்கவில்லை. அனால் ஒரு செய்தியை மட்டும் மகனார் சொன்னார், மஹான் ஷிப்ளி பாவா(ரஹ்) அவர்கள் மீது பாடல்கள் இயற்றி வைத்திருந்தார். அது யாரிடமும் கிடைக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தீயிட்டு எரித்துவிட்டேன், மற்ற பாடல்கள் அடங்கிய புத்தகம் செல்லரித்துவிட்டது என்று எந்த வருத்தமுமில்லாமல் சொன்னபோது எனக்கு வருத்தமாக இருந்தது. புலவரின் தந்தையும் புலவராகவே வாழ்ந்தவர் ஆனால் அவர் புலமை வழித்தோன்றல்களுக்கில்லை. புலமை என்பது இறைவன் அளிக்கும் அருள். அது தகுதி உள்ளவர்களுக்குத்தானே கிடைக்கும்.

நன்றி: தகவல்களும் சில பாடல்களும் தந்துதவியவர், மூத்த மகன் நெய்னார் முஹம்மது அவர்கள்

Thursday, August 19, 2010

தலாயில் கைராத்

அல் ஜஜூலி(ரஹ்)
(807- 870 ஹிஜிரி)






உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று புனிதக் குர் ஆனின் தோற்றுவாயில் நமக்குத் சொல்லித்தரும் இறைவன் மற்றுள்ள எல்லா அத்தியாயங்களிலும் என்னிடமே உதவித் தேடுங்கள், உங்கள் தேவைகளை நானே பூர்த்திச் செய்கிறேன் என்று அறுதியிட்டு உறுதிக்கூறுகிறான்.

அவனது உயர் படைப்பினமாகிய நாமும் அவனையே வணங்குகிறோம்; அவனிடமே அனைத்தையும் கோருகிறோம். ஆனால் நம்முடைய கோரிக்கை நிறைவேறுவதில்லை, நம்முடையத் தேவை பூர்த்தியடைவதில்லை. நாம் எவ்வாறு தொழுதாலும் எத்தனை முறை முறையிட்டாலும் நம்முடையத் தேவைகள் நிறைவேறுவதில்லை; குறைந்த பட்சம் பகுதியாகிலும் நிறைவேறியுள்ளதா என்றால் இல்லை என்ற பதிலே நிற்கிறது.

அப்படியானால் இறைவன் தன் வாக்குறுதியைத் தவறவிடுகிறானா? இல்லை "பிறகு" என்ற அலட்சிய மனப்பான்மையில் இருக்கின்றானா? இல்லை நமக்கு கேட்கத்தெரியவில்லையா? இல்லை நாம் கேட்கும் துஆவில் குறைபாடுகள் உள்ளனவா? கேள்வி அதன் வடிவிலேயே இருக்கிறது.

விடை............!

இறைவன் தன் நிலையிலிருந்து மாறுவதில்லை; வாக்குறுதியை மீறுவதில்லை; அவன் சரியாகவே இருக்கிறான். நமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, தெளிவில்லாமல் குழம்பிய மனத்தோடு கேட்கிறோம். வேறுவார்த்தையில் சொன்னால் குழப்பம் மனதில் இருப்பது மனதுக்கே தெரியவில்லை; சிந்தனைச் சிதறிகொண்டிருப்பது நமக்கும் தெரியவில்லை. மனதை எங்கோ வைத்துக்கொண்டு நாவை சுழற்றிகொண்டிருக்கிறோம் என்பதுதான் எதார்த்தம்.

"காலையில் கேட்கும் துஆ மாலைக்குள் நிறைவேறி இருக்கவேண்டும்; இரவில் கேட்கும் துஆ மறு நாள் நிறைவேறவேண்டும், அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் நிறைவேறவேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கேட்கும் துஆவில் குறைபாடு உள்ளது.

இறைவனிடத்தில் துஆ கேட்பதானால் வெறும் வார்த்தைகளால் கேட்கக்கூடாது. அவன் உள்ளத்தைப் பார்ப்பவன், எனவே மனதால் கேட்கவேண்டும். உடல், மனம், ஆன்மா இவை மூன்றும் இணைந்த நிலையில் கேட்கப்படும் துஆ உடனே கபூலாகும். வெறு வார்த்தையில் சொன்னால் எது நிறைவேறுமோ அதை மட்டுமே திரண்டிருக்கும் மனம் கேட்கும். மற்ற எதையும் கேட்காது.

"அல்லல்பட்டு, சங்கடப்பட்டு, மனம் நொந்துபோயிருப்பவனை ஏசாதீர்கள், அவன் கேட்கும் துஆ உடனே பலித்துவிடும்" என்று பெருமானார் அவர்கள் சொன்னதில் எவ்வளவு ஆழமான கருத்து இருக்கிறது என்பதை உற்றுப்பாருங்கள்" என்று ஹஜ்ரத் (அப்துல் வஹ்ஹாப் பாக்கவி) அவர்கள் சொன்னார்கள்.

துஆ கேட்பதில் மனத்தின் பங்கு பெருமளவு இருக்கிறது. மனதைக் கட்டுப்படுத்தி ஓர் நிலைக்குக் கொண்டுவருவது சாதாரணக் காரியமல்ல. பல இரவுகள் கண்விழித்து, உணவைத் துறந்து, ஆசையை அகற்றி அல்லல்கள் பல பட்டாலே மனத்திரட்சி வசமாகும்.

இத்தகைய சிரமங்கள், அவதிகள் வேண்டாமென்று ஒரு சில பெரியோர்கள், வலிமார்கள் சுலபமான சில வழிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். அத்தகையப் பெரியோர்களில் ஒருவரான ஹஜ்ரத் முஹம்மது பின் சுலைமான் அல் ஜஜூலி அவர்கள் "தலாயில் கைராத்" என்ற உயர்வான அவ்ராதை நமக்கு தந்திருக்கிறார்கள்.

அவ்ராது என்ற அரபி வார்த்தைக்கு தினம் ஓதக்கூடிய புகழ்மாலை என பொருள் கொள்ளலாம். அவர்கள் எழுதிய அதனை உற்று நோக்கினால் இறைவனைப் புகழ்ந்தவண்ணமாகவே இருக்கும். அப்படி புகழ்ந்துக்கொண்டு வரும்போது இடையில் ஒரு வரியில் சின்ன துஆ, பின் புகழ்ச்சி, இப்படியாக கடைசிவரை இருக்கிறது.

ஆழ்ந்து சிந்தித்தால் இறைவனைப் புகழ்ந்துக்கொண்டு வரும்போது அப்புகழ்ச்சியில் மனம் லயித்து ஆன்மாவுடன் சங்கமித்த நிலையில் முறையீட்டை இறைவனிடம் வைக்கப்படுகிறது. வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மனம் ஒன்றி கேட்கப்படும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதிப்பாட்டை இங்கு உருவாக்கி இருக்கிறார்கள் இமாமவர்கள். இவர்கள் இயற்றிய இவ்அவ்ராது இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல ஆப்ரிக்கா ஐரோப்பிய மேலை நாடுகளிலும் பரவலாக ஓதப்படுகிறது.

இமாம் அவர்களின் முழுப் பெயர் அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் சுலைமான் பின் அபு பக்கர் அல் ஜஜூலி அல் சிமாலி. இவர்கள் மொராக்கோ நாட்டின் ஜஜுலா பகுதியைச் சார்ந்த பெர்பெர் இனத்தைச் சார்ந்தவர்கள் தம் எட்டாம் வயதில் தந்தையை இழந்து தம் சகோதரர் ஈசா அவர்களுடன் மராகிஸ் பகுதியில் தன் ஆரம்ப வாழ்க்கை பகுதியை கழித்தார்கள்.

ஆரம்பக் கல்வியை தம் சொந்த ஊரிலும் பின் ஃபெஜ்(Fez) என்ற ஊரிலும் பயின்றார்கள். இளம்பருவத்திலே திருக்குரானை மனனம் செய்ததோடு மட்டுமல்லாமல் பிக்ஹ், அரபி மொழியியல், கணிதவியல் ஆகியவற்றை அபுல் அப்பாஸ் அல்ஹல்பானி மற்றும் அவரின் சகோதரர் அப்துல் அஜுஜ் ஆகியோரிடம் சற்றேரக்குறைய பதினாறு ஆண்டுகள் பயின்றார்கள். நீண்ட நாட்களாக நடந்துவந்த இனப்போராட்டக்காரணமாக புலம்பெயர்ந்து சற்றேரக்குறைய நாற்பதாண்டுகாலம் மக்கா, மதினா, பைத்துல் முகத்திஸ் ஆகிய நகர்களில் வாழ்ந்தவர்கள் தம் சொந்த ஊரான ஃபெஜ்(Fez) க்குத் திரும்பினார்கள். அங்குதான் "தலாயில் கைராத்" தை நிறைவுப் படுத்தினார்கள்.

ஒருமுறை பயணத்தின்போது ஒலு செய்வதற்காகத் தண்ணீர் தேவைப்பட்டது. அங்கிங்கும் சுற்றிப்பார்த்தபோது ஒரு கிணற்றைக் கண்டார்கள். ஓடிச்சென்று பார்த்தபோது தண்ணீர் ஆழத்தில் இருந்தது. மொள்வதற்கு வாளி வேண்டும். வாளி இருந்தால் கையிறு வேண்டும், இரண்டும் இல்லாத நிலையில் தண்ணீரை எப்படி மொள்ள முடியும்? கவலைக் கொண்டவர்களாக எதாவது உதவிக் கிடைக்குமா என்று அங்குமிங்கும் பார்த்தார்கள். தூரத்தே இதை கவனித்துக்கொண்டிருந்த ஒரு மங்கை அருகே வந்து கிணற்றில் துப்பினாள், உடனே தண்ணீர் பொங்கிக்கொண்டு மேல் மட்டத்திற்கு வந்தது. இதை கண்ணுற்ற இமாம் அவர்கள் எப்படி செய்தாய் என்று வினவினார்கள். பெருமானார் அவர்களின் ஆசியால் என்னால் செய்ய முடிந்தது என்று பதிலளித்தாள். இந்நிகழ்வே தலாயில் கைராத் எழுத காரணமாக அமைந்தது.

ஷாதலியா தரீக்காவை தம் வாழ்வில் இணத்துக்கொண்ட இவர்கள் சுமார் பதினாங்காண்டு காலம் தனிமையில் (கல்வத்து) இருந்தார்கள். தனிமைக்குப் பிறகு அசஃபி என்ற பகுதியில் வாழ்ந்த போது பல்லாயிரகணக்கானோர் அவர்களின் சீடர்களானர். இதனைக் கண்ணுற்ற அப்பகுதியின் ஆளுநர் அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆளுநரின் உத்திரவுக்கிணங்கி ஆப்ரகால் பக்கம் பயணமானார்கள். ஞானச் சுவைக்கு அடிமையான அவர்களின் சீடர்கள் கூடவே சென்றனர். அங்கும் தன் சீடர்களை ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுத்துவதில் தன் நேரத்தை செலவிட்டார்கள். முரிதீன்கள் எனப்படும் சீடர்கள் அதிகமானதன் காரணமாக தன் மணவர்களை பல பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்களின் ஷேக் அபூ அப்துல்லாஹ் முஹம்மது அல்ஸகீர் ஸஹலி மற்றும் ஷேக் அபூ முஹம்மது அப்துல் கரீம் அல்முந்திரி பிரபல்யமானவர்கள்.

இதை கண்ணுற்ற அவ்வாளுநர் பொறாமைத் தீயின் வெம்மையினால் அவர்களுக்கு நஞ்சூட்டிக் கொன்றார். காலை சுபுஹுத் தொழுகையின்போது அவர்கள் உயிர் பிரிந்தது. எழுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின் அவர்களை உடலை மரக்காஷ் என்ற ஊரில் மீண்டும் அடக்கம் செய்வதற்காகத் தோண்டியபோது எந்த கேடுமில்லாமல் சற்று முன்பு அடக்கம் செய்யப்பட்ட உடல் போலிருந்ததாக தி என் சைக்லோபீடியா ஆஃப் இஸ்லாம் 1957 லீடன் பதிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Sunday, March 7, 2010

பெரிய நூஹ் வலியுல்லாஹ்

வேத புராணம்


தலாக் கொடுக்கப்பட்ட அந்தப் பெண்ணை மீண்டும் மணமுடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. தன் மாஜி மாமனாரை அணுகி தான் செய்த இமாலயத் தவறை உணர்ந்துவிட்டதாகவும் மீண்டும் அந்தப் பெண்ணையே மணமுடித்துக் கொள்ள விரும்புவதாகவும் தன் உள்ளக் கிடக்கையை சொன்னான். அவருக்கோ தலைச் சுற்றல் ஏற்பட்டது.

சடுதியில் சாத்தியப்படாத விசயத்தை சாதாரணமாகச் சொல்கிறானே என்று. தம்பி, கல்யாணம் என்பது கிள்ளுக்கீரை அல்ல இஷ்டத்துக்கு முடிக்கவும் எடுக்கவும், உங்களால் நாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோமென்று தெரியுமா உங்களுக்கு? என்றார் பெண்ணின் தந்தை சற்று ஆத்திரமும் வேதனையும் கலந்த குரலுடன். அவனும் விடுவதாக இல்லை, என்னால் ஏற்பட்ட துன்பம் அனைத்துக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்,
அவற்றை நிவர்த்தி செய்கிறேன், தயவு செய்து முடியாது என்று மறுத்துவிடாதீர்கள் என்று கெஞ்சினான். சரி என்னை மட்டும் சாந்த விஷயமல்ல எல்லோரையும் கலந்தாலோசிக்கவேண்டும் என்றார்.

மார்க்கச் சட்டப்படி தலாக் கூறப்பட்ட ஒரு பெண்ணை அதே மாப்பிள்ளை கல்யாணம் செய்துக்கொள்ள முடியாது. அப்படி செய்வதானால் அந்தப் பெண்ணை வேரொருவருக்குத் திருமணம் செய்துக்கொடுத்து அவர் தலாக் கொடுத்து, நான்கு மாதம் பத்து நாள் இத்தா இருந்த பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும். ஒரு வேளை அந்தப் பெண் ஹமலாகிவிட்டால் குழந்தைப் பிறந்த பிறகே கல்யாணம் செய்யமுடியும்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் அதே மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்துவைக்கும் முடிவுக்கு வந்தனர். ஆனால் அதற்கு முன் வேரொருவருக்கு மணமுடித்துக் கொடுத்து உடன் தலாக் கொடுக்கப்படவேண்டுமே! இதற்கு யார் சம்மதிப்பார்கள்? வாலிபன் ஒருவன் நிச்சயமாக சம்மதிக்கமாட்டான் எனவே வயோதிகராக யாராவதும் கிடைப்பார்களா என்று தேடலானர்.

அதுகால் அங்கு பள்ளிவாசலுக்கு வந்தார் ஒரு முதியவர். பழுத்தப் பழம், வயது மதிப்பிடமுடியாது, குடும்ப வாழ்க்கையைக் கடந்தவர்; லாயக்கற்றவர். அவரை அணுகினர், பெரியவருக்கு விருந்து படைத்தனர். பின் மெதுவாக செய்தியை சொன்னார்கள்.

அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெரியவர், நானோ மவுத்தை நோக்கிக்கொண்டிருக்கிறேன், இந்த சமயத்தில் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்வித்தால் ஊர் சிரிக்கும் ஆகவே வேறு யாருக்காவது செய்து வையுங்கள் என்றார்.

அவர்கள் அவரை விடுவதாக இல்லை. ஒரு இரவு மட்டும், இன்று இரவு கல்யாணம் செய்துக்கொள்ளுங்கள் மறு நாள் காலை தலாக் கொடுத்துவிடுங்கள். மார்க்கச் சட்டப்படி நாங்கள் முதல் கணவனுக்கே மறுகல்யாணம் செய்து வைத்துவிடுகிறோம். தாங்கள் எப்படியாவது சம்மதியுங்கள் நீங்கள் கேட்கும் வெகுமதிகள் தருகிறோம் என்றனர்.

அவர் சற்று யோசித்துவிட்டு, சரி நான் சம்மதிக்கிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்று பீடிகைப் போட்டார். என்ன, என்ன சொல்லுங்கள் என்றனர்.

மறுநாள் காலையே தலாக் கொடுத்துவிடுகிறேன், ஆனால் அந்தப் பெண் அதாவது உங்கள் மகள் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் தலாக் கொடுக்கமாட்டேன் என்றார். அதை அவர்கள் ஏற்றனர்.

விரைவாகவே திருமணம் நடந்தேறியது, மணமக்கள் தனி அறைக்குத் தள்ளப்பட்டனர், பொழுது விடிந்ததும் தலாக் பெறுவதற்கு எல்லோரும் தயாராகி அம்முதியவரை அணுகி தலாக் கொடுக்க நிர்பந்தித்தனர்.

அவர் அமைதியாக நான் சொன்ன நிபந்தனைப் படி அந்தப் பெண்ணை வரவழைத்து என் முன்னால் சம்மதம் தெரிவிக்கச் சொல்லுங்கள் என்றார்.

வரவழைக்கப்பட்ட மணப்பெண் அமைதியாகச் சொன்னாள், "என் வாழ்நாள் முழுவது இம்முதியவரே என் புருஷன், இனி நான் வேறு யாரையும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள்.

இது சற்றேறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தமிழக எல்லையையொட்டி கேரளத்திலிருக்கும் பூவாறு என்ற ஊரில் நடந்தேறியதாகவும் அந்த முதியவர் பெரிய நூஹ் வலியுல்லாஹ் என்றும் வாய்மொழி வரலாறு ஒன்று உண்டு. ஆனால் இதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது; இப்படியும் நடந்திருக்கலாம் என்று நம்பாதிருக்கவும் முடியாது.

நாகையை அடுத்த மஞ்சக்கொல்லை என்ற எமது சிற்றூரில் அடங்கியிருக்கும் செய்யது அப்துல் காதர் என்ற வலியுல்லாஹ் அவர்களின் புதல்வராக காயல்பட்டணத்தில் பிறந்த அவர்கள் சிறு வயதில் திருவடிக் கவிராயர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்றிருக்கிறார். நபிகள் நாயகத்தின் மீது 'திருப்புகழ்' பாடிய காசிம் புலவர்
அவர்களும் அதே திருவடிக்கவிராயரிடம் பாடம் கற்றிருப்பதால் இருவரும் சக மாணவர்கள், சமகாலத்தவர்கள் என்ற செய்தி கிடைக்கிறது.

இவர்கள் மஞ்சக்கொல்லையில் தம் தந்தையுடன் தங்கிருந்து அங்கு அடக்கமாயிருக்கும் செய்யது அஹமது வலியுல்லாஹ் அவர்களிடம் மார்க்கக் கல்வி பயின்றதாகவும் பின்பு பரங்கிப்பேட்டை சென்று மஹ்மூது தீபி(ரஹ்) அவர்களிடம் ஆன்மீகக் கல்வி பயின்றதாகவும் சொல்லப்படுகிறது. பின் அவர்கள் பொன்னானி சென்று அங்கு சில காலம் ஆசிரியராகப் பணியாற்றியதாகவும், பின் தன் வாழ்நாள் முழுவதையும் ஞானப்பாட்டையில் செலவு செய்ததாகவும் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் எப்போது பூவாறு வந்தார்கள் என்ற செய்தி தெளிவாக இல்லை. அங்கேயே தம் இறுதி நாள்வரை தங்கியிருந்து வேதபுராணத்தை இயற்றியதாக சொல்லப்படுகிறது.

வேதபுராணம் 27 படலமும் 910 பாடல்களும் கொண்ட பெரும் நூல். இதற்கு பாண்டி மண்டலம் செவ்வல்மா நகரம் வித்துவான் எம். ஏ. நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். அதில் முதலாவதாக கலிமாக் காரணப் படலத்தில் 22 பாடல்கள் இருக்கின்றன. இவை அகமியத்தின் அடிப்படையை விளக்குகின்றன. அடுத்து தொழுகைப் படலம், இன்னிசைப் படலம், குத்துபா படலம், மிஃராஜ் படலம், நோன்பு படலம் என்று நீண்டுக்கொண்டே போகிறது. ஒவ்வொன்றிலும் அதனதன் அகமியத் தாக்கமே உள்ளது புறச்செய்திகள் என்பது குறைவு. ஆத்மீக அறிவு சிறிதாகிலும் உள்ளவர்களே படிக்கமுடியும்
மற்றவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது.

ஆனால் எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படியாக இல்முனிசாப் படலம் என்ற பாடல் தொகுப்பை யாத்தளித்துள்ளார்கள். இதில் 15 பாடல்கள் உள்ள இத்தொகுப்பில் கணவன் மனைவிக்கிடையே உடலுறவு இஸ்லாமிய முறைப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கியுள்ளார்கள். இஸ்லாத்தின் sexology பற்றிய ஒரே பாடலாகத்தானிருக்கும்.

"இருகண் முடித்தா னொருகண்னாலே
இல்லெனுந் தம்மா லிழுத்துவாங்கி
முருகு நூனிலே நுக்தாவிலே
முட்டுவ துமட்டும் சுல்புமட்டும்
பருகும் நுகத்துமேல் வாங்கிக்கட்டப்
பாகமறியாத மானுடர் கேண்மோ
சொருகுங் குழல்மங்கை ஹாலுடனே
சுகமாய் மதந்தீர்க்க வறியமாட்டீர்"
- பாடல்: 1

என்று தொடங்கி மனைவி என்பவள் வெறும் போகப் பொருளல்ல; கூடல் என்பது வெறும் உணர்ச்சியின் வடிகாலல்ல; அது எத்தகைய புனிதம் வாய்ந்ததாக இறைவன் அமைத்துள்ளான் என இப்பாடல்களில் விளக்கியுள்ளார்கள் என்பது இக்கடைசி வரிகளில் தெளிவாகிறது

".....ஒளிவு லாநபி முஹம்மதைவு
முவந்து மனதிலே யுறுதியாக்கித்
தெளிவா மனதிலே திறமதாக்கிச்
சேர்ந்து முஷாஹிதா செய்துவாவே"
- பாடல்: 15

இதன் முழுப்பாடலும் விரைவில் ஆபிதீன் பக்கங்களில் காணலாம் காயல் மாநகரம் ஈன்றெடுத்த புலவர்கள் பலர், அவர்கள் வெறும் புலவர்களாக மட்டும் இருந்துவிடாமல் இறை நேசர்களாக வாழ்ந்து இஸ்லாத்திற்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. வெறும் மார்க்கத்தோடு நின்றுவிடாமல் தமிழ் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்ட இவர்களை தமிழக மக்கள் மட்டுமல்ல, தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல, அந்த ஊர் மக்களும் மறந்துக்கொண்டிருக்கிறார்கள்.

Monday, February 15, 2010

ஞானி பீர்முஹம்மது(ரஹ்)



தக்கலை பீர் முஹம்மது அப்பா


இஸ்லாம் அகிலமெல்லாம் பரவியபிறகு அந்தந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் வாழ்வியலிலும் வழிபாட்டிலும் மார்க்கச் சட்டங்களைப் பின்பற்றி வந்தாலும் கலாச்சாரப் பண்பாட்டு முறையில் தங்கள் பகுதியின் சமூக நாகரீகத்திற்குட்பட்டே வாழ்ந்து வருகிறார்கள். உணவு, உடை, மொழி, சடங்கு, சம்பிரதாயங்களில் இவற்றை காணமுடிகிறது. இவை மேலோங்கி இஸ்லாம் முற்றிலும் மாறுபட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுவிடாமலிருக்க "ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப்
புதுப்பிக்கக்கூடியவர்கள் (முஜத்திதுகள்) தோன்றுவார்கள்" என பெருமானார் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

சூஃபியாக்கள் அல்லது ஞானிகள் என்றழைக்கப்படும் வலிமார்கள் இறைவணக்கத்தோடு நின்றுவிடாமல் அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி வளர்ச்சியிக்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். மக்களின் அறிவுத்தாகத்திற்கேற்ப இறைவிளக்கங்களை அள்ளித்தந்திருக்கிறார்கள். அரபியில் மட்டுமல்லாது வட்டார மொழியிலும் புலமை பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள். தமிழைப் பொருத்தவரை அவர்களின் பங்கு மகத்தானது; வரையறைக்கு அப்பாற்பட்டது. ஆனால் தூரதிருஷ்டவசமாக அவைகள் மறைக்கப்பட்டன; இன்று மறுக்கப்படுகின்றன.

தமிழ் புலவர்கள் விட்டுச் சென்ற மரபைத் தொடர்ந்து இறைநேசர்களான சூஃபிப் பெரியார்களும் மஸ்தான்களும் பக்திச்சுவை சொட்டச்சொட்ட இறையுணர்வில் தன்னை மறந்து இன்பலயத்தில் எண்ணிறந்த மெஞ்ஞானப் பாக்களைப் பாடியுள்ளனர்.

ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பற்ற இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே தலைசாய்க்கவேண்டும்; தான் என்ற அகந்தையை மாய்த்து ஏகனின் அடைக்கலம் அடையவேண்டும்; அண்டசராசரங்களுக்கும் அதிபதியான அவனின் அடிமை என்ற எண்ணம்
எப்போதும் இருக்கவேண்டும்; தன்னிடம் ஒன்றுமே இல்லை, தான் ஆட்டுவிக்கப்படுபவன், எல்லாம் அவனே என்ற மாறாத உணர்வு எந்தகாலமும் இருந்துக்கொண்டே இருக்கவேண்டும். அவனே உள்ளத்தில் குடி இருக்கிறான், உலகத்தின்மேல் அருள் மழை பொழிகிறான்; உயிர்பிக்கிறவனும் அவனே, மரிக்கச் செய்பவனும் அவனே; சுருங்கச் சொன்னால் 'தௌஹீது' என்பது அல்லாஹ்தான் என்ற உண்மையில் ஊறித் திளைத்த ஞானிகளில் ஒருவரான பீர் முஹம்மது அப்பா அவர்கள் தாம் பெற்ற நம்பிக்கையை நம் நெஞ்சிலும் பதிக்கின்றார்கள் இங்கே..

"தந்தையிலி தாரமிலி தானவனு நீயே
தன்மைகொ டெவர்க்குமொரு தாபரமு நீயே
மைந்தரிலி யன்னையிலி மன்னவனு நீயே
மண்ணிலடி யார்க்கிரணம் வழங்குவது நீயே
சிந்தைதனி லிடறுதனைத் தீர்த்தருள்வை நீயே
தேட்ட மறிந்தெனக்குதவி செய்பனு நீயே
அந்தமிலி நீயெனக்கோ ரிழிவு வராமல்
ஆதியே நானுன் னடைக்கலம தானேன்"
(1)

இஸ்லாமியப் புலவர்கள் இறைவனையும் அவனின் தூதர் பெருமானார் ரசூல்(சல்) அவர்களையும் புகழ்ந்து பாடுவதோடு நிறுத்திவிடாமல் சித்தர்களாகவும் இறை பித்தர்களாகவும் இருந்து அகமியத்தை, அகமியத்தின் ரகசியத்தை அள்ளித் தந்திருக்கிறார்கள். அத்தகைய சித்தர்கள் குணங்குடி மஸ்தான் சாஹிபு(ரஹ்) அவர்களும் தக்கலை பீர் முஹம்மது அப்பா(ரஹ்)அவர்களும் இன்னும் சிலருமாவார்கள்.

சித்தர்கள் என்றாலே இரும்பைப் பொன்னாக்கும் வித்தையைக் கற்றவர்கள் என்ற நம்பிக்கை பாமரர்களுக்குமட்டுமல்ல படித்தவர்களுக்கிடையேயும் இருந்து வந்தது; இன்னமும் இருந்து வருகிறது. ஆனால் இரும்பு போன்ற இதயத்தைப் பொன் போன்று மாற்றவைப்பவர்கள் என்ற எண்ணம் மட்டும் இல்லை. இவர்கள் பஞ்சை மனிதர்களுக்கு எப்பாலை ஊட்டத்தவறினாலும்
ஞானப் பாலை மட்டும் ஊட்டத் தவறியதே இல்லை. ஆனால் ஒரு சங்கடம்! எதனையும் நேரிடையாகச் சொல்லாமல் யாவற்றையும் மறைமுகமாகவே சொல்லியிருக்கிறார்கள்.

சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி பரிபாஷை சொற்களால் அலங்கரிக்கப்பட்டு படிப்பவர்கள் மயக்கமேற்படும் வகையில் அமைந்திருக்கும். இத்தகைய சொற்களிலிருந்து வரும் கருத்துக்கள் புடம்போட்ட பத்திரைமாற்று தங்கம்போல் துலங்கும். ஆனால் அவற்றின் உட்கருத்தைப் புரிந்துக்கொள்வது எளிதான காரியமன்று. இரும்பை தங்கமாக்கும் இரசவாதாம் எத்துனைக் கடினமானதோ அதைவிடக் கடினமானது அதன் உண்மைப் பொருளை அறிவது. இந்த இரசவாதம் அகமியத்தை மட்டுமே உணர்த்துகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

புறச்சடங்குள் இல்லாது அகமியத்தை அடையமுடியாது என்பதால் புறச்சடங்குகளைப் பற்றியும் அவற்றின் செயல்முறைகள் பற்றியும் அங்காங்கே விளக்கியுமிருக்கின்றார்கள். அண்டகோடிகள் படைக்குமுன்பாக 'கன்ஜு மஃக்ஃபி' என்றழைக்கப்படும் மறைவான பொக்கிஷமாக இருந்த இறைவனை, அவன் நிலைகளை, அவன் பண்புகளை அப்பா அவர்கள் விளக்குகிறார்கள் 'பிஸ்மில்க்குறம்' என்ற ஞானப்பாவில்.

"ஆதிபெரியோனே றப்பில் ஆலமீனேயாதி
அஹதுநிலைசமதாக ஆலநிரைந்தோனே
அஹதியத்திலுஹதியத்தும் வாகிதத்துமாகி
அரூபவுரூபத்துள்ளே தானல்லவோதாத்து
தாத்தல்லவோ பாத்தினது லாகிறுசிபாத்து
லாகிறுக்குள் பாத்தினானான் ரகசியத்தின் பொருளே...."


உலகிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் அருவமாக இருந்து நடத்தப்படுகிறதுதான் தாத்து என்றும் தாத்தை பாத்தின் - மறைவானது என்றும் சிபத்தை லாஹிர் - வெளிப்பாடானது என்றும் வெளிப்பட்ட பொருட்களில் மறைவாக இருப்பது மகா ரகசியமாக இருக்கிறது என்றும் நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் பொருள்படுத்துகிறார்கள்.

அவர்களின் வரலாறு அவர்களின் பாடல்கள்மூலமாகவே அறியமுடிகிறதே தவிர வேறு வகையில் அறியமுடியவில்லை. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அல்லது மாதிஹர் ரசூல் சதக்கத்துல்லா அப்பா (1632 - 1703)காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை கீழ் வரும் பாடல்மூலம் அறியமுடிகிறது.

"நினைவுடன் பொருளு நிறைந்திடும்வகைநீதீயும் பிசுமிலினோடே
அனந்தமுந்தெரிய அஹுமதருரைக்க ஆதிதன் கிருபையினாலே
கனசயமாரும்மவுலானாறூமி கழறினார் அகதியத்ததிலே
மனதுமகிழ அறிவையுமறிந்து வழுத்தினார்சதக்கத்துல்லாவே"


நினைவில் கலந்திருக்கின்ற எல்லா ஞானப் பொருள்களையும் கூட்டித் திரட்டி, பிஸ்மில்லா என்கிற திருநாமத்துடன் நமது நபிகள் நாயகம்(சல்) அவர்கள் அருளிச்செய்தார்கள். அதை ஒன்றாகத் திரட்டி ஹலரத் மௌலான ரூமி(ரஹ்) அவர்கள் தமது மஸ்னவி ஷரீஃபில் சொன்னார்கள். அதனை ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் மொழி பெயர்த்துச் சொல்ல அதை எனது ஞானமணிமாலை, மஃரிபத்துமாலை முதலிய நூல்களுக்குச் சரிபார்த்து உலகத்தார்கள் விளங்கிக் கொள்ளும்படியாக குறமாகப் பாடினேன். (2)

"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்
தன்பால னிக்கதையைச் சாற்றினான் - வெங்காயம்
சுக்கோ சிவனிருப்பன் சுரோணிதமோ வல்லவிஞ்சி
ஹக்கோவென் றுள்ளறிந்தக் கால்"


திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் சிறுமலுக்கர் என்பாரின் செல்வப்புதல்வராகப் பிறந்து இறைவனின் தன்மைகள் யாவையும் தன்னிடத்து வருவித்துக்கொண்டவர்கள். அவனில் தன்னை நுழைத்துக்கொள்ளும் நுட்பமான ஞானத்தைப் பெற்றிருந்த ஹுசைன் மன்சூர் ஹல்லாஜ்(ரஹ்) அவர்களின் வழிமுறையில் வந்துவிட்டவர் என்று பறைச்சாற்றுகிறார்கள்.
இஞ்சி, நீரும் ஈரமும் பெற்றுள்ளது, அது உலர்ந்துவிட்டால் சுக்காக மாறிவிடுகிறது, அதற்கு என்றும் அழிவில்லை. ஐம்புலன்களையும் அடக்கியாண்டு தூங்காமல் தூங்கி, சாகாமல் செத்து சமாதி நிலை எய்துவிடுகிறவர்களை அந்த சுக்குக்கும் மற்றவர்கள் அனைவரையும் வெறும் இஞ்சியாகவும் பரிபாஷை மூலம் காட்டுகிறார்கள் அப்பா அவர்கள்.(3)

தென்னாட்டு கஜ்ஜாலி என்ற புகழைப் பெற்ற இவர்களை எத்துனைபேருக்குத் தெரியும்?

நன்றி:
(1) இலக்கியப் பேழை - கே. பி. எஸ். ஹமீது, பாவலர் பதிப்பகம்.
(2) பிஸ்மில்க்குறம் ஞான விளக்கவுரை - செவ்வல் மாநகரம் மகாவித்துவான் எம்.ஏ. நெய்னா முகம்மது பாவலர்
(3) இலக்கியப் பேழை - கே. பி. எஸ். ஹமீது, பாவலர் பதிப்பகம்.