Thursday, August 6, 2009
ஓர் அறிமுகம்
மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள்
8.10.1933 - 9.9.2002
நுழைவாயில்
அது பழய வசந்தகாலம், பள்ளிக்கூட நாட்கள், விடுமுறை நாட்கள் என்றால் எனக்கு பிரத்தியேகக் கொண்டாட்டம். எல்லோரையும்போல் நான் சுற்றப்போவதில்லை, ஊர் சுற்றுவது என்பது எனக்குப் பிடிக்காத ஒன்று எனவே பொழுதை கழிப்பதானால் அது மழைகாலமாக இருந்தால் ஒன்று வலையைத் தூக்கிக்கொண்டு வாய்க்கால் குளங்களில் மீன் பிடிக்கப்போவது இல்லையென்றால் காத்துதுப்பாக்கியை எடுத்துக்கொண்டு குருவி, கொக்கு,
மடையான் என்று கண்ணில் பட்டதை சுடுவது. எதுவுமே கிடைக்கவில்லையென்றால் ஒரு காக்கையையாவது சுட்டுவிட்டு ஓடிவருவது. அருகில் நின்றால் எல்லா காக்கைகளும் சுற்றிச்சுற்றி கொத்தவரும்.
கோடை காலங்களில் இது நடக்காது. ஏனென்றால் அப்போது வாய்க்கால் வறண்டுகிடக்கும்; குளங்களில் தண்ணீர் இருந்தால்தானே மீன் கிடைக்கும்? மீன் இருந்தால்தானே கொக்கு மடையான் வரும்? எனவே, நல்லபிள்ளையாகப் புத்தகங்கள் படிப்பது. குமுதம், கல்கண்டு, ஆனந்த விகடன், கல்கி என்று ஒன்றுவிடாமல் இரண்டு நாளில் முடித்துவிட்டால்.. யாராவது பைண்டு செய்து வைத்திருந்த சாண்டில்யனின் கடல்புறா; யவன ராணி, கல்கியின்
பொன்னின் செல்வன்; பார்த்திபன் கனவு இவைகளை மேய்ந்து விடுவேன். ஒரு நாள் நூலகத்திலிருந்து எடுத்துவந்த மு.வ. வின் கரித்துண்டு, அகல்விளக்கைப் படித்துவிட்டு தனிமையில் உட்கார்ந்து பல நாட்கள் அழுதுக்கொண்டிருந்தேன்.
இப்படிப்பட்ட புத்தகங்கள் இனிமேல் படிக்கக்கூடாது என்று ஒரே முடிவுடன் கவனத்தை வேறுபக்கம் திருப்ப முயற்சித்து முடியாமல் போய் மீண்டும் நூலகம் சென்றபோது கிடைத்த புத்தகம், இமாம் கஜ்ஜாலி அவர்களின் "இஹ்யாவு உலுமித்தீன்" என்ற பெரும் நூலின் சில பாடங்கள். நாகூர் S. அப்துல் வஹ்ஹாப் பாக்கவி அவர்களின் எளிய தமிழ் மொழிபெயர்ப்பு என் சிந்தையை உலுக்கிவிட்டது; என் மனம் ஏகாந்தத்தை உணர்த்தியது; ஒரு தனிப்பாதை தென்பட்டது; எனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணரமுடிந்ததே தவிர அது என்ன மாற்றம்? மாற்றம்தானா? இல்லை வெறும் மாயையா? என்பதை என்னால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை.
இக்குழப்பத்தைத் தெளிவுபடுத்தவேண்டுமென்றால். தீர்வு காண வேண்டுமென்றால் ஒரே வழி அவர்களை சந்திப்பது. எப்போது? நாளை போகலாம் பக்கத்தில் நாகூர்தானே நினைத்தால் இப்போதுகூட போகலாம்! நாளை போகலாம், நாளை போகலாமென்று நாட்கள் ஓடினவேயொழிய போனபாடில்லை.
பள்ளிப்படிப்பும் முடிந்தது, உடனே தொழிற் கல்வி, அதுவும் முடிந்து பயிற்சி, வேலை என்று நாட்கள் வருடங்களாகக் கடந்தன. அவர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் என் நெஞ்சில் ஓர் மூலையில் உறங்க ஆரம்பித்துவிட்டது.
பொறுப்புக்கள் கூத்தாட ஆரம்பித்தவுடன் இனி இங்கிருந்தால் பருப்பு வேகாது என்பதால் ஒரே நிலையாக நின்று வெளிநாட்டில் கால் வைத்துவிட்டேன்.
மூன்றாண்டுகள் உருண்டோடின. உறங்கிக்கிடந்த அந்த எண்ணம் விழிக்கத்தொடங்கியது. தாலாட்டுப் பாடி மீண்டும் உறங்கவைக்க முடியவில்லை. ஊர்
சென்ற மறுநாளே அந்த மகானை சந்தித்தேன், தனியாக அல்ல. அவர்களுடன் நீண்ட நாள் தொடர்பு வைத்திருந்த நண்பர் ஒருவர் துணையுடன்.
அஸ்ஸலாமு அலைக்கும் என்ற முகமனுடன் உறையாடல் தொடங்கியது.
'ஹஜ்ரத், என் பெயர் ஹமீது ஜாஃபர், எனக்குப் பக்கத்து ஊர்தான் மஞ்சக்கொல்லை.'
'உம்'
'நான் உங்கள் புத்தகங்களை பலமுறை படித்திருக்கிறேன். அதில் பல சந்தேகங்கள் வந்திருக்கின்றன, தங்களை நேரில் சந்தித்து அவைகளை
தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும் என்று நினைத்ததுண்டு, ஆனால் ஏதோ காரணத்தால் வர முடியவில்லை.'
'சரி'
'இப்போது சந்தேகங்கள் இல்லை, மாறாக சில பிரச்சினைகள் தீர்வு காணமுடியவில்லை ஒரே குழப்பமாக இருக்கிறது. தாங்கள்........'
'சந்தேகம் என்று சொன்னீர்களே அவைகள் தீர்ந்துவிட்டனவா? அல்லது தெளிவு கிடைத்துவிட்டனவா?'
'தீரவுமில்லை தெளிவுகிடைக்கவுமில்ல, பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டன அதனால் மறந்துவிட்டன.'
'அப்படியானால் கதைப் புத்தகம் படிப்பதுபோல் படித்திருக்கிறீர்கள், கவனமில்லாமமில்லாமல்.. ?'
'..............'
'சரி பிரச்சினை என்று சொன்னீர்களே, என்ன பிரச்சினை?'
ஒன்றுவிடாமல் சொன்னேன். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தவாறே ஒரு சிகரட்டை எடுத்து அதை நன்றாக பார்த்து உதட்டில் வைத்து திரீ ஸ்டார் லைட்டரை எடுத்து பற்றவைத்து, முனையிலிருக்கும் நெருப்பைப் பார்த்துக்கொண்டே மெதுவாக புகையை உள்ளே இழுத்து, சுவைத்தவாறே வெளியே விட்டுக்கொண்டே 'இதில் பிரச்சினை ஒன்றுமில்லையே! இதில் பிரச்சினை என்று நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதில் தீர்வும் இருக்கிறதே கவனிக்கவில்லையா?' என்றார்கள்.
'தீர்வா? ஒன்றும் புரியவில்லையே!'
'இதை இந்த கோணத்தில் பாருங்கள். அதில் தீர்வும் தெரியும்; பிரச்சினையல்ல என்று மட்டுமல்ல முன்னேற்றத்தின் முதல்படியும் தெரியும்.'
அந்த ஒரு வினாடியில் என் வாழ்க்கைத் தடத்தையே மாற்றியமைத்துவிட்ட அவர்களை வஹாப்சாபு என்று மக்களாலும், ஹஜ்ரத் என்று பொதுவாகவும் சாபுநானா என்றும் சிலராலும் அழைக்கப்பட்டு வந்தார்கள்.
அன்று ஏற்பட்ட தொடர்பு அவர்களின் இறுதி நாட்கள் வரை பிணைத்திருந்தது என்பதைவிட என் உள்ளத்தில், உணர்வில், சிந்தையில் கலந்து நிற்கிறார்கள் என்று சொல்வதுதான் சரியானதாகும்.
அவர்களுடன் நெருங்கிப் பழகிய காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் புதுமையானவை. அவர்கள் உஸ்தாத் என்ற நிலையில் மட்டும் நில்லாமல் தந்தையாய், சகோதரனாய், உற்ற தோழனாய் இருந்து அறிவு நின்று தடுமாறும்போதெல்லாம் விளக்கமளித்து நிலை நிறுத்தினார்கள்; குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் அறிவுப்பூர்வமான விளக்கம் அளித்தார்கள்; இவ்வுலகில் எப்படி வாழவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தார்கள்; சமுதாயத்தில் எப்படி
பழகவேண்டும் என்பதை சொல்லித்தந்தார்கள்; வேறு வார்த்தையில் சொன்னால் என்னை ராஜப்பாட்டையில் நடக்கவைத்தார்கள்.
இது அவர்களுக்கு அளித்த அறிமுகமல்ல, எனக்கு நானே செய்துகொண்ட அறிமுகம். விளம்பரம் மல்லிகைப் பூக்கல்ல, காகிதப்பூக்குத்தான் அது தேவை. பூவுடன் சேர்ந்த நாரும் மணத்துக்கொண்டிருக்கிறேன்.
இவண்,
ஹமீது ஜாஃபர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment