Saturday, August 22, 2009

ஊர் சுற்றிய ஓவர் கோட்

ஹமீது ஜாஃபர்



'Booooooooooo...mm.....' என்ற சங்கின் ஒலி அருகிலிருந்த துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த கப்பல்களிலிருந்து வந்தபோது எதிர் கட்டிடத்தில் தங்கியிருந்த மலையாளிகளின் 'HAPPY NEW YEAR..............' என்ற காட்டுக்கத்தலில் அடங்கிப்போனது. புது வருசம் பிறக்கிறதே எல்லா மக்களும் நலத்துடன் வாழ இறைவனை சற்று பிரார்த்திப்போம் என்ற எண்ணத்தில் பால்கனியில் அமர்ந்து துதித்துக்கொண்டிருந்தேன், ஐந்து நிமிடம் தொடர்ந்து வந்த அவர்களின் happy new year சவுண்டில் திரளமுடியாமல் மனம் திணறியது. ஒரு வழியா பிரார்த்தனையெ முடிச்சுக்கிட்டு எழுந்தபோது அவர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர் பாட்டில்களைத் திறந்தபடி.


புது வருடம் என்றால் பாட்டிலில்தான் தொடங்கவேண்டும் என்பது சிலரின் சித்தாந்தம்; வேறு சிலரோ இனிப்புகள் வழங்கி கொண்டாடுறாங்க; சிலர் கோயில்களுக்கு சென்று தனி வழிபாடு செய்றாங்க; கிருஸ்தவர்கள் மாதா கோயிலின் மணியோசையூடே கர்த்தரை விஷேச ஆராதனை செய்றாங்க. நான்... அது தனி வழி!


இவன் முஸ்லிமாக இருந்துக்கிட்டு கிருத்துவ வருஷ பிறப்பை கொண்டாடுறானே என்று சில மேதாவிகளுக்கு கேள்வி எழாமலிருக்க முடியாது. வாழ்க்கைக்குத் தேவையான எல்லா கணக்கு வழக்குகளையும் வயது முதல் வாங்குகிற சம்பளம் வரை இந்த காலண்டரைத்தானே பின்பற்றுறோம் என்பதை கருத்தில் கொள்ள அவர்கள் மறந்திருப்பது பெரிய விசயமல்ல.


பிரார்த்தனையை முடிச்சிக்கிட்டு எழுந்தபோது என்னுடைய கைபேசியில் குறுந்தகவல் ஒன்னு வந்திருந்தது. "வருசங்கள் வேண்டுமானால் புதுசாகப் பிறக்கலாம், உங்கள் மனசு எப்போதும்போல் பழசாகவே இருக்கட்டும். பிரியத்தோடும் பிரார்த்தனையோடும்-HAPPY NEW YEAR - ஹபீபுல்லாஹ்" என்ற செய்தியை புத்தாண்டு செய்தியாக கவிஞர் ஹபீபுல்லா நானா சரியாக 12.02 க்குஅனுப்பியிருந்தார்.


புத்தாண்டு வாழ்த்து சொன்ன முதல் நபர் அவர்தான். குறுகிய காலப் பழக்கத்தில் இத்தனை அன்னியோன்னியமாகவும், அண்ணனாகவும், நண்பனாகவும், பிரச்சனைகள் வரும்போது தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவும், தன்னை நாடி வருகிறவர்களின் காரியங்களை தன் காரியமாக ஏற்று நடத்திவைக்கிற காரியகர்த்தாவாகவும், மொத்தத்தில் உதவும் கரமாக இருக்கும் அவரை நினைத்தபோது மனம் மகிழ்ந்தாலும் மறுபுறம் நெகிழவும் செய்தது.


செல்வ(பணம்)மில்லாத செல்வாக்கு மிக்கவர்; பேங்க் அக்கவுண்ட் இல்லாத பணக்காரர்; நகர சுத்தி தொழிலாளி முதல் மாவட்ட கலக்டர் வரை அனைவராலும் மதிக்கப்படுபவர்; அவர் வீட்டுப்பக்கம் போகிறவர்கள் அவர் இல்லாவிட்டாலும் வீடு திறந்திருந்தல் 'கவிஞரே சலாமலைக்கும்' என்று சலாத்தை சொல்லிவிட்டுத்தான் போவார்கள் அப்படி ஒரு பிணைப்பு. இவருடைய பிரத்தியேக அறையில் ஜன்னல் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு ஈஸி சேரில் அமர்ந்தாரென்றால் இவர் கண்ணில் படாமல் யாரும் தெரு வழியே போகமுடியாது. 'ஓய்! என்னா ரெண்டு நாளா ஆளையே காணும், வாங்கனி உள்ளே, வந்து உம் முகத்தை காமிச்சுட்டுப் போரும்' என்று கூப்பிட்டு நலம் விசாரித்துவிட்டுதான் அனுப்புவார்.


ஊரில் மட்டுமல்ல இந்த செல்வாக்கு, மத்திய அமைச்சரிலிருந்து மாநில அமைச்சர் வரை முன் அனுமதிப் பெறாமல் சந்திக்க வல்லவர். அரசியலில்தான் அப்படி என்றுமட்டுமல்ல ஆன்மீகத்திற்கும் அணு அணுவாக விளக்கம் சொல்வார். குர்ஆனில் மார்க்க அறிஞர்களிடம் பெற முடியாத விளக்கத்தை இவரிடம் அறிவுபூர்வமாகப் பெறலாம்.


இவ்வளவு செல்வாக்கு இருந்தும் இவருடைய வாழ்க்கையை யாருடன் ஒப்பிடுவது என்று புரியவில்லை. காமராசருடன் ஒப்பிடுவதா? இல்லை கக்கனுடன் ஒப்பிடுவதா? இல்லை சாதிக் பாட்சாவுடன் ஒப்பிடுவதா? அது ஒரு தனி ஸ்டைல். எந்த பந்தாவும் கிடையாது, நிரந்தர வருமானம் கிடையாது ஆனா எந்த குறையுமில்லாம நிம்மதியான வாழ்க்கை. எதுக்காகவும் கவலைப் பட்டதும் கிடையாது, எது தேவையோ அது கிடைக்கிறது அதுக்காக யாரிடமும் பல்லை இளிப்பதும் கிடையாது, எந்த பொருளுக்கும் ஆசைப்பட்டதும் கிடையாது. எப்படி கிடைக்கிது? எப்படியோ கிடைக்கிது, அல்லாஹ் கொடுக்கிறான் என்பார்.


அழகான இரண்டு கட்டு வீடு ஆனால் அவரைப் பந்தல் மாதிரி இருக்கும். வெயில் காலத்தில் வட்ட வட்டமா சூரிய ஒளியை வீடு முழுக்கப் பார்க்கலாம். என்ன நானா இது என்று கேட்டால் அல்லா டிசைன் போட்டிக்கிறான் என்று சொல்வார். ஒரு முறை டெலிபோன் செஞ்சபோது, 'தம்பி! இங்கே மழை பேஞ்சிக்கிட்டிருக்கு, வூட்டை அல்லா கழுவிட்டுக்கிட்டிருக்கான், நான் ரெண்டு காலையும் தூக்கிவச்சுக்கிட்டு ஒரு நாக்காலியில் குத்தவச்சிக்கிட்டு பேப்பர் படிச்சிக்கிட்டிருக்கேன்' என்றார் அலட்சியமாக.


'நானா நீங்க வூட்லெ உட்கார்ரதெவிட நாக்காலியெ தெருவுக்கு எடுத்துக்கிட்டுப்போயி அங்கே போட்டு உக்காந்துக்கிட்டு கொடையெ புடிச்சிக்கிட்டு பேப்பர் படிங்க நல்லாஇருக்கும்' என்றேன்.


ஹா... ஹா... ஹா... என்று வெடி சிரிப்பு சிரிச்சார்.


'நானா சிரிக்காதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு.'


'ஏன் தம்பி?'


'ஆமா இருக்காதா என்ன? வூடுபூராவும் ஒழுவுது, நீங்க என்னடான்னா நியுரோ மன்னன் மாதிரி பேப்பர் படிச்சிக்கிட்டிருக்கேன் என்று சர்வசாதாரணாமா சொல்றீங்களே?'


'அல்லா இருக்கான் தம்பி!'


'இதுக்குமா அல்லா இருக்கான்? ஓடு ஊறி, மரம் ஊறி வூடு இடிஞ்சு விழுந்தா என்னவாகும்?'


'தம்பி......., சுனாமி வந்தப்போ எல்லார் வூட்லெயும் கடல் தண்ணி பூந்துடுச்சு ஆனா என் வூட்டுக்கு வரலே, கொல்லை கிணத்தடியோடு வந்துட்டு போய்டுச்சு. இத்தனைக்கும் என் வூடு தனிஞ்ச வூடு. இது அல்லாவுடைய வேலை இல்லையா? அப்ப காப்பாத்தலே?'


'அப்ப காப்பாத்தினாப்லெ எப்பவுமா காப்பாத்துவான்?'


'எப்பவும்தான் காப்பாத்துவான்.'


அவரோட இறை நம்பிக்கையையும் மன உறுதியையும் என்னால் புரிஞ்சுக்கொள்ளமுடியவில்லை. ஒரு முறை வீடு ரிப்பேர் பண்ணுவதற்காக கையில் பணம் இருந்தபோது, 'என் மவன் கடைசி வருசம் எம் காம் படிக்கிறான் பீஸ் கட்ட பணமில்லே, நாளைக்கு கட்லேன்னா பரீட்சை எழுத முடியாது யார்ட்டையாவது தோது பண்ணி கொடுத்தீங்கன்னா... ' என்று ஒருத்தர் வந்து கேட்டபோது கையிலிருந்த பணத்தை கொடுத்துட்டார்.


'ஏன் நானா கொடுத்தீங்க' என்று கேட்டதற்கு 'நாளைக்கு கட்டலேன்னா அவன் படிப்பு வீணாயிடும், நாம பிறகு ரிப்பேர் பாத்துக்கலாம். அது அவனோட "ஹக்" அல்லா என்னிடம் கொடுத்துவச்சிருந்தான், அதை அவன்ட்டே கொடுத்திட்டேன்' என்றார்.


இப்படி சொல்லி சொல்லியே வருடம் அஞ்சாறு கடந்துடுச்சு. எத்தனை முறை அல்லா கொடுப்பான் என்று தெரியலெ. இந்தாளுக்கு கொடுப்பதில் பிரயோசனமில்லை என்று அல்லா நிறுத்திட்டா..? அதற்கும் பதில் சொல்லிபுட்டார். 'அவன் நிறுத்தமாட்டான். ஏன்னா நான் அவனுடைய நல்லடியான். நல்லடியானை ஒருபோதும் கைவிடமாட்டான்.' என்று.


இரண்டு நாளைக்கு முன்பு வந்த எஸ் எம் எஸ்சில்..



"இறைவா!

எங்களை உயர்ந்தோனாய்

படைத்தாய்

நாங்களோ

தாழ்ந்தோனாகல்லவா

இருக்கிறோம்"


"இறைவா!

உன்னை அனைத்திலும்

சேர்த்தல்லவா பார்க்கச் சொன்னாய்

நாங்கள்

பிரித்தல்லவா பார்க்கிறோம்"



என்று இரண்டு கவிதைகளை அனுப்பியிருந்தார். படித்துவிட்டு உடனே போனைப்போட்டு, 'நானா, கவிதை நல்லா இருக்கு' என்று ஒரு மரியாதைக்கு சொன்னபோது நான் அடுத்த வாரம் டெல்லிக்குப் போறேன் என்றார்.


'ஹலோ, நானா என்ன சொல்றீங்க? டெல்லியிலெ யாரைப் பாக்கப்போறீங்க?'


'அங்கேந்து ஜெனிவா போறேன்.'


'எதுக்குப் போறீங்க? ஜெனிவாவுலே இலக்கிய கூட்டமா?'


'அதெல்லாம் ஒன்னுமில்லெ..., மனித உரிமை கமிஷன் அழைச்சிருக்கு. தமிழ் நாட்டு சார்பா முதல்வர் என்னையும் அனுப்புறார், டெல்லிக்குப் போய் பிரதமரை சந்திக்கிறோம், அதுக்குப் பிறகு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலமையிலெ டெலிகேஷன் ஜெனிவா போவுது, அதுலெ நானும் ஒரு மெம்பர்.'


'கேட்க சந்தோசமா இருக்கு, தமிழ் நாட்டுக்கு முத்திரை பதிச்சிட்டு வாங்க.'


'துஆ செய்ங்க.'


என் துஆ எப்போதும் இருக்கு. ஜெனிவாவுலெ மைனஸ் டிகிரிக்கு குளிர் இருக்கும், அதனாலெ..'


'அதனாலே...'


காமராஜர் வேஷ்டியெ கட்டிக்கிட்டு ரஷ்யா போனது மாதிரி நீங்களும் போவாதீங்க, கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு போங்க.'


'தம்பி, என்னிடம் சால்வை இருக்கு.'


சால்வை என்றதும் நண்பன் பாசுவின் ஞாபகம் வந்தது. பாசு விவசாயி எபோதும் தலையிலெ முண்டசோடுத்தான் இருப்பான். கோடையில் டவல் இருக்கும் குளிரில் மஃப்ளர் இருக்கும்.


'மஃப்ளர் பத்தாது சொட்டர் போட்டுக்குங்க இல்லேன்னா நெஞ்சுலெ சளி வைக்கும்' என்று அடிக்கடி சொல்லிவந்தால் அவன் பொண்ஜாதி. அவ நச்சரிப்பு தாங்காம ஜவுளி கடைக்குப் போய் விலை ஒயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்னு வாங்கி போர்த்திக்கிட்டு பொண்டாட்டி முன்னாலெ திடுதிப்புன்னு போய் நின்னுருக்கான். அவனை பாத்துட்டு, 'ரொம்ப நல்லாருக்கு, கைலெ ஒரு கம்பும் ஒரு அரிக்கலாம்பு லைட்டும் வச்சுக்குங்க நம்மூரு தலையாரி மாதிரி இருக்கும்' ன்னு சொல்லிட்டு மொகத்தை திருப்பிக்கிட்டு சமயக்கட்டுக்குப் போய்ட்டா. மனம் நொந்து போய் அன்னைக்கு அதெ தூக்கி எறிஞ்சவன் தான் இன்னைக்கு வரை அதெ எடுக்கவே இல்லை.


அந்த மாதிரி இவர் பொண்டாட்டியும் எக்கு புக்கா எதும் சொல்லிடக்கூடாதுன்னு நெனச்சுக்கிட்டு..


'சால்வை டெல்லி குளிருக்குப் பொருந்தும், ஜெனிவாவுக்கு லாயக் படாது, என் வூட்லெ குளிருக்காக உள்ள ஓவர் கோட் made in england ஒன்னு இருக்கு கொண்டுவந்து கொடுக்க சொல்றேன் அதையும் எடுத்திக்கிட்டுப் போங்க.'


'சரி தம்பி' என்று சொல்லிவிட்டு போனை வைச்சுட்டார்.


அந்த ஓவர் கோட்டுக்குப் பின்னால் ஒரு கதையே இருக்குது.


ஒரு வருஷம் நான் நாயா பேயா அலைஞ்சு அந்த வேலையில் அமர்ந்தேன். "கா காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசா இருக்கனும்" னு சொல்லுவாங்க. அந்த மாதிரி கவர்மெண்ட் உத்தியோகம், அதுவும் பாதுகாப்புத் துறையிலே. யூனிபாரத்தோடு வருசா வருசம் குளிர் கால உடையும் கிடைக்கும். அந்த உடை உடுத்துற அளவுக்கு இங்கே குளிர் கிடையாது. அதனாலெ ஒரு டிரஸ் இரண்டு மூன்று வருஷத்துக்கு வரும். இப்படி நாலைஞ்சு டிரஸ் சேர்ந்ததினால் எனக்கென்று ஒரு டிரஸ்ஸை வைச்சுக்கிட்டு மீதத்தை தெரிந்தவர்களுக்கு உபயம் பண்ணிடுவேன். அப்படி கிடைச்சதுதான் இந்த ஓவர் கோட்டும்.


என்னிடம் இரண்டு இருந்துச்சு. அதனால் ஒன்னை யாருக்காவது கொடுக்க தீர்மானிச்சேன். என் மைத்துனன் ஒருவன் இருக்கான் பேனா மூடி மாதிரி ஒன்னரை இஞ்ச் ஒயரத்தில், நீ தான் பைக்கில் டிராவல் செய்றவனாச்சே இதெ வச்சுக்க என்று கொடுத்தேன். பெரிசா இருக்கு மச்சான் என்று சொல்லி மறு நாளே திருப்பி கொடுத்துட்டான். அப்புறம் என் கூட்டாளி ஒருத்தன், பெரும்பாலும் சைட்லெதான் இருப்பான் ஒறைக்கிற வெயிலும் நடுங்குற குளிரும் அவன் தலையிலெதான். இரக்கப்பட்டு அவனிடம் கொடுத்தேன். பெரிசா தேங்க்ஸ் சொல்லிப்புட்டு எடுத்துக்கொண்டான். நானும் சந்தோஷத்திலெ இருந்தேன்.


அந்த சந்தோஷம் இரண்டு நாள்தான் இருந்துச்சு, திருப்பி கொடுத்திட்டான். ஏண்டா என்று கேட்டேன். போட்டுக்கிட்டுப் போனேன், சார் நீங்க வேட்டைக்காரன்லெ வர்ர எம் ஜி ஆர் மாதிரி இருக்கீங்கன்னு சைட்லெ சொல்றானுவ, ஆபிஸ்லெ என்னன்னா எம் ஆர் ராதா மாதிரி இருக்கேன்னு சொல்றானுவ, ரூம்லெ என்னடான்னா துப்பறியும் சங்கர்லால் மாதிரி இருக்கேன்டு சொல்லி ஆளுக்காளு வெடைக்கிறானுவ இது சரிப்பட்டு வராது என்று திருப்பிக்கொடுத்திட்டான்.


அப்புறம் எனக்கு தெரிஞ்ச சிலோன்காரன், அவன் பாரிஸுக்கு வேலைக்கு போனான். பாரிஸ் குளிரா இருக்கும் இதை என் அன்பளிப்பா எடுத்திக்கிட்டுப் போ என்று கொடுத்தேன். பொட்டியிலெ வைக்க இடமில்லே சாமான் ஜாஸ்தியா இருக்குதானே, அது உங்க கிட்டயே இருப்பதும் நல்லதுதானே என்று சிலோன் தமிழ்லெ கதச்சிட்டு திருப்பி கொடுத்தான்.


'நீ பொட்டியிலே வைக்காதே கையிலெ வச்சுக்க இல்லேன்னா போட்டுக்கிட்டு போ' என்றேன்.


'வாணா, அங்கெ என்னோட உம்மாவோட தங்கச்சியோட மகன் இருக்கான்தானே அவன் தருவான், நா அவன்கிட்டே பெறுவதுதான் நல்லது' என்றான்.


'எலே! சின்னம்மா மகன் ஒனக்கு தம்பிதானே, தம்பி சொல்லித்தொலை அது என்ன உம்மாவோட தங்கச்சியோட...' என்றேன்.


'அப்படித்தான் நாங்க கதப்போம்.' என்றான்.


பட்டணத்தில் பூதம் கூஜா மாதிரி திரும்பத்திரும்ப என்னிடமே வந்ததை விதியோன்னு ஊருக்கு எடுத்துக்கிட்டு போய்ட்டேன். இப்படி ஊர் சுத்திக்கிட்டிருந்த கோட்டைத்தான் நானாவிடம் கொடுத்தேன்.


ஓவர் கோட் கிடைத்தது என்று செய்தி அனுப்பியிருக்கிறார். மனசுக்கு சந்தோஷமாக இருக்கு ஆனா அது மறுபடியும் திரும்பி வராம இருக்கனும்.

-----0000----




25-1-2008 திண்ணையில் வெளிவந்தது

No comments: