ஹமீது ஜாஃபர்
வரலாற்று நிகழ்வுகளில் கண்டறியப்படும் உண்மைகள் இஸ்லாத்துக்கு ஆதரவாக இருந்தால் அது கட்டுக்கதை; சொன்னவர்கள் இடது சாரிகள், தாலிபான்கள், ஸ்டாலினிஸ்டுக்கள் etc., etc., பாதமாக இருந்தால் அவைகளே உண்மை; சொன்னவர்கள் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள். இது ஆர் எஸ் எஸ் காரர்களின் ஓயாத ஒப்பாரி. இஸ்லாத்தைப் பற்றி தாக்கி எழுதினால் அதை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவார்கள்; அதுவும் ஒரு முஸ்லிம் எழுதினால் இவர்களுக்கு அல்வா தின்பது மாதிரி. மார்க்க அறிஞர்கள் சிலர் செய்த தவறை சுட்டிக்காட்டி 'இவர்கள் அறிவீனர்கள்' என்ற தலைப்பில் எழுதியதை தன் வலைப்பக்கத்தில் இட்டு மகிழ்ச்சியடைந்த மஹா புருஷர் திரு அரவிந்தன் நீலகண்டன். இவரால் எப்படி நடுநிலையாகப் பார்க்கமுடியும் ? முஸ்லீம்களுக்கு ஆதரவாக எழுதும் எல்லோருமே இடதுசாரிகள்தான் Nationaly and Internationaly. நல்ல Concept!
மொகலாய மன்னர்களில் அவுரங்கசீப்பை வம்புக்கு இழுக்காவிட்டால் இவர்களுக்குத் தூக்கம் வராது. பாவம் அவுரங்கசீப் செய்த ஒரே குற்றம் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தது. புனிதமான ஆலயத்தில் பகவான் முன்பு மகா புனிதமான காரியம் நடந்தேறியுள்ளது.. அது ஒன்றும் பிசகல்ல! வர்ணாசிரமத்தில் பிராமணர் எதுவும் செய்யலாம், ராணியை கைங்காரியம் செய்தாலும் புனிதமானதுதான். ஏன்? மனு தர்மப்படி அவாள் பிரம்மாவின் வாயிலிருந்து படைக்கப்பட்டவாள் ஆச்சே! அதனால்தான் பிரம்மானந்தாக்கள் பிரம்மாநந்தமாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் மதவெறியர்கள் அதிலும் குறிப்பாக அவுரங்கசீப் மதவெறியன்; இந்துக்களை கொடுமைப் படுத்தினான்; இந்து கோயில்களை இடித்தான்; ஜெஸ்யா வரி விதித்து இந்து மக்களை கொடுமைக்கு ஆளாக்கினான் என்றெல்லாம் இந்துத்துவாக்களின் குற்றச்சாட்டு.
ஐயா, உங்கள் கூற்றுபடி அவர்கள் மதவெறியர்களாக இருந்திருந்தால், அவர்களின் 1000 ஆண்டுகால ஆட்சியில் இந்தியத் திருநாட்டில் ஒரு அரவிந்த சாமியையோ ஒர் நீலகண்ட சாஸ்திரிகளையோ காணமுடியாது மாறாக ஒரு அப்துல் காதரையும் ஒரு அஹமது ஹஸனையும்தான் காண முடியும். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற பண்பாட்டைக் கட்டிக்காத்ததினால்தான் இன்று வாய் கிழியப் பேசுகிறீர்கள்.
நீங்கள் சொல்வதுபோல் அவ்ரங்கசீப் மதவெறியன்தான். எப்படிப்பட்ட மதவெறியன் என்று பார்ப்போம். ஆனால் எங்கள் பாஷையில் அதற்கு மதஇனக்கம் என்று சொல்வார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் அவருக்கு மனத்ததால் மத நெறியாளர் என்றுகூட சொல்லலாம்.
1679 ல் அவருடைய ராணுவத்தில் 'மன்சூதார்கள்' என்றழைக்கப்படும் உயர் ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 575. அதாவது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ஒரு மன்சூதார் என்ற கணக்கில் இருந்தனர். அதில் 182 பேர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் (நிச்சயமாக இடதுசாரிகள் அல்ல). அதுபோன்று நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் முக்கியமானவர்கள் ராஜா ஜெஸ்வத் சிங், ராஜா ஜெய்சிங் ராஜா அவ்ராத்சிங் ஹதா, பீஷம்சிங் கத்வானி ஆகியவர்கள்.
சுவாத்தி என்றரசன் மஹோலியைக் கைப்பற்றுவதற்காக படை எடுத்துச் சென்றபோது அதை காப்பாற்றுவதற்காக ராஜா மனோகர்தாஸ் என்ற மன்சூதார் தலைமையில் ஒரு படையை அனுப்பிவைத்தார் என்று வரலாறு கூறுகிறது. இதுவும் இடதுசாரி வரலாறாக இருக்குமோ?
திரு P. N. பாண்டே (தாலிபானிஸ்ட்?) அவர்கள் அலகாபாத்தில் மேயராக இருந்தபோது கோயில் பற்றிய ஒரு பிரச்சினை வந்தது. ஒரு கோயிலுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அதை மீண்டும் வழங்கக் கோரி அந்த கோயிலின் Trust வழக்குத் தொடர்ந்தது. அதற்கு ஆதாரமாக Royal Farman என்று சொல்லப்படும் அரசு ஆணை ஒன்றை முன் வைத்தது. அந்த அரசு ஆணை மன்னர் அவுரங்கசீப் அவர்களினால் பார்ஸி மொழியில் வழங்கப்பட்டிருந்தது.
மதவெறிப் பிடித்து கோயிலை இடிக்கும் மன்னன் ஒரு கோயிலுக்கு மானியம் எப்படி வழங்கமுடியும்? அது பொய்யான ஆவணமாகத்தான் இருக்கமுடியும் என்று பாண்டே கருதினார். இருந்தாலும் அதை பரிசீலிக்கக் கருதி பாரஸீக மொழியிலிருக்கும் அரசு ஆணைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்த திரு ராஜா தேவ்பஹ்தூர் பர்மன் அவர்களிடம் கொடுத்து ஆராய்ந்தபோது அது உண்மையானதுதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. தவிர மேலும் ஆரய்ந்தபோது
மதுரா கோயில் உள்பட நானூறுக்கும் மேற்பட்ட கோயில்கள், குருதுவாராக்கள், ஜெய்ன மடங்களுக்கு மானியம் வழங்கி அவற்றின் பராமரிப்புக்கு உதவினார் என்பதும் தெரியவந்தது. இதை பற்றி பேராசிரியர் சதீஷ்சந்திரா தன்னுடைய 'Essays on Medieval India ' வில் இப்படி கூறுகிறார் :-
Not only did many old Hindu Temples continue to exist in different parts of the country, there is also documentary evidence of Aurangazeb 's renewal of land grants enjoyed by Hindu Temples at Madhura and elsewhere, and of his offering gifts to them. (such as to the Sikh Gurudwara at Dehra Dun, continuation of Madad-i-m 'aash grants to math of Nathpanthi yogis in Pargana Didwana, Sarkar Nagar to Ganesh Bharti... பேராசிரியர் எந்தசாரி என்பது நமக்கு விளங்காத விஷயம்!
கோயிலுக்கு மானியம் வழங்கும் மன்னன் காசி விஸ்வநாதர் ஆலயத்தைமட்டும் ஏன் இடிக்கவேண்டும்? அதை இடித்து பொன்னும் பொருளையும் கொள்ளை அடித்தான் என்று வரலாற்றில் காணப்படவில்லை; இல்லை அணு ஆயுதம் chemical weapon அப்படி இப்படி என்று பொய்யை உலகிற்கு சொல்லி புஷ் மஹாராஜா ஈராக்கைத் தாக்கி அழித்ததைப் போல் அங்கு வைரங்களும் வைடூரியங்களும் நிறைந்துகிடக்கின்றன என்ற பேராசையில் கோயிலை இடித்தான் என்றும் வரலாறு இல்லை. பின் ஏன் இடிக்கவேண்டும்? தலைமைப் பூசாரி திருவாளர் பண்டிட் மகந்த்ஜி கட்ச் ராணியை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்று பரமபதம் ஆடியது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதை பூசிமெழுகினால் எப்படி? ஆனால் ஒரு திருத்தம், பூசாரி சாரின் செயலால் கோயிலின் தூய்மைக் கெட்டுவிட்டது எனவே அங்குள்ள விக்ரகத்தை எடுத்துவிட்டு வேறு இடத்தில் வைக்குமாறு ராஜாக்கள் humbly கேட்டுக்கொண்டதால் அந்த கோயிலை இடித்துவிட்டு இப்போதிருக்கும் இடத்தில் கோயில் கட்டிக்கொடுத்தார் என்பதுதான் வரலாற்று நிகழ்வு. ஆனால் இந்த தகவலை ஆராய்ந்துச் சொன்ன மிஸ்டர் பாண்டே இடதுசாரியாச்சே! யாரோ ஊர்பேர் தெரியாத முல்லா நசுருதீன் சொன்ன கதையை நம்பியவரை நம்பி மோசம் போய்விட்டார், அவர் என்ன நம்மைப் போல் அறி வாளியா?
அவுரங்கசீப் ஆலயத்தை இடித்ததை நம்மால் ஜீரணிக்கமுடியவில்லை. ஆனால் பல கோயில்கள் இந்து மன்னர்களால் இடிக்கப்பட்டு சூரையாடப்பட்டுள்ளதே! அதை ஏன் நாம் கண்டுக்கொள்வதில்லை? சாசங்கன் என்ற மன்னன் குப்த கோயில்களை இடித்துத்தள்ளியிருக்கிறான் என்பது வரலாற்று உண்மை; ஹர்ஷ்பேறு என்ற மன்னன் கோயில்களை இடித்து அங்குள்ள பொன்னும் பொருளைகளையும் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தான், அதற்கென்று தனிப்படை அமைத்து தனி மந்திரியும் அமைத்திருந்தான்; பார்மரா நாட்டு மன்னன் குஜராத்திலுள்ள சமணக்கோயில்களை இடித்து தள்ளியுள்ளான்; இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டு போகிறதே! ஏன் நம்ம காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்கூட சமணக் கோயிலாக இருந்ததாக வரலாறு கூறுகிறதே!! ஆனால் இவைகள் புளுகு மூட்டைகளே, இந்து மன்னர்கள் எல்லாம் பக்திமான்கள்.
பேரரசர் அக்பரால் நீக்கப்பட்ட ஜெஸ்யா வரியை மீண்டும் கொண்டுவந்து இந்துக்களை துன்புறுத்தினான் அவுரங்கசீப் - இது ஒரு குற்றச்சாட்டு. ஜெஸ்யா வரி என்றால் என்ன? இஸ்லாமிய ஆட்சியில் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய மாற்று சமயத்தவர்களை 'திம்மி'கள் என்று அழைக்கப்பட்டனர். அத்தகையவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஒரு வரி போடப்பட்டது. அதற்கு ஜெஸ்யா வரி என்று பெயர்.
அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்தது 1658. ஜெஸ்யா வரி போடப்பட்டது ஆட்சிக்கு வந்து 22 வருடம் கழித்து அதாவது 1679 ல். அவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே 80 க்கும்மேற்பட்ட வரிகளை நீக்கியிருக்கிறார். அவைகளில் சில: கங்கையில் புனித நீராட போடப்பட்டிருந்த வரி நீக்கப் பட்டது; அஸ்தியை கங்கையில் கரைக்கப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; மீன், காய்கறி போன்ற உணவுப்பொருள்களுக்குப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; சாலை வரி, தொழில் வரி, ஆடுமாடு மேய்ச்சல் வரி, விற்பனை வரி போன்றவைகள் நீக்கப்பட்டன; தீபாவளியின்போது செய்யப்படும் தீப அலங்கார வரி, முஸ்லிம்களின் பராஅத் இரவு செய்யப்படும் தீப அலங்கார வரி நீக்கப்பட்டன; விதவைகள் மறுமண வரி நீக்கப்பட்டது இப்படி 80 வகையான வரிகள் நீக்கப்பட்டன.
இத்தனை வரிகளை நீக்கியவர் ஜஸ்யா வரியை ஏன் போடவேண்டும்? இதை 'கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்' சொல்வதை பார்ப்போம். 'அதுவும் அவர் ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1679 ல் ஜெஸ்யா வரியை விதிக்க முடிவு செய்தார். அதே நேரத்தில் ஏழைகள், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், அரசு பணியில் உள்ளோர், வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்வோர் என எண்ணற்றோர் இந்த வரியிலிருந்து விலக்குப் பெற்றனர். மொத்தத்தில் இந்த வரியைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.'
'இந்த வரி விதிப்பானது இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமியராக மதம் மாறவேண்டும் என்ற நிர்பந்தத்திற்காகவோ, இஸ்லாத்தை இந்த வரிவிதிப்பின் மூலம் நாடு முழுவதும் பரப்பிவிடலாம் என்ற ஆசையினாலோ ஒளரங்கஜேப் இந்த வரிவிதிப்பை அமுல்படுத்தவில்லை. ஆனால் இந்த வரிவிதிப்பின் மூலம் அரசியல் ரீதியாகத் தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்து வந்த தக்கான சுல்தான்களைத் திருப்தி படுத்திவிடலாம் என்று ஒளரங்கஜேப் ஒரு அரசியல் கணக்கைப் போட்டார் என்கிறார் பேராசிரியர் சதீஸ் சந்திரா.' (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்).
பொருளாதார சீர்திருத்தத்திற்காவே ஜெஸ்யா வரி விதிக்கப்பட்டதாகவும் 1705 ம் ஆண்டு இந்த வரியினை அவுரங்கசீப் அடியோடு நீக்கிவிட்டார் என்றும் இந்திய சரித்திரத்தில் மாற்றம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் எழுதிய சர் எலியட் என்ற ஆங்கிலேயே வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
இந்த வரி யாருக்கு எப்படி போடப்பட்டது?
எல்லா செலவுகளும் போக ஆண்டொன்றுக்கு வருமானத்தில் ரூபாய் 52 மிஞ்சினால் அதற்கு வரி ரூ.3/4. ரூபாய் 250 மிஞ்சினால் வரி ரூ61/2. ரூபாய் 2500 மிஞ்சினால் வரி ரூ 13. அதற்குமேல் வரி இல்லை. இதை நடுத்தர வர்க்கமாக இருந்தால் இரண்டு தவணைகளிலும் சாதாரண வர்க்கமாக இருந்தால் மூன்று தவணைகளிலும் செலுத்தலாம்.
வரி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்:
ஆறு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு வரி இல்லை; உழவருக்கு வரி இல்லை; தச்சருக்கு வரி இல்லை; பொற்கொல்லருக்கு வரி இல்லை; கருமாருக்கு வரி இல்லை; கொத்தனாருக்கு வரி இல்லை; கூலி வேலை செய்பவருக்கு வரி இல்லை; அரசாங்க ஊழியருக்கு வரி இல்ல அவர் எந்த பதவியில் இருந்தாலும்; அர்ச்சகர், புரோகிதர், துறவிகள் இவர்களுக்கு வரி இல்லை. (அப்போதெல்லாம் டை கட்டிக்கொண்டு ஆபிஸிலும் பேங்கிலும் உத்தியோகம் பார்க்காத காலம்)
அப்படியானால் வரி வசூலித்தது எவ்வளவு? ஒரு புள்ளி விபரம்:
1680-81 ம் ஆண்டில் பாதுஷாபூர் என்ற பட்டணத்தில் வாழ்ந்த மக்களின் முஸ்லிம் அல்லாதோர் எண்ணிக்கை 1855. அதில் வரி விலக்கு அளிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1320. வரி அளித்தவர்கள் 535 பேர் மட்டுமே. வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 2950.
அவுரங்கசீப்புக்கு யார் யார் எதிரி:-
சீக்கியர்கள் தங்கள் மத நடவடிக்கைகள் தவிர அரசியலில் தீவிரம் காட்டிப் பேரரசருக்கு எதிராக ஆலோசனைகளும் ஆயுதங்களும் தந்து கிளர்ச்சிக்கு உதவிக்குக் காரணமான குருதேஜ பஹ்தூர் கொல்லப்பட்டார், எனவே சீக்கியர்கள் எதிரி.
மூடப்பழக்க வழக்கங்களைத் தடுக்கும்பொருட்டு ஜோதிடம் பார்த்தல், பஞ்சாங்கம் தயாரித்தல், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற வைகளுக்குத் தடை விதித்ததார். எனவே ராஜபுத்திரர்கள் எதிரி.
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பொது மக்களுக்கும் சமூகத்திற்கும் தொல்லை கொடுத்த 'சத்நாமிகள்' என்ற கூட்டத்தாரை அழித்ததால் அந்த இனம் பாதுஷாவுக்கு பரம்பரை எதிரி.
மராட்டியர்களின் நாயகனாகக் கருதப்பட்ட சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்ததார். அவர் தந்திரமாகத் தப்பிச்சென்று அவுரங்கசீப்புக்கு எதிராக மராட்டிய மக்களிடம் பிரச்சாரம் செய்தகாரணத்தினால் மராட்டியர்கள் எதிரி.
ஷியா முஸ்லிம்கள் தங்கள் உடல் முழுவதும் அலகுகள் குத்திக்கொண்டும் சாட்டையால் தங்களை அடித்துக்கொண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் மொஹரம் பண்டிகையைக் கொண்டாடினர். அந்த பண்டிகை ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் ஷியா முஸ்லிம்கள் அவுரங்கசீப்புக்கு எதிரி. (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்)
காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்ததோடு மட்டுமல்லாமல் இந்துக்கள் மீது ஜெஸ்யா வரியை விதித்து கொடுமைப் படுத்தியதினால் 340 ஆண்டுகளுக்குப் பின் ஆர். எஸ். எஸ், சங் பரிவார் இத்யாதி இத்யாதி + அரவிந்தன் நீலகண்டன் எதிரி.
அவுரங்கசீப், தான் முடி சூட்டிய நாளிலிருந்து இறுதி நாள் வரை போராட்டங்களை சந்திக்க வேண்டியவராக இருந்தார். அவர் பதவி ஏற்றதும் இறந்ததும் போர்களத்தில். அவருக்கு எதிரான சதித் திட்டங்கள் பெரும்பாலும் மந்திர்களில் தீட்டப்பட்டன. எனவே அன்னை இந்திரா காந்தியின் பாணியில் Oparation Blue Star (ஆமிர்தசரஸ் பொற்கோயில்) நடத்தி எதிரிகளை ஒழிக்கவேண்டிதாகிவிட்டது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு இந்து மன்சூதார்களே அனுப்பப்பட்டனர். ஆனால் அதனால் சேதமடைந்த ஆலயங்களை அவுரங்கசீப் தன்னுடைய நேரடிப் பார்வையில் செப்பனிட்டதாக 'கிஸ்ஸா யே ஆலம்கீர் ' என்ற உர்து மொழி புத்தகத்தில் ஓம் ப்ரகாஷ்லால் சியால்கோட்டி எனவர் குறிப்பிட்டுள்ளார் (1909 ம் ஆண்டு லாகூர் பதிப்பு). மூல நூலான ஆலம்கீர் நாமா, ஈஸ்வர்தாஸ் நாகர் என்பவரால் பார்ஸி மொழியில் எழுதப்பட்டது.
'மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை' என்பார்கள். தெளிந்த அறிவும் பரந்த கண்ணோட்டமும் இருந்தால் உண்மை அதன் வடிவில் தெரியும். அவை இல்லாதவரை அவுரங்கசீப் அல்ல எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும்.
----oo0oo----
Friday February 24, 2006 திண்ணையில் வெளிவந்தது
No comments:
Post a Comment