இபுறாஹிம் அப்போதுதான் ரமலான் மாத இரவுநேர சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு கையில் மூஸாகாக்கா கடை சாயாவுடன் ரூமுக்கு வந்தான். இரவு பத்துமணிதான் ஆகியது, வெளியில் கடுமையான humidity, தெரு விளக்குகள் பனிமூட்டத்தில் இருப்பதுபோல் மறைந்தும் மறையாமலும் இருந்தன. ரூமுக்குள் நுழைந்து ஏசியை போட்டுவிட்டு வியர்த்திருந்த சட்டையை ஹேங்கரில் மாட்டிவிட்டு, 'அப்பாடா! என்ன புழுக்கம், இதுக்கு வெயில் தேவலாம்; பேரீச்சை பழுப்பதற்குமுன் நம்மை பழுக்க வச்சுடும்போலிருக்கே' என்று முனங்கியவாறு கொண்டுவந்த சாயாவை உறிஞ்சியவாறு டிவியை ஆன் பண்ணினான்.
சன் டிவியில் அப்போதுதான் காமெடி டைம் ஆரம்பம் ஆகியது. சிட்டிபாபு போனை எடுத்து "ஹலோ, யாரு ராமசாமியா? டெய்லர் ராமசாமிதானே!
'அமா, நீங்க யாரு?' என்றது மறுமுனை. நா... குப்புசாமி பேசுறேன்! சட்டை தைக்க கொடுத்து எத்தனை நாளாச்சு, எப்ப கொடுப்பீங்க? தீபாவளிக்கு முந்தி கொடுத்துடுவீங்களா? என்று வழக்கம்போல் உடால் விட்டார். அவர் சாதாரண ஆள் இல்லை, அவரும் பதிலுக்கு, "ஆமா! சிட்டி பாபுசார், எந்த காலத்திலே சட்டை போட்டுக்கொண்டு டிவியிலே வந்திருக்கீங்க, ஸ்பான்ஸர் கொடுக்கிற 'டி' சர்ட்டை போட்டுக்கொண்டு ஆட்டு ஆட்றிங்க" உடனே பக்கத்திலிருந்த சுப்ரியா, "எப்படி கண்டுபுடிச்சீங்க? என்றாங்க. "எப்போதும் உங்க ரெண்டுமூஞ்சியையும் பாத்துட்டுத்தானே தூங்கிறேன், இதெ கண்டுபுடிக்க படிச்சிட்டாவரனும்" என்றார் நக்கலாக.
சார், வச்சுடாதீங்க போனை, பக்கத்துலெ ஒரு V.I.P இருக்காரு; டைரக்டர் கதாநாயகன் என்று கலக்குற சந்திரா சார் இருக்காரு அவரோட பேசுங்க, என்றார் சிட்டிபாபு. ஆமா, மசால்வடையை அம்மியிலெ வச்சு நசுக்கின மாதிரி ஒரு மூஞ்சியை வச்சுக்கிட்டு கதாநாயகனா! யாரு கதாநாயகனா நடிக்கனுங்கிற வெவஸ்தயே இல்லாம போச்சு என்று முனுமுனுத்துக்கொண்டே, 'சார் ஒங்க படத்தெ நெறைய தடவெ பாத்திருக்கேன், சூப்பரா நடிக்கிறீங்க, இப்படியே நடிங்க..' என்று புகழாரம் சூட்டினார். பேசி முடிச்ச பிறகு "உங்களுக்காகவும் உங்க குடும்பத்துக்காகவும் சூப்பரான ஒரு காமெடி போடுறோம் பாருங்க" என்று சொல்லிவிட்டு ஒரு காமெடி சீனைப் போட்டார்கள்.
எப்படித்தான் இவங்க சிரிக்கமுடியாத காமெடியாப் பார்த்து செலக்ட் பண்ணி போடுறாங்களோ தெரியலே என்று அலுத்துக்கொண்டே அடுத்த சேனல், சன் நியூஸுக்கு வந்தான் இபுறாஹிம். இல்லாத ராமர் பாலத்தையும் ஈரானுக்கு அடுத்தபடியான இந்தியாவின் அணுசக்தி பிரச்சினையும் பற்றிய செய்திகளுக்கிடையில் FLASH NEWS: சுமத்திராவில் பயங்கர நிலநடுக்கம், ஆயிரக்கணக்காவர்கள் பலி என்ற வரிகள் ஓடத்தொடங்கின. இவனுக்கு புளியை கரைத்தது. உடனே BBC க்கு தாவினான். அவர்கள்தான் உலகம்பூராவும் இறைந்து கிடக்கிறார்களே! அதில் exclusive news ஆக இதை விடியோ சகிதமாக காண்பித்தார்கள், பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
உடனே தனது மொபைலை எடுத்து எண்களை சுழட்டினான். அடித்தது எடுக்கவில்லை, பொறுமை இழந்தான். எடுக்கும்வரை மீண்டும் மீண்டும் சுழற்றினான். ஒரு வழியாக மறுமுனையில் தொடர்பு ஏற்பட்டவுடன் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, நூரா ஏன் போனை எடுக்காமல் என்ன செய்துகொண்டிருந்தாய்? என்றான் பதற்றப்படாமல் சாதாரணமாக.
நாளை நோன்பு வைப்பதற்காக சமையல் செய்துகொண்டிருந்தேன், போன் பக்கத்தில்தான் இருந்தது உன்னுடைய போன் என்று தெரிந்துதான் எடுக்கவில்லை என்றாள் நூரா.
நாசமாப்போச்சு, உங்கள் நாட்டில் பூகம்பமாம் நியூஸிலே சொல்றான் போய் பாரு என்றான்.
'இபுறாஹிம், 2004 சுனாமிக்குப் பிறகு எங்க நாட்டிலெ அடிக்கடி பூகம்பம் எரிமலை என்று வருது, இது எங்களுக்கு பழகிவிட்டது.'
'அதில்லை, இப்போது சுமத்திராவிலெ அடிச்சிருக்கு அதிலும் ஒங்க டிஸ்டிரிக்ட் பதாங்கில்தான் அதிக சேதமாம், டிவியை வச்சுப் பாரு.'
'நீ யேன் பதட்டப்படுறே! டிவிகாரங்க ஒன்னை நாலாக்கி சொல்வாங்க, இதெ பெரிசா எடுத்திக்கிட்டா நமக்கு நிம்மதி போய்டும்.'
இபுறாஹிமுக்கு கோபம் தலைக்கேறியது, 'அடி வெளங்காதவெளே! என்னை என்ன பேயனென்றா நெனச்சிக்கிட்டெ,' என்று தமிழில் திட்டிக்கொண்டு போய் பிபிஸியை வச்சு பாரு, ஆயிரகணக்கில் செத்துட்டாங்களாம், ஒரு சில கிரமமே காலி என்று சொல்கிறான்.'
அவன் தமிழில் சொன்னதை இவன் எதோ தன்னை திட்டுகிறான் என்று புரிந்துக்கொண்டு 'இபுறாஹிம் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டு ஆனால் எனக்கு புரியிற மொழியில் திட்டு, என்ன திட்டினாய் அதெ சொல்லு மொதல்லெ!'
'Stupid என்றேன், சந்தோசம்தானே! இப்பொ போய் பாத்துட்டு எனக்கு போன் பண்ணு, O.K.'
போனை கீழே வைத்துவிட்டு பதற்றத்தோடு டிவியையே பார்த்துக்கொண்டிருந்தான். எதோ தனக்கு ஆபத்து வந்துவிட்டது போல் 'உம்' மென்று இருந்தான்.
கொஞ்ச நேரத்தில் நூராவிடமிருந்து போன் அலறியது, இபுறாஹிம், நீ சொன்னது சரிதான், எனக்கு என்னவோ பயமா இருக்கு, ஒடனே புறப்பட்டு வா, என்றாள் அழாத குறையாக.
பயப்படாதே, தைரியமாக இரு, மொதல்லெ ஊருக்கு போன் பண்ணி என்னா ஏதுன்னு கேள் என்றான் இபுறாஹிம் பதிலுக்கு.
போன் போகவில்லை எந்த லைனும் கிடைக்கவில்லை, நீ வா உடனே என்றாள் அழுகையுடன்.
இபுறாஹிம் அங்கு சென்ற போது அவள் மட்டும் இருந்தாள் ரூம் மேட் யாருமில்லை அன்று வாரக்கடைசி என்பதால் எல்லாம் வெளியே போய்விட்டார்கள். பாதி சமைத்தும் சமைக்காததுமாக அப்படியே கிடந்தது. அவனை பார்த்ததும் 'ஓ' வென்று அழ தொடங்கிவிட்டாள்.
அப்ப நா சொன்னபோது ஒனக்கு சிரிப்பா இருந்துச்சு, இப்ப அழறே. இனி அழுவதில் பிரோஜனமில்லே, மொதல்லெ மனசெ தேத்திக்கோ. இது இயற்கையின் சீற்றம் என்று சமாதானப்படுத்தினான்.
'டிவியிலெ காண்பிக்கறதெ பாத்தா எங்க ஊர் மாதிரி தெரியுது. ஒன்னும் சரியா புலப்படலெ, எனக்கு என்னசெய்றதுன்னு புரியலெ.'
'இப்ப நீ ஊருக்கு போனைப் போடு, ஒன்னோட அப்பா அம்மாகிட்டெ பேசு.'
'டிவியெ பாத்ததிலேந்து போன் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன் லைன் போகமாட்டேன்கிறது. எல்லா லைனும் கட், என்ன செய்யறது?'
'இப்பொ இங்கே ராத்திரி பத்துமணி உங்க ஊர்லே என்ன நேரம் இப்பொ?'
'ராத்திரி மூனு மணி.'
'பூகம்பத்தாலெ லைன் எல்லாம் கட்டாயிருக்கும், பக்கத்து ஊர்லெ யாரவது ஒனக்கு சொந்தக்காரங்க இருக்காங்களா? இருந்தாங்கன்னா அவங்களுக்கு போன் பண்ணு.'
'இருக்காங்க, ஜாக்கர்தாவுலெ என் அக்கா இருக்கா, நா போன்லெ சொன்னபிறகுதான் அவளுக்கே தெரியுது. காலையிலெ சொல்றேன் என்கிறாள்.'
'சரி, வேறு யாருமில்லே?'
'ஒருத்தன் இருக்கான் என்னைத்தான் கட்டிக்கிவேன் என ஒத்தக்காலில் நின்றான். அவன் குடிகாரன்; குடிச்சுட்டு அடிப்பான் என்பதால் நான் மாட்டேனென்று சொல்லிப்புட்டேன். அதனாலெ எங்க குடும்பத்தோடு ஒறவு இல்லெ, எங்கோ அச்சையில் இருக்கானாம். அவனொட பழய நம்பர் இருந்துச்சு தேடிப்பாக்கனும்.'
'தேடிப்பாத்து போன் பண்ணு.'
'சரி, காலையிலெ பண்றேன்.'
'இப்பொ மொகத்தை தொடச்சிக்கிட்டு படு, நாளைக்கு வெள்ளிக்கிழமை. வெள்ளியும் சனியும் வாரந்திர ஹாலிடே. என்ன இருந்தாலும் நாளைக்கு இந்தோனேசியா எம்பாஸி இருக்கும். நான் நாளை காலையிலெ வாரேன், நாம் இரண்டு பேரும் எம்பாஸிக்குப் போய் விவரம் கேட்போம்.' இப்படி அவளை சமாதானப்படுத்திவிட்டு ரூமுக்கு வந்தாலும் இபுறாஹிமுக்கு தூக்கம் வரவில்லை. காலை மூன்று மணிக்கு எழுந்து மறுநாள் நோன்பு பிடிப்பதற்காக உணவு உண்டுவிட்டு படுத்தவன் அசந்து தூங்கிவிட்டான். மறு நாள் காலை நூராவிடமிருந்து போன் வந்தவுடன் அலறிஅடித்துக்கொண்டு எழுந்து போனை எடுத்தான்.
'ஹலோ இப்றாஹிம் தூங்காதே வா உடனே.'
'குளிச்சிட்டு அரை மணியில் வாரேன், அதுக்கு முந்தி உன்னுடைய பாஸ்போர்ட் காப்பி, ஐ டி கார்டு, ஊர்லெ உள்ளவங்க போட்டா; அட்ரஸ் மற்றும் வேறு ரிக்கார்டு இருந்தா எடுத்துக்கிட்டு கீழே வா, கார் பார்க்கிங் கிடைக்காது; டபுள் பார்க்கிங் பண்ணினா போலிஸ் முக்காலிஃபா(fine) போட்டுடுவான்.'
சரியாக 8-45 க்கு அவளை அழைத்துக்கொண்டு இந்தோனேசிய தூதரகம் இருக்கும் இடத்தை அடைந்தபோது அங்கு கூட்டம் நிறைந்திருந்தது. வந்திருந்தவர்களில் பெரும்பாலும் house maid களாக வேலைப்பார்க்கும் பெண்கள். ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமுமாக வரிசைப் படுத்திக்கொண்டிருந்தனர் போலிஸார். சற்று நேரத்தில் தூதரக அதிகாரி ஒருவர் வந்து வரிசையில் நின்றிருந்த எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்று பேச ஆரம்பித்தார்.
'தயவு செய்து எல்லோரும் அமைதியாக இருந்து நான் சொல்வதை கவனமாக கேளுங்கள், நாம் மிகப் பெரிய துன்பத்தில் இருக்கிறோம்; ஒவ்வொருவருக்கும் இந்த துன்பம் வலிமையாகத்தான் இருக்குமேயல்லாது குறைவாக இருக்கமுடியாது. சுமத்திரா தீவின் பதாங் மாவட்டத்தின் பதாங் ஜயா பகுதியை நேற்று இரவு 12-25க்கு பூகம்பம் தாக்கியிருக்கிறது. ரிக்டர் ஸ்கேலில் 8.2 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நூற்றாண்டிலேயே இது மிக கடுமையான நில நடுக்கம். இதனால் பதாங்ஜயாவை சுற்றியுள்ள 13 கிராமங்கள் பலத்த சேதத்தை அடைந்துள்ளன. சில ஊர்கள் அடியோடு அழிந்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. இதில் கோட்டாமறியா, பதாங்புவான், மரூப்கிஜயா ஆகிய மூன்று ஊர்களும் தரைமட்டமாகிவிட்டன. அந்த ஊரை சேர்ந்தவர்கள் யாரும் இருந்தால் முதலில் இந்த பக்கம் வந்து அமருங்கள். நீங்கள் யாரும் பதட்டப்படவேண்டாம், உங்களது பெயர்களை இங்கு பதிவு செய்யுங்கள், அதன் பிறகு மற்ற எல்லோரும் தங்களது பெயர்களை பதிவு செய்யுங்கள் என்று அவர் சொல்லவும், ஐயோ! எல்லாம் போயிடுச்சே என்று கத்திக்கொண்டே நூரா மயங்கி விழுந்தாள்.
ஆண்கள் பக்கம் இருந்த இபுறாஹிம் பதறியடித்துக்கொண்டு முன்னேற அவனை ஒரு அலுவலர் தடுத்து நிறுத்தி நீங்கள் யார் என்று கேட்க, நானும் அந்த பெண்ணும் ஒரே ஆபிஸில் வேலை செய்கிறோம், நான்தான் அழைத்துக்கொண்டு இங்கு வந்தேன் தயவு செய்து என்னை அனுமதியுங்கள் என்று கெஞ்ச, உங்கள் ID Card ஐ காண்பியுங்கள் என்று அலுவலர் மிரட்ட, அதை காண்பித்த பிறகு அவனை அனுமதித்தார்.
நூரா மயங்கி விழுந்ததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் தண்ணீரை அவள் முகத்தில் அடித்து மயக்கத்தை தெளிவிக்கவும் இபுறாஹிம் அவளை நெருங்கவும் சரியாக இருந்தது. மயக்கம் தெளிந்த அவளை காற்றோட்டமான ஓரிடத்தில் அமரவைத்து பக்கத்தில் தூதரக அலுவலர் ஒருவர் உதவிக்காக இருந்தார்.
இபுறாஹிமைக் கண்ட அவள், இப்றாஹிம் எனக்கு பயமா இருக்கு எங்கேயும் போயிடாதே, தயவு செய்து இங்கே இரு என்று சொல்லிவிட்டு அவனை என் அருகில் இருக்க அனுமதியுங்கள் என்று அந்த அலுவலரிடம் கேட்டுக்கொண்டாள்.
அதிகாரிகள் பொறுமையாக ஒவ்வொருவரிடமும் விபரங்கள் கேட்டு பதிவு செய்துக்கொண்டிருந்தனர். நூரா அவர்களை நெருங்கி, ஐயா நான் மரூப்கிஜயாவை சேர்ந்தவள், என் அம்மா அப்பா கணவர் என் இரண்டு குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை நீங்கள் சொல்வதைப் பார்த்தால்.. நினைக்கவே பயமாக இருக்கிறது, தயவு செய்து உண்மையை சொல்லுங்கள், அவர்கள் நிலமை என்ன என்று சொல்லுங்கள் என்று கண்ணீருடன் கெஞ்சினாள்.
அம்மா, எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம், இறந்தவர்களையும் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்டிருப்பவர்களையும் மீட்டுக்கொண்டிருக்கிறார்கள். மின்சாரம் டெலிபோன் எல்லாம் துண்டிக்கப்பட்டிருக்கிறது, ராணுவத்தினர் வந்து போர்கால அடிப்படையில் வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்தும் உதவிகள் வந்துக்கொண்டிருக்கின்றன. நீங்கள் இந்தோனேசியா செல்வதானால் அதற்கு எல்லா உதவிகளையும் செய்கிறோம். ஆனால் பதாங் ஏர்போர்ட் பாதிக்கப்பட்டுள்ளது நாளை சரியாகிவிடும், நீங்கள் ஜாக்கர்தா சென்றால் அங்கிருந்து சிறிய விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம் பதாங் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இந்த பாரத்தை பூர்த்தி செய்து எல்லா விபரங்களையும் கொடுங்கள், நாங்கள் உங்களுக்கு ஒரு அடையாள அட்டைத் தருகிறோம், அதை எடுத்துக்கொண்டு சென்றால் அங்கு எல்லா உதவிகளும் கிடைக்கும். என்று சொல்லிவிட்டு மேலும் விபரங்களுக்கு இந்த நம்பரில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் இது 24 மணி நேரமும் செயலில் இருக்கும் என்று ஒரு hot line நம்பரைக் கொடுத்தார். இந்தோனேசியாவில் தொடர்பு கொள்வதானால் இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று வேறு இரண்டு மூன்று எண்களைக் கொடுத்தார்.
'நூரா இப்பொ என்ன செய்யலாமென்று நினைக்கிறாய்?'
'நான் ஊருக்குப்போகலாமென்று நினைக்கிறேன். அதுதான் நல்லதாகப் படுகிறது, என்னால் இங்கே இருக்கமுடியாது.'
'அப்படியானால் அவர்கள் கொடுத்த பாரத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு அடையாள அட்டை வாங்கு, எனக்கு ஜும்ஆ தொழுக்கைக்கு நேரமாகிவிட்டது, நான் தொழுதுட்டு வந்து உன்னை அழைத்துப்போகிறேன். மற்றதெல்லாம் ரூமுக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்.' என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த பள்ளிவாசலுக்கு இபுறாஹிம் சென்றுவிட்டான்.
இதற்கிடையில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு தன் கம்பெனி ஜி எம் க்கு போன் பண்ணி விசயத்தை சொல்லி தன் நாட்டுக்குப் போக அனுமதியும் பாஸ்போர்ட் கம்பெனியில் இருப்பதால் பி ஆர் ஓ விடம் சொல்லி அதை பெற்றுக்கொள்ளவும் அனுமதி வாங்கியிருந்தாள்.
சரியாக 1-30க்கு வந்து நூராவை அழைத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானபோது, 'இப்றாஹிம் ரூமுக்குப் போகவேண்டாம் நான் ஜி எம்மிடம் லீவு கேட்டு வாங்கிவிட்டேன் எமர்ஜன்ஸி லீவாக பதினைந்து நாள் தந்திருக்கிறார். பாஸ்போர்ட்டை வாங்க பி ஆர் ஓ வைப் பார்க்கவேண்டும்.'
அவர்கள் இருவரும் அலுவலகம் சென்றபோது அங்கு ஜி எம்மின் உத்திரவின்பேரில் பி. ஆர். ஓ. இவளுக்காக காத்துக்கொண்டிருந்தார். தன்னுடைய பத்தாக்கா (work permit) வை கொடுத்துவிட்டு பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு ரூமுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது அவள் கண்கள் கலங்கியிருந்தன. அதை பார்த்தும் பார்க்காமலும் இருந்தான் இபுறாஹிம். எதாவது சொன்னால் அழுதுவிடுவாள் எனவே அவளாகவே பேசட்டும் என்று வாளாவிருந்தான்.
துக்கம் தொண்டையை முட்ட அவளாகவே தொடங்கினாள்..
'இப்றாஹிம், நோன்பு வச்சுக்கிட்டு எனக்காக கஷ்டப்படுறே, உனக்கு எப்படி நன்றி சொல்றதென்று தெரியலே. அந்த அதிகாரி சொன்ன செய்தி இன்னும் என் வயிற்றில் புளியை கரைச்சிக்கிட்டிருக்குது. நீ தொழப்போயிருந்த சமயத்தில் நான் இரண்டுமுறை என் அக்காவுக்கு போன் பண்ணினேன் லைன் கிடைக்கலே. ஒருவேலை அவள் எங்கள் ஊருக்குப் போயிருப்பாள் என்று தோனுகிறது, அவளிடமிருந்து போன் வந்தால்தான் எனக்கு ஆறுதலாக இருக்கும்.'
இபுறாஹிம் மௌனமாக இருந்தான்.
'நீ ஏன் பேசாமலிருக்கே? தயவு செய்து எதாவது சொல்.'
'நான் உனக்கு டிக்கட் எடுப்பது பற்றி யோசிச்சிக்கிட்டிருக்கேன்.'
'அதை சொல்லத்தான் நான் வாயெடுத்தேன், என்னிடம் இப்போது பணமில்லை, இந்த நேரத்தில் யாரிடம் கடன் வாங்குவது என்று தெரியலே. ரூம் மேட்டுக்களிடம் இருக்குமா என்று தெரியலே, தயவு செய்து உன்னிடம் பணம் இருந்தால் கொடு.'
'இதோ பார், நீ ரூமுக்குப் போய் புறப்படுவதற்கு ஆயத்தப்படு, நான் டிக்கட்டுடன் வருகிறேன்.' என்று சொல்லி அவளை இறக்கிவிட்டுவிட்டு டிராவல் ஏஜன்ஸியை நோக்கிப் போனான்.
தன்னுடைய கிரடிட் கார்டின் மூலம் சிங்கப்பூர் வழியாக ஜாக்கர்த்தா செல்லும் முதல் விமானத்திற்கு டிக்கட் எடுத்துக்கொண்டு வந்தபோது அவள் அழுதுகொண்டிருக்க ரூம் தோழிகள் சமாதானப்படுத்திக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது எதோ சம்திங் ராங் என்று ஊகித்தான்.
அவளாகவே சொன்னாள், 'இப்றாஹிம் என் அக்காவிடமிருந்து போன் வந்தது, அவள் எங்கள் ஊரில் இருக்கிறாளாம், ஆனால் எங்கள் வீடு இருக்கும் இடம் தெரியவில்லையாம், மிக மோசமாக இருக்கிறதாம், பிணங்களை அடையாளம் காண்பிக்கும்படி சொல்கிறார்களாம், என்னை உடனே வா எல்லாம் நேரில் பேசிக்கொள்ளலாம் என்று அழுகிறாள்.
'சரி, இந்தா டிக்கட். இரவு 9-40 மணிக்கு ஃப்ளைட் சிங்கப்பூருக்கு, அங்கிருந்து வேறு பிளேன் மாறி ஜாக்கர்த்தா போகனும். புறப்பட தயாரா இரு. நான் நோன்பு திறந்துட்டு வந்து அழைச்சிக்கிட்டு போறேன்.'
ஏழு மணிக்கே அவளை ஏர் போர்ட்டில் விட்டுவிட்டு ரூம் திரும்பியவன் அசந்துபோய் படுக்கையில் விழுந்தான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது. விழித்தபோது இரவு 12-30. லேசாக பசி வயிற்றை கிள்ளியது. கஃப்டேரியாவில் ஒரு பர்கரை விழுங்கிவிட்டு அதன்மேல் ஆரஞ்ச் ஜூசை அருந்திவிட்டு மீண்டும் தூங்க முயற்சித்தபோது தூக்கம் வரவில்லை. மாறாக நூரா தோன்றினாள்.
நீளமும் குட்டையுமில்லாத கருமையான வாரிவிட்ட கூந்தல்; பரந்த நெற்றி; மூன்றாம் பிறையை கவிழ்த்து வைத்ததுபோல சற்றே அடர்த்தியான புருவம்; உருண்டையான சிறிய கண்கள்; சப்பை என்று சொல்லமுடியாத சிறிய மூக்கு; சற்று தடித்த சிவந்த உதடுகள்; இட்டலிபோல் உப்பிய கன்னங்கள்; வட்டமான முகம்; மஞ்சாள் கலந்த வெண்மையான நிறம்; உருண்டையான கழுத்து; அளவான சரீரம்; ஆப்பிள் அளவில் திரண்ட அங்கங்கள்; வற்றிய வயிறு; சிறிய இடை; வாழைத்தண்டு போன்ற கால்கள் நான்கடிக்கும் மேலில்லாத உயரம் பார்ப்பதற்கு 26 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் என்று யாராலும் மதிக்கமுடியாது, பதினெட்டு வயது வாலைக்குமரிபோல் காட்சியளித்தால். மொத்தத்திற்கு சிட்டுக்குருவி.. ஊஹும் தேன் சிட்டு போலிருந்தாள். அவளுடைய உருவத்தைப்போலவே குரலிலும் இனிமை. அவள் அந்த receptionist chair ல் அமர்ந்து customer களை வரவேற்கும் முறையே அலாதியானது. அவள் குரலில் மயங்கி பல புதிய கஸ்டமர்கள் கம்பெனிக்கு கிடைத்துள்ளனர்.
மறு நாள் காலை 9 மணிக்குத்தான் ஜாக்கர்த்தா அடைவாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும் அவளையே அவன் மனம் சுற்றி வந்தது. ஏனென்று தெரியவில்லை, தான் வேலைப் பார்க்கும் கம்பெனியில் ஃபிலிப்பைனிகள், சிரிய பெண்கள், லெபனான் பெண்கள், ஏன் இந்தியப் பெண்கள்கூட இருக்கின்றனர். அவர்களிடமில்லாத அக்கறை இவளிடம் மட்டும் ஏன் வந்தது? ஒருவேளை வறுமையின் காரணமாக இருக்கலாமோ இல்லை தன்னைப் போன்று இவளும் தன் குடும்பத்தை சுமக்கிறாள் என்ற காரணமா? எதுவுமே விளங்கவில்லை. எண்ணம் மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது.
ஆம், ஒரு விடுமுறை தினம்-வெள்ளிக்கிழமை multi million order, ஒரு புதிய கஸ்டமருக்கு அவசரமாக material அனுப்பவேண்டும். அதற்கு shipment க்கான டாக்குமெண்ட் தயார் செய்துவிட்டு தங்களது இருப்பிடத்திற்கு திரும்பும்போது பேச்சு துவங்கியது. அவன் தன்னுடைய காரில் அழைத்துக்கொண்டு வரும்போது அவள்தான் ஆரம்பித்தாள்.
'இப்றாஹிம், உம் மென்று கார் ஓட்டாதே எதாவது பேசு, எனக்கு சும்மா இருக்கப் பிடிக்காது. நீ எப்போது இந்த கம்பெனியில் சேர்ந்தாய்? உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? எத்தனை குழந்தைகள்? உன் குடும்பத்தைப் பற்றி சொல்லேன் என்றாள்.
'ஏன் என் குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்போறாய்?'
'ஒனக்கு இஷ்டமில்லைன்னா சொல்லவேணாம், நான் என்னைப் பத்தி சொல்றேன், அதையாவது கேப்பியா? இல்லே....'
'கேக்கிறேன் சொல்லு.'
'நான் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பொறந்தவள். என் கூட பொறந்தவர்கள் ரெண்டு பேர். ஆக மூத்தவன் அண்ணன், அடுத்ததாக பொறந்தவள் அக்காள், நான் மூனாவதாக பொறந்தேன். எங்களுக்கு கொஞ்சம் விவசாய நிலமிருந்தது. அதிலிருந்து வருகிற வருமானம் எங்களுக்கு போதுமானதாக இருந்தது. தவிர அண்ணனும் என் கணவனும் அதாவது அப்போது அவர் என் அண்ணனுக்கு நண்பன் சேர்ந்து நடத்திய பிஸினஸ் எங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டு போனது. என் அக்காளுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைத்தார்கள், நல்ல வசதியான இடம். கல்யாணத்துக்குப் பிறகு அவள் தன் கணவனுடன் ஜாக்கர்தாவில் செட்டிலாகி விட்டாள். எப்பவாவது எங்கள் ஊருக்கு வருவாள், ஒரு வாரம் தங்கிவிட்டுப் போய்விடுவாள். இன்னும் கொஞ்ச நாள் தங்க சொன்னால் புள்ளைகளோட படிப்பு இருக்கு அது இது என்று காரணம் சொல்லிட்டு போய்விடுவாள். என் அப்பாதான் விவசாயத்தை கவனித்து வந்தார். நான் படித்தபிறகு எதாவது வேலைக்குப் போகிறேன் என்று சொன்னபோது என் கணவன் மறுத்துவந்தார், பிறகு என்ன நினைத்தாரோ அவரேதான் நம்முடைய கம்பெனியில் இந்தோனேசியா பிராஞ்சில் வேலை வாங்கிக்கொடுத்தார்.'
'உன் புருஷன் ஒனக்கு சொந்தமா?' இல்லே லவ் கிவ்வென்று எதாவதா?'
'என்னெ கட்டிக்கிற முறை பையன் ஒருத்தன் இருந்தான். அவன் பெயர் சுகர்தோ, அவன் குடிகாரன். குடிச்சிட்டு தினம் யார்கூடவாவது வம்பு வளத்துக்கிட்டு வருவான். என்னெ கட்டிக்கினும்னு ஒத்தக்கால்லெ நிண்டான். நான் ஒரேடியா மறுத்திட்டேன். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் விருப்பமில்லே. அவன் தொந்திரவு தாங்காமெ சின்ன வயசுலே என்னை இவருக்கு கட்டிவச்சாங்க. அண்ணாதான் எல்லா ஏற்பாடும். என்னுடைய அதிர்ஷம் எனக்கு பிடிச்ச கணவரா அமைஞ்சிட்டாரு.'
'அப்படி இருக்கும்போது இங்கே ஏன் வேலைக்கு வந்தே?'
'அதான் சொல்லிக்கிட்டு வாரேன்ல்ல, ஏன் குறுக்கே பேசுறே?'
'சரி பேசலே, மேலே சொல்லு.'
'இப்படி இருக்கும்போது பிஸினஸ் விசயமா என் அண்ணனும் புருஷனும் 'பாலி' போனாங்க, அங்கிருந்து திரும்பி வரும்போது கூடவே மீளாதுன்பத்தையும் இழுத்துக்கிட்டு வருவாங்க என்று யாருக்கு தெரியும்?'
'என்ன சொல்றே?'
'ஆமா, வர்ர வழியிலே ஒர் ஆக்ஸிடண்ட். அண்ணன் தான் கார் ஓட்டிக்கிட்டு வந்தான், எதிர்லெ வந்த லாரியிலே மோதாம இருக்க ஸ்பீடை குறைக்காம சைடு வாங்கியிருக்கான் வண்டி பள்ளத்திலெ உருண்டு அண்ணன் அவுட்; போய் சேர்ந்திட்டான், என் கணவருக்கு தலை முதுகு கை கால் எங்கு பார்த்தாலும் அடி, பிரக்கினை இழந்துட்டார். விதி விளையாட ஆரம்பித்துவிட்டது.'
'எங்களுக்கு சேதி கெடச்சு போனபோது என் கணவரை I.C.U. விலே வச்சிருந்தாங்க. நான் இடிஞ்சுப்போய்டேன், எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. போதாதற்கு என் கணவர் பொழச்சாலும் வேலை செய்வது கஷ்டம் என்று சொல்லிட்டாங்க. கூட என் அப்பாவும் அம்மாவும் இல்லாதிருந்தா நான் மயங்கி விழுந்திருப்பேன். யா அல்லாஹ்! எங்களை ஏன் சோதிக்கிறாய் என்று அழுவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை அப்போது.'
'ஒங்க அண்ணனை எங்கே அடக்கம் பண்ணினீங்க?'
'ஊருக்கு கொண்டுபோவனும்னா ரொம்ப சிரமப்படும் தவிர இவர்வேறு இப்படி இருக்கார் அதனாலெ அங்கேயே அடக்கம் பண்ணிட்டோம்.'
'இவரை ஒரு மாசத்துக்குமேலே ஆஸ்பத்திரியில் வச்சு பாத்தோம் இந்தோனேசிய பணத்துக்கு அம்பது லட்சம் ருப்பைய்யாவுக்கு மேலே செலவு. ஒரு வழியா ஊருக்கு அழைச்சிக்கிட்டு வந்து இப்பொ வீட்லெ வச்சுப் பார்க்கிறோம்.'
'நீ அங்கிருந்தா உன் புருசனுக்கும் ஒதவியா இருக்கும் இல்லையா?'
'இருக்கும்தான், அண்ணன் இறந்த பிறகு அப்பா ஒடிஞ்சுப் போய்ட்டார், விவசாயத்தை சரியா கவனிக்கிறதில்லெ, அதனாலெ குடும்பப் பொருப்பு என் தலையிலெ விழுந்திடுச்சு. இங்கே வந்தா சம்பளம் கூடுதலா கிடைக்கும், சில சுகத்தை இழந்தாலும் குடும்பத்தை நிலை நிறுத்தமுடியும்னு என் ஆபிஸிலே சொன்னாங்க அதனாலெ காக்காபுடிச்சு இங்கே மாத்திக்கிட்டு வந்தேன்.'
'இப்பொ உன் புருசன் எப்படி இருக்கார்? கொழந்தைங்க...?'
'இப்பொ எதையாவது பிடிச்சிக்கிட்டு கொஞ்சங்கொஞ்சம் நடக்க முயற்சிக்கிறாரு. கொழந்தைகளை அம்மா கவனிச்சிக்கிறாங்க.'
'உன் மாமியார் வீட்லேந்து யாரும் வர்ரதில்லையா?'
'பணமிருந்தா பத்தும் பறந்துவரும்.'
'ம்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள், சோகங்கள். இவ்வளவு பெரிய துக்கத்தை மனசுலெ வச்சுக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருக்கே பாரு, அதெ நெனச்சு பாராட்டுறேன்.'
'உன் பாராட்டு இருக்கட்டும். என்னைப் பத்தி சொல்லிட்டேன் உன்னைப் பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா...?'
'உனக்குள்ளே ஒரு சோகம் இருக்கிற மாதிரி எனக்குள்ளேயும் ஒன்னு ஒளிஞ்சிக்கிட்டு இருக்கு, ஆனா ஒனக்கு இடையிலே ஏற்பட்டது எனக்கு... நான் பொறந்த பிறகு வந்து ஒட்டிக்கொண்டது.' அதுவாக வரவில்லை; நாங்களாக இல்லை என் தந்தை வரவழைத்துக்கொடுத்த பரிசு. ஆனால் அதுதான் எனக்குள் ஒரு வெறியை ஏற்படுத்தி இந்த நிலைக்கு உயர்த்தியது. அது எனக்கு ஒரு சவால்.'
'என்ன சொல்றே? புரியலே!
'எங்களுக்கு பூர்வீகம் தமிழ்நாடு, திருநெல்வேலி பக்கம் பத்தமடை என்ற கிராமம்.'
'மும்பை இல்லே? அப்ப ஏன் அங்கே இருக்கீங்க?'
'அது ஒரு கதை, சொல்றேன் கேளு. நாங்க ஏழ்மையான குடும்பம்தான். பாய் தறி இருந்தது, பாய் நெய்து வியாபாரம் செய்து பிழைச்சுவந்தோம். அப்பொ என் அப்பா பம்பாயில் இருந்தார். அவர் நல்ல வசதியாக இருக்கிறார் என்று என் அம்மாவை கல்யாணம் செஞ்சுவச்சாங்க. அவர் என்ன வேலை செய்கிறார் என்றெல்லாம் விசாரிச்சாங்களா இல்லையான்னு தெரியாது. கல்யாணம் பண்ணியகையோடு என் அம்மாவை பம்பாய்க்கு
அழைச்சிக்கிட்டு வந்துட்டார்.
'மும்பையல்ல பம்பாய்னு சொல்றே!'
'இப்பத்தானே மும்பை முன்பு பம்பாய்.'
'நானும் என் இரண்டு தங்கச்சிகளும் பம்மாயில்தான் பிறந்தோம். நான்தான் மூத்தவன். அப்பா காலையில் வீட்டைவிட்டு போனார்னா ராத்திரிக்குதான் வருவார். பணம் அவர்கையில் நல்லா புரண்டுச்சு. பம்பாயிலே ஃபிளாட்டில் தங்கிருந்தோம். எனக்கு ஏழெட்டு வயசிருக்கும் அப்போது ஒரு நாள் திடுதிப்பென்று எங்க வீட்டுக்கு போலிஸ் வந்து என் அப்பாவை பிடிச்சிக்கிட்டு போய்ட்டாங்க. அப்ப நான் ஸ்கூல்லெ இருந்தேன். என்ன காரணம்னு தெரியலெ.'
'உங்க அம்மாவுக்கு தெரியாதா உங்க அப்பா என்ன வேலை செய்றார்ன்னு?'
'தெரியாது, கேட்டுக்கலெ அவரும் சொல்லவுமில்லெ. அப்பா இருக்கும்போது எங்க வீட்டுக்கு எப்பவாவது நிரையபேர் வருவாங்க எதோ பேசுவாங்க போய்டுவாங்க. என்ன பேசுறாங்கங்கிறதை அம்மா கண்டுக்கிறதில்லை.' அப்புறம்தான் தெரிஞ்சது அவர் ஒரு சாராய வியாபாரியிடம் வேலை செஞ்சார் என்று.'
'சாராயம் கேஸுக்கா போலிஸ் வந்துச்சு?'
'இல்லெ, ஒரு மர்டர் கேஸ். அப்பாவுடைய மொதலாளி எதோ ஒரு கொலை கேஸில் மாட்டிக்கிட்டான். தான் தப்பிப்பதற்காக என் அப்பாவை மாட்டிவிட்டுட்டான். கேஸ் நடந்துச்சு. எங்கள்ட்டெ இருந்த காசு நகை சொத்து எல்லாம் போய்டுச்சு. நாங்க குடிசைக்கு வந்துட்டோம்.'
'உங்க அப்பா மொதலாளி ஒதவி செய்யலையா?'
'செஞ்சான் எதோ ஒப்புக்கு. அப்பாவுக்கு ஆயுள் தண்டனை கொடுத்துட்டாங்க. அதுக்குமேலே அப்பீல் பண்ண எங்கக்கிட்டே காசில்லே. வறுமை தாண்டவமாடுச்சு, சோத்துக்கு லாட்டரி. இந்த நிலையிலே அம்மாவை ஊருக்கு போக அக்கம் பக்கத்திலெ உள்ள சிலபேர் சொன்னாங்க. அம்மா என் புருசன் வந்தாதான் போவேன்னு வைராக்கியமா இருந்துட்டாங்க.'
'வருமானத்துக்கு என்ன செஞ்சீங்க?'
'நாங்க இருந்தது கோலிவாடா என்ற பகுதி, அங்கு தமிழர்கள் ஜாஸ்தி. அவங்கல்லாம் ஒதவி செஞ்சாங்க. அந்த ஒதவியை வச்சிக்கிட்டு என் அம்மா பலகாரங்கள் சுட்டு வித்தாங்க, நாலைஞ்சு வீட்டுக்கு வீட்டு வேலை செஞ்சு எங்களை படிக்க வச்சாங்க.'
'நான் டிப்ளோமா முடிக்கிற சமயத்துலே அப்பா ரிலீஸாகி வந்தார். வந்தவர் எந்த வேலைக்கும் போகவில்லை; எந்த வேலையும் செய்யத் தெரியாது. பழைய மாதிரி காலையில் எழுந்திருச்சு வெளியே போனார்னா ராத்திரிக்குதான் வருவாரு.'
'எங்கே போவாரு?'
'எங்கே போவாரு! பழைய ஃபிரண்ஸோடு சீட்டாடிட்டு வருவாரு. குடும்பத்தைப் பத்தி எல்லாம் அவருக்கு கவலை இல்லை.'
'பழைய மொதலாளிக்கிட்டெ வேலை செய்யலமில்லையா?'
'அவன்தான் எங்களை மாட்டிவிட்டு பெட்டி படுக்கையோடு தன் சொந்த வூருக்கு, குஜராத்துக்குப் போய்ட்டானே!'
'நான் டிப்ளோமா முடிச்ச பிறகு வேலை தேடினேன், கிடைக்கலெ. கூலி வேலையெல்லாம் செஞ்சேன். கடைசியா ஒரு மார்வாடிகிட்டே சேல்ஸ்மேனா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கும்போது பேப்பரைப் பார்த்து இந்த வேலைக்கு அப்ளிகேஷன் போட்டேன். என் அதிஷ்டம் கிளிக்காயிடுச்சு. துபைக்கு வந்துட்டேன்.'
'வந்ததிலேந்து இந்த வேலைதான் செய்றியா?'
'இல்லை, நான் ஸ்டோர் அசிஸ்டண்டா வந்தேன். உனக்குத்தான் தெரியுமே, வர்ர கஸ்டமருக்கு மெட்டிரியலை எடுத்து லோடுபண்ற வேலன்னு. அப்புறமா ஸ்டோர் கீப்பரா ப்ரமோஷன் கெடச்சுது. ஸ்டோர் கீப்பரா இருக்கும்போது டிரைவிங் லைஸன்ஸ் எடுத்தேன். அதன் பிறகு அவுட் டோர் ஸேல்ஸ்மேன் பதவி கெடச்சுது. அப்பதான் என் வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்ட் ஆனது.'
'என்ன சொல்றே?'
'ஆமா, ஒரு ஈரானிய ஆயில் கம்பெனியோடு டீல் பண்ணி பல்க் ஆர்டர்; அஞ்சு மில்லியனுக்கு ஆர்டர் வாங்கினேன். அதுலே பூரிச்சுப்போன ஜெனரல் மேனேஜர் என்னை ஸேல்ஸ் இஞ்சினியராக்கி காரும் வீட்டு அலவன்ஸும் கொடுத்துட்டார்.'
'உன் அம்மா அப்பாவெல்லாம் என்ன செய்றாங்க?'
'பேங்க் லோன் போட்டு தங்குவதற்கு வூடு வாங்கினேன், இரண்டு தங்கச்சியையும் கட்டிக்கொடுத்திட்டேன், மூத்த தங்கச்சி இப்பொ பஹ்ரைனில் இருக்கிறாள். ஆனால் சின்ன தங்கச்சித்தான்....'
'சின்ன தங்கச்சி.......!?'
'டைவர்ஸ் ஆகி வீட்டில் இருக்கிறாள்.'
'ஏன்?'
'அவ புருசன் இரண்டு லட்சம் கொடு மூனு லட்சம் கொடு என்று பணம் கேட்டு தொந்திரவு படுத்தினான், அடித்தான், உதைத்தான் எல்லாம் வரதட்சனை கொடுமை மாதிரி. இப்படி கேடுகெட்டவன்கிட்டே வாழ்றதைவிட வாழாமல் இருப்பதுதான் நல்லது.'
'அப்பா என்ன செஞ்சிக்கிட்டு இருக்காரு இப்பொ?'
'நாட்டு சோக்காளி..'
'அப்டீன்னா....?'
'அப்டீன்னா வேலை எதுவும் செய்யாம கோயில்மாடு மாதிரி சுத்தி சுத்தி வர்ரது. அதாவது கூட்டாளிகளுக்கு டீ வாங்கி கொடுத்துக்கொண்டு பொழுது போக்குவது. அதாவது இவங்க நீட்டா டிரஸ் பண்ணிக்கிட்டு போவாங்க, இவங்களை எல்லோரும் மதிக்கனும். அதான் நாட்டு சோக்காளி.'
'இப்படி இந்தோனேசியாவிலும் இருக்காங்க. ஆம்பிளைங்க வூட்லெ உட்காந்துக்குவாங்க, பொம்பளைங்க நாங்க சம்பதிச்சுப் போடனும். நாங்க புருஷனை விட்டுகொடுத்திட மாட்டோம், உயிரையே வச்சிருப்போம், அதை அட்வாண்டேஜா எடுத்திக்கிறாங்க.'
போன் அலறியபோது இபுறாஹிமுடைய சிந்தனை கலைந்தது. மறுமுனையில் அம்மா பேசினார். சின்ன தங்கைக்கு வரன் ஒன்று வந்திருப்பதாகவும் நல்ல இடம், கொஞ்சம் அதிகமாக கேட்பதாகவும் பேசி முடிக்கவா என்று கேட்டார்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் முடியுங்கள் என்று சொன்னான்.
அப்பா, நான் இங்கே பேசி முடிக்கிறது இருக்கட்டும் உன் கல்யாணம் என்ன? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பே? இதோ பாரு நான் பாக்கிறது உனக்கு விருப்பமில்லைன்னா பரவாயில்லை, உனக்கு விருப்பமான பொண்ணு இருந்தா சொல்லு அதையே முடிச்சு வைக்கிறேன். என் கண் மூடுவதற்குள் உன்னை மாலையும் கழுத்துமாகப் பார்க்கனும் என்ற வழக்கமான அம்மாவின் புலம்பலுக்கு பதில் சொல்லிவிட்டு மறு நாள் நோன்பு வைப்பதற்காக அதிகாலை உணவை உண்டுவிட்டு உறங்கினான்.
-----------
இந்தோனேசியா...
இந்தோனேசிய நேரப்படி காலை பதினோரு மணிக்கு ஜாக்கர்தாவை அடைந்தாள். விமான நிலையத்திலேயே "பதாங் எர்த்குவேக்" என்று கவுண்டர் திறந்திருந்தார்கள். துபை தூதரகத்தில் கொடுத்த அடையாள அட்டையை காண்பித்தபோது தன் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாட்டை உடனே செய்தனர். அவளுக்கு அங்கே வேறொரு பூகம்பம் காத்திருக்கும் என்று அப்போது தெரியாது.
நூரா தன் சொந்த ஊரான மரூப்கிஜயாவை அடைந்தபோது அங்கே எதைப் பார்ப்பது யாரை தேடுவது, அக்காள் எங்கே இருக்கிறாள் எதுவுமே புரியவில்லை. அங்குள்ள நிலமையைப் பார்க்கும்போது படு பயங்கரமாக இருந்தது எங்கு பார்த்தாலும் கட்டிடங்களின் இடுபாடுகள் அவைகளுக்கிடையில் செஞ்சிலுவையினரும் ரெட் கிரஸண்ட் காரர்களும் ராணுவத்தினரும் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருப்பவர்களை மீட்பதிலும் பிணங்களை எடுப்பதிலும் மும்முரமாய் இருந்தனர். பொதுமக்கள் தங்கள் உறவினர்களை அடையாளம் காட்டிக்கொண்டும் இருந்தனர். எங்கு பார்த்தாலும் மக்களின் அழுகையும் கூக்குரலும் ஒப்பாரியுமாக இருந்தது.
நூரா தன் அக்காவைத் தேடிக்கொண்டிருந்தாள். பல பேர்களிடம் விசாரித்து கடைசியாக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கே அவளையும் அவள் கணவனையும் கண்டதும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
'நூரா நாம் மோசம் போய்ட்டோம்டி, எல்லாம் போயிடுச்சு, எதுவும் பாக்கி இல்லை.'
'என்ன சொல்றே நீ?'
'ஆமாம் நம் அம்மா அப்பா எல்லாம் போய் சேர்ந்திட்டாங்க. உன் புருசனும் பிள்ளைகளும்கூட போய்ட்டாங்க, நம்ம வீடு தரை மட்டமா ஆயிடுச்சு...'
'அக்கா, நீ அப்படீல்லாம் சொல்லாதே, இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கிட்டு உயிரோடு இருப்பாங்க, வா அங்கே போய் பார்க்கலாம்.'
'இல்லை, இங்கே வா காண்பிக்கிறேன்' என்று மார்ச்சுவரியில் மூடி வைத்திருந்த ஏற்கனவே அடையாளப் படுத்தியிருந்த சடலங்களைக் காண்பித்தாள்.
அவற்றை கண்டதும் "யா அல்லா..... நான் என்ன செய்வேன் என்று அழுதுக்கொண்டே நூரா மயங்கி விழுந்தாள். பக்கத்திலுருந்த மருத்துவர்கள் அவளை மயக்கம் தெளிவித்து சுய நிலைக்கு கொண்டுவந்தனர்.
'நூரா உனக்காகத்தான் காத்திருந்தோம். இங்கு ஆஸ்பத்திரியில் இடமில்லை எனவே சீக்கிரமாக அடக்கம் செய்யும்படி வற்புறுத்துகிறார்கள். அவர்கள் நிலமையும் அப்படி. ஆகவே சீக்கிரம் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வோம் என்று சொல்லிவிட்டு அன்று மாலையே அடக்கம் செய்தனர்.
மறு நாள் காலை நூரா, நம்மிடம் சொத்து என்று இருப்பது இது ஒன்றுதான் என்று ஒரு பையை நூராவிடம் நீட்டினார் அக்காளின் கணவன். அதில் அவள் குடும்ப ஐ டி கார்டு இருந்தது. இது உன் தந்தையின் சட்டைப் பாக்கட்டில் இருந்ததாம். இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய? என்று
கேட்க, இதை பத்திரமாக வைத்துக்கொள், இதை வைத்துக்கொண்டுதான் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் உதவிகளைப் பெறவேண்டும் என்று விளக்கினார். சரி இனி இங்கிருப்பதில் பிரயோஜனமில்லை நாம் ஜாக்கர்தாவுக்குப் போவோம், அங்கே இது சம்மந்தமான ஆபிஸில் தொடர்பு கொண்டு ஆகவேண்டியதை செய்வோம் என்றார்.
நூராவுக்கு மனமில்லைதான் என்றாலும் தன் அக்காளும், அவள் புருசனும் வற்புறுத்தியதால் வேறு வழி தெரியாமல் ஜாக்கர்தா சென்றனர். ஒரு வாரம் பத்து நாட்களாக பூகம்ப நிவாரண அலுவலகத்திற்கு தினமும் அலைந்தனர். முதல் நாள் அவர்களிடமிருந்து விபரங்களை கேட்டறிந்து குறித்துக்கொண்டதை தவிர வேறொன்றும் நடக்கவில்லை. கையூட்டு கொடுத்தால் பணிகள் சற்று வேகமாக நடக்கிறது. நூரா மனம் சோர்ந்தாள். தான் யாருக்காக துபை போனோமோ அவர்களெல்லாம் போய்சேர்ந்த பிறகு இனி எதற்கு போகவேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆளானாள். நீ இனி போய் என்ன ஆகப்போகிறது, இங்கேயே ஒரு வேலையில் சேர்ந்துக்கொண்டால் எனக்கு ஆறுதலாக இருக்கும் என்று அக்காளும் வற்புறுத்தினாள்.
இந்நிலையில் எப்படியோ மோப்பம் பிடித்து நூராவின் மீது மையல் கொண்டிருந்த சுகர்தோ திடீரென்று முளைத்தான். அச்சையிலிருந்த அவன் மரூப்கிஜயாவில் தேடி அலைந்துவிட்டு நேராக ஜாக்கர்தா வந்து தன்னை கல்யாணம் செய்துகொள்ளும்படி நூராவை வற்புறுத்தினான். அவளுக்கு சிறிதும் விருப்பமில்லை, மறுத்துப்பார்த்தாள், திட்டினாள், மிரட்டினாள், அவள் என்ன சொல்லியும் கேட்பதாக தெரியவில்லை. எனவே, சற்று பொறுத்திரு நான் துபை விசாவை கேன்ஸல் செய்துவிட்டு உன்னை கல்யாணம் செய்துக்கொள்கிறேன் என்று சமாதானம் செய்தாள்.
-----------
துபை...
நூராவை வழியனுப்பிய பிறகு இபுறாஹிம் வேலையில் பிஸியாகிவிட்டான். நிச்சயமாக அவள் போன் பண்ணுவாள் என்றுமட்டும் தெரியும். இதற்கிடையில் ஜெனரல் மேனேஜர், இபுறாஹிம் உட்பட வேறு சில அலுவலர்களை அழைத்து சில முக்கிய பணிகள் பற்றி ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். மீட்டிங் ரூமில் எல்லோரையும் அழைத்து பேசத்தொடங்கியபோது அவர் சொன்ன முதல் வார்த்தை, எல்லோருடைய மொபைல் போன்களை சைலண்டில் வைத்துவிடுங்கள், போன் வந்தால் பேசவேண்டாம். மீட்டிங் முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என்றார்.
இப்போது எல்லோரும் கவனமாகக் கேளுங்கள். நம்முடைய கம்பெனிக்கு புதிய ஆர்டர் வந்துள்ளது. பலத்த போட்டிக்கிடையில் இந்த ஆர்டரை நம் தலமை அலுவலகம் எடுத்திருக்கிறார்கள். தற்போது ஈராக் rebuild ஆகிக்கொண்டிருக்கிறது. அங்குள்ள ஆயில் ஃபீல்டுக்கு நிறைய சாமான்கள் தேவைப்படுகிறது. முக்கியமாக பைப்புகள், வால்வுகள், Non Return Valves, Double Regulating Valves, High Pressure Vessals இப்படி பல பொருட்கள் தேவைப்படுகின்றன. எனவே ஓவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டு அவரே பெயர்களை குறிப்பிட்டு அவரவர்களுக்கான பொறுப்பை ஒப்படைத்தார்.
மிஸ்டர் இபுறாஹிம், உங்களிடம் மிக முக்கியமான பொறுப்பை ஒப்படைக்கப்போகிறேன். இப்போது மார்க்கட்டில் சில சாமான்கள் விலை மிக அதிகமாக இருக்கிறது. அவை அமெரிக்காவில் மட்டும் உற்பத்தியாகிறது. ஆனால் தற்போது அதைவிட மேற்பட்ட தரத்தில் உங்கள் இந்தியாவில் குறிப்பாக திருச்சிறாப்பள்ளியிலுள்ள BHEL நிறுவனத்தில் உற்பத்தியாகிறது, விலையும் சற்று குறைவு. எனவே நீங்கள் அவர்களுடன் email ல் தொடர்பு கொண்டு பொருட்களுக்கு ஆர்டர் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது இரண்டுமுறை இபுறாஹிமுடைய போன் மௌனமாக அலறியது. அதை கவனித்த அவன் நம்பர் புதிதாக இருந்ததால் அது நூராவாகத்தான் இருக்கும் என்று ஊகித்துக்கொண்டு வேறு வழி இல்லாமல் அமைதியாக இருந்தான்.
மீட்டிங் முடிந்ததும் முதல் வேலையாக வந்த நம்பருக்கு டயல் செய்தபோது லைன் கிடைக்கவில்லை. இரண்டுமூன்று முறை முயற்சித்தும் பலனில்லை. சரி அவள் மீண்டும் தொடர்பு கொள்வாள் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது மீண்டும் அவன் போன் அலறியது.
'ஹலோ!'
'நான் நூரா பேசுறேன்..' என்றவள் மறு முனையில் அழ ஆரம்பித்துவிட்டாள்.
'அழாதே, விசயத்துக்கு வா, எப்படி இருக்கிறாய்?'
'எல்லாம் போயிடுச்சு, நான் அனாதையாகிட்டேன்' என்று அழுகையினூடே திக்கினாள்.
'என்ன சொல்றே? அழுகையை நிறுத்திட்டு சொல்லு.'
'எல்லோரும் இறந்துட்டாங்க.'
'எல்லோரும்னா?'
'எங்க குடும்பமே அழிஞ்சுப்போச்சு, நானும் அக்காவுமட்டும்தான் பாக்கி. இனி நான் அங்கே வந்து என்ன செய்யப்போறேன்?'
'அப்படியெல்லாம் சொல்லாதே! அங்குள்ள வேலையெல்லாம் முடிச்சிக்கிட்டு நீ இங்கே வா. வந்த பிறகு இங்கே இருப்பதா போவதா என்று முடிவு செய்துக்கொள்ளலாம்.'
'இல்லை இப்றாஹிம்..'
'நான் சொல்வதைக்கேள்' என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.
இருபது நாட்கள் கழித்து நூரா துபை வந்து தன் வேலையில் பொறுப்பேற்றபோது ஆபிஸிலுள்ளவர்கள் அனைவரும் அவளிடம் துக்கம் விசாரித்தனர். சிலர் ஆறுதல் சொன்னனர்; சிலர் மிகவும் வேதனைப் பட்டனர்; சிலர் அறிவுரை வழங்கினர். ஆனால் இபுறாஹிம் மட்டும் வரவில்லை. அவள் கண்கள் அங்குமிங்கும் துளாவியபோது, அதை உணர்ந்த கூட வேலை செய்யும் குளோரியா, அவன் ஆபிஸ் வேலையாக மஸ்கட் போயிருப்பதாக கூறினாள்.
மஸ்கட்டிலிருந்து திரும்பிய இபுறாஹிம், நூராவை கண்டபோது அவளுடைய கண்கள் நீரை சொரிந்துக்கொண்டிருந்தன. ஆபிஸில் அழக்கூடாது நாம் ரூமுக்குப் போய் பேசிக்கொள்ளலாம் என்று அமைதிப்படுத்தினான்.
அன்று மாலை ஆபிஸிலிருந்து தன் காரில் அழைத்துக்கொண்டுபோகும்போது நடந்ததை விளக்கிவிட்டு இனி என்ன செய்வது என்று தெரியவில்லை என்று குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
நன்றாக அழட்டும் என்று வாளாவிருந்திட்டான். அழுதால் மனத்திலுள்ள பாரம் சற்று குறையும்; ஒரு தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என்பது இபுறாஹிமுக்கு நான்றாகவே தெரியும். பத்து பதினைந்து நாட்கள் வரை எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை. அவளுடைய போக்கிலேயே விட்டுவிட்டு அவளுடைய மனப்போக்கில் எதாவது மாற்றம் வருகிறதா என்று கூர்ந்து கவனிது வந்தான். கொஞ்சமும் எந்த மாற்றமும் வராததைக் கவனித்த அவன் நூரா, ஆபீஸ் முடிந்ததும் கம்பெனி வண்டியில் போகவேண்டாம் என்னுடைய காரில் வா, உன்னை உனது ரூமில் விட்டுவிடுகிறேன் என்றான்.
உனக்கேன் சிரமம் என்று அவள் சொன்னபோது, இல்லை, எனக்கு சிரமமில்லை, கொஞ்சம் ஷாப்பிங் பண்ணவேண்டியிருக்கிறது நீ இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும் என்றான்.
அவளுடைய மன இருக்கத்தைப் போக்குவதற்காக முதல் நாள் ஷாப்பிங் மால், மறு நாள் பார்க் என்று ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு இடமாக அழைத்துக்கொண்டு சென்றான். இப்படியாக நான்கைந்து நாட்கள் கடந்தபின் ஒரு விடுமுறை தினம் மாலை கடற்கரைக்கு சென்றனர். அங்கு ஓரிடத்தில் அமர்ந்து மௌனமாக இருந்தனர். யார் பேச்சைத் தொடங்குவது என்று தெரியவில்லை. நூரா கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மௌனத்தை கலைக்கும் முகமாக இபுறாஹிம் லேசாக கனைத்துக்கொண்டு துவங்கினான்.
'நூரா....'
'...........'
'ந்நூ...ரா.....'
'ம்.....'
'நான் கூப்பிடுறேன் நீ ஏன் பேசாமலிருக்கிறாய்?'
'என்ன பேச சொல்றே? எனக்கு எதுவுமே பிடிக்கலெ..'
'என்னைக்கூடவா?'
'அப்படியல்ல, லைஃபே பிடிக்கலே!'
'ஏன் அப்படி சொல்றே?'
'என் நிலையில் நீ இருந்து பார்த்தா தெரியும்.'
'இதோ பார்! உன்னுடைய மன அழுத்தம் எனக்கு நல்லாவே புரியுது, நீ எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறாய் என்பது எனக்குப் புரியாமலில்லை. நீ நடந்த சம்பவத்தையே நினைச்சுக்கிட்டு இருந்தா உன்னுடைய துன்பம் கொறஞ்சிடுமா? நீ இதையே நினைச்சிக்கிட்டிருந்தா வீனா உடம்புக்குத்தான் கேடு! நீ அழுவதாலையோ அல்லது வேறொருத்தர்ட்டே சொல்லி மாள்றதாலெயோ போனவங்க திரும்ப வரப்போறதில்லை. என்னுடைய ஆசிரியர் அடிக்கடி ஒரு பழமொழி சொல்வார் "acceptance of inevitable is the first step of conquering happiness" என்று. தவிற்கமுடியாததை ஏற்றுக்கொள்ளத்தான் வேனும், நாமாக வரவழைத்துக்கொண்ட துன்பமல்ல; அது இறைவன் செயல்; அவன் எப்படி நாடி இருக்கிறானோ அப்படித்தான் நடக்கும். யார் யாருக்கு எப்படி இறப்பு இருக்கிறது என்று அவன் முடிவு செய்துள்ளானோ அதன்படித்தான் நடக்கும் அதில் ஒரு சகெண்ட் முந்தவும் செய்யாது ஒரு சகெண்டு பிந்தவும் செய்யாது. அதனாலெ நீ மனதை தேத்தித்தான் ஆகனும். மறக்கமுடியாத சம்பவம்தான், நீயோ நானோ என்ன செய்யமுடியும்? மறக்க முயற்சி செய்.'
அவன் சொல்லச் சொல்ல துன்பம் மேலிட பொங்கிக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு, 'இப்றாஹிம் நீ சொல்வதல்லாம் சரிதான். எனக்கென்று ஒரு வாழ்க்கை இருந்தது, இப்போது அது போய்விட்டது. எல்லாம் போனபிறகு நான் யாருக்காக வாழவேண்டும்? இங்கு இருப்பதினால் ஒரு மெஷின் லைஃப்தான் கிடைக்கும். நான் என் தாய் நாடு போவதுதான் நல்லது என்று எனக்குப் படுகிறது!' என்று தொண்டை அடைக்க சொல்லிக்கொண்டு எழுந்தாள்.
அப்போது அவள் கையை முதன்முறையாகப் பிடித்து அமரவைத்தான் இபுறாஹிம். அவன் கை பட்டதும் எதோ ஒரு உணர்வு தன்னுள் மின்சாரம்போல் பாய்வதைப் போன்று உணர்ந்த அவள் மறுப்பேதும் சொல்லாமல் அமர்ந்தாள்.
யார் இருக்கிறார்? யாருக்காக வாழவேண்டும் என்று ஏன் புலம்புகிறாய்? நான் இருக்கிறேன், எனக்காக நீ வாழ்ந்துத்தான் ஆகவேண்டும். என்று அவன் சொன்னபோது அவள் மனம் விசும்பியது; தனக்காக ஒரு ஜீவன் இருப்பதை உணர்ந்தபோது அவள் கண்கள் கண்ணீருடன் விரிந்தது!
இதோ பார்! நான் ஒரு முடிவோடுதான் பேசுகிறேன். நான் சொல்வதைக் கேட்டபிறகு உன் முடிவை சொல் என்ற புதிரோடு பேச தொடங்கினான்.
'நான் உன்னை நேசிக்கிறேன்; உன்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்; உன்னை என் வாழ்க்கைத் துணையாக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். உன்னுடைய சம்மதம் வேண்டும். இப்போதில்லாவிட்டாலும் இரண்டு நாள் கழித்து சொல், நல்ல செய்தியாக சொல்.'
'இப்றாஹிம் உனக்கு என்ன ஆகிவிட்டது? நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்குத் தாய். நீயோ கல்யாணம் ஆகாதவன்; உன் தாயார் ஒரு பெண்ணை கற்பனை செய்து வைத்திருப்பார்கள்.'
'இல்லை, என் முடிவுதான் என் தாயாரின் முடிவும்.'
'இதோ பார் இப்றாஹிம் நீ இந்தியன், நானோ இந்தோனேசியா. நம் இரண்டு நாட்டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு இவைகளெல்லாம் வேறு. இதையெல்லாம் சிந்தித்துப் பார்.'
'நூரா! மொழி கலாச்சாரம் எல்லாம் நாம் ஏற்படுத்திக்கொண்டது, அதாவது முன்னோர்கள் ஏற்படுத்தியது. அதையெல்லாம் குப்பையில் போடு. இரு மனம் ஒன்றானால் அவையும் ஒன்றாகிவிடும்.'
அவனுடைய உறுதியான முடிவை உணர்ந்த நூரா இரண்டு நாள் அவகாசம் கொடு என்று கேட்டுக்கொண்டாள்.
மறுநாள் ஆபீஸை விட்டு புறப்படும்போது, இப்றாஹிம் இன்றும் நான் உன்கூட வருகிறேன் என்று கூறிவிட்டு அவன்கூட சென்றாள். காரில் போகும்போது நேராக ஸ்டார் ஹோட்டலுக்கு போகும்படி உத்திரவிட்டாள். அங்கே சென்று ஐஸ்கிரீமை சுவைத்துக்கொண்டே பேச்சை தொடங்கினாள்.
'இப்றாஹிம், முந்திரிக்கொட்டை மாதிரி நீ இதுக்கு காசு கொடுக்கக்கூடாது, இது என்னுடைய ட்ரீட்.'
'O.K. உன் இஷ்டம்.'
'நான் ராத்திரி என் அக்காவிடம் பேசினேன், எனக்கு எது விருப்பமோ அதை செய்துக்கொள் என்று சொல்லிவிட்டாள். எனவே நான் உன் விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறேன், உன்னை மணந்துக்கொள்ள பரிபூரணமாக சம்மதிக்கிறேன். இப்பொ சந்தோஷம்தானே?'
'சரி, அப்படியானால் நீ மும்பைக்குப் புறப்பட தாயாராயிரு.'
'நீயும் இந்தோனேசியா வரனும்!'
'ஓ எஸ், நிச்சயம் வருகிறேன்'
ஒரு மாதத்திற்குப் பிறகு இருவரையும் ஏற்றிக்கொண்டு துபை இண்டர்நேஷனல் விமானத்தளத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மும்பையை நோக்கிப் பறந்தது.
-----00000-------
4-10-2007 திண்ணை இணைய இதழில் வெளிவந்தது
No comments:
Post a Comment