Saturday, August 15, 2009

வாழ்க்கை

வாழ்க்கை


அவசர புத்தி, மத்தவங்க நல்லாயிருக்காங்களே! நாம இல்லையே என்ற எரிச்சல், வரக்கூடிய
வெற்றியை நினைத்து ஆச்சரியப்படுவது இதனால்தான் அனேகம்பேரு வீணாகிப்போறாங்க.
இதோ அவர் இருக்கிறாரே - பத்து வருஷமா அப்படியேத்தான் இருக்கிறார், நான்
சொல்லிட்டேன் ஒன்னும்முடியாதுன்னு.


அப்பொ, முன்னேற வழிகாட்டி வேணும், உஸ்தாது வேணும். உஸ்தாது கிடைத்த பிறகு சொந்த புத்திக்கு இடம் கொடுக்கக்கூடாது. சொந்த புத்தி அதிகமாக இருக்கு அதனால்
கெட்டபழக்கங்கள் ஏற்படுகிறது. கெட்டபழக்கங்கள் என்றால் செயலை சொல்லவில்லை,
வைத்திருக்கிற தொழிலிலேயோ அல்லது வியாபரத்திலேயோ நடைமுறைக்கு மீறி
செயல்படுவதை சொல்கிறேன்.

குடும்பத்தில், - தலைவன் நன்றாக இருந்தால் குடும்பம் நன்றாக இருக்கும், தலை ஆடினால்
வால் ஆடக்கூடாது ஆனால் இங்கு வால் ஆடுகிறது, வால் ஆடுவது தலைக்கே தெரியவில்லை. வால் ஆடுவது தலையில் கோளாறு இருப்பதினால், தலையில் கோளாறு
இருப்பது தலைக்கே தெரியவில்லை. ஏன் உற்றுபார்க்கத் தெரியவில்லை.

"ஃபிக்குருக்க ஃபீக்க யக்ஃபி" - "உன்னை உற்றுப் பார், அது உனக்குப் போதுமானது" என்று நான் முன்பு சொல்லியிருந்ததை நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லை, அல்லது புரிந்தும் செயல்படுத்தவில்லை. நான் சொன்ன பயிற்சிகளை சரியாக செய்துவந்தால் எல்லாம் சரியாக நடக்கும். அது சிதறாமலிருக்க அவ்வப்போது instruction கொடுத்துவருகிறேன்.

இதில்லாமலிருந்தால் மனம் சிதறுவது தெரியாமல் போய்விடும், அப்படி சிதறிப்போய்
பிரச்சனைகள் வந்து "பெப்பப்பே" என்று முழித்து தவறு எங்கு என்று தெரியாமல் மூன்றாவது
ஆளிடம் சொல்வான், அவ்வளவுதான் எல்லாம் கெட்டுவிடும். எப்போது மூன்றாவது ஆளிடம்
சொன்னானோ சொந்த புத்தியை இழந்துவிட்டான் என்று அர்த்தம்.

பிரச்சனை எதுவானாலும் ஒளிவுமறைவின்றி சொல்லக்கூடிய ஒரே ஆள் உன் வழிகாட்டி
அதாவது உனது உஸ்தாதுதான்; அப்படியில்லாமல் நீங்கள் யோசனைக் கூறுங்கள் என்று
மற்றவர்களிடம் சென்றால் அவ்வளவுதான், அவன் தனது சொந்த புத்தியில் பட்டதை சொல்லி அவனுக்கே தெரியாமல் தப்பான பாதையைக் காட்டுவான். அந்த தப்பானப் பாதையில் செல்வதோடல்லாமல் அந்தப்பாதையே நல்ல பாதை என்று நூற்றுக்கு நூறு நம்ப
ஆரம்பித்துவிடுவீர்கள். பிறகு குழப்பத்துக்கு பஞ்சமில்லாமில் போய்விடும்.

நான் கேட்கிறேன் Super star, Mega star என்று வருணிக்கப்படும் நடிகர்களைப் பாருங்கள்,
அவர்களிடம் என்ன நடிப்பு இருக்கிறது? ஒன்றும் இல்லையே, அப்படியானால் ஏன்
அழைக்கப்படவேண்டும், அது அவர்களுடைய Mental force.

இதோ அமர்ந்துள்ளாரே கவிஞர் என்ன அழகாகக் கவிதை எழுதுவார் தெரியுமா? அவருக்குத்
தெரியாத சினிமாக்காரர்கள் இல்லை, ஆனால் அவரால் மேலே வரமுடியவில்லை. இவருக்குப் பிறகு வந்த கவிஞர்கள் எங்கோ போய்விட்டார்கள். காரணம் இவரிடம் உள்ள mental weakness.

முதலில் நாம் பார்க்கவேண்டியது mental force . நாம் சுத்தமாக இருக்கவேண்டும்.
மற்றதெல்லாம் தானே துலங்கும். துலங்கிக்கொண்டுவரும்போது, துலங்குவதினால்தான்
சுத்தமாக இருக்கிறோம் என்று தப்பாக நினைத்துவிடக் கூடாது. சுத்தம்தான் துலங்கவைக்கிறது.

அப்படியானால் மனப்பயிற்சி உயிர் மாதிரியல்லவா? அதவது உயிர் வாழ்வதற்கு அது
முக்கியம். எனவே உயிரைவிட மேல் என்று அர்த்தம். இதில்லாமல் வாழ்க்கையில் எதுவுமே
செய்ய இயலாது. ஒரு சாண் ஏறுவதும் ஒரு முழம் சருக்குவதும், பின் ஒரு சாண் ஏறுவதும்
ஒரு முழம் சறுக்குவதுமாகவே இருக்கும்.

முறையாக மனப்பயிற்சி செய்ய பழக்கப்பட்டுவிட்டால் அப்புறம் தொட்டது துலங்க
ஆரம்பித்துவிடும். பின்பு எதை தொடங்கலாம் என்ற சிந்தனை வரும், இதைப்பற்றி இப்போது
யோசிக்கலாமா இல்லை பிறகு யோசிக்கலாமா என்ற முடிவு எடுப்பது, சிந்தனைச் செய்தால்
சரியான முடிவு கிடைக்கும் போன்ற பழக்கங்கள் எல்லாம் வந்துவிடும்.

ஆனால் பயிற்சியை விட்டுவிடக்கூடாது. அதாவது அலட்சியப்படுத்தக்கூடாது. அலட்சியம்
செய்தால் எல்லாம் போய்விடும். எனவே பயிற்சியை Second nature க மாற்றி
கொள்ளவேண்டும். வேண்டுமானால் பயிற்சியை நான்கைந்து நாட்களுக்கு விட்டுவிட்டு
ஆறாவதுநாள் செய்துபாருங்கள், செய்யவராது.

சிரமம் வரும்போது, சிரமம் வந்துவிட்டதே என்று கவலைப்படக்கூடாது. சிரமத்தில் என்ன
நன்மை இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். mental attitude ஐ கொஞ்சம்
மாற்றவேண்டும் அவ்வளவுதான். சிரமம் வருவது நன்மைக்குத்தான் என்று நினைத்தால் மனம் அமைதியடையும். மனம் அமைதியாக இருந்துவிட்டால் மட்டும் போதாது காரியங்கள்
நடக்கவேண்டுமே, focus பண்ணவேண்டும், strong focus தேவை. அதாவது emotional focus பண்ணவேண்டும். அப்படி பண்ணும்போது உண்மைத் தெரிய ஆரம்பித்துவிடும். பின்பு சிரமம் சிரமமாகத் தெரியாது. "சிரமம் நன்மைக்கு முதல் படி."

'அப்படியானால் சிரமம் வரும்போது உடனே அதை சமாளிக்கவேண்டுமா?'

உடனே சமாளிப்பது சற்று கடினமானக் காரியம்தான், சற்று ஒத்திவைத்து சமாளிப்பது சுலபமானது. உதாரணமாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது பிரச்சனை வருகிறது என்று
வைத்துக்கொள்ளுங்கள், அப்போது சாப்பிட இயலாது. எனவே மனதை அதன் பக்கம்
அலையவிடாமல் சாப்பிட்டுவிட்டு அமைதியாக அதனைப்பற்றி சிந்தித்து பிரச்சனையைத்
தீர்க்கவேண்டும். இப்போது உங்கள் மகன் கீழே விழுந்துவிட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள் இது ஒத்திவைக்கும் காரியமல்ல உடனே கவனிக்கவேண்டும், அதே
நேரம் பதறக்கூடாது.

ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது அப்படி வந்தால் என்ன செய்வது, இப்படி வந்தால் என்ன
செய்வது என்று நினைப்பதைவிட எப்படி செய்யவேண்டும் என்றுநினைத்துக்கொண்டிருந்தாலே
போதும். வெறுமனே நினைக்கக்கூடாது உண்மையாக நினைக்கவேண்டும்-சிந்திக்கவேண்டும்,
கவனத்தை அலையவிடாமல் அமைதியாகச் சிந்திக்க வேண்டும். வெற்றி வரும்போது மகிழ்ச்சி அடைந்துவிடக்கூடாது. எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நலிந்துப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று பொருள். அதனால் துன்பம் வரும்போது, அதை தாங்கிக்கொள்ள இயலாது.

ஒரு நேரத்தில் இருக்கும் புத்தி ஒரு நேரத்தில் இருப்பதில்லை. எந்த நேரத்தில் இருக்கும் புத்தி முக்கியமோ அந்த புத்தியை நினைத்து நினைத்து develop பண்ணவேண்டும். அதை அரை மணி நேரம் ஒரு மணி நேரம் என்று கூட்டிக்கொண்டேபோனால் இருபத்திநான்கு மணி
நேரமும் வந்துவிடும். 24 மணி நேரம் தேவையில்லை, இரண்டு மணி நேரம் வந்தால்
போதுமானது அது அடுத்த எட்டு மணி நேரத்தை கன்ட்ரோல் பண்ணும். அடுத்த நாளும் இது
தொடரும், அப்போது நீங்கள் அதை கெடுக்காமலிருக்கவேண்டும். வரக்கூடியப் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்று பயிற்சி எடுப்பதைவிட எப்படி வாழ்வது, வாழ்கின்ற வழியில் வரக்கூடியப் பிரச்சனைகளை எப்படி நீக்குவது அந்த அளவுக்கு பயிற்ச்சி
எடுத்தாலே போதுமானது. வாழ்க்கையைப் பற்றிதான் 75% நினைக்கவேண்டும், வரக்கூடியப்
பிரச்சனைகளை நீக்குவது பற்றி 25% நினைத்தாலே போதுமானது.

எதை தொடங்கினாலும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும், வரும்போது சமாளித்துக்கொள்ளலாம். சில சமயங்களில் ஒரு பிரச்சனையைத் தீர்க்கும்போது பத்து
பிரச்சனைகள் தீர்வதுண்டு. எல்லாவற்றையும் சேர்த்து வைத்து சிந்திக்கும்போதுதான் குழப்பம்
ஏற்படுகிறது.

இன்று என்பது நிச்சயம், நேற்று என்பது கடந்துவிட்ட ஒன்று, நாளை என்பது நிச்சயமில்லை. இதை இன்னும் சுருக்குங்கள், இந்த ஒரு மணி நேரம் - இதை சரியாகச் செய்யும் பட்சத்தில் அடுத்த ஒரு மணி நேரம் continue கும். இது தொடர்ந்து வரும்.

இந்த நிலை எப்போதும் இருக்குமா? இருக்காது. நமது 'குடியிருந்த கோயில்' இருக்கிறதே,
அதாவது 'பழக்க வழக்கம்' - அது சும்மா இருக்காது, உடைக்கத்தான் செய்யும். மறுபடியும்
செய்யவேண்டும், இப்படி தொடர்ந்து செய்துக் கொண்டுவந்தால் Cosmic Habit Force - அதுதான் ரஹ்மானியத் - தெய்வத்தன்மை control பண்ண ஆரம்பித்துவிடும்.

எப்போது cosmic habit force கண்ட்ரோல் பண்ண ஆரம்பித்துவிட்டதோ அப்போது நீ ராஜா
மாதிரி இருந்துக் கொள்ளலாம். தெய்வத் தன்மையை பாதிக்காதவரை நீ எந்த தப்பும்
செய்தாலும் பரவாயில்லை, அதற்காக உன் இஷ்டப்படி எல்லாம் நடக்கக் கூடாது. அப்படி
நடந்தால் அது எதிர்க்க ஆரம்பித்துவிடும், அதற்கென்று ஒரு அறிவு இருக்கிறது.

இந்த பழக்கம் நம்மில் ஊன்றி விட்டபிறகு அது, தானே நமது மனைவி, மக்களிடமும், மிக
நெருங்கிய நண்பர்களிடமும் ஒட்ட ஆரம்பித்துவிடும். நம்மிடம் உள்ள கெட்ட பழக்கங்களெல்லாம் மற்றவர்களிடமிருந்து ஒட்டிக் கொண்டதுதானே! நாமாக வளர்த்துக்
கொள்ளவில்லை, நம்மிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள், நாம் வளர்த்து
வைத்திருக்கிறோம் அவ்வளவுதான்.

எப்படி?....... நாம் ஒன்றைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருப்போம் ஒருவன் வந்து லேசாக
ஒன்றை சொல்லிவிட்டுப் போய்விடுவான், நாம் உணராமலே அதை தூக்கிவைத்து
ஆடிக்கொண்டிருப்போம். அவன் தெரிந்து சொல்கிறானா? இல்லை தெரியாமல்
சொல்கிறானா?..... தெரியாமல்தான் சொல்கிறான். எவனும் தெரிந்து சொல்வதில்லை. அவன் 'பழக்க வழக்கம்' அந்த குப்பையை இங்கு போட்டுவிட்டு போய்விடுவான், அதைவைத்து நாம் develop பண்ணிக்கொள்கிறோம். அப்படியானால் நாம் வீணாகிப் போவது யாரால்? அவர்களினாலா? இல்லை! நம்மிடம் வலு இல்லை, அதனால் அவர்கள் சொல்லும் கெட்டதை எல்லாம் நல்லதாக நாம் ஏற்றுக்கொண்டோம்.

ஒரு வாரம் - 7 நாள் குறிப்பிட்ட நேரத்தில் விழித்து, உணவு உட்கொண்டு, சரியாக வேலை
செய்து, குறித்த நேரத்தில் உறங்கச் செல்கிறோமா? இல்லை. ஒரு வாரம்கூட நாம் சரியாக
வாழவில்லை. அதாவது ஒரு ஜும்ஆ உடைய பவர் அடுத்த ஜும்ஆ வரை நிற்பதில்லை. ஏன் ஒரு நாள்கூட நிற்பதில்லையே?

விளையாட்டாகத்தான் நாம் இருக்கிறோம். இதை செய்துக்கொடு என்று மற்றவரிடம்
வேலையை கொடுப்பது போல், இதன் முடிவை நீ யோசனைப்பண்ணி சொல் என்று
சிந்தனையை கொடுத்துவிடுகிறோம் வக்கிலிடம் வழக்கை ஒப்படைப்பதுபோல். இது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? நமது சக்தியை அடமானம் வைத்தமாதிரி மூளை வேலை செய்யாது, பழக்கமாகிவிட்டதே.

இது பிரச்சனை, நான் யோசனைப் பண்ணுகிறேன் நீங்களும் சற்று யோசித்து சொல்லுங்கள்
என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். அதை நாம் செய்வதில்லையே! குறிப்பிட்ட ஒரு பொருள் அல்லது இடம் எங்கு இருக்கிறது என்பதை மறந்துவிட்டால் அதை யோசனைச்செய்து கண்டுபிடிக்க வேண்டும். இதில் மிகப்பெரிய சக்தி உள்ளது. ஒருவரிடம்
கேட்டால் நாம் தேடும் இடத்தை சொல்லிவிடுவான் அது கூடாது. இதுவும், நமக்கு அவர்
கொடுக்கமாட்டாரா இவர் கொடுக்கமாட்டாரா என்று எதிர்பார்ப்பதும் ஒன்றுதான். புரிகிறதா
வித்தியாசம்.

நமக்கு அல்லாஹ் கொடுக்கவேண்டும் நாம் நான்குபேருக்குக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வேண்டும். நாம் செய்யவேண்டும், மாறாக அவர் செய்வார் என்று நினைத்து
செய்யாமல்விட்டால் மனம் சங்கடப்படும். இந்த எதிர்பார்ப்பு புலம்பலாகக்கூட மாறும்.
சங்கடப்படாமல் பிறருக்குக் கொடுப்பதில்தான் சிறப்பு இருக்கிறது. நீ கொடுக்கவேண்டும்,
மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்காதே! உலகில் உள்ள துன்பங்களில் பெரும்பகுதி
எதிர்பார்ப்பினால் வந்ததுதான். பலனை எதிர்பார்க்காமல் கொடுக்கத் தாயார் என்று
ஆகிவிட்டால், அந்த சூழல் தானாக அமையும், அள்ளி அள்ளி கொடுக்க குறையாத செல்வம்
வரும். இதற்கு நீ வளர வேண்டும். வளர..... சிந்தனைச் செய், உன் சிந்தனை-எண்ணம்-செயல் எல்லாம் உனது வளர்ச்சியை வட்டமிட்டுக் கொண்டிருக்கவேண்டும்.

ஒருவரிடம் உதவி கேட்பதில் தவறில்லை, ஆனால் அந்த உதவி இலவசமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்பது மிகப் பெரிய தவறு. எவர் கொடுக்கிறாரோ அவருக்குள்ள
ஆண்டவன்தான் உனக்கும் இருக்கிறான்.

சில வசதி படைத்தவர்கள் தன்னுடையத் தேவைகளை நிவர்த்திச் செய்ய வசூல் பண்ணுவதற்காக வெளிநாடு செல்கிறார்கள், அங்குள்ளவர்களும் கொடுக்கிறார்கள். ஆனால்
அவர்கள் எவ்வளவு சங்கடப்படுகிறார்கள் தெரியுமா வெளியில் சொல்ல, ஏன்? இவர்களிடம்
செல்வமிருந்தும் வசூலுக்கு வருகிறார்களே என்று. இவர்களிடம் பணம், அறிவு, செல்வாக்கு
இருந்து என்ன பயன்?

இதை similarity science - ல், miniature form - ல் சொல்கிறேன். நண்பர்களுடன் ஓட்டலுக்கு சாப்பிடச் செல்லும்போது ஓர் ஓரத்தில் உட்காருவது, எவனாவது காசு கொடுக்கட்டும் என்று மெதுவாக சாப்பிடுவது. இப்படி இருந்தால் என்ன பொருள்? நான் சற்றுமுன் சொன்ன செயல்தான். இதெல்லாம் மாறாமல் life மாறாது.

நீ வளர வேண்டுமென்றால் வெளிப்பழக்கத்தை நீக்க வேண்டும். உனக்குத் தெரியுமா
எத்தனைபேர் தன்னை மறந்து வாழ்கிறார்கள் என்று? அவர்கள் வாழவில்லை விழித்துக்கொண்டே தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் பழகினால் அவர்களது
பழக்கங்கள் வருமா வராதா? ஏன் அவர்கள் negativly oriented.

நீ வளர்ந்தால் உனக்கு நல்லது, உன் குடும்பத்திற்கு நல்லது, உனது சமுதாயத்திற்க்கு நல்லது, நான் மகிழ்ச்சி அடைவேன். வீணாகிவிட்டால் எண்ணிய எண்ணத்திற்கு, செய்த வினைக்கு கிடைத்த பரிசு அனுபவியுங்கள் என்று விட்டுவிடுவேன்.


-------------------------------------------------------------------------------------

No comments: