Sunday, August 30, 2009

குழந்தை

ஹமீது ஜாஃபர்




மனிதர்களில் பெரும்பாலோர் நடுநிலை சிந்தனையாளர்களாக இருந்தாலும் ஒரு சிலரின் தடுமாற்ற சிந்தனையினால் ஏற்படும் தாக்கம் சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.



ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன்வைப்பதில் தவறு கிடையாது, அது அவரவரது கருத்து சுதந்திரம். ஆனால் தாம் சொல்வதுதான் சரியானது என்று வாதிடும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. குறிப்பாக மத ரீதியாக முன்வைக்கப்படும் கருத்தாக்கம் உள ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் மிக பெரிய பாதிப்பை உருவாக்குகிறது.



இத்தகைய கருத்தாக்கங்களை உருவாக்குபவர்கள் இரண்டு வகையினர். முதல் வகையினர் தான் சார்ந்திருக்கும் மதம், சமூகத்தைப் பற்றிய தீவிர சிந்தை உள்ளவர்கள். மற்றொரு வகையினர் மற்ற மதம் சமுதாயத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள். இந்த இருவரும் தாங்கள் முன்வைக்கும் செய்தி சரியானதுதானா என்று சீர்தூக்கிப் பார்ப்பதே இல்லை. ஒரு விரல் முன்னுள்ளவனை சுட்டிக்காட்டும்போது மற்ற மூன்று விரல்கள் தன்னை சுட்டிக்காட்டுகின்றன என்று உணருவதுமில்லை. ஒருவர் மற்றவர்மீது சேற்றை வாரி பூசுவது மெகா சீரியல் மாதிரி நடந்துக்கொண்டே இருக்கிறது. நல்ல செய்தியைவிட கெட்ட செய்திக்கு வலிமை அதிகம். ஒரு துளி விஷம் போதும் ஒரு குடம் பாலை வீணாக்க என்ற உண்மை புதிதல்ல.



உலகில் எந்த குழந்தையும் முஸ்லிமாகவோ, கிறுஸ்துவமாகவோ, இந்துவாகவோ அல்லது வேறு எந்த மதத்தை சார்ந்ததாகவோ அல்லது நாத்திகனாகவோ பிறக்கவில்லை. அதற்கு மதம், சாதி, இனம், மொழி என்று எதுவுமே இல்லை. "எல்லா மகவுகளும் இயற்கைநெறியில்தான் பிறக்கின்றன" என்று நபி மொழி இருக்கிறதென்றால் குழந்தை, குழந்தையாகவே பிறக்கிறது என்றுதான்தான் பொருள் கொள்ளவேண்டும். அங்கே இஸ்லாத்தைப் புகுத்தினால் அது இஸ்லாத்தை கேவலப்படுத்துவதாக ஆகிவிடும்.



குழந்தை யார் வீட்டில் பிறந்தாலும் அது வளர்கிற சூழலைப் பொருத்தே மதம், மொழி, கலாச்சாரம் மாறுகிறது. மதப்பற்று மிக்க ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தை அதே மதப்பற்றுடன் வளரும் என்று சொல்லமுடியாது.



இங்கர்சால் கடவுள் நம்பிக்கையற்றவன், நாத்திகன். அவனது மகன் எதிர்பாரதவிதமாக மாடியிலிருந்து கீழே விழுவதைப் பார்த்த அவன், "கடவுளே என் மகனை காப்பாற்று" என்று தன்னை அறியாமலே கத்திவிட்டான். மயக்கம் தெளிந்த மகன் கேட்டான், "அப்பா, உனக்குதான் கடவுள் நம்பிக்கை கிடையாதே நான் விழும்போது "கடவுளே...." என்று ஏன் கத்தினாய்?" என்று. அதற்கு அவன், "மகனே! நான் வளர்ந்த விதம் அப்படி அதனால் கத்தினேன். ஆனால் நீ அப்படி கத்தமாட்டாய், நீ வளரும்விதம் வேறு" என்றானாம்.



பிறந்த குழந்தைக்கு அதன் தாய், பால்கொடுக்கும்போது சப்பி சூப்பி குடிக்கிறது, அந்த அறிவை கொடுத்தது யார்? தனக்கு விரும்பாத உணவைக் கொடுத்தால் வாயை மூடிக்கொள்கிறது. கட்டாயப்படுத்தி கொடுத்தால் துப்பிவிடுகிறது. துப்பவும் வாயை மூடிக்கொள்ளவும் யார் சொல்லிக்கொடுத்தது? அதற்கு விளக்கம்? பிறக்கும்போதே கொண்டுவந்த பழைய அறிவு.



மீன் குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் நீந்தும். வண்டு கூட்டைவிட்டு தத்தித் தத்தி வெளிவரும், வந்தவுடன் குப்பென்று முழுமையாக வளர்ச்சிப் பெற்ற வண்டுபோல் பறக்கும். அவைகளின் வாழ்க்கை முறை என்பது மிக மிக சாதாரணமானது. ஆனால் மனிதனுடைய நிலை அப்படியல்ல. அவனுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன, வாழ்க்கைமுறை கடுமையானது. அதனால் அவன் ஒவ்வொரு அசைவையும் படித்தாகவேண்டும். உட்காருவது முதல் எழுந்து நடக்கிற முறை வரை படிக்கவேண்டும்; ஏன் சுவாசிப்பது உள்பட படித்துக்கொள்ளவேண்டும் என்ற நிலை அங்கு இருக்கிறது. ஆகவே அங்கிருந்து வந்தவுடன் இந்த சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்கிறான். பார்ப்பதற்கு விழிகளை அசைத்து பயிற்சி எடுத்துக்கொள்கிறான்; நடப்பதற்கு கை கால்களை ஆட்டி வலுவேற்றிக்கொள்கிறான். அதில் மகிழ்ச்சி வரும்போது சிரிக்கிறான், அதிர்ச்சி வரும்போது அழுகிறான்.



சாதாரணமாக நடைமுறையில் இதை பார்க்கலாம், உறவினர் வீட்டிற்கோ அல்லது நண்பர்கள் வீட்டிற்கோ செல்கிறோம் அங்கு அறிமுகம் இல்லாத குழந்தையை தூக்கும்போது சில குழந்தை நம்மையே பார்க்கும், சில வீல் என்று கத்தும். அது ஏன்? பெரும்பாலும் காரணம் தெரியாது அல்லது அதை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.



ஆனால் காரணம் இல்லாமலில்லை. நமது உலகத்தில் தராதரம், ஏற்றத்தாழ்வு, repelling force, attractive force இருக்கிற மாதிரி அவர்கள் உலகத்திலும் உண்டு. அந்த குழந்தை பார்க்கிறது, இவன் நம் இனத்தவன்தானா இல்லையா என்று. தன் இனத்தவன் என்றால் பார்த்துக்கொண்டே இருக்கும்; தன் இனத்தவனில்லை என்றால் முகத்தை திருப்பிக்கொள்ளும்; தன் பகைவன் என்றால் 'வீ..ல்'லென்று கத்தும். அப்பொ குழந்தை என்பது நம்மிடமுள்ள அறிவைவிட மிகப்பெரிய அறிவை பெற்று வந்திருக்கிறது. இந்த உலகத்தினுடைய குளிர்ந்த காற்று பட்டவுடன் தான் பெற்றுவந்த அறிவை கொஞ்சங் கொஞ்சமாக மறக்கிறது. வளர வளர பெற்றோர் கொடுத்த அறிவு, ஆசிரியர் கொடுத்த அறிவு, சமுதாயம் கொடுத்த அறிவு, இன்னும் உலக அறிவு இப்படி பல அறிவுகள் உள்ளே புகுந்து பழய அறிவை மூடி மறைத்துவிடுகிறது. அது நீறு பூத்த நெருப்பாக ஆகிவிடுகிறது. உலக அறிவு அதிகமாக அதிகமாக தன்னிடம் ஓர் அறிவு இருப்பதையே மறந்துவிட்டு பெர்னாட்ஷா சொன்னது, ஷேக்ஸ்பியர் சொன்னது, இன்னும் யார் யாரோ சொன்னதையெல்லாம் உள்வாங்கி பெருமை பட்டுக்கொண்டிருக்கிறது.



இதை தெளிவாக உணர்ந்த ஞானிகள், தாம் பெற்ற உலக அறிவை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு நீறு பூத்திருந்த 'அந்த' அறிவை தோண்டி எடுத்தார்கள். அதில் தெளிவு இருப்பதை உணர்ந்தார்கள், அதில் மகிழ்ச்சி கண்டார்கள், மதங்களுக்கு அப்பால் நின்றார்கள், தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற ஆசை கொண்டார்கள், மக்களை நல்வழியில் நடத்திச் செல்ல முயன்றார்கள், அடுத்த சமுதாயம் எப்படி வாழவேண்டும், இன்னும் நூறு வருடங்களுக்கு பின்பு மக்களுக்கு என்ன தேவை இருக்கும் அதற்கு இப்போது என்ன செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். நமக்கு அது பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது. இன்றுள்ள அரிசி விலையைப் பற்றி நினைக்காமல் நாளை பெய்யும் மழை நீரை தேக்க திட்டம் தீட்டுகிறேனே என்று அவர்களை கல்லால் அடித்தோம். அவர்கள் விதி, அடிபட்டுக்கொண்டே வாழ்ந்து காட்டினார்கள். இன்றும் நாம் அவர்களை திட்டி தீர்த்துக்கொண்டுத்தானே இருக்கிறோம். அவர்களோடு அது நில்லாமல் அவர்களை நினைவு கூறுபவர்களையும் சேர்த்து வசை பாடுகிறோம்.

---o0o---

Friday April 4, 2008 திண்ணை

No comments: