Sunday, August 30, 2009

குர்ஆன்



திருக்குர்ஆன்(புனிதம் சார்ந்த) கற்பிதமா............?

ஹமீது ஜாஃபர்



அது உயர்நிலைப் பள்ளி, கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்கூடம் திறந்த மறு நாள் அல்லது இரண்டாம் நாள், முதல் ஆங்கில வகுப்பு, ஆசிரியர் வந்தார், முதல் பாடத்தைத் தொடங்கினார். I - நான் என்று தன்னைச் கட்டை விரலால் சுட்டிக்காட்டிக் காட்டிக்கொண்டார், YOU - நீ என்று ஒரு மாணவனை தன் ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார். இப்படி பாடம் நடத்திவிட்டு, அந்த மாணவனைக் கூப்பிட்டு எங்கே நான் கேட்பதற்கு பதில் சொல் என்று சொல்லிவிட்டு I என்றால் யார்? என்றார். உடனே அந்த மாணவன் எந்த தடையுமில்லாமல் I என்றால் நீங்கள், YOU என்றால் நான் என்றான். வகுப்பில் 'கொல்'லென்ற சிரிப்பு. அந்த மாணவன் சற்றும் தளரவில்லை தொடார்ந்தான், 'சார், I என்று உங்களைத்தானே காண்பித்துக்கொண்டீர்கள், அப்பொ அது நீங்கள் தானே! YOU என்று என்னைத்தானே காண்பித்தீர்கள், அப்பொ அது நான்தானே! இதில் என்ன தப்பு இருக்கிறது?' இவர்கள் ஏன் சிரிக்கிறார்கள்? என்றான்.


அந்த மாணவனுக்கு அவனைப் பொருத்தவரை சரியான பதில்தான். ஆனால் புரிந்துக் கொண்டதில் தவறு நடந்திருக்கிறது. அதுபோல்தான் ரசூல்ஜியும் அவர் குறிப்பிடுகிறவர்களும் சூரா ஃபாத்திஹா என்று சொல்லப்படும் அல்ஹம்து சூராவைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.


திருக்குர்ஆன், அல்லாஹ் தனக்காக ஏற்படுத்திக்கொண்டதல்ல. மனித சமுதாயம் உயர்வுப் பெருவதற்காக, நற்பயன் பெறுவதற்காக, மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காக அருளப்பட்டது. மற்ற படைப்பினங்கள் போலலல்லாமல் இவனுக்கு மிகப் பெரிய பொறுப்புக்கள் இருப்பதால் ஓவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் இறைவன்
கவனமாக இருக்கிறான். மனிதன் மனிதனைப் புகழ்வதற்கும், மனிதன் ஆண்டவனைப் புகழ்வதற்கும் பாரதூரமான வித்தியாசம் உள்ளது; இவனுக்கு ஆண்டவனை எப்படி புகழவேண்டும் என்று தெரியாது. எதாவது ஒரு சங்கடம் வந்தால் ஆண்டவனுக்கு கண்ணில்லை; மூக்கில்லை என்று இகழத்தெரியுமே தவிர சங்கடத்துக்கு காரணம் தாம் தானென்று தெரியாமல் ஆண்டவன் மீது பழியைப் போடுவான். அப்படிப்பட்ட மனிதன் ஆண்டவனை எப்படி புகழவேண்டும்; எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை சூரா ஃபாத்திஹா மூலம் சொல்லிக்கொடுக்கிறான்.


எனவே ரசூல்ஜி சொல்வதுபோல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உள்ளத்திலிருந்தோ அல்லது அடிமனத்திலிருந்தோ வந்த வானவேடிக்கை அல்ல. சூரா ·பாத்திஹா, இறைவன் நமக்களித்த வரப்பிரசாதம்; நோய் தீர்க்கும் மா மருந்து. அதனால்தான் ஒவ்வொரு தொழுகையிலும் அதிகமாக ஓதப்படுகிறது. “(நபியே) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக்கூடிய ஏழு வசனங்களை(உடைய சூரா ஃபாத்திஹாவை) யும், இந்த மகத்தான குர்ஆனையும் கொடுத்துள்ளோம்.” (அல் குர்ஆன். 15:87)


ஒரு மனிதன் ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்று துறைகளில் சிறந்து விளங்க முடியும். ஒரே துறையைச் சேர்ந்த பலரில் ஒருசிலர் மட்டுமே முன்னிலை வகுக்கின்றனர். அப்படி ஒரு சிலரில்கூட ஒருவர் மட்டுமே போற்றப்படுகிறார், புகழப்படுகிறார். அது அவரது thought force ன் வலிமையாகும். உழைப்பு; தொலைநோக்குப் பார்வை; ஒருங்கிணைந்த செயல்பாடு என்பதல்லாம் இரண்டாம் காரணங்கள். அந்த thought force அடிமனத்தில் இறங்கி தேடுவதால் “இல்ஹாம்” என்ற உதிப்பாக தேடிய செய்திகள்; பிரச்சினைக்குரிய விடைகள் கிடைக்கின்றன. இது மனிதனுக்கு இறைவன் அளித்த அருட்கொடை. அவன் எந்த துறையைச் சார்ந்திருக்கிறானோ அல்லது எதைப் பற்றி சிந்திக்கிறானோ அதற்குரிய விடைதான் கிடைக்குமே தவிர மாற்றமான ஒன்றும் கிடக்காது.


ஒருவர் என்ஜினியர் என்றால் அவருக்கு accurate thought இருக்குமேயானால் உலகில் எங்கெல்லாம் என்ஜினியரிங் அறிவு இருக்கிறதோ அதை தேடி கொண்டுவந்து கொடுக்கும். மாறாக உடற்கூறைப் பற்றிய செய்தி கிடைக்காது. அப்படியே சிந்தித்தாலும் 'அடப்போடா! வானவியல் படிச்சுட்டு அணு சக்தியைப் பற்றி ஆராயப்போறானாம், போய் வேலையெப் பாருடா!' என்று உள்மனம் சொல்லும். ஒரு மனிதன் எந்த அறிவும் பெறாமல், படிப்பறிவே இல்லாமல் உண்மையைச் சொல்வதானால், அது குறி சொல்வதல்ல, அல்லது weather forecast அல்ல.


உள்மனத்தூண்டலின் வெளிப்பாடா ?


பல கோடி ஆண்டுகளுக்கு முன், ஆரம்பத்தில் இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒன்றாக இருந்தது (Primary Nebula) அதன்பின் அங்கு Big Bang என்று சொல்லப்படும் ஒரு வெடித்தல் (Secondary Seperation) ஏற்பட்டது. அதன் விளைவாக Galaxies உருவாயின. அவற்றிலிருந்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் உருவாகின என்று கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கூறுகின்றனர், ....before the galaxies in the universe were formed, celestial matter was initially in the form of gaseous matter. In short, huge gaseous matter or clouds were present before the
formation of galaxies.


A new Star forming out of a cloud of gas and dust(nebula) Which is one of the ramnants of the 'SMOKE' that was the Orgin of whole universe.(The Space Atlas, Heather and Henbest, p.50.)

“(ஆரம்பத்தில்) ஒன்றாகச் சேர்ந்திருந்த வானங்களையும் பூமியையும் நாமே பிரித்தமைத்தோம்.......”(அல் குர்ஆன் 21:30)

“பின்னர், புகை(மண்டலம்) ஆக இருந்த வானத்தளவில் திரும்பி(அதனைப் படைத்து)...”(அல் குர்ஆன் 41:11)


கடந்த நூற்றாண்டின் இந்த கண்டுபிடிப்பை ஒன்றுமில்லாத பாலைவனத்தில் இருந்துக்கொண்டு எந்த கல்வி அறிவும் இல்லாத ஒரு மனிதரின் உள்மனத்தூண்டலில் வருவதற்கு சாத்தியம் உண்டா?


கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு ஆழ்கடல் ஆராய்ச்சியாளரான கேப்டன் ஜாஜ் குஸ்ஸோ என்பவர் மத்திய தரைக்கடல் பகுதியில் ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தார். அவர் கடல் அடிக்கு சென்று ஆராய்ந்துக்கொண்டிருந்த போது, அவர் அணிந்திருந்த diving mask சற்று விலகி வாய்க்குள் தண்ணீர் சென்றுவிட்டது. தற்செயலாக நடந்த அந்த நிகழ்ச்சி விஞ்ஞான உலகில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அவர் வாயினுள் சென்ற தண்ணீர் உப்பு கரிக்கவில்லை மாறாக சுவையுள்ளதாக இருந்தது. கடலுக்கடியில் எப்படி நல்ல நீர் வரமுடியும் என்ற குழப்பத்துடன் மேல் மட்டத்துக்கு வந்து கடல் நீரை அருந்தியபோது அது உப்பு கரிப்பு உள்ளதாக இருந்தது. அவருடைய ஆய்வு மனப்பான்மை மேலும் சில இடங்களில் ஆய்வு செய்தபோது, இரண்டு விதமான நீர்கள் இருப்பதையும் அவை ஒன்றோடு ஒன்று கலக்காமலிருப்பதையும் கண்டறிந்தார். இதை பற்றி இன்னும் தெளிவு பெறுவதற்காக மத ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டாக்டர் மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille)டம் கலந்தபோது. இதுபற்றிய செய்தி குர்ஆனில் இருப்பதாக தெளிவுப்படுத்தினார்.


Longitudinal section showing salinity(parts per thousand) in an estuary. We can see here the partition(Zone of seperation) between the freshwater and salt water.(Introductory Oceanography, Thurman. P.301

“(ஆறு, கடல் ஆகிய) இரு நீர் பரப்புகளும் சமமாகிவிடமாட்டா - ஒன்று குடிப்பதற்கு இன்பமான நீர்; மற்றொன்று உப்பும் கசப்பும்(உடைய நீர். இவ்வாறு இவ்விரண்டிலும் வேற்றுமை இருந்தபோதிலும்) இவ்விரண்டிலுமிருந்தே....” (அல் குர்ஆன் 35: 12)


The Mediterranean sea water as it enters the Atlantic over the Gibraltar sill with its own warm, saline, and less dense characteristics, because of the barrier that distingushes beween them. Temperatures are in degrees Celsius. (Marine Geology, Kuenen, p. 43)

“ஒன்று சேரும் இரு கடல்களையும் அவனே சந்திக்கச் செய்தான். ஆயினும் அவைகளுக்கிடையில் ஒரு தடுப்புண்டு, (அத் தடுப்பை) அவை இரண்டும் மீறா” (அல் குர்ஆன் 55: 18,19)


இவை, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகளாரின் உள்மனத் தூண்டலிலிருந்து வந்திருக்கமுடியுமா? அவர்கள் என்ன oceanography யா படித்துவந்தார்கள்?


மொழி


மனித இனம் ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களிடமிருந்து உருவாகிப் பல்கிப் பெருகி இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. ஆதியில் மனித இனம் பெருகப் பெருக பல பாகங்களிலும் பெருகினர். இடம், காலம், தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப அவர்கள் தங்களது உணவு, உடை, பழக்கவழக்கங்கள் மாறி ஒவ்வொரு விதமான நாகரீகத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அதுபோல் மொழியும் ஒன்றிலிருந்து தோன்றி சிறுகச் சிறுக மாறி இன்று பல்வேறு மொழிகளாகப் பரவிக்கிடக்கின்றன. ஆகவே ஒரு மொழியிலுள்ள வார்த்தை வேறொரு மொழியில் இருப்பதற்கு வாய்ப்புண்டு. தவிர ஒருவருக்கொருவர் வாணிபத் தொடர்பு இருந்ததால் ஒரு மொழி இன்னொரு மொழியில் ஊடுருவ வாய்ப்புண்டு. மேலும் புதிய பொருட்கள் எல்லா பகுதிகளை சென்றடையும்போது அதன் பெயரும் சேர்ந்தே அடைகிறது. இப்படி பல நிலைகளில் வரும் வேற்று மொழி சொற்கள், அது அடைந்த இடத்தின் மொழியாக அமைந்து விடுகிறது.


உதாரணமாக தமிழ் மொழி, தொன்மை வாய்ந்த மொழியாகும். தற்போது “செம்மொழி” என்ற அங்கீகாரத்தையும் அரசியல் ரீதியாகப் பெற்றுள்ளது. அப்படிப்பட்டத் தமிழ் மொழியில் “வக்கீல், வக்காலத்து, ஜாமீன், பாக்கி, அசல், நகல்” போன்ற சொற்கள்
தமிழுக்குரியதல்லவே. அவை அரபு சொற்களாயிற்றே! அதனால் தமிழ், கலப்பு மொழி ஆகிவிடுமா? அதுமட்டுமல்ல Admiral, Alcohol, என்பன அமீர் அல் பஹர், அல் கஹூல் என்ற அரபி சொற்களிலிருந்து அங்கு சென்று அந்த மொழிக்குரியதாகவே ஆகிவிட்டது; கட்டுமரம் என்ற தமிழ் சொல்தானே Catamaran ஆக ஆங்கிலத்தில் உள்ளது. ஆகவே ஜிப்ரீல், சூரா, ஜப்பார் இவைகள் ஹீப்ரு மொழிச் சொற்கள் அதனால் அல்லாஹ்வின் அரபு மொழி தூய்மைக் கெட்டு அதன் ஆளுமையைக் குறைவு படுத்துகிறது என்பதல்லாம் வீன் விவாதம். தவிர அல்லாஹ்வுக்கு மொழி ஏது? அவன் அரபு மொழியிலா பேசுகிறான்? அவன் எண்ணத்தைப் பார்க்கிறவானாயிற்றே! “நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை; உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறான்.” என்று நபி மொழி இருக்கிறதே! எனவே மொழியை வைத்து ஆண்டவனைக் கட்டுப்படுத்துவது அறியாமை. மொழியை வைத்துமட்டுமல்ல எதனைக் கொண்டும் ஆண்டவனைக் கட்டுப்படுத்த முடியாது.


கடவுள் என்றாலே காலம், எல்லை, பரிமாணங்களைக் கடந்த ஓர் உள்ளமை. வேறு வார்த்தையில் சொன்னால் படைக்கப்பட்ட எந்த ஒன்றினாலும் கட்டுப்படுத்த முடியாதது எதுவோ அது இறைவன். வேண்டுமானல் நீங்கள் சொல்லலாம் “என்னை யாரும்
கட்டுப்படுத்த முடியாது; நான் எதற்கும் கட்டுப்படாதவன்” என்று. வாயையும் மூக்கையும் பொத்தி ஒரு இரண்டு நிமிடம் இருந்துப் பாருங்கள், எதற்கு கட்டுப்பட்டிருக்கிறோம் என்பது தெரியும்; ஒரு நாளைக்கு சிறுநீர் கழிக்காமல் இருந்து பாருங்கள், எதற்கு கட்டுப்பட்டிருக்கிறோம் என்பது தெரியும்.


ஆகவே உருவமற்ற அல்லாஹ் என்ற கருத்தாக்கம் காலத்துக்கும், இடத்துக்கும். மொழிக்கும், பண்பாட்டுச் சூழலுக்கும் மாறுபாட்டை அடைகிறது எ‎ன்பதும், இதன் வெளிப்பாடாகத்தா‎ன் தமிழில் அல்லாஹ்வை ஆண் த‎ன்மையோடு குறிப்பிடுவதாலும் கருத்தியல் மாற்றம் ஏற்படுகிறது என்ன்பதெல்லாம் விதண்டாவாதங்கள். தமிழில் அவர் என்ற
வார்த்தைக்குத்தான் பன்மை உண்டு. அவன், அவள் என்ற வார்த்தைள் ஒருமை; அவைகளுக்குப் பன்மை கிடையாது. அவை இரண்டும் உயர்திணை, ஆண் எல்லா நிலைகளிலும் உயர் நிலைப் படுத்துவதால் இறைவனை ஆண் தன்மையோடு குறிப்பிடப்படுகிறது. இது மொழியின் வளம் (richness of language). இது எல்லா மொழிகளிலும் உண்டு. ஹுவ என்ற அரபி சொல்லுக்கு அவன், என்று பொருள். “குல் ஹுவல்லாஹு அகது.....” Sey: He is Allah, The One; இதில் He என்ன்பதை எப்படி
எடுத்துக்கொள்வது? இதில் கருத்தியல் மாற்றம் என்றால் எப்படி? அல்லாஹ்வை எப்படி குறிப்பிடுவது?


திருக்குர்ஆனில் அகர, உகரக்குறிகள் பிற்காலத்தில் ஏற்பட்டதுதான். இதை ஏன் ஏற்படுத்தினார்கள்? அரபியில் ஐன், லாம், மீம் இந்த மூன்று எழுத்துக்களை சேர்த்து வாசித்தால் இல்ம் என்றும் வாசிக்கலாம், அலம் என்றும் வாசிக்கலாம். இல்ம் என்றால்
அறிவு; அலம் என்றால் கொடி(flag). இது வேறு வார்த்தைகளுடன் சேர்ந்து வரும்போது, அரபியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கும், அரபியில் பாண்டித்தியம் பெற்ற மற்றவர்களுக்கும் இது இன்னப் பொருளைக் கொடுக்கிறது என்று புரியும். சாதாரண பொருள் தெரியாதவர்களுக்கு எப்படி புரியும்? இந்த குழப்பத்தை நீக்குவதற்காகத்தான் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்தனர்.


திருக்குர்ஆன், பெருமானார் காலத்தில் பல்பொருட்களில் எழுதப்பட்டிருந்ததை, அவர்கள் மறைவுக்குப் பின் ஒன்று திரட்ட ஹஜ்ரத் அபுபக்கர்(ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பெருமானார் அவர்கள் செய்யாத வேலையை நான் செய்யமாட்டேன் என்றார்கள். ஆனால் ஹஜ்ரத் ஒமர்(ரலி) அவர்கள் பலமுறை வற்புறுத்தியதின்பேரில் அதை ஒன்று திரட்டி ஒரு வடிவமாக ஆக்கினார்கள்.


அஜர்பைஜானுக்கும் சிரியாவுக்கும் நடந்த சண்டையின்போது அங்கு சென்றிருந்த நபித்தோழர்கள், அங்கு மாற்றமாக குர்ஆன் ஓதப்படுவதை செவியுற்ற அவர்கள் ஏன்ன் இப்படி ஓதுகிறீர்கள் என்று கேட்டபோது, இப்படித்தான் எங்களிடம் குர்ஆன் இருக்கிறது என்றார்கள். இது அப்போதிருந்த கலிஃபா ஹஜ்ரத் உதுமான்(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினையைத் தீர்க்க அவர்கள்தான் இப்போதிருக்கும் குர்ஆன் வடிவில் எழுதி மற்றதெல்லாவற்றையும் அழித்து விட்டார்கள்.


ஏன் அழிக்கப்பட்டது?


நம்முடையத் தமிழ், எத்தனை வகையில் பேசப்படுகிறது சென்னையில் ஒரு மாதிரி; பாண்டிச்சேரியில் ஒரு மாதிரி; தஞ்சாவூர் தமிழ் வேறுமாதிரி; திருநெல்வேலி தமிழ்; கன்யாக்குமரித் தமிழ் வேறு; மதுரைத் தமிழ் வேறு. மெட்ராஸ் தமிழ் தென்னார்க்கடிலிருந்து புரியாது. இது பேச்சுத் தமிழ், ஆனால் எழுதும் இலக்கியத் தமிழ் எல்லோருக்கும் புரியும். இது ஒருவகை; மற்றொன்று தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்குமுள்ள தொடர்பு. சில வார்த்தைகள் இரண்டு நாட்டுக்கும் முற்றிலுமாக மாறுபடுகிறது. உதாரணமாக டாக்டர்(Ph,D) பட்டம் பெற்றவர்களை நம் நாட்டைப் பொருத்தவரை முனைவர் என்று தமிழ்படுத்துகிறோம், ஆனால் இலங்கையில் கலாநிதி என்கிறார்கள், நாம் புகை வண்டி என்கிறோம்; அவர்கள் புகை ரதம் என்கிறார்கள், நான் என்ன சொல்கிறீர்கள் என்பதை அவர்கள் என்ன கதைக்கிறீர்கள் என்கிறார்கள். இப்படி சில வார்த்தைகள் இருக்கின்றன. இத்தகைய பிரச்சினை தமிழிலும் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் உன்ண்டு.


குர்ஆனை ஏழு விதமாக ஓதலாம். அனுமதி உண்டு. “மாலிக்கி யவ்மித்தீன்” இது குர்ஆனிலுள்ள வார்த்தை. இதை மலிக்கி யவ்மித்தீன் என்றும் ஓதலாம்; மல்லாக்கி யவ்மித்தீன் என்றும் ஓதலாம், எப்படி ஓதினாலும் பொருள் மாறாது. எழுத்தாக்கத்தில் மாலிக்கி யவ்மித்தீன் என்றுதான் இருக்கும். ஓதுகிற முறை ஏழையும் எழுத்துருவில் கொண்டுவந்தால் ஏழு விதமான குர்ஆனாகப் போய்விடும். காலப்போக்கில் குர்ஆன், அதன் தனித்தன்மையை இழந்து புனிதம் கெட்டுவிடும். இத்தகைய குளறுபடிகள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக மற்ற முறைகளில் இருந்ததை அழித்துவிட்டு இப்போதிருக்கும்
முறைபடி அமைத்தார்கள்.


விரிஉரைகள்

குர்ஆன் வெறும் வேதநூல் மட்டுமல்ல. அது அறிவுக் கருவூலம்; அருள் சுரக்கும் பெட்டகம்; வழிபட்டோருக்கு நற்செய்தியும் வழிகெட்டோருக்கு எச்சரிக்கையும் செய்யும் நூல். அதில் மண்டிக்கிடக்கும் கருத்துக்களை மனித அறிவினால் முழுமையாகத் தெரிந்துக்கொள்ள முடியாது. யார் எத்தகைய அறிவுடன் அதை நெருங்குகிறார்களோ அத்தகைய அறிவு கிடைக்கும். ஆகவே அதற்கு தஃப்ஸீர் என்று சொல்லப்படும் விரிஉரைகள் நிறைய வந்துள்ளன. அவற்றில் அரபி விரிவுரைகளான தஃப்ஸீர் ஜலாலைன்; தஃப்ஸீர் இப்னு கஸீர்; தஃப்ஸீர் அல்தன்தாவி; தஃப்ஸீ அல் தப்ராணி போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை.


தஃப்ஸீர் ஜலாலைன் என்ற விரிவுரையை எழுதிய ஜலாலுதீன் சுயூத்தி, ஜலாலுதீன் மஹல்லி ஆகியவர்கள் சொல்கிறார்கள்: 'நாங்கள், எங்களால் இயன்றவரை புனித குர்ஆனுக்கு விரிவுரை எழுதிவிட்டோம். இதுதான் முடிவான கருத்து என்று சொல்லமுடியாது; இதைவிட மோலான கருத்துக்கள் வரலாம். ஆனால் இப்போதைக்கு இது போதுமானது' என்று சொல்கிறார்கள்.


விரிவுரைகளும், தர்ஜுமா என்று சொல்லப்படும் உரைநூல்களும் பல வந்திருக்கின்றனவேயொழிய குர்ஆன் உலகமெங்கும் ஒன்றே ஒன்றுதான். திருக்குறள் ஒன்றுதான், அதற்கு எத்தனை உரைநடைகள். பரிமேலழகர் உரை; மு. வரதராசனார் உரை;
கலைஞரின் உரை இப்படி பல உரைகள் இல்லையா?


நபிகள் நாயகம் தம் கைப்பட குர்ஆன் எழுதினார்களா?


“மர்வான் இப்னு அல்ஹக்கம் ஆட்சிக்கு வந்ததும் அவர் செய்தது, நபி முஹம்மது கைப்பட எழுதியிருந்த திருக்குர்ஆன் பிரதியை அழித்துவிட்டதாகும்.” (ரசூல்ஜியின் கண்டுபிடிப்பு)


இதுவரை வரலாற்றில் முஹம்மது(ஸல்) அவர்கள் உம்மி நபி அதாவது எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்றுதான் இருக்கிறது. ஆனால் ரசூல்ஜிக்கு மட்டுமே தெரிகிறது நபிகள் நாயகம் படித்திருக்கிறார்கள் என்று. எந்த ஸ்கூலில் படித்தார்கள் என்று தெரிவித்தால் முஸ்லிம் சமுதாயத்திற்கு மாபெரும் உதவியாக இருக்கும்.


குர்ஆன் மட்டும் போதுமா?

குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸும் தேவை இல்லை, ரசூலும் தேவை இல்லை என்று சொல்லும் அஹ்ல குர்ஆனிகள் சிலர் இருக்கிறார்கள். அல்லாஹ்வை வழிபட்டு நடங்கள்; அவனது ரசூலையும் வழிபட்டு நடங்கள் என்று பொருள் தொனிக்கும் ரீதியில் “அத்தீயுல்லாஹு வ அத்தீயுர்ரசூல்” என்ற வார்த்தை குர்ஆனில் இருப்பது இவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. “அழகிய முன்மாதிரி” என்று ரசூலை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அப்படியென்றால் அழகிய முன்மாதிரியாக உள்ள அவர்களைப் பின்பற்று என்பதுதானே பொருள். அது என்ன ரசூல் வேண்டாம் அல்லாஹ் மட்டும் போதும் என்பது? ஒரு கவிஞன் சொன்னான்:


“அல்லாஹ்வை யாருக்குத் தெரியும் அந்த ரசூல் இல்லாவிட்டால்,

ரசூலை யாருக்குத் தெரியும் அந்த அல்லாஹ் இல்லாவிட்டால்..” என்று.


அறிஞர்கள்


ரசூல்ஜி சொல்லும் அறிஞர்களை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கமுடியாது.
வயல்வெளியில் நெற்பயிர்கள் வளர்ந்து வரும்போது இடையிடையே பச்சைப்பசேலென்று பயிர்கள் சில இருப்பதைப் பார்க்கலாம். அவை பார்ப்பதற்கு பச்சையாகமட்டுமல்ல அடர்த்தியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும். ஆனால் அவை பயிர் அல்ல களைகள். அவைகளை எடுத்தெறியவேண்டும் இல்லாவிட்டால் சுற்றிலுமுள்ள பயிர்கள் அடையவேண்டிய சத்தை இவை எடுத்துக்கொண்டு அவற்றிற்கு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். அதுபோல்தான் இந்த அறிஞர்களான, அறிஞர் டாக்டர் ராஷித் கலிஃபா, அறிஞர் குலாம் அலி மிர்ஸா, அறிஞர் பா. தாவுத்ஷா, அறிஞர் P.J.


குர் ஆன் எதையும் எதிர்கொள்ளவில்லை

பெருமானார் அவார்கள் மறைவுக்குப் பின் ஏற்பட்ட குழப்பங்கள், ஹஜ்ரத் உமர்(ரலி, ஹஜ்ரத் உதுமான்(ரலி), ஹஜ்ரத் அலி(ரலி) ஆகியோரின் படுகொலைகள், ஹஜ்ரது முஆவியா(ரலி) அவர்களின் வருகை, யஜீதுடைய ஆட்சி எல்லாம் அதிகாரத்தின் மீது ஆசைக்கொண்ட அரசியல் ரீதியான காரணமே தவிர இஸ்லாத்தின் கொள்கையோ சட்டத்திட்டங்களோ அல்ல. தனி நபர்களின் அபிலாசை, ஆதிக்கங்களை இஸ்லாத்தின் மீது சுமத்துவது இழிச்செயலாகும்.


பெருமானார் காலத்திற்குப் பின் பலவற்றில் எழுதப்பட்டிருந்த குர்ஆன் வசனங்களை ஒன்றாகத் திரட்டி அமைக்கப்பட்டது என்றாலும் அதில், அதன் வசனங்களை கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ, மறைக்கவோ இல்லை. அதை செய்யும் அதிகாரமோ தகுதியோ எவருக்கும் இல்லை. எனவே இதில் அதிகாரத் தலையீடு, ஆதிக்கம், சார்பு நிலை, முரண்பாடு இப்படி எதையும் இது எதிர்கொள்ள வில்லை. அப்படி எதிர்கொள்வதாக சொல்வது இஸ்லாத்தின் போர்வையில் இருக்கும் அறிஞர்கள் என்று தங்களைத்தானே நினைத்துக்கொண்டிருக்கும் மகா புத்திசாலிகளின் வேலை.

---o0o---


Friday Nov 17, 2006 திண்ணை



No comments: