Monday, August 24, 2009

தண்டனை.

ஹமீது ஜாஃபர்




"திட்டம்போட்டுத் திருடரக் கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது - அதை

சட்டம்போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது

திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது."

-பட்டுக்கோட்டையார்


இந்தியத் திருநாட்டில் நாற்பத்திரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை ஒருவர் கொல்லப்படுகிறார், அதில் ஆறு சதவீதம் மட்டுமே விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. - (செய்தி: தினமணி, 30-11-2004.)


குற்றங்கள் நிகழக்கூடாது என்பது எல்லோராலும் விரும்பப்படும் ஒன்று. குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டிக்கப்படவேண்டும். குற்றங்கள் நிகழ்வதை அடியோடு ஒழிக்கமுடியாது, ஆனால் கட்டுப்படுத்தமுடியும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. குற்றம் புரிவது மனித இயல்புகளில் ஒன்று, என்றாலும் இப்பொதெல்லாம் குற்றம் புரிவதே வாழ்க்கையாகி பாவபுண்ணியமெல்லாம் வெறும் பிதற்றல், பைத்தியக்காரத் தனம் என்றாகிவிட்டது.


குற்றம் செய்யும் ஒருவர், அக்குற்றத்தை அவர்தான் செய்தார் என்று உறுதியாகிவிட்டபிறகு தண்டிக்கப்படவேண்டும் என்பதில் சட்டம் எப்போதுமே உறுதியாக இருந்துவருகிறது. நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதும் அதன் உறுதியானக் கொள்கை. ஆனால் தான் அளிக்கும் தண்டனையினால் குற்ற வாளிமட்டுமல்ல குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்களும் பயப்படவேண்டும் என்பதில் உறுதியாக இல்லை. மாறாக குற்றம் செய்தவர் திருந்த வாய்ப்பளிக்கவேண்டும் என்ற இரக்க சிந்தனையை தன்னுள் வைத்திருக்கிறது. இதனால் அது நினைக்கும் அளவுக்கு குற்றவாளிகள் திருந்தவுமில்லை, குற்றங்கள் குறையவுமில்லை. இந்த சிந்தனையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு பல குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.


இப்படி ஒரு சாரார் என்றால் மறுசாரார் ஒரே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்து மீண்டும் மீண்டும் அதே தண்டனையை அனுபவித்து, அதை தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஆக்கிக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு இந்த வாழ்க்கையைவிட அந்த(தண்டனை) வாழ்க்கை மேலானதாக இருக்கிறது.


சுருங்கச் சொன்னால் நாம் உருவாக்கிய சட்டங்கள் பல திருத்தங்கள் செய்தபிறகும் தன் வெற்றி இலக்கை அடையமுடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இது ஒரு நாட்டுக்குமட்டுமல்ல உலகலவில் இந்த அவல நிலை நிலவிவருகிறது. இன்னிலையில்...


எக்காலத்தும் யாராலும் மாற்றமுடியாத இறைச் சட்டத்தைப் பற்றி அறியாமல், இஸ்லாத்தில் கையாளப்படுகின்ற ஷரீஅத் தண்டனைகளை தற்காலத்திலும் கையாள வேண்டுமா? இது மனிதாபிமானமில்லாததுமட்டுமல்ல மிருகத்தனதாயிற்றே, ஐந்து ரூபாய்க்காக ஒரு திருடனின் கையை துண்டிக்கமுடியுமா? விபச்சாரத்திற்காக கல்லெறிந்து கொல்ல வேண்டுமா? என்று கடந்த நூற்றாண்டிலிருந்தே உலகளவில் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது அவசியமா இல்லையா என்று தீர்மாணிக்குமுன் அவன் இழைத்த குற்றத்துக்கு அவன் எந்த அளவுக்கு பொறுப்பாளியாகின்றான் என்பதை தீர்மானிப்பதே மிக முக்கியமான பிரச்சினையாகும். இப்பிரச்சினைப் பற்றி அதாவது குற்றமும் தண்டனையும் பற்றிய பிரச்சினையில் இஸ்லாம் முக்கிய கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் தாறுமாறாகத் தண்டனைகளை விதிக்கவுமில்லை, ஈவிரக்கமின்றி அவற்றை நிறைவேற்றவுமில்லை. இத்துறையில் இஸ்லாம் கடைபிடிக்கும் கொள்கையை கூர்ந்து பார்க்கவேண்டும்.


இஸ்லாம் நீதியின் துலாக்கோலைச் சரியாகப்பிடித்துக் குற்றச்செயலுக்கு வழிகோலிய அனைத்து சந்தர்ப்பசூழ்நிலைகளையும் முற்றிலுமாக சீர்தூக்கிப்பார்க்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு குற்றச்செயலை ஆராயும்போது அது ஒரே பார்வையில் இரண்டு அம்சங்களை நோக்குகிறது. ஒன்று குற்றவாளியின் நிலை, மற்றொன்று அக்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் அல்லது அந்த சமூகத்தின் நிலை. இவ்விரண்டையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் நியாயமான தண்டனையை விதிக்கிறது. இஸ்லாத்தில் விதிக்கப்படும் தண்டனைகளை மேலெழுந்தவாரியாகவோ போதியளவு ஆழமாக ஆராயாமலோ நோக்கினால் அவை பயங்கரமானவையாகவும் கொடூரமானதாகவும் தோற்றமளிக்கக்கூடும். ஆனால் குற்றச்சாட்டு நியாமற்றதாகவோ குற்றவாளி அக்குற்றத்தைப் புரிவதற்கு எவ்வகையிலும் நிர்பந்திக்கப்படவில்லையெனவோ திட்டவட்டமாக முடிவு செய்யப்படாவிட்டால் இஸ்லாம் அத்தண்டனையை நிறைவேற்றுவதில்லை.


திருடனின் கையை துண்டிக்கவேண்டுமென்பது இஸ்லாத்தின் தண்டனையாகும். ஆனால் திருடனுக்குத் திருட்டைச் செய்யத்தூண்டியது அவனுடைய பசி, வேறு வழியில்லை என்ற காரணம் சிறிய அளவில் உண்டானால்கூட அவனுக்குத் தண்டனை அளிக்கப்படக்கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.


இஸ்லாத்தின் தலை சிறந்த ஆட்சியாளரும் ஷரீஅத் சட்டங்களை நிறைவேற்றுவதில் மிகக்கண்டிப்பானவர் என்று பெயர் பெற்றவருமான இரண்டாம் கலீஃபா ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின்போது ஹாதிப் இப்னு அலீ பால்த்ஆவிடம் பணிபுரிந்த சில சிறுவர்கள் வேறொருவரின் பெண் ஒட்டகையைத் திருடி புசித்துவிட்டார்கள். இது ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களின் நீதிமன்றத்திற்கு வந்தது. அவர்கள் அச்சிறுவர்களை அழைத்து விசாரித்தபோது, தாங்கள் திருடியதை சிறுவர்கள் ஒப்புக்கொண்டனர். கைகளை துண்டிக்குமாறு தீர்ப்பளிக்குமுன் காரணத்தை அராய்ந்து, 'இறைவன் மீது ஆணையாக, இப்பையன்களை வேலைக்கமர்த்தி அவர்களைப் பட்டினிப்போட்டதன் காரணமாக அவர்கள் ஒட்டகையைத் திருடிப்புசிக்க நீர் காரணமாயிருந்ததை நான் அறிந்திருக்காவிட்டால் நிச்சயமாக அவர்களின் கைகளைத் துண்டிக்குமாறு தீர்ப்பளித்திருப்பேன்' எனக்கூறி திருடப்பட்ட ஒட்டகையின் விலையைப் போல் இருமடங்கு விலையை ஒட்டக உரிமையாளருக்குக் கொடுக்குமாறு அச்சிறுவர்களின் எஜமானருக்கு தீர்ப்பளித்துவிட்டு சிறுவர்களை விடுதலைச் செய்தார்கள். மேலும் அவர்கள் ஆட்சிகாலத்தில் ஏற்பட்டபஞ்சத்தின்போது பசியின் காரணமாக மக்கள் திருடக்கூடும் என்ற நிலை ஏற்பட்டிருந்ததால் அப்போது திருட்டுக்குரிய தண்டனையை நிறைவேற்றாது விட்டுவிட்டார்கள்.


இது, தண்டனை வழங்கப்படுவதற்குமுன் காரண காரியத்தை இஸ்லாம் எப்படி ஆராய்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.


இதெல்லாம் அந்த காலத்திற்கு வேண்டுமானல் பொருந்தும், இன்றைய முன்னேற்ற உலகிற்கு உதவாது என்று சிலர் வாதிடுகிறார்கள். சிலரென்ன பலருடைய கருத்தும் கண்ணோட்டமும் அதுவாகத்தானிருக்கிறது.


இந்தியா சுதந்திரமுள்ள குடியரசு நாடு. பொது இடங்களில் துப்புவது குற்றம், 'பொது இடங்களில் துப்பாதே, மீறினால் ரூ.500/ அபராதம்' என்று எச்சரிக்கைப் பலகை வைத்தால், அந்த பலகையைப்பார்த்து துப்புவார்கள். இது சிலரின் இயல்பு. பிடிபட்டால், 'சார் சார் தெரியாமல் துப்பிட்டேன், அடுத்தவாட்டி துப்பமாட்டேன், வேணும்னா நூறோ எறநூறோ வாங்கிக்கிட்டு ஆளைவிடுங்க' என்று சொல்வார்கள். இதே எச்சரிக்கை சிங்கப்பூரில் இருக்கிறது. அதுவும் குடியரசு நாடுதான். அங்கே துப்புவார்களா? எச்சிலே வராது! காரணம் சட்டத்தின் வேகம். சுருங்கச் சொன்னால் மக்கள் பயப்படுவது சட்டம் என்ற புத்தகத்திற்கல்ல, அதன் கடுமையான தாக்குதலுக்கு.


கஞ்சா, பிரெளன் சுகர் போன்ற போதைப் பொருள்களை வைத்திருந்தாலோ அல்லது கடத்தல் செய்தாலோ சவுதி அரேபியாவைப் பொருத்தவரை பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் சிரச்சேதம் செய்வது அங்குள்ள தண்டனை. இத்தகையத் தண்டனைகளால் குற்றங்களின் புள்ளிவிபரங்களை நோக்கினால் உண்மை புரியும்.


விபச்சாரம் செய்யும் ஆணையும் பெண்ணையும் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற தண்டனையை இஸ்லாம் வித்துள்ளது. ஆனால் சம்மந்தப்பட்ட இருவரும் விவாகமானவர்களாகவும் அக்குற்றம் புரிவதை நேரடியாகக்கண்ட உண்மையான நான்கு சாட்சிகள் இல்லாமலிருந்தால் விபச்சாரத்திற்குரிய அத்தண்டனை அளிக்க அனுமதி இல்லை. அதாவது விவாகமான இருவர் வெட்கமற்ற முறையில் பகிரங்கமாக அக்குற்றத்தைப் புரிந்தால் மாத்திரமே மேற்படித் தண்டனை அளிக்கப்படவேண்டும்.


இஸ்லாம் பாலியல் ஊக்கத்தின் வலிமையையும் அதன் அவாவையும் மதிக்கின்றது. ஆனால் அவ்வூக்கத்தை திருமண பந்தத்தின் மூலம் சட்டப்பூர்வமாகப் பூர்த்தி செய்துக்கொள்வதையே விரும்புகிறது. இதற்காக இளம்வயதில் திருமணம் செய்துக்கொள்வதை அனுமதிக்கிறது. திருமணம் செய்துக்கொள்ள வசதியற்றவர்களுக்கு "பைத்துல்மால்" என்ற பொது நிதியிலிருந்து நிதியுதவி வழங்குமாறு உத்திரவிடுகிறது. இச்சைகளைத் தூண்டக்கூடிய சகல காரணிகளையும் (ஹராம் என்று) வெறுத்தொதுக்கியுள்ளது. உடல் வலிமையும் வசதியுமிருந்தால் நான்கு திருமணங்கள் செய்துக்கொள்ள அனுமதிக்கும் அதே நேரத்தில் ஒவ்வொரு மனைவியிடமும் நீதமாக நடந்துக்கொள்ளுங்கள் என்ற உத்திரவும் இடுகிறது. குற்றம் புரிவதற்கான தூண்டுதல்கள் அனைத்தியும் ஒழிப்பதற்கான வழிமுறைகளை தந்தபின்னும் ஒருவன் பகிரங்கமாக விபச்சாரம் செய்யுமளவுக்கு மிருகத்தன்மைக்கு தாழ்ந்துவிட்டாலொழிய அக்குற்றவாளிக்கு விபச்சாரத்திற்குரிய தண்டனையை விதிப்பதற்கு இஸ்லாம் அவசரப்படுவதில்லை.


இன்று நிலவும் சமூக, பொருளாதார ஒழுக்க சீர்கேட்டினாலும் பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடிய மீடியாக்கள் போன்றவற்றினால் வழி தவறிப்போக வாய்ப்புள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மைதான். அதனால் இஸ்லாம் தண்டனை வழங்குமுன் குற்றச் செயல்களுக்கு இழுத்துச்செல்கின்ற வழிமுறைகளை தடுப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.


நிரபராதிகளுக்குத் தண்டனை வழங்கக்கூடாது என்பதில் இஸ்லாம் மிக எச்சரிக்கையாகவே இருக்கிறது. களங்கமற்ற பெண்மீது அவதூறு வழங்கி அது நிருபிக்கப்படவில்லையானால் அவதூறு பேசியவர்கள் மீது 80 கசையடி கொடுக்க வலியுறுத்துகிறது. தவிர அத்தகையவர்களின் சாட்சியங்களை எந்த காலத்திலும் ஒப்புக்கொள்ளாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறுகிறது.


இத்தகைய தண்டனைகள் அளிப்பதின் நோக்கமே இதுபோன்ற குற்றங்கள் நிகழக்கூடாது என்பதற்காகத்தான். (ஆனால் இதைவிட மிக மோசமான தண்டனை ஒன்று மிக அமைதியாக உலகமுழுவதும் நடந்துகொண்டிருக்கிறதே? ஆம்! AIDS என்ற தண்டனை. அது இருவரைமட்டும் தாக்கவில்லை தொடர்புள்ளவர்கள் அனைவரும் அனுபவிக்கிறார்களே! உறை போட்டுக்கொள்ளுங்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்களே ஒழிய 'விபச்சாரம் ' செய்யாதீர்கள் என்று சொல்ல வில்லையே!). கொலைக் குற்றங்களுக்காகக் கொடுக்கப்படும் மரண தண்டனையை மறைவாக கொடுக்காமல் பொதுமக்கள் முன்னிலையில் கொடுங்கள், குற்றங்களின் எண்ணிக்கை குறைவதை நீங்களே பார்க்கலாம்.


உதாரணமாக கூலிப்படைகளை வைத்து சிலரைக் கொலை செய்கிறார்கள். கொலையாளிகளுக்கும் கொல்லப்படுவர்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் கிடையாது, முன்பின் விரோதமும் கிடையாது, சந்தர்ப்பவசமாகக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். அப்படி இருந்தும் கொடூரமான முறையில் கொலை செய்கிறார்கள். எதற்காக ? வெறும் கூலிப்பணம்! ஒரு சில லட்சம்! ஒருவரின் உயிரைப் பற்றியோ அல்லது அவதிப்படப்போகும் குடும்பத்தைப் பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை. அத்தகையவர்களை விசாரித்து ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை கொடுப்பதைவிட பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் சிரச்சேதம் செய்யுங்கள். அதுவும், எப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதோ காலதாமதப் படுத்தாமல் விரைவாக தண்டனையை நிறைவேற்றுங்கள். மற்ற குண்டர்கள் எங்கே போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது, தண்டணைகள் அளிக்கும் விஷயத்தில் உற்றார், உறவினர், அரசியல் தலைவர், சமூக அமைப்பின் தலைவர் என்ற பாரபட்சம் காட்டக்கூடாது என்று கூறுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் உறுதிப்பட்டை கடைபிடிக்கவும் வேண்டும்.


அதேபோல் விசாரணை என்ற பெயரில் பெண்களை மானபங்கப்படுத்தும் காவலர்களை, சில அமைப்புகள் அல்லது அந்த சமூகம் போர்கொடி தூக்கியதன்பின் தற்கால பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். இதனால் குற்றம் செய்த அவர்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாவதில்ல, ஆனால் அநீதி இழைக்கப்பட்டவர் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதோடல்லாமல் சிலர் தற்கொலைகூட செய்துகொள்கின்றர். அதனால் அவருடைய குடும்பத்தவர் எந்த அளவுக்கு பாக்திக்கப்படுகின்றனர் என்று சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


மோசடி, திருட்டுக் குற்றம் போன்றவைகள் மேம்போக்காகப் பார்த்தால் சாதாரணமான குற்றமாகத் தெரியலாம். ஆனால் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும். அவர்களின் கனவுகள், கற்பனைகள், திட்டங்கள் எல்லாம் சுக்குநூறாக நொறுங்கிப்போய் வாழ்க்கையின் போக்கே திசைமாறி விபரீத விளைவுகளுக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள் என்பதை கண்கூடாகக் காணும்போது அவைகள் எவ்வளவு கொடுமையானது என்பது புரியும்.


'திருட்டுத் தொழில் உள்பட பயங்கரமான குற்றங்களுக்கு திருக்குர்ஆன் வழங்கும் தண்டனைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் உலகமே குற்றமற்று வாழமுடியும்.' என்று சட்ட நிபுணர் ஸர் சி.பி.ராமசாமி ஐயர் அவர்களும், 'சாதாரண மனிதனிலிருந்து நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் மனிதன் வரை இஸ்லாமிய சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. ஆழ்ந்த அறிவு, நுட்பம், அபூர்வமான மிகச் சிறந்த சட்டவியல் ஆகியவற்றால் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டு உலகத்தில் இதுவரை காணப்படாத சிறப்புமிகு சட்டமாக இஸ்லாமிய சட்டம் திகழ்கிறது.' என்று எட்மண்டு பர்க் என்ற அறிஞரும் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றி கூறுகிறார்கள்.


எங்கெல்லாம் இஸ்லாமிய ஷரீஅத் குற்றவியல் தண்டனை செயல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் குற்றங்கள் குறைவாகவே நிகழ்கின்றன. எனவே குற்றங்கள் குறையவேண்டுமானல் ஷரீஅத் குற்றவியல் தண்டனை அமுல் படுத்துவது சாலச் சிறந்ததாகும். இதை சட்டத்துறை நிபுணர்களும், மனிதநேய அமைப்புகளும், அரசுகளும் 'இஸ்லாம்' என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் பொதுவான கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும்.


---oo0oo---

25-2-2005 திண்ணை

No comments: