Tuesday, September 1, 2009

அஸ்ரா நொமானி

அஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை

ஹமீது ஜாஃபர்





இனிஷியல் இல்லாத குழந்தையின் தாயார் செல்வி அஸ்ரா நொமானி, தனது திட்டப்படி குறிப்பிட்ட நாளில் பல எதிர்ப்புகளுக்கிடையில் ஆமினா வதூதின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை வெற்றிகரமாக நடத்தி சாதனைப் படைத்துள்ளார். இது மில்லினியத்தின் புரட்சி என்று சொன்னால் தகும். இந்த செய்தி இங்குள்ள பத்திரிக்கைகளிலும் வந்தன. இதில் யாருக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ திரு ஆசாரகீனனுக்கு மெத்த மகிழ்ச்சியை தந்திருக்கும். காரணம் எந்த பலனையும் எதிர்பாராமல் நியுயார்க் நகர சுற்றுவட்டார தமிழர்களை சாதிமத பேதமின்றி வருகை புரிந்து ஆதரவு அளிக்க வேண்டுகோள் விடுத்தவராயிற்றே, நல்லவேலை மவுண்ட் ரோடு மா(ஓ) அருகில் இல்லை. இருந்திருந்தால் அவருக்கு ஷ்பெஷல் அழைப்பு விடுத்திருப்பார்.


இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்துக்கொண்டுதானிருக்கின்றன. இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகள் பழக்கமுள்ளது. தன்னை ஒரு நபியாக பிரகடனப்படுத்திக்கொண்ட மிர்ஜா குலாம் முஸ்தபா காதியானி ஒரு கூட்டத்தையே தன்பக்கம் இழுத்துவைத்திருந்தார். அவர்களுக்காக ரகசியமாக கஃபாவையும் (மக்காவிலுள்ள இறை ஆலையம்), சொர்க்க, நரகத்தையும் உருவாக்கி அதன் திறப்புவிழா தினத்தன்று டாய்லட்டில் விழுந்து மூச்சைவிட்டார். பாவம்! அவர் உருவாக்கியதை திறக்கக்கூடமுடியவில்ல, அத்துடன் அந்த சகாப்தம் முடிந்தது.


தமிழகத்தில், தனது நாவன்மையாலும் எழுத்தாலும் ஒரு பகுதி மக்களை தன்பக்கத்தில் வைத்திருந்து இஸ்லாத்திற்குள் மாயயை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்தியவர் பா. தாவுத் ஷா. அவருடைய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.


மொகலாய மன்னர்களில் மிகவும் பிரசித்திப்பெற்றவராக வரலாற்றாசிரியர்களால் சித்தரிக்கப்படும் பேரரசர் அக்பர், தான் கொண்டுவந்த 'தீனே இலாஹி' யில் அவருடன் சேர்த்து நான்கு பேர்களே இருந்தனர். அதுவும் அவருடன் அழிந்தது.


இப்படி வரலாற்றில் பலபேர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலான்களைப் போல்தான் அவர்கள் செய்த சாதனைகள். அதனால் இஸ்லாத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாத்திற்கு உள்ளேயும் வெளியேயும் யார்யாரோ என்னென்னவோ செய்துக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் என்னவோ தெரியவில்ல அது தனக்குத் தானாக வளர்ந்துகொண்டே போகிறது. 1934 முதல் 1984 வரையிலான ஐம்பாதாண்டு கால கணக்குப்படி இஸ்லாம் 235 விழுக்காடு வளர்ந்திருப்பதாக Keith W. Stump என்பவர் கூறுகிறார்.


இறைவனாலும் இறைதூதராலும் வகுக்கப்பட்ட சட்டத்தை மாற்றவோ மீறவோ எவருக்கும் உரிமை கிடையாது. யுக முடிவு வரை ஒரே சட்டம் தான், அதைதான் பின்பற்றியாகவேண்டும். அப்படி இருந்தது இப்படி இருந்தது என்று தனக்குத்தானாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அதனை மீறும்போது தட்டி கொடுக்கமாட்டார்கள். உண்மையை உணர்த்த தட்டிக்கேட்பார்கள். இதற்கு அடிப்படை வாதம் என்று சொல்வது அறியாமையின் முத்திரை. இப்படி மீறி நடந்து சாதனைப் படைத்தால் அது அவர்களைப் பொருத்தவரை வெற்றிதான். அந்த வெற்றி நிரந்தரமானதாக இருக்குமா என்பதுதான் கேள்விகுறி!


இது ஒருபக்கம் இருந்தலும் தாம் நினைத்ததை சாதித்துவிட்டோம், சாதனைப் படைத்துவிட்டோம் என்ற வெற்றி பெருமிதத்தில் நீந்தி திளைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்போது மூழ்குவார்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் மூழ்கிக்கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியாது. இத்தகைய அறிவிலிகளுக்கு வேதனைகள் வரும்போது காரணம் தெரியாமல் உள்ளுக்குள் ஒப்பாரி வைப்பார்களே தவிர தன்வினைதான் காரணம் என்பது தெரியாது. வரம்பு மீறும்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனசாட்சி சமயம் பார்த்து நிதானமாக கொல்ல ஆரம்பிக்கும். இது இயற்கை நியதி. வினை விதைத்தவன் தினை அறுக்க முடியாது.


எனவே அஸ்ரா நொமானியாக இருந்தாலும் சரி, ஆமினா வதூதாக இருந்தாலும் சரி, இர்ஷத் மன்ஜியாக இருந்தாலும் சரி, இல்லை Thank God I am an atheist என்று சொல்பவராக இருந்தாலும் சரி அவர்களின் விதி அவர்கள் கைகளிலேயே உள்ளது., சமுதாயம் அதற்கு பொருப்பல்ல. 'What they are today in the result of what they were yesterday'.

---o0o---


Friday April 8, 2005 திண்ணை

No comments: