Sunday, October 18, 2009

அண்ணாவியார் புலவர்கள் - 1





ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார்
(மூன்றாம் செய்யது முஹம்மது)


அதிவீர ராமப்பட்டினம் - இது, கத்தும் கடல் சூழ் நாகையிலிருந்து தெற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் சேது பெருவழிச் சாலையில் அமைந்திருக்கும் கடற்கரை ஊர். அழைக்கப்படுவதோ அதிராம்பட்டினம்; சுருக்கப்பெயர் அதிரை. தமிழகத்தில் இசுலாம் நுழைந்தகாலத்திலிருந்தே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பயணிகள் அனைவரும் தங்கிச்செல்லும் பெருவழித் துறையாகவும் பழம்பெரும் துறைமுகப்பட்டினமாகவும் இலங்கியதாக புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கு காதிர் முஹைதீன் கல்லூரியும், அரபி மதரஸாக்களும், வணிகப் பெருமக்களும் வாழுகின்ற ஊர் என்பது பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்குத் தெரியுமே தவிர சிறந்த இசுலாமியப் புலவர் பெருமக்களை தமிழுக்கு அளித்த ஊர் என்று ஒரு சிலரைத்தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அத்தகையோரில் அண்ணாவியார் (ANNAVIYAR) என்று அழைக்கப்படும் பெரும் சூஃபி புலவர் குடும்பங்கள் தமிழிலக்கிய உலகிற்கு பெரும்பங்காற்றிருக்கின்றனர்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு முழுவதும் வாழ்ந்தவர்கள் ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்கள். இவர்கள் கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள். நவரத்தினகவி காதிர் முஹையித்தீன் அண்ணாவியார் அவர்களின் பேரரும் ஹபீப் முஹம்மது அண்ணாவியார் அவர்களின் மூத்தமகனும் ஆவார். 1902 ல் பிறந்து 1992 வரை தொன்னூறு ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்கா. தம் முன்னோர்கள் எழுதி ஓலைச்சுவடிகளாக இருந்த பாடல்களை புத்தகவடிவில் ஆக்கியவர்கள். தம்முன்னோர்களைப் போலவே சிறந்த தமிழறிஞர், பாடும் திறன் பெற்ற பாவலர், இறையருள் பெற்ற தொண்டர், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பண்பாளர். இவைகளுக்குமேல் மிகச்சிறந்த மனை நூல் நிபுணர்.

தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சீறிய எண்ணம் கொண்ட இம்மூதறிஞர் தம் முப்பாட்டனார் அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் மற்றும் அவர்கள் வழிதோன்றல் புலவர்கள் அனைவர்களது பாடல்களையும் ஓலைச்சுவடியிலிருந்து நூல் வடிவமாக மாற்றி நம் கையில் தவழவிட்டவர். "சந்தாதி அசுவகம்" - இது 4300 பாடல்களைக் கொண்ட தொகுப்பு இதை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மனமுவந்து பெற்று வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல் பாட நூலாகவும் ஆக்கியுள்ளது. இவர்களது சேவையைப் பாராட்டி சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொற்கிழி அளித்து பெருமைப் படுத்தியது. அண்ணாவியார் புலவர்களை உலகுக்குக் காட்டிய உத்தமர் இவர்களே ஆவார்.


இவர்களின் அறிய முயற்சியால் வெளிவந்த நூற்கள்:

அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய "அசுவமேத யாகம், சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்."

ஜீவரத்தின கவி செய்யது மீரா லெப்பை அண்ணாவியார் எழுதிய "மதீனக்கலம்பகம், மகுடி நாடகம்."

சொர்ண கவி நெய்னார் முஹம்மது பாவா எழுதிய "மழைப் பாட்டு, செய்கு தாவூதொலி பிள்ளைத்தமிழ், விடுகதை பாடல்கள்."

நவரத்தினகவி காதிர் முஹையிதீன் அண்ணாவியார் எழுதிய "ஃபிக்ஹு மாலை."

செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய "ஆலிம் சாஹிபு சமரசகவிகள், நாகூர் புகைரத வழிச்சிங்கார ஒயிற்சிந்து."


வெளிவர இருக்கும் நூற்கள்:

அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய "அலி நாமா, நூறு நாமா, மகாபாரத அம்மானை, வாட்சா ராவுத்தர் திருமண பவனி."

சொர்ணகவி நெய்னார் முஹம்மது பாவா எழுதிய "கொம்புரவ்வு இல்லாத வண்ணம், பாசிப்பட்டணம் வழிநடைச் சிந்து."

இன்னும் வரும்.

நன்றி: அண்ணாவியார் பேரர்கள் அப்துல் வாஹித் மற்றும் அஷ்ரஃப் அலி, அதிராம்பட்டினம்.

குறிப்பு: எனக்கு கிடைத்த செய்திகளை வைத்து ஹாஜி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களைப் பற்றி எழுதியுள்ளேன். இவர்கள் ஆற்றிய தொண்டுக்கள் நிறையவே உள்ளன. இவர்கள் அமிர்தகவியின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். தாம் பாட்டனார் எழுதிய கவிதைத் தொகுப்புக்கள் அனைத்தும் ஒலைச் சுவடிகளாகவே உள்ளன. அவற்றை
சேகரித்து, பாதுகாத்து வைத்துள்ளார்கள். அவற்றில் சில புத்தகவடிவமாக ஆக்கப்பட்டதைத் தவிர வேறு சிலவற்றை தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு இலவசமாக அளித்துள்ளார்கள். அவற்றுள் சந்தாதி அசுவகம் அல்லாமல் வேறு எவையெல்லாம் தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. இவர்களைப் பற்றிய செய்தி "உலக வெற்றி முரசு" என்ற பத்திரிக்கையில் கடந்த 14-2-2006ல் வெளிவந்திருந்தது. அதை தம்பி ஆபிதீன் தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார். இவர்களைப் பற்றிய குறிப்புக்களை அவர்கள் உறவினரிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளேன். அவை கிடைத்ததும் இத்துடன் சேர்க்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்,
ஹமீது ஜாஃபர்
துபை
21-10-2009.

No comments: