Wednesday, September 16, 2009

மஹான் ஷிப்லி பாவா(ரஹ்)




வாழ்வும் நிகழ்வுகளும் (புத்தகச்சுருக்கம்)
ஆக்கியோன்: மஞ்சை ஜாஃபர்


'துணையாளன் துணை, துணையாளன் துணை' இப்படி ஒரு குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. குரல் வந்த திசையை நோக்கிச் சென்று குரலுக்குரியவரிடம் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சலாம் சொன்னால்..... அடுத்த வினாடி தங்குத்தடையின்றி எந்தவித சலனமுமில்லாமல் "இவனுக்கு சலாம் சொல்லாதீர்கள்" என்ற பதில் வரும்.

இதன் பொருள்...........?

சலாம் என்பது புனிதமான ஒன்று, அது உள்ளத்திலிருந்து வரவேண்டும் உதட்டிலிருந்தல்ல, 'இறைவன், உங்களது உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறான்' என்பது நபி மொழி. மக்களில் பெரும்பாலோர் உதட்டின் நுனியிலிருந்தே சொல்கிறார்கள், அத்தகைய சலாத்தினை ஏற்றுகொள்ளும் நிலையில் நானில்லை என்பதா? அல்லது நான் சொல்லும் பதில்சலாம் வலிமை வாய்ந்தது அதை ஏற்றுகொள்ளும் தகுதி உனக்கில்லை என்பதா? உன் போன்றவர்களுக்கு சொல்லும் பதில் விழலுக்கிறைத்த நீர், எனவே நீ சலாம் சொல்லி என்னை நிர்பந்திக்காதே என்பதா? ஒன்றும் புரியாத புதிர்!

ஆம்.. புதிர்தான்! அந்த புதிருக்குரியவரும் புதிர்தான், அவர் பேச்சு செயல் எல்லாமே எல்லோருக்கும் புதிர், ஆனால் புரிந்தவர்களுக்கல்ல. அந்த புதிரின் பிறப்பிடம் -'பாவா' என்று எல்லோராலும் மரியாதையாகவும் அன்பாகவும் அழைக்கப்பட்ட ஞானக் கடல், குத்துபு ஜமான் மஹான் முஹம்மது ஷிப்லி பாவா (ரஹ்) அவர்கள்.


உள்ளமும் உருவமும்

'ஒருவருடைய உள்ளத்தில் ஆன்மீகம் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்தால் அவருடைய முகத்திலும் ஆத்மிகம் சுடர் வீசிக்கொண்டிருக்கும்' என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய கூற்றுக்கு மிகப் பொருத்தமாக இருந்தார்கள்.

சில நாட்களில் தடித்தும் சில நாட்களில் மெலிந்தும் இல்லாமல் என்றும் ஒரே மாதிரியான மெலிந்த தேகம், உணவை நிரப்ப முடியாத ஒட்டிய வயிறு, வெள்ளையும் கருப்புமில்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மா நிறம், நடுத்திரமான உயரம், இடுப்பில் ஒரு வெள்ளை கைலி, சில சமயங்களில் கைவைத்த பணியன், உடம்பை நன்றாகப் போர்த்திக்கொள்ளும் அளவுக்கு தோளில் ஒரு தடித்த சால்வை, அடர்த்தியான மீசை, அளவான தாடி, ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான பார்வை, புதிரானப் பேச்சு, ஆங்கிலத்தில் 'ஆரா(AURA)' என்று சொல்லக்கூடிய தேஜஸ் - அவர்கள் முகத்தில் மட்டுமல்ல உடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டிருப்பதை புறக்கண்ணால் பார்க்கும்படியான அழகிய தோற்றம்.


சிங்களமும் தமிழகமும்

சிங்களத்து மண்ணில் கண்டி-கேகாளெ என்ற ஊர், அங்கு வாழ்ந்த ஹபீப் முஹம்மது காசிம் என்ற பெரியவருக்கு நெய்னார் முஹம்மது என்ற பாலகர் பிறந்து ஆரம்ப கல்வியும் கூடவே யுனானி மருத்துவமும் பயின்றார். கற்ற கல்வி தன் மகனுக்கு மன நிறைவைத் தரவில்லை என்பதை உணர்ந்த தந்தை; அவருக்கு மார்க்க அறிவைப் புகுட்ட தமிழகத்திலுள்ள வேலூரை நாடி வந்தார்.

வேலூர் என்றாலே நினைவுக்கு வருவது 'பாக்கிஹாத்துஸ் ஸாலிஹாத்' மதரஸா. ஆம், ஹஜ்ரத் அல்லாமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் அரிய முயற்சியினால் கடந்த பத்தொன்பதாம் நூற்றாடின் இறுதியில் உருவான இம்மதரஸா நூறு வயதைக் கடந்து பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதனை தமிழகத்தின் தாய் மதரஸா என்று பெருமைப்பட கூறுவதுண்டு.

அத்தகைய பெருமைமிகு மதரஸாவில் சிங்கள நாட்டிலிருந்து வந்த நெய்னார் முஹம்மது படித்துப் பட்டம் பெற்று ஆலிமானார். பாக்கவியாக வெளி வந்த அவரின் மனம் மட்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தது. அந்த தேட்டம் தாய் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்ற எண்ணத்தைத் தரவில்லை.

ஆத்மிக அறிவைப்பெற மனம் துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார் நெய்னார் முஹம்மது. எங்கே செல்வது? யாரிடம் கேட்பது? இது கடையில் விற்கும் பொருளல்லவே, கேட்டால் கிடைக்குமா? தாம் பெற்ற அறிவை தருவார்களா? உண்மையான ஞானத்தை எங்கே பெறுவது? என்ற கேள்விகள் மனதை துளைக்க நீண்ட சிந்தனைக்குப் பின் ஒரு முடிவுக்கு
வந்தவராகப் பயணத்தைத் தொடங்கினார்.

ராமனாதபுரத்திற்கு பத்து மைல் கிழக்கே பாடல் பெற்ற ஓர் ஊர் - இங்கு ஷரகுப் புலி சதக்கத்துல்லாஹ் அப்பாவும், செத்தும் கொடுத்த செம்மல் சீதக்காதியும் வாழ்ந்த சிறப்புமிக்க ஊர் கீழக்கரை. அங்கு முதன் முதலில் கல்விக்காக தைக்கால் உண்டாக்கிய தைக்கா சாஹிபு வலியுல்லாஹ் அவர்களின் பேரரும் ஹஜ்ரத் மாப்பிள்ளை லப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின்
புதல்வருமாகிய கல்வத்து ஆண்டகை என்று அழைக்கப்பட்ட செய்யது அப்துல் காதர் என்ற ஞானி வாழ்ந்துவந்தார்கள்.

தமக்கு ஆன்மீக அறிவை அளிக்கவல்லவர் அவர்கள்தான் என்று உறுதியான முடிவுடன் கீழக்கரையை அடைந்து கல்வத்தாண்டகையை சந்தித்தபோது........

"ஆலிம்சாவின் சேவைக்கு சமுதாயம் காத்துக்கிடக்கிறதே! நீங்கள் பணிபுரிய வேண்டாமா? நீங்கள் மார்க்கப்பணியும் வைத்தியமும் செய்யுங்கள்; உங்களுக்குத் திருமணம் நடக்கும், உங்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை ஆண்மகவாக இருக்கும், அவருக்கு முஹம்மது ஷிப்லி என்று பெயர் வையுங்கள், அவர் எம்மைச் சேர்ந்தவர், அவரை எம்மிடம் அனுப்பி வையுங்கள், நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள்." என்று வாழ்த்தி அனுப்பிவைத்தார்கள்.


மஸ்தான் லப்பை ஆலிம்

தரீக்கா என்பது ஷரீஅத்துக்கு புறம்பானது அல்ல. முன்னது நோய்க்கு மருந்து என்று சொன்னால் பின்னது உடலுக்குத் தேவையான உணவு. மருந்து நோய்உள்ளவர்களுக்குத்தானே தவிர எல்லோருக்குமல்ல, ஆனால் உணவு அப்படியல்ல, அனைவருக்கும் தேவையான ஒன்று அத்தியாவசியமானதும்கூட, இஃது இல்லையென்றால் நிலமை என்னவாகும் என்று நான் சொல்லத்தேவை இல்லை.

எனவே ஷரீஅத் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும், எண்ணத்திலும், செயலிலும் - ஏன் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் கலந்திருக்கவேண்டும், அதேசமயம் தரீக்கா என்பது ஆன்மிக ஆசை உள்ளவர்களிடம் இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருந்த பெரியோர்களில் ஒருவர் பொரவச்சேரியை சேர்ந்த மேதை மஸ்தான் லப்பை ஆலிம் அவர்கள்.

இவர்கள் நாகூர் சென்று பாதுஷா நாயகத்தை ஜியாரத் செய்வதை தமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக வைத்திருந்தார்கள். ஒரு நாள் வழக்கப்படி ஜியாரத் செய்ய சென்றபோது, அங்கு பள்ளிவாசலில் ஒருவர் மார்க்கப் பிரசங்கம் செய்துக்கொண்டிருந்தார். அவரின் சொல்லாற்றலால் கவரப்பட்ட மேதை, பிரசங்கம் முடிந்ததும், பிரசங்கம் செய்தவரை அனுகி..........

"இவ்வளவு அழகாகப் பிரசங்கம் செய்யும் தாங்கள் யார்? எந்த ஊர்? என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்? நான் தெரிந்துக்கொள்வதில் தவறில்லையே!"

"என் பெயர் நெய்னார் முஹம்மது, பிறந்தது சிங்கள மண்ணில் ஆரம்பக் கல்வி அங்கேதான், மௌலவி பட்டம் பெற்றது வேலூரில், கூடவே வைத்தியமும் தெரியும், இதற்குமுன் சிறிதுகாலம் பணி புரிந்தது தோப்புத்துறையில், இப்போது உங்கள் முன் இருக்கிறேன்."

"தாங்கள் எங்கள் ஊருக்கு வந்து பணியாற்ற முடியுமா? நாங்கள் தங்களுக்கு எல்லா வசதிகளும் செய்துத் தருகிறோம். தாங்கள் வந்தால் அதை பெரும் பாக்கியமாகக்கருதுவோம், தாங்களின் சம்மதம் தேவை."


ஆண்டகையின் வாக்கு பலித்தது

மஸ்தான் லப்பை ஆலிம் அவர்களின் அழைப்பையேற்று பொரவச்சேரியில் வேலையை ஒப்புக்கொண்ட ஆலிம்சா இமாமத் பணியோடு வைத்திய தொழிலையும் பார்த்துவந்தார்கள். ஜும்வில் மட்டுமல்லாது அவசியம் ஏற்படும்போதெல்லாம் மற்ற நாட்களிலும் சொற்பொழிவாற்றி வந்தார்கள்.

இவர்களின் ஆழ்ந்த மார்க்க அறிவும் சுயநலம்காணா மருத்துவத் தொண்டிலும் மகிழ்ந்த அவ்வூர் மக்கள் இவர்களைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டதோடல்லாமல் நிரந்தர வாழ்க்கையை அமைத்துத்தர எண்ணி பெண் பார்த்தனர்.


தாயார் செய்யது மீரான் உம்மா

விவசாயத்தில் சிறந்து விளங்கிய குடும்பங்களில் ஒன்று 'செய்பு வீடு.' அந்த வீட்டில் வசித்த செய்யது மீரான் உம்மா என்ற பெண்ணை ஆலிம்சாவுக்கு மணமுடித்தனர்.


பிறப்பின் பெருமை

ஒருவர் பிறப்பினால் பெருமை அடைவதில்லை, அவர் தம் வாழ்வில் செய்யும் சாதனைகளாலும், அதன்மூலம் சமுதாயம் அடையும் பயன்களாலும்தான் அவர் பெருமை அடைகிறார். அந்த பயன்கள் எந்த அளவுக்கு வலிமை வாய்ந்ததாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு அவருக்கு பெருமையும் சேருகிறது. அந்த பெருமையினால் அவரைச் சார்ந்த மக்கள், அந்த ஊர், ஏன் அந்த நாடுகூட பயன்களைப் பெறுகிறது. அவர் பிறந்த மண், இடம், நாள், இவை எல்லாம் போற்றப்படுகின்றன.

"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டத்தாய்"

என்று வள்ளுவன் சொன்னால்கூட அந்த தாய்மட்டுமல்ல சமுதாயமும் சேர்ந்து மகிழ்ச்சி அடைகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

ஆம் அப்படித்தான் பாவாவின் பிறப்பும். ஆலிம்சா நெய்னார் முஹம்மதுக்கும் செய்யது மீரான் உம்மாவுக்கும் திருமணம் முடிந்தபின் வீடு ஒன்றை கட்டி அதில் தம்பதிகளுக்கு வாழ்க்கையையமைத்துக் கொடுத்தனர். அவர்கள் சிறப்பாக வாழ்ந்த காலத்தில், செய்யது மீரன் உம்மா கருவுற்றார்.

ஹிஜ்ரி 1330 -ம் வருடம் துல் காயிதா மாதம் பிறை 9 (19-10-1912) சனிக் கிழமை ஞாயிற்று கிழமை இரவு 12-00 மணிக்கு (சிலர் 12.30 மணி என்று கூறுகின்றனர்.) அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். அந்த குழந்தைக்கு முஹம்மது ஷிப்லி என்ற பெயரை சூட்டினர்.


தாயாரின் மரணம்

பாவா அவர்கள் செய்பு வீட்டில் வளர்ந்து வந்தவேலையில் தாயார், அப்துல் காதர் என்ற மகனையும், முஹம்மது யூசுஃப் என்ற மகனையும் பெற்றார்கள். மூன்றாவது மகன் முஹம்மது யூசுஃப் ஐந்தாறு மாத குழந்தையாக இருந்தபோது தாயார் செய்யது மீரான் உம்மா இறைவனடி சேர்ந்தார்கள். தமது அமைக் குழந்தைகளப் பராமரிக்க தந்தை ஆலிம்சா அவர்கள் ஹாஜிரா உம்மாவை இரண்டாவதாகத் திருமணம் செய்தார்கள்.

இரண்டாம் திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொருப்பு அதிகமானது வாழ்க்கைச் சக்கரம் கரடு முரடானப் பாதையில் செல்லத் தொடங்கியது தனது பொருளாதாரத்தை சீர் செய்ய தனது மூத்த மனைவியின் சகோதரி வாழ்ந்த பொரவச்சேரிக்கு அடுத்த மஞ்சக்கொல்லை என்ற சிற்றூரில் குடியேறினார்.


நாலரை டிக்கட் கீழக்கரை செல்லுதல்

ஹிஜ்ரி 1331 / 1913 ம் ஆண்டு கல்வத்தாண்டகை அவர்கள் இவ்வுலகைவிட்டு மறைந்தார்கள். இது பாவா பிறந்த மறு வருடம் நடந்தது. அதன்பின் பதினோரு ஆண்டுகள் கழிந்தன.1924-ம் ஆண்டு ஒரு நாள் ஆலிம்சாவை சந்திக்க கல்வத்தாண்டகையின் மருமகனார் முஹம்மது சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களும் மற்றும் மூன்று பேரும் மஞ்சக்கொல்லைக்கு வந்தனர். ஆலிம்சாவை சந்தித்து நலம் விசாரித்தபின் கல்வத்தாண்டகையின் உத்திரவுக்கிணங்க சிறுவர் முஹம்மது ஷிப்லியை அழைத்துப்போக வந்திருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினர்.

எதுவானாலும் முதல் குழந்தை என்னைச் சார்ந்தது எம்மிடம் அனுப்பி வைய்யுங்கள் என்று ஆண்டகை முன்பு சொன்ன சொல்லிற்கிணங்க தந்தை ஆலிம்சா மெத்த மகிழ்ச்சியுடன் சம்மதத்தை அளித்தார்கள். பாவாவும் அவர்களுடன் சிக்கலிலிருந்து புகைவண்டி ஏறி ராமனாதபுரம் பயணமாகி அங்கிருந்து கீழக்கரை அடைந்தனர்.

இந்த சம்பவத்தை, "நாலரை டிக்கட் சிக்கலில் ரயிலேறி ரமனாதபுரம் சென்றது" என்று பாவா சில சமயங்களில் குறிப்பிடுவார்கள். அப்போது பாவாவுக்கு வயது பண்ணிரண்டு.


வளர்ப்பு தந்தையும் தாயாரும்

கீழக்கரை அடைந்த பாலகரை ஆண்டகையின் மருகர் முஹம்மது சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களும் அவர்களின் துணைவியார் ஆயிஷா உம்மாவும் தங்களது பிள்ளைபோல் வளர்த்தனர் என்பதைவிட குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தார்கள். அந்த வளர்ச்சி சாதாரணமாக இல்லை. ஆம்! மார்க்க அறிவையும் உலக அறிவையும் பெற்றுகொண்டே கிராம வேலைகளையும், விவசாயப் பணிகளையும் செவ்வனே கவனித்ததோடல்லாமல் வளர்ப்பு தந்தையின் இரும்புக்கடையில் வணிகத்தையும் திறம்படச் செய்தார்கள்.


மஞ்சக்கொல்லையில் திருமணம்

பதினெட்டாண்டு காலம் கீழக்கரையில் வளர்ந்தாலும் தந்தையுடன் தொடர்பு இருந்தே வந்தது. முப்பது வயதைக் கடந்துக்கொண்டிருக்கும்போது திருமணம் செய்துவைக்கவேண்டும் என்ற ஆவல் பெற்றவர்களுக்கு ஏற்பட்டது. தாய் வழி உறவினர்களில் ஒருவர் முஹம்மது இபுறாஹிம் என்ற வணிகர். இவரது நான்காவது மகள் கலிமத்து நாபிஹா பீவியை பாவாவுக்கு மணமுடித்தனர்.

இனிமையான இல்லற வாழ்க்கையில் மூன்றாண்டுகள் உருண்டோடியபின் அழகிய பெண் மகவை கலிமத்து நாபிஹா பீவி பெற்றார்கள் - பாவா தந்தையானார்கள். அக்குழந்தைக்கு தனது வளர்ப்புத் தாயாரின் பெயரையும் அவர்களின் மகளாரின் பெயரையும் சேர்த்து ஆயிஷத்து ஜெய்லானி என்ற பெயரைச் சூட்டி அன்பையும் பாசத்தையும் கொட்டி
வளர்த்தார்கள். மனிதர்களுடைய ஆசைகளைவிட இறைவனுடைய நாட்டம் மேலானது, அவனது நாட்டப்படி அக்குழந்தை தனது ஆறாவது வயதில் இறைவனடி சேர்ந்தது.


கொழும்புக்கு பயணம்

பெண் மகவை ஈன்ற சில காலத்திற்குபின் தனது உள்ளகிடக்கையில் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த ஞான வேட்கையால் உந்தப்பட்டு கல்வத்தாண்டகையின் தர்பார் நோக்கி மீண்டும் கீழக்கரை பயணமானார்கள். அங்கு மீண்டும் பழைய பணிகளை கவனித்து வந்தார்கள். இது வளர்ப்பு தந்தைக்கு மன நிறைவைத் தரவில்லை. தமது மகன் மீது அக்கரைக்கொண்ட அவர்கள் கொழும்பிலுள்ள தமது நவரத்தின கற்கள் விற்கும் கடைக்கு அனுப்பிவைத்தார்கள்.

ஆன்மீக வாழ்வில் ஆசை கொண்ட ஒருவருக்கு தனக்கு முன்னால் இருக்கும் எந்த ஒன்றும் துச்சமாகத் தெரியும். தனக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தடை வந்தாலும் அதனை உடைத்தெரிந்துவிடுவார்கள். இத்தகையவர்களின் மனம், எண்ணம், மூச்சு அனைத்தும் இறைவனையே சுற்றிக்கொண்டிருக்கும்.

வியாபரத்தை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மீண்டும் கீழக்கரைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்கள்.


மீண்டும் மஞ்சைக்கு வருகை

சிறிது காலம் கீழக்கரையில் இருந்தாலும் அங்கும் அதே நிலை தொடர்ந்தது, தன்னுடைய நிலைக்கொல்லாமை ஒருபுறம் தாக்க மறுபுறம் தனது குடும்பத்தைக் காண மனம் நாடியது. எனவே அங்கிருந்து புறப்பட்டு மஞ்சக்கொல்லை வந்தடைந்தார்கள். தனது அருமை மனைவியுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும் மனம் மட்டும் இறைவனையே
நாடிக்கொண்டிருந்தது. என்றாலும் பள்ளிவாசலே கதி என்றில்லாமல் கிட்டுப் பிள்ளை என்பவர் வைத்திருந்த நெல் அறவை மில்லில் இரண்டு அணா(பதிமூன்று பைசா) தினக்கூலிக்கு வேலை செய்து வந்தார்கள்.

அங்கும் அவர்களால் சரியாக வேலை செய்யமுடியவில்லை, நெல் கொட்டவேண்டிய இடத்தில் அரிசியையும் அரிசி கொட்டவேண்டிய இடத்தில் நெல்லையும் கொட்டிய சம்பவம் பல தடவை நிகழ்ந்து. இதனை உற்று கவனித்துவந்த கிட்டுப் பிள்ளை, இவர்களின் நிலையை புரிந்து கடிந்துக்கொள்ளாமல் "ஏம்பா! இப்படி ரெண்டணாவுக்காக தலைகீழா வேலை செய்யும் உனக்கு ஒரு குடும்பம் தேவையா?" என்று வேடிக்கையாகக்கேட்டதுமுண்டு.

தனது நிலையை அறிந்துங்கூட தொடர்ந்து வேலையில் வைத்திருந்த அவரை, பாவா அவர்கள் எப்போதும் முதலாளி என்றே கூப்பிட்டுவந்தார்கள். எந்த சமயத்திலும் வேறு வார்த்தை எதையும் சொல்லி ஒரு முறைகூட அழைத்ததே இல்லை.


நஃப்ஸ் - ஆவல்

'நான் மறைவான புதையலாக இருந்தேன். என்னை அறியப்படவேண்டி படைப்புகளை படைத்தேன்.' என்று இறைவன் ஹதீஸு குதுஸியில் சொல்கிறான். தாத்துல் கிப்ராயாவில் மறைவாக இருந்த இறைவனுக்கு முதன்முதலில் உண்டான ஆசையின் தூண்டுதல் - இதனை, தாத்து முதன்முதலில் அசைந்த அசைவை அல்லது அதன் முந்திய அலையை 'நஃப்ஸ்' என்று ஆரிஃபீன்கள் அழைக்கிறார்கள். அந்த நஃப்ஸ்தான் 'நான்' என்று சொல்வதும் இந்த உடம்பில் 'நான்' என்று இச்சிப்பதுமாயிருக்கும். என்று ஹஜ்ரது மஹ்மூது பஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இறைவனின் பிரதிநிதியான மனிதன், தன்னுள் பொதிந்து கிடக்கும் நஃப்ஸின் உண்மைப் பொருளையறியாமல் மனம்போன போக்கில் நடக்கிறான். இவன் சிறுவனாக இருக்கும்போது பட்டம் வாங்கி விளையாட ஆசைப்படுகிறான். அவன் வளர்ந்து வாலிபனானபின் கார் வாங்கவேண்டும் என்றும் பங்களா கட்டவேண்டும் என்றும் ஆசைப்படுகிறான். இது அறிவின் வளர்ச்சியையும் அந்தஸ்தின் உயர்வையும் காட்டுகிறது. ஆனால் ஆசையின் தன்மை அப்படியே இருக்கிறது.

ஒருவனை அரியாசனத்தில் ஏற்றவும் அதிலிருந்து அவனை இறக்கவும் இதுதான் மூலக்காரணம். இதை ஒடுக்கி முறையாக செயல்படவைத்தால் ஆத்மீகப்பாதை திறக்கும் என்பதை ஞானிகள் மிகத்தெளிவாக உணர்ந்திருந்தனர்.


தனிமையும் தியானமும்

'மன் அரஃப நஃப்சஹு ஃபக்கது அரஃப ரப்பஹு' - 'எவன் தன்னை உணர்ந்துக்கொண்டானோ, அவன் தன் நாயனை உணர்ந்துக்கொண்டான்' என்பது நபிகளாரின் வாக்கு. 'ஃபிக்குருக்க ஃபீக்க யக்ஃபி' - 'உன்னை உற்றுபார் அது உனக்குப் போதுமானது' என்பது சூஃபியாக்களின் வாக்கு.

சத்தமும், சந்தடியும் நிறைந்த பரபரபுக்கு பஞ்சமில்லா இவ்வுலகில் அமைதியைத் தேடுவதென்றால் சாதாரண காரியமல்ல. அமைதிக்குத் தனிமை அவசியம். இதை உணர்ந்த பாவாவும் தன் துணைவியாரிடம் ஒரு கோப்பை பால் கொண்டுவரச் சொல்லி அதனை அருந்திவிட்டு தனிமையில் தியானத்தில் அமர்ந்துவிட்டார்கள். நாற்பது நாட்கள் சில்லாவுக்குப் பின்.............


1948 க்குப் பின்

நாற்பது நாட்கள் தியானத்திற்குபின் வெளிவந்த அவர்களின் பேச்சிலும் செயலிலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. தமிழில் பேசினாலும் அது பரிபாசை போன்று புதிராகவே இருந்தது. எதையோ இழந்ததைப்போல் காணப்பட்டார்கள். உடைக்கும் உணவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இத்தகைய மாற்றங்கள் பார்ப்பவர்களுக்கு விந்தையாக இருந்தது. சுருங்கச் சொன்னால் விலாயத் என்ற நிலை வெளிப்படத் தொடங்கிது. இதை யாரும் புரிந்துக்கொள்ளவில்லை.

1953-ல் ஒரு நாள் காக்காவைக் காணவில்லை என்று ஊரே அல்லோலப்பட்டது, மூன்று நாட்கள் ஆகியும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, இந்நிலையில் பாவா ஒருவர் சங்கமங்கலத்தில் (சிக்கலிலிருந்து வடக்கே இரண்டுகல் தொலைவிலுள்ளது) இட்லி தோசைகளைக் கொடுத்து வியாதிகளை குணப்படுத்துகிறார் என்ற செய்தி கேள்விப்பட்டு அங்கு
சென்று பார்த்தபோது இவர்கள் இருப்பதைக் கண்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர்.


கறாமத் எனும் அற்புதம்

இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியை தாரமாக வைத்து தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்ற மாயையில் முஃஜிஜாத்தையோ கறாமத்தையோ இன்றய சமுதாயத்தினர் சிலர் நம்ப மறுக்கின்றனர். எதைச் சொன்னாலும் ஆதாரம் இருக்கிறதா? நிரூபிக்க முடியுமா? என்று கேட்கின்றனர்.

ஈமானின் அடிப்படையே, முதலில் அப்படியே நம்பவேண்டும். 'ஆமன்துபில்லாஹி..' என்பதின் பொருளையே மறந்துவிட்டார்கள். 'அன்னாசு அஃதாவுல் லிமா ஜஹிலு' - 'புரியாத அறிவுக்கு மக்கள் எதிரானவர்கள்' என்ற அரபி பழமொழிக்கு உதாரணமாக இருக்கிறார்களேயொழிய புரிந்துக்கொள்ள முயற்சிப்பதில்லை. கறாமத்தை மேஜிக் என்று தவறாக நம்புகிறார்களேயொழிய அது உண்மைதானா என்று தெரிந்துக்கொள்ள விரும்புவதில்லை.

கறாமத்தும் மேஜிக்கும் ஒன்றுபோல் தோன்றினாலும் அவை இரண்டுக்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு. பிரத்தியோகப் பயிற்சி, சில உபகரணங்கள், பார்ப்பவர்களை மயக்கும் பேச்சு, செயலில் காட்டும் வேகம் இவை நான்கையும்
தாரமாகக்கொண்டு காண்பவர்களுக்கு ஒரு தற்காலிகத் தோற்றத்தை ஏற்படுத்துவது அல்லது இருப்பதை மறைத்து மீண்டும் தோன்ற செய்வது மேஜிக்.

கறாமத் அப்படியல்ல, ஒருவரோ அல்லது ஒரு சமுதாயமோ நன்மை பெறும் பொருட்டு முற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றை மிகச் சுலபமாக செய்வது. இதற்கென்று தனி பயிற்சியோ, உபகரணமோ, மதி மயக்கும் பேச்சோ தேவை இல்லை. சதா இறைச்சிந்தனையில் மூழ்கி இருக்கும் ஒருவர் தியானம், திக்று, ரியாலத் போன்ற பிரத்தியேக
வணக்கங்களினால் படிப்படியாக நிலை உயர்ந்து விலாயத் என்ற தரஜாவை(படித்தரத்தை) அடையும்போது கறாமத் என்ற அற்புத செயல் தானாக உண்டாகும்.


முன் அறிவிப்புகள்

என் தந்தைக்கு அறிவித்தது

ஒரு காரியம் நடப்பதற்குமுன் சொல்வது என்பது எல்லோராலும்சாத்தியப்படுவதல்ல, குறி சொல்பவர்கள் சாத்திரம், ஜோசியம் சொல்பவர்கள் நடக்கப்போவதை முன்கூட்டியே சொன்னாலும் அது சரியாக நடக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. சில நடக்கவும் செய்யலாம் சில நடக்காமலும் போகலாம். ஆனால் விலாயத் பெற்றவர்கள் சொன்னால் அது
மிகச் சரியாக நடக்கும். நடக்குமோ நடக்காதோ என்ற சந்தேகத்திற்கே இடமில்லை. ஆனால் அவர்கள் எதையும் நேரடியாக சொல்லமாட்டார்கள், வேறு ஒன்றை குறிப்பிட்டு மறைமுகமாகச் சொல்வார்கள்.

ஆம் அப்படித்தான் பாவாவும் சொன்னார்கள். 1960-ம் ஆண்டு ஒரு நாள் எனது தந்தை பஸ் ஏறுவதற்காக செல்லும்போது "பள்ளிவாசல் தெருவில் நாலு தென்னைமரம் சாயப்போவுது" என்று கூறினார்கள். இது என் தகப்பனாருக்குப் புரியவில்லை. "நான் போகும்போது பள்ளிவாசல் தெருவில் நாலு தென்னைமரம் சாயப்போவுது என்று காக்கா இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டார்கள், ஒருவேளை புயல் எதுவும் வரப்போகுதோ என்னவோ தெரியவில்லை ஒருகால் நம் வீட்டு மரம் விழுந்து வீட்டுக்கு சேதம் வராமலிருந்தால் அல்லாஹ் செய்யும் கைராயிருக்கும்" என்று என் தாயாரிடம் சொன்னார்கள்.

நாலு தென்னைமரம் என்று சொன்னது நான்கு பேர்களை குறிக்கும் என்று அப்போது புரியவில்லை. ஆம்! அவர்கள் சொல்லி சில தினங்களில் என் பாட்டனார் மாரடைப்பால் காலமானார்கள். அவர்கள் இறந்து நாற்பது நாட்களுக்குள் என் தந்தையின் பெரிய தகப்பனார் இறந்தார்கள், அவர்கள் இறந்து ஏழு நாட்களுக்குள் அவர்களின் மனைவி இறந்தார்கள், அதன்பின் என் தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரி இறந்தார்கள். இப்படி எங்கள் குடும்பத்தில் நான்கு பேர்கள் மூன்று மாதங்களில் ஒருவர்பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தார்கள்.


கிருஷ்ணன் ஆசாரிக்கு எச்சரிக்கை

ஒரு நாள் அதிகாலை சுமார் மூன்று அல்லது நான்கு மணியளவிருக்கும் கிட்டுப்பிள்ளை மில்லருகே ஒரு ஒதுங்கிய இடத்தில் 'அக்க யோக' நிலையில் ஆழ்ந்த தியானத்திலிருந்தார்கள். அவ்வழியே வந்த கிருஷ்ண ஆசாரி பாவாவை கண்டதும் அங்கேயே நின்றுவிட்டார். அவர்கள் தியான நிலையிலிருந்து மீண்டதும், "டீ வாங்கிவருகிறேன் பாவா" என்று பவ்வியமாக கேட்டபோது "அப்பனே! இவனுக்கு சுடுகாட்டுக்குப்போகும் நாள் நெருங்கிவிட்டது, தாங்கள் போங்கள்" என்றார்கள்.

இது, தனது மரணத்தைக் குறிக்கும் வார்த்தை என அவருக்குப் புரியவில்லை. அவர்கள் சொல்லி ஒரு வருடத்திற்குள் அவர் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது நாற்பத்தொன்பது.


ஆபத்தைத் தடுத்தது

1981 அல்லது 82 ம் வருடத்தில் ஒரு நாள் சஹீது பாய் என்ற பெரியவர் வெளியூர் செல்வதற்காக பஸ் நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். பாவாவின் வீட்டை கடந்தபோது.........

"இந்தாங்க பஸ்ஸுக்கு போறவங்களே! இங்கே வாங்க" என்ற பாவாவின் குரல் கேட்டுத் திரும்புகிறார்.

"உங்களெத்தான், இங்கே வந்து உக்காருங்க" என்று சொன்னதும், காக்கா எதோ சொல்லப்போகிறார்கள் என்ற சிந்தனையுடன் எதிர் வீட்டுத் திண்ணையில் உட்க்காருகிறார். நேரம் கடக்கிறது, காக்கா என்ன சொல்லப்போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார், அவர்களோ எதும் சொல்லாமல் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார்கள்.

அரை மணிநேரமாகியும் காக்கா ஒன்றும் சொல்லவில்லையே, குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய முடியாதே இன்னும் எவ்வளவு நேரம் இருக்கவேண்டுமோ தெரியவில்லையே என்று தவிப்பில் இருந்துக்கொண்டிருந்தபோது, "சரி போங்க" என்று உத்தரவிடுகிறார்கள்.

ஒன்றும் சொல்லாமல் இப்படி நம்மை அனுப்பிவிட்டார்களே, சரி எதாவது ஒரு நன்மை இருக்கும், வேறு பஸ்ஸில் போகலாம் என்ற நினைவோடு புறப்பட்டு அடுத்த பஸ்ஸில் போகிறார். சிறிது தூரம் பயணம்செய்தபின்புதான் உண்மை புரிந்தது, தான் செல்லவிருந்த பஸ் அங்கு விபத்துக்குள்ளாகி இருந்ததும் அந்த விபத்திலிருந்து காப்பாற்றதான் தன்னை காக்கவைத்தார்கள் என்பதும்.

இதனை, இறைவனின் நாட்டம் இப்படி இருந்தது, ஒவ்வொருவரின் பிறப்பையும் இறப்பையும் அவனே நிர்ணயம் செய்துள்ளான், அவன் நாட்டப்படியே எல்லாம் நடக்கும் என்று தர்க்கம் செய்யலாம். ஆனால் அவர்களின் பயணத்தை வேறு காரணங்கள் தடை செய்யவில்லை. மாறாக புறப்பட்டு சென்றவர்களை தடுத்து நிறுத்தியது பாவா, இறைவனின் அறிவிப்பு என்றாலும் அது அவர்களது உதிப்பில் தோன்றி நடக்கவிருக்கும் ஆபத்தை மிகத்தெளிவாக முன்னதாகவே அறிந்து அதிலிருந்து காப்பாற்றியது அவர்கள். இது தெளிவான சிந்தனை உள்ளவர்களுக்கு நன்றாக புரியும்.

இப்படி சம்பவம் நடக்குமுன்பே சொல்லப்பட்ட அறிவிப்புகள் ஏராளம். சில சமயம் வெளியூர் சென்று அங்கும் குறிப்புகளும் அறிவிப்புகளும் சொல்லியிருக்கிறார்கள். இதனை அறிந்த மக்கள், தங்களது பிரச்சனைகளுக்கு வழி கேட்டும் வியாதிகளுக்கு நிவாரணம் தேடியும் வரத்தொடங்கினர். வருகிறவர்கள் எதோ வந்தோம் போனோம் என்றில்லாமல் இரவு பகல் பாராது காத்திருந்தனர், சிலர் பல நாட்கள் தங்கியிருந்து தங்களது குறைகளுக்கு வழி கேட்டுச் சென்றுள்ளனர்.

தன்னை நாடி வருகிறவர்களை வெறுங்கையோடு திருப்பியனுப்பியதில்லை, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்துவந்தார்கள். ஒருவருடைய பிரச்சனை மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் இவர்களது பேச்சும் எழுத்தும் அமைந்திருந்தது.


பலர் உயிரைக் காத்தார்கள்

பக்கத்து ஊரில் ஒரு கல்யாணம். தேவை சற்று பெரியது. கல்யாணம் என்றால் விருந்து அதில் மிக முக்கியம் வாய்ந்தது. எதாவது ஒரு சிறிய குறை இருந்தாலும் எல்லாருடைய வாயும் மெல்லும். இது எல்லா ஊர்களிலும் உள்ள வழக்கம். ஊர் மக்களும் உறவினர்களும் வரத்தொடங்க விருந்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தபோது பாவா அவர்கள் வேகமாக சோறாக்கிய பந்தலுக்குச் சென்று தாளிச்சா சட்டியை கவிழ்க்கச் சொன்னார்கள். என் பெயர் கெட்டுவிடும் தேவைக்காரர் அவமானப்பட நான் காரணமாகிவிடுவேன் என்று பண்டாரி மறுக்கிறார். பாவா கவிழுங்கள் என்று வற்புறுத்துகிறார்கள். இதை அறிந்த தேவைக்காரர் பாவா சொன்னதை செய்யுங்கள், விருந்துக்கு தாளிச்சா இல்லாமல்போனால் பரவாயில்லை என்று உத்திரவிட்டவுடன் சட்டி கவிழ்க்கப்பட்டது. ஆறு போல் ஓடிய தாளிச்சாவில் காய்கறிகளுக்கிடையில் ஒரு நல்ல பாம்பு சுருண்ட நிலையில் செத்து கிடந்தது. ஆம்! எப்படியோ நல்ல பாம்பு விழுந்து விட்டது. அதை உண்டிருந்தால் நிலமை என்னவாகிருக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அருகில் நின்று சமையல் செய்த பண்டாரிக்கும் கை ஆட்களுக்கும் பாம்பு விழுந்தது தெரியவில்லை, எங்கோ இருந்த பாவாவுக்கு தெரிந்தது. அது எப்படி சாத்தியம்? சிந்தித்துப் பாருங்கள்!

ஆனால் இதற்கு சான்று உள்ளது; இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் தனது 'கீமியாய சதாத்'தில் இப்படி விளக்கம் கூறுகிறார்கள். 'நுபுவத்தும் விலாயத்தும் கல்பின் மகிமையினால் உண்டாகிறது. அதில் சித்தியாவது மூன்று குணங்கள், (1)ஜனங்களுக்கு கனவில் உண்டாவது இவர்களுக்கு விழிப்பில் உண்டாகும். (2)ஜனங்களுக்கு கல்பு அவர்களின் சரீரத்தில் மட்டும் தங்கும், இவர்களது கல்பு மற்ற எல்லோருடைய சரீரங்களிலும் தங்கி நேர்வழிப்படுத்தும். (3)ஜனங்கள் மற்றவர்கள் மூலம் அறிவைப் பெறுவார்கள், இவர்களுக்கு அறிவு தனக்குத்தானே உண்டாகும்.' இத்தகைய அறிவுக்கு 'இல்மு லத்துன்னி' என்று பெயர்.


நிலைகள்

பாவா ஊரில் இருந்தாலும் வெளியூர் சென்றாலும் அவர்கள் நின்றாலும், அமர்ந்திருந்தாலும், படுத்திருந்தாலும் எல்லோரும் செய்வதுபோல் இருக்காது, முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும். அவர்கள் இருந்த நிலையில் சாதாரணமாக ஒரு மனிதரால் ஐந்து நிமிடங்களுக்குமேல் இருக்க முடியாது.

நிற்கும்போது ஒரு கையை இடுப்பில் கொடுத்து மறு கையை சுவற்றில் சாய்த்து தலையை சுவற்றில் முட்டுக்கொடுத்தவாறு நீண்ட நேரம் நிற்பார்கள். அதே போன்று உட்கார்ந்திருக்கும்போதும் ஒரு காலை மறுகால் தொடையிலும் ஒரு கையை தரையில் ஊன்றியபடியும் மறு கையை கண்ணத்தில் வைத்தும் நீண்ட நேரம் இருப்பார்கள். படுத்திருந்தாலும் ஒரு காலை மடக்கி மறு காலை நீட்டி ஒரு கையை தலைக்கு வைத்து மறு கையை தரையில் ஊன்றியோ அல்லது தொடைமீது வைத்தோ பல மணிநேரம் உறங்குவார்கள். அது உறங்குவதுபோல் தோன்றுமேதவிர உறக்கமல்ல, 'முராக்கபா' வின் நிலையில் இருப்பார்கள்.


ஆன்மீகத்தின் எட்டு நிலைகள்

ஆன்மீகத்தில் தன்னை அர்பணித்துக்கொண்ட பெரியோர்கள் எட்டுவிதமான நிலைகளை அடைகிறார்கள். அவைகளை ஆரிஃபீன்கள் எட்டு 'மீம்' களைக்கொண்டு வரிசைப்படுத்தியுள்ளார்கள். அவை 'முஹாசபா, முஆபிதா, முதாகிரா, முஹாரிபா, முஜாஹிதா, முராக்கபா, முஷாஹிதா, முஆயினா' என்பன.

பாவா அவர்கள் முராக்காபா அல்லது முஷாஹிதா அல்லது முஆயினா நிலைகளில் இருப்பதை மற்றவர்களால் அறிய முடியாது, வெளி உலகத்திற்கும் காண்பிக்கவும் மாட்டார்கள். உறங்குவது போன்றோ அல்லது சிந்தனையில் ஆழ்ந்திருப்பது போன்றோ தோன்றும், ஆனால் அது உறக்கமும்மல்ல சிந்தனையுமல்ல.

சில நேரங்களில் சீடர்களும் அவர்கள்மீது அன்பு வைத்திருப்பவர்களும் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும்போது அசையாமல் அப்படியே இருப்பார்கள். அது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றும், உயர்ந்த அந்தஸ்திலுள்ளவர்கள் எவரும், நாமும் பிடித்துவிடுவோம் என்றெண்ணி முயற்சி செய்தால் அடுத்த வினாடி அவர் கை தொடும்முன்பே எழுந்து "அவரவர் தரஜாவில்(நிலையில்) இருந்துக்கொள்ளவேண்டும்" என்று கண்டிப்பார்கள். இது அவர்கள் உறங்கவில்லை என்பதையும் அதே நேரத்தில் மற்றவர்களுக்கு மரியாதைக் கொடுப்பதையும் காட்டுகிறது.



வசீலா

எல்லா உயிர்களும் மரணத்தை சுவைக்கக்கூடியதே (அல் குர்ஆன் 21:35) என்று இறைவனின் வாக்கு. படைக்கப்பட்ட அனைத்தும் அழியக்கூடியது உயிரைத் தவிர. ஆம்; உயிர்! அது படைக்கப்படவில்லை, அது அருளப்பட்டது! எம்முடைய உயிரிலிருந்து ஊதினோம் (அல் குர்ஆன் 17:85) என்று இறைவன் கூறுகிறான். உயிர் பிரிந்தது என்று கூறுவதின் பொருள் இதுதான். ஆனால் உயிரைத் தாங்கும் உடம்பும் மற்ற சடப்பொருள்களும் அழியக்கூடியது. அவைகளில் சில விரைவாக அழியும் வேறு சில பல நூறு வருடங்கள் கழித்து அழியும். பல கோடி வருடங்களுக்கு முன் படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சம் ஒரு காலத்தில் அழியக்கூடியது என்று குர்னின் வார்த்தையை விஞ்ஞானம் பின் தொடர்கிறது. இந்த பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள பூமியில் வாழ்கின்ற மனிதர்களில் சிலர் சாதனைப் படைத்துவருகின்றனர். அத்தகையவர்களின் சாதனைகள் அவர்கள் மறைந்தாலும் நிலைத்து நிற்கின்றன. அவர்களுக்கென்று தனி மரியாதையும் மதிப்பும் என்றென்றும் உண்டு, அவர்களின் பெயர் நினைவு கூறப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.

பெருமானார் அவர்களுக்குப் பின் வந்த இறைநேசச் செல்வர்கள் மனித சமுதாயத்திற்கு பெரும் அருட்கொடையாக இருந்திருக்கிறார்கள். 'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதற்கொப்ப தானும் நேர்வழியில் நடந்து சமுதாயத்தையும் நேர்வழி படுத்திய இவர்கள் இறந்தபின் ஜியாரத்(சந்திப்பு) செய்வதற்காகவும் வசீலா(உதவி, வழி) தேடுவதற்காகவும் தனி இடத்தில் அடக்கம் செய்வது பெரும்பாலான நாடுகளில் இருந்து வரும் பழக்கம்.

அவர்கள் இறந்துவிட்டார்களே, அவர்களிடம் எப்படி கேட்கமுடியும்? உயிருள்ளவர்களிடம் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது, மரித்தவர்களிடம் கேட்டால் என்ன கிடைக்கும்? என்பது சிலரின் கேள்விக்கனைகள். "அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நினைக்கவேண்டாம், உயிருடன்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டிய உணவை நாம் அளிக்கிறோம்" (அல் குர்ஆன் 3:169) என்று கூறியுள்ள இறைவேதம் "ஓ விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து அவனிடம் செல்வற்குரிய வழியை(வசீலா) தேடிக்கொள்ளுங்கள்" (அல் குர்ஆன் 5:35) பிரிதோரிடத்தில் கூறுகிறது. இங்கு கூறப்பட்டுள்ள வழி(வசீலா) என்ன என்பதற்கு பெருமானார் அவர்களின் வாக்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கிறது.

பாவா ஆதம்(அலை) அவர்கள் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைக்கொண்டு இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டதாக இமாம் ஹாக்கிம்(ரஹ்) அவர்கள் முஸ்தத்ரக்கில் (vol.II page.751) குறிப்பிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸை இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்களும் இமாம் பைஹக்கி(ரஹ்) அவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள்.

ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களின் தாயார் ஹஜ்ரத் ஃபாத்திமா பின்த் ஹசன் இறந்தபின் அடக்கம் செய்யும்போது அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு கபுர் விசாலமாக இருக்கவேண்டும் என்று பெருமானார் அவர்கள் தன்னைக் கொண்டும் தனக்கு முன் தோன்றிய நபிமார்களைக்கொண்டும் இறைவனிடத்தில் வசீலா தேடியதாக இமாம் தபராணி அவர்கள் முஃஜமுல் கபீர், முஃஜமுல் அவ்சத் என்ற நூட்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மதினா ஒருமுறை வரட்சியால் பாதிக்கப்பட்டபோது ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களின் வசீலாவைக்கொண்டு மழைக்காகப் பிரார்த்தனை செய்து மழை பெய்ததாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளதை புகாரி ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் ஒருமுறை கறி துண்டை விழுங்கியதால் வேதனை ஏற்பட்டு நண்பர் ஒருவரின் லோசனையின்பேரில் "யா முஹம்மதா" என்று கூவியபோது அந்த வலி உடனே நீங்கியதாக இப்னு தைமியா(ரஹ்) அவர்கள் தனது அல் கலிமத்து அல் தையிப் என்ற நூலில் (பக்கம்-165) குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சிலரை கர்பலா யுத்தத்தின்போது கைது செய்யப்பட்டு திமிஷ்கிலுள்ள(டெமாஸ்கஸ்) யஜீதுடைய நீதி மன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் முன்னால் இடப்பட்டுள்ள திரையை நீக்கி தன் முன்னிலையில் நிறுத்துமாறு யஜீது உத்தரவிட்டான். அப்போது அவர்களுடனிருந்த ஹஜ்ரத் சய்யிதா ஜைனப் (ரலி) என்ற பெண் "யா முஹம்மதா" என்று அழுதபடி இந்த கொடுங்கோலனிடமிருந்து காப்பாற்றுமாறு பெருமானார் அவர்களிடம் உதவி தேடினார்கள். சற்று நேரத்தில் யஜிது தன்முன் நிறுத்தப்படும் உத்தரவை ரத்து செய்து அவர்கள் அனைவரும் மதினா நகருக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க உத்தரவிட்டான். அதன்படி அனுப்பிவைக்கப்பட்டனர்.

கடைசி மூன்று நிகழ்வுகளும் பெருமானார் அவர்கள் மறைந்தபின் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


நேரம் நெருங்கியது

மௌத்து எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, மௌத்து வந்தால் எவரும் இருக்கமாட்டார்கள். இறைநேசச் செல்வர்களான குத்துபுமார்களும் வலிமார்களும் தங்களது மௌத்தைப் பற்றி முன்கூட்டியே அறிந்துவைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அதை நினைத்து துக்கப்பட்டதுமில்லை இவ்வுலக வாழ்வைப் பற்றி சந்தோஷப்பட்டதுமில்லை. இறைவன்மீது மாறாத காதல் கொண்ட அவர்களுக்கு வாழ்வும் சாவும் ஒன்றாகவே தெரிந்தன. வேறுவார்த்தையில் சொன்னால் 'மறுமையின் வாழ்க்கை உயர்வானது நிலையானது' (அல் குர்ஆன் 86:17) என்பதை மிகத் தெளிவாக அறிந்துவைத்திருந்தாகள். இதை அவர்கள் தங்களது சீடர்களுக்கும் மாறாத அன்பு வைத்திருந்தவர்களுக்கும் நனவில் மட்டுமல்ல கனவிலும் குறிப்பால் உணர்த்தி வந்த வரலாறுகள் உண்டு.

தான் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு தைக்காலுக்கு சென்று, இப்போது ஒலு செய்வதற்கான தண்ணீர் தொட்டி இருக்குமிடத்தில் ஒரு வட்டம் அதன் கீழ் பாகம் தடித்த கோடு பார்ப்பதற்கு இரண்டுமூன்று நாட்களில் மறையப்போகும் பிறை போன்ற அமைப்பில் வரைந்தார்கள். அதன் பின் ரஜபு பிறை 26, 27 மிஃராஜ் இரவு என்று அடிக்கடி கூறிவந்தார்கள்.

நான்கு நாட்களுக்குமுன், நான்குபேரை அழைத்து தான் வழக்கமாகப் படுக்கும் கட்டிலை தூக்கி வெளியே வைக்கச் சொன்னார்கள். பலர் அதை பிடித்தபோது நான்குபேர் மட்டும்தான் பிடிக்கவேண்டும் என்று உத்திரவிட்டார்கள்.

மூன்று நாட்களுக்குமுன், மயிலாடுதுறை சங்கரன்பந்தலைச் சேர்ந்த மஸ்ஹூதா என்ற பெண் பாவாவை அடிக்கடி பார்க்க வருபவர்களில் ஒருவர். அவரிடம் தனது மூன்று விரலை காட்டி மௌத்து மௌத்து என்று கூறின்னார்கள். அதன்பின் அம்மயத்து சூராவிலுள்ள 38வது வசனமான "யவ்ம யக்கூ முர்ரூஹு வல்மலாயிகத்து சஃப்பன் லா யத்த கல்லமூன இல்லாமன் அதினலஹுர் ரஹ்மானு வ கால சவாபா" என்ற ஆயத்தை ஓதினார்கள். இதை ஏன் ஓதினார்கள் எதை குறிப்பால் உணர்த்தினார்கள் என்பது அப் பெண்ணிற்கு அப்போது தெரியவில்லை. வஃபாத்தான பிறகுதான் இந்த செய்தி தெரியவந்தது.

இரண்டு நாட்களுக்குமுன் தான் சாப்பிடுவதற்காக உபயோகிக்கும் பீங்கான் தட்டையை "இனி இதற்கு உபயோகமில்லை" என்று சொல்லி கவிழ்த்து வைத்துவிட்டார்கள்.

ஒரு நாளைக்குமுன், தன்னைப் பார்க்க வந்திருந்த நெருங்கிய சீடர்களில் ஒருவரான கொரடாச்சேரி அப்துல் காதர் ஊருக்குத் திரும்ப உத்தரவு கேட்டபோது, "போகவேண்டாம், நாளைக்கு விருந்து இருக்கிறது அதை முடித்துவிட்டு போங்கள்" என்று சொல்லி தங்கவைத்துவிட்டார்கள். இதல்லாமல் மற்ற எல்லா சீடர்களையும் எங்கும் போகவேண்டாம் இங்கேயே இருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.


கடிகாரம் நின்றது

1989 ம் ஆண்டு மார்ச் திங்கள் 4 ம் நாள் சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு பாவா, 'அல்லாஹும்ம சல்லி அலா செய்யிதினா வ நபீயினா வ மௌலானா முஹம்மதின் வ அலா ஆலி செய்யிதினா முஹம்மதின் வ பாரிக் வ சல்லிம் அலைஹ்' என்ற சலவாத்தை ஓத தொடங்கி தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்தார்கள். மேலும் உடனிருந்த சீடர்களையும் நிறுத்தாமல் ஓதிவரும்படி உத்தரவிட்டார்கள்.

அன்றிரவு முழுவதும் சீடர்கள் அனைவரும் அவர்களுடனே இருந்தனர். சிறிது உறங்கியபின் எழுந்து சுவற்றில் எழுதிக்கொண்டிருந்தார்கள். இது மறு நாள் 5-3-1989(ஹிஜ்ரி 1409 ரஜப் 26) ஞாயிற்று கிழமை சுபுஹு வரை நீடித்தது. எழுதி முடித்தபின் தனது இறுதி காலத்தில் பெறிதும் உதவியாக இருந்த தலைஞாயிறு முஹம்மது காசிம் என்ற சீடரின் மடியில் தலைவைத்துப் படுத்துவிட்டார்கள். மரணத்திற்கு சற்று முன்பாக தன் உடனிருந்த அனைவரையும் வெளியே போகச்சொல்லிவிட்டு மனைவியையும் உறவினரையும் அழைத்தார்கள். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் அவர்களின் நிலை மாறிக்கொண்டிருந்தது, மூச்சு மெதுவாக ஓடத் தொடங்கியது. இதை கண்ட உறவினர்கள் பாவாவை காற்றோட்டமான இடத்தில் படுக்கவைத்தனர். அப்போதும் சீடர் முஹம்மது காசிம் அவர்களின் மடியில் தலைவைத்து படுத்திருந்தார்கள். மனைவி கலிமம்மாவும் மருமகன் நிஜாமுதீனும் அருகில் இருந்தபடி தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு என்ன
செய்வதென்று புரியாமல் மன இருக்கத்துடன் அமைதியாக சுற்றி நின்றுகொண்டிருந்தனர். எல்லோர் முகத்தையும் சோகம் அப்பிக்கொண்டுவிட்டது.

அமைதியின் வடிவமாக முகம் பிரகாசிக்க ஒளிமயமான சரீரத்துடன் படுத்திருந்த பாவா கண்ணை திறந்து தன் துணைவியரையும் சுற்றி இருந்த உறவினரையும் ஒரு முறை பார்த்து "இவனுக்கு என்ன நேர்ந்தது" என்று முனுமுனுத்த ஒரு சில நொடிகளில் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டார்கள்.

சரியாக காலை 8-46 மணி; மூச்சு நின்றது. 76வருடம் 4மாதம் 17நாட்கள் இடையறாது துடித்துக்கொண்டிருந்த இருதயம் நிரந்தர ஓய்வு பெற்றது. "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்." அவர்களது மூச்சு மட்டும் நிற்கவில்லை, இதயம் மட்டும் நிற்கவில்லை, அவர்களது மறைவை காண விரும்பாத அவர்கள் வீட்டில் ஒடிக்கொண்டிருந்த
கடிகாரமும் நின்றுவிட்டது. சீடரின் மடியிலேயே அவர்களின் ரூஹு பிரிந்தது.


திறந்து மூடிய கண்கள்

அடுத்த வினாடி கூடியிருந்த எல்லோர் இதயத்திலும் அழுத்தம், நெஞ்சினில் பாரம், துக்கம் பீரிட்டு "ஓ" என்ற அலறல், ஆளுக்கொருபுறமாக அடக்கமுடியாத துக்கத்தை அழுது வெளியிட்டுக்கொண்டிருக்க "எஜமானே! என்னை அனாதையாக்கிவிட்டீர்களே என்னை விட்டு போய்விட்டீர்களே கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்களேன்" என்று அரற்றியபடி
கலிமம்மா கதறியழ இறந்தவர்கள் ஒரு வினாடி கண்ணைத் திறந்து மூடினார்கள். இதை மனைவி கலிமம்மா மருமகன் நிஜாமுதீன் ஆகிய இருவர் மட்டுமே பார்த்தனர். வேறு யாரும் பார்க்கவில்லை.

ஒரு சில நிமிடங்களில் ஊர் முழுவதும் செய்தி பரவியது. மக்கள் வருவதற்குமுன் ஜனாசாவை அவர்கள் வீட்டில் வைத்தனர். கூட்டம் அதிகமாகும் என்பதால் சற்று நேரத்தில் அருகிலுள்ள மைத்துனர் அலாவுதீன் வீட்டிற்கு மாற்றினர். கூட்டம் அதிகரிக்கவே இனி இங்கு வைத்திருந்தால் வருகிறவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதை கருத்தில்கொண்டு தைக்காலுக்கு எடுத்து சென்று தற்போது அடக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்தனர்.

அரை மணித்துளிக்குள் வெளியூர் மட்டுமல்ல வெளி நாடுகளுக்கும் செய்தி பரவியது, அகில இந்திய வானொலியின் திருச்சி நிலையம் செய்தி அறிவித்தது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக்கொண்டு போகவே மஞ்சக்கொல்லை வழியாக செல்லும் அனைத்து பேரூந்துக்களும் நின்று போயின, விரைவு வண்டிகள் அனைத்தும் நின்றன, நாகை மற்றும்
திருவாரூரிலிருந்து சிறப்பு பேரூந்துக்கள் இயக்கப்பட்டன. அவர்களின் ஜனாசாவை பார்த்துவிட்டுபோன ஜனங்கள் சுமார் ஐம்பதாயிரத்திற்கு மேலிருக்கும். இறுதிவரை இருந்த ஜனங்கள் சுமார் இருபதாயிரத்திற்கு மேலிருக்ககூடும். வந்திருந்தவர்களில் சிலர் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தனர், வேறு சிலர் சலவாத்து ஓதிக்கொண்டிருந்தனர், மற்றும் சிலர் எல்லோருக்கும் வழிகாட்டிக்கொண்டிருந்த குத்துபு ஜமானை இழந்து விட்டோமே இனி என்ன செய்வது? யாரிடம் போவது? எவர் வழிகாட்டுவார்? என்ற ஏக்கத்தை உள்ளத்தில் அடக்கிவைத்துக்கொண்டு அமைதியாக இருந்தனர்.


அடக்கம்

மறு நாள் 6-3-89 திங்கட் கிழமை மாலை 4-00 மணிக்கு அவர்களின் பூத உடலை அடக்கம் செய்தனர். அதாவது இறந்து 31 மணி நேரம் கழித்து அடக்கம் செய்யப்பட்டது. சாதாரணமாக ஒருவர் இறந்த சற்று நேரத்தில் உடம்பு விரைத்துவிடும். சில மணித்துளிகளில் உடம்பு வீங்கத் தொடங்கும் பின் சிறிது சிறிதாக துர்நாற்றம் வீச ரம்பிக்கும். இதை தவிர்ப்பதற்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் (Freezer) வைத்து மூடவேண்டும்.

ஆனால் அவர்களின் உடம்பை எந்தவித முன்னேற்பாடும் செய்யாமல் சாதாரணமாக வைத்திருந்தனர். உடம்பில் சுறுக்கமோ வீக்கமோ ஏற்படவில்லை. இறந்தபோது எப்படி உறங்குவதுபோல் காட்சியளித்தார்களோ அதே நிலைதான் இறுதிவரை நீடித்திருந்தது. 'கபன்' இடுமுன் குளிப்பாட்டும்போது கை கால்கள் மிக சாதாரணமாக மடக்க முடிந்தது, செருப்பு
அணியாமல் நடக்கும் பழக்கத்தையுடைய இவர்களின் பாதம் மிருதுவாக இருந்தது.

பாவா அடக்கம் செய்யப்பட்டார்கள். தம் வானாளில் பெரும்பகுதியை ஆன்மீகத்துறைக்கு அர்பணித்துவிட்ட அவர்கள் பலர் நெஞ்சங்களில் நிறைந்து நின்றாலும் மறைந்தபின் ஏற்பட்ட இருளை அவர்கள் வீட்டில் ஓயாமல் எரிந்துக்கொண்டிருக்கும்
அந்த விளக்கினால் அகற்றமுடியவில்லை.

-------------00000------------

புத்தகம் கிடைக்குமிடம்:

A. MOHAMMED NIJAMUDEEN,
KALIMA AMMAL TRUST,
5/64, MASTHAN MARAICAR STREET,
MANJAKKOLLAI - 611 106,
NAGAPATTINAM - DIST,
PH. 04365 - 224692.

No comments: