சொர்னகவி
நெய்னார் முஹம்மது பாவா புலவர்
அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் (முதலாம் செய்யது முஹம்மது) அவர்களின் மகள் வயிற்று பேரன் ஆவார். இவர்கள் தந்தை பெயர் கிடைக்கவில்லை. அவர்கள் எழுதிய பாடல்கள் ஏதாவதொன்றில் இருக்கலாம். எல்லாம் ஓலைச் சுவடிகளாக இருப்பதால் தேடிஎடுப்பது சாதாரண விசயமல்ல. இவர்களும் தம் பாட்டனார் போல் இறைவன்மீது பேரன்பு கொண்டவராக இருந்திருக்க வேண்டும். ஒரு பாடல்மூலம் மழையை வரவழைப்பதென்றால் சாதாரண செயலல்ல. விஞ்ஞான பூர்வமாக சொல்வதென்றால் to hypnotise a particular inanimate body to serve the requirments சாதாரண செயல் அல்ல. அதற்கென்று சில பிரத்தியேகப் பயிற்சி வேண்டும். அப்பயிற்சியில் தேர்ச்சிபெற்றால் மாத்திரமே இத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும். ஒரு பாடல் மூலம் மழை வந்தது, இது சித்து வேலையல்ல சிந்திக்கவேண்டிய விசயம். விஞ்ஞான அறிவை வைத்துக்கொண்டு மேலெழுந்தவாரியாக சிந்தித்தால் குழப்பத்தைத் தவிர வேறொன்றும் கிடைக்காது. அப்பழுக்கற்ற மனத்துடன் ஆழ்ந்து சிந்தித்தால் சிந்திப்பவர்களின் தரத்தைப் பொறுத்து விடை கிடைக்கலாம்.
ஹிஜ்ரி 1272 ம் வருடம் மூன்றாண்டுகள் நாடெங்கும் பஞ்சமேற்பட்டு மக்கள் துயருற்றனர்; எங்கு நோக்கினும் வரட்சி; கால் நடைகள் மடிந்தன; அதுபோழ்து தொண்டி நகரைச் சேர்ந்த பெரியவர் செய்கு சுலைமான் லெப்பை சாகிபு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சொர்ணகவி மழை வேண்டி மழைப்பாட்டுப் பாடினார்கள் என்று அதிரை தாஹா அவர்கள் 'இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். இது ஹிஜ்ரி ஆண்டுக்குச் சரியான கி.பி.1855-56 ம் ஆண்டு வருகிறது. ஆனால் மழைப் பாட்டை புத்தகமாக வெளியிட்ட ஹாஜி. க. செ. செய்யது முஹம்மது அண்ணாவியார் , முகவுரையில் 1862 வரை என்று குறிப்பிடுகிறார்கள்.
1862 ம் வருடத்துக்குச் சரியான காளயுக்தி வருடம் வரையில் இத்தேசத்தில் ஏறக்குறைய மூன்றாண்டுகள் மழை பெய்யாதிருந்தது. ஒரு நாள் வெள்ளிக்கிழமை 'ஜும்ஆ' தொழுகைக்குப் பிறகு, அங்கு வந்திருந்த தொண்டி நகரைச் சேர்ந்த செய்கு சுலைமான் லெப்பை சாஹிப் என்ற பெரியார் எழுந்து நின்று அங்கிருந்த சொர்ணகவி அவர்களை, 'விழித்தெழுவீர்! சர்வதயாபரனாகிய அல்லாஹுத்தஆலாவிடம் மழை பொழிய மனமுவந்து சில 'முனாஜாத்து'க் கவிதை களியற்றி யருளவேணும்' எனக் கேட்டுக்கொண்டார்கள். அதற்கிசைந்த கவியவர்கள் கவிதை இயற்றி பாராயணம் செய்து மறு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தபிறகு இறைநாமம் ஓதி உமறு புலவர் சீறாவில் பாடிய 'நபி மழை அழைத்த படலம்' பாடி முடித்தபின் தம்முடைய பாடலைப் பாடத்தொடங்கினார்கள். கடைசிப் பாடலைப் பாடிமுடிப்பதற்குமுன் மழை பொழியத்தொடங்கி ஒரு வாரம் வரை நீடித்ததாக 'மழைப் பாட்டின்' முகவுரையில் ஹாஜி க.செ. செய்யது முகம்மது அண்ணாவியார் குறிப்பிடுகிறார்.
கருத்துச் செறிவும், இறை பக்தியும் நிறைந்த பாடல்கள் சில:
'சீருலாவி யருள் வளந் திருச்
சிந்தையிற் குடிதங்குந் தயாபரா
பாருலாவிய ஜீவசராசரம்
பண்பதாகவே யாவும் விளங்கவே
நேருலாவிய நீயலதாரிநீ
நீதிமானே யின்னேர மிரங்கியே
காருலாவிய நீண்மழை தந்தருள்
காணொணா வடிவே யெங்கள் நாயனே'
என்று வல்லோனைப் புகழ்ந்து, இறையருளை வேண்டி நிற்கும் கவியரசர் தொடர்ந்து வரும் மற்ற பாடல்களில் மக்கள் படும் துன்பங்களக் கூறி ஈருலக ரட்சகர் நபிகள் கோமானின் பொருட்டால் துயர் துடைக்கவேண்டும் என்று கூறுகிறார். இதோ இங்கே:
'நாடுதோறும் பயிர்முகம் நாடியே
நந்திவாடுகிறார் பயிரிட்டவர்
வீடுதோறுள மாதர்கண் மக்களின்
வேடங்கண்டுளம் வாடிமெலிகிறார்
வாடைமா மணம்வீசு முகம்மது
வள்ளற்காக யெங்கள் துயரோடவே
மூடிமாரி விடாது சொரிந்திட
முத்திதந் தருள்வாயெங்கள் நாயனே'
கார்மேகம் வந்து வந்து போகிறது ஆனால் மழை பொய்த்துவிடுகிறது. இதோ காரிருள் இப்போது மழை பெய்விக்கும் காய்ந்திருக்கும் பயிர்கள் பசுமையுறும், நாடு செழிப்படையும், நாமும் வளம்பெறுவோம் என்று ஆவலுடன் இருப்பவர்கள் ஏமாந்துப் போவது எப்படி இருக்கிறதென்றால் நல்ல பசியுடன் இருப்பவனுக்கு அறுசுவை உணவை காட்டிக் காட்டிப் பறிப்பதுபோலிருக்கிறது என்று அழகிய உவமை நயத்துடன் பாடுகிறார் கவிராயர்.
'தேட்டமாம் பசியுள்ளவர் முன்பிலே
தின்னஞ்சோறு கறிகளை யின்பமாய்
காட்டிக் காட்டிப் பறிப்பவர் போலவே
கறுத்தமேகம் வெளுத்துக் கலங்குதே
மூட்டமாயொரு மூசாப்பதாகவே
மூடிமாரி விடாது சொரிந்திட
நாட்டம்வைத் தனைவோரையும் காத்தருள்
நந்திலாமணியே யெங்கள் நாயனே'
புலவர் அவர்கள் மழைப் பாட்டுத் தவிர 'கியாமத்து மாலை', 'திருமண வாழ்த்து', 'கொம்புரவ்வு இல்லாத வண்ணம்', 'பாசிப்பட்டணம் வழிநடைச் சிந்து', 'செய்கு தாவூதொலி பிள்ளைத் தமிழ்' முதலிய வேறு பல நூல்களையும் யாத்து தமிழுலகிற்கு அளித்துள்ளார்கள்.
மனித மனம், பலவற்றின் மீது அன்பு வைத்திருக்கும். ஆனால் தன் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பு அலாதியானது. குறிப்பாகத் தந்தையைக் காட்டிலும் தாய் வைத்திருக்கும் அன்பு சொல்லில் அடங்காது. தன் கணவன் விடும் குறட்டையோ ஏழு வீடுகளுக்கப்பால் எதிரொலிக்கும், அவளோ ஏதும் அறியாமல் உறங்கிக்கொண்டிருப்பாள். ஆனால் தன் குழந்தை சினுங்கினால் போதும் உடனே வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்துவிடுவாள். தாய் உறங்கினாலும் தாய்மை உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கும். ஆகவே தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் கவனம் வைத்திருக்கும் அவள் குழந்தை துன்பப்படுபோது பரிதவிப்பாள், சிரிக்கும்போது பூரித்து மகிழ்வாள்.
இத்தகைய குழந்தைப் பருவத்தைச் சிறப்பித்துப் பெருமை சேர்த்துள்ள புலவர் பெருமக்கள் இறைவனையோ அல்லது சிறப்புப் பெற்ற பெரியோர்களையோ குழந்தையாகப் பாவித்துப் பாடப்படுவதே 'பிள்ளைத்தமிழ்'. இது தமிழ் இலக்கியத்தில் மட்டுமே காணப்படும் மரபு, இசுலாமியப் புலவர்களுக்கும் இது பொருந்தும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு வகையாகப் பாடப்படுகிறது. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு. பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தத்திலேயே அமையும்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் கடைசிப் பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேருக்குப் பதிலாக நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்கள் அடங்குகின்றன.
ஆன்றோர்கள் மறைந்த பின்னரும் அவர்கள் மீதிருக்கும் மரியாதை, அன்பு காரணமாகப் பாடப்படுவதுண்டு. அவ்வகையில் செய்கு தாவூதொலி பிள்ளைத் தமிழ், முத்துப்பேட்டையில் அடங்கியுள்ள ஹக்கீம் செய்கு தாவுது வலியுல்லாஹ் அவர்கள் மீது பாடப்பட்டதாகும்.
குழந்தையின் பருவங்களில் நடை பருவம் முக்கியமானது. குழந்தை எழுந்து தன் பிஞ்சு கால்களை ஒவ்வொரு அடியாகத் தத்தித் தத்தி எடுத்து வைக்கும்போது தாய் சற்றே தூரத்தில் தன் இரு கைகளையும் நீட்டி 'வா வா' என்றழைப்பாள். இதனை 'வருகை'ப் பருவம் அல்லது 'வாரானைப் பருவம்' என்று குறிப்பிடுகிறார்கள். இதோ நம் புலவரின் கற்பனை வளத்தைப் பார்ப்போம்..
'செம்பொற் கலசத் திருவருக
தெவிட்டா வமுதத் தேன்வருக
சித்தாந் தவர்கட் குயிர்வருக
தீண்டா மணிச்செஞ் சுடர்வருக
அம்பொற் கிரண மலைவருக
அலையா தாசைக் கடல்வருக
அறிவோ ரிருகண் மணிவருக
அவுலி யாக்கள் இனம்வருக
நம்புற் றவர்க்கன் பருள்வருக
நாவல் லவர்கள் நாவருக
நலஞ்சே ரறிவின் நிலைவருக
நன்றே விளைக்கும் பொருள்வருக
உம்பர்க் கலைமா மதிவருக
வோங்குந் தவத்துள் ளகம்வருக
ஒளிசேர் செய்கு தாவுதெனும்
ஒலியே வருக வருகவே!'
நன்றி:
1. இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு - அதிரை தாஹா
2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்
3. செய்கு தாவுதொலி பிள்ளைத் தமிழ்
4. புலவர் அ. பஷீர் அஹமது அவர்களின் முன்னுரை
No comments:
Post a Comment