Thursday, October 22, 2009

அண்ணாவியார் புலவர்கள் - 2

அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார்(முதலாம் செய்யது முஹம்மது)


கி.பி. 1700 ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னகக் கடலோர நகரமாம் கீழக்கரையில் (ஒரு சிலர் தமிழ்ச்சங்கம் கண்ட மதுரை என்றும் கூறுகின்றனர்) பிறந்த பாலகர் இளம் வயதில் தாய், தந்தையரை இழந்து செய்வதறியாமல் விழித்துக்கொண்டிருந்த நிலை; ஆதரவளிப்பார் யாருமில்லை; உற்றமும் சுற்றமும் கண்டுக்கொள்ளாத நிலை; துயரங்கள் தொடர்ந்தன; எதிலும் பிடிப்பு ஏற்படாத பற்றற்ற நிலை; ஆனால் மனம் மட்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தது. அது என்ன என்று புரியவில்லை, எங்கு கிடைக்கும் என்றும் தெரியவில்லை. 'புல்லாங்குழலை கவனி, அது என்ன சொல்கிறது என்று கேள்' என்ற மௌலானா ரூமியின் கவிதை மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. (புல்லாங்குழல்=மனம்;உள்ளறிவு)

ஆதரவற்ற வாழ்வுக்கும் அறிவின் தேட்டத்துக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம். சுற்றத்தை மறந்தார் , பிறந்த ஊரைத் துறந்தார், பல ஊர்களை சுற்றியலையலானார், தேடியது எதுவோ அது கிடைக்கவில்லை. கிடைக்கும்வரை தேடலானார். சுற்றித்திரிந்த அவர் , பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரை அடைந்தார். இங்கு நீ தேடியது கிடைக்கும் என்று உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ அங்கு புனிதமிகு குர்ஆனையும் இசுலாமிய சட்டங்களையும் ஐயம்திரிபரக் கற்றார். மார்க்கக் கல்வி கற்பது என்பது ஒவ்வொரு இசுலாமியனுக்கும் கடமை எனப் புரிந்தாரே தவிர தன் தேட்டம் நிறைவை அடையவில்லை என்பதனை உணர்ந்தார்.

அக்காலை மதுக்கூருக்கு அருகேயுள்ள மூத்தாக்குறிச்சி என்ற சிற்றூரில் வாழ்ந்த வாணியச்செட்டியார் என்ற தமிழ் மூதறிஞர் இருந்தார். அவரிடம் தம் தாய்மொழியான செந்தமிழை இலக்கண இலக்கியத்துடன் மட்டுமல்லாது யாப்பும் கற்று தேறினார். அவரது தமிழறிவு யமகம், திரிபு, அந்தாதி, மாலைமாற்று முதலான அரிய பாடல்களை விரைந்து பாடும் ஆற்றலைக்கொடுத்தது.

ஒருபக்கம் மார்க்க அறிவு மறுபக்கம் தமிழறிவு மனநிறைவைத் தரவில்லை. மௌலானா ரூமியின் அந்த வரி மட்டும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. தன்னை மறந்தார், தன் கோலத்தை மறந்தார். உலக வாழ்வில மனம் ஒப்பவில்லை, நீண்ட தலைமுடி , பெரியதாடி துறவிகோலம் பூண்டு மதுக்கூர் விட்டகன்று கடலாடும் நாகூர் வாழும் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அருள்வேண்டி பயணமானார். அங்கு , தமிழ் பயிற்றுவிக்கும் ஆசானாக மாறி கஸ்தூரி கமழ் மணக்கும் ஜவ்வாது புலவர் போன்ற மாணிக்கங்களை உருவாக்கிய காலத்தில் , ஷெய்கு வஹாபுதீன் என்ற ஞானச்சுடரின் நட்பு கிடைத்தது.

சடைமுடி தறித்து நின்ற அண்ணாவியாரின் கோலங்கண்ட ஷெய்கு, இசுலாத்தில் துறவறம் வெறுக்கப்பட்டது என அறிவுரைக் கூறி சடையை கலையச்செய்து பொன்னிறமேனிகொண்ட அண்ணாவியாரை கூர்ந்து பார்த்தார்கள். உள்ளத்தை நோட்டம்விட்டர்கள் அங்கு ஆத்மீகத்தின் பொறி ஒன்று மின்னிக்கொண்டிருந்தது. 'இறைவனது பேரொளி ஒவ்வொரு உள்ளத்திலும் பிரதிபலிக்க விரும்புகிறது, ஆனால் துருப்பிடித்த இதயங்கள் அவ்வொளியை ஏற்க மறுக்கின்றன. தூய்மையான உள்ளமோ அப்பேரொளியை உள்வாங்கி பல உள்ளங்களை வெளிச்சமடையச் செய்கிறது' என்ற கருத்தைப் புரிந்த ஷெய்கு வஹாபுதீன் அவர்கள் அந்த நிமிடமே சீடராக ஏற்றுக்கொண்டார்கள். அண்ணாவியாரின் அறிவுக்கூர்மையைக் கண்ட அவர்கள் மெய்ஞான அறிவான 'மஃரிஃபா'வைப் புகட்டி தீட்சையளித்தார்கள். அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த புல்லாங்குழல் தன் இசையை நிறுத்தவும் புல்புல் பறவை சிறகடிக்கவும் கண்ட அண்ணாவியார்,
'உளந்தெளிந்துணர்ந்த வகாபுதீன் சாகிப்
உயர்பதம் சிரசினில் அணிந்தே' - என்று ஞானாசிரியருக்குத் தன் நன்றியைக் காணிக்கையாக்கினார்.

நாகூர்பதியில் ஞானதீட்சைப் பெற்றபின் அறிவுக்கு யாரும் சொந்தம் கொண்டாடமுடியாதே என்றுணர்ந்தார். தம் குருநாதரின் சொந்த ஊரான வழுத்தூருக்கருகிலுள்ள அய்யம்பேட்டை வந்தடைந்து ஆங்கு ஓர் பள்ளிகூடம் நிறுவி அதில் தானே ஆசானாக இருந்து தமிழறிவுமட்டுமல்லாமல் ஆன்மீக அறிவையும் போதித்து அறியாமையை நீக்கிவந்தகாலை....

'அபாத்து, அத்ரமீ' என்ற பெயரால் அதிராம்பட்டினத்தை அரபியர்கள் அழைத்தனர். 'மதுரைச் சரகத்தின் மாநகரம் செல்லி' என்று சுட்டுகிறார் நேர்வழிப் பிரகாசத்தின் ஆசிரியர். 'செல்லிநகர் தனில்வாழுஞ் சீவரத்ன கவிராஜன் செப்பு கின்ற' என்று காதிர் முஹையிதீன் அண்ணாவியாரும், அதிராம்பட்டினத்தை 'செல்லிநகர்' என்று அழைக்கப்பட்டதாக முனைவர் ஏ. என். பெருமாளும் குறிப்பிடுகிறார்கள். மதுரையின் ஆளுகைக்குட்பட்டிருந்த செல்லி நகரத்தை அதிவீர ராமபாண்டியன் கைப்பற்றி ஆட்சி புரிந்ததால் அதிவீர ராமப்பட்டினம் என்று அழைக்கப்பட்டு , மருவி , இப்போது அதிராம்பட்டினம் என்று அழைக்கபடுகிறது. அக்காலை ஈங்கு வசித்த மக்கள் அறிவு தாகம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் போதனை செய்வதற்கு உகந்த ஆசான் இல்லாததால் நல்லாசிரியனைத் தேடினர். அதுகாலை அய்யம்பேட்டையில் கல்விப் பேரமுதம் அளிக்கும் அண்ணாவியாரைப் பற்றிய செய்தி அறிந்தனர்.

அக்காலை வாழ்ந்த பெரும் வணிகரும், செல்வரும் வள்ளலுமாகிய இலப்பைத் தம்பி மரைக்காயர் அவர்களின் பெருமுயற்சியால் அண்ணாவியாரை அதிராம்பட்டினத்திற்கு அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர். மக்களின் அறிவு தாகத்தைக் கண்டு முதல் பள்ளிகூடம் நிறுவியதாக ஒரு செய்தி உண்டு. அங்கேயே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியதால் இல்வாழ்க்கையை அங்கேயே தொடங்கியிருக்கவேண்டும் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது. அண்ணாவியார் என்ற ஈழத்தமிழுக்கு ஆசிரியர், குரு, தற்காப்புக் கலை பயிற்றுகொடுக்கும் ஆசான் என்ற பொருள்கள் உள்ளன (கிரியாவின் தமிழ் அகராதி). உபாத்தியாயர், தலைவன், புலவன். தமையன் என்று சென்னைப் பல்கலைக் கழக லெக்சிகன் அகராதி கூறுகிறது. அங்கு வாழ்ந்த மக்கள் இலங்கையுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்ததால் அப்பெயரால் அவர்களை அம்மக்கள் அழைத்து பெருமைப் படுத்தியிருக்கலாம். நாளடைவில் அதுவே அவர்களுக்கு பெயராக வந்திருக்கலாம்.

தம்மை அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்துதந்த அதிரை மக்களுக்கு அறிவுச் செல்வத்தை குறைவில்லாமல் வாரி வாரி வழங்கினார்கள். தமிழறிவை மட்டும் போதிக்கவில்லை தகுதி உள்ளவர்களுக்கு இர்ஃபானுடைய ஞானத்தையும் போதனை மட்டும் செய்யவில்லை அதில் முதிர்ச்சியும் பெற்றுவந்தார்கள்.

'எதுவுமே இல்லை என்று நீ எதை சொல்கிறாயோ அதில் எல்லாமே இருக்கிறது, எல்லாம் இருக்கிறது என்று நீ எதை காண்பிக்கிறாயோ அதில் எதுவுமே நிரந்திரமில்லை'. இதை உணர்ந்தவர்கள்தான் சூஃபியாக்கள் என்ற ஞானிகள். அவர்களின் பயிற்சிப் பாதையில் 'கறாமத்' அல்லது சித்து என்ற அற்புதங்கள் நிகழும். அதனைத் துறப்பவர்களால்தான் 'விலாயத்' என்ற நிலையை அடைந்து இறைவனுடைய 'லிகா' வை தரிசிக்கமுடியும்.

அச்சமயத்தில் கதிர்வேல் உபாத்தியாயர் என்ற தமிழறிஞர் வாழ்ந்து வந்தார். அவர் மாந்திரீகக்கலையிலும் சிறந்து விளங்கியவர். 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்ற அவ்வை மொழிக்கேற்ப அண்ணாவியாரின் தமிழறிவைக் கேள்வியுற்று நட்பு பாராட்ட வந்தார். இரண்டு ஒருமித்த கருத்துடைய மனங்களிலிருந்து வெளிப்படும் எண்ணம் நட்பாக பரிணமிக்கும். அந்த நட்பு ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு இவைகளைக் கடந்து நிற்கும். அப்படிதான் அவ்விருவருடைய நட்பும் இருந்தது.

கதிர்வேல் உபாத்தியாயருக்கு ஆசை ஒன்று இருந்தது, பழனி மலை செல்ல வேண்டும் அங்கு முருகபெருமானுக்கு காவடி எடுக்கவேண்டும், இது நீண்ட நாள் ஆசை. அதை நிறைவேற்ற காலம் கனிந்துவந்தது. எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின் தம் ந்ண்பரைக் கண்டு ஆசி பெற நினைத்தார் பயணத்திற்கு ஓரிரு நாள் முன்பாகவே காணவந்தார். வந்தவரை வரவேற்ற அண்ணாவியார் சிறிது நேரம் அளவளாவினர். பின்பு மெதுவாக தன் அவாவை வெளிப்படுத்தினார் உபாத்தியாயர்.

இப்போதுள்ளதுபோல் அக்காலத்தில் வாகன வசதி கிடையாது பெரும்பாலும் கால்நடையாகவே செல்லவேண்டும். வழியில் கள்வர் பயம்வேறு, பல இன்னல்களை அனுபவிக்கவேண்டும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு 'நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்ற வள்ளுவனின் சொல்லை மெய்ப்படுத்தி, தாங்கள் அங்குதான் செல்லவேண்டுமோ , இங்கு தரிசிக்கக்கூடாதோ என்று கேட்டதற்கு இல்லை அங்கு செல்வதாக உறுதியான முடிவெடுத்து விட்டேன் என்று உபாத்தியாயர் கூறினார்.

'அப்படியானால் முருகபெருமான் இங்கே தரிசனம் தந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறிவிடுமல்லவா?'

'அதெப்படி சாத்தியம்?'

'சாத்தியமில்லாததை நான் சொல்லமாட்டேன். ஆகவே இடத்தையும் காலத்தையும் குறிப்பிடுங்கள் அங்கு வேலவன் வருவான்.'
காலம் குறிக்கப்பட்டது தெரிவு செய்யப்பட்ட இடமாகிய செழியன் குளத்தருகே பூப்பந்தல் அமைக்கப்பட்டது. செய்தியறிந்த மக்கள் அங்கே திரண்டனர். கதிர்வேல் உபாத்தியாயரும் வந்தார் அண்ணாவியாரும் வந்தார். தம் கையில் கொண்டுவந்த பதினான்கு பாடல்களடங்கிய ஓலைச்சுவடியைக் கொடுத்து பாடும் நண்பரே என்றார் அண்ணாவியார்.

'சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்' என்ற பெயர்தாங்கிய அந்த ஓலைச்சுவடியைப் பெற்ற உபாத்தியாயர் தம் கம்பீரக் குரலில் பக்திப்பரவசத்துடன் உளம் உருகி...

"பூவடியினில்லாதி சேஷசயனன் போற்ற
மாவடி வேலாலெறிந்த மாபழனி வேலவற்கே .... என்று தொடங்கி பதினான்காம் பாடலாகிய

'ஐயனார் கௌரிபயிரவி யாணையேவா
அஷ்ட பாலகராணை யதிசீக்கிரமேவா
மெய்யின் வயிரவனனு மன்மே லாணையேவா
வீரபத்திர னாணை விரைவாகவேவா
கையேந்தினே னாணை கடுகவேவா
கந்த சுவாமிமே லாணையேவா
ஐயுற்ற மேருமே லாணையேவா
அரனாணை ஹரியாணை யதிசீக்கிரமேவா'

என்று இறுதியடியைப் பாடி முடிக்கவும் சுப்ரமணியர் தம்நாயகியருடன் பூரண அலங்காரமாய் காட்சியளித்தார். கந்தனைக் கண்ணாரக் கண்ட கதிர்வேலர் முதல் கூடியிருந்த மக்கள் அனைவரும் களிக்கூத்தாடினர்.'இங்குள்ள நமதண்பர் செய்யது முஹம்மது அண்ணாவியரது அன்புரிமையை யாவரும் காண்க' என்று கூறி பழனிக்குரிய எழிலர் மறைந்தார்.
இன்நிகழ்ச்சியை 'மகாபாரத அம்மானை' என்ற நூலின் பதிப்புரையில் அட்டாவதானம் ராமசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

இவர்கள் பத்து புராணங்கள் வரை யாத்தளித்துள்ளதாக 'மகாபாரத அம்மானை' என்ற நூலில் தன்னைப் பற்றி கூறும் பாடலில் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் நூர் நாமா, அலி நாமா, சந்தாதி அசுவமகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதல்லாமல் குமார காவியம், நாவான் சாத்திரம், மனையலங்கார சாத்திரம், சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம் முதலிய நூல்களும் உள்ளன.

ஹிஜ்ரி 1167 ( கி.பி. 1753) ம் ஆண்டு சந்தங்களாலும் உவமைகளாலும் சிறப்புற்று விளங்குமாறு 'அலி நாமா'வை இயற்றி அரங்கேற்றம் செய்தார்கள். இது நான்காம் கலிஃபா ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களைப் பற்றியது. ஏழை ஒருவரின் கடனைத் தீர்க்கவேண்டி ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அடிமையாகத் தன்னை ஓர் அரசனிடம் விற்று கடனைத் தீர்க்கிறார். தம் முயற்சியாலும், திறமையாலும் அவ்வரசனின் படையில் சேர்ந்து பல போர்களில் தீரத்துடன் போரிட்டு வெற்றி வீரராகத் திகழ்கிறார். மன்னரின் எதிரிகளை முறியடித்து வெற்றிவாகை சூடுகிறார். மன்னரின் நன்மதிப்பைப் பெற்ற அலி(ரலி) அவர்கள் மக்களின் நன்மதிப்பையும் பெற்றதால் அரசனுக்குப் பிறகு அரச பொறுப்பை ஏற்று நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி புரிந்தார். இதனை செந்தமிழில் வடித்த அண்ணாவியார் போர்க்களக் காட்சிகளை போர் நடப்பதுபோலவே நம் கண்முன் கொண்டுவருகிறார்கள்.

எதிர்தோடிவரும் இரண்டு சுறாமீன்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது போன்றும்; விரைந்து பின்வாங்கி முன்னேறி மோதிக்கொள்ளும் செம்மறிக்கடா போன்றும்; தேரில் இவர்ந்து வரும் மன்னர்கள் வில்லை இழுத்து விடுகின்ற அம்புகள் இரத்தினம் அழுந்திய கொடிகள், குடைகள், வண்டிகள் முதலியவற்றையும் சிறுநொடியில் பொடி செய்தன. இதோ பாவலர் பாவில்...

'இரதம் உற்றுறு புரவலர் முனையொடும்
எதிர்கு தித்திடும் கயலொடு கயலடி கொளல் போலும்
விரைவில் உற்றிடு தகரொடு தகருகள்
வினைமிகுத்துர மொடும் எதிர் பொருதிடு வதுபோலும்
வரித னுக்கொடு சுடுகணை சொரிதலின்
மணிஅ ழுத்திய கொடி குடைசகடுகள் விடுதோடு
புரவி மற்றவும் ஒருநொடி யளவுபல்
பொடிய டுத்தின எவர்களும் இவைசொல அரிதாமே'

இதே நூலில் ஒரு பாட்டில் தம் பாட்டனர் பெயர் நூருதீன் லெப்பை என்றும் தந்தை பெயர் செய்கு மீரான் என்றும் தனது சொந்த ஊர் தென் மதுரை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

நல்லாப்பிள்ளை வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்து, பாரதக் கதையில் போருக்குப் பின்னர் தர்மன் நடத்துகின்ற அசுவமேத யாகப் பகுதியை 'சாந்தாதி அசுவமகம்' என்னும் பெயரில் சையது முகம்மது அண்ணாவியார் என்ற இஸ்லாமியப் புலவர் 4,103 பாடல்களில் பாடியுள்ளார். சிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றில் வரும் பாடல்களுக்கு இணையாக இப்புலவரின் இப்பாடல்கள் மிகச் சிறப்பாக உள்ளன. பாரத அம்மானை என்னும் பெயரில் இசைப்பாடல் வடிவில் இவர் எழுதியுள்ள பாரதக் கதையை இவர் வாழ்ந்த ஊராகிய அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்றும் நினைவில் இருத்திப் பாடிவருகின்றனர் எனக் கவிஞர் கா.மு. ஷெரீப் கூறுகின்றார் என்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் குறிப்பு உள்ளது என்று 'காலச்சுவடு' என்ற பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இவர்கள் உ.வே.சாமிநாதய்யருக்கு முற்பட்டவராகவும் 1750 ம் ஆண்டு வாக்கில் அதிராம்பட்டினம் மேலத்தெருவில் வாழ்ந்ததாகவும் குருச்சேத்ரப் போரில் கவுரவர்களைப் பாண்டவர்கள் வாகை சூடியபின் பாண்டவர்களின் மூத்தவரான தருமர் நாட்டின் அமைதிக்கு வேண்டி யாகம் செய்கிறார் இந்த கருப்பொருளை மையமாக வைத்து "சாந்தாதி அசுவமகம்" என்ற காப்பியம் அமிர்தகவி அண்ணாவியாரால் எழுதப்பட்டுள்ளது. இன்றுபோல் அன்று காகிதம் அவ்வளவாக கிடைக்காத காலமாதாலால் ஒலைச் சுவடிகளிலேயே தம் பாக்கள் அனைத்தையும் இயற்றியுள்ளார் என்று 'பெருங்குத்தூசி' என்பவர் குறிப்பிடுகிறார். இது உலக வெற்றி முரசு என்ற வாரப்பத்திரிக்கையில் 2006 ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி இதழில் வந்துள்ளது.

தகவல்கள்:

1. அண்ணாவியார் குலப் புலவர்கள் - அதிரை தாஹா
2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்

No comments: