Friday, October 30, 2009

அண்ணாவியார் புலவர்கள் - 5

நவரத்தினகவி
காதிர் முஹையிதீன் அண்ணாவியார்

பதினோறாம் நூற்றாண்டில் இசுலாம் நலிந்து வந்துக்கொண்டிருந்த சமயம், ஈரானியப் பகுதியான தெற்கு காஸ்பியன் கடற்கரை நகரமான ஜிலான் என்ற நகரில் ஹிஜிரி 470(கி.பி.1077) பிறந்து இசுலாத்திற்கு ஒளிவிளக்காய் திகழ்ந்த கௌதுல் அஃலம் என்ற சிறப்பைப் பெற்ற ஹஜ்ரத் முஹையிதீன் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்களின் பெயரைத் தாங்கிய நவரத்தின கவியவர்கள் முதலாம் அண்ணாவியரான அமுத மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியாரின் இரண்டாம் புதல்வர் நூர் முகம்மது அண்ணாவியாரின் புதல்வர் ஆவார்.

பெயருக்கு ஏற்றார்போல் ஒழுக்க சீலராக, மார்க்கப் பற்றுள்ளவராக இருந்தார் மட்டுமல்ல மார்க்க சட்டங்களை கசடறக் கற்றவராகவும் விளங்கினார். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கிணங்க தாம் கற்றவற்றை மற்றோரும் பெற்றுக் கொள்ளவேண்டும் என விருப்பம் கொண்டார். மக்களின் நல்வாழ்வுக்கு இசுலாத்தின் சட்டத்திட்டங்கள் அடங்கிய
'ஃபிக்ஹு' என்ற நூலை எளிய தமிழில் யாத்து 'ஃபிக்ஹு மாலை' என்ற திருப்பெயர் சூட்டி இசுலாமிய உலகிற்களித்தார்.

இன்று ஒரு சட்டத்தை அமுல் படுத்திவிட்டு ஓராண்டுக்குள் பல இடைச் செருகல்களும் திருத்தங்களும் செய்யப்படும் பொதுச் சட்டமல்ல மார்க்க சட்டம். அது திருத்தப்படாதது, திருத்தமுடியாதது. மக்களிடம் சென்றடையும் அந்நூலில் சற்றும் தவறு வந்துவிடக்கூடாது, அப்படி வந்துவிட்டால் நாளை இறைவனுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்ற அச்ச உணர்வு பெற்றவர்களாக, அப்போது அதிராம்பட்டினத்தில் மார்க்க மேதைகளாக விளங்கிய அல்ஹாஜ் முகம்மது அபுபக்கர் ஆலிம் சாகிபு, அல்ஹாஜ் கோஜ் முகம்மது ஆலிம் சாகிபு ஆகிய இரு அறிஞர்கள் துணையுடன் கவியவர்கள் ஹிஜ்ரி 1280 ரபியுல் அவ்வல் பிறை 12 (28-8-1863) வெள்ளிக்கிழமை 'ஃபிக்ஹு மாலை' எழுதத் தொடங்கி சிறப்புற முடித்தார்கள்.

இரண்டு மார்க்க அறிஞர்கள் துணையுடன் ஃபிக்ஹு மாலையை எழுதி முடித்துவிட்டார்கள்; அது சரியாக இருக்கிறதா , இல்லை தம்மை அறியாமலே ஏதாவது தவறு நிகழ்ந்து விட்டதா என்று ஆராய்ந்துப் பார்க்கவேண்டும். எனவே அக்காலை அங்கு வாழ்ந்த இமாம், முகம்மது அப்துல் காதிர் ஹாஜி ஆலிம் சாகிப் என்ற மார்க்க அறிஞர் அரபு மொழியில் எழுத்திலக்கணம்(சறுபு), சொல் இலக்கணம்(நஹ்வு), யாப்பிலக்கணம்(அறுலு), அணியிலக்கணம்(பதீரு), எதுகை மோனை உணர்த்தும்(கவாபி), பொருள் இலக்கணம்(மஆனி), உரையிலக்கணம்(பயானி), தருக்க சாத்திரம்(மன்திக்கு) முதலானவற்றை ஐயம் திரிபறக் கற்று சிறந்த அறிஞராக விளங்கினார். அரபியில் மட்டுமல்லாமல் தமிழிலும் பாண்டித்தியமுள்ளவராகத் திகழ்ந்தார். இத்தகைய அறிஞரிடம் அந்நூல் சரிபார்க்கப்பட்டது; நற்றமிழ் நாவலர், மதுரை தமிழ் சங்கப் புலவர், ஆஸ்தான கவி நாகூர் குலாம் காதிர் நாவலர் உரை எழுதினார்கள். கல்வியின் காதலர், காதிர் முஹைதீன் கல்லூரி நிறுவனர், புரவலர் அல்ஹாஜ் காதிர் முஹையிதீன் மரைக்காயர் நிதி உதவியுடன் கி.பி.1900 ம் ஆண்டு அதிராம்பட்டினத்தில் 'ஃபிக்ஹு மாலை' அரங்கேற்றம் செய்யப்பட்டது.

சிறப்பு மிக்கப் பேரறிஞர்கள், மார்க்க மேதைகள், தமிழ் வல்லுனர்கள் கண்காணிப்பில் வெளிவந்த சட்டநூலான 'ஃபிக்ஹு மாலை' பாமரமக்கள் முதல் படித்த மேதைகள் வரை அனைவரது கைகளிலும் தவழவேண்டிய நூல் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.

புகழ்மிக்க இந்நூலில் இசுலாத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவம்(தவ்ஹீது) பற்றியும் இறை நம்பிக்கை(ஈமான்) பற்றியும் விளக்கிக் கூறி, 'முஸ்லிம்கள் எல்லோரும் முக்தி பெறும் பொருட்டே இஸ்லாத்தின் இயல் கூறுவேன்' என்று பக்தியூட்டும் அண்ணாவியாரின் சிந்தனை, சமுதாய நன்மைக்கு எந்த அளவுக்கு தம்மை அர்ப்பணித்திருக்கிறார் என்று வெள்ளிடை மலையாகக் காட்டுகிறது!

இஸ்லாத்தின் ஐந்து தூண்களாக விளங்கும் கலிமாவை சொல்லும் முறை, தொழுகைக்குரிய சங்கைகளை சொல்லும் பாணி, நோன்பு வைக்கும் முறைகளையும் மாண்பினையும், ஹலால்(கொள்ளல்) , ஹராம்(தள்ளல்) செய்திகளையும், இன்னும் அன்றாட நெறிகளையும் அழகாகச் சொல்லும் கவிமன்னர் குர்ஆனில் சொல்லப்பட்ட இருபத்தைந்து நபிமார்களின் திருப்பெயர்களை ஒரே பாட்டில் மிக அற்புதமாக அமைத்திருக்கிறார்.

'ஆதம் இதிரீசு நூஹுமூசா

ஐயூபு ஹாரூன் அல்எஸவு

ஹூது இபுறாகீம் லூத்து

எஹ்கூபு தாவூது சுலைமானபி

ஓதுமிசுமாயீல் துல்கி புலி

யூனூசெ ஹியா சுஐபுஈசா

சாதுறும் ஸாலிஹ் இஸ்ஹாக்இல்யாஸ்

ஜக்கரியா யூசுப் முஹம்மதாமே!'


சட்டத்தை யார் உருவாக்குகிறார்களோ, யார் பாதுகாக்கிறார்களோ அது அரசாக இருந்தாலும் சரி அல்லது அமைப்பாக இருந்தாலும் சரி, அதன்படி நடக்கிறார்களா என்ற ஒரு கேள்வியை வைத்தால், இல்லை என்ற பதில்தான் விஞ்சி நிற்கும். தனி மனிதரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அண்ணாவியார் அவர்களோ ஃபிக்ஹு மாலையை உலகுக்கு மட்டும்
தந்துவிடவில்லை, தம் வாழ்விலும் பேணி மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்தார்கள். அண்ணல் எம்பெருமான் ரசூல்(சல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைத் தம் வணிகத்திலும் பின்பற்றினார்கள். 'வணிகத்தில் பொருளை விற்போர் நேர்மையுடன் விற்றோம் என்கிற திருப்தியும், வாங்குவோர் வாங்கிய பொருள் சரியான விலை கொடுத்தே வாங்கியுள்ளோம் என்ற மன நிறைவையும் பெறவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள். 'இறைவன்மீது சத்தியம் செய்துவிட்டு அதை முறிப்பது மாபெரும் பாவம் என்பதையும், அப்பாவத்தைப் போக்க எழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற இசுலாமியக் கொள்கையில் பிடிவாதமாக இருந்து வாழ்ந்துக் காட்டினார்கள்.

குன்றின் மேல் விளக்கான குணசீலர் அண்ணாவியார் அவர்களை பாவண்ணர்கள் பாராட்டி நம்மைப் பரவசப்படுத்துகிறார்கள். இங்கே....

சற்குணங்குடி கொண்ட பாதுஷாவான சாஹுல் ஹமீதரசர் ஆளும் நாகூர்பதி வித்தகர் குலாம் காதிர் நாவலர் அவர்கள்,

'குணத்தாலும் குலத்தாலும்
குறியாலும் நெறியாலும் குறைவில்லாத
பணத்தாலும் உயர் முஹம்மதப்துல்காதி
ரென்று பகரும் ஆலிம்'
- என்றும்

'சீரார் காதிர் முகய்யதீன் அண்ணாவியார் என்றும் கவி வல்லரே' - என்றும்

'இசுலாமிய சங்கைமிகு சட்டங்களை எளிய இனிய பாடல்களில் யாத்தளித்தார்' - என்றும் புகழ்கின்றார்.

'வளை புகழ் சிறந்த வித்வ சீவரத்தின கவியெனும் செய்யது முகம்மது அண்ணாவியார் செய்தவக் குலக் கொழுந்து' என்று பிச்சை இபுறாஹிம் புலவர் போற்றுகிறார்.

'வேண்டிய முறையின் விழைந்துணர் சிந்தையர்' என அசனா லெப்பை புலவர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

'சொல்லரிய வியற்றமிழ் பால் கல்யுணர்ந்து தீங்கவி நீர் சொரியும் மேகம்... கதிர் முகிய்யிதீன் என்பானே' என்று யாழ்ப்பாண மகாவித்வான் சுலைமான் லெப்பை அவர்கள் பாராட்டுகின்றார்.

இப்படி புலவர்கள் போற்றும் புலவரை நாம் எப்படி போற்றப்போகிறோம்?

நன்றி:
1. இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு - அதிரை தாஹா
2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்
3. சரமகவி

No comments: