Thursday, October 22, 2009

அண்ணாவியார் புலவர்கள் - 3

கலம்பகம் பாடிய
ஜீவரத்தினகவி செய்யது மீரா லெப்பை அண்ணாவியார்


அண்டகோடிகளைப் படைத்து அவற்றுள் உயிரனங்கள் வாழ்வதற்கான தகுதியை பூமிக்களித்து மனிதன் உள்பட எண்ணிலடங்கா உயிரினங்களைப் படைத்த இறைவன் , மனிதனை மட்டும் மிக அழகாகப் படைத்தேன் என்று கூறுகிறான். அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய பிரதிநிதி என்ற மிகப் பெரிய கௌரவத்தையும் கொடுத்தான். தன்னுடைய பொறுப்பை
வானத்திடமும் பூமியிடமும் கொடுத்தபோது அவைகள் ஏற்க மறுத்தன, ஆனால் மனிதன் மட்டும் அந்த மகத்தான பொறுப்பை, உன்னதமான அமானிதத்தை ஏற்றுக்கொண்டான். அதன் காரணத்தினாலெயே அகம்பாவம், செருக்கு, பெருமை இவனது தலைக்கேறியதால் தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாகிவிட்டான் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

இதை உணர்ந்த ஒரு சிலர் மட்டும் அடக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, எளிமை இவைகளை கடைபிடித்து தம் சொல், செயல் அனைத்தையும் இறைவணக்கமாக மாற்றிக்கொண்டார்கள். இவர்கள் தனக்கென்றில்லாமல் பிறருக்காகவும் வாழ்ந்து சமுதாய
சீர்திருத்தத்திற்குப் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள். இறைநேசர்கள் என்று சிறப்பிக்கப்படும் இவர்கள் சிறந்த வீரர்களாகாவும், தளபதிகளாகவும், மன்னர்களாகவும், மருத்துவர்களாகவும், புலவர்களாகவும், புரவலர்களாகவும் வாழ்ந்து முத்திரைப் பதித்திருப்பதை வரலாற்றில் காணமுடிகிறது. இறைவனால் நேசிக்கப்பட்ட இவர்கள் சொல்வது நடக்கும். வேறு வார்த்தையில் சொன்னால் எது நடக்குமோ அதை மட்டுமே சொல்வார்கள். எனவே அற்புதங்கள் விளையும் தோட்டமாக இருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

சாதி மதங்களைக் கடந்து சந்தமிகு பாடல்களை யாத்தளித்த செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களுக்கு இரண்டு மைந்தர்களும் மகளும் உள்ளனர். மூத்தவர் செய்யது மீரான் லெப்பை, இளையவர் நூர் முஹம்மது இவ்விருவரும் அண்ணாவியர்களே. மகளைப் பற்றிய குறிப்பு இல்லை.

புலிக்குப் பிறந்தது பூனையாகமுடியாது. 'முத்தின் கருவிலிருந்து மாணிக்கம் பிறந்தது' என பாடிய அமிர்தகவிக்கு பிறந்த மாணிக்கமான மீரான் லெப்பை அண்ணாவியாருக்கு ஞானம் பிறந்தது சுவைமிகு நிகழ்ச்சியாகும். தம் தந்தையின் ஆற்றலில் பெருமைகொண்டோ என்னவோ மீரான் லெப்பை அண்ணாவியார் எழுத்தறியாமல் படிப்பறியாமல் ஏன் பள்ளிக்கூட வாசல் பக்கம் மழைக்கூட ஒதுங்காமல் பெற்றோர் சொல் கேளாமல் சோக்காளியாக வாழ்ந்து வந்தார். ஆனால் இளையவரோ அதற்கு மாற்றமாக இருந்தார். கல்வியறிவற்ற மூத்த மைந்தன்மீது வெறுப்புற்ற தந்தை இளைய மகன் நூர்முஹம்மது மீது அன்பு செலுத்தி வந்தார்.

வருடங்கள் கடந்தன, மூப்பெய்து பிணியுற்ற அமிர்தகவி கவிபாடும் திறத்தை தம் இளையமகன் நூர் முஹம்மதுக்கு கற்று தர எண்ணி தம் இளைய மகனை அழைத்துவர ஆள் அனுப்பினார். ஆனால் மகனாரோ தம் தந்தையின் பிணி நீக்க மூலிகைத் தேடி எங்கோ சென்றுவிட்டார். சென்ற இடம் யாருக்கும் தெரியவில்லை நாட்கள் நகர்ந்தன, பிணி தன் பணியை காண்பிக்க ஆரம்பித்தது. நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்த கவியவர்கள் கலங்கினார். ஒரு பக்கம் கல்வியறிவில்லாத மூத்தமகன் இன்னொரு பக்கம் எல்லாம் அறிந்த இளையமகன் அருகிலில்லாத நிலை, செய்வதறியாமல் திகைத்தார். தாம் பெற்ற ஞானம்
யாருக்கும் பயனில்லாமல் போய்விடுமோ என்றஞ்சியவராக ஒரு முடிவுக்கு வந்தார்.

உதவாக்கரை என்றொதுக்கிய மூத்த மகன் மீரான் லெப்பையை வரவழைத்து தம்மருகே இருத்தினார். கூடியிருந்த உறவினர் சீடர்கள் அனைவரையும் புறமேற்றினார், கதவு தாழிடப்பட்டது. தனித்துவிடப்பட்ட மகன் செய்வதறியாமல் தந்தையை நோக்கினார். பெற்றோர் சொல் கேளாமல் வாழ்நாள் பூராவும் தவறு செய்துவிட்டோமே என்ற உறுத்தல் மனத்தை அரிக்க கூனிக் குறுகி நின்றார். தந்தையோ ஒரு முடிவுக்கு வந்தவராக மகனை துளைக்கும் பார்வையுடன் உற்று நோக்கினார். தந்தையின் பார்வையை எதிர்கொள்ள சக்தியற்றவராக தன்னை இழந்து தந்தையின் கட்டுக்குள் அடங்கினார். மகனை தம் அருகே
அழைத்தார். இறை நாமத்தை உச்சரித்தவண்ணம் ஒரு சில நொடி இரு கண் மூடி எல்லாம் வல்ல அல்லாஹ்வை தியானித்து தம் உமிழ்நீரை மைந்தரின் நாவில் உமிழ்ந்து விழுங்கச்செய்து நா திருத்திய அந்நொடியில் தம்பணி முடிந்த மனநிறைவுடன் இறைவனடி சேர்ந்தார். தமிழுலகம் ஒரு அண்ணாவியாரை இழந்தது.

என்ன விந்தை! தந்தை உமிழ்ந்த அமுதத்தை விழுங்கிய அந்தகனம் விவரிக்கமுடியாத எதோ ஒரு உணர்ச்சி உடம்பு முழுவதும் வியாபிப்பது போன்று உணர்ந்தார், சில நொடி தன்னிலை மறந்தார். அன்று முதல் செய்யது மீரான் லெப்பை கற்றோர் போற்றவும், கேட்டோர் வியக்கவும் நற்றமிழில் சொற்சுவை, பொருட்சுவை மிக்க ஞானப்பாடல்களைப் பொழியத் தொடங்கினார்; கவிமழையில் அனைவரையும் நனையச் செய்தார்; தந்தையையும் விஞ்சும் அளவுக்கு சீரிய தொண்டுகள் ஆற்றினார்.

அகிலத்திற்கும் அருட்கொடையாக வந்த திருநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களைப் பற்றி பாடாத புலவர்கள் இல்லை. இசுலாத்தை ஏற்று முதன் முதலில் மிஃராஜு மாலை இயற்றிய ஆலி புலவர் முதல் இப்போது வாழுகின்ற புலவர் வரை நபிகள் பிரானைப் பற்றி புகழாதவர் யாரும் இருக்கிறார்களா என்றால் இல்லை; இல்லவே இல்லை என்ற விடைதான் கிடைக்கும்.

இமாம் பூசரி(ரஹ்) அவர்கள் நோய்வாய்பட்டு மருத்துவம் கிடைக்காமல் புருதா ஷரீஃபை இயற்றியபோது 'ஃப மபுளஃகுள் இல்மி ஃபி அன்னஹு பஷருன்...' என்ற அடிக்குப் பிறகு அடுத்த அடி வராமல் சிந்தனையிலேயே உறங்கிவிட்டர்கள். நபிகள் கோமான் கனவில் தோன்றி 'வ அன்னஹு ஃகைர ஃகல்கில்லாஹி குல்லிஹிமி' என்று எடுத்தோதி இமாமவர்கள் மீது போர்வை ஒன்று போர்த்தி நோய் தீர்த்ததாக வரலாற்றுச் செய்தி உண்டு.

ஆலிம்கவிஞர் சிராஜ் பாக்கவி அவர்கள் தாம் எழுதிய 'நெஞ்சில் நிறைந்த நபிமணி' என்ற கவிதைத் தொகுப்பை கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் துணையுடன் எம்பெருமானார் அவர்களின் 'ரவ்ளா ஷரீஃப்' முன்அமர்ந்து அரங்கேற்றம் செய்தார்கள்.

ஹிஜ்ரி 1177- ல் (கி.பி.1764) மறைந்த காசிம் புலவர் திருவடிக் கவிராயர் என்பாரிடம் தமிழ் கற்றுப் பெரும் புலமை பெற்று இசைஞானம் மிகுந்தவராகவும் இருந்தார். ஒருசமயம் இவர் ஆசிரியர் திருவடிக் கவிராயர், அருணகிரியாரின் ‘திருப்புகழ்’ நூலை பெரிதும் பாராட்டினார். இதற்கு இணையான வேறொரு திருப்புகழைப் பாட இனி எவராலும் இயலாது எனக் கூறினார். இதைகேட்ட காசிம் புலவர் 'என்னால் பாட முடியும்' என்றார். அவ்வாறாயின் “பாடிக் காட்டு” எனப் பணித்தார் ஆசிரியர் திருவடிக் கவிராயர்.

'பகருமுருவிலி அருவிலி வெருவிலி' எனும் சீரை முதலாகக் கொண்டு 141 பாடல்களைப் பாடி, நூலை விரைவிலேயே நிறைவுச் செய்தார். காசிம் புலவர் ‘திருப்புகழ்’ நூலைப் படித்த ஆசிரியர் திருவடிக் கவிராயர், இவரது தமிழ் அறிவையும், செய்யுள் இயற்றும் திறனையும், இசை ஞானத்தையும் பெரிதும் போற்றினார். இவருக்கு ‘வரகவி’ எனும் பட்டத்தை அளித்துப்
பாராட்டினார்.

முஸ்தபா(சல்) அவர்களை நெஞ்சேற்றிய கவிராயரின் நெஞ்சமும் முஹப்பத்தால் நிறைந்து நின்றது. நபிகள் கோமானைப் பற்றி பாடாமலிருந்தால் தம்முடைய ஞானத்திற்கே இழுக்கு என்றுணர்ந்த அண்ணாவியார் நபிகள் பிரானை நாயகராகக் கொண்டு கவித்திறன்மிக்கோர் பாடவல்ல மதங்கு, அம்மானை, சம்பிரதம், தவம், மறம், சிந்து போன்ற பதினெட்டு உறுப்புக்கள் பொருந்துமாறு நால்வகைப் பாக்களும் பாவினங்களும் கொண்டு 'கலம்பகம்' பாடி எட்டுத் திக்கும் புகழ் பரப்பினார். அதுவே 'மதீனக் கலம்பகம்' ஆகும்.

தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான பிரபந்தவகை இலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப்பிரபந்தவகைக்கு இப்பெயர் ஏற்பட்டது.

கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.

புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா,வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம். இலக்கண நெறி பிசகாமல் சந்தம் சரியாமல் கலம்பகத்தை பாடமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜீவரத்தின கவிராயர் அவர்கள்.

மறுமை நாளில் ஆன்மாக்கள் ஒன்று திரட்டப்பட்டு மகுஷரில் மக்கள் மயங்கி நிற்கும்காலை 'யா நஃப்ஸி - என் ஆன்மாவே' என்று யாவரும் தம்மை நினைத்து நொந்து அழும்போது 'யா உம்மத்தீ - என் கூட்டத்தினரே' என்று தேடித்தவிக்கும் பெருமானாரின் பேரருளை புலவரகள் நெஞ்சம் நெகிழப் பாடுகின்றார்.

'தியங்கி யவரவர் புலம்பி அழுது அழுது
இடைந்து மகுஷரின் மயங்கு பொழுதெதிர்
சீரோங்கி இலங்கும் பரம்பரன்
நீர்தான் துணை என்று புகழ்ந்துயர்
திருவருள் கொடுபர கதிபெற மிகுதுயர்
திகழடி மைகளை யழைக்கச் சிறந்தன'

மதீனக் கலம்பகத்தில் ஒவ்வொரு பாடலும் உயிரோட்டம் உள்ளதாக அமைந்துள்ளது. சொர்க்கப்பதி திறப்பது, சுகமளிப்பது, சுடர்தருவது. உலகத்தின் ஏனைய மொழிக் கவிஞர்களும் புதுப்புது சந்தத்தில்-வண்ணத்தில், அமைப்பில் பாலை மணலில் உலவும் நபி(ஸல்) அவர்களை பாடி களித்தனர், களிப்பேற்றினர். கவிமாரி பொழியும் சீவரத்தின சிங்கம் பாடும் பாணியே தனி; முத்துப் பரல்கள் கோர்த்து வித்தை காட்டும் வித்தகர் தம் பாடலில் பல சித்துவேலைகளைப் புரிகிறார் தக்கலை வாழ் பீர்முஹம்மது அப்பா போல.

எட்டு யானைகளை ஒரு குடத்தில் அடைப்பாராம்; அண்டங்கள் ஏழினையும் ஒரே கைக்குள் அடக்க வருவாராம்; நாற்பத்திரண்டு மலைகளைப் பெயர்த்து கையிலேந்தி வருவாராம்; இரும்பை வெள்ளியாக மாற்றுவாராம்; பூனையைப் பிடித்து பானையை பிட்டுப் பிட்டு உண்ணச்செய்வாராம்; ஆர்ப்பரிக்கும் ஏழ்கடலையும் சிற்றெரும்பைக்கொண்டு பருகச்செய்வாராம்; வானில் தவழும் வெண்ணிலாவை வாளால் வெட்டுவாராம்; கைவிரலால் கதிரவனை சுற்றி எறிவாராம்; தாரகைகளைக் கோர்த்து மாலையாக ஆக்கிக்காட்டுவாராம்; இவ்வளவு சித்து வேலைகள் செய்யும் இவருக்கு ஒன்று மட்டும் முடியாதாம்! அது, காதம் கமழ் மணக்கும் கஸ்தூரி மேனியார் மிஃராஜ் நாயகர் நபிகள் நாயகம்(சல்) அவர்களை புகழ்ந்து நாளெல்லாம் பாடலாமென்றால் முடியாத காரியமாம்! இந்நிலை மருத்துவத்தில் வித்தகன் என்று சொல்லிச்சென்ற ஒருவர் நாடி அறிய முடியாமல் தவிப்பதைப் போல் இருக்கின்றதாம்! இதோ இங்கே....

'ஆனையெட்டு குடத்தினில் அடைப்பேன் ஏழு
அண்டமது கையுள் வைப்பேன்
ஆறேழு மலையைக் கையேந்தி வருவேன்
அயந்தனை வெள்ளியாகக் குவிப்பேன்
பூனைதான் பனையைப் பிட்டுப்புசித்து நான்
போகச் சொல்வேன்; எறும்பைப்
புனிதமுடன் ஏழ்கடலை உண்டிடச் செய்வனம்
புலியை வாளால் வெட்டுவேன்
தானென் விரலால் பருதியைச்சுற்றி யெறிவேன்
தகுமான வான் மீன்களை
தான்கோவை யேசெய்து மாலையில் தெரிய
வைப்பே எனன்சமர்த் திதல்லால்
ஞானபோதக மதினாநாதர் காதங் கமழும்
நானதே கத்தர் நவமே
நவிதலுக்கரிய தெனிரசூல் சரண நாளுமே
நாடி யறியாச் சித்தனே!'

இத்தகைய உவமை நயமிக்க மதீன கலம்பகமல்லாமல் மனை யலங்காரம், மகுடி நாடகம், வாள் விருத்தம், பரிவிருத்தம், யானைவிருத்தம், வாட்சாராவுத்தர் பவனி, திருமண பவனி முதலிய பல காவிய நூல்களைப் படைத்தளித்துள்ளார். இதில் வாள் விருத்தம்,பரிவிருத்தம், யானை விருத்தம் ரசூல்(சல்) அவர்கள் நடத்திய வீரப்போர் பற்றியது. மகுடி நாடகம் மந்திர தந்திர விளையாட்டைப் பற்றியது.

ஒருவர் மந்திர ஆற்றலினால் பொருட்களை கண்ணுக்குப் புலப்படாது மறைத்துவைக்க அவற்றை இன்னொருவர் தன்னுடைய மந்திர வலிமையினால் கண்டெடுப்பதை 'மகுடி' என்று அழைத்துள்ளனர். பெரும்பாலும் பாக்கு, வெற்றிலை, தேங்காய், ஆட்டுக் கடாவின் தலை, முட்டை, வாழைப்பழம், பணம் ஆகியவற்றை மறைத்துவைத்து எடுக்கச் சொல்வது வழக்கம். சில போட்டிகளில் ஒரு வாழை மரத்தையும் நட்டு வைப்பார்கள்.

மந்திரவாதிகள் இருகூறாக பிரிந்து நின்று கலந்து கொள்ளும் இப்போட்டி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெறும். மந்திரவாதிகள் காளி, துர்க்கை, அனுமான் போன்ற தேவதைகளின் துணையைக் கொண்டு பல சித்து அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறுவர். சில சமயங்களில் இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவதும் உண்டு. மந்திரம் ஒரு கலை. அதனை ஒரு இலக்கியப் பொருளாகக் கொண்டு மகுடி நாடகம் உருவாகப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினத்தில் வாணிபச் சிறப்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செய்யது மீரா லெப்பை, அபுபக்கர் மரைக்காயர் ஆகிய இருவருக்குமிடையே நடப்பதாக அமைந்துள்ளது என்று பேராசிரியர் டாக்டர் ஏ. என். பெருமாள் 'மகுடி நாடகம்' ஆய்வு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:
1. இசுலாமிய இலக்கிய மரபில் அண்ணாவியார் குலப் புலவர்கள் - அதிரை தாஹா
2. அண்ணாவியார் பேரர் தாஹா அளித்த செய்தி குறிப்புகள்
3. 'மகுடி நாடகம்' - பதிப்பாசிரியர் கவி கா. மு. ஷரீப்

No comments: