Tuesday, July 16, 2013

அருட்கொடையாளர் - 5

13-10-2011 ல் ஆபிதீன் பக்கங்களில் வெளியிட்டதின் மீள் வெளியீடு

TIPS
இஸ்லாமிய வட்டத்துக்குள் நிற்காமல் சகோதர அருட்கொடையாளர்களைப் பற்றியும், ஏன் இட்லி, தோசை, வடை கண்டுபிடித்தவர்களையும் எழுதுங்கள் என்று ஆபிதீன் தன்னுடைய ஆதங்கத்தை இல்லை ஆசையை சென்ற வரிசையில் தெரிவித்திருந்தார். என்ன செய்யிறது தமிழ் நாட்டு இட்லி வடை+சாம்பார், காலத்தைக் கடந்து நிக்கிதுண்டு மட்டும் தெரியுமே தவிர எந்த காலத்தை சேர்ந்ததுண்டு தெரியாது, சங்க காலத்துக்கு முந்தியதா இருக்கலாம்.  ஒன்னு மட்டும் தெரியும், நாம விரும்பி சாப்பிடுற புறாட்டா  மலாயாவுலெ பொறந்து நம்ம பக்கம் வாழுது; பிரியாணி, புலாவு,  குருமா, ஜாங்கிரி, ஃபிர்ணி இத்தியாதி, இத்தியாதி எல்லாம் மொகலாய வம்சம்;  சாம்பார்லெ கொஞ்சம் மட்டன் சேர்த்தா என்ன அப்டீன்னு எதோ ஒரு துலுக்கனுக்குத் தோனிய ஐடியா “தாலிச்சா” வா மாறிடுச்சு. அது, மொத நாளைவிட மறுநாள் தான் டேஸ்டா இக்கிது. அதனால்தான் ஓல்டு ஈஸ் கோல்டுன்னு சொல்றாங்களோ? ரசம் சாப்பிட்டா சீக்கிரமா செரிச்சுடுது, இது சரிப்பட்டு வராது எல்லாம் ”மஸ்தா” இருக்கணும், நம்ம ஆள் யோசிச்சான், விளைவு தேங்காப் பால் மஸ்தான சாமான். அதுலெ கொஞ்சம் மசாலாவோடு மீனை பெறட்டினால் “பாங்கான்” ; அதையே மசாலா இல்லாம லேசா சீரகம் மஞ்சள் சேர்த்து ரசம் மாதிரி காய்ச்சினால் சொறியாணம்னு சொல்லப்படும் “சொதி ஆணம்” கிடைச்சது, செம டேஸ்ட். இது சிலோன் இறக்குமதி, இப்பவும் தோப்புத்துறையில் கல்யாணாக் காச்சிகளில் ஃபேமஸ். பிரியாணி செரிக்க ஃபிர்ணி, புலவுக்கு..? சீனித்தோவை. வாழைப்பழத்தையும் தக்காளிப் பச்சடியையும் சேர்த்து  சோத்தை மசியப் பெசஞ்சு சீனித்தோவையை விட்டால் பாயாசம் மாதிரி ஆயிடும் அதுலெ ரெண்டு சொட்டு எலுமிச்சை சாறை ஊத்தி அடிச்சா.... ஏற்கனவே ஃபுல்லா ஏத்தின புலவு பஸ்பமா செரிச்சுடும்கிற ஐடியா நம்மாளுக்குத்தானே வந்துச்சு. ஆக இந்த வகையிலே நம்ம ஆளுக்கு வர்ற ஐடியாக்களை மிஞ்ச யாராலும் முடியாது. திண்டுக்கெட்டவன்... நாமத்தானே...!

 ## தண்ணீரில் சீனியைக் கரைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு காய்ச்சி ஆறிய பிறகு இரண்டு ஸ்பூன் தயிர் விடணும், லேசா கலரும்(பிரியாணிப் பவுடர்) சேர்த்தால் அது சீனித்தோவை செறிமானத்துக்கு பெஸ்ட்.##

அருட்கொடையாளர் - 5

தெரியாத அறிஞர்களில் இவரும் ஒருவர், தமிழ் இஸ்லாமிய உலகில் தமிழ் அறிஞர்களைப் பற்றி தெரிந்திருக்க முடியாத நிலையில் இவரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவரைப் பற்றி சொல்வதற்கு முன் வரலாற்றை சற்று பார்க்கவேண்டும். மகா அலெக்ஸாண்டர் தன்னுடைய ராஜ்யத்தை ரோமிலிருந்து இந்தியாவின் வடமேற்குப் பகுதியான சிந்து நதி வரை படைபலத்தால் மூலம் விரிவுபடுத்திய பின் கிரேக்க கலாச்சாரம் எல்லாப் பகுதிகளிலும் பரவிநின்றது. அலெக்ஸாண்டருக்குப் பிறகு பல படைஎடுப்புகளால் நாகரீகம் கலாச்சாரம் மாறினாலும் கிரேக்க அறிவு நிலைத்துக்கொண்டது.

ரோம ராஜ்யத்தில் கிறுஸ்துவம் பரவிய பின்னர் கிறுஸ்துவத்தை ஏற்றுக்கொண்ட கிரேக்கர்களுக்கிடையே நாளடைவில் பல கருத்து வேற்றுமைகள் தோன்றி ஒரு பிரிவினர் கிரேக்க ஞானத்துடன் கிறுஸ்துவத்தை இணைத்துக்கொண்டனர். இப்பிரிவினரே நெஸ்தோரிய கிறுஸ்துவர்கள்  ஆவர். அவர்களுடைய போதனைகள் சிரியாக் மொழியில் இருந்தன. அவர்கள் சிரியாவிலிருந்து ஈரான் வரை  பரவி இருந்தனர். கேரளாவில் இருக்கும் சிரியன் கேத்தோலிக் இப்பிரிவினரே என நம்பப்படுகிறது. ஏராளமான கிரேக்க நூல்களை சிரியாக் மொழியில் இவர்களே எழுதினர்.

அரபு பழங்குடியினரில் ஒரு பிரிவினர் கிருஸ்துவத்தில் இணைந்து இஸ்லாம் தோன்றிய பின்னரும் அல்லது அப்பகுதியில் பரவி வலுபெற்ற பின்னரும் தங்கள் நிலைபாட்டிலிருந்து மாறாமல் நெஸ்தோரிய கிருஸ்துவத்திலேயே இருந்தவர்களை ‘இபாதி’ என்றழைக்கப்பட்டனர்.

Hunayn ibn Ishaq (808-873)           
 Sheikh of the Translators

அபு ஜைத் ஹுனைன் இப்னு இஸ்ஹாக் அல் இபாதி- أبو زيد حنين بن إسحاق العبادي‎ என்ற முழுப் பெயரையுடைய இவர் லத்தீன் மொழியில் அறியப்படுவது Johannitious. சிரியா நெஸ்தோரிய கத்தோலிக் கிருஸ்துவரான இவர் கி.பி 808/809 ல் ஈராக்-ஹிராவில் பிறந்தார். அரபியும் சிரியாக் மொழியும் இலக்கண இலக்கியத்துடன் பஸராவில் கற்றார். இவரது தந்தை மருந்தாளராக(pharmacist) இருந்ததால் மருத்துவக் கல்வியை பாக்தாதில் புகழ் பெற்ற அரசு மருத்துவரான யுஹன்னா பின் மஸவாஹ்  விடம் கற்றார். மருத்துவக் கல்வி கற்கும்கால் கேள்விக்கணைகளால் தன் ஆசிரியர் யுஹன்னாவை துளைத்தெடுத்தார், மாணவரின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் திணறிய ஆசிரியர் பள்ளியிலிருந்து வெளியேற்றினார். விளைவு, தான் ஒரு சிறந்த மருத்துவராகத் திரும்ப வருகிறேன் என்ற சவாலுடன் வெளியேறியவர் எங்கு சென்றார் என இரண்டுமூன்று ஆண்டுகள் தெரியாமலிருந்தது. சிலர் அவர்  அலக்ஸாண்டிரியா சென்றதாகவும் சிலர் ரோம் சென்றதாகவும் சொல்கிறார்கள். மருத்துவத்துடன் கிரேக்க மொழியும் பயின்று சிறந்த மருத்துவராக, சிறந்த கிரேக்க மொழி வல்லுனராக  பாக்தாத் வந்து தன் ஆசிரியர் முன் நின்றார். மாணவனின் திறமையைக் கண்ட யுஹன்னா மகிழ்வுடன் அரவணைத்து பின் இருவரும் இணைந்து பல்லாண்டுகள் மருத்துவப் பணியாற்றினர்.

அறிவாலயம் (தாருல் ஹிக்மா-House of Wisdom)

அப்பாஸிய கலிஃபா மன்சூர் (714  – 775 AD)  முதல் கலிஃபா ஹாரூன் அல்-ரஷீது(769 - 809 AD)  கால கட்டம் வரை சமஸ்கிருதம், கிரேக்க மொழியிலிருந்து அனேக நூல்கள் அரபிக்கு மொழி பெயர்க்கப்பட்டன.  14 செப்டம்பர் 786 ல் ஹாரூன் அல்-ரஷீது பதவி ஏற்றபின் அனேக அறிஞர்களை ஒன்றுகூட்டி 'தாருல் ஹிக்மா' என்ற அறிவாலயத்தை நிறுவி கல்விக்கண் திறந்தார். அவரது மகன் கலிஃபா மஃமூன் அல்-ரஷீது  அதை விரிவுபடுத்தி தந்தையின் பணியைத் தொடர்ந்தார். இவருடைய காலத்தில் யுஹன்னா, கஸ்தா இப்னு லூகா, அப்துல் மஸீஹ் இப்னு நயீமா, பனு மூஸா சகோதரர்கள், அல்-குவாரிஸ்மி, தாபித் பின் குர்றா, அல்-கிந்தி  இன்னும் பலர் மொழிபெயர்ப்பு வல்லுனர்கள் இருந்தனர்.


ஹுனைன் இப்னு இஸ்ஹாக்கின் திறமையை அறிந்த கலிஃபா மாஃமூன்
அவரை அறிவாலயத்தின் பொறுப்பை ஒப்படைத்து மொழிபெயர்ப்பு துறைக்குத் தலைமை ஏற்கச் செய்தார். அச்சமயம் இஸ்லாத்திற்கு கிரேக்க மருத்துவம் மற்றும் அறிவியல் மிகவும் தேவைப்பட்டது. எனவே அவரை மொழிபெயர்ப்புப் பணியில் தீவிரப்படுத்தினார். போதிய கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்லை, எனவே அரிஸ்டாட்டில் முதல் கேலன் வரை பல கிரேக்க அறிஞர்களின் இன்னும் அதிகமான நூல்களை தேடிப்பிடித்து மொழி மாற்றம் செய்ய பைசாந்தியம்  வரை ஹுனைன் இப்னு இஸ்ஹாக்கை கலிஃபா மஃமூன் அனுப்பி வைத்தார். இருந்தாலும் கிரேக்க நூல்களைத் தேடி சிரியா, பாலஸ்தீனம், எகிப்து போன்ற நாடுகளுக்கு சென்று அவைகளைப் பெற்றிருக்கிறார்.

மொழிபெயர்ப்பு

ஹுனைனின் மொழிபெயர்ப்புப் பணி மகத்தானது. தன் வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை மொழி பெயர்த்துள்ளார்.  வெறும் தத்துவங்களோடு நின்றுவிடாமல் மருத்துவம், வானவியல், கணிதம், மாயவித்தை(Magic), அளவீடுகலை(oneiromancy) போன்றவைகளும் பைபிள் பழைய ஏற்பாட்டை-Old Testament(தவ்றாத்) கிரேக்க வடிவத்திற்கு பின் அரபியில் மொழி பெயர்த்தார். அரிஸ்டாட்டிலின் மூலதத்துவம்(Metaphysics), ப்ளாட்டோவின் Timaeus, Eucalid's Optic போன்ற குறிப்பிடத்தக்க நூல்களல்லாது  பண்டைய கிரேக்க நூல்களை சிரியாக் மற்றும் அரபியில் மொழிமாற்றம் செய்தார். குறிப்பாக கேலனின் தத்துவ நூல்களல்லாது பெரும்பாளான மருத்துவ  நூல்களை மொழிபெயர்ப்புச் செய்தார்.  மொழிபெயர்ப்புப் பணியில் தன் மகன் இஸ்ஹாக் பின் ஹுனைன் மற்றும் சகோதரர் மகன்(nephew) ஹுபைஷ் பின் அல்-ஹஸன் அல்-ஆஸம் ஆகியோரை இணைத்துக்கொண்டார். கேலனின் நூல்களில் 129 பிரிவுகள் இருந்தன, அவைகளில் இருபது மூலப் பிரதி (Greek original ) கிடைக்கவில்லை அல்லது காணவில்லை; இரண்டு நம்பத் தகுந்ததல்ல(spurious); கிடைத்த 107 ல் பதினொன்றை சிரியாக்கில் மொழிபெயர்க்கப்பட்டது 96 ஐ சிரியாக் மற்றும் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன, 93 நூல்களை ஹுனைன் தனித்து மொழி பெயர்ப்பு செய்தார். கேலனின் நூல்களை மொழிமாற்றம் செய்யும்போது ஈசா பின் யஹ்யா என்ற அறிஞரையும் அவ்விருவருடன் சேர்த்துக்கொண்டார். (129 நூல்களையும் மொழிபெயர்ப்புச் செய்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன.)

உண்மையிலேயே இக்கூட்டு முயற்சியால் செய்த மொழிபெயர்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மகன் இஸ்ஹாக் கிரேக்க நூல்களை சிரியாக் மொழியி மாற்றவும் மருமகன் ஹுபைஷி சிரியாக்கிலிருந்து அரபியில் மாற்றவும் செய்தனர். ஹுனைன் பின் இஸ்ஹாக் அவர்களின் மொழிபெயர்ப்பின்போது ஏற்படும் தவறுகளை திருத்தம் செய்தார். மொழிபெயர்ப்பு செய்யும்போது வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றம் செய்யக்கூடாது. மூலத்தின் பொருள் மாறாமல் படிப்போர்க்கு விளங்கும் வகையில் வார்த்தைகள் அமையவேண்டும் என்பது அவரின் கொள்கை, அதில் கவனமாகவும் இருந்தார். இவரது மொழி பெயர்ப்பில் எந்த தவறையும் காணமுடியாது, வார்த்தைகளின் லாவகமும் அவருடைய தனி பாணியும் மொழிபெயர்ப்பின் முறையையும் பின்னுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் பலர் பல காலம்வரை பின்பற்றினர்.  சிரியாக் மொழிபெயர்ப்பு தனது கிறுஸ்துவ நண்பர்கள், மாணவர்களுக்காகவும் அரபி மொழிபெயர்ப்பு அரபு மக்களுக்காகவும் செய்வதாகக் கூறுகிறார்.  சுருங்கச் சொன்னால் இஸ்லாமிய வைத்தியத்துக்கு அடிக்கல் நாட்டிய பெருமை இவரையே சாரும்

ஹுனைனின் நூல்கள்

கலிஃபா மஃமூனின் மகத்தான ஆதரவினால் மொழிபெயர்ப்பு பணிகளுடன் நிறுத்திக்கொள்ளவில்லை, சொந்தமாக அனேக நூல்கள் எழுதியுள்ளார். மருத்துவம், தத்துவம், புவி இயற்பியல்(geophysical), வானிலை இயல்(meterology), உயிரியல்(zoology), மொழியியல்(linguistic), மதவியல் போன்றவைகளாகும். முதல் மனிதர் ஆதம் முதல் அப்பாஸிய கலிஃபா முத்தவக்கில் வரையிலான சரித்திரம் ஒன்றையும் எழுதியுள்ளது இவரது தனிச் சிறப்பாகும். இவர் மருத்துவம் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார். மருத்துவம் பற்றி நவீன விளக்கமும் போதிக்கும் முறையும் பற்றி எழுதியுள்ளது கலப்படமற்ற மகத்தான சாதனையாகும். இவரது “அல்-மசாயில் ஃபி அல்-திப்(Intoduction to the Healing Arts)” என்ற நூல் மருத்துவர் பட்டம் பெறும் மாணவர்களை சோதனை செய்யும் ஆசிரியர்களுக்கு முக்கிய கையேடாக(principle manual) பயன் பட்டது, இது பின்னர் ஹீப்ருவிலும் லத்தீனிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ”அல் மஸ்தில்” என்ற நூல் பத்து முதல் பதிநான்காம் நூற்றாண்டுகளில் லத்தினில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய மறுமலர்ச்சி ஏற்படும்வரை மேற்கத்திய மருத்துவர்களால் மருத்துவத் தகவல் குறிப்பாகப் பயன்பட்டது. குழந்தை வலிப்பு நோய்(pediatric epilepsy), தசை மற்றும் நரம்புகளைப் பற்றி இவர் எழுதிய நரம்பியல் நூல் பேசுகிறது. அதில் சிறப்பு வாய்ந்த நூலான “அல் அஷர் மகலத் ஃபில் அய்ன்”(Ten Treatises on Ophthalmology) ஆகும். இது கண் மருத்துவ பாடநூலாக விளங்கியது மட்டுமல்ல பதினைந்தாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய உலகுக்கு மட்டுமல்லாது ஐரோப்பிய உலகிற்கும் கண் மருத்துவ வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.

இந்நூல் முழுவதும் கண்ணைப் பற்றி நுணுக்கத்துடன் விரிவாக
எழுதியுள்ளார். Anatomy of Eye, அதன் நோய், நோயின் அறிகுறி, வைத்தியமுறை இவை அனைத்தையும் விரிவாக எழுதியுள்ளது நீண்ட ஆய்வுக்குப் பின்னரே இவ்வாறு எழுதமுடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக கண் வீக்கத்துக்கு காரணம் cysts and tumer என்கிறார். பல்வேறு கருவிழிப்புண்(corneal ulcers)களுக்கும், பூவிழும் நோய்க்கும் (Catatacts) அறுவை சிகிச்சை மற்றும் மாற்று வைத்திய முறைகளையும் அந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

அக்காலத்தில் நெஸ்தோரிய தேவாலயங்களில் விவிலிய விளக்கங்கள் கேள்வி பதில் வடிவத்தில் இருந்தது போலவே இவரது மருத்துவ நூல்கள் பெரும்பாலும் கேள்வி பதில் வடிவத்தில் அமைந்திருந்தது. அது மருத்துவ மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக சொல்லப்படுகிறது. Questions on Medicine” was extremely beneficial to medical students. because it was a good guide for beginners to become familiar with the fundamental aspects of medicine in order to understand the more difficult materials.  The questions were taken from Galen’s “Art of Physic,” and the answers were based on “Summaria Alexandrinorum.” For instance, Hunayn answers what the four elements and four humors are and also explains that medicine is divided into therapy and practice. He goes on later to define health, disease, neutrality, and also natural and contranatural, which associates with the six necessary causes to live healthy.

இதன் இரு கையெழுத்துப் பிரதிகளில் ஒன்று கிரீஸ் தேவாலயத்திலிருந்து அருள்மிகு கிரிகோரி-I  அவர்களால் ரஷ்யாவின் ஜார்(Tsar) மன்னருக்கு 1911 ல் பரிசளிக்கப்பட்டு இப்போது லெனின்கிராடு நூலகத்திலும், மற்றொன்று கெய்ரோவில் தைமூர் பாஷா நூலகத்திலும் பாதுக்கப்பட்டுள்ளது. அவை இரண்டையும் M.Meyerhoff  என்பவர் "The Earliest Systematic Textbook on Ophthalmology"  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதல்லாமல் வேறு சில நூல்கள் St Sophia Istanbul ம் இருக்கின்றன.

Kitab ila Aglooqan fi Shifa al Amraz - கேலனின் மருத்துவ முறையைச் சார்ந்து இவரது விளக்கங்கள் அடங்கிய இந்நூல் அலிகார் Ibn Sina Academy of Medieval Medicine and Science  ல் இன்றும் காணக்கிடைக்கிறது. இது கேலனின் நூல்களில் தலைசிறந்ததாகும்(master piece). இரு தொகுப்புக்களைக் கொண்ட இந்நூலில் பல்வேறு காய்ச்சல்கள்(fevers), உடம்பில் ஏற்படக்கூடிய வெவ்வேறு வகையான அழற்சிகள்(different inflammatory) பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 150 க்கும் மேற்பட்ட இயற்கை மருத்துவ முறைகளை வகைப்படுத்தியுள்ளார். வழிமுறையாக செய்து வந்த ரோமானிய காலத்தின் மருத்துவ முறைகளையும்  யுனானி மருத்துவ முறைகளையும் இதன் மூலம் அறியமுடிகிறது.

அற்புத மருத்துவர்

பாக்தாதில் மருத்துவம் படிக்கச் சென்றபோது ஆசிரியர் யுஹன்னாவினால் மறுக்கப்பட்டு மற்ற மாணவர்களிடம், “அவன் மருத்துவம் படிக்க லாயக்கில்லை, அவன் தன் தந்தையுடன் மருந்துக்கடையில் வேலை செய்யவோ இல்லை நாணயம் மாற்றும்(money exchange) தொழில் செய்யவோ பொருத்தமானவன்”  என்று காரணம் காட்டி விரட்டப்பட்டானோ அவன் அலக்ஸாண்டிரியா சென்று யுனானி மருத்துவம் பயின்று ஆசிரியரையும் விஞ்சும் அளவுக்கு முன்னேறினார். இவரது வைத்தியமுறை மற்றுள்ளோரைக் காட்டிலும் வித்தியாசமானது. ஒரு கொல்லன் இரும்பைக் காய்ச்சி உருவாக்குவதுபோல் தன்னுடைய நோயாளியை வைத்தியம் செய்து குணமாக்குவார், எனவே இவருக்கு மந்திரவாதி வைத்தியர் (Wicked Physician) என்ற ஒரு பெயரும் உண்டு.

கி.பி. 833 ல் கலிஃபா மஃமூன் இறந்தபிறகு அவரது மற்றொரு சகோதரர் முஃதாசிம் பதவிக்கு வந்தார். அவருடைய காலத்தும் அறிவாலயம்(house of wisdom) சிறப்பாகவே நடைபெற்றது. கி.பி. 842 ல் முஃதாசிமின் மறைவுக்குப் பிறகு அல்-வாத்திக் பதவி ஏற்றார். இவரது காலத்தில் ஹுனைன் தனது வைத்தியத் தொழிலில் அதிக கவனம் செலுத்தினார். அரசு வைத்தியர்கள் குழுவில் இவரும் ஒருவராக இருந்தார். அப்போது ஏறக்குறைய 56 மருத்துவர்கள் இருந்தனர், மற்ற வைத்தியர்களுடனும் தத்துவவாதிகளுடனும் கலிஃபா அல்-வாத்திக் முன்னிலையில் வாதப் பிரதிவாதங்கள் செய்து தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கிபி. 847ல் கலிஃபா முத்தவக்கில் பதவிக்கு வந்தபின் கலிஃபாவுடன் ஹுனைன் மிக நெருக்கமாக இருந்தார், அரசு தலைமை மருத்துவராகவும் நியமிக்கப்பட்டார். ஒன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலும் ஒரு பீதி நிலவி வந்தது, அரசியலில் சூழ்ச்சிகளும் அரசர்களை நஞ்சு கொடுத்துக் கொல்வதும் நடைபெற்றன, எனவே அரசர்களை சுற்றி எப்போதும் வைத்தியர்கள் கூட்டம் இருந்தே வந்தது. பரிசோதனைக்குப் பிறகே அரசர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட காலமாக இருந்தது. இந்நிலையில் கலிஃபா முத்தவக்கில், தன்னுடைய எதிரிகளைக் கொல்வதற்கு நஞ்சு தயாரித்துக் கொடுத்தால் பெரும் வெகுமதிகள் தருவதாக ஹுனைனுக்கு ஆசைக் காட்டினார். ஹுனைன் தன் தார்மீகப் பொருப்பை உணர்த்தியபோது இன்னுமொரு பங்கு அதிகமாகத் தருவதாக சொன்னார். தன் நிலையில் உறுதியாக இருக்கவே மூன்று பங்கு அதிகமாக தருவதாகவும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரசரின் சொல்லை மீறியதற்காக சிறையில் அடைத்து மரண தண்டணை வழங்குவேன் என மிரட்டினார். ஆனால் ஹுனைன் எதற்கும் பயம்கொள்ளாமல் தான் இரு நிலைகளில் உறுதியாக இருப்பதாகவும் ஒன்று தனது மதம், இது நல்லது செய்யவே சொல்கிறது அது விரோதியாக இருந்தாலும் சரியே; மற்றொன்று தனது தொழில், மருத்துவம் என்பது நோயைக் குணப்படுத்தவே ஒழிய நோய் உண்டாக்க அல்ல; மரணத்திலிருந்து காப்பாற்றவே ஒழிய மரணம் ஏற்படுத்த அல்ல, என் வாழ்நாள் முழுவதும் உழைப்பது, ஆராய்வது எல்லாம் ஒரு மனிதன் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே அல்லாது உயிரைப் பறிப்பதற்காக அல்ல;  தனது எதிரிக்கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்ற உறுதிமொழி எடுத்துத்தான் நாங்கள் வைத்தியனாகிறோம் என நீண்ட விளக்கம் கொடுத்தார். இதனைக் கேட்ட கலிஃபா அவரை எதுவும் செய்யாமல், செய்யமுடியாமல், செவதறியாமல் விட்டுவிட்டார். (அவரை ஓராண்டு சிறையில் அடைத்ததாகவும் பின் விடுவித்ததாகவும் சில ஆதாரங்கள் உள்ளன. ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது அனைத்து சொத்துக்கள் முதல் நூலகம் வரை முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்கின்றனர் வேறு சிலர்.)

பண்ணிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பொருளுக்கும் பதவிக்கும் ஆசைப் படாமல், செய்யும் தொழிலுக்கு களங்கம் விளைவிக்காமல், மதங்களைக் கடந்து, மனிதம் என்ற நிலையில் நின்று கலிஃபா/அரசர் என்றுகூட பாராமல் மன உறுதியுடன் நின்ற ஹுனைன் இப்னு இஸ்ஹாக் எங்கே..? இன்று பணத்திற்காகவே..... என்ற நிலையில் இருக்கும் சில டாக்டர்கள் எங்கே...? ஹிப்பொக்ரேட்டிக் உறுதிமொழி  வெறும் சொல்லாடல்தானா...?

இறுதி காலம்

ஹுனைனுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் தாவுத் மற்றொருவர் இஸ்ஹாக். அவர்கள் இருவருமே மருத்துவர்களாக இருந்தனர், பின் தந்தை வழியில்
மொழிபெயர்ப்பும் செய்தனர். பெரும்பாலும் கிரேக்க தத்துவங்களையே செய்தனர் என்கிறார் ரோஜர் பியர்ஸ்.  ”அல் மஸாயில் ஃபில் அய்ன்” என்ற நூலை தன் இரு மகன்களுக்காக எழுதினார் என மேலும் குறிப்பிடுகிறார். ஆனால் இஸ்ஹாக் அறியப்படுவதுபோல் தாவுத் அறியப்படவில்லை. 
இவர் தனது தினசரி வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட நெறியில் அமைத்திருந்தார். தன் வேலைகள் முடிந்ததும் தினமும் குளிக்கச் செல்வார், யார் துணையுமின்றி தனக்குத்தானே அள்ளி ஊத்தி குளிப்பார், பின் இரவு உடுப்பை அணிந்து ஒரு பிஸ்கட்டுடன் ஒரு கப் ஒயின் அருந்திவிட்டு படுக்கைக்குச் செல்வார்; சில வேளைகளில் அப்படியே தூங்கிடுவார், வியர்த்தால் எழுந்து அகில் போன்றவற்றை எரித்து வாசனைப் புகை பரப்புவார், பின் குழம்பு(gravy)டன் கூடிய கொழுப்புள்ள கோழிக்குஞ்சு (pullet) கறியும் ரொட்டியும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்வார். எழுந்தவுடன் நான்கு கோப்பை ஒயினும்(old wine) விருப்பமான பழமும் சாப்பிடுவார், அதுவும் சிரியன் ஆப்பிளும் மாதுளையும் விருப்பமாக சாப்பிடுவார். இப்பழக்கம் அவருடைய மரணம் வரை நீடித்தது. 1-12- 873, செவ்வாய் அன்று தன்னுடைய 64ம் வயதில் இறையடி சேர்ந்தார்.

மொழிபெயர்ப்பு என்ற பெயரில் மதிப்பிடமுடியாத பொக்கிஷத்தை மட்டும் நம்மிடம் விட்டுச்செல்லவில்லை நெறிமுறையுள்ள பண்பையும் வாழ்க்கைத் தத்துவத்தையும் விட்டுச் சென்றுள்ளார். அப்பாஸியர் காலத்தில் ஏற்பட்ட அறிவுப் புரட்சி ஸ்பெயின், சிரியா மூலமாக மத்தியகால ஐரோப்பிய வளர்ச்சிக்கு வித்திட்டது.

Sources:

http://www.enotes.com/topic/Hunayn_ibn_Ishaq
http://en.wikipedia.org/wiki/Hunayn_ibn_Ishaq
http://www.muslimphilosophy.com/ip/bio-hi.htm
http://www.roger-pearse.com/weblog/?p=6423
http://www.webgaza.net/scientists-scholars/Ishaq.htm
http://www.ishim.net/ishimj/3/09.pdf
http://islamsci.mcgill.ca/RASI/BEA/Ishaq_ibn_Hunayn_BEA.htm
http://books.google.ae/books?pg=PA478&dq=hunain%20ibn%20ishak&ei=xJeATp2lEs3E4gS3rKHSDg&ct=result&id=a69mAAAAMAAJ&hl=en&output=text
http://www.drshukri.net/essays/?ID=53


No comments: