Saturday, July 30, 2011

ஜக்காத் எப்போது கொடுப்பது?

என் கண்ணோட்டத்தில் ஜக்காத்.

நோன்பு வருகிறது, ஜக்காத்தை எதிர்பார்த்து எத்தனை எத்தனை ஏழைகள் ஏக்கத்துடன் காத்திருப்பர், கொடுக்கும் கொடைவள்ளல்களும் எதிர்பார்ப்புடன் இருப்பர். கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் உள்ள இணைப்பை இந்த புனித ரமலான் ஏற்படுத்துகிறது. வேறு வார்த்தையில் சொன்னால் நோன்புடன் ஜக்காத்தை இணைத்துவிட்டோம். இது சரியா? இறைவன் என்ன சொல்கிறான்? என் அலசல். இது ஜூன் 25ல் ஆபிதீன் பக்கத்தில் வெளியானது, இப்போது பொருந்தும் என மீள் பதிவு செய்கிறேன். தவறு இருப்பின் சுட்டவும்.

த.மு.மு.க வுடைய அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ‘மக்கள் உரிமை’ பத்திரிக்கையில் வந்த கட்டுரை ஒன்றை எனது நண்பர் சிலாகித்து சொன்னார். அவர் த.மு.மு.க-வில் முக்கிய பொறுப்பு வகிப்பவர். அவர் சொன்ன அந்த கட்டுரை ‘தர்மம்’ பற்றியது, படித்துப் பார்த்தேன் அது கட்டுரை அல்ல. மாறாக பெருமானார் சொன்ன ஹதீஸ்களால் நிரப்பப்பட்ட ஒரு சிறிய தொகுப்பு.

இஸ்லாமியப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் அது தினசரியாக இருந்தாலும் சரி மாதப் பத்திரிக்கையாக இருந்தாலும் சரி சொல்ல வேண்டிய செய்தியை சொல்லாமல் அதை சார்ந்த ஹதீஸ்களையும் குர்ஆன் ஆயத்துக்களையும் எழுதி பக்கத்தை நிரப்பி வைக்கிறார்கள். இவை மக்களை சென்றடையும்போது வெறும் ஆயத்துக்களும் ஹதீஸ்களுமாக இருக்கின்றனவே ஒழிய அவற்றால் உண்டாகும் விளக்கம், பெறும் பயன், சமூக சீர்திருத்தம் இவைகள் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு விடுகிறார்கள். இதை செய்தால் நன்மை உண்டு, அல்லா சந்தோசப்படுவான், சொர்க்கம் கிடைக்கும். அதை செய்தால் தீமை, அதனால் அல்லாவின் சாபத்துக்கு ஆளாக நேரிடும், நாளை மறுமையில் நரகம், வேதனை என்று பயமுறுத்தல்கள் காணப்படுகின்றன. நாளை வரப்போவதைப் பற்றிய சிந்தனைச் செய்திகள் காணப்படுகிறதே தவிர இன்று ஆகவேண்டிய நடைமுறை இல்லை. நாளை மலரும் நல்லவைகளுக்கும் தீயவைகளுக்கும் இன்றைய எண்ணம், செயல்தான் காரணம் என்ற உண்மையை உணருவதில்லை.

பத்திரிக்கையில் வந்த கட்டுரையுடன் அல்லாஹ், ரசூல் தர்மத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பதை பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இது முழுமையானதல்ல, ஒரு சிறு நோட்டம். என்றாலும் பத்திரிக்கையைக் கொடுத்து இக்கட்டுரை எழுதப் பணிந்த அதிரை நண்பர் அஷ்ரஃப் அண்ணாவியாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

***

தர்மம் / ஜக்காத்

தர்மத்தின் முக்கிய நோக்கமே பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைப்பதே, ஏழைக்கும் செல்வந்தனுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கக் கூடாது; ஒரு கூட்டம் சுகபோகமாக வாழவும் வேறொரு கூட்டம் அடுத்தவேளை சோற்றுக்கு ஏங்கவும் கூடாது, குறைந்த பட்சம் யாசிக்காது வாழவேண்டும் என்பதே அதன் அடிப்படை சித்தாந்தம். இதை கருத்தில் கொண்டுதான் எல்லா மதங்களும், மதங்களற்ற சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்துகின்றன.

இந்த வகையில் இஸ்லாம் மற்ற எல்லாவற்றையும்விட சற்று மாறுபட்டு நிற்கிறது. தர்மம் என்றால் என்ன? அது எப்படி இருக்கவேண்டும்? யார் யாருக்கு கடமை ஆகிறது? எப்போது கொடுக்கவேண்டும்? எப்படி கொடுக்கவேண்டும்? இப்படி பல கோணங்களில் வரையறுத்து வைத்திருக்கிறது. இந்த வரையறை கொடுப்பவருக்கும் கொடுக்கப்படுபவருக்கும் பாதுகாப்பாகவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி: 08 இதழ்: 05 ஜூன் 17 to 23 இதழில் மூன்றாம் பக்கத்தில் ‘இறைமொழியும் தூதர் வழியும்’ என்ற பகுதியில் ‘தர்மம்’ என்ற தலைப்பில் புகாரி ஷரீஃபிலிருந்து எடுக்கப்பட்ட ஆறு ஹதீஸ்கள் இருக்கின்றன. “பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.” என தர்மத்தை வலியுறுத்தும் ஹதீஸும் அதை சார்ந்த மற்ற ஹதீஸ்களே இருக்கின்றன. ஒரு ஹதீஸுக்குக்கூட விளக்கம் இல்லை. இப்போதெல்லாம் தினசரி நாள்காட்டி தாள்களில் இறை வசனங்களும், நபி மொழிகளும் இருக்கின்றன. அரசியல், சமூக நிலை, மசோதா, இட ஒதுக்கீடு, கமிஷன் ரிப்போர்ட் என பல துறைகளை அலசுகிற அளவுக்கு பத்திரிக்கைகள் குர்ஆனையும். ஹதீஸையும் விளக்குவதில்லை.

இறைவன் ஜக்காத்தைப் பற்றி சொல்லும்போது தொழுகையோடு சேர்த்தே சொல்லுகிறான். “வ அக்கீமுஸ்ஸலாத்த வ ஆத்துஜக்காத்த…” அப்படி என்றால் எந்த அளவுக்கு தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து தினம் கடமையாக்கப்பட்டிருக்கிறதோ அதே போல் ஜக்காத்தும் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆனால் நாம் என்ன செய்கிறோம்..? ரமலான் மாதம் வந்துவிட்டால் ஜக்காத் கொடுக்கிறோம். அதாவது ஜக்காத்தை நோன்புடன் இணைத்துவிட்டோம்.

அது ஷிர்க் இது குஃப்ரு, அல்லா ரசூல் சொல்லாததை செய்து இணை வைக்கிறார்கள் என்று கத்தும் மாட(ல்)ர்ன் ஆலிம்கள்கூட இதை பற்றி சிந்திப்பதில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும் ஹதீஸை அடிப்படையாக வைத்து 40 க்கு 1 என்ற அடிப்படையில் நூத்துக்கு இரண்டரை ஜக்காத்தாக கொடுக்கவேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள்.

இது கணக்குபடி சரிதான், ஆனால் நூத்துக்கு இரண்டரை என்ற அடிப்படையில் பார்த்தால் 99 ரூபாய் வரை ஜக்காத் கடமை ஆகாது. நூறு ரூபாய் வந்தால்தான் ஜக்காத் கடமை ஆகிறது. இது முற்றிலும் தவறு. நாற்பதுக்கு ஒன்று என்ற அடிப்படையில் பார்த்தால் 39 ரூபாய் வரை ஜக்காத் கடமை ஆகாது. எப்போது நாற்பது ரூபாய் வந்துவிட்டதோ ஒரு ரூபாய் ஜக்காத் கொடுத்தாகவேண்டும். எண்பது ரூபாயானால் இரண்டு ரூபாய், பின் நூத்தி இருபதுக்கு மூன்று ரூபாய் ஆகும். நூறு ரூபாய் இருக்கும்போது ஜக்காத் கடமை ஆகாது. இதை எப்போது கொடுக்க வேண்டும்?

இறைவன், ஜக்காத்தை நோன்புடனோ அல்லது ஹஜ்ஜுடனோ சேர்த்து சொல்லாமல் தொழுகையுடன் சேர்த்து, சேர்த்து ஜக்காத்தை வலியுறுத்துகிறான். அப்படி வலியுறுத்துவதின் நோக்கமே தினமும் கொடுக்கவேண்டும் என்று தெளிவாகத் தெரிகிறது. தினம் கொடுக்க முடியாமல் போகும்பட்சத்தில் ஒரு வாரமோ பத்து நாட்களோ சேர்த்துக் கொடுக்கலாம். ஆனால் ஒரு வருடம் வரை சேர்த்து வைத்தால் அங்கு இவ்வளவா…? என்ற மலைப்பு ஏற்பட்டு நற்செயலை மனம் தடுக்கும்.

ஒரு மனிதனுக்கு உணவு, உடை , இருப்பிடம் இம்மூன்றும் அவசியம் என்றாலும் இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்துவிடலாம்; இருக்கும் உடையை உபயோகித்து நாட்களைக் கழிக்கலாம்; ஆனால் உணவு…..? எனவே அவ்வுணவைப் பெறுவதற்கான வழி வகை செய்யவேண்டும். அது பணமாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. பொருளாகவும் இருக்கலாம், உணவாகவும் இருக்கலாம். வறுமை ஒழியவேண்டும். இதை கருத்தில் கொண்டுதான் இறைவன் தொழுகையுடன் ஜக்காத்தை இணைத்திருக்கிறான் என்று தெளிவாகிறது.

முடியாதவனுக்கு நோன்பு கடமை ஆகாது, வசதியும் தெம்பும் இல்லாதவனுக்கு ஹஜ்ஜு கடமையாகாது. ஆனால் ஏழையாயிருந்தும் நாற்பதுக்குமேல் வருமானம் வந்தால் அங்கே ஜக்காத்து கடமையாகிவிடுகிறது. தொழுகை எந்த அளவுக்கு ஒருவனுக்கு முக்கியமோ அதே முக்கியம்தான் ஜக்காத்தும். நான்தான் ஏழையாயிற்றே எனக்கு ஜக்காத்து கடமை இல்லை என்று சொல்லமுடியாது. யாசிப்பையே தொழிலாக வைத்திருப்பவனுக்கும் இது பொருந்தும்.

ஒருவன் வறுமையில் இருக்கிறான் அல்லது உழைத்து சம்பாதிக்க முடியாத நிலை அல்லது ஆதரவற்ற வயோதிகம் அல்லது பிணி; கேள்விக்குறியாக இருக்கும் இத்தகையவர்களின் அன்றாட வாழ்வு; அவர்களிடம் போய் இதோ ரமலான் நெருங்கிக்கொண்டிருக்கிறது, உனக்குத்தான் தெரியுமே ரமலான் மாதம் முழுவதும் நான் வாரி வழங்குவேன் என்று சொன்னால்…?

அதற்காக ரமலானில் கொடுப்பது தவறு என்றோ அல்லது கொடுக்கக் கூடாது என்றோ பொருள் கொள்ளக்கூடாது. ரமலானில் மட்டும் கொடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. இந்த தவறை காலங்காலமாக ஒவ்வொரு நாட்டிலும் செய்துகொண்டிருப்பதால் ரமலானில் கொடுத்தால் அதிக நன்மை தரும் என்ற கருத்து ஒவ்வோர் மனதிலும் ஆழமாக வேரூன்றிவிட்டது.

“ஒரு பேரிச்சை பழத்தையேனும் தர்மம் செய்யுங்கள்” என்று பெருமானார் கூறுவது, அது வறுமையை நீக்காவிட்டாலும் பசியை தணிக்கும் என்ற நோக்கம் அங்கே காணப்படுகிறது. “அடுத்தவீட்டுக்காரன் பசித்திருக்கும்போது தான் மட்டும் உண்பவர் என்னை சேர்ந்தவர் அல்ல” என்கிறார்கள். அப்படியென்றால் நீ முஸ்லிமே அல்ல என்ற பொருள் அங்கே தொனிக்கிறது. “எந்த விருந்து ஏழைகளுக்கு பங்கு கொடுக்கவில்லையோ அந்த விருந்து நான் வெறுக்கிற விருந்து” என்கிறார்கள். விருந்தில்கூட தர்மத்தை பெருமானார் அவர்கள் நிலைநாட்டுகிறார்கள்.

எப்படிச் செய்யவேண்டும்? அதையும் அழகாகச் சொல்கிறது இஸ்லாம். ’வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது’ அந்த அளவுக்கு ரகசியமாக செய் என்கிறார்கள் பெருமானார் அவர்கள். சுருங்கச் சொன்னால் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் மட்டுமே தெரியவேண்டிய ஒன்று விழாவாக இருக்கக்கூடாது.

இஸ்லாம் சொல்லும் வழியில் தர்மம் செய்து வந்தால் ’வறுமைக்கோட்டுக்கு கீழே…’ என்ற நிலை வருவது எங்ஙனம்…?

Wednesday, July 27, 2011

ஹிஜ்ரி அல்லாஹ் வழங்கிய காலண்டரா?

ஹிஜ்ரி அல்லாஹ் வழங்கிய காலண்டரா?ஜனவரி 24, 2011 இல் 4:00 மாலை ஆபிதீன் பக்கத்தில் வந்ததை மீள் பதிவு செய்கிறேன்.


என்னுடன் வசிக்கும் நண்பர் அஷ்ரஃப் , ‘சமுதாய ஒற்றுமை’ என்ற பத்திரிக்கையைக் காண்பித்து, ”அண்ணே! நாம் எவ்வளவு தப்பு பண்றோம், அழகான அரபி காலண்டரை நாம் சரியாகப் பின்பத்துறதில்லை, இதிலெ எழுதியிருக்காங்க பாருங்க ஹிஜ்ரி காலண்டரைப் பத்தி” என்றார். சமுதாய ஒற்றுமை பத்திரிக்கை த.மு.மு.க வின் மாத இதழ் என்று எனக்குத் தெரியும். அதில் நல்ல பல கருத்துக்கள், வரலாற்று நிகழ்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாமியப் பத்திரிக்கைகளில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் நான் கொடுப்பதைல்லை. நண்பர் அஷ்ரஃப் கொடுத்த டிச 2010 இதழில் ‘வரலாற்றுப் பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர்’ என்ற கட்டுரையைப் படித்தபோது முஸ்லிம் வெறித்துவம் புகட்டப்படுவதை உணரமுடிந்தது. இதை வேறு யாரும் எழுதியிருந்தால் மன்னித்து விடலாம் ஆனால் அந்த பத்திரிக்கையின் ஆசிரியரே எழுதியிருப்பது வேதனைக்குரியது.

உலகளவில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற மாயை பல்முனைகளில் தாக்குதல் நடந்துக்கொண்டிருக்கும் சமயத்தில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இச்செய்தி அமைந்துள்ளது. கட்டுரையில் ஹிஜ்ரி, கிருத்துவம், தமிழ் காலண்டர்களை அலசிப்பார்த்து அவைகள் சரியில்லை குழப்பம் நிறைந்தது ‘அல்லாஹ் வழங்கிய சந்திரக் காலண்டர்தான் சரியானது’ என்ற கருத்தை வலியுறுத்துகிறார் இந்த ஆலிம்சா.

அல்லாஹ் வழங்கியதா இல்லையா என்று பார்ப்பதற்குமுன் சில விசயங்களைப் பார்க்கவேண்டும். 1985/86 களில் எங்க ஹஜ்ரத் ஹிஜ்ரியையும் கிரிகோரியன் காலண்டரையும் ஒன்று படுத்தி perpetual calendar ஒன்றை CASIO FX-801P Programmable Calculator ல் BASIC language ல் ப்ரோக்ராம் பண்ணிக்கொண்டிருந்தபோதுதான் உலகத்தில் எத்தனை வகையான காலண்டர்கள் இருக்கின்றன என்ற செய்தி எனக்கு தெரியவந்தது. அதில் memory போதவில்லை தவிர டிஸ்ப்ளே ஸ்கிரீன் சின்னதாக இருந்ததால் ஒவ்வொரு முறையும் பிரிண்ட் எடுக்கவேண்டியதாக இருந்தது. 1987 ல் Casio PB1000 என்ற பாக்கட் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கிச் சென்றேன். புரோகிராமிலுள்ள சில குறைபாடுகளை நீக்கி அதில் மிகவும் சரியாக வரத்தக்க ரீதியில் வடிவமைத்தார்கள். 1-1-1 தேதியிலிருந்து infinite date வரை எந்த தேதியை தட்டினாலும் சந்திரத் தேதி (ஹிஜ்ரிக்கு முந்திய தேதி உட்பட) கிடைக்கும். வேலூர் பாக்கிஹாத்து சாலிஹாத்து மதரஸாவில் ஓதிய ஒரு மௌலவி, இண்டர்நெட் போன்ற எந்த வசதியும் இல்லாத காலத்தில் வீட்டில் இருந்துக் கொண்டே இப்படி ஒரு காலண்டரை உருவாக்கியது என்னைப் பொருத்தவரை பெரும் ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் மரணத்திற்கு பிறகு எனக்கு அதில் ஆர்வம் ஏற்படவில்லை தவிர இப்போது பொத்தானைத் தட்டினால் போதும் காலண்டர் கொட்டுகிறது. அந்த அளவுக்கு பல்வேறு அமைப்புக்களின் ப்ரோக்ராம் இருக்கின்றன. ஆனால் இந்த கட்டுரையைப் படித்தபின் கை அரிக்க ஆரம்பித்தது, பழைய ஆவணங்கள் இல்லாததால் நேராக இணையத்துக்குள் மூக்கை நுழைத்து மோப்பம் பிடித்தேன். அவைகளில் கிடைத்தவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

காலண்டர் முதன் முதலில் பண்டை காலத்து மனிதர்கள் (bronze age) இரவு பகல்
மாறிவருவதை வைத்து நாட்களை வகைப் படுத்தினாலும் சந்திரனின் சுழற்சியை வைத்து மாதங்களை எலும்புகளில் குறித்து வந்தார்கள் என்று அறியமுடிகிறது. சந்திரக் காலண்டரை முறையாகப் பயன்பாட்டுக்கு முதலில் கொண்டுவந்தது மெஸபடோமியர்கள் (கி.மு.2800) என்றும் பண்டைய எகிப்தியர்கள் என்றும், ரோமானியர்கள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 27.321582 நாட்கள்(27D 7Hr 43.1Min) என்று கணக்கிடப்பட்டுள்ளது. என்றாலும் பூமியுடைய சுழற்சி, பூமியின் சுற்றுப்பாதை இவைகளினால் சந்திரன் ஒரு முழு சுற்று பெற (The synodic month) 29.530589 நாட்கள் (29D 12Hr 44min 2.9 s) ஆகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு வருடம் முழுமைபெற அது எடுத்துக்கொள்ளும் காலம் 354.375 நாட்கள். இதெல்லாம் வானவியல் கணக்கு, இது நமக்கு தேவையில்லை. ஒரு பிறைக்கும் மறு பிறைக்கும் இடைப்பட்ட காலம் சரியாக 29/30 நாட்கள் வராததால் ஒரு மாதம் 29 ஆகவும் மறு மாதம் 30 ஆகவும் கணக்கிடப்படுகிறது. ஆக ஒரு வருடத்துக்கு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது





ரோமானிய சக்ரவர்த்தி ஜுலியஸ் சீசர் (45 கி.மு.) வானவியல் நிபுணர்களை வைத்து ஜுலியன் காலண்டரை உருவாக்கினார். இதில் 12 மாதங்களும் 365.25 நாட்கள் கொண்ட ஒரு வருடமும் வருவதால் 365 நாட்கள் கொண்டது ஒரு வருடமாகவும் துண்டு விழும் பகுதியை நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆக்கி 366 நாட்களாகவும் கணக்கிட்டார்கள். இதை அடிப்படையாக வைத்து போப் கிரிகோரி XIII என்பவரால் இப்போது புழக்கத்திலிருக்கும் ஆங்கிலக் காலண்டர் கண்டுபிடிக்கப்பட்டது 24 பிப்ரவரி 1582 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூலியன் காலண்டரில் இருந்த சில தவறுகள் இதிலும் தொடர்ந்து வந்ததால் அவ்வருடமே திருத்தப்பட்டது 1582 அக்டோபர் 4ம் தேதி வியாழக்கிழமைக்குப் பிறகு மறு நாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி வருகிறது.

ஜூலியன் காலண்டரும் கிரிகோரியன் காலண்டரும் பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வரும் காலத்தை வைத்தே கணக்கிடப்பட்டுள்ளது. ஆய்வின்படி எடுக்கும் காலம் 365.2564 நாட்கள். இதை அடிப்படையாக வைத்து நான்காண்டுகளுக்கு ஒரு நாள் கூடுதலாக எடுத்து 366 நாட்கள் கொண்ட லீப் ஆண்டாக எடுக்கப்பட்டுள்ளது. (Gregorian solar calendar is an arithmetical calendar. It counts days as the basic unit of time, grouping them into years of 365 or 366 days; and repeats completely every 146,097 days, which fill 400 years, and which also happens to be 20,871 seven-day weeks.[10] Of these 400 years, 303 (the “common years”) have 365 days, and 97 (the leap years) have 366 days. This gives an average calendar-year length of exactly 365.2425 days, or 365 days, 5 hours, 49 minutes and 12 seconds.)

ஒரு சூரிய வருடத்துக்கும் ஒரு சந்திர வருடத்துக்கும் இடையில் வித்தியாசப்படும் நாட்கள் 11. இது 3 வருடங்களில் ஒரு மாதம் மூன்று நாட்கள் அதிகமாகி 300 சூரிய வருடங்களில் 11 வருடங்கள் அதிகமாகி 311 சந்திர வருடங்கள் ஆகின்றன. எப்படி இருந்தாலும் -சூரிய காலண்டரும் சரி சந்திர காலண்டரும் சரி – சூரியன், பூமி, சந்திரன் இவைகளின் சுழற்சி(spinning), ஓட்டம் (orbiting) இவைகளை வைத்து துல்லியமாக நாட்களை கணக்கிட முடியாததால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நேரத்தில் மாற்றம் செய்து சரிசெய்ய வேண்டியுள்ளது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஜனாப் முஜிப் ரஹ்மான் உமரி அவர்கள் ’சந்திரக் காலண்டருக்கு நிகராக சூரிய காலண்டரை உருவாக்கவேண்டும் என்பதற்காக கி.மு.700 காலகட்டங்களில்..’ என்று தொடங்கி அதிலுள்ள குறைபாடுகளை வரிசைப்படுத்தி ‘ஒவ்வொரு மாதத்துக்கும் அவர்களின் கடவுள் பெயரையும் தங்கள் பெயர்களையும் வைத்துக்கொண்டனர். துண்டு விழும் கால் நாளை பிப்ரவரியில் சேர்த்து லீப் வருடமாக்கிக் கொண்டனர், இப்படி குழப்பம் நிறைந்த கிருஸ்துவ காலண்டர் உலகை ஆண்டுக்கொண்டிருக்கிறது’ என்று எழுதியுள்ளார். (பக்கம் 20)

ஒருவர் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால் தன் பெயரை வைத்துக்கொள்வது இயல்பு. சர் ஐசக் நியூட்டன் கண்டுபிடிப்பு ‘நியூட்டன் லா’; சர் சி.வி.ராமனுடையது ‘ராமன் எஃபக்ட்’; பிதாகரஸின் கணதவியலுக்கு ‘பிதாகரஸ் தேற்றம்’ அதுபோல மாதங்களுக்கு ஜூலை ஆகஸ்ட் என்று அவர்கள் பெயரை வைத்துக்கொண்டதில் தவறு என்று சொன்னால் அப்துல் வஹாப் நஜ்தி என்ற சட்டாம்பிள்ளையுடன் சேர்ந்து குறு நில மன்னர்களை மண்டியிடச் செய்து நாட்டைப் பிடித்த முஹம்மது பின் சவுது தன் பெயரை (சவுது) சவுதி அரேபியா என்று தன் நாட்டுக்குப் பெயர் சூட்டிக்கொண்டது தவறாகாமல் எப்படி இருக்கமுடியும்? (நஜ்தி எப்போதாவது கட்சி மாறிவிடுவானோ என்று பயந்து அவர்களுக்குள் சம்மந்தம் பண்ணிக்கொண்டது வேறு விஷயம்)

பெருமானார் அவர்கள் காலத்துக்கு முன்பிருந்தே சந்திரக் காலண்டரை அரேபியர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அந்த அடிப்படையிலேயே ஹஜ் உள்பட அவர்களுடைய எல்லா செயல்களும் நடைபெற்று வந்தன. இதில் எந்த மாற்றம் ஏற்படாமல் இஸ்லாத்தின் எல்லா செயல்களும் இறை உத்திரவுகளும் அமையப் பெற்றுள்ளன. பெருமானார் அவர்களும் அப்படித்தான் செயல்பட்டு வந்தார்கள். இன்று வரை அனைத்து முஸ்லிம்களும் மார்க்க சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களையும் ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றியே செயல்பட்டு வருகிறார்கள். இது ஆலிம்சாவின் கண்ணுக்குப் புலப்படவில்லை

சந்திரக் காலண்டர் அல்லா வழங்கியதா?

’எண்ணிலடங்கா பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ள கிருத்துவ காலண்டரை மனித இனம் முழுமையாக ஏற்கத் தக்க வகையில் கிருத்துவ உலகம் திணித்துக் கொண்டிருக்கும்போது மிகவும் துல்லியமாக, நாட்களைக் காட்டவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள சந்திரக் காலண்டரில் BOLD முஸ்லிம் உலகம் அக்கரை செலுத்தாமல் இருப்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்’ என்று ஆசிரியர் அங்காலாய்க்கிறார். (பக் 21)

சந்திரக் காலண்டரை அல்லாஹ் படைத்தான் என்றால் சூரியனை யார் படைத்தார்? அவைகளின் ஓட்டத்தை யார் நிர்ணயித்தார்? “தன்னுடைய வரையரைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்)” (அல் குர்ஆன்36:38); “சூரியன் சந்திரனை அணுகமுடியாது; இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே கிரகங்களும் நட்சத்திரங்களும்) ஒவ்வொன்றும் (தன்னுடைய) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.” (அல் குர்ஆன்36:40)

சூரியன் இல்லாமல் சந்திரனுக்கு ஒளி ஏது? ஓளி இல்லாவிட்டால் பிறை ஏது? பிறை இல்லாவிட்டால் காலண்டர் ஏது? “(தவறாது)ஒழுங்காக நடைபெற்றுவருமாறு சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு பயனளிக்கக்கூடிய விதத்தில் (படைத்து)அமைத்தான், (மாறிமாறி வரக்கூடிய) இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான்.” (அல் குர்ஆன்14:33)

ஒரு முறை நபி(சல்) அவர்களிடம் சில யூதர்கள் வந்து, “ஒ முஹம்மதே, குகை மனிதர்கள் 300 ஆண்டுகள் இருந்ததாக இன்ஜீல் கூறுகிறது. உங்கள் குர் ஆனில் 300ம் பின் ஒரு 9 வருடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. குர்ஆன் அல்லாஹ் இறக்கியதாக சொல்கிறீர்கள். இன்ஜீலும் அல்லாஹ் இறக்கியிருக்கும்போது உங்களுக்கு ஒரு மாதிரியாகவும் எங்களுக்கு ஒரு மாதிரியாகவும் எப்படி சொல்ல முடியும்? இதில் எது உண்மை? என்ற வினாவை வைத்தனர். அப்போது அருகிலிருந்த அலி (ரலி) அவர்கள் பெருமானார் அவர்களிடம் அனுமதிபெற்று “சூரியனைப் படைத்தவனும் அல்லாஹ்தான் சந்திரனைப் படைத்தவனும் அல்லாஹ்தான், உங்களுக்கு சூரிய கணக்குப்படி சொல்லியிருக்கிறான் எங்களுக்கு சந்திர கணக்குப்படி சொல்லியிருக்கிறான்” என யாருடைய மனமும் புண்படாதவாறு சரியான விளக்கத்தை அளித்தார்கள்.

ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை மிக எளிமையாக பதிலுரைத்து தெளிவுபடுத்தியுள்ளார்கள் அலி (ரலி) அவர்கள். இதையே நம்ம ஆலிம்சாவிடம் கேட்டால்.. “உங்க இன்ஜீல் மனுஷன் எழுதினது எங்க குர்ஆன்தான் அல்லாஹ் இறக்கியது அது சொல்றதுதான் சரி” என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

துல்லியமானதா?

‘மாத நாட்கள் 29 ஆகவும் 30 ஆகவும் கொண்ட சந்திரக் காலண்டர் வருட நாட்களாக 354-355 நாட்களைக் கொண்டதாக மிகத்துல்லியமாக அமைந்துள்ளது. இந்த காலண்டர் மனித திருத்தங்களுக்கு அப்பாற்பட்டது.’ எதிர்வரும் பல நூறு வருடங்களுக்கு சந்திரனின் மிகத்துல்லியமான ஓட்டத்தை கணித்து ‘உம்முல் குரா’ காலண்டரை சவுதி அரேபியா பின் பற்றிவரும்போது (பக் 22) பிறை பார்ப்பதில் குழப்பம் எதற்கு? பிறை கமிட்டி எதற்கு?

ரமலானையும் நோன்புப் பெருநாளையும் இரவு 11 மணிக்கும் 12 மணிக்கும் கொண்டுவருவது ஏன்?. பிறை மஃக்ரிபில் தோன்றி ஒரு சில நிமிடங்களில் மறைந்துவிடும், பிறை பார்த்தாகிவிட்டது என்று பல குழப்பத்துக்கிடையில் பத்து மணிக்குமேல் அறிவிக்கிறார்கள். துல்லியத்தில் ஏன் இந்த குழப்பம்?

தமிழ் பஞ்சாங்கம்
பௌர்ணமி அன்று பிறை 13 ஆகவும் அமாவாசை அன்று பிறை 27 ஆகவும் இருக்கும் சிவகாசி காலண்டரையே நம்முடைய மதரஸாக்களும் இஸ்லாமிய நிறுவனங்கள் பின்பற்றுவது வேதனையான விஷயமாக (பக் 22) ஆலிம்சாவுக்குப் படுவது வேதனையானது.

பாவம் அவருக்குத் தெரியாது, நாம் எடுக்கும் முதல் பிறையை ஹிந்துக்கள் மூன்றாம் பிறையாக கணக்கிடுவார்கள் என்று. இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட ஆச்சாரங்களை அனுசரிக்கும் ஹிந்து மக்கள் சந்திர ஓட்டத்தை மிகத் துல்லியமாகப் பார்க்கிறார்கள். மத சடங்குகளுக்கும் சோதிட முறைகளுக்கும் சந்திர ஓட்டத்தை 30 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட ‘திதி’ முக்கியமாக கருதப்படுகிறது, எனவே அவர்களுடைய பஞ்சாங்கத்தில் பிறை எந்த நாழிகையிலிருந்து எந்த நாழிகை வரை தெரியும்; எந்த பருவத்தில்(கோணம்) தெரியும்; வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்வானதா இல்லை தெற்கு உயர்ந்து வடக்கு தாழ்வானதா இல்லை சமமாகத் தெரியுமா என்பதையெல்லாம்
குறிப்பிட்டிருப்பார்கள். (வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்வு என்றால் பிறை சற்றே வடக்கு திசையில் உயர்வாகவும் தெற்கு திசையில் தாழ்வாகவும் இருக்கும்; சமம் என்றால் சந்திரனின் இரண்டு முனைகளும் சமமாக இருக்கும்). கிரிதாரிலால் சியால்கோட்டி என்பவரால் கணிக்கப்பட்ட ‘ஜன்த்ரி’ என்ற உருது பஞ்சாங்கத்தில் இன்னும் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது.

‘ஹிஜ்ரா காலண்டர் என்பது பெரும்பாலான முஸ்லிம்களிடம் அன்னியமாகி விட்டது; ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றுமாறும் கிருத்துவக் காலண்டரை புறக்கணிக்குமாறும் முஸ்லிம்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும். மார்க்க அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களும் ஹிஜ்ரா காலண்டர் தொடர்பாக பொடுபோக்காக இருப்பது வேதனைக்குரிய விஷயம்.’ என்கிறார். (பக்கம் 18/19)

இவ்வளவு வேதனைப் படும் ஆலிம்சா முதலில் தான் நடக்கிறாரா என்று உணர்ந்து பார்க்கவேண்டும். அவர் நடத்தும் பத்திரிக்கை எந்த காலண்டரை பின்பற்றுகிறது? அவருடைய சொந்த கணக்கு வழக்குகளை கிருத்துவ காலண்டரைப் புறக்கணித்துவிட்டு ஹிஜ்ரிக்கு மாற்ற முடியுமா? இது என்ன ஊருக்கு உபதேசமோ? பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவை வைத்து கணிக்கப்பட்டுள்ள கிருத்துவ காலண்டரை எப்படி புறக்கணிக்க முடியும்? தவிர நம்முடைய தொழுகை நேரம் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டல்லவா இருக்கிறது. அப்படி இருக்க வாழ்க்கை முறைக்கு கிருத்துவ காலண்டரை பயன் படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? “ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான்.” (அல்குர்ஆன் 10 : 5)

சந்திரனின் வளர்பிறையையும் தேய்பிறையையும் முறையாக தொடர்ந்து பார்க்கக் கூடிய ஒருவரால் அதன் தோற்றத்தை வைத்தே தேதியை கூறிவிட முடியும் எனும் அளவிற்கு எளிதான நாட்காட்டி அது. படகோட்டிகளும் விவசாயிகளும் இன்றும் இதற்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட எளிதான சந்திரக் காலண்டர் இன்று முஸ்லிம்களிடம் அந்நியமாகி வருவது பெரும் வேதனைக்குரியதும் ஆபத்தானதுமாகும்’. என்கிறார். (பக் 21/22)

சந்திரனை மட்டும் அவர்கள் பார்ப்பதில்லை, பகல் நேரத்தில் சூரியனையும் இரவு நேரத்தில் சந்திரனையும் நட்சத்திரங்களையும் வைத்து நேர காலத்தையும் கடல் பாதைகளையும் தெரிந்துகொள்கிறார்கள். ஹிஜ்ரி காலண்டர் முஸ்லிம்களிடமிருந்து அந்நியமாகவுமில்லை, மறக்கவுமில்லை. இப்போதுள்ளவர்களில் குறிப்பாக பெண்கள் அரபி மாசத்தை சரிவர புரிந்து வைத்திருந்தாலும் வயதானப் பெண்களுக்கு மாதங்களின் பெயர் தெரியாவிட்டாலும் அந்தந்த பகுதியில் நடக்கும் கந்தூரியை வைத்து மாதங்களின் பெயர்களைத் அறிந்து வைத்திருந்தார்கள்.

1 முஹர்ரம் - ஆஷுரா மாசம்
2 சஃபர் - அப்பா கந்தூரி(சதக்கத்துல்லாஹ் அப்பா கந்தூரி)/சபர் மாசம்
3 ரபியுல் அவ்வல் - ரசூலுல்லாஹ் மவுலிது மாசம்
4 ரபியுல் ஆகிர் - முஹைதீன் ஆண்டவர் மாசம்
5 ஜமாத்துல் அவ்வல் - முத்துப்பேட்டை கந்தூரி மாசம்
6 ஜமாத்துல் ஆகிர் - நாகூர் கந்தூரி மாசம்
7. ரஜப் - மெஹ்ராஜ் மாசம்
8 ஷஹ்பான் - பராத்து /வராத்து மாசம்
9 ரமலான் - நோன்பு மாசம்
10ஷவ்வால் - நோன்புப் பெருநாள் மாசம்
11துல் கஃதா - ஏர்வாடி கந்தூரி மாசம்
12துல் ஹஜ்ஜு - ஹஜ்ஜுப் பெருநாள் மாசம்

இம்மாதங்களை வைத்து அந்தந்த மாதங்களில் ஹத்தம் ஃபாத்திஹா ஓதி இரண்டுமூன்று ஏழைகளுக்கு சோறு கொடுத்துவந்தார்கள். பெட்ரோலிய வஹாபிசம் வந்தபிறகு இது மறையத் தொடங்கியுள்ளதால் ஏழைகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த இறைச்சிக் கறி நெய் சோறு CUT.

பெட்ரோலிய டாலர்களால் வரும் குழப்பம்

சென்ற முப்பதாண்டுகளுக்கு முன் வரை இஸ்லாத்தில் குழப்பம் எதுவும் இல்லை பிறை பார்ப்பதைத் தவிர. பெட்ரோலிய டாலர் வந்தது, இஸ்லாத்தை நாங்கள்தான் தூயவடிவில் கொண்டுச்செல்கிறோம் என்று பறை சாற்றிகொண்டு (தொழும்போது) தொப்பியை தூக்கினார்கள்; நேராக இருந்த விரலை துடிக்க வைத்தார்கள்; இருபதை எட்டாக சுருக்கினார்கள்; இறைவன் அருவ நிலைக்கும் அப்பாற்பட்டு தூய நிலையில் உள்ளவன் என்ற இஸ்லாத்தின் கொள்கைக்கு வேட்டு வைக்கும் வகையில் இறைவனுக்கு கால் இருக்கிறது என்று புதிய கண்டுபிடிப்பை புகுத்தியிருக்கிறார்கள்; நபி வழி என்று சொல்லிக்கொண்டு போட்டுத்தள்ளுகிறார்கள். ஹஜ்ரத் உமர் கத்தாப் (ரலி) அவர்கள்
கொண்டுவந்த ஹிஜ்ரி காலண்டரை நாங்கள் பின்பற்றுவோம் ஆனால் அவர்கள் முறைபடுத்திய திராவிஹ் 20 ரக்அத்தை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று அடம்பிடிக்கிறவர்களுக்கு நபி (சல்) அவர்கள் தொழுதது தஹஜ்ஜத்தா இல்லை திராவிஹா (புஹாரி 2013) என்ற வித்தியாசம் இன்னும் தெரியவில்லை. ஆனால் நம்மிடம் பெருமைப் படும் விஷயம் ஒன்று இருக்கிறது, யாராவது புதிதாக எதையாவது கண்டுபிடித்தால் எங்கள் குர்ஆனில் 1400 வருடத்துக்கு முந்தியே அல்லாஹ் சொல்லிவிட்டான், இப்போதுதான் நீங்கள் சொல்கிறீர்கள் என்று பெருந்தன்மையாக பீற்றிக்கொள்வதிகள் முன்னோடிகளாக இருக்கிறோம்.

நாம் பெருமைப் படுவதற்காக ஒரு விசயம் காத்திருக்கிறது. அது வெகு விரைவில் நடந்தேறும் என்று நம்புவோமாக. பிரபஞ்சம் உருவானது பெரு வெடிப்பிலா (Big Bang)
இல்லையா என்று விஞ்ஞானிகளுக்குள்ளே குடுமிப்பிடி சண்டை இருந்துவருகிறது. என்றாலும் நாற்பத்தெட்டாண்டுகளுக்கு மேலாக தன் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருக்கும் ஸ்டீஃபன் ஹாக்கிங் பேசமுடியாமல் சக்கர நாற்காலியில் இருந்துக்கொண்டே அல்லாஹ்வுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அல்லாஹ்வின் குரல் கேட்ட நாளிலிருந்து அவருக்கு ஓர் ஆசை வந்துவிட்டது. தாத்துல் கிப்ரியாவில் கன்ஜு மக்ஃபியாக இருக்கும் அல்லாஹ்வை சந்தித்துவிட வேண்டும் என்ற ஆசையில் பயணித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை சந்தித்துவிட்டால் “ஆண்டவரிடத்திலிருந்து முதலில் சப்தம் வந்தது, அச்சப்தத்திலிருந்து வெளிச்சம் பிரகாசித்தது” என்ற பழைய ஏற்பாட்டின் (இன்ஜீல்) வசனமும், “விந்து நாதம்” என்று சொல்லும் ஹிந்து மத அத்துவைதமும், “அவ்வல ஃகலக்கல்லாஹு நூருன்நபிய்யி யா ஜாபிர்” (ஓ ஜாபிரே! அல்லாஹ்வின் முதல் படைப்பு உம்முடைய நபியின் ஒளியாகும்) என்ற ஹதீஸும் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிடும். பின்பு, நீங்கள் இப்போதுதானே சொல்கிறீர்கள் எங்கள் குர்ஆனில் “ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்திருந்த வானங்களையும் பூமியையும் நாமே பிரித்தமைத்தோம்….” (21:30) என்று 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ் சொல்லிவிட்டான் என நாம் சொல்லி பெருமிதம் அடைவோமாக…! ஆமீன்.. யாரப்பல் ஆலமீன்…!!

Saturday, July 2, 2011

"அல் இஸ்ரா வல் மிஃராஜ்”

மேனி சிலிர்க்கும் மெஹ்ராஜ் : விவாதமும் விளக்கமும் என்ற தலைப்பில் ஆபிதீன் பக்கத்தில் வந்ததை மீள் பதிவு செய்கிறேன்

நானும் சின்ன வயதிலிருந்து எத்தனையோ ஆலிம்கள், மௌலானாக்கள் மிஃராஜின் சிறப்பைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவை கேட்டிருக்கிறேன். எல்லா ஆலிம்சாக்களின் தொனியும் ஒரே மாதிரி, ஒரே தடத்தில்தான் இருந்து வருகிறது. உண்மையான நிகழ்வை அல்லது கருத்தை அல்லது படிப்பினையை அல்லது பயனை இன்றுவரை யாரும் சொல்லவில்லை. தவிர மிஃராஜ் பற்றிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இரண்டு புஹாரி Bukari Vol 1. no 345 Bukari Vol 4. no 429 ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது; அதாவது அவை தவறாக இருக்கிறது என்றுகூட சொல்லலாம். அவற்றை தொகுத்து வழங்கிய ஆலிம்கள்கூட அதைப் பற்றி சிந்திக்கவில்லை. அத்தகைய புத்தகங்களை வாங்கிப் படிக்கிறவர்கள் கண்ணில்கூட தவறுகள் சிக்குவதில்லை. சரியான கருத்தைத் தவிர வேறொன்றும் இருக்கமுடியாது என்ற அசையாத நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் மனித அறிவுக்கு அகப்படாதது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது, ஈமானின் ஒரு பகுதி என்றெல்லாம் சொல்லி மக்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஹஜ்ரத்திடம் பயிற்சி பெறும்போது அவர்கள் சொன்ன கருத்தினால் தெளிவைப் பெற்றேன்; உண்மையைப் புரிந்துக்கொண்டேன். அவர்களின் கருத்தின் அடிப்படையில்தான் சென்ற வருடம் மிஃராஜ் பற்றிய கட்டுரை எழுதியிருந்தேன். அதில்கூட நான் உண்மையை சற்று மறைத்தே எழுதினேன். காரணம் படிப்பவர்களுக்கு செரிமானம் ஆகாது என்பதால். உண்மையை மறைத்தேனே ஒழிய பொய்யைக் கலக்கவில்லை. இப்போது இன்னும் ஆழமான செய்தியைத் தரப்போகிறேன். படிப்பவர்கள் பயந்துவிடக்கூடாது; அவசரப்பட்டு சொன்னவரையும், என்னையும், ஆபிதீனையும் காஃபிர், முஷ்ரிக் என்றெல்லாம் பட்டம் கொடுத்துவிடக்கூடாது. தெளிந்த மனத்துடன் கடைசிவரைப் படியுங்கள்.

நீங்களும் இதுவரை எத்தனையோ ஆலிம்கள் மிஃராஜைப் பற்றி சொன்னதை கேட்டிருக்கலாம், எத்தனையோ புத்தகங்கள் படித்திருக்கலாம். அந்த கருத்துக்கள் எல்லாம் உங்கள் மனதில் பதிந்திருக்கும். அவற்றை ஒரு தட்டிலும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்தை மறு தட்டிலும் வைத்துப் பாருங்கள், எந்த தட்டு கனமாக இருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; எது லேசாக இருக்கிறதோ அதை குப்பையில் போட்டுவிடுங்கள்.

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1974 ம் ஆண்டு காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் (இது திருநல்லாரிலிருந்து சுமார் 10 கி,மீ தூரம்) என்ற ஊரில் எங்க ஜஃபருல்லாஹ் நானா பேசியதை தொகுத்து எழுதியுள்ளேன்.





"அல் இஸ்ரா வல் மிஃராஜ்”
தொகுப்பு: ஹமீது ஜாஃபர்


மெஹ்ராஜைப் பத்தி இரண்டே இரண்டு விசயம்தான் இருக்கு குர்ஆன்லெ, "என்னுடைய அடிமையை இறை இல்லத்திலிருந்து பைத்துல் முகத்திஸுக்கு நான் வரவழைச்சேன்"டு அல்லா சொல்றான், அதுக்கப்புறம் சிதரத்துல் முந்தஹா என்ற மரத்தின் பக்கத்தில் அவர் இறங்கக்கண்டேன்னு சொல்றான். அது யாருங்கிறது ஜிப்ரீலா ரசூலுல்லாஹ்வா என்கிறது பின்னாடித்தான் சொல்றாங்க. மொதல்லெ கஃபத்துல்லாவிலேந்து பைத்துல் முகத்திஸுக்குப் போறது மெஹ்ராஜு அல்ல அதுக்குப் இஸ்ரான்னு பேரு. அங்கேந்து ரசூலுல்லாஹ் மேலே போனாஹன்னு சொன்னீங்கல்ல அதுக்கு பேரு மெஹ்ராஜு. இதுலெ நீங்க என்ன தெரிஞ்சுக்கனும்னு சொன்னா ரசூலுல்லாஹ்வுடைய எல்லா வழிமுறைகளிலும், எல்லா செய்கைகளிலும், எல்லா சொற்களிலும் நமக்கு முன்மாதிரி இருக்குது. ரசூலுல்(சல்) வந்து இஸ்ரா போனாஹ, மெஹ்ராஜுக்குப் போனாஹ அதுலெ என்ன நமக்கு முன்மாதிரி இருக்கு? நம்ம போக முடியாதே !

என்னுடைய முஹம்மதை நான் கூப்பிட்டேன், என்னுடைய முஹம்மது பின் அப்துல்லாஹ்வை கூப்பிட்டேன், என்னுடைய நபியுல்லாஹ்வை கூப்பிட்டேன், ரசூலுல்லாஹ்வை கூப்பிட்டேன்னு எங்கேயாவது சொல்லிருக்கானா அல்லாஹ்? குர்ஆன்லெ வந்து. கடுகடுன்னு பேசும்போதுகூட "யா முஜம்மில்" அப்டீன்னு கேக்கிறான். கம்பளியால் போர்த்தப்பட்டவரே அப்டீங்கிறான்; சிராஜுல் முனீர் அப்டீங்கிறான், இந்த மாநிலத்துக்கெல்லாம் மிக ஒளின்னு சொன்னான். அஹமது, முஹம்மதுன்னு சொன்னான். புகழுக்குரியவர், புகழைப்பெற்றவர் அப்டீன்னு சொன்னான். இப்படியாப் புகழ்ந்துப் புகழ்ந்து.... அது மாத்திரமல்ல ரசூலுல்லாஹ்ன்னும் சொன்னான்.

யாரை....? நம்ம அவாம். ரசூலுல்லாஹ் யாரு ? நபியுல்லாஹ், ரசூலுல்லாஹ். நம்ம அவாமு ஒன்னுமே தெரியாத ஆளு. நம்மளுக்கு யாரை வந்து மிகப் பெரிய முன்மாதிரியா வச்சான்? ரசூலுல்லாட்டெ போயி உங்க முன்மாதிரியை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறான். அப்டீன்னா நீங்களும் ரசூலுல்லாஹ்வும் ஒன்னுன்டா அர்த்தம்? அந்த அளவுக்கு உங்களை உயர்த்தி வச்சிருக்கிற அல்லாஹ். என்னுடைய ரசூலிடத்தில் உங்களுடைய முன் மாதிரியைத் தேடிக்கொள்ளுங்கள்னு அல்லாஹ் சொல்றான். அப்படி இருக்கும்போது நமக்கு முன்மாதிரிங்கிறதுக்கு ரசூல் என்கிற வார்த்தையெ போடும்போது - மலையிலே ஏறித்தான் வஹியைப் பெற்றார்கள் மூஸா (அலை) ஆனால் ரசூலுல்லாஹ்வை அல்லாஹ் கூப்பிட்டான். அப்படி கூப்பிடும்போது என்னுடைய ரசூலை நான் விண்ணகத்துக்கு அழைத்துக்கொண்டேண்டு சொல்லலாமுல்ல.? என்னுடைய அபுதை என்கிறான். அப்ப என்ன அர்த்தம்னா, நம்முடைய முன்மாதிரி என்று சொல்லும்போது ரசுல்ண்டு ஏத்திவைக்கிறான். அவன்ட்டெ போகும்போது என்னுடைய அபுது என்கிறான். அதுலெ நமக்கென்ன முன்மாதிரின்னா அல்லாஹ்வை நீங்க நெருங்குறதா இருந்தா நான் பெரிய உஸ்தாது, நான் பெரிய குரு, நான் பெரிய வலி, நான் பெரிய நபி அப்டீன்னுல்லாம் அல்லாஹ் கிட்டெ போகமுடியாது. அவன்கிட்டெ போறதா இருந்தா எவரா இருந்தாலும் சரிதான் நீங்க பெரிய ஜனாதிபதியா இருந்தாலும் சரிதான், கலிஃபாவா இருந்தலும் சரிதான், அவாமா இருந்தாலும் சரிதான் போமுடியாது. அடிமையா இருந்தாத்தான் போகமுடியும் என்கிற முன்மாதிரி இங்கே இருக்கு. நீங்க அல்லாவா மாற முடியாது. ஹக் வேறே ஹல்க் வேறே அதான் நம்ம சித்தாந்தம். அதுகிட்டே நெருங்கலாம் அப்படி நீங்க நெருங்கும்போது நீங்க இங்கே இருக்கிறவரைக்கும் ஜஃபருல்லாஹ் கவிஞரு. அங்கே கொஞ்சங் கொஞ்சமா நெருங்கும்போது ஒன்னுமே தெரியாத அல்லாவை மட்டும் தெரிஞ்ச அல்லாவுடைய அடிமை அப்டீன்னு போனாதான் அங்கே இருக்க முடியும். அதைதான் அங்கே சொல்றான். ரசூலுல்லாஹ்வை அடிமையாக அழைத்துக்கொண்டேன். இதுதான் மெஹ்ராஜுலெ நமக்கு உள்ள முன்மாதிரி.

அடுத்தது திருமிதியிலெ இருந்தது புஹாரிலெ இருந்ததுன்னுல்லாம் சொல்றீங்க, ரசூல் (சல்) போயிட்டு வந்தாஹ அம்பது ரக்காத்தை முப்பதா கொறச்சாக, இருபதா கொறச்சாக மூஸா அலைஹிஸ்சலாத்தைப் பார்த்தாஹ, ஈசா அலைஹிஸ்சலாத்தை பார்த்தாஹா அப்டீன்னுல்லாம் சொல்றீங்க. ஈசா அலைஹிஸ்சலாத்தை அந்த பதிமூனுபேர்லெ ஒருத்தன்தான் காட்டிக் கொடுத்தாரன், அந்த பதிமூணுபேருலெ யாரு உண்மையான சீடர் யாருன்னு அவருக்குத் தெரியலெ! அவரு ரசூலுல்லாஹ்வுட்டெ சொன்னாங்க இவங்க கேட்டுக்கிட்டாங்கன்னு சொல்றீங்க; அதே மாதிரி மூஸா அலைஹிஸ்சலாம் தூருசினா மலைக்குப் போயிட்டு வரங்காட்டியும் கீழே உள்ள இவனுவ காளை மாட்டை தூக்கிட்டானுவ, அது அவர் உம்மத்தைப் பத்தி அவருக்குத் தெரியலை. இஹலுக்கு சொல்லிக் கொடுத்தாஹன்னு சொல்றீங்க; அடுத்தது என்னான்னா “உங்க உம்மத்து தாங்கமாட்டார்கள்” என்று சொன்னதாக சொல்றீங்க. அவங்க உம்மத்தை அவங்களுக்கே தெரியலை, முஹம்மதுடைய உம்மத்து தாங்க மாட்டார்கள் என்று முஹம்மதுட்டேயே சொன்னால், அப்ப முஹம்மதுக்கு வந்து தன்னுடைய உம்மத்துடைய capability என்னா capacity என்னான்னு தெரியலேன்னு அர்த்தம்னு சொல்றீங்க. இதுலேந்து என்ன தெரியுதுன்னா நபியை நுபுவத்தை முடிச்சுட்டான், குர் ஆனை நிலை நிறுத்திட்டான், அப்பொ பின்னாடி, இப்ப இருக்கிறவர்கள் யாரு அப்டீன்னா யூதர்களும் கிருஸ்துவர்களும்தான். எனவே என்னாதான் மெஹ்ராஜ் போயிட்டு வந்தாலும் சரி அந்த ஃபர்ளை எல்லாம் எங்களுடைய நபிதான் வரையறுத்துக் கொடுத்தார் என்று காட்டுறதுக்காக பின்னாலெ எழுதி வச்சிருக்கானுவ. ஹதீஸில். இப்பொ இருக்கிற அறிவான யூதர்கள் இருக்கிற மாதிரி அப்போ புஹாரி காலத்தில் இருந்திருப்பானுவ, மூஸாவுடைய ஆளுவளும் இருந்திருப்பனுவ ஈசாவுடைய ஆளுவளும் இருந்திருப்பானுவ அவன் ஏத்திவிட்டுருப்பான் இதை. இதை வச்சு நாம பேசிக்கிட்டிருக்கோம்.

நான் என்ன கேட்கிறேன், இருபத்திநாலு மணி நேரத்துலெ உழைக்கிற பண்ணெண்டு மணி நேரம் போக எட்டு மணிநேரம்தான் நம்ப கையிலெ இருக்கு. இது தூங்குற நேரம். (இந்த தூங்குற நேரத்திலெ தொழுகை கிடையாது), இதுலெ அம்பது வக்துன்னா எப்படி தொழுவீங்க ? அப்படி தொழுதுக்கிட்டே இருந்தா பகலையிலெ போயி நீங்க சம்பாதிங்கன்னு அல்லா சொல்றானே! அந்த ஆயத்து பொய்யா போயிடுமே? அப்ப அம்பது வக்து எப்படி பண்ணமுடியும் நீங்க? அப்ப தொடர்ந்து பாங்காதானே இருக்கும்? வேறே என்ன நீங்க பண்ண முடியும்? அப்ப விவசாயத்தைப் போய் பாருங்க, வியாபாரத்தைப் பாருங்கன்னு சொல்றானே அதை எப்பப் பார்க்கிறது? தொழுதுக்கிட்டே இருந்தா....? அதுமட்டுமில்லாமல் ரசூல்(சல்) தானாக திரும்பித் திரும்பி போகக்கூடிய சக்தி அவங்களுக்கு கிடையாது. அல்லாஹ் கூப்பிட்டான் போயிட்டு வந்துட்டாஹ. ரசூலுல்லாஹ் என்ன அல்லாஹ்வுடைய ஷண்டிங் பஸ்ஸா போயிட்டுப் போயிட்டு வர்றதுக்கு? இப்படித்தன் ஒருத்தரு சொன்னாரு, ரசூலுல்லாஹ் போயிட்டுப் போயிட்டு வந்தாஹ அலுப்புப் பார்க்காம இன்னொருதரம் போயிட்டு வந்திருந்தா நமக்கெல்லாம் தொழுகையும் இல்லாம நோன்பும் இல்லாம போயிருக்கும் அப்டீன்னார்..

இதுமாதிரி எல்லாம் இருக்காதுங்க, நாம ரசூல்(சல்) உடைய தரத்தை குறைக்கிறமாதிரி இருக்கு. மூசா(அலை)த்தைப் பார்த்தாங்க. ஈசா(அலை)த்தைப் பார்த்தாங்க அது உண்மை. அந்த உண்மையை அடிப்படையா வச்சுக்கிட்டு இந்த கான்வர்சேஷனை விட்டுருக்கான். மூசாவையே பார்க்கலை ஈசாவையே பார்க்கலை அப்டீன்னு ரசூலுல்லாஹ் சொல்லை. பார்த்தாங்க. பார்த்த உண்மையை வச்சு அதுக்கு மேலே பொய்யை வச்சிருக்கான். அஹ இப்படி பேசினாஹ இஹ இப்படி பேசினாஹ அப்டீன்னு. “இறைவா.. நானும் முஹம்மதுடைய உம்மத்தாக இருக்கவேண்டும்” என்று மூசா(அலை) துஆ செஞ்சாஹ அப்படி இருக்கும்போது நபியுடைய உம்மத்துக்கு capacity இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்? அப்ப அதுலெ இருக்கு, இதுலெ இருக்கு, புஹாரியிலெ இருக்குன்னு சொல்றீங்களே என்ன அர்த்தம்? “சிந்தியுங்கள், சிந்தியுங்கள்” என்று அல்லாஹ் சொல்றானே குர்ஆன்லெ, என்ன அர்த்தம்? எனவே இதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. நாமலெ recognise பண்ணுறது மாதிரி ஆயிடும். இதுவே சரித்திரமா ஆயிடும். ரசூலுல்லாஹ்வுக்கு ஒன்னுமே தெரியலே மூசா நபி சொல்லி, ஈசா நபி சொல்லிதான் தெரியும் அப்டீன்னு வந்துடும். இது என்னுடைய கருத்து, ஏத்துக்கிட்டா ஏத்துக்குங்க ஏத்துக்காட்டிப் போங்க. நீங்க நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க, நான் சொன்னேன்னு பார்க்காதீங்க.

அடுத்து இன்னொன்னு சொல்றேன், ரசூலுல்லாஹ் கிட்டெ கேட்டாங்க நீங்க மெஹ்ராஜுக்கு போயிட்டு வந்தீங்களான்னு, ஆமான்னாங்க. சரி, நீங்க மட்டும் போயிட்டு வந்தீங்களே எங்களுக்கெல்லாம் இல்லையான்னு. அப்பொ ரசூலுல்லாஹ் என்ன சொன்னாங்க, “ஒவ்வொரு முஃமினுக்கு தொழுகை மிஃராஜா இருக்கும்” அப்டீன்னாங்க. நீங்க யோசனைப் பண்ணிப் பாருங்க, நல்லா பாருங்க. அது மண்ணிலிருந்து விண்ணுக்குப் போனப் பயணம். நம்ம ஃபர்ளுலெ அல்லாஹ்வுடைய அர்ஷுக்குப் போறது, அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜு இருக்குல்ல, அதை சொல்லணும்ல! ஒரு பயணத்துக்கு... சரி நான் மேலே போனேன், அல்லாஹ்வுடைய அர்ஷுக்கு. நீங்க அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜை மெஹ்ராஜுன்னு சொல்லலாமுல்ல.. அதை சொல்லலையே ஏன் சொல்லலை? காரணம் என்ன? "சிந்தியுங்கள்" என்கிறான் அல்லாஹ்.

நான் சொறேன் கேளுங்க, என்னுடைய சுய சிந்தனை; ஹஜ்ஜுலே நடக்கிறது பூறா நம்முடைய சம்பந்தமோ அல்லது ரசூலுல்லாஹ்வுடைய சம்பந்தமோ கிடையாது. இபுறாஹிம்(அலை)த்தை நண்பன்னு அல்லாஹ் வருணிச்சிட்டான், அவங்களுக்கு ஒரு tribute கொடுக்கணும், அவருதான் அங்கே இஸ்லாத்தைக் கொண்டு வந்தது. எனவே மரணம் வரையில்... அங்கே நடக்கிறது பூறா...அவரு பொண்டாட்டி ஓடினதுக்கு நாம ஓடிக்கிட்டிருக்கோம். அவர் புள்ளைக்கு தண்ணி கெடச்ச ஜம் ஜம்மை நாம குடிச்சிக்கிட்டிருக்கோம்; அவர் நிண்ட இடத்துலெ நாம தொழுதுக்கிட்டிருக்கோம், இல்லையா? அவரு renovate பண்ணின கஃபாவை சுத்திக்கிட்டிருக்கோம். இங்கே ஒரு சேதி சொல்றேன் கேளுங்க, அல்லாஹ் அப்போது என்ன சொன்னானோ அதைதான் இப்போதும் சொல்லுவான். ரொம்ப தெளிவா தெரிஞ்சிக்குங்க, அல்லாஹுவுக்கு இபாதத் செய்யின்னா அவன் சொன்னதை கடைபிடின்னு அர்த்தம். இஸ்லாம்னாலே கடைபிடித்தல்னு அர்த்தம், கீழ்படிதல்ன்டு அர்த்தம், அதான் முக்கியம். நீங்க செய்யிற தொழுகை இருக்குப் பாருங்க அல்லாஹ்வுக்கு நீங்க பண்ணவே இல்லை. அல்லாஹ் யாருக்கு சஜ்தா செய்ய சொன்னான்? சஜ்தா என்ற வார்த்தை எப்போ வந்துச்சு? சஜ்தாங்கிற வார்த்தை குர்ஆன்லெ எங்கே மொதல்லே வருது? மண்ணாலெ ஒரு மனுசனைப் போட்டு அதுக்கு சஜ்தா செய்யிண்டான் அதுக்கு முன்னாடி சஜ்தா செய்யிண்டு எங்கேயாவது இருக்கா குர்ஆன்லெ? எனவே மனிதர்களுக்கு சஜ்தா என்கிற வார்த்தை முதன்முதலில் இந்த மண்ணால் செய்த மனிதர்லேந்துதான் வருது. அந்த மண்ணால் செய்த மனிதருக்குத்தான் சஜ்தா செய்ய சொன்னான் அல்லாஹ். சொன்னமாதிரி கரக்டா செஞ்சிட்டாங்க மலக்குமார்கள். ஷைத்தான் போய் reason கேட்டான். நான் நெருப்பு இவரு மண்ணுனாலெ படைச்சிருக்கே நான் உன்னைதானே பண்ணனும்னு இவரை பண்ணனுமா நான் என்று கேட்டான். இதுலேந்து என்ன தெரியுது முன்னாடி ஷைத்தான் வந்து அல்லாஹ்வுக்கு சஜ்தாபண்ணிருக்கான் போலயிருக்கு, இவருக்கு மாட்டேண்டுட்டான். அப்பொ சஜ்தா என்கிற வார்த்தை அங்கேதான் வந்துச்சு.

இப்ப நீங்க என்ன பண்ணுறீங்க? எந்த திக்கை வக்கிறீங்க? மேற்கே பார்த்து பண்ணுறீங்க. ஏன் கிழக்குலெ அல்லாஹ் இல்லையா? தெற்குலெ இல்லை? அப்பொ மேற்கு அல்ல, கஃபத்துல்லா எந்த பக்கம் இருக்கிறதோ அங்கேதான். அங்கே போனால் நாலு பக்கமும் பண்ணுவாங்க. அப்ப கஃபத்துல்லாஹ் என்ன...? சிலை வச்சா தப்பு கட்டடம் வச்சா பண்ணலாமா? சிலை வச்சா இணை வைக்கிறது! கட்டடம்னா? அது அல்லாட இல்லம்னா இதெல்லாம்/பள்ளிவாசல்லாம் வாடகை இல்லமா? அது சொந்த வூடு, இது வாடகை வீடா இல்லை அடமானம் புடிச்சிருக்காரா அல்லா? அல்லா யாருக்கு சஜ்தா பண்ண சொன்னான்? ஆதத்துக்கு. இந்த ஆதத்துடைய கபுரு உலகத்துலெ எங்கே இருக்குன்னு யாருக்காவது தெரியுமா? ரசூலல்லாஹ்வுடைய கபுரு தெரியிது; அபுபக்கர் சித்தீக் (ரலி) கபுரு தெரியிது, மூசாவுடெ தெரியுது; ஃபிர் அவ்ண்டெ பாடி இருக்குது, ஆத்ததுடையது எங்கே இருக்கு? அதைதானே நீங்க தொழுதுக்கிட்டிருக்கீங்க இன்னைக்கும். இல்லைண்டு சொல்ல முடியுமா? அப்ப இருக்கிற இடத்தை காண்பிங்க. அந்த கஃபத்துல்லாவை கட்டினது யாரு? முதல் மனிதன் தானே கட்டியிருக்கணும் மத்தவங்கள்லாம் renovate தானே பண்ணினாங்க. அல்லாஹ் யாருக்கு சஜ்தா பண்ண சொன்னானோ அதை நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க, அப்படி பண்ணுறதுதான் அல்லாவுடைய இபாதத்து; அல்லாவுக்கு கீழ் படிதல். அவன்தானே சொன்னான், அவன் சொன்னதை நாம கீழ்படிகிறோம். சஜ்தா பண்ணுறது அங்கேதான் அல்லா யாருக்குப் பண்ணச்சொன்னானோ... இல்லை, மாட்டேண்டு சொன்னால் நீங்களும் ஷைத்தான்டு அர்த்தம். ஆதத்தை சஜ்தா பண்ணமாட்டேன்டு அவன் சொன்னான்ல அதையே நீங்களும் சொன்னா? ஆதத்தை சஜ்தா பண்ணலை அல்லாவைத்தான் பண்றோம்னு சொன்னால்.... அல்லா மாத்திட்டானா இடத்தை? எனக்கு இபாதத்து பண்ணுண்டுத்தானே சொல்றான் அவன். கீழ்படிதல் அடிமைப் படுதல்னு இருக்குல்ல.. அவன் சொன்னதை நீங்க செய்யிறீங்க, இன்னமும் அதுதான் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க. இல்லைன்னு சொல்லுங்க? யோசனைப் பண்ணிப் பாருங்க; என்னை காஃபிர்னு வேனும்னாலும் சொல்லுங்க.. இதுதான் சார் உண்மை.. அதுக்கு ஒன்னு சொல்லவா?

ஹஜரத் நீங்க சொல்லுங்க தொழுகும்போது நிய்யத்து சொல்றீங்களே அதை சொல்லுங்க பார்ப்போம்! சுபுஹுடைய தொழுகை இரண்டு ரக்காத்தை, இமாமைப் பின் தொடர்ந்து, கஃபாவை முன்நோக்கி அல்லாவுக்காக நான் தொழுகுறேன். அல்லாவுக்குத்தான் தேவையே கிடையாதே! அல்லாவுக்காக நீங்க என்ன தொழறது? அல்லாவைத் தொழுகுறேண்டல்ல சொல்லணும் அது என்ன அல்லாவுக்காக? your prayer is to him or to for..?! to him or for him அதை சொல்லுங்க அல்லாவைத் தொழுவுறீங்களா? அல்லாவுக்காகத் தொழுவுறீங்களா? இவருக்காக நான் காசு கொடுத்தேன்; இவருக்காக செஞ்சேன்னு சொன்னா அவருக்கு கொடுக்கலைன்னுதானே அர்த்தம்; இவருக்காக துஆ செஞ்சேன்னா, இவர் துன்பத்துலெ இருக்காரு இவருக்காக செஞ்சேன்னு அர்த்தம். அல்லாவுக்காகன்னா..? எதுலெ இருக்கான் அவன்? அவனுக்காக நீங்க என்ன செய்யப்போறீங்க..? நமக்காகத்தானே அல்லா சொல்லிக்கிட்டு இருக்கான். அல்லாவுக்காக நீங்க செஞ்சா..? For Him or To Him? அதனாலெ அல்லா என்ன சொன்னான்... ரசூலுல்லாஹ் சொன்னாங்க, ஹஜ்ஜு அது இப்றாஹிம் (அலை)க்கு உள்ளது; நோன்பு, அது பசிக்கும் பசிக்காதவனுக்கும் உள்ளது; ஜக்காத்து/தான தர்மம் உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கு கொடுக்கிறது- இந்த இரண்டுபேருக்கும் உள்ள உறவு; லாயிலாஹ இல்லல்லாஹ்/கலிமா, உன்னுடைய நெஞ்சத்துக்கும் உன்னுடைய நம்பிக்கைக்கும் உள்ளது; அங்கு நீயும் அல்லாவும் இருக்கீங்க அல்ல, நீ ஒத்துக்கிட்டாத்தான் அல்லா வருவான் இல்லாகட்டி அல்லா வரமாட்டான்; நாத்திகன். ஆனால் ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுலெ இருக்கும்போது யாரும் யாருமாக இருந்தார்கள்? ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக இருந்தார்கள். அதே மாதிரி தொழுகையிலெதான் இந்த உறவு. ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக. நீ தொழுவும்போது அல்லா முன்னாடி இருக்கிறாண்டு பார்க்கணும், இல்லை, அல்லாஹ் நம்மளைப் பார்த்துக்கிட்டு இருக்கிறாண்டு நெனைக்கணும்னு ரசூலுல்லாஹ் சொன்னாங்க. அப்ப மெஹ்ராஜுலெ இருந்த உறவு எந்த ஃபர்ளுலெ இருக்கு..? தொழுகை. அதனாலெத்தான் ரசூலுல்லாஹ் சொன்னாங்க தொழுகை உங்களுக்கு மெஹ்ராஜுன்னு, அது பயணமாக இருந்தாலும் கூட. இதெல்லாம் எனக்கு எப்படி தெரிஞ்சுச்சு ? அல்லாத்தான் சொன்னான், தெரிஞ்சிச்சு. எனக்கு என்ன தெரியும்? யோசனைப் பண்ணும்போது மனசுலெ வந்துச்சு. மனசுலெ நல்லது வருவது அல்லாடெ, மனசுலெ தீயது வந்தா ஷைத்தாண்டெ. அல்லாட இவ்வளவு சேதியை ஷைத்தானா சொல்லுவான்? இந்த செய்தி பூறா அல்லாதான் என்று நம்புறேன், ஏன்னு கேட்டால் குர்ஆனை அல்லாதான் கொடுத்தான், நல்லது அது. இது அல்லாவைப் பத்தி சொன்னது, நல்லது இது. இது ஷைத்தாண்டா குர்ஆனும் ஷைத்தானாலெ ஏன் கொடுக்கமுடியாதுன்னு கேட்கமுடியும். இன்னொருத்தனாலே. நான் கேட்கமாட்டேன் இன்னொருத்தன் கேட்கலாம்.

அதனாலெ ஆதம் என்கிறது சாதாரண மனிதர் அல்ல அது மிகப்பெரிய சக்தி. சக்தி உள்ள மாபெரும் மனிதர், அதை நாம லேசா சொல்லிக்கிட்டிருக்கோம். அப்பொ அல்லா எங்கே இருக்கிறான்? மேலே இருக்கிறான், அவன் கால் படாத இடத்தில் இருக்கிறான், அது தப்பு, சிரசாசனம் பண்ணினால் கால் போகுமே மேலே! தலையிலெ இருக்கிறாண்டா தலைக்கும் கால் போகும். அவன் உருவம் இல்லாதவன், உருவம் இல்லாத இடத்திலேதான் இருப்பவன். மனசுலெ இருக்கிறான். மனசுக்கு உருவம் இருக்கா..?அது எங்கே இருக்குன்னு சொல்லமுடியுமா..? நாம என்ன செய்யிறோம் உருவம் இல்லாத அல்லாவை உருவமுள்ள மூளையிலெ கொண்டு வச்சிருக்கோம் அதனாலெத்தான் எல்லா குழப்பமும் வருது என்று பேசி முடித்தார்.

இனி அலசி ஆராய்வது உங்கள் வேலை. - ஹமீது ஜாஃபர்.