Sunday, November 7, 2010

புலவர் மெய்தீன்








ரசூல்(சல்) அவர்கள்மீது இஷ்க் வைத்த எத்தனையெத்தனைப் பேர்களில் புலவர் பெருமக்கள் ஒரு சாரார், புரவலர்கள் ஒரு சாரார், கவிஞர்கள் ஒரு சாரார். இப்படி எண்ணிலடங்காதவர்கள் எத்தனையோ? அவர்களில் ஒர் சிலரைத் தவிர பெரும்பாலானோர் அறியப்படாமலே இருக்கின்றனர். உலகுக்கு அறிமுகமாகாவிட்டாலும் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சொந்த ஊரிலேயே அறியப்படாமலேயே மண்ணாகிவிட்டனர். அவர்களில் எனதூர் மஞ்சக்கொல்லை என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் வாழ்ந்தவர் புலவர் மெய்தீன்.

நான் சிறுவனாக இருந்த போது எங்களூர் பைத்து சபைக்கு பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். இஸ்லாம் என்றாலே பிரிந்து இருப்பதுதானே. அதனால் நீயா நானா போட்டி வந்து எங்கள் சபை இரண்டாகப் பிரிந்தது. அதில் அவர் தெருவிலிருக்கும் சபைக்கு பாடல்கள் எழுதிக்கொடுத்தார், எங்களுக்கு கவிஞர் மதிதாசன், கவிஞர் நாகூர் சலீம் போன்றவர்கள் பைத்து எழுதிக்கொடுத்தனர்.

ஒவ்வொருத்தரும் அவங்கவங்க ஊரைப் பற்றி, அதன் சிறப்பைப் பற்றி இணையத்தில் எழுதியிருக்கிறார்கள். நாமும் நம் ஊரைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. விளைவு சென்ற ஜூலையில் ஊர் சென்ற போது செய்திகள் சேகரித்தேன். அப்போதுதான் புலவர் மெய்தீனைப் பற்றி நிறைய செய்திகள் கிடைத்தன. எனவே அதை தனிப் பதிகையாக இட முடிவு செய்து இதனைத் தருகிறேன்.

நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அவரைத் தெரியும். மெலிந்த ஒட்டிய உடம்பு, கருப்பு நிரம், அம்மைத் தழும்புள்ள முகம், அளவான மீசை, வெடுக்கென்ற நடை. அவரைப் பார்த்தால் யாரும் புலவர் என்று சொல்லமுடியாது. தன் புலமையை வெளிப்படுத்திக் கொள்ளாத எளிமையானவர். எளிமை தோற்றத்திலும் மட்டுமில்லை, பேச்சிலும் செயலிலும் இருந்தது.

இவரின் பாடல்கள் அனைத்தும் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளவனவாகவே இருந்தன. கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருந்த இவர் தனிப்பட்ட எவர் மீதும் பாடல்கள் புனைந்ததில்லை. எப்போதுமே கருப்புச் சட்டைப் போடும் அவர் நண்பர் பீர் முஹம்மது தந்தை பெரியாரைப் புகழ்ந்து அவரது கொள்கைகளைப் பாராட்டி ஒரு பாடல் எழுதித்தருமாறு ஒரு முறை வினவியபோது, நீ கெஞ்சிக்கூத்தாடினாலும் பெருமானாரைத் தவிர வேறு யார் மீதும் பாடல் புனையமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

கலைமாமணி கவி கா. மு. ஷரீஃபு இவருக்கு உறவினர் மட்டுமல்ல நண்பரும் ஆவார். ஒரு முறை கா. மு. ஷரீஃப் மஞ்சக்கொல்லை வந்திருந்தபோது இங்கே இருந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம் என் கூட மெட்ராஸ் வா, சினிமாவுக்குப் பாட்டு எழுத வாய்ப்பு வாங்கித் தருகிறேன், நிறைய சம்பாதிக்கலாம் என்றழைத்தபோது. எனக்கென்று ஒரு கொள்கை உண்டு, அதை விட்டு நீங்கமாட்டேன், தூய்மையான இஸ்லாத்தின் கொள்கையை விட்டுவிட்டு அசிங்கத்தனமாகப் பாட்டெழுத சொல்கிறாயா? அதை நீயே செய்துக்கொள் என்று மறுத்தவர் நம் புலவர் பெருமான்.

அவரது பாடல்களில் பெரும்பாலனவை நபிகள் கோமானைப் புகழ்ந்ததாகவே இருக்கின்றன, அவைகளில் சில:

"பாடுவோம் பாடுவோமே - புகழ்
பாடுவோம் பாருள
ஆளவந்தோன் நபி மீது......

நாடுவோம் நபி னடை
யதை யொழுக
நலனடைவீர்
பலனடைவீர் - புகழ் பாடுவோம்.."


நபிகள் கோமானைப் பின் பற்றி வாழ்ந்தால் நலன் மட்டுமல்ல பலனும் அடைவீர் எனவே நபிகள்பிரானைப் புகழ்ந்தால் மட்டும் போதாது அவர்களின் வழிமுறையையும் ஏற்று நடக்கவேண்டும் என்று அறிவுறுத்தும் அவர் வேறொரு பாடலில் நபிசொல் மறந்தால் நாம் என்ன நிலைக்கு ஆளாவோம் என்பதையும் எச்சறிக்கத் தவறவில்லை. இதோ:

"நன்கோன் நபிசொல்
நாம் மறந்தோம்
நலிவடைந்தோம் சோதரனே
நன்குணர் வாயே நீயே..!
நன்குணர் வாயே..!!"

"நாயகர் நாளிதுவே - நபி
நாயகர் நாளிது
நாம் புகழ்வோம்
களி கூறி"


என்று மீலாது நபியன்று பாடுவதற்காவே தனிப் பாடல் தீட்டிய புலவர். தன் மனம் சங்கடப்படும்போதெல்லாம் நபிகள் பெருமானார் அவர்களின் உதவியை நாடாமலிருந்ததில்லை.

"இரசூல் நபியே !
இது ஞாயமா - அண்டிடும்
ஏழை மீது கோபமா
இனி ஏது செய்வேன் - இரசூல் நபியே"

"மகா மேதையெனும் விளங்கும் நபியே
மனதோடு உமை நம்பினேன் பாரிலே
சதா நான் துன்பம் காண்பது ஞாயமோ
அதை தீர்க்காத தென்ன மாயமோ

உலகினில் வாழ்ந்த தீமையை மாற்றி
உயர்வினைத் தந்த சாதகரே..!"

என்று நபிகளாரிடம் வினவும் புலவர் நம்மையும் சிந்திக்கச் சொல்கிறார்

"சிந்தித்துப் பாராய் சோதரா - நபி சேவை
சிந்தித்துப் பாராய் சோதரா - நபி சேவையை

வட்டியினால் பல குடும்பத்தை
வாட்டியர் வம்பர்கள் என்றே - ஒரு
சட்டம் வகுத்த நம் தருமராம்
துட்டர்களின் சூதாட்டத்தை
துளைத்தனர் அன்றோ - சோதரா.."


சிந்தனை என்பது மனித சமுதாயத்துக்கு இறைவன் அளித்த அருட்கொடைகளில் ஒன்று. இறைவனே தன் திருமறையில் பல இடங்களில் சிந்தியுங்கள், சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன என்று மொழிகிறான். சிந்தனையினால் பெறும் பயனை நல்வழியில் செலவிடாமல் தீய வழியில் செலவிடவே பலரில் சிலர் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அங்கே அந்த சிலருக்கென்று தனிப் பயன் இருப்பதை வழிநடக்கும் பாமரர்களுக்குத் தெரிவதில்லை. எனவே இப்போதெல்லாம் அறிவை விட அகந்தையே முன்நிற்கிறது. இதை அன்றே எச்சரித்துள்ளார் நம் புலவர் பெருமான். இதோ....

"அல்லாஹ்வின் செயல் எல்லாம் நீ அறிவாய்
அகந்தைக் கொள்ளாதே - நபி
சொல் தள்ளாதே...!

நில்லாது உன் தேகம் எந்நேரம்
நீங்காது சந்தேகம்
பொல்லாத பாவ செயலைப் புரிந்து
பொழுதை வீன் கழிக்காதே
அழுது பின் சலிக்காதே..!

செல்லாது உன் வாதம் - ஆது
அவன் மகன் சத்தாதும்
கல்லான நெஞ்சன் நமுரூது பிர்அவ்ன்
கதி என்ன உணர்ந்தாயோ
நிலை என்ன தெரிந்தாயோ..!

வெல்லாது உன் அறிவு - இறைவன்
விதியினை இது தெளிவு
பாவவினை யனுகா இறையோனை-தொழுது
பலன் பெற முனைவாயா
நலம் மிகும் நினைவாயா..!"


ஆழமான கருத்துக்களை அள்ளித் தெளித்த புலவரவருக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் நெய்னார் முஹம்மது, இவர் டீகடை வைத்திருந்தார் இரண்டாமவர் ஜாஃபர் யூசுஃப், நல்ல அறிவாற்றல் பெற்ற இவர் பல கலைகளில் சிறந்து விளங்கி பலரின் பாராட்டைப் பெற்று முப்பதை நெருங்கும்போது விடைபெற்றுவிட்டார்.

புலவரைப் பற்றிய செய்திகளை சேகரிக்கும்போது அவருடைய புகைப் படம் கேட்டேன், தேடினேன், அவர் வீட்டிலும் இல்லை வேறு எங்கும் கிடைக்கவில்லை. அனால் ஒரு செய்தியை மட்டும் மகனார் சொன்னார், மஹான் ஷிப்ளி பாவா(ரஹ்) அவர்கள் மீது பாடல்கள் இயற்றி வைத்திருந்தார். அது யாரிடமும் கிடைக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தீயிட்டு எரித்துவிட்டேன், மற்ற பாடல்கள் அடங்கிய புத்தகம் செல்லரித்துவிட்டது என்று எந்த வருத்தமுமில்லாமல் சொன்னபோது எனக்கு வருத்தமாக இருந்தது. புலவரின் தந்தையும் புலவராகவே வாழ்ந்தவர் ஆனால் அவர் புலமை வழித்தோன்றல்களுக்கில்லை. புலமை என்பது இறைவன் அளிக்கும் அருள். அது தகுதி உள்ளவர்களுக்குத்தானே கிடைக்கும்.

நன்றி: தகவல்களும் சில பாடல்களும் தந்துதவியவர், மூத்த மகன் நெய்னார் முஹம்மது அவர்கள்