வேத புராணம்
தலாக் கொடுக்கப்பட்ட அந்தப் பெண்ணை மீண்டும் மணமுடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. தன் மாஜி மாமனாரை அணுகி தான் செய்த இமாலயத் தவறை உணர்ந்துவிட்டதாகவும் மீண்டும் அந்தப் பெண்ணையே மணமுடித்துக் கொள்ள விரும்புவதாகவும் தன் உள்ளக் கிடக்கையை சொன்னான். அவருக்கோ தலைச் சுற்றல் ஏற்பட்டது.
சடுதியில் சாத்தியப்படாத விசயத்தை சாதாரணமாகச் சொல்கிறானே என்று. தம்பி, கல்யாணம் என்பது கிள்ளுக்கீரை அல்ல இஷ்டத்துக்கு முடிக்கவும் எடுக்கவும், உங்களால் நாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோமென்று தெரியுமா உங்களுக்கு? என்றார் பெண்ணின் தந்தை சற்று ஆத்திரமும் வேதனையும் கலந்த குரலுடன். அவனும் விடுவதாக இல்லை, என்னால் ஏற்பட்ட துன்பம் அனைத்துக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்,
அவற்றை நிவர்த்தி செய்கிறேன், தயவு செய்து முடியாது என்று மறுத்துவிடாதீர்கள் என்று கெஞ்சினான். சரி என்னை மட்டும் சாந்த விஷயமல்ல எல்லோரையும் கலந்தாலோசிக்கவேண்டும் என்றார்.
மார்க்கச் சட்டப்படி தலாக் கூறப்பட்ட ஒரு பெண்ணை அதே மாப்பிள்ளை கல்யாணம் செய்துக்கொள்ள முடியாது. அப்படி செய்வதானால் அந்தப் பெண்ணை வேரொருவருக்குத் திருமணம் செய்துக்கொடுத்து அவர் தலாக் கொடுத்து, நான்கு மாதம் பத்து நாள் இத்தா இருந்த பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும். ஒரு வேளை அந்தப் பெண் ஹமலாகிவிட்டால் குழந்தைப் பிறந்த பிறகே கல்யாணம் செய்யமுடியும்.
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் அதே மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்துவைக்கும் முடிவுக்கு வந்தனர். ஆனால் அதற்கு முன் வேரொருவருக்கு மணமுடித்துக் கொடுத்து உடன் தலாக் கொடுக்கப்படவேண்டுமே! இதற்கு யார் சம்மதிப்பார்கள்? வாலிபன் ஒருவன் நிச்சயமாக சம்மதிக்கமாட்டான் எனவே வயோதிகராக யாராவதும் கிடைப்பார்களா என்று தேடலானர்.
அதுகால் அங்கு பள்ளிவாசலுக்கு வந்தார் ஒரு முதியவர். பழுத்தப் பழம், வயது மதிப்பிடமுடியாது, குடும்ப வாழ்க்கையைக் கடந்தவர்; லாயக்கற்றவர். அவரை அணுகினர், பெரியவருக்கு விருந்து படைத்தனர். பின் மெதுவாக செய்தியை சொன்னார்கள்.
அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெரியவர், நானோ மவுத்தை நோக்கிக்கொண்டிருக்கிறேன், இந்த சமயத்தில் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்வித்தால் ஊர் சிரிக்கும் ஆகவே வேறு யாருக்காவது செய்து வையுங்கள் என்றார்.
அவர்கள் அவரை விடுவதாக இல்லை. ஒரு இரவு மட்டும், இன்று இரவு கல்யாணம் செய்துக்கொள்ளுங்கள் மறு நாள் காலை தலாக் கொடுத்துவிடுங்கள். மார்க்கச் சட்டப்படி நாங்கள் முதல் கணவனுக்கே மறுகல்யாணம் செய்து வைத்துவிடுகிறோம். தாங்கள் எப்படியாவது சம்மதியுங்கள் நீங்கள் கேட்கும் வெகுமதிகள் தருகிறோம் என்றனர்.
அவர் சற்று யோசித்துவிட்டு, சரி நான் சம்மதிக்கிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்று பீடிகைப் போட்டார். என்ன, என்ன சொல்லுங்கள் என்றனர்.
மறுநாள் காலையே தலாக் கொடுத்துவிடுகிறேன், ஆனால் அந்தப் பெண் அதாவது உங்கள் மகள் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் தலாக் கொடுக்கமாட்டேன் என்றார். அதை அவர்கள் ஏற்றனர்.
விரைவாகவே திருமணம் நடந்தேறியது, மணமக்கள் தனி அறைக்குத் தள்ளப்பட்டனர், பொழுது விடிந்ததும் தலாக் பெறுவதற்கு எல்லோரும் தயாராகி அம்முதியவரை அணுகி தலாக் கொடுக்க நிர்பந்தித்தனர்.
அவர் அமைதியாக நான் சொன்ன நிபந்தனைப் படி அந்தப் பெண்ணை வரவழைத்து என் முன்னால் சம்மதம் தெரிவிக்கச் சொல்லுங்கள் என்றார்.
வரவழைக்கப்பட்ட மணப்பெண் அமைதியாகச் சொன்னாள், "என் வாழ்நாள் முழுவது இம்முதியவரே என் புருஷன், இனி நான் வேறு யாரையும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள்.
இது சற்றேறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தமிழக எல்லையையொட்டி கேரளத்திலிருக்கும் பூவாறு என்ற ஊரில் நடந்தேறியதாகவும் அந்த முதியவர் பெரிய நூஹ் வலியுல்லாஹ் என்றும் வாய்மொழி வரலாறு ஒன்று உண்டு. ஆனால் இதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது; இப்படியும் நடந்திருக்கலாம் என்று நம்பாதிருக்கவும் முடியாது.
நாகையை அடுத்த மஞ்சக்கொல்லை என்ற எமது சிற்றூரில் அடங்கியிருக்கும் செய்யது அப்துல் காதர் என்ற வலியுல்லாஹ் அவர்களின் புதல்வராக காயல்பட்டணத்தில் பிறந்த அவர்கள் சிறு வயதில் திருவடிக் கவிராயர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்றிருக்கிறார். நபிகள் நாயகத்தின் மீது 'திருப்புகழ்' பாடிய காசிம் புலவர்
அவர்களும் அதே திருவடிக்கவிராயரிடம் பாடம் கற்றிருப்பதால் இருவரும் சக மாணவர்கள், சமகாலத்தவர்கள் என்ற செய்தி கிடைக்கிறது.
இவர்கள் மஞ்சக்கொல்லையில் தம் தந்தையுடன் தங்கிருந்து அங்கு அடக்கமாயிருக்கும் செய்யது அஹமது வலியுல்லாஹ் அவர்களிடம் மார்க்கக் கல்வி பயின்றதாகவும் பின்பு பரங்கிப்பேட்டை சென்று மஹ்மூது தீபி(ரஹ்) அவர்களிடம் ஆன்மீகக் கல்வி பயின்றதாகவும் சொல்லப்படுகிறது. பின் அவர்கள் பொன்னானி சென்று அங்கு சில காலம் ஆசிரியராகப் பணியாற்றியதாகவும், பின் தன் வாழ்நாள் முழுவதையும் ஞானப்பாட்டையில் செலவு செய்ததாகவும் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் எப்போது பூவாறு வந்தார்கள் என்ற செய்தி தெளிவாக இல்லை. அங்கேயே தம் இறுதி நாள்வரை தங்கியிருந்து வேதபுராணத்தை இயற்றியதாக சொல்லப்படுகிறது.
வேதபுராணம் 27 படலமும் 910 பாடல்களும் கொண்ட பெரும் நூல். இதற்கு பாண்டி மண்டலம் செவ்வல்மா நகரம் வித்துவான் எம். ஏ. நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். அதில் முதலாவதாக கலிமாக் காரணப் படலத்தில் 22 பாடல்கள் இருக்கின்றன. இவை அகமியத்தின் அடிப்படையை விளக்குகின்றன. அடுத்து தொழுகைப் படலம், இன்னிசைப் படலம், குத்துபா படலம், மிஃராஜ் படலம், நோன்பு படலம் என்று நீண்டுக்கொண்டே போகிறது. ஒவ்வொன்றிலும் அதனதன் அகமியத் தாக்கமே உள்ளது புறச்செய்திகள் என்பது குறைவு. ஆத்மீக அறிவு சிறிதாகிலும் உள்ளவர்களே படிக்கமுடியும்
மற்றவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது.
ஆனால் எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படியாக இல்முனிசாப் படலம் என்ற பாடல் தொகுப்பை யாத்தளித்துள்ளார்கள். இதில் 15 பாடல்கள் உள்ள இத்தொகுப்பில் கணவன் மனைவிக்கிடையே உடலுறவு இஸ்லாமிய முறைப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கியுள்ளார்கள். இஸ்லாத்தின் sexology பற்றிய ஒரே பாடலாகத்தானிருக்கும்.
"இருகண் முடித்தா னொருகண்னாலே
இல்லெனுந் தம்மா லிழுத்துவாங்கி
முருகு நூனிலே நுக்தாவிலே
முட்டுவ துமட்டும் சுல்புமட்டும்
பருகும் நுகத்துமேல் வாங்கிக்கட்டப்
பாகமறியாத மானுடர் கேண்மோ
சொருகுங் குழல்மங்கை ஹாலுடனே
சுகமாய் மதந்தீர்க்க வறியமாட்டீர்" - பாடல்: 1
என்று தொடங்கி மனைவி என்பவள் வெறும் போகப் பொருளல்ல; கூடல் என்பது வெறும் உணர்ச்சியின் வடிகாலல்ல; அது எத்தகைய புனிதம் வாய்ந்ததாக இறைவன் அமைத்துள்ளான் என இப்பாடல்களில் விளக்கியுள்ளார்கள் என்பது இக்கடைசி வரிகளில் தெளிவாகிறது
".....ஒளிவு லாநபி முஹம்மதைவு
முவந்து மனதிலே யுறுதியாக்கித்
தெளிவா மனதிலே திறமதாக்கிச்
சேர்ந்து முஷாஹிதா செய்துவாவே" - பாடல்: 15
இதன் முழுப்பாடலும் விரைவில் ஆபிதீன் பக்கங்களில் காணலாம் காயல் மாநகரம் ஈன்றெடுத்த புலவர்கள் பலர், அவர்கள் வெறும் புலவர்களாக மட்டும் இருந்துவிடாமல் இறை நேசர்களாக வாழ்ந்து இஸ்லாத்திற்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. வெறும் மார்க்கத்தோடு நின்றுவிடாமல் தமிழ் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்ட இவர்களை தமிழக மக்கள் மட்டுமல்ல, தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல, அந்த ஊர் மக்களும் மறந்துக்கொண்டிருக்கிறார்கள்.