Sunday, December 2, 2012
அருட்கொடையாளர் - 4
அருட்கொடையாளர் – 4
மறக்கப்பட்ட மாமேதை
இப்னு அல்-நஃபீஸ் :
ஹமீது ஜாஃபர்
அருட்கொடையாளர்கள் வரிசையில் குவாரிஸ்மியைத் தொடர்ந்து கணிதவியலையே தொடராமல் மருத்துவத்தை எழுத நினைத்தேன். இந்த தலைப்பில் எனக்கு இப்னு சினாவும் இப்னு அல்-நஃபீஸும் கிடைத்தனர். ‘இப்னு சினா‘வை தெரிந்த அளவுக்கு இப்னு அல்-நஃபீஸை தெரிவதற்கு வாய்ப்பில்லை என மனம் சொல்லியது. தவிர எனக்கு மிகவும் பரிச்சயமான பெயர். ஆம், நான் வேலைப் பார்த்த (repair and maintanance) கப்பல்களில் இதுவும் ஒன்று M.V. IBN AL NAFIS. பெயர்தான் தெரியுமே தவிர அவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்? அவரின் சமுதாய பங்களிப்பு என்ன? எதுவுமே சமீபகாலம் வரைத் தெரியாது. இணையத்தில் வலை விரித்தபோது எல்லா தகவல்களும் கிடைத்தன. தமிழில் யாராவது எழுதியிருக்கிறார்களா என இணையத்தில் தமிழ் பகுதியை ஊடுருவிப்பார்த்தபோது அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. எனவே ஆங்கிலத்தில் கிடைத்த தகவல்களை வைத்து எழுதியுள்ளேன். அரேபிய மண்ணில் வாழ்ந்த அறிஞர்களின் மகத்தான பணி, பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது. ஹுனைன் பின் இஸ்ஹாக் அல் இபாதி என்ற கிருஸ்தவர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்; மருத்துவர்; பாக்தாதில் கலிஃபா முதவக்கிலுக்கு தலைமை மருத்துவர்; பல கிரேக்க நூல்களை அரபியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். பின்னால் வந்த அறிஞர்களுக்கு இவரது நூல்கள் பல வகையில் பேருதவியாக இருந்தன என்பதற்கு எள்ளளவும் சந்தேகமில்லை. இஸ்லாமிய தத்துவத்திற்கு கிரேக்க தத்துவம் ஓர் உந்துகோலாக இருந்திருக்கிறது; பல உண்மைகள் உலகுக்கு தெரியவந்துள்ளது என்பதை என்னால் காணமுடிகிறது.
மார்க்கத்தில் மட்டுமல்ல மருத்துவத் துறையிலும் எதையும் பூசி மெழுகாமல், பக்திப் பரவசம் அடையாமல், இஸ்லாமிய சாயம் பூசாமல் இன்றும் நீடித்திருக்கும் பல உண்மைகளை எடுத்துரைத்திருக்கிறார் இப்னு அல்-நஃபீஸ். அவற்றில் கொஞ்சம் இங்கே……………..
IBN AL-NAFIS – (1213-1288)
Discoverer of the minor blood circulation system.
His major original contribution of great significance was his discovery of the blood’s circulatory system, which was re-discovered by modern science after a lapse of three centuries. He was the first to correctly describe the constitution of the lungs and gave a description of the bronchi and the interaction between the human body’s vessels for air and blood. Also, he elaborated the function of the coronary arteries as feeding the cardiac muscle.
இப்னு சினாவை தெரிந்திருக்கும் அளவுக்கு இவரை பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்காது, தெரியவும் வாய்ப்பில்லை. மறைக்கப்பட்ட ஆய்வாளர்களில் இவரும் ஒருவர். இன்றளவும் மாற்றமுடியாத கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவர் எனலாம். அலாவுதீன் அபுல் ஹசன் அலி இப்னு அபி அல்-ஹஜம் என்ற இயற்பெயருடைய இப்னு அல்-நஃபிஸ், மருத்துவம், மொழியியல், தத்துவம், வரலாறு என பல்வகையில் பரிணமித்த இவர் கி.பி.1213 ம் ஆண்டு தற்போதைய சிரியாவின் தலைநகரமான டெமாஸ்கஸ் அருகே உள்ள ‘கெர்ஷ்’ என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். (கி.பி.1210 ல் பிறந்ததாக சிலரது கருத்து)
மார்க்கப் பற்றுள்ள குடும்பத்தில் பிறந்த இவர் இளம் வயதிலேயே குர்ஆனை மனனம் செய்ததோடு நில்லாமல், ஹதீஸ், மார்க்கச் சட்டம்(ஃபிக்ஹ்), இறையியல்(theology), அரபி மொழியியல் முதலியவற்றை கற்று தேர்ச்சிப் பெற்றார். பின்பு நூருதீன் முஹம்மது பின் ஜின்கி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட அல் நூரி மருத்துவமனைக் கல்லூரியில் (Bimaristan Al Noori) புகழ் பெற்ற தலைமை கண் மருத்துவரும்(Ophthalmologist), சிரியா எகிப்தின் தலைமை மருத்துவருமாக இருந்த “அல்திக்வார்” என்று அழைக்கப்பட்ட முஹ்தாபுதீன் அப்துல் ரஹீம் என்பவரிடமும் இம்ரான் அல் இஸ்ராயீலி என்ற புகழ் பெற்ற மருத்துவரிடமும் மருத்துவம் பயின்றார்.
அதுகாலை, டெமாஸ்கஸ் அய்யூபி வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டு வந்தாலும் அவர்கள் டெமாஸ்கஸ், கெய்ரோ மற்றும் பல முக்கிய நகரங்களில் கல்வி மையங்களைத் தோற்றுவித்தனர். இப்னு அல் நபீஃஸ் தன்னுடைய மருத்தவக் கல்விக்குப் பிறகு பிற மருத்துவர்களைப் போல் சிறந்த மருத்துவராகவும், ஷாஃபி சட்டக் கல்லூரியில் சட்டத்துறை வல்லுனராகவும் சிறிது காலம் பணியாற்றிய பிறகு கி.பி. 1236 ல் அய்யுபி அரசின் தலைநகரமாக விளங்கிய கெய்ரோவுக்குப் பயணமானார்.
அக்காலத்தில் மருத்துவக் கல்லூரி என தனியாக இல்லாமல் மருத்துவ மனையிலேயே கல்லூரியும் அமைந்திருந்தது. தவிர பள்ளிவாசல்களே பெரும்பாலும் கல்வி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டது. தொழுகைக்குப் பிறகு ஒவ்வொரு பகுதியிலும் அல்லது ஒவ்வொரு தூண் அருகிலும் ஒவ்வொரு வகையானப் பாடங்கள் நடத்தப்பட்டன. எனவே பயிலும் மாணவர்கள் தங்கள் பாடங்களில் முழு கவனம் செலுத்தமுடிந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கெய்ரோ வந்தடைந்ததும் அங்கு, சுல்தான் அல்-நாஸிர் சலாஹுதீன் அய்யூபி (ஆட்சி காலம் 1171-1192AD) யினால் கட்டப்பட்ட அல்-நாஸரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே பல மருத்துவர்களை உருவாக்கினார். அதில் முக்கியமானவர் அறுவை சிகிச்சை நிபுணர் இப்னு அல்-குஃப் அல்-மசிஹி. அதன்பின் சுல்தான் அல்-மன்சூர் பின் கலாவூன் என்ற மன்னரால் 1281 ல் உருவாக்கப்பட அல்-மன்சூரி மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் (Raees al thiba) பணியாற்றினார். கி.பி. 1242 ல் தமது 29ம் வயதில் இப்னு சினாவின் மருத்துவ நூலான உடற் கூறுவியலுக்கு விளக்கவுரை(Commentary on Anatomy in Avicenna’s Canon) என்ற புகழ் பெற்ற நூலை வெளியிட்டார். அதில் அவர் pulmonary circulation( நுரையீரல் இரத்தஓட்டம்); coronary circulation (இதய இரத்தச் சுற்றோட்டம்) பற்றியும் இன்னும் பல புதிய தகவல்களை (new anatomical discoveries) விளக்கியுள்ளார். அதன்பின் காலதாமதமில்லாமல் மருந்துக்களைப் பற்றிய விரிவான நூல் (comprehensive book on medicine) ஒன்றை எழுதினார். 43 வால்யூம்களக் கொண்ட இந்நூல் 1243-44 ல் அவரது 31ம் வயதில் எழுதப்பட்டது. அதன்பின் தன் மரணம் வரை 300 வால்யூம்கள் கொண்ட மருத்துவம் பற்றி (Al-Shamil fi al-Tibb) மிகப் பெரிய நூல் ஒன்றை எழுத தொடங்கினார். மரணம் குறுக்கிட்டதால் 80 வால்யூம்கள் வரை எழுத முடிந்தது. முடிவுபெறாத நூலாக இருந்தாலும் அது அக்காலத்தில் பல நூற்றாண்டுகள் வரை மருத்துவத்துறையின் மிகப் பெரிய கலைக்களஞ்சியம் (largest encyclopedia) யாக இருந்தது; இப்போதும் அது மிகப்பெரிய கலைக்களஞ்சியங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதன் கையெழுத்துப் பிரதி (manuscript) டெமாஸ்கஸில் காணக்கிடைக்கிறது.
அல்-மன்சூரி மருத்துவமனையில் பணிசெய்த காலத்தில் எகிப்தின் மன்னரான சுல்தான் அல்-தாஹிர் பைபர்ஸுக்கு அரசு மருத்துவராக (Royal physician) இருந்தார். பழைய கெய்ரோவில் அல் ஹுசைன் பகுதியில் அரேபியக் கலை நுணுக்கத்துடன் சலவைக்கற்கள் பதிக்கப்பட்டு, முற்றத்தில் நீரூற்று(fountain)டன் ஒரு விசாலமான வீடும் அதில் ஆராய்ச்சிக்கான அமைப்பும்; பெரியதோர் நூலகமும்; மாணவர்கள், ஆய்வாளர்கள், விருந்தினர் மற்றும் கூட பணிபுரிபவர்கள் ஆகியோருடன் கலந்துரையாட வசதியான விசாலமான பெரிய அறையும் உள்ள மிகப் பெரிய வீட்டைக் கட்டியிருந்தார். பின்னர் அதை தன் மரணத்துக்குப் பின் மன்சூரியா மருத்தவமனைக்கு நன்கொடையாக அளித்துவிட்டார்.
இப்னு அல் நஃபீஸ், மற்றுள்ளோரைப் போலில்லாமல் பிரத்தியேகத் தன்மை உள்ளவராக இருந்தார். அதிகாலை இறைவணக்கத்துக்குப் பின் தினமும் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளைப் பார்ப்பது; மாணவர்களுடன், சக மருத்துவர்களுடன் விவாதிப்பது; மருத்துவமனை நிர்வாகத்தை கவனிப்பது போன்றவைகளை செய்துவந்தார். மாலை நேரங்களில் தன் வீட்டில் சக மருத்துவர்கள், ஆய்வாளர்களுடன் மருத்துவம் மற்றும் தத்துவம் பற்றி விவாதிப்பது, நூல்களை ஆய்வு செய்வது படிப்பது, எழுதுவது போன்ற வேலைகளைச் செய்துவந்தார்.
தன் வாழ்நாள் முழுவதையும், தன் செல்வம் முழுவதையும், தான் பெற்ற அறிவு முழுவதையும் இவ்வுலகத்துக்கு அர்பணித்த அற்புத மனிதரை 17 டிசம்பர் 1288 வெள்ளிக் கிழமையன்று இறைவன் அழைத்துக்கொண்டான்.
மார்க்கப் பற்று
இளம் வயதிலேயே குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ் பயின்றிருந்ததால் இஸ்லாத்தின் மீது தீவிர பற்றுள்ளவராக இருந்தார் என்பதற்கு ஷாஃபி இஸ்லாமிய சட்டப் பள்ளியில் நிபுணராக இருந்ததே சான்றாகும்.
சிரியாவிலும் எகிப்திலும் அரசியல் குழப்பங்கள், ஆக்கிரமிப்பு, அமைதியற்ற சூழல் ஆகிய மோசமான நிலைகளில் இவர் வாழ்க்கை அமைந்திருந்தது. இவர் காலத்தில் ஈராக், கிருஸ்தவர்களாலும் மங்கோலியர்களாலும் ஆக்ரமிக்கப்பட்டு விலை மதிக்கமுடியாத பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தை, மக்கள் மார்க்கத்தை விட்டு விலகிப்போனதால் இறைவன் அளித்த தண்டனை என்கிறார் நஃபீஸ். மது வகைகளை குறிப்பாக wine ஐ மருந்து என்ற பெயரில் தவறாக பயன்படுத்துவதை முற்றிலுமாக வெறுத்தார். தனது கடைசிக்காலத்தில் நோய்வாய்பட்டு ஆறு நாட்கள் படுக்கையிலேயே இருந்தபோது wine அருந்தினால் நோய் குணமாகும் என்ற நிலை இருந்தும்கூட அதை அருந்தவில்லை. சக மருத்துவர்கள் சொன்னதற்கு அவர் அளித்த பதில் இதுதான்: “மரணித்தபின் என் உடம்பில் சிறு அளவில் wine இருந்தால்கூட இறைவனை சந்திக்க முடியாமல் போய்விடும் என அஞ்சுகிறேன்.” அல்-நஃபீஸ், மார்க்க கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிக உயர்ந்த பற்று கொண்டிருந்தார் என்கிறார் அவரின் மாணவரான அப்போதைய புகழ் பெற்ற இமாமும் ஹாஃபிஸுமாகிய அபு ஹையான் அல்-கர்னாதி.
Pulmonary Circulation – நுரையீரல் இரத்த ஒட்டம்
மருத்துவத்தின் தந்தை என சொல்லப்படும் ஹிப்பொக்ரேட்ஸ் (கி.மு460-375) வியாதிகளையும் அதற்கான மருந்துக்களையும், கிரீசில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் நோய், சில கொள்ளைநோய்களை ஆராய்ந்து மருந்துக்களையும் மருத்துவத்தையும் கண்டறிந்தார். ஆனால் மனித உடலின் இரத்த ஓட்டத்தைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்களோ, ரிஷிகளோ ஏதும் எழுதிவைத்திருக்கிறார்களா என்பதும் அறியவில்லை. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த Galen (கி.பி. 129-216) என்ற அறிஞர் முதன்முதலில் இரத்த ஓட்டத்தைக் கண்டறிந்தார். ’இதயத்தின் வலது பக்க அறைக்கு(right chamber of the heart) வரும் இரத்தம் இரு அறைகளுக்கும் இடையே ஆன தடுப்புச் சுவரிலுள்ள(septum) காணமுடியாத நுண் துளைகளின்(invisible pores) வழியாக இடது பக்க அறைக்குச்(left chamber of heart) சென்று அங்கு காற்றுடன் கலந்து ஸ்பிரிட்டாக உருமாறி பின் உடம்பு முழுவதும் பரவுகிறது’ என்கிறது Galen தியரி. அதன் பிறகு வந்த இப்னுசினா கூட(980-1037) கேலனுடைய கொள்கையைப் பின்பற்றுகிறார்.
இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபடும் இப்னு அல்-நஃபீஸ் , மிகத்துல்லியமாகச் சொல்கிறார்: ‘இரத்தம் வலது பக்க அறை(right chamber of the heart) யிலிருந்து இடது பக்கம்(left chember) வருகிறது. இரண்டுக்கும் இடையே நேரடியான பாதை இல்லை; Galen சொல்வதுபோல் இரண்டு அறைகளுக்குமிடையே இருக்கும் கடின தடிப்புடைய சுவரில் சல்லடைத் துளைகளோ(perforated) அல்லது புலப்படாத நுண் துளைகளோ(invisible pores) இல்லை. மாறாக வலது அறை(right chamber)யிலிருந்து இரத்தம் vena arteriosa (pulmonary artery) வழியாக நுரையீரலுக்குச் சென்று, அங்குள்ள அறைகளில் பரவி சுவாசக் காற்றுடன் கலந்து பின் arteria venosa(pulmonary vein) வழியாக இடது அறைக்கு(left chamber of the heart) வந்து அங்கு செரிவூட்டம் பெற்று (there from vital spirit….) உடல் முழுவதும் பரவுகிறது.’ [Ibn Al-Nafis explained correctly the Pulmonary Circulation (Encarta encyclopedia, key word=ibn nafis)] கேலனைத் தொடர்ந்து இப்னு சினாவும் இதயத்தில் மூன்று அறைகள்(three ventricles) இருப்பதாக சொல்கிறார்.
ஆனால் இப்னு அல்-நஃபீஸ் அதை அடியோடு மறுக்கிறார்.இதயத்தில் இரண்டு அறைகள்(two
ventricles) இருக்கிறது… அவ்விரு குழிகளுக்கு இடையேயுள்ள சுவர் வேறு எங்குமில்லாத அளவுக்கு தடிமன் கொண்டதாக இருக்கிறது(septum between these two cavities is much thicker than elsewhere). ‘The benefit of this blood (that is in the right cavity) is to go up to the lungs, mix with what is in the lungs of air, then pass through the arteria venosa to the left cavity of the two cavities of the heart…..’ என்கிறார் பிரிதோர் இடத்தில். இப்னு அல்- நபீஸ் நுரையீரலை மூன்று பகுதிகளாகத் தொகுக்கிறார். முதல் பகுதி சுவாசக் குழாய்(bronchi); இரண்டாவது பகுதி arteria venosa (கிளைத் தமனிகள்); மூன்றாவது பகுதி vena arteriosa(உட்செல் குருதிநாளக் கிளைகள்). இவை மூன்றும் மிருதுவான நுண்துளகளையுடைய தசையால் இணைக்கப்பட்டுள்ளது. (‘The lungs are composed of parts, one of which is the bronchi; the second, the branches of arteria venosa; and the third, the branches of the vena arteriosa, all of them connected by loose porous flesh’). மேலும் : ‘நுரையீரலுக்கு எடுத்துச்செல்லப்படும் இரத்தம் இதயத்தில் சூடு படுத்தப்பட்டு இளக்கம் பெற்று சென்று அங்கு மூச்சு சிற்றறைகளில் (alieoli) நுண்துளைகளின்(porus) வழியாக வழிந்து காற்றுடன் இரண்டரக் கலந்து செரிவூட்டப்பட ஏதுவாகிறது. பின் இதயத்தின் இடது குழியறையில்(left cavity) செரிவூட்டப்படுவதற்கு, குருதி நாளம் இடது குழியறைக்கு எடுத்துச் செல்கிறது’ என்கிறார். (‘… the need of the lungs for the vena arteriosa is to transport to it the blood that has been thinned and warmed in the heart, so that what seeps through the pores of the branches of this vessel into the alveoli of the lungs may mix with what there is of air therein and combine with it, the resultant composite becoming fit to be sprit, when this mixing takes place in the left cavity of the heart. The mixture is carried to the left cavity by the arteria venosa.’)
Coronary circulation
உடல் முழுவதும் பரவச்செய்யும் இதயம், வலது பக்க அறை(right chamber)யிலிருந்து இரத்தத்தைப் பெற்று தனக்குத் தேவையான சக்தியைப்(nourishment) பெற்றுக்கொள்கிறது என்கிறார் இபுனு சினா. இதை முற்றிலுமாக மறுக்கும் நஃபீஸ், அது உண்மையல்ல, இதயத்திலிருந்து உடலுக்குப் பரவும் இரத்தத்திலிருந்து இதயச் சுவற்றில் சுற்றியிருக்கும் மிகச்சிறிய இரத்த நாளங்கள் எடுத்துக்கொள்வதன் மூலமாக இதயம் சக்தி பெறுகிறது என்கிறார். இப்னு அல்-நஃபீஸ் விளக்கிய capillary circulation ஐ 1661 ல் Marcello Malpighi சொல்லும் வரை பல நூற்றாண்டுகள் ஐரோப்பாவுக்குத் தெரியாமலிருந்தது என்கிறார் Shaon
இப்னு அல்-நஃபீஸின் இரத்த ஓட்டம் பற்றிய கண்டுபிடிப்பை 300 வருடங்கள் வரை ஐரோப்பாவுக்குத் தெரியாமலிருந்தது. Andrea Alpago of Belluno இப்னு அல்-நஃபீஸின் நூலை 1547-ல் லத்தினில் மொழிபெயர்த்தார். ஆறாண்டுகளுக்குப் பின் 1553-ல் Michael Servetus தன்னுடைய Christianismi Restitutio என்ற தியாலஜிகல் புத்தகத்தில் ‘…..air mixed with blood is sent from the lungs to the heart through the arterial vein; therfore, the mixture is made in the lungs. The bright color is given to the sunguine sprit by the lungs, not by heart.’ என்ற செய்தியை வெளியிட்டார். இது நஃபீஸின் கருத்துடன் ஒத்துப்போகிறது என்றாலும் இது மதக்கோட்பாடுக்கும் கேலனின் கொள்கைக்கும் முற்றிலும் மாறுபட்டிருப்பதாக தேவாலயம் குற்றம் சாட்டி அதே ஆண்டு அக்டோபர் மாதம் அப்புத்தகத்தோடு சேர்த்து அவரையும் ஜெனிவாவில் எரித்துவிட்டது. Andreas Vesalius என்பவரும் அல்-நஃபீஸின் கருத்தை ஆதரிக்கிறார். ஆனால் அவருடைய ‘De Fabrica’ என்ற புத்தகத்தின் முதல் பதிப்பில்(1543) கேலனின் கொள்கையை ஆதரித்துவிட்டு இரண்டாம் பதிப்பில்(1555) அதை மறுத்து, ‘…I still do not see how even smallest quantity of blood can be transfused thorough the substabce of the septum from the right venticle to the left…..’ என்கிறார். இதே கருத்தை Realfus Colombo வும் தன்னுடைய ‘De re Anatomica’ வில் குறிப்பிட்டுள்ளார்.
இரத்த ஓட்டத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி என்ற தவறானக் கருத்து இன்றுவரை நிலவி வருகிறது. அதன் காரணம் இப்னு அல்-நஃபீஸ் எழுதிய நூல் மறைந்திருக்கலாம் அல்லது மறைக்கப்பட்டிருக்கலாம். 1924-ல் டாக்டர் முஹையுதீன் தண்தாவி என்ற எகிப்திய மருத்துவர் ஜெர்மனியிலுள்ள ஆல்பர்ட் லுட்விங்ஸ் பல்கலைக்கழகத்தில் ’Arab Medicine’ என்ற தலைப்பில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்துக்கொண்டிருந்தபோது பெர்லினிலுள்ள ப்ரூசியன் ஸ்டேட் நூலகத்தில் ‘ஷர்ஹ் தஷ்ரிஹ் அல் கானூன் இப்னு சினா – Commentary on the Anatomy of Canon of Avicenna” என்ற தலைப்பில் 62243 எண்ணுள்ள இப்னு அல்-நஃபீஸ் எழுதிய கையெழுத்துப் பிரதி இருப்பதைக் கண்டார். அதில் Anatomy, Pathology, physiology தலைப்புகளில் விரிவாக்கம் இருப்பதையும், pulmonary circulation ஐப் பற்றி விரிவான செய்திகள் இருப்பதையும் கண்ணுற்று உலகுக்கு வெளிப்படுத்தினார்.
1628 ல் வில்லியம் ஹார்வி ஆய்வக மிருகங்களின் இரத்த ஓட்டத்தையும், நுரையீரல் இரத்த ஓட்டத்தையும் விளக்கியுள்ளதை தன்னுடைய ‘Anatomical Essy on the Motion of the Heart and Blood in Animals’ என்ற புத்தகத்தின் விளக்கியுள்ளார். ஆனால் நுரையீரலினுள் நடக்கும் சம்பவம் அறியவில்லை. அதை, ஆக்ஸிஜனை உள்வாங்கிக்கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறது என்ற உண்மையை 18-ம் நூற்றாண்டில் Lavoisier தெளிவாக்கினார். (However, he did not understand the physiology of the pulmonary circulation (dissipation of carbon dioxide and replacement with oxygen), which was fully elucidated by Lavoisier in the 18th century .
முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு pulmonary circulation ஐ, மைகேல் ஸர்வட்டேஸ், ரீல்டஸ் கொலம்பொ, கார்லோ ரூயினி, ஆண்டிரியா கேசல்பினோ, ஃபிரான்கோஸ் ரபிலைஸ் போன்றோர் தங்களது ஆய்வுகளில் நஃபீஸின் கொள்கையையே விளக்குகின்றனர் (Mayerhof 1935). அவ்வாய்வாளர்களுக்கு அக்காலக் கட்டத்தில் நஃபிஸின் புத்தகம் கிடைத்திருப்பதற்கு வாய்ப்பிருந்திருக்க முடியும், ஆனால் நஃபீஸ் மறைக்கப்பட்டிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது (Keys 1971; Haddad 1942).
நாடித்துடிப்பு(Pulsation)
இங்கேயும் இப்னு அல்-நஃபீஸ் Galen கொள்கைக்கு மாறுபடுகிறார். ஒவ்வொரு தமனி(arteries)யும் இயற்கையாகவே ஒரேமாதிரி சுருங்கி விரிந்து இயங்குவதால் இரத்த ஓட்டம் ஏற்படுகிறது என்கிறார் Galen. இதை முற்றிலும் மறுக்கும் நஃபீஸ் தமனிகள் சுருங்கி விரிவது இதயத் துடிப்பினால், தவிர ஒன்றுபோல் செயல்படுவதில்லை, ஒன்று சுருங்கும்போது மற்றொன்று விரிவடைகிறது, இது மாறி மாறி நடைபெறுகிறது என்கிறார். நாடித்துடிப்பின் வேலையே இரத்தத்தை இதயத்திலிருந்து உடல் முழுவது பரவச்செய்வதே என்பதை அங்கீகரிக்கிறார்.
பித்த நாளம்(Canals)
பித்தப்பைக்கான நாளங்கள்(bilious canals) பற்றிய கேலனின் கொள்கையையே இப்னு சினாவும் ஆதரிக்கிறார். பித்தப்பையிலிருந்து(gall bladder) நாளங்கள் குடல் பகுதிக்குச் செல்கிறது என்கிறார் Galen. இதையே ஆரம்ப நவீன கால மருத்துவர்களான Leonardo da Vinci (1452-1519) மற்றும் Vesalious(1514-1564) ம் ஆதரிக்கின்றனர். ஆனால் இப்னு அல்-நஃபீஸ் முற்றிலும் மறுக்கிறார், ‘நான் பித்தப்பையை பல முறை ஆராய்ந்தேன் வயிற்றுப் பகுதிக்கோ அல்லது குடல் பகுதிக்கோ எதுவும் செல்வதைக் காணமுடியவில்லை’ என்கிறார்.
இதயம்
இங்கேயும் ஒரு மறுப்பு வருகிறது. இதயத்திற்கு கீழே(beneath) எலும்புகள் இருப்பதாக கேலனும் இப்னு சினாவும் சொல்கிறார்கள். அது தவறு, இதயத்தில் எந்தவித எலும்புகளும் இல்லை, அது நெஞ்சுக்குழியில் இருக்கிறது. நெஞ்சை சுற்றி எலும்புகள் காணப்படுகின்றன, இதயம் இருக்குமிடத்தில் எவ்வித எலும்புகளும் இல்லை என்கிறார் அல்-நஃபீஸ்.
தசையும் நரம்பும்
529 முக்கியமான தசைகள் மனித உடலில் இருப்பதாகக் குறிப்பிடும் அல்-நஃபீஸ், அதன் அமைப்பு, செயல், இணைக்கும் திசுக்கள்(tendons) இவை அனைத்தையும் அராய்ந்து அடுத்து விவரிப்பதாக ‘அல் ஷாமில் ஃபி அல்-திப்-(The comprehensive Book of Medicine)’ ல் குறிப்பிடுகிறார்.
Galen கொள்கைப்படி இடது கண்ணின் நரம்புகள் இடது பக்க மூளைக்கும் வலது கண்ணின் நரம்புகள் வலது பக்க மூளைக்கும் செல்வதாகக் குறிப்பிடுகிறது. அதை மறுத்து வலது கண்ணின் நரம்புகள் மூளையின் இடது பக்கமும், இடது கண்ணின் நரம்புகள் மூளையின் வலது பக்கமும் செல்கின்றன என அல்-நஃபீஸ் குறிப்பிடுகிறார். மேலும் He discovered that the muscle behind the eyeball does not support the ophthalmic nerve, that they do not get in contact with it, and that the optic nerves transect but do not get in touch with each other. He also discovered many new treatments for glaucoma and the weakness of vision in one eye when the other eye is affected by disease.
அறுவை சிகிச்சை
டெமாஸ்கஸிலும் Lane Madical Library of Stanford Univesity யிலும் இருக்கின்ற The comprehensive Book of Medicine கையெழுத்துப் பிரதியின் (MS Z 276) வால்யூம் எண் 33, 42, 43 ஆகியவைகளில் அறுவை சிகிச்சையை மூன்று பாகங்களாகப் (தஃலிம்) பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகம்(தஃலிம்) நீண்ட இருபது அத்தியாயங்கள் ‘Genral and absolute principles of surgery’; இரண்டாவது பாகம் அறுவை சிகிச்சைக் கருவிகள்(Surgical Instruments); மூன்றாவது பாகம் ஒவ்வொரு அறுவை சிகிச்சையைப் பற்றிய பரிசீலனை. முதல் பாகத்தில் முதல் ஆறு அத்தியாயங்களே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவைகளாவன:
1. அறுவை சிகிச்சைக்கு முன் ஆயத்தப்பணிகளில் மருத்துவரின் பங்கு.
2. அறுவை சிகிச்சையின் தன்மையும் நோயாளியின் நிலைகளும்.
3. மருத்துவமும்(treatment), அதன் கால அவகாசமும்.
4. விரிவான ஆலோசனையை உரிய காலத்தில் அளிப்பதில் மருத்துவரின் பங்கு.
5. அறுவை சிகிச்சையின்போது மருத்துவருடைய முழு கவனம் செலுத்துவதின் அவசியம்.
6. அறுவை சிகிச்சையின்போது நோயாளியின் நிலை(posture).
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருக்கவேண்டுமென்றால் மூன்று விசயங்களில் மருத்துவர் கவனம் செலுத்தவேண்டும். முதலாவதாக சிகிச்சைக்கு முன் நோயுள்ள பாகத்தை சரியாகத் தெரிவு செய்தல்; இரண்டாவதாக, சிகிச்சைக்கான கால அவகாசத்தை தீர்மானித்தல்; மூன்றாவதாக , சிகிச்சைக்குப் பின் நோயாளி தனக்குத் தானாக கவனம் எடுத்துக்கொள்ள செய்தல், அடுத்து இறைவன் அருளாள்(‘by the will of God’) குணமடையும் வரை மருத்துவரும் நர்சும் கவனம் செலுத்துதல். இதல்லாமல் மருத்துவர், நர்ஸ், நோயாளி இவர்களின் பங்கு பற்றிய விரிவான செய்திகளும் அறுவை சிகிச்சைக் கருவிகளை நுணுக்கமாக உபயோகித்தல் மற்றும் பராமரித்தல் பற்றியும் எழுதியுள்ளார்.
Urology
சிறுநீரகம் அதன் தன்மை, நோய் பற்றிய தகவல்களில் தாம்பத்திய உறவில் sexual dysfunction and erectile dysfunction க்கு மருத்துவ மனையிலேயே பரிசோதித்த உட்கொள்ளும் மருந்தையே(oral drugs) வலியுறுத்துகிறார். இருந்தாலும் சில நோயாளிகளை வெளி மருந்து கொடுத்தும் குணப்படுத்தியிருக்கிறார். (…also treated through topical or transurethral means.)
Otolaryngology
அல்-முஜாஜ் ஃபி அல்-திப்(A Summary of Medicine) புத்தகத்தில், செவி வலி, செவியழற்சி(otitis), நடுச் செவியழற்சி(otitis media), வெளிக்காது வீக்கம்(otitis externa), செவிக்குழல் வலி, அதனால் ஏற்படும் சிறு வீக்கம், சீழ் போன்ற நீர் வடிதல், கேட்கும் திறன்குறைவு போன்றவை ஆறம்ப நிலை குறைபாடு, கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது குணப்படுத்தமுடியாது நிலைக்கு(chronic stage)க்கு செல்லும் என்கிற அவர் கருத்து இன்றும் நீடிக்கிறது. இதை குணப்படுத்த வினிகரை(Vinegar) உபயோகப்படுத்துகிறார். இன்றும்கூட அழற்சிக்கு(infection) இதை உபயோகிக்கின்றனர்.
தத்துவம் & மனோவியல்
இறையியலை அடிப்படையாக வைத்து இவரது தத்துவக்கோட்பாடு இருக்கிறது, அவை இரண்டும் இஸ்லாமிய மருத்துவத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே மற்றுள்ளோரிலிருந்து மாறுபட்டு நிற்கிறார், உயிரும் உணர்வும்(soul and spirit) இதயத்திற்கு சொந்தமானது எனும் அரிஸ்டாட்டில் மற்றும் இப்னு சினாவின் கோட்பாட்டிலிருந்து விலகி அவை இரண்டு ஒன்றோ அல்லது பல உறுப்புகளுக்கோ(organs) தொடர்புடையதல்ல அது ’தான்’ என்ற தனித்தன்மை வாய்ந்தது என்கிறார். மனோவியலைப் பொருத்தவரை உணர்ச்சி, அறிவு(cognition), கற்பனை, செயல் இவைகளை இதயம் கட்டுப்படுத்துகிறது என்கிற அரிஸ்டாட்டிலின் கருத்தை முற்றிலுமாக மறுத்து மூளையே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறார்.
உணவு மற்றும் சுற்றுச்சூழல்
கித்தாப் அல்-முக்தார் ஃபி அல்-அகுதியா(The Coise of Foodstuffs) என்ற நூலில் உணவு, ஊட்ட உணவு(nutrition), நோயாளிக்கு கொடுக்கவேண்டிய உணவின் அளவும் வகையும், உடல் ஆரோக்கியம் இவைகளைப் பற்றி விரிவாக குறிப்பிடுவதோடல்லாமல் நோயாளிக்கு கொடுக்கப்படும் மருந்தின் அளவையும் குறிப்பிட்டுள்ளார். சுற்றுச்சூலைப் பற்றி குறிப்பிடும்போது, மாசுக்கட்டுப்பாடு சம்பந்தமாக காற்று அசுத்தமடைதல், நீர் அசுத்தமடைதல், மண் கேடாகுதல் (soil contamination), நகராட்சி குப்பைகளை தவறான முறையில் கையாளுதல், குறிப்பிட்ட சில பகுதிகளில் சுற்றுச்சூழலை மதிப்பீடு செய்தல் போன்ற அனைத்தையும் (அப்போதே) விளக்கியுள்ளார். (எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் இப்போது மாசுக்கட்டுப்பாட்டைப் பற்றி உலகளவில் வியாக்கியானம் செய்துக்கொண்டிருக்கிறோம்! )
நாவல்
அல்-ரிஸாலா அல்-கமாலிய்யா ஃபி ஸீரா அல்-நபவிய்யா (The Treatise of Whole on the Prophet’s Biography) முதன் முதலில் அரபியில் இறையியலை மையமாக வைத்து எழுதிய அறிவியல் கதை; நாவல்; எதிர்கால சந்ததியினருக்கு பண்டைய பாலைவன மக்களின் சரிதையின் உதாரணம். இது 1268 க்கும் 1277 க்குமிடையில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.
உணவின் மூலம் வளர்ச்சியடையும் பொருள் வளர்ச்சிதை மாற்றம்(catabolism) உள்ளடங்கிய ஜீவத்துவ பரிணாமம்(metabolism) சிக்கலான மூலக்கூற்றுகள் இணைசேர்ந்து இன்னும் பெரிய மூலக்கூற்றுகள் உருவாகும் வேதிவினை மாற்றத்தை(anabolism) உதாரணமாக்கி எழுதியுள்ளார். மேலும் இஸ்லாம் மதுவை தடை செய்திருக்கும்போது, மாறாக பண்டைய கிரேக்க மருத்துவர்களும், அவர் காலத்து ஒரு சில இஸ்லாமிய மருத்துவர்களும் குறிப்பிடுவது போல் wine ஐ மருந்துக்காகப்(self medication) பயன்படுத்துவதை இறையியல் அடிப்படையில் கண்டிக்கிறார். அவர்காலத்தில் ஒரு சில முஸ்லிம்கள் மது அருந்தலையும் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதுதான் காரணம் மங்கோலியர்கள் இஸ்லாமிய நாடுகளின்மீது படை எடுத்தது. இது இறை தண்டனை(divine punishment) என்கிறார் அந் நாவலில். இப்படி கதை ஒருபக்கம் இருந்தாலும் இப்னு சினாவின் உடற்கூறுவியலையும் pulmonary circulation பற்றியும் மனோவியல் பற்றியும் கதைவடிவில் சொல்கிறார்.
இஸ்லாமிய உணர்வு
இளமைக் காலமுதல் கொண்டிருந்த மார்க்கப் பற்று மருத்தவத்தில் முன்னோடியாக இருந்தாலும் கடைசிவரை கிஞ்சிற்றும் மாறாமல் இருந்து வந்திருக்கிறது. சட்டவியல்(Fiqh) மற்றும் மார்க்கச் சட்டம்(Sharia Law) பற்றி அனேக நூல்கள் எழுதியுள்ளார். அதில் முக்கியமானது ‘முஜாஜ் அல்-கானூன்’(The Summary of Law).
மொழியியலைப் பற்றி இரண்டு நூல்கள் எழுதியுள்ளார், ஒன்று ‘தரீக் அல்-ஃபசஹா’-பேசும் முறை(Road to Eloquence); மற்றொன்று சயீத் பின் அல்-ஹஸன் பக்தாதியுடைய ‘அல்-ஃபுசூஸ்’(The Segments) என்ற நூலுக்கு விளக்கம். தவிர தர்க்க சாஸ்திரத்தில் இப்னு சினாவின் ‘அல்-இஷ்ர’-அடையாளம்(The Signs) மற்றும் ‘அல்-ஹிதாயா’-வழிகாட்டல் (The Guidence) என்ற நூற்களுக்கு விளக்கமும் ‘அல்-வர்கத்’ (The Little Papers) என்ற நூலும் எழுதியுள்ளார். இது அரிஸ்டாட்டில் தத்துவத்தில் அவரது Organon and Rhetoric (ஆராய்ச்சி முறை மற்றும் அணியிலக்கணம்) பற்றி விளக்குகிறது.
அல்-முஃக்தஸர் ஃபி இல்ம் உஸூலில் ஹதீஸ்(A Short Account of the Methodology of Hadhidh) என்ற பெயருள்ள நூலில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு ஹதீஸ், அவர்கள் சொன்ன சூழல் அல்லது காரண காரியம்(இஜ்திஹாத்), அதன் தன்மை, அது பெறப்பட்ட வழி (இன்சாத்-chain of transmission) இவைகளை நோக்கவேண்டும் என்கிறார். அதே காலத்தில் வாழ்ந்த இப்னு அல்- சாஹிஹ், ஹதீஸ் பெறப்பட்ட வழிமுறைகளை ஆய்ந்தால் போதும் என்கிறார். ஆனால் ஹதீஸ் ஆய்வாளர்களான இப்னு கல்தூன், அல்-தஹபி போன்றோர் ஹதீஸில் உன்னுடைய அறிவை எல்லா இடத்தும் உபயோகப் படுத்தாதே எப்போது தடுமாற்றம் அல்லது தெளிவு கிடைக்கவில்லையோ அப்போது சிந்தனைச் செய் என்கிறார்கள்.
ஹதீஸ் வல்லுனர்கள் நபி மொழியை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். 1.உண்மையானது(Shih); 2. ஏற்றுக்கொள்ளத்தக்கது (அஹ்ஸன்-Fair); 3. பலவீனமானது(ளயீஃப்). ஆனால் இப்னு அல்-நஃபீஸ் நான்காகப் பிரிக்கிறார், 1.உண்மையானது(மஃக்லூம் அல்-சிதுக்); 2.உண்மையாக இருக்கலாம்(யுஜன்னு பிஹில் சிதுக்);3. உண்மையற்றதாக இருக்கலாம்(யுஜன்னு பிஹில் ஃகதப்); 4.உண்மையற்றாது என வரையறுக்கப்பட்டது.(மஃக்லூம் அல்-ஃகதப்). இன்னும் சஹி புஹாரி, சஹி முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்களை கண்ணுறும்போது இன்சாத்(Chain of transmission) ஐ பார்த்தபின்பே அது எத்தன்மை வாய்ந்தது என முடிவு செய்யவேண்டும், காரணம் பெருமானார் அவர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படவில்லை. ளயீஃபான ஹதீஸ்களை உண்மையற்றாதாக இருக்கலாம் என்ற வரிசையில் சேர்த்துவிட்டு ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் ஒருவர் நேர்மையற்றவராக இருந்தாலும் அது தவறானது, மார்க்க விசயத்தில் தவறு ஏதும் நிகழ்ந்திடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்.
Views of Some Modern Historians :
Max Meyrholf, a distinguished scholar of Arabic historical medicine, stated:
“… We have seen that Ibn Nafis, three centuries before Colombo, had already noticed visible passages between the two types of pulmonary vessels.”
In the William Osler Medal Essay on the discovery of the pulmonary circulation, Edward Coppola said,
“…The theory of pulmonary circulation propounded by Ibn Nafis in the 13th century was not forgotten and that centuries after his death it may have influenced the direction of the anatomical investigations of Colombo and Valverde, who finally announced it to the
Western world as a physiological fact susceptible to experimental proof.”
“Ibn al-Nafis is best known for his writings on physiology and medicine. His book Sharh Tashrīh al-Qānūn described pulmonary circulation centuries before noted English physician William Harvey described the circulation of blood in 1628″, (Encarta Encyclopedia
2003)
Sami Haddad from Lebanon published an article in the Annals of Surgery in 1936 about Ibn Nafis and other articles were published also by Ayman et al and Dr. Abdul Kareem Shahadah from Syria showing clearly that Ibn Al-Nafis should be given the credit for the
discovery of the pulmonary circulation 300 years before William Harvey was even born!
***
Sources:
http://www.scivee.tv/node/5813 (Video)
http://shaonforeveryone.blogspot.com/2011/02/biography-of-ibn-al-nafis.html
http://en.wikipedia.org/wiki/Ibn_al-Nafis
http://wiki.answers.com/Q/What_was_Ibn-al-Nafis_ideas_for_the_human_cirulation
http://records.viu.ca/~mcneil/nafist.htm
http://www.unhas.ac.id/rhiza/arsip/saintis/nafis.html
http://www.eimjm.com/Vol2-No1/Vol2-No1-L2.htm
http://www.indepreviews.com/article/2011/vol-13-no-1/002-101-Ibn-Al-Nafis.pdf
http://forum.urduworld.com/f1006/ibn-al-nafis-335429/
http://www.islamonline.com/news/articles/7/Ibn_Al_Nafis.html
http://wzzz.tripod.com/NAFIS.html
http://pusaka-arqustany.blogspot.com/2009/11/ibn-el-nafis-1208-1288-ad.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment