Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Saturday, August 22, 2009

ஊர் சுற்றிய ஓவர் கோட்

ஹமீது ஜாஃபர்



'Booooooooooo...mm.....' என்ற சங்கின் ஒலி அருகிலிருந்த துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த கப்பல்களிலிருந்து வந்தபோது எதிர் கட்டிடத்தில் தங்கியிருந்த மலையாளிகளின் 'HAPPY NEW YEAR..............' என்ற காட்டுக்கத்தலில் அடங்கிப்போனது. புது வருசம் பிறக்கிறதே எல்லா மக்களும் நலத்துடன் வாழ இறைவனை சற்று பிரார்த்திப்போம் என்ற எண்ணத்தில் பால்கனியில் அமர்ந்து துதித்துக்கொண்டிருந்தேன், ஐந்து நிமிடம் தொடர்ந்து வந்த அவர்களின் happy new year சவுண்டில் திரளமுடியாமல் மனம் திணறியது. ஒரு வழியா பிரார்த்தனையெ முடிச்சுக்கிட்டு எழுந்தபோது அவர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர் பாட்டில்களைத் திறந்தபடி.


புது வருடம் என்றால் பாட்டிலில்தான் தொடங்கவேண்டும் என்பது சிலரின் சித்தாந்தம்; வேறு சிலரோ இனிப்புகள் வழங்கி கொண்டாடுறாங்க; சிலர் கோயில்களுக்கு சென்று தனி வழிபாடு செய்றாங்க; கிருஸ்தவர்கள் மாதா கோயிலின் மணியோசையூடே கர்த்தரை விஷேச ஆராதனை செய்றாங்க. நான்... அது தனி வழி!


இவன் முஸ்லிமாக இருந்துக்கிட்டு கிருத்துவ வருஷ பிறப்பை கொண்டாடுறானே என்று சில மேதாவிகளுக்கு கேள்வி எழாமலிருக்க முடியாது. வாழ்க்கைக்குத் தேவையான எல்லா கணக்கு வழக்குகளையும் வயது முதல் வாங்குகிற சம்பளம் வரை இந்த காலண்டரைத்தானே பின்பற்றுறோம் என்பதை கருத்தில் கொள்ள அவர்கள் மறந்திருப்பது பெரிய விசயமல்ல.


பிரார்த்தனையை முடிச்சிக்கிட்டு எழுந்தபோது என்னுடைய கைபேசியில் குறுந்தகவல் ஒன்னு வந்திருந்தது. "வருசங்கள் வேண்டுமானால் புதுசாகப் பிறக்கலாம், உங்கள் மனசு எப்போதும்போல் பழசாகவே இருக்கட்டும். பிரியத்தோடும் பிரார்த்தனையோடும்-HAPPY NEW YEAR - ஹபீபுல்லாஹ்" என்ற செய்தியை புத்தாண்டு செய்தியாக கவிஞர் ஹபீபுல்லா நானா சரியாக 12.02 க்குஅனுப்பியிருந்தார்.


புத்தாண்டு வாழ்த்து சொன்ன முதல் நபர் அவர்தான். குறுகிய காலப் பழக்கத்தில் இத்தனை அன்னியோன்னியமாகவும், அண்ணனாகவும், நண்பனாகவும், பிரச்சனைகள் வரும்போது தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவும், தன்னை நாடி வருகிறவர்களின் காரியங்களை தன் காரியமாக ஏற்று நடத்திவைக்கிற காரியகர்த்தாவாகவும், மொத்தத்தில் உதவும் கரமாக இருக்கும் அவரை நினைத்தபோது மனம் மகிழ்ந்தாலும் மறுபுறம் நெகிழவும் செய்தது.


செல்வ(பணம்)மில்லாத செல்வாக்கு மிக்கவர்; பேங்க் அக்கவுண்ட் இல்லாத பணக்காரர்; நகர சுத்தி தொழிலாளி முதல் மாவட்ட கலக்டர் வரை அனைவராலும் மதிக்கப்படுபவர்; அவர் வீட்டுப்பக்கம் போகிறவர்கள் அவர் இல்லாவிட்டாலும் வீடு திறந்திருந்தல் 'கவிஞரே சலாமலைக்கும்' என்று சலாத்தை சொல்லிவிட்டுத்தான் போவார்கள் அப்படி ஒரு பிணைப்பு. இவருடைய பிரத்தியேக அறையில் ஜன்னல் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு ஈஸி சேரில் அமர்ந்தாரென்றால் இவர் கண்ணில் படாமல் யாரும் தெரு வழியே போகமுடியாது. 'ஓய்! என்னா ரெண்டு நாளா ஆளையே காணும், வாங்கனி உள்ளே, வந்து உம் முகத்தை காமிச்சுட்டுப் போரும்' என்று கூப்பிட்டு நலம் விசாரித்துவிட்டுதான் அனுப்புவார்.


ஊரில் மட்டுமல்ல இந்த செல்வாக்கு, மத்திய அமைச்சரிலிருந்து மாநில அமைச்சர் வரை முன் அனுமதிப் பெறாமல் சந்திக்க வல்லவர். அரசியலில்தான் அப்படி என்றுமட்டுமல்ல ஆன்மீகத்திற்கும் அணு அணுவாக விளக்கம் சொல்வார். குர்ஆனில் மார்க்க அறிஞர்களிடம் பெற முடியாத விளக்கத்தை இவரிடம் அறிவுபூர்வமாகப் பெறலாம்.


இவ்வளவு செல்வாக்கு இருந்தும் இவருடைய வாழ்க்கையை யாருடன் ஒப்பிடுவது என்று புரியவில்லை. காமராசருடன் ஒப்பிடுவதா? இல்லை கக்கனுடன் ஒப்பிடுவதா? இல்லை சாதிக் பாட்சாவுடன் ஒப்பிடுவதா? அது ஒரு தனி ஸ்டைல். எந்த பந்தாவும் கிடையாது, நிரந்தர வருமானம் கிடையாது ஆனா எந்த குறையுமில்லாம நிம்மதியான வாழ்க்கை. எதுக்காகவும் கவலைப் பட்டதும் கிடையாது, எது தேவையோ அது கிடைக்கிறது அதுக்காக யாரிடமும் பல்லை இளிப்பதும் கிடையாது, எந்த பொருளுக்கும் ஆசைப்பட்டதும் கிடையாது. எப்படி கிடைக்கிது? எப்படியோ கிடைக்கிது, அல்லாஹ் கொடுக்கிறான் என்பார்.


அழகான இரண்டு கட்டு வீடு ஆனால் அவரைப் பந்தல் மாதிரி இருக்கும். வெயில் காலத்தில் வட்ட வட்டமா சூரிய ஒளியை வீடு முழுக்கப் பார்க்கலாம். என்ன நானா இது என்று கேட்டால் அல்லா டிசைன் போட்டிக்கிறான் என்று சொல்வார். ஒரு முறை டெலிபோன் செஞ்சபோது, 'தம்பி! இங்கே மழை பேஞ்சிக்கிட்டிருக்கு, வூட்டை அல்லா கழுவிட்டுக்கிட்டிருக்கான், நான் ரெண்டு காலையும் தூக்கிவச்சுக்கிட்டு ஒரு நாக்காலியில் குத்தவச்சிக்கிட்டு பேப்பர் படிச்சிக்கிட்டிருக்கேன்' என்றார் அலட்சியமாக.


'நானா நீங்க வூட்லெ உட்கார்ரதெவிட நாக்காலியெ தெருவுக்கு எடுத்துக்கிட்டுப்போயி அங்கே போட்டு உக்காந்துக்கிட்டு கொடையெ புடிச்சிக்கிட்டு பேப்பர் படிங்க நல்லாஇருக்கும்' என்றேன்.


ஹா... ஹா... ஹா... என்று வெடி சிரிப்பு சிரிச்சார்.


'நானா சிரிக்காதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு.'


'ஏன் தம்பி?'


'ஆமா இருக்காதா என்ன? வூடுபூராவும் ஒழுவுது, நீங்க என்னடான்னா நியுரோ மன்னன் மாதிரி பேப்பர் படிச்சிக்கிட்டிருக்கேன் என்று சர்வசாதாரணாமா சொல்றீங்களே?'


'அல்லா இருக்கான் தம்பி!'


'இதுக்குமா அல்லா இருக்கான்? ஓடு ஊறி, மரம் ஊறி வூடு இடிஞ்சு விழுந்தா என்னவாகும்?'


'தம்பி......., சுனாமி வந்தப்போ எல்லார் வூட்லெயும் கடல் தண்ணி பூந்துடுச்சு ஆனா என் வூட்டுக்கு வரலே, கொல்லை கிணத்தடியோடு வந்துட்டு போய்டுச்சு. இத்தனைக்கும் என் வூடு தனிஞ்ச வூடு. இது அல்லாவுடைய வேலை இல்லையா? அப்ப காப்பாத்தலே?'


'அப்ப காப்பாத்தினாப்லெ எப்பவுமா காப்பாத்துவான்?'


'எப்பவும்தான் காப்பாத்துவான்.'


அவரோட இறை நம்பிக்கையையும் மன உறுதியையும் என்னால் புரிஞ்சுக்கொள்ளமுடியவில்லை. ஒரு முறை வீடு ரிப்பேர் பண்ணுவதற்காக கையில் பணம் இருந்தபோது, 'என் மவன் கடைசி வருசம் எம் காம் படிக்கிறான் பீஸ் கட்ட பணமில்லே, நாளைக்கு கட்லேன்னா பரீட்சை எழுத முடியாது யார்ட்டையாவது தோது பண்ணி கொடுத்தீங்கன்னா... ' என்று ஒருத்தர் வந்து கேட்டபோது கையிலிருந்த பணத்தை கொடுத்துட்டார்.


'ஏன் நானா கொடுத்தீங்க' என்று கேட்டதற்கு 'நாளைக்கு கட்டலேன்னா அவன் படிப்பு வீணாயிடும், நாம பிறகு ரிப்பேர் பாத்துக்கலாம். அது அவனோட "ஹக்" அல்லா என்னிடம் கொடுத்துவச்சிருந்தான், அதை அவன்ட்டே கொடுத்திட்டேன்' என்றார்.


இப்படி சொல்லி சொல்லியே வருடம் அஞ்சாறு கடந்துடுச்சு. எத்தனை முறை அல்லா கொடுப்பான் என்று தெரியலெ. இந்தாளுக்கு கொடுப்பதில் பிரயோசனமில்லை என்று அல்லா நிறுத்திட்டா..? அதற்கும் பதில் சொல்லிபுட்டார். 'அவன் நிறுத்தமாட்டான். ஏன்னா நான் அவனுடைய நல்லடியான். நல்லடியானை ஒருபோதும் கைவிடமாட்டான்.' என்று.


இரண்டு நாளைக்கு முன்பு வந்த எஸ் எம் எஸ்சில்..



"இறைவா!

எங்களை உயர்ந்தோனாய்

படைத்தாய்

நாங்களோ

தாழ்ந்தோனாகல்லவா

இருக்கிறோம்"


"இறைவா!

உன்னை அனைத்திலும்

சேர்த்தல்லவா பார்க்கச் சொன்னாய்

நாங்கள்

பிரித்தல்லவா பார்க்கிறோம்"



என்று இரண்டு கவிதைகளை அனுப்பியிருந்தார். படித்துவிட்டு உடனே போனைப்போட்டு, 'நானா, கவிதை நல்லா இருக்கு' என்று ஒரு மரியாதைக்கு சொன்னபோது நான் அடுத்த வாரம் டெல்லிக்குப் போறேன் என்றார்.


'ஹலோ, நானா என்ன சொல்றீங்க? டெல்லியிலெ யாரைப் பாக்கப்போறீங்க?'


'அங்கேந்து ஜெனிவா போறேன்.'


'எதுக்குப் போறீங்க? ஜெனிவாவுலே இலக்கிய கூட்டமா?'


'அதெல்லாம் ஒன்னுமில்லெ..., மனித உரிமை கமிஷன் அழைச்சிருக்கு. தமிழ் நாட்டு சார்பா முதல்வர் என்னையும் அனுப்புறார், டெல்லிக்குப் போய் பிரதமரை சந்திக்கிறோம், அதுக்குப் பிறகு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலமையிலெ டெலிகேஷன் ஜெனிவா போவுது, அதுலெ நானும் ஒரு மெம்பர்.'


'கேட்க சந்தோசமா இருக்கு, தமிழ் நாட்டுக்கு முத்திரை பதிச்சிட்டு வாங்க.'


'துஆ செய்ங்க.'


என் துஆ எப்போதும் இருக்கு. ஜெனிவாவுலெ மைனஸ் டிகிரிக்கு குளிர் இருக்கும், அதனாலெ..'


'அதனாலே...'


காமராஜர் வேஷ்டியெ கட்டிக்கிட்டு ரஷ்யா போனது மாதிரி நீங்களும் போவாதீங்க, கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு போங்க.'


'தம்பி, என்னிடம் சால்வை இருக்கு.'


சால்வை என்றதும் நண்பன் பாசுவின் ஞாபகம் வந்தது. பாசு விவசாயி எபோதும் தலையிலெ முண்டசோடுத்தான் இருப்பான். கோடையில் டவல் இருக்கும் குளிரில் மஃப்ளர் இருக்கும்.


'மஃப்ளர் பத்தாது சொட்டர் போட்டுக்குங்க இல்லேன்னா நெஞ்சுலெ சளி வைக்கும்' என்று அடிக்கடி சொல்லிவந்தால் அவன் பொண்ஜாதி. அவ நச்சரிப்பு தாங்காம ஜவுளி கடைக்குப் போய் விலை ஒயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்னு வாங்கி போர்த்திக்கிட்டு பொண்டாட்டி முன்னாலெ திடுதிப்புன்னு போய் நின்னுருக்கான். அவனை பாத்துட்டு, 'ரொம்ப நல்லாருக்கு, கைலெ ஒரு கம்பும் ஒரு அரிக்கலாம்பு லைட்டும் வச்சுக்குங்க நம்மூரு தலையாரி மாதிரி இருக்கும்' ன்னு சொல்லிட்டு மொகத்தை திருப்பிக்கிட்டு சமயக்கட்டுக்குப் போய்ட்டா. மனம் நொந்து போய் அன்னைக்கு அதெ தூக்கி எறிஞ்சவன் தான் இன்னைக்கு வரை அதெ எடுக்கவே இல்லை.


அந்த மாதிரி இவர் பொண்டாட்டியும் எக்கு புக்கா எதும் சொல்லிடக்கூடாதுன்னு நெனச்சுக்கிட்டு..


'சால்வை டெல்லி குளிருக்குப் பொருந்தும், ஜெனிவாவுக்கு லாயக் படாது, என் வூட்லெ குளிருக்காக உள்ள ஓவர் கோட் made in england ஒன்னு இருக்கு கொண்டுவந்து கொடுக்க சொல்றேன் அதையும் எடுத்திக்கிட்டுப் போங்க.'


'சரி தம்பி' என்று சொல்லிவிட்டு போனை வைச்சுட்டார்.


அந்த ஓவர் கோட்டுக்குப் பின்னால் ஒரு கதையே இருக்குது.


ஒரு வருஷம் நான் நாயா பேயா அலைஞ்சு அந்த வேலையில் அமர்ந்தேன். "கா காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசா இருக்கனும்" னு சொல்லுவாங்க. அந்த மாதிரி கவர்மெண்ட் உத்தியோகம், அதுவும் பாதுகாப்புத் துறையிலே. யூனிபாரத்தோடு வருசா வருசம் குளிர் கால உடையும் கிடைக்கும். அந்த உடை உடுத்துற அளவுக்கு இங்கே குளிர் கிடையாது. அதனாலெ ஒரு டிரஸ் இரண்டு மூன்று வருஷத்துக்கு வரும். இப்படி நாலைஞ்சு டிரஸ் சேர்ந்ததினால் எனக்கென்று ஒரு டிரஸ்ஸை வைச்சுக்கிட்டு மீதத்தை தெரிந்தவர்களுக்கு உபயம் பண்ணிடுவேன். அப்படி கிடைச்சதுதான் இந்த ஓவர் கோட்டும்.


என்னிடம் இரண்டு இருந்துச்சு. அதனால் ஒன்னை யாருக்காவது கொடுக்க தீர்மானிச்சேன். என் மைத்துனன் ஒருவன் இருக்கான் பேனா மூடி மாதிரி ஒன்னரை இஞ்ச் ஒயரத்தில், நீ தான் பைக்கில் டிராவல் செய்றவனாச்சே இதெ வச்சுக்க என்று கொடுத்தேன். பெரிசா இருக்கு மச்சான் என்று சொல்லி மறு நாளே திருப்பி கொடுத்துட்டான். அப்புறம் என் கூட்டாளி ஒருத்தன், பெரும்பாலும் சைட்லெதான் இருப்பான் ஒறைக்கிற வெயிலும் நடுங்குற குளிரும் அவன் தலையிலெதான். இரக்கப்பட்டு அவனிடம் கொடுத்தேன். பெரிசா தேங்க்ஸ் சொல்லிப்புட்டு எடுத்துக்கொண்டான். நானும் சந்தோஷத்திலெ இருந்தேன்.


அந்த சந்தோஷம் இரண்டு நாள்தான் இருந்துச்சு, திருப்பி கொடுத்திட்டான். ஏண்டா என்று கேட்டேன். போட்டுக்கிட்டுப் போனேன், சார் நீங்க வேட்டைக்காரன்லெ வர்ர எம் ஜி ஆர் மாதிரி இருக்கீங்கன்னு சைட்லெ சொல்றானுவ, ஆபிஸ்லெ என்னன்னா எம் ஆர் ராதா மாதிரி இருக்கேன்னு சொல்றானுவ, ரூம்லெ என்னடான்னா துப்பறியும் சங்கர்லால் மாதிரி இருக்கேன்டு சொல்லி ஆளுக்காளு வெடைக்கிறானுவ இது சரிப்பட்டு வராது என்று திருப்பிக்கொடுத்திட்டான்.


அப்புறம் எனக்கு தெரிஞ்ச சிலோன்காரன், அவன் பாரிஸுக்கு வேலைக்கு போனான். பாரிஸ் குளிரா இருக்கும் இதை என் அன்பளிப்பா எடுத்திக்கிட்டுப் போ என்று கொடுத்தேன். பொட்டியிலெ வைக்க இடமில்லே சாமான் ஜாஸ்தியா இருக்குதானே, அது உங்க கிட்டயே இருப்பதும் நல்லதுதானே என்று சிலோன் தமிழ்லெ கதச்சிட்டு திருப்பி கொடுத்தான்.


'நீ பொட்டியிலே வைக்காதே கையிலெ வச்சுக்க இல்லேன்னா போட்டுக்கிட்டு போ' என்றேன்.


'வாணா, அங்கெ என்னோட உம்மாவோட தங்கச்சியோட மகன் இருக்கான்தானே அவன் தருவான், நா அவன்கிட்டே பெறுவதுதான் நல்லது' என்றான்.


'எலே! சின்னம்மா மகன் ஒனக்கு தம்பிதானே, தம்பி சொல்லித்தொலை அது என்ன உம்மாவோட தங்கச்சியோட...' என்றேன்.


'அப்படித்தான் நாங்க கதப்போம்.' என்றான்.


பட்டணத்தில் பூதம் கூஜா மாதிரி திரும்பத்திரும்ப என்னிடமே வந்ததை விதியோன்னு ஊருக்கு எடுத்துக்கிட்டு போய்ட்டேன். இப்படி ஊர் சுத்திக்கிட்டிருந்த கோட்டைத்தான் நானாவிடம் கொடுத்தேன்.


ஓவர் கோட் கிடைத்தது என்று செய்தி அனுப்பியிருக்கிறார். மனசுக்கு சந்தோஷமாக இருக்கு ஆனா அது மறுபடியும் திரும்பி வராம இருக்கனும்.

-----0000----




25-1-2008 திண்ணையில் வெளிவந்தது

ஜிகினா

ஹமீது ஜாஃபர்



மும்பை அந்தேரியிலுள்ள எங்கள் வாடிக்கையாளர் அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொண்டு லிஃப்ட்டுக்கு காத்திராமல் விறுவிறுவென்று படி இறங்கினேன். நான் எந்த வேகத்தில் இறங்கினேனோ அதே வேகத்தில் எதிரில் வந்த ஒருவன் என்னை இடித்துக்கொண்டு மேலே ஏறினான். இடி பலமாக இருந்ததால் கோபத்தில் 'எருமை மாடு, மனுசன் எதிர்லே வர்றதுகூடத் தெரியாமல் பண்டி மாதிரி இடிச்சிக்கிட்டுப் போறானே! கண் என்ன பொரடியிலயா இருக்கு?' என்று அவனுக்கு தமிழ் தெரியாது என்ற தைரியத்தில், தமிழில் திட்டிக்கொண்டே அவனைப் பார்க்காமல் இறங்கினேன்.


'சாரி சார், போகிற அவசரத்திலே தவறுதலாக நடந்துடுச்சு, மன்னிச்சுடுங்க!' என்று தமிழ் வார்த்தைக் கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. இறங்கிய நான் அதிர்ச்சி அடைந்தவனாகத் திரும்பிப்பார்த்தேன். பார்த்தமுகமாகத் தெரிந்தது. சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டாக, 'நீங்க....ஆனந்த்....!?' என்றதும், ஆமாம் நான் ஆனந்தன், நீங்க ஜாஃபர்தானே என்றார். அடுத்த வினாடி நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டோம். எங்கள் உள்ளத்தில் ஒருவித நெகிழ்வு ஏற்பட்டு கண்களில் நீர் சுரக்கத்தொடங்கியது. பிடிப்பை விலக்கி இருவரும் ஒருவர் தோளை ஒருவர் பிடித்தவாறு முகத்தை ஏறிட்டுப் பார்த்தபோது எங்கள் கண்களில் பொல பொலவென்று ஆனந்தக் கண்ணீர் வடிந்துக்கொண்டிருந்தது. ஆம், இருக்காதா என்ன? உயிர் நண்பர்கள் இருபத்தைந்தாண்டுகளுக்குபின் சந்தித்தால் எப்படி இருக்கும்?


'ஏம்பா எப்படி இருக்கே?' என்றான் ஆனந்தன். 'ஏம்பாவா? "ஏண்டா" ன்னு சொல்றா மடையா!' என்றேன் நான். ஆம், நாங்கள் இருவருமே பால்ய நண்பர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து; ஒரே தட்டில் சாப்பிட்டு; ஒரே பாயில் தூங்கி; ஒரே குளத்தில் மணிக்கணக்கில் நீச்சலடித்து; ஒரே மாதிரி உடை அணிந்து; ஒன்றாக அரட்டை அடித்து; ஒன்றாக மாங்காய் திருடி உடையவன் வீட்டுக்கு பங்கு கொடுத்தது; ஓணான் வாயில் சுருட்டை வைத்து ரயில் தண்டவாளத்தில் வைத்தது; நீலாதாட்சி அம்மன் கோவிலில் ஷேக் சின்ன மௌலானாவின் நாதஸ்வர கச்சேரிக் கேட்டது இப்படி ஒன்றுக்குள் ஒன்றாக அல்லவா இருந்தோம். எங்களுக்குள் இந்து முஸ்லிம் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. என் வீட்டில் ஒரு நாள் அவன் சாப்பிட்டான் என்றால் மறு நாள் அவன் வீட்டில் நான் சாப்பிட்டாக வேண்டும். இவன் இரண்டு நாள் வரவில்லை என்றால் என் வீட்டில் எங்கே ஆனந்தன் என்று கேட்பார்கள். அவன் வீட்டுக்கு நான் போகவில்லை என்றால் அங்கேயும் அதே நிலைதான். தீபாவளியும் ரம்ஜானும்; பொங்கலும் பக்ரீத்தும் ஒரே மாதிரி, அந்த அளவுக்கு குடும்ப அளவில் அன்னியோன்னியமாக இருந்தோம்.


கல்வி முடிந்ததும் நான் துபைக்கு வந்துவிட்டேன், நான் வந்த கொஞ்ச நாளில் அவர்கள் கிராமத்திலுள்ள வீட்டை விற்றுவிட்டு சென்னையில் குடியேறிவிட்டார்கள். அதன் பிறகு எங்களுக்குள் இருந்த நெருக்கம் நீண்ட இடைவெளியாகிவிட்டது. வருட விடுமுறையில் இந்தியா போகும்போதெல்லாம் சந்திக்கவேண்டும் என்று நினைப்பேன், முடியாமலே போய்விட்டது. இருபத்தைந்தாண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராதவிதமாக மும்பையில் அவனை சந்தித்தபோது மகிழ்ச்சியின் உச்சிக்குப்போனவனாக ஆனந்தா.., 'இப்பொ எங்கே இருக்கே? என்ன செய்றே?' என்றேன். 'நீ எங்கே இருக்கே? அதெ மொதல்லெ சொல்லு.' என்றான்.


'சொல்றேன். ஆனா அதுக்கு முந்தி நீ எதோ அவசரமாகப் போய்கொண்டிருந்தாய், போய் மொதல்லெ உன் வேலையை முடி, நான் இங்கே காத்திருக்கேன்' என்றேன்.


'உன்னைவிட வேலை எனக்கு முக்கியமல்ல, நாளைக்குக்கூட செஞ்சுக்கலாம். வா என்கூட என் ஆபீஸ் போய்ட்டு அப்புறம் ஃப்ளாட்டுக்குப் போகலாம். அதுக்குமுந்தி ஒனக்கு எதாவது வேலை இருந்தா சொல்லு அதெ மொதல்லெ முடிச்சுட்டு ஆபீஸ் போலாம்.'


'இல்லை, இன்னைக்குள்ள வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சு, இனி நாளைக்குத்தான். அப்படியே இருந்தாலும் அதெ நாளைக்குத்தான் செய்வேன். உன்னைப் பார்த்த சந்தோஷத்துலே வேறே எதும் எனக்கு முக்கியமில்லே. இன்னைக்குப் பூராவும் ஒன்னோட இருக்கனும், ஒன்னா சாப்பிடனும்.'


'ஷ்யூர், அதுலே எந்த சந்தேகமுமில்லே, இன்னைக்கு என்கூட தங்குறே!'


'அப்பொ உன் குடும்பம்...?'


'அதெல்லாம் கார்லெ போகும்போது பேசிக்கிட்டுப் போகலாம்' என்று சொல்லியவாறு என்னை அவன் காரில் அழைத்துக்கொண்டு போனான். கார் எங்கெங்கேயோ சுற்றி சிறிது நேரத்தில் அவன் ஆபீஸை அடைந்தோம். அவன் தன் பிஸினஸ்ஸையும் தங்கியிருக்கும் இடத்தையும் பற்றி சொல்லிக்கொண்டு வந்தான்.


அவன் ஆபீஸ், விசாலமாக இருந்தது. கம்ப்யூட்டர் சகிதம் பெரிய டேபிள், இரண்டுமூனு டெலிபோன், இண்டர்காம், இத்தியாதி இத்தியாதி. அவன் பார்வையில் படும்படி மேஜையின்மீது இரண்டு பெண்களின் போட்டாவும் கூடவே இருந்தது. பார்வையாளர் வந்தால் அமர்ந்து பேச குஷன் சோஃபாக்கள் தனியே இருந்தன.


அவன் ஆபீஸை ஒருமுறை நோட்டமிட்டவாறு கேட்டேன், 'ஏண்டா அந்த போட்டாவுலே இருக்கிறது யாரு?'


'அதுலே இந்த போட்டா என் மனைவி, அது மேனேஜிங் டைரக்டர். வா புறப்புடுவோம் அவ வர்றதுக்கு முந்தி. வந்துட்டா வேலை கொடுக்க ஆரம்பிச்சுடுவா, அப்புறம் எல்லாம் கொலாப்ஸாயிடும்.' என்றவாறே என்னை இழுத்துக்கொண்டு தன் இல்லம் நோக்கிப் புறப்பட்டுவிட்டான்.


'சரி இந்த பிஸினஸை எப்பொ ஆரம்பிச்சே? நான் முதல் தடவை துபையிலேந்து வந்தபிறகு உன்னை விசாரிச்சேன், நீ குவைத் போயிட்டதாக அல்லவா சொன்னாங்க!'


'அது ஒரு பெரிய கதை, வீட்டுக்குப்போய் பேசிக்கொள்ளலாம். சரி ஒனக்கு எத்தனை புள்ளைங்க? உன் உம்மா, வாப்பா, தங்கச்சிங்க எல்லாம் எப்படி இருக்காங்க, நீ துபையிலே என்ன செஞ்சிக்கிட்டு இருக்கே?'


'எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். இரண்டும் படிச்சிக்கிட்டு இருக்காங்க, உம்மாவும் வாப்பாவும் நல்லபடியா இருக்காங்க, தங்கச்சிங்க எல்லாம் கல்யாணம் ஆயி அதுஅதும் லைஃப்லே செட்டில் ஆயிடுச்சு. நான் டிரேடிங் கம்பெனியிலே மேனேஜரா இருக்கேன். ஆமா, ஜாஃபர் நாநா, ஜாஃபர் நாநான்டு மூக்கிலே சளிவடிய சுத்திக்கிட்டு வருமே உன் கடைசி தங்கச்சி சுமித்திரா, அவ எங்கே இருக்கா? ஒனக்கு கொழந்தைங்க இருக்கா?'


'அவ கல்யாணம் ஆகி இப்பொ ஃபிரான்ஸ்லெ ஜோ...ரா இருக்கா.'


'அப்புறம் உன் குடும்பம், அம்மா அப்பா?'


'எல்லோரும் நல்லபடியா இருக்காங்க சென்னையிலே, எனக்கு இரண்டு பையன் ஒரு பொண்ணு. மூத்தவனுக்கு படிப்பு முடியுற நிலையிலே இருக்கு, சின்னவனுக்கு இன்னும் இரண்டு வருசம் பாக்கி இருக்கு, பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டேன். இப்பொ அவ கனடாவுலெ இருக்கா. மனைவி சென்னையிலே இருக்கா, நான் இங்கே இருக்கேன்.'


அவனுடைய ஃப்ளாட்டை அடைவதற்குமுன் இங்கே லன்ச்சை முடித்துக்கொண்டு போகலாம் என்று ஒரு ஸ்டார் ஓட்டலில் தன் காரை நிறுத்தினான். எனக்கு எந்த இடம் என்று புரியவில்லை. நாங்கள் உள்ளே போய் பகல் உணவை முடித்துக்கொண்டு அவன் இருப்பிடத்திற்கு சென்றோம். அடுக்கு மாடி கட்டிடங்கள் நிறைந்த நியு பாம்பேயில் 18 மாடி கட்டிடத்தில் 12 வது மாடியில், இரண்டு பெரிய பெட் ரூம், ஒரு விசாலமான ஹால், ஒரு சிறிய மெய்டு ரூம். இவை அனைத்தும் AC செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு ஸ்டார் ஹோட்டலைவிட நேர்த்தியாக இருந்தது. பார்ப்பதற்கு ஒரு சிறிய அரண்மனைபோல் காட்சி அளித்தது அவனுடைய ஃப்ளாட்.


ஹாலில் நான்கைந்து பேர் உட்காரும் அளவுக்கு வசதியான சோஃபா நடுவில் கண்ணாடியால் ஆன டீபாய், வெளி உலகத்தை துண்டிக்க உயர் ரக கர்டன், ஒரு மூலையில் 46" ப்ளாஸ்மா TV, கூடவே Receiver, Home theater என்று Digital System இத்யாதி இத்யாதி; மறு மூலையில் ஜப்பானிய indoor செடிகளின் அணிவகுப்பு; ஹாலின் ஒரு பக்க சுவற்றின் மத்தியில் M.F.ஹுசைனின் கைவண்ணத்தில் ஒரு பெண் மெல்லிய வெள்ளை நிற மஸ்லின் துணியால் தன்னை மூட முயற்சித்துக்கொண்டிருக்கிறாள். இன்னொரு பக்கம் பல தலைப்புகளில் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்ட shelf, அதற்கு மேலே அவன் கம்பெனி MD தங்க நிறத்திலான நான்கு சட்டத்துக்குள் ஓவியமாக சிரித்துக்கொண்டிருந்தாள். மின் விளக்குகள் தெரியாவன்னம் ஜிப்ஸம் போர்டினால் அலங்கரிக்கப்பட்ட ceiling, அங்கே செங்கால் நாரைகள் சில பறந்துகொண்டிருந்தன.


வரவேற்பறை இப்படி என்றால் பெட்ரூம் வேறு விதமாக இருந்தது. கிங் சைஸ் பெட் அறையின் நடுபாகத்தை அடைத்துக்கொண்டிருந்தது. நேர் எதிரே இரண்டு அன்னப் பறவைகள் தாமரைத் தடாகத்தில் தங்கள் கழுத்தை ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு சுண்டுகளை உராய்த்துக்கொண்டிருந்தன. தடாகத்தின் மூன்று பக்கங்களிலும் புல் வெளி, இடையிடையே தும்பைப்பூ போன்று பல நிறங்களில் அழகிய பூக்கள் மலர்ந்திருந்தன. சுவரில் வரையப்பட்ட அந்த ஓவியம் இயற்கையாக இருப்பதுபோல் அமைந்திருந்தது. அந்த ஓவியத்தைமட்டும் பார்ப்பதற்கென்று பிரத்தியேக லைட், படுத்துக்கொண்டே ஓவியத்தைப் பார்க்கலாம் ; பெட்டிற்கு பக்கத்தில் பிரிண்டர் சகிதமாக கம்ப்யூட்டர், மற்றும் டெலிபோன் அமைக்கப்பட்டிருந்தது.


'ஏண்டா? இவ்வளவு அழகான ஃப்ளாட்டில் நீ மட்டும் தனியாவா இருக்கே? ஏன் உன் குடும்பத்தை இங்கே வச்சுக்கொண்டால் என்ன கேடு வந்துச்சு?' என்று கேட்டேன்.


'வச்சுக்கிலாம். ஆனல் பெரிய சுனாமி வந்துடும். அப்புறம் எதுவுமே இல்லாம போய்டும், அது சரி..., நான் தனியாக இருக்கேன்னு யார் சொன்னது?' என்று என்னை மடக்கினான்.


'அப்படியானா இன்னொரு பொண்டாட்டியா?'


'இல்லை; ஆமா, அந்தமாதிரித்தான்..!'


'என்னடா இல்லை, ஆமா? எதெ மறைக்கிறே?'


'அது ஒரு கதை, சொல்றேன் கேள்!' என்று தொடங்கினான்.


'நீ துபை போனபிறகு உன்னிடமிருந்து விசா வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீ வசமா ஓரிடத்தில் மாட்டிக்கிட்டே, என் மவனை மாட்டிவிட்டுட்டானுவ என்று உன் வாப்பா கண்ணீர் மல்க சொன்னதும் நான் வேறு வழியில் துபை வருவதற்காக முயற்சி செய்தேன். அப்போதுதான் குவைத்துக்கு ஒரு சான்ஸ் கெடச்சுது. ஒன்னை மாதிரி நானும் அங்கே போய் மாட்டிக்கிட்டேன். கோடை காலம், படிச்சப் படிப்புக்குரிய வேலை கெடைக்காம கடைசியா ஒரு ஷிப் ரிப்பேரிங் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். சம்பளம் கட்டை, ஓவர் டைம் செஞ்சு மேனேஜ் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்பத்தான் எங்க குடும்பம் சென்னையில் செட்டிலானது. இந்த கம்பெனியெ விட்டுட்டு வேறெ கம்பெனிக்குப் போக முடியாத சூழ்நிலை, கஷ்டத்தைப் பாக்காம மூனு வருஷம் பல்லெ கடிச்சிக்கிட்டு வண்டியெ ஓட்டினேன். ஊருக்கு லீவுலெ புறப்படுற சமயத்துலே செய்லிங் சான்ஸ் கெடச்சுது. கப்பல் போகும்போதே வேலை செய்துக்கொண்டு போகனும். கப்பல் பிரேஸிலுக்கு போவுது, அதனாலெ லீவை கேன்ஸல் பண்ணிட்டு ஜாபை ஒத்துக்கிட்டேன்.'


'அப்படி என்னடா வேலை?'


'கப்பல்லெ இருந்த மூனு ஜெனரேட்டர்லெ ஒரு ஜெனரேட்டருடைய கிரேங்க் ஷாஃப்ட் டேமேஜ் ஆயிடுச்சு, அதெ எடுத்துட்டு புது ஷாஃப்டை பொருத்தனும். கிரேன்க் ஷாஃப்ட்டுன்னா என்னன்னு தெரியுதா?'


'தெரியும்டா மேலே சொல்லு.'


'மூனு வருஷத்துலே கப்பல்லெ எல்லாமே அத்துபடி ஆயிடுச்சு, தவிர இதுலெ நான் எக்ஸ்பர்ட், அதனாலெ என்னை அனுப்பினாங்க.'


'நீ மட்டும்தான் போனியா?'


'ஆமாம், நான் மட்டும்தான் போனேன். ஜெனெரேட்டர் under waranty அதனாலெ அந்த கம்பெனியிலிருந்து ஒரு எஞ்ஜினியர் வந்திருந்தான், அவன் இங்லாந்துகாரன்.'


'நீங்க இரண்டுபேர்மட்டும்தானா? அப்டீன்னா ஜெனரேட்டர் சின்னதா?'


'இல்லை 600 கிலோ வாட், பெரிசு. எஞ்ஜின் ரூம் பணியாளர்கள் உதவிக்கு இருந்தார்கள். இதுலே என்ன விஷேசம்னா ஆபிஸர்கள் இங்லாந்துகாரர்கள் 2nd officer ஐ தவிர. அவர் மட்டும் இந்தியா, சிப்பந்திகள் மேற்கு ஆப்ரிக்கா. இந்தியன் என சொல்வதற்கு 2nd ஆபிஸரும் நானும்தான்.'


'சகண்டு ஆபிஸர் எந்தவூர், தமிழ் நாடா?'


'இல்லை, பாம்பே ஃபார்ஸி பாவாஜி. அவர் மட்டும் ஃபேமிலியோடு இருந்தார்.'


'கப்பல்லெ ஏறின கையோடு வந்த எஞ்ஜினியரும் நானும் ஜெனரேட்டரை இன்ஸ்பெக்சன் பண்ணிட்டு வேலையை ஆரம்பிச்சிட்டோம். காலையிலே எட்டு மணிக்கி வேலையை ஆரம்பிச்சா சாயந்தரம் அஞ்சு மணிக்கு நிறுத்திடுவோம். மதியம் ஒரு மணி நேரம் லன்ச் பிரேக். அதுக்கு பிறகு குளிச்சிட்டு டின்னரை முடிச்சிட்டு ஒரு எட்டு எட்டரைக்கு ஆபிஸர்ஸ் கிளப்புக்குப் போனா பதினொன்னு பண்ணண்டு மணிக்குத்தான் என் கேபினுக்கு வருவேன்.'


'கிளப்புக்குப் போய் என்ன செய்வே? தண்ணி அடிப்பியா?'


'நடுக்கடல்லெ பொழுது போக்கிறதுக்கு என்ன இருக்கு? ராத்திரி ஆனா எல்லா ஆபிஸர்களும் வருவாங்க. சிலர் தண்ணி அடிப்பாங்க, சிலர் சீட்டு வெளையாடுவாங்க, சிலர் விடியோ பாத்துக்கிட்டு இருப்பாங்க. நான் போன புதுசுலே இரண்டு நாள் பேக்கெ பேக்கென்னு முளிச்சேன் என்ன செய்றதுன்னு தெரியாம, பீரை வாங்கிக்கிட்டு விடியோ பார்ப்பேன் இல்லேன்னா சீட்டு வெளையாடுறதைப் பார்ப்பேன்.'


'அது ஒரு புதுமாதிரியான கேம், ரம்மி எனக்கு தெரியும். இது டோட்டலா வேறு மாதிரி, ஆனா இதுக்கு மினிமம் நாலுபேர் வேனும். சகண்டு ஆபிஸர் பொண்டாட்டி அவ பெயரு "ஜிகினா" நல்லா விளையாடினா! அவ ஆடுறதையே பாத்திக்கிட்டு இருந்தேன்.


'பொம்பளையாச்சே அதான் பாத்திக்கிட்டிருந்திருப்பே!'


'சும்மா இருடா, சொல்றதெ கேளு.'


'ஸ்கூல்லெ படிக்கிற காலத்துலே எத்தனை வெடைங்களெ தொரத்துனோம்!'


'இரண்டு நாள்ளே என்கூட பழக்கமாயிட்டா. வேறே இந்தியன் யாரும் கிடையாது, புருஷனை விட்டா நான்தான். எனவே என்கூட இந்தியில் பேசுவா. ஒரு நாள் நீ விளையாடுறியான்னு கேட்டா, எனக்கு இந்த கேம் தெரியாதுன்னு சொன்னேன். நான் சொல்லித்தாறேன் உட்காரு என்று அவளருகில் என்னை உட்காரவச்சு சொல்லிக்கொடுத்தா. இரண்டு கேம் பார்த்தபிறகு மூனாவது கேம்லேந்து நானும் வெளையாட ஆரம்பிச்சேன். முதல் நாள் தோத்துக்கிட்டே வந்தேன். நான் என்ன மிஸ்டேக் பண்றேன் என்பதை சொல்லிகொடுத்தாள்.'


'அடுத்தடுத்த நாள் கேம்லெ நான் விண் பண்ண ஆரம்பிச்சிட்டேன். சொல்லிக்கொடுத்த அவளையே மடக்கினேன், நான் ஆடுற விதத்தைப் பார்த்துட்டு ஆச்சரியப்பட்டவளா "Ananth, you are great"ன்னு பாராட்ட ஆரம்பிச்சிட்டா.'


'இண்ட்ரஸ்டிங், ம்... அப்புறம்!'


'அப்புறம் என்ன, நாங்க இரண்டுபேரும் பார்டனர்ஷிப்லே எல்லாரையும் விண் பண்ணிக்கிட்டிருந்தோம். விளையாடும்போது எனக்கு பக்கத்திலே உட்காந்திருப்பா; ரொம்ப நெருக்கமா இருப்பா, அவ ஒடம்பு கொதிக்கிறது என்னாலே ஒனர்ற அளவுக்கு நெருக்கமா இருந்தா, எனக்கு என்னமோ போல இருக்கும். நான் நகர்ந்தாகூட அவ நெருங்கி வந்துடுவா.'


'அவ புருஷன் ஒன்னும் கண்டுக்கிலையா?'


'அது கப்பல்டா, எல்லோரும் ஒரு ஃபேமிலி மாதிரி, யாரும் பெரிசா எடுத்துக்கமாட்டாங்க.


இப்படி தினமும் விளையாடினோம். ராத்திரி ஒரு மணிவரைக்கூட விளையாடிக்கிட்டிருப்போம். நான் பண்ணண்டு, பண்ணண்டரை வரை இருந்திட்டுப் போய்விடுவேன். அவ எப்போ போவான்னு தெரியாது. அவளுக்கு எந்த வேலையும் கிடையாது அதனாலெ ரெண்டு மணி மூனு மணிக்கூட ஆகலாம். ஆனால் அவ புருஷன் ஒவ்வொரு நாளும் தான் டூட்டிக்குப் போகும்போது அவள்ட்டே சொல்லிட்டுதான் போவான். அவனுக்கு டூட்டி 12 to 4. சாதாரணமாக சகெண்ட் ஆபீஸருக்கு இந்த டைமிங்லெதான் டூட்டி இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு டூட்டி. மத்தியானம் 12to4 அப்புறம் நடு இரவு 12to4.'


'இப்படித்தான் கப்பல்லெ டூட்டி இருக்குமா?'


'மோஸ்ட்லி இப்படித்தான் ஸ்பிளிட் டூட்டியாக இருக்கும். டைம் வேனும்னா மாறும்.'


'அப்பொ தினமும் சீட்டுதான் வெளையாடினாயா?'


'வேறே கேம் இருக்கு, டேபிள் டென்னிஸ் இருந்துச்சு. தேர்டு இன்ஜினியர் பெயர் ஜான், பிரிட்டிஷ்காரன் இருந்தான் அவன் விளையாடுவான். ஒன்னுரண்டு நாள் அவன்கூட விளையாடினேன், மத்தபடி இவகூடத்தான். சீட்டு விளையாட ஆள் சேராத நாள்ளே நாங்க ரண்டுபேரும் ஸ்விம்மிங் பூல் சைடு போய் பேசிக்கிட்டு இருப்போம்.'


'சரக்கு கப்பல்லெ ஸ்விம்மிங் பூல்லாம் இருக்குமா?'


'ஸ்விம்மிங் பூல்னா பெரிசா நெனைச்சிடாதே ஒரு தொட்டி அவ்வளவுதான். ரண்டுபக்கமும் "சன் பாத்" செய்றதுக்கு ஈஸி சேர் இருக்கும். பிரிட்டிஷ் காரனுக்குத்தான் எங்கே போனாலும் சுகம் வேணுமே!'


'எங்க கப்பல் மத்தியதரைக் கடலை அடைந்துவிட்டது. அன்று நாங்க ஸ்விம்மிங் பூல் பக்கம் போய் பேசிக்கிட்டு இருந்தோம். நல்ல கிளைமேட்; வானம் தெளிவா இருந்துச்சு; நிலா வெளிச்சம்கூட லேசாதான் இருந்தது; சிலு சிலுன்னு காத்து வீசிக்கிட்டிந்துச்சு; கொஞ்ச நேரத்திலே குளிர ஆரம்பிச்சிடுச்சு.


குளிருது, வா கேபினுக்குப் போய் பேசிக்கிட்டு இருக்கலாம் என்று என்னை அவ கேபினுக்கு அழைச்சிக்கிட்டு போய்ட்டா. அப்பொ டைம் பண்ணண்டரை இருக்கும். அவ புருஷன் டூட்டிக்குப் போய்ட்டான். அங்கிருந்த சோஃபாவில் நான் அமர்ந்தேன். என்ன சாப்பிடுறே? குளிருக்கு சூடா ஹார்லிக்ஸ் தாரேன் என்றாள். நான், வேண்டாம் டீ மட்டும் கொடுங்கள் என்றேன். இரண்டு நொடியில் ஒரு டீயுடன் என்னருகில் அமர்ந்தாள். உங்களுக்கு... என்று இழுத்தபோது. எனக்கு வேண்டாம் என்றாள்.


நான் டீ குடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன அப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவள் உன் அழகை ரசிக்கிறேன் என்றாள். நான் பாதிதான் குடித்திருப்பேன் என் கையிலிருந்த டீயை வாங்கி பாக்கியை அவள் மடக், மடக் என்று குடித்துவிட்டாள். நான் திகைத்துப் போய் அவளையே பார்த்தேன்.


என் திகைப்பு அடங்கவில்லை சரேலென்று என்னை தன் பக்கம் இழுத்து மடியில் கிடத்தி மாறி மாறி முத்தமிட ஆரம்பித்துவிட்டாள். நான் அதர்ச்சியில் திமிறினேன், பலம் கொண்டமட்டும் என்னை அமுக்கிப் பிடித்துக்கொண்டாள். உங்கள் புருஷன் வந்துவிடப்போகிறார் என்றேன். 'உஷ்...' சத்தமா பேசாதே, அவன் இப்போது வரமாட்டான் காலை 4 மணிக்குத்தான் வருவான், கப்பலின் முழு பொறுப்பும் அவன் கையில் இருக்கிறது. மெடிட்டரேனியன், பிஸி டிராஃபிக் உள்ள கடல் ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக கப்பலை ஓட்டவேண்டும் எனவே எந்த காரணம் கொண்டும் வரவே மாட்டான் என்று அடித்து சொன்னாள். வெறிகொண்ட மட்டும் என்னை முத்தமிட்ட அவள் சற்று தளர்த்தியபோது நான் மெதுவாக எழுந்து நழுவப்பார்த்தேன். ஓடப்பார்க்காதே என்று சொல்லியவாறு என் கையை இருக்கமாகப் பிடித்துக்கொண்டு பெட்ரூமுக்கு இழுத்துக்கொண்டுபோய் ஒரே தள்ளாக என்னை பெட்டில் கிடத்திவிட்டாள். எனக்கோ பயத்தில் அந்த குளிரிலும் வியர்வை பொலப் பொல என்று கொட்ட ஆரம்பிச்சிடுச்சு.


பயந்து சாகாதே, நிச்சயமாக அவன் வரமாட்டான். கொஞ்ச நேரம் உலகை மறந்து இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டே என்னை எழுந்திருக்கவிடாமல் என்மீது அமர்ந்தவாறு சமாதானம் செய்துக்கொண்டே தன் உடையை கழட்ட ஆரம்பித்தவள் வினாடியில் முழுமையாகிவிட்டாள்.


நான் அவளுடன் பழக ஆரம்பித்ததிலிருந்து தூரமாகவும் பக்கத்திலும் அமர்ந்து அவள் அழகை ரசித்திருக்கிறேன். நல்ல அழகு, எளிமையான தோற்றம். முழங்காலைத் தொடுமளவுக்கு நீண்ட கூந்தல், அதை இருபக்கமும் சடைபின்னி நடுவில் முடியோடு இனைத்து அள்ளிமுடியாமல் தொங்கவிட்டிருப்பாள்; அவளது எடுப்பான பிட்டங்களை மறைத்தும் மறைக்காமலும் இருக்கும் பரந்துகிடக்கும் கூந்தல் ; அகலமான பெரிய நெற்றி; வில்லை வலைத்ததுபோல புருவங்கள், அந்த புருவங்களின் அழகை கூட்டுவதுபோல் காந்தர்வக் கண்கள்; வட்டமான சிவந்த முகம்; இரட்டை நாடி; சிரிக்கும்போது கன்னத்தில் விழும் லேசானக் குழி அவள் அழகை மேலும் அதிகப்படுத்தியது; கொஞ்ச...ம் கட்டையான உடம்பும் என்றாலும் கொடி இடையாள் அல்ல; சுருக்கமாக சொன்னால் நார்மல் பாடி. சுடிதாரில் வரும்போது முன்னழகைவிட பின்னழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம் என தோன்றும். மொத்தத்தில் தேவதைப் போல் காட்சி அளிப்பாள். குரல்கூட இனிமையாக இருக்கும், முதிர்ந்த அறிவாளிமாதிரி ஆழமான கருத்துடன் பேசுவாள், விகாரமான ஒரு வார்த்தைகூட அவள் வாயிலிருந்து வராது. அத்தகையவள் அப்படி நின்றபோது என்னால் நம்பமுடியாமல் சற்று நேரம் வெறித்துப் பார்த்தேன்.


என்ன அப்படிப் பார்க்கிறாய்? என்றாள். உன் அழகை ரசிக்கிறேன், இல்லை இல்லை அதை பருகுகிறேன் என்றேன் தொண்டையிலிருந்த எச்சிலை விழுங்கிக்கொண்டே...'


'அப்பொ தாங்கள் சாஞ்சிட்டீங்க?'


'ஆமாடா, என்னால் அதுக்குமேல் தாங்கமுடியலெ!'


'ம்... மேலே சொல்லு!'


'அவளை அந்த நிலையில் பார்த்தபோது எப்பொவோ படிச்ச கலைஞர் அவர்களின் கவிதை ஒன்னு ஞாபகத்துக்கு வந்துடுச்சு. "சித்திரை மாதம் மேகமில்லாத் தெளிவான வானம் பால் நிலவு, அந்த நிலவைவிட ஒளிமிகுந்த தன் காதலியின் முகத்தைப் பார்த்து கண் கூசியவாறு சற்று பார்வையை கீழே இறக்கினானாம் நாயகன். அங்கு இரண்டு மலைகளைக் கண்டானாம், அம் மலைகளைக் கடந்து வந்தபோது ஒரு பெரிய சமவெளி இருப்பதைப் பார்த்தானாம், சமவெளிதானே என்று அலட்சியமாக நடந்து வந்தபோது அங்கு ஒரு பள்ளத்தாக்கு இருப்பது தெரியாமல் அதில் விழுந்தவன் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை" என்று வருணித்திருந்தார்.'


'இது கலைஞரின் பள்ளிக்கூடக் காலத்தில் அவரின் தமிழாசிரியர் சொன்னதாக ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். இது குமுதத்தில் படிச்ச ஞாபகம். அதுமாதிரி தாங்களும் விழுந்திட்டீங்க!'


'அவளை தலைமுதல் கால் வரைப் பாத்துட்டு மறுபடியும் மேலிருந்து கீழே இறங்கினேன்.கடுப்பாயி, பாத்தது போதும்னு அப்படியே என்மேலே சாஞ்சுட்டா, அந்த இரண்டு மார்பகங்களின் அழுத்தம் நம்ம தேவாரம் வாத்தியார் வளர்த்த மொசக்குட்டி மேலே விழுந்த மாதிரி சாஃப்டா இருந்துச்சு. நான் என்னையே இழந்துக்கொண்டிருந்தேன். மௌன கீதம் பாடினோம்.


சும்மா சொல்லக்கூடாது கவிஞர் கண்ணதாசனை, அவருக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள். "புதிய வானம், புதிய பூமி.." என்ற வரிகள் ரீங்காரமிட்டன.' கீதம் அடங்கியபோது மணி இரண்டு. நான் என் கேபினுக்கு வந்து படுத்தேன், தூக்கம் வரலே, காட்சிகள் ஓடிக்கிட்டிருந்தன. எப்போ தூங்கினேன்னு தெரியாது. காலை ஆறு மணிக்கு அலாரம் அடிச்சபோது அவசர அவசரமா எல்லா வேலைகளையும் முடிச்சுக்கிட்டு எஞ்ஜின் ரூமுக்கு ஓடினேன்.


அன்றைய தினம் என்னாலெ ஒழுங்கா வேலை செய்ய முடியலெ. அசதி ஒரு பக்கம், மௌன கீதத்தின் ராகம் இன்னொரு பக்கம், எப்போது மணியாகும் என்று காத்திக்கிட்டிருந்தேன். அஞ்சுமணியாச்சோ இல்லையோ ஓடிப்போய் குளிச்சிட்டு ஆறுமணிக்கு டின்னரை முடித்துக்கொண்டு பெட்டில் சாஞ்சுட்டேன். யாரோ கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்டு எழுந்து திறந்து பார்த்தபோது "சுக்கானி" (கப்பலின் ஸ்டேரிங் பிடிப்பவன்) நின்னுக்கிட்டிருந்தான். என்ன என்று கேட்டதற்கு உன்னை 2nd ஆபிஸர் கூப்பிடுகிறார் என்றான். அப்போது மணி பதினொன்று.


என் வயித்துலே புளியை கரைக்க ஆரம்பிச்சிடுச்சு. ராத்தி நடந்தது புருசனுக்கு தெரிஞ்சுப்போச்சோ என்ன எழவோ தெரியலையே என்று பயந்துக்கிட்டே அவன் கேபினுக்குப் போனேன். "ஹலோ ஆனந்த், நீ ஏன் கிளப்புக்கு வரலே? என் ஒய்ஃப் ரிப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டா. இந்த பார் ஆனந்த், நீ இங்கே இருக்கிறவரைக்கும் எங்களுக்கு கம்பெனி கொடு. இண்டியன் என சொல்லிக்கொள்ள உன்னை விட்டால் யாருமில்லை, ப்ளீஸ் என்றார். எனக்கு பால் வார்த்த மாதிரி இருந்துச்சு. பக்கத்தில் ஒன்னும் தெரியாதுபோலிருந்த பாப்பா, ஆமா ஆனந்த் அவர் டூட்டிக்குப் போய்ட்டார்னா கிளிக்கூடு மாதிரி இருக்கிற இந்த கேபின்லெ நான் தனியா அடைஞ்சு கிடக்கிறேன். ரொம்ப போர் அடிக்கிது, நீங்க கொஞ்ச நேரம் ஸ்பேர் பண்ணினீங்கன்னா எனக்கு டைம் பாஸாகும், "ப்ளீ...ஸ்" என்று அந்த ப்ளீஸை அழுத்தி சொன்னாள்.'


'பச்சை கொடி காண்பிச்சாச்சு! அடப்பாவியளா, அப்புறம்?'


'அப்புறம் என்ன? தினமும் ஆலாபனை, தனி ஆவர்த்தனம், என்று தொடங்கி ஜுகல் பந்தியில் முடியும், பெரும்பாலும் என் கேபின்லெதான் நாட்டியக்கச்சேரி நடக்கும்.'


'அப்பொ தூங்கவே மாட்டியா?'


'ஷெடியூலை மாத்திட்டேன்ல, ஆறு மணிக்கு டின்னரை முடிச்சுட்டு பத்து பத்தரை வரை தூங்குவேன், அதுக்குமேல் கிளப்புக்குப் போவேன், பண்ணண்டரைக்குமேல் பள்ளாங்குழியாட்டம். இப்படி பத்து நாள்வரை ஓடினுச்சு. குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே என் வேலைகளை முடித்து ஜெனரேட்டரை ஓடவிட்டுவிட்டோம். ஆகவே 'ரியோ டி ஜெனரியோ' வரும்வரை அவள் கேபினுக்குப் போய் அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தேன். அவங்களோட கல்யாண ஆல்பம் எல்லாம் காண்பிச்சா. கப்பலை எப்படி ஓட்டனும் ரஃப் சீயிலெ எப்படி ஓட்டனும் ராத்திரியிலே எப்படி வாட்ச் பண்ணனும், சீ கரண்ட் எந்தெந்த சீசன்லெ எங்கெங்கே இருக்கும், பெர்மூடா ட்ரையாங்கிள் பக்கம் எப்படி போவது என்றெலாம் பாவாஜி சொன்னாரு. சுருக்கமா சொன்னா அவரு என்னை அவங்க ஃபேமிலி மெம்பரா நெனைச்சிக்கிட்டாரு.'


'ஏண்டா இவ்வளவும் நடந்த பிறகு எப்படி நீ கில்டி கான்ஷியஸ் இல்லாமலா இருந்தே?' அவளுக்குத்தான் வெக்கமில்லை இப்படி புருஷனைப் பக்கத்திலெ வச்சுக்கிட்டு இன்னொருத்தன்கூட விளையாடுறோமே என்று?'


'நா என்ன செய்றது? சும்மா கிடந்த என்னை ஊதி கெடுத்திட்டா. குற்ற உணர்வு உறுத்தத்தான் செஞ்சுது. நான் கேட்டேன் இப்படி துரோகம் செய்றியே, இது அடுக்குமா?ன்னு. அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா?'


'என்ன சொன்னா?'


'அவ கேபின்லெ பவர் கொறச்சலாம், டியூப் லைட் லேட்டா ஸ்டார்ட் ஆவுதாம். உன் கேபின்லெ ஃபுல் பவர் இருக்குதுன்னுட்டா.'


'தொலஞ்சது போ. சரி, எப்போ குவைத் திரும்பினே?'


'சரியா புறப்பட்டதிலிருந்து இருபது நாள் "ரியோ டி ஜெனரியோ" துறைமுகம் வந்து சேர்ந்தோம். அங்கு இரண்டு நாள் தங்கிவிட்டு குவைத் வந்து சேர்ந்தேன். கப்பலை விட்டு இறங்கும் நாளன்று கப்பல் சிப்பந்திகள் அனைவருமே என்னையும் வந்திருந்த இங்லீஷ்காரனையும் தடபுடலாக வழியனுப்பிவைத்தனர். ஜிகினா கண்களில் கண்ணீர் தேங்கி நின்றன. அவளைப் பார்த்து எனக்கும் கண்களோடு மனமும் கனத்தது. மீறிக்கொண்டு கண்களிலிருந்து நீர் சொட்டத்தொடங்கிற்று. அதைப் பார்த்த chief engineer, don't be exited என்று என் முதுகில் தட்டிக்கொடுத்தார். எனக்கல்லவா தெரியும் நான் ஏன் கலங்கினேன் என்று.'


'இதுதான் சாக்குன்னு அவளோட தொடர்பு வச்சிருந்தியா? இல்லை விட்டு தொலைச்சிட்டியா? ஏன்னா சந்தேகமா இருக்கு இந்த பூனையும் பால் குடிக்குமான்னு!'


'நான் புறப்படும்போது அட்ரஸ், போன் நம்பர்லாம் கொடுத்து ஆறு மாசம் கழிச்சு காண்டாக்ட் பண்ண சொல்லி சொன்னா. துர்திருஷ்டவசமா அவ அட்ரஸ் எழுதி வச்சிருந்த டைரியை தொலச்சிட்டேன், அதனாலெ தொடர்பே கொள்ளமுடியலெ, அதுவும் எனக்கு நல்லதா பட்டுது. காரணம் அந்த டிரிப் முடிஞ்சபிறகு லீவில் ஊருக்குப் போய் அத்தை பெண் ராதிகாவை கல்யாணம் பண்ணிட்டு வந்தேன்.'


'விட்டு தொலைச்சிட்டேன்கிறே, இப்பொ அவகூட குடுத்தனம் நடத்துறே, மறுபடியும் பிரேஸில் டிரிப்பா?'


'இரண்டு வருஷம் வரை எந்த தொடர்பும் கிடையாது, சுத்தமா மறந்துட்டுத்தான் இருந்தேன், ஒரு நாள் வேலையா ஷிப்புக்குப் போயிருந்தப்ப சீஃப் ஆபிஸரை பார்க்கவேண்டியிருந்தது. சீஃப் ஆபிஸர் யாருன்னா அதே பாவாஜி, ப்ரமோஷன் ஆயிட்டாரு. என்னை கண்டதும் ஹலோ ஆனந்த் நீ இன்னும் இங்கேதான் இருக்கியா? நல்லா இருக்கியா? அப்படி இப்படின்னு குசலம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டார். தான் இந்த கப்பலில் டூட்டியில் சேர்ந்தபிறகு இரண்டு மூன்று தடவை குவைத் வந்ததாகவும் என்னைப் பார்க்கமுடியவில்லை என்றும் சொன்னார். நான் அவரையும் அவர் குடும்பத்தைப் பற்றியும் ஃபார்மாலிட்டிக்காக விசாரிச்சிக்கிட்டிருந்தேன் அப்ப வந்துச்சு தொல்லை. உன் லாங்குவேஜில் சொன்னால் "முஸீபத்".


'என்ன முஸீபத்?'


'அந்த சமயம் பாத்து அவ புருஷனுக்கு போன் பண்ணுவாளா?'


'பண்ணினா என்ன?'


'பண்ணியதில் தப்பில்லெ, அவன் மட்டும் பேசிட்டு வச்சிருந்தா இதெல்லாம் வந்திருக்காது, நான் பக்கத்தில் இருக்கேன்னுட்டு சொல்லிபுட்டான். அதனாலெ அவள்ட்டெ பேசவேண்டிய நிர்பந்தம் ஆயிடுச்சு!'


'ஜஸ்ட் நல்லா இருக்கீங்களான்னு கேட்டுட்டு கட்பண்ணிட வேண்டியதுதானே? நீ எதாச்சும் நோண்டிருப்பே?'


'அவ என்னை பேசவிட்டாதானெ, அவளே வளவளன்னு பேச ஆரம்பிச்சுட்டா. அவ என்ன சொன்னான்னா, "நீ எப்பொ இந்தியா வர்ரே? நான் ஒரு பிஸினஸ் ஆரம்பிச்சிட்டேன்., குவைத்தை வுட்டுட்டு இங்கெ வந்துடு, ஒனக்கு அங்கெ கிடைக்கிற சம்பளத்தங்காட்டிலும் ஜாஸ்தியா தாரேன்" அப்டின்னு பேசிட்டு தன் புருசனிடம் சொல்லி என்னிடத்தில் கன்வின்ஸ் பண்ண சொல்லிட்டா. அந்த ஆள் என்னன்னா, தன்னுடைய பொண்டாட்டியின் பிஸினஸை சொல்லிட்டு நீ ஏன் இந்த வெயில்லெ இருந்து கஷ்டப்படுறே, அங்கெ போய் ஏஸி ரூம்லெ இரியேன் அப்டி இப்டின்னு சொல்லி என் மனசுலே ஜில்லாப்பை உண்டாக்கிட்டான்.


நானும் சரின்னுட்டு வந்துட்டேன். அப்புறம் யோசனைப் பண்ணிப்பாத்தேன். ஊருக்குப் போகும்போது பாம்பேயில் இறங்கி அவளை பாத்துட்டுப் போவோம். நல்லதா பட்டுச்சுன்னா இறங்குவோம், இல்லேன்னா குவைத்துக்கே வந்துடுவோம்னு முடிவுலே வருஷ லீவுலே பாம்பே போனேன்.


டயத்தை வேஸ்டாக்கக்கூடாதுன்னு அவளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிச்சிருந்தேன். அவளும் கரக்டா ஏர் போர்ட் வந்து என்னைக் கூட்டிக்கிட்டுப்போய் ஹோட்டலில் தங்கவச்சா, பிறகு தன் பிஸினஸைப் பத்தி சொன்னாள், ஆபீஸை காட்டினாள், ஊருக்குப் போய்ட்டு ஒரு மாசத்துலெ வந்துடுன்னுட்டா.'


'எந்த ஆபீஸை?'


'ஏய் கிண்டாதே! ஆபீஸ்னு சொன்னா புரிஞ்சுக்கனும்.'


'அப்புறம் நீ குவைத் போகலையா?'


'இரண்டு மாசம் கழிச்சு இங்கே வந்து சேர்ந்தேன். பிஸினஸ் எனக்குப் புடிச்சிருந்தது. அதுக்கிடையில் குவைத்திலிருந்து என் வீட்டுக்குப் போன் வர ஆரம்பிச்சிடுச்சு என்னை வர சொல்லி. நான் மேலும் இரண்டு மாசம் கழிச்சு குவைத் போய் என் விசாவை கேன்ஸல் பண்ணிட்டு எனக்கு வரவேண்டிய காசை பெற்றுகொண்டு இங்கே வந்துட்டேன், அன்னையிலேந்து இன்னைவரை இங்கேதான் ஜாகை. இப்போ வாரம் ஒருமுறை சனி ஞாயிறு லீவில் ஊருக்குப் போய்ட்டு வந்துக்கிட்டு இருக்கேன்.'


'இப்பொ அவ தங்களுக்கு சின்னவூடு?'


'இல்லெ, அவளுக்கு நான்தான் சின்னவூடு. அதாவது அவளுக்கு நான் புருஷன், எனக்கு ராதிகா பொண்டாட்டி.'


'என்னவோடா, நீ செய்றது நல்லாயில்லே! ஒனக்குத் தெரியும்ல "அரசன் செய்யும் தவறு அகிலம் செய்யும் தவறுக்கு ஒப்பானது" என்று, நீ குடும்பத்துலே மூத்தவன் ஜாக்கிரதை.'


'நல்லா இருக்கோ நல்லா இல்லையோ? இப்பொ வண்டி ஓடிக்கிட்டிருக்கு, என்னாலெ மாற முடியாது. ஓடறவரை ஓடட்டும்னு வுட்டுட்டேன்.'


அப்போது யாரோ கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வந்தார். நான் ஏறிட்டுப் பார்த்தபோது அந்த போட்டாவில் இருந்த அவனுடைய எம் டி. போட்டாவைவிட அழகாகவே இருந்தாள், கட்டு குளையாத உடம்பு, பார்க்க லட்சணமாக மொழுகி விட்டார்போல் இருந்தாள்.


என்னை அவளுக்கு அறிமுகம் படுத்திவைத்தான். நாங்கள் எந்த அளவுக்கு நண்பர்களாக இருக்கிறோம் என்பதையும் பால்ய காலத்து நிகழ்வுகளையும் அவளுக்கு சொன்னான்.


இத்தகைய நண்பன் இருக்கிறான் என்று ஒரு சந்தர்ப்பத்திலும் சொல்லவே இல்லையே என்று ஆனந்தன்மீது கோபப் பட்டாள். இப்போது என்ன செய்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டாள். நான் மும்பை வந்த விசயத்தை சொன்னேன். எல்லாவற்றையும் கவனமாக கேட்டுவிட்டு இனி நாங்கள் உங்களுக்கு வேண்டிய அனைத்து சாமான்களையும் சப்ளை செய்கிறோம், நீங்கள் வாங்கும் விலையைவிட குறைவாகவும் அதேநேரம் தரமான சாமான்களாகவும் தருகிறோம் என்றாள்.


ஆரம்பத்தில் அப்படித்தான் சொல்வீர்கள் அப்புறம் விலையை கொஞ்சங்கொஞ்சமாக ஏற்றுவீர்கள் என்று சொன்னேன்.


இது சாதாரணமாக நடக்கும் விஷயம்தான், ஆனால் நீங்கள் ஆனந்தின் நண்பர் உங்களிடம் அப்படி நடக்க மாட்டோம், நீங்கள் எங்களை நம்பலாம் என்று சொல்லிவிட்டு அவர் போகிறவரைக்கும் இங்கேயே தங்கட்டும் என்று ஆனந்தனிடம் சொல்லிவிட்டு நீங்கள் எங்களின் "கெஸ்ட்," இன்று இரவு என்னுடன் உணவு உண்ணவேண்டும் என்றவாறு எங்களை தன் காரில் அழைத்துக்கொண்டு நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குப் போனாள்.


பேசிக்கொண்டே உணவை சுவைத்துக்கொண்டிருந்தேன். ஜிகினாவின் லாவகமானப் பேச்சு, வார்த்தைகளின் ஆழம், அதில் காணும் உறுதி இவை எல்லாம் எனக்கு பிடித்திருந்தது.


என் ஆப்த நண்பன் ஆனந்தை இருபத்தைந்தாண்டுகளுக்குப் பின் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். குவைத்தில் சொல்லனா துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தவனை இங்கே அழைத்துவந்து நல்ல முன்னேற்றத்தை அடைய பெரிதும் உதவியதற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், அவனை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. உண்மையிலேயே நீங்கள் போற்றத்தகுந்தவர் என்று அவள் தலையில் கொஞ்சம் ஐஸ் வைத்துவிட்டு, மன்னிக்கவும் உங்கள் குடும்பத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று பேச்சை ஆரம்பித்தேன்.


'என் கணவர் Mr.நவ்ரோஜி மிகவும் நல்லவர். (ஆமா எதையும் கண்டுக்காம இருந்தா நல்லவர்தான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்) அவர் என்னைவிட கப்பலையும் கடலையும் வெகுவாக நேசிக்கிறார். பெரும்பாலும் அவர் வெளிநாடுகளில்தான் இருப்பார். இப்போதுகூட ஜப்பானில் இருக்கிறார்.'


'இன்னும் கப்பலில்தான் பயணம் செய்கிறாரா?'


'இல்லை, இப்போது சர்வேயராக இண்டர்நேஷனல் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார்.'


'நீங்கள் அவர்கூட போவதில்லையா?'


'எனக்கு கடல்வாழ்க்கை பிடிக்கவில்லை. கல்யாணம் ஆன புதுதில் ஒரே ஒரு முறை பயணம் செய்தேன். அப்போதுதான் Mr.ஆனந்தை குவைத்தில் பார்த்தேன். அவரிடம் இருக்கும் அசாத்திய திறமையை அப்போதே கண்டுகொண்டேன். நான் இங்கே கம்பெனி ஆரம்பித்தபோது முதல் வேலையாக அவரை இங்கே இழுத்துக்கொண்டேன். என்னுடைய கம்பெனி இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அவரின் பங்கு பெருமளவு இருக்கிறது.'


'உங்களுடைய குழந்தைகளைப் பற்றி சொல்லவில்லையே?' என்று கேட்டபோது அவள் முகம் லேசாக மாறியது. அதை கவனித்த நான், 'எதுவும் தப்பாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்.'


'இல்லை, இல்லை, அப்படி ஒன்றுமில்லை. எனக்கு குழந்தைகள் இல்லை. அந்த பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஸ்போர்ட்ஸில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தேன். இண்டர்காலேஜ் டோர்னமெண்ட் நடக்கும்போது வயிற்றில் லேசாக அடிபட்டுவிட்டது. நான் சற்று அலட்சியமாக இருந்துவிட்டேன். அது பெரிய பிரச்சினையை உருவாக்கிவிட்டது. கர்ப்பப்பையை பாதித்து குழந்தை பெறும் பாக்கியம் இல்லாமலாக்கிவிட்டது.'


'ஏன் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ளவில்லையா?'


'என் கல்யாணத்துக்குப் பிறகு டாக்டர்களிடம் போனேன், மிகவும் காலதாமதாகிவிட்டது என்று சொன்னார்கள். என்னுடைய அலட்சியபோக்கிற்கு கிடைத்த தண்டனை என்று ஏற்றுக்கொண்டுவிட்டேன். எனக்கு பிள்ளைகள் இல்லாவிட்டால் என்ன ஆனந்தின் பிள்ளைகளும் என் பிள்ளைகள்தான்.'


அவளுடைய அந்த உறுதி "Acceptance of inevitable is the first step of conquering happiness" என்று என் ஆசிரியர் சொன்ன வார்த்தையை நினைவுபடுத்தியது.


அடுத்த இரண்டு மூன்று நாட்கள் என்கூடவே இருந்து எல்லாவேலைகளையும் ஆனந்தன் முடித்துக்கொடுத்தான். அது எனக்கு பெரிய உதவியாக இருந்தது. இனி அடிக்கடி மும்பை வரவேண்டிய அவசியம் இருக்காது என்ற மகிழ்ச்சியில் துபைக்கு புறப்பட தயாரானேன். ஜிகினாவும் ஆனந்தும் ஏர்போர்ட்டுக்கு வந்து வழியனுப்பி வைத்தனர். நீண்ட நாட்கள் நட்பின் பிரிவு எங்கள் கண்களை குளமாக்கின, ஜிகினா கலங்கமில்லா புன்முறுவலுடன் கையை ஆட்டினாள்.


ஆனந்தன் என்றும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று என் உள்ளம் வாழ்த்திக்கொண்டிருந்தபோது எமிரேட்ஸ் விமானம் உற்ற்...என்று பெருத்த உறுமலோடு வானத்தை நோக்கி கிளம்பியது.

--------------------------------------------------------------------------------


20-12-2007 திண்ணையில் வெளிவந்தது

Friday, August 21, 2009

உருகிய சாக்லெட்

ஹமீது ஜாஃபர்


'என்னைப் பார்க்கும் ஆசையில் சாக்லெட் உருகிவிட்டது' - இப்படி ஒரு குறுந்தகவலை , கவிஞர் நானா எனது கைப்பேசிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

உருகியது சாக்லெட் மட்டுமல்ல , என் மனமும்தான். அனுப்பிய பொருள் உரிய காலத்தில் கிடைக்காமல் போனால் இப்படித்தான் கதிகெட்டுப் போகும். சே! 130 திர்ஹம் - 1500 ரூபாய் - கொடுத்து வாங்கியது இப்படி ஆகிவிட்டதே என்று நொந்த என் மனது ரிவைண்ட் ஆகியது.

சென்ற ஜனவரி முதல் வாரம் அமீரகத்துக்குப் புறப்பட சென்னையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தேன். என்னை வழியனுப்ப கவிஞர் அவர்களும் கூட வந்து கொண்டிருந்தார்.

கவிஞர் , தன் சொந்த ஊரில் மட்டுமல்ல தமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்களிலிருந்து இலக்கியவாதிகள் வரை அனைவராலும் மதிக்கப்படுபவர். பள்ளிப் பருவத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடு; கல்லூரி காலத்தில் அரசியலில் ஈடுபாடு; கூடவே பொதுத்தொண்டு. பதவியை நோக்கி அலைவதில்ல, ஆனால் பதவிகள் இவரைத் தேடி வந்தபோது வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருப்பவர். உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி ஒரு வாரியத்தின் உறுப்பினர் பதவியை தலைவர் அளித்ததால் ஏற்றுக்கொண்டார். அதனால் இப்போது சென்னையில் பெரும்பாலான நாட்கள் ஜாகை. ஏற்கனவே வாரத்துக்கு மூன்று முறை 250 கி.மி தூரத்திலிருக்கும் சென்னைக்கு வந்து போவார். சென்னை இவருக்கு கொல்லைபுறம். பறக்கும் சக்தி இருந்தால் காலையில் பல் துலக்கிவிட்டு டீ குடிக்க சென்னைக்கு வந்துவிடுவார்.

வசிக்கும் வீடு... ஊரில் எத்தனை செ.மீ. மழை பெய்கிறதோ அத்தனை செ.மீ. மழை இவர் வீட்டிலும் பெய்யும். என்ன நானா இப்படி ஒழுகுகிறதே! என்று கேட்டால், தம்பி நான் படுக்கிற இடத்திலெ ஒரு சொட்டுக்கூட ஒழுகவில்லை என்பார். கருணை உள்ளம் கொண்ட யாராவது ஓடு மாற்ற உதவி செய்தால் தலயை சொரிந்துக்கொண்டு நிற்கும் யாருக்காவது அந்த பணத்தைக் கொடுத்துவிட்டு அல்லாஹ் கொடுப்பான் என்று நமக்கு சமாதானம் சொல்வார்.

இலக்கிய கூட்டமாக இருந்தாலும் சரி, அரசியல் கூட்டமாக இருந்தாலும் சரி, மார்க்க கூட்டமாக இருந்தாலும் சரி வயிறு வலிக்க சிரிக்காமல் யாரும் வரமுடியாது. ஆழமான கருத்துக்களை நகைச்சுவையுடன் சொல்வதில் இவருக்கு நிகர் இவரே!

ஒரு இலக்கிய கூட்டம். கொடுக்கப்பட்ட தலைப்போ 'ராமனின் வனவாசம்'. ஈரேழாண்டு சோதனைக் காலம்; ராமபிரானும் சீதா பிராட்டியாரும் கங்கையைக் கடந்து காட்டினுள் புகுகின்றனர்; வனத்தில் பல்வகை எழில்மிகு காட்சிகளை சீதைக்கு ராமன் காட்டிக்கொண்டு செல்கிறான். சாமுத்ரிகா லட்சணங்கள் ஒருங்கே அமைந்த காவியத்தலைவியைக் கண்ணுற்ற மான்களுக்கு சீதை ஒரு உண்மை மானாகப் படுகின்றாள்; வனாந்திர மயில்களுக்கு சீதை ஓர் உண்மை மயிலாகப் புலப்படுகிறாள்.

மானென்று நினைத்துக்கொண்டு மான்களெல்லாம் அவளை அண்டி வருகின்றன, அதுபோலவே மயில்களெல்லாம் மயிலென நினைத்தபடி அவளைப் பின் தொடர்கின்றன. இப்படி மான்களும் மயில்களும் ஒரு மயக்க நிலை அடைந்துவிடுகின்றன. மயிலோடு மயிலாகவும் மானோடு மானாகவும் சீதை ஆகிவிட்ட அந்த அழகை ராமன் உணர்ந்தோடல்லாமல் சீதைக்கு எடுத்து இயம்புகிறான், “சாயல் கண்டு நின் விழிகண்டு மஞ்ஞையும் மடமானும் பல வருவன் காணாய்” என்று கம்பன் தீட்டியதை இப்படி அழகுபட வருணித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த சிறப்பு பேச்சாளர் நீதிபதி, நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை கவிஞரே எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் என்று தன் தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொண்டுவிட்டு அடுத்த நாளே கூட்டாளியாகிவிட்டார்.

ஒரு சமயம் இஸ்லாமிய பொது கூட்டத்தில் குர்ஆனின் சிறப்பைப் பற்றி பேசும்போது, 'அல்லாஹ் குர்ஆனில் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லிருக்கிறான்' என்று சொன்னார். சற்று நேரத்தில் 'பிரியாணிக்கு கறி எவ்வளவு போடவேண்டும் என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்லிருக்கிறானா?' என்று ஒருவன் சீட்டு எழுதி மேடைக்கு அனுப்பிவிட்டான். அதை படித்த அவை தலைவர் நெளிய ஆரம்பித்துவிட்டார். சீட்டைப் பார்த்த இவர், 'ஆம்! சொல்லிருக்கிறான்' என்று முழங்கிவிட்டார். கூட்டத்திலிருந்தவர்களுக்கெல்லாம் ஒரே குழப்பம். மேடையிலிருந்த மார்க்க அறிஞர்களுக்கு அதைவிட…! இப்படிப்பட்ட குண்டக்க மண்டக்க கேள்விக்கு ஆம் என்று சொல்லிவிட்டாரே என்று தலையை சொரிந்துக்கொண்டிருக்க இவர் விளக்கம் கொடுக்கலானார்:

'பிரியாணிக்கு கறி எவ்வளவு போடவேண்டும் என்பதைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று தம்பி கேட்கிறார். ஆனால் வீட்டுக்கா? இல்லை வியாபாரத்துக்கா என்று தெளிவாக கேட்கவில்லை. வீட்டுக்கு என்றால் கறி, கிலோவுக்கு பத்து துண்டு போடலாம்; வியாபாரத்துக்கு என்றால் லாபம் வரவேண்டும், கிலோவுக்கு இருபது இருபத்தைந்து துண்டு போடலாம். என் நண்பர் ஹசன் மெய்தீன் ஹோட்டல் வைத்து நடத்துகிறார். அவர் ஒருமு
றை சொன்னார், கவிஞரே எல்லாரும் இருபத்தஞ்சு துண்டு போடுறாங்க, நா இருபது துண்டுதான் போடுறேன்; அதில் வரும் லாபம் போதும், ஹராமான லாபம் வேண்டாம் என்று. அவர் மனிதர், அதனால்தான் அவர் கடையில் எப்போதும் கூட்டமாக இருக்கிறது, பிரியாணி உடனே விற்று தீர்ந்துவிடுகிறது. இந்த கேள்வியை என்னிடம் கேட்டிருக்கக்கூடாது, பிரியாணி போடும் பண்டாரியிடம் கேட்டிருக்கவேண்டும். ஹசன் மெய்தீன் எனக்கு கூட்டாளி, அவர் சொன்னதால் எனக்கு தெரிந்தது. அதனால் சொன்னேன். இல்லாவிட்டால் எனக்கும் தெரியாது. எனவே '’எதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதோ அந்த துறையைச் சார்ந்த வல்லுனர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் தன் திருமறையில் சொல்கிறான்' என்று விளக்கம் அளித்து கேட்டவனைத் தலைகுனியச் செய்தார்.

நானும் கவிஞரும் அடுத்தடுத்த சீட். ஏர் குஷனுள்ள A/C பஸ். குளிராவிட்டாலும் வியர்வை வராமல் ஏசி எங்களைக் காப்பாற்றிகொண்டிருந்தது. அவர் கொண்டுவந்த நொறுக்குத்தீணியை கொறித்துக்கொண்டே சற்று நேரம் அமைதியாக இருந்தோம். கொஞ்ச நேரத்தில் தீணி தீர்ந்துவிட்டது. நான் ஆரம்பித்தேன்,

‘நானா! (இப்படித்தான் கவிஞரைக் கூப்பிடுவேன். வயதில் மூத்தவர்களை அழைப்பது. அண்ணன் என்று பொருள்) எப்போது மீண்டும் துபைக்கு வரப்போறீங்க?’

‘கூடிய சீக்கிரம் தம்பி. சிங்கப்பூர் போயிட்டு அப்டியே துபை வந்து ரெண்டுமூனு இலக்கிய கூட்டத்திலெ பேசிப்புட்டு மறுபடியும் சிங்கப்பூர் போய், அங்கேந்து ஊர் திரும்ப புரோகிராம் இருக்கு. துவா செய்ங்க.’

இதற்கிடையில் பஸ் பொறயாரைக் கடந்துக்கொண்டிருந்தபோது, ‘இந்த இடத்தைப் பார்த்துக்கொள்ளுங்க, இது என் நினைவில் நிற்கும் இடம்’ என்று ஓரிடத்தைக் காண்பித்தார். அது அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லை, குண்டும்குழியுமான பொட்டைத்திடல், நான்கைந்து கருவைச் செடிகள்; இரண்டுமூன்று பனை மரம். ராத்திரி பெய்த மழையில் பள்ளத்தில் கொஞ்சம் தண்ணீர் தேங்கி நின்றிருந்தது.

‘சரி, இங்கு என்ன விஷேசம்?’

‘இதை குத்துபுதீனிடம் கேளுங்க, அவருக்கும் எனக்கும் சம்பந்தமுள்ள விசேஷமான இடம்.’

‘ஏன் நீங்க சொல்லுங்களேன்!’

‘இல்லெல்லே, அவர்ட்டேயே கேளுங்க. அப்புறம் வேறொரு சேதி, எனக்கு ஒரு ஒதவி செய்யனும்.’

‘என்ன சொல்லுங்க..’

‘ஒன்னுமில்லே, நான் போன தடவை துபை வந்தப்பொ ஒரு சாக்லெட் வாங்கிவந்தேன்…’

‘என்ன பிராண்டு?’

‘பிராண்டல்லாம் கிடையாது, கலர் கலரா பேப்பர் சுத்தியிருக்கும் ஸ்வீட் ஷாப்பில் வாங்கிக்கொடுத்தார்கள், ரொம்ப டேஸ்டாக இருந்துச்சு.’

‘என்ன நானா, எத்தனையோ நல்ல பிராண்ட்ஸ் இருக்கு அதைவிடவா?’

‘ஆமா தம்பி! அந்த மாதிரி சிங்கப்பூர்லகூட கிடையாது, அது ஈரானி கடையிலேயோ அல்லது லெபனானி கடையிலேயோ கிடைக்குமாம் கூடையிலெ வச்சிருப்பானாம்.’

‘நீங்க சொல்றது சரிதான், என்னக்கு புரியுது, அந்த சாக்லெட் வேனும் அவ்வளவுதானே!’

‘ஆமா, அது எனக்கல்ல’

‘பின்னெ யாருக்கு?’

‘நம்ம சேத்தாச்சிம்மாவுக்கு.’

‘சேத்தாச்சிமா……….?’

‘நம்ம தலைவரோட பொண்டாட்டி. போனதடவை வந்திருந்தபோது கொண்டுவந்து கொடுத்தேன், அது அவங்களுக்கு புடிச்சுப்போச்சு, இரண்டுதடவை என்னிடம் கேட்டுட்டாங்க, அதனாலெ அந்த சாக்லெட்டோடுதான் பார்க்கனும்னு இருக்கேன்.’

‘சரி, வாங்கி அனுப்புறேன். ஆனா ஒரு கண்டிஷன். நம்பிக்கையான ஆளிடம்தான் அனுப்புவேன், லேட்டானாலும் ஆகும். ஆளைப் பொருத்தது. சரியா?’

‘சரி.’

பஸ் பாண்டிச்சேரியில் நின்றது. கன்னிமேரியை தரிசித்திட்டு வந்த சென்னை பாஸஞ்சர் ஒருவர் பக்தி பரவசம் மேலோங்க ஒயின் ஷாப்பை தரிசிக்கப் போனவர்தான். திரும்பவே இல்லை, அங்கேயே சங்கமித்துவிட்டார் போலும். அதனால் 15-20 நிமிஷம் லேட், டிரைவரை கவிஞர் சாடிய பின்தான் பஸ் புறப்பட்டது.

கோயம்பேடு பஸ் நிலயத்தை அடைந்தபோது இரவு 8.30. அங்கிருந்து ஆட்டோவில் எழும்பூரில் வழக்கமாக அவர் தங்கும் ராயல் லாட்ஜுக்குப் போனபோது VIP வரவேற்பு. ஒருத்தர் பாய் என்கிறார், ஒருத்தர் நானா என்கிறார், அண்ணே என்கிறார் ஒருவர், தலைவரே என்கிறார் வேறொருவர், இப்படி பலபேர் சுற்றிகொண்டார்கள். அத்தனைபேருக்கும் அழகான பதில்; குறைகள் அங்கேயே தீர்க்கப்படுகின்றன; வழிமுறைகள் சொல்லப்படுகின்றன; சிலருக்கு மறு நாள் அப்பாயிண்ட்மெண்ட்.

நான் ஒரு ஓரமாக நின்று வேடிக்கப் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கிருந்தோ முளைத்த ரூம் பாய் ஓடிவந்து, ‘அண்ணே ஒங்க ரூம் ரெடி, ஒங்கக்கூட வந்தவர் யார்? பெட்டிப் படுக்கையெல்லாம் எங்கே? எல்லாத்தையும் எடுத்து வச்சுடறேன், நாலு பாட்டில் மினரல் வாட்டர் ரூம்லெ வச்சுட்டேன், சாப்பிட என்ன வாங்கிட்டு வர…?’ மூச்சுவிடாமல் கேட்டான்.

‘ம்….. பாத்தீங்களா! இப்படித்தான் நம்ம வாழ்க்கை’ என்று என்னைப் பார்த்து கவிஞர் சொல்ல, ‘காலையில் ஏர்போர்ட் போக கா….ர்?’ என்று நான் இழுத்தேன்.

‘அதெல்லாம் தானே நடக்கும், வாங்க ரூமுக்கு கைகால் கழுவிட்டு சாப்பிட போலாம், லேட்டா போனா சரவண பவன்லே ஒன்னும் கிடைக்காது.’

சரவணபவன்லே சப்பாத்தி, ரோஸ்ட் வேறு எதுவோ சாப்பிட்டதற்கு 120 ரூபாய் பில், பளிச்சென்று மூன்றாக மடித்திருந்த புதிய நோட்டை நீட்டிவிட்டார்.

‘நானா…! திஸ் ஈஸ் டூ மச், நீங்கத்தான் ஆட்டோவுக்கு கொடுத்தீங்க, இதுக்கு நான் கொடுக்கிறேன்’ என்று பணத்தை எடுத்தபோது பிடுங்கி என் ஜோப்பில் வைத்துவிட்டு ‘எல்லாம் ஒன்னுதான் தம்பி, சும்மா இருங்க’ என்று வார்த்தையை அழுத்தினார்.

அதற்குமேல் பேசமுடியவில்லை, ‘சரி, வாங்க போலாம்.’

‘தம்பி இங்கே வாங்க காருக்கு சொல்லலாம்.’

‘ஏன் நம்ம லாட்ஜிலே இருக்காது?’

‘இருக்கு, இங்கே நம்ம வசதிக்கு வருவான்.’

‘நானா, காசு நான்தான் கொடுப்பேன்.’

‘அவன் வாங்கிட்டா கொடுங்க.’

‘நீங்க வாங்கிக்க சொல்லனும்.’

‘சரி.’

எப்படி மூக்கில் வியர்த்ததோ அந்த டிரைவர் எங்களைத் தேடிக்கொண்டு வந்தார். அவரிடம் காருக்கு சொல்ல வாடகை எவ்வளவு என்று நான் கேட்டபோது 500 ரூபாய். ஆனா அண்ணனுக்கு 300 என்று சொல்ல நான் பணத்தை நீட்டிய போது அண்ணனுக்கு கணக்கு இருக்கு என்று சொன்னபோது கவிஞரின் முகத்தைப் பார்த்தேன்.

‘ம்…. பாத்துக்கிட்டீங்கல்ல, வாங்க பேசாம.’

ஹோட்டலை அடைந்தபோது இரவு 12.30. அப்போதுகூட கவிஞரைப் பார்க்க இரண்டு பேர் காத்திருந்தனர். இவர்கள் எப்படி மோப்பம் பிடிக்கிறார்களோ தெரியவில்லை. காலையில் பார்ப்போம் என்று அவர்களை அனுப்பிவிட்டு அறைக்குச் சென்றோம்.

சிறிது மௌனத்துக்குப் பின் நான் தொடங்கினேன்: ‘நானா, உங்களுக்கென்று நிரந்தர வருமானம் கெடையாது, அப்படியிருக்க எதுக்காக இப்படி செலவு பண்றீங்க?’

‘தம்பி…, கிணறு இருக்கே! அதிலுள்ள தண்ணியை எடுக்காமெ அப்படியே வச்சிருந்தா யாருக்குமே உபயோகப்படாது, தண்ணியும் கெட்டுப் போய்விடும். எடுத்தாத்தான் நல்லா இருக்கும், எடுக்கயெடுக்கத்தான் புது தண்ணி ஊறும். அப்படித்தான் காசும், செலவு பண்ணினாதான் வரும். அப்பத்தான் அல்லா கொடுப்பான், இல்லாவிட்டா கொடுக்கிறதை நிறுத்திடுவான்.’

‘ம்… ஹஜ்ரத் சொன்னது…’

‘ஆமா….!’

‘அதோட இன்னொன்னும் சொல்லிருக்கார்களே! கையெ ஒரேடியா விரிச்சிடக்கூடாதுன்னு..’

‘நான் விரிக்கலையே! நாளைக்குப் பாருங்க எவனாவது வந்து காசு கொடுத்துட்டுப் போவான். ஜோப்பிலே காசிருந்தா ஒரு பய வரமாட்டான்.’

‘நானா, என்னோட தோல்வியெ ஒத்துக்கிறேன், உங்களோட தர்க்கம் பண்ணமுடியாது, சரி தூங்கலாம்.’

சற்றுநேரம் உறங்கிவிட்டு காலை 5.00 மணிக்கு புறப்பட்டு 8.00 மணி ஃப்ளைட்டைப் பிடித்து அமீரகம் வந்து சேர்ந்தேன். மூன்று பத்துவருட இயந்திர வாழ்க்கையில் மீண்டும் ஒரு அத்தியாயம் தொடங்கியது.

Part II

தாயகத்திலிருந்து வந்த பிறகு எனக்கு அது முதல் வெள்ளிக்கிழமை, வார விடுமுறை நண்பர் குத்துபுதீன் என்னைப் பார்க்க வந்தார். பாவம்! லண்டனில்தான் ரூமுக்கும் ஆபீஸுக்கும் இரண்டு பஸ் பிடித்து இரண்டு மணி நேரம் போகவும் இரண்டு மணி நேரம் வரவும் என்றால் இங்கேயும் இப்படியா? எனக்கே ஒரு மாதிரியாக இருக்கும்போது அவருக்கு எப்படி இருக்குமோ?

ஊர் கதை, சொந்தக் கதை, சோகக்கதை எல்லாம் கதைத்து முடிந்த பிறகு கடைசியாக கவிஞர் பேச்சு வந்தது, ‘பொறையாறில் ஒரு இடத்தைக் காண்பித்து உங்களிடம் கேட்க சொன்னாரே, அந்த பொட்டத்திடலில் என்னங்க விசேஷம்..?’ என்றதும்தான் தாமதம். கெக் கெக் கெக் கே…. என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு நிமிடம் எனக்கு எதுவுமே புரியவில்லை , ஆனால் எதோ தமாஷ் நடந்துள்ளது என்று மட்டும் ஊகிக்க முடிந்தது.

‘அட! சொல்லிட்டு சிரிங்க, நானும் சேர்ந்து சிரிக்கிறேன்…’

‘அது வேறு ஒன்னுமில்லை நானா (அவருக்கு நான் நானா), நானும் கவிஞரும் சீர்காழிக்கு ஒரு மீட்டிங்கிக்குப் போயிருந்தோம். அதுலே அவரும் பேசுறார், மீட்டிங் ராத்திரிக்குத்தான்.’

‘சரி அதுக்கென்ன?’

‘நாங்க காலையிலேயே புறப்பட்டுப் போய் அங்கே நண்பர் சாஜு வீட்டில் தங்கிட்டோம். மத்தியானம் விருந்து. மீன் ஆக்கி, ரால் பொரிச்சு, நண்டு பெறட்டி ஏக தடபுடலாக வச்சிருந்தார். நாங்களும் செம எடுப்பு எடுத்தோம். சாப்பாடு ஒத்துக்கலையோ என்னவோ அவருக்கு புடிங்கிக்கிச்சு. சாயந்தரம் அஞ்சு மணிக்கு நாலஞ்சுத் தடவை போயிடுச்சு,’

‘மாத்திரை எதாவது வாங்கி போட்டுக்க வேண்டியதானே, அப்படியே இல்லாவிட்டா கொஞ்சம் தேன் குடிச்சா ஒடனே நின்னுடுமே!’

‘அதெல்லாம் ஒன்னும் நடக்கலே; அவராலே தாங்க முடியலே, புறப்படு ஊருக்குன்னுட்டார். நான் சொன்னேன், ‘ நானா மீட்டிங் இருக்கே?’

‘மீட்டிங்காவது ம….ராவது, மேடையிலே எதாவது ஆயிட்டா? வாங்கங்க ஊருக்கு’ என்று அவசரப்படுத்திவிட்டார். நான் சாஜுக்கிட்டே மட்டும் சொல்லிப்புட்டு அடுத்த பஸ்ஸை புடிச்சு புறப்பட்டுட்டோம். பஸ் பொறையாறை நெருங்கியது, ‘ஓய்! பஸ்ஸை நிறுத்த சொல்லுங்கன்னார்.’

‘நானா கொஞ்ச நேரத்துலே வூடு போய் சேர்ந்திடலாம் என்றேன். அதுவரை தாங்காது பஸ் நிக்கலேன்னா இங்கேயே போய்டும்னு சொல்லிட்டார். வேறு வழி இல்லாது பஸ்ஸை நிறுத்தினோம். பஸ் நின்றதும்தான் தாமதம் ஓடி இருட்டுக்குள் மறைஞ்சுட்டார்.’

கொஞ்ச நேராத்துலே 'குத்துபு…’ன்னு சத்தம் வந்துச்சு, ‘எங்கே இருக்கீங்க…?’ நான் கேட்டேன். இங்கேத்தான் இருக்கேன் பக்கத்திலே தண்ணி இருக்கான்னு பாருங்கன்னு சத்தம் கொடுத்தார்.

எனக்கு எதுவும் தெரியலே, ஒரே இருட்டா இருக்கு, தெரு விளக்குக்கூட எரியலேயே ‘என்ன செய்யனும்…’னு கேட்டேன்.

அப்டீன்னா கொஞ்ச தூரத்துலே பொட்டிக்கடை தெரியுது அங்கே போய் நாலு பாட்டில் தண்ணி வாங்கிக்கிட்டு வாங்க, அப்டீன்னார்.

நானும் விதியேன்னு அந்த இருட்டுலே நாலு ஃபர்லாங் நடந்து போய்... அந்த கடையிலே தண்ணி கேட்டா இல்லேன்னுட்டான். பக்கத்திலெ கொளம் குட்டை இருக்கான்னு கேட்டா, இருக்குசார் ஆனா அதுலே தண்ணி இல்லே அப்டீன்னுட்டான். வேறு வழி இல்லாமெ இரண்டு பாட்டில் 'சவனப்' வாங்கிக்கிட்டு வந்தேன். ஆனா அவர் எங்கே இருக்கார்னு தெரியலெ! ஒரு சவுண்டு கொடுத்தேன், ‘நானா…..! எங்கே இருக்கீங்க?’

‘நான் இங்கேத்தான் இருக்கேன்…’ என பதிலுக்கு சவுண்டு கொடுத்தார். ‘அவன் கடையிலெ தண்ணி இல்லே 'சவனப்'தான் வாங்கிக்கிட்டு வந்திருக்கேன்..’ என்றேன். ‘இங்கே கொண்டுவாங்க…’ என்றார். நான், ‘முடியாது நீங்க இங்கே வந்து எடுத்துக்கிட்டு போங்க..’ என்று ரோட்டு ஓரமா நின்னுக்கிட்டேன்.

எதோ போற வாற வாகன வெளிச்சத்துலே நான் வாங்கிவந்த 'சவனப்'பை எடுத்துக்கிட்டுப்போய் சுத்தம் செய்துகிட்டு வந்தார். நான் நினைக்கிறேன் உலகத்திலேயே 'சவனப்'புலெ சுத்தம் செய்த ஒரே ஆள் இவராத்தான் இருக்க முடியும். அதனால்தான் அந்த இடத்தை மறக்கமுடியலெ!

நான்கு மாதங்கள் உருண்டோடின, திடீரென்று கவிஞரிடமிருந்து, 'சாக்லெட்டை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்' என்று sms வந்தது. 'நான் மறக்கவில்லை, கொடுத்தனுப்ப சரியான ஆள் கிடைக்கவில்லை' என்று பதில் அனுப்பினேன்.

ஒரு மாதம் கழித்து எனதூர் அன்பர் ஒருவர் புறப்பட இருந்தார். அவர் கவிஞருக்கு உறவுகூட, அவரிடம் கேட்டேன், ‘தம்பி, சாக்லெட் கொஞ்சம் வாங்கித்தருகிறேன் அதை கவிஞரிடம் கொடுத்துவிட முடியுமா? நிர்ப்பந்தம் இல்லை முடிந்தால் சொல்லுங்கள் வாங்கித்தருகிறேன்’ என்றேன். புறப்படும் அன்று வாங்கித்தாருங்கள் பத்திரமாக சேர்த்துவிடுகிறேன் என்றார். சாக்லெட்டாச்சே உருகிவிடப்போகிறது என்று புறப்படுவதற்கு சற்று முன்பாக ஒரு கிலோ வாங்கிக் கொடுத்துவிட்டு கவிஞருக்குத் தகவல் தெரிவித்தேன்.

அவர் ஊர் சேர்ந்து ஒருவாரம் ஆகிவிட்டது. 'இன்னும் சாக்லெட் கிடைக்கவில்லை' என்று கவிஞர் தகவல் அனுப்பிருந்தார்.

உறவுக்காரர்தானே நீங்கள் போய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நான் ஒரு sms அனுப்பியதற்கு, 'அவர் உறவு, அவர் மனைவி எனக்குப் பகை' என்று பதில் அனுப்பிவிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

இரண்டு நாள் கழித்து மீண்டும் ஒரு தகவல்: Beloved Brother, Assalamu Alaikkum. Chocolate oru vaaram avar veetil irunthathaal yennai paarkkum aasaiyil URUKIVITTATHU. Real taste minus. Yendraalum, ungkal anbukku nandri.

ம்… கொடுப்புனை இல்லை, சேத்தாச்சிம்மாவுக்கு. எனக்கு பணம் வேஸ்ட், கவிஞருக்கு எதிர்பார்ப்பு வேஸ்ட். அடுத்த consignment க்கு ஆள் தேடிக்கொண்டிருக்கிறேன்.


-----oo0oo----

14-6-2007 திண்ணை இணைய இதழில் வெளிவந்தது

பூகம்பம்

இபுறாஹிம் அப்போதுதான் ரமலான் மாத இரவுநேர சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு கையில் மூஸாகாக்கா கடை சாயாவுடன் ரூமுக்கு வந்தான். இரவு பத்துமணிதான் ஆகியது, வெளியில் கடுமையான humidity, தெரு விளக்குகள் பனிமூட்டத்தில் இருப்பதுபோல் மறைந்தும் மறையாமலும் இருந்தன. ரூமுக்குள் நுழைந்து ஏசியை போட்டுவிட்டு வியர்த்திருந்த சட்டையை ஹேங்கரில் மாட்டிவிட்டு, 'அப்பாடா! என்ன புழுக்கம், இதுக்கு வெயில் தேவலாம்; பேரீச்சை பழுப்பதற்குமுன் நம்மை பழுக்க வச்சுடும்போலிருக்கே' என்று முனங்கியவாறு கொண்டுவந்த சாயாவை உறிஞ்சியவாறு டிவியை ஆன் பண்ணினான்.

சன் டிவியில் அப்போதுதான் காமெடி டைம் ஆரம்பம் ஆகியது. சிட்டிபாபு போனை எடுத்து "ஹலோ, யாரு ராமசாமியா? டெய்லர் ராமசாமிதானே!
'அமா, நீங்க யாரு?' என்றது மறுமுனை. நா... குப்புசாமி பேசுறேன்! சட்டை தைக்க கொடுத்து எத்தனை நாளாச்சு, எப்ப கொடுப்பீங்க? தீபாவளிக்கு முந்தி கொடுத்துடுவீங்களா? என்று வழக்கம்போல் உடால் விட்டார். அவர் சாதாரண ஆள் இல்லை, அவரும் பதிலுக்கு, "ஆமா! சிட்டி பாபுசார், எந்த காலத்திலே சட்டை போட்டுக்கொண்டு டிவியிலே வந்திருக்கீங்க, ஸ்பான்ஸர் கொடுக்கிற 'டி' சர்ட்டை போட்டுக்கொண்டு ஆட்டு ஆட்றிங்க" உடனே பக்கத்திலிருந்த சுப்ரியா, "எப்படி கண்டுபுடிச்சீங்க? என்றாங்க. "எப்போதும் உங்க ரெண்டுமூஞ்சியையும் பாத்துட்டுத்தானே தூங்கிறேன், இதெ கண்டுபுடிக்க படிச்சிட்டாவரனும்" என்றார் நக்கலாக.

சார், வச்சுடாதீங்க போனை, பக்கத்துலெ ஒரு V.I.P இருக்காரு; டைரக்டர் கதாநாயகன் என்று கலக்குற சந்திரா சார் இருக்காரு அவரோட பேசுங்க, என்றார் சிட்டிபாபு. ஆமா, மசால்வடையை அம்மியிலெ வச்சு நசுக்கின மாதிரி ஒரு மூஞ்சியை வச்சுக்கிட்டு கதாநாயகனா! யாரு கதாநாயகனா நடிக்கனுங்கிற வெவஸ்தயே இல்லாம போச்சு என்று முனுமுனுத்துக்கொண்டே, 'சார் ஒங்க படத்தெ நெறைய தடவெ பாத்திருக்கேன், சூப்பரா நடிக்கிறீங்க, இப்படியே நடிங்க..' என்று புகழாரம் சூட்டினார். பேசி முடிச்ச பிறகு "உங்களுக்காகவும் உங்க குடும்பத்துக்காகவும் சூப்பரான ஒரு காமெடி போடுறோம் பாருங்க" என்று சொல்லிவிட்டு ஒரு காமெடி சீனைப் போட்டார்கள்.

எப்படித்தான் இவங்க சிரிக்கமுடியாத காமெடியாப் பார்த்து செலக்ட் பண்ணி போடுறாங்களோ தெரியலே என்று அலுத்துக்கொண்டே அடுத்த சேனல், சன் நியூஸுக்கு வந்தான் இபுறாஹிம். இல்லாத ராமர் பாலத்தையும் ஈரானுக்கு அடுத்தபடியான இந்தியாவின் அணுசக்தி பிரச்சினையும் பற்றிய செய்திகளுக்கிடையில் FLASH NEWS: சுமத்திராவில் பயங்கர நிலநடுக்கம், ஆயிரக்கணக்காவர்கள் பலி என்ற வரிகள் ஓடத்தொடங்கின. இவனுக்கு புளியை கரைத்தது. உடனே BBC க்கு தாவினான். அவர்கள்தான் உலகம்பூராவும் இறைந்து கிடக்கிறார்களே! அதில் exclusive news ஆக இதை விடியோ சகிதமாக காண்பித்தார்கள், பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

உடனே தனது மொபைலை எடுத்து எண்களை சுழட்டினான். அடித்தது எடுக்கவில்லை, பொறுமை இழந்தான். எடுக்கும்வரை மீண்டும் மீண்டும் சுழற்றினான். ஒரு வழியாக மறுமுனையில் தொடர்பு ஏற்பட்டவுடன் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, நூரா ஏன் போனை எடுக்காமல் என்ன செய்துகொண்டிருந்தாய்? என்றான் பதற்றப்படாமல் சாதாரணமாக.

நாளை நோன்பு வைப்பதற்காக சமையல் செய்துகொண்டிருந்தேன், போன் பக்கத்தில்தான் இருந்தது உன்னுடைய போன் என்று தெரிந்துதான் எடுக்கவில்லை என்றாள் நூரா.

நாசமாப்போச்சு, உங்கள் நாட்டில் பூகம்பமாம் நியூஸிலே சொல்றான் போய் பாரு என்றான்.

'இபுறாஹிம், 2004 சுனாமிக்குப் பிறகு எங்க நாட்டிலெ அடிக்கடி பூகம்பம் எரிமலை என்று வருது, இது எங்களுக்கு பழகிவிட்டது.'

'அதில்லை, இப்போது சுமத்திராவிலெ அடிச்சிருக்கு அதிலும் ஒங்க டிஸ்டிரிக்ட் பதாங்கில்தான் அதிக சேதமாம், டிவியை வச்சுப் பாரு.'

'நீ யேன் பதட்டப்படுறே! டிவிகாரங்க ஒன்னை நாலாக்கி சொல்வாங்க, இதெ பெரிசா எடுத்திக்கிட்டா நமக்கு நிம்மதி போய்டும்.'

இபுறாஹிமுக்கு கோபம் தலைக்கேறியது, 'அடி வெளங்காதவெளே! என்னை என்ன பேயனென்றா நெனச்சிக்கிட்டெ,' என்று தமிழில் திட்டிக்கொண்டு போய் பிபிஸியை வச்சு பாரு, ஆயிரகணக்கில் செத்துட்டாங்களாம், ஒரு சில கிரமமே காலி என்று சொல்கிறான்.'

அவன் தமிழில் சொன்னதை இவன் எதோ தன்னை திட்டுகிறான் என்று புரிந்துக்கொண்டு 'இபுறாஹிம் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டு ஆனால் எனக்கு புரியிற மொழியில் திட்டு, என்ன திட்டினாய் அதெ சொல்லு மொதல்லெ!'

'Stupid என்றேன், சந்தோசம்தானே! இப்பொ போய் பாத்துட்டு எனக்கு போன் பண்ணு, O.K.'

போனை கீழே வைத்துவிட்டு பதற்றத்தோடு டிவியையே பார்த்துக்கொண்டிருந்தான். எதோ தனக்கு ஆபத்து வந்துவிட்டது போல் 'உம்' மென்று இருந்தான்.

கொஞ்ச நேரத்தில் நூராவிடமிருந்து போன் அலறியது, இபுறாஹிம், நீ சொன்னது சரிதான், எனக்கு என்னவோ பயமா இருக்கு, ஒடனே புறப்பட்டு வா, என்றாள் அழாத குறையாக.

பயப்படாதே, தைரியமாக இரு, மொதல்லெ ஊருக்கு போன் பண்ணி என்னா ஏதுன்னு கேள் என்றான் இபுறாஹிம் பதிலுக்கு.

போன் போகவில்லை எந்த லைனும் கிடைக்கவில்லை, நீ வா உடனே என்றாள் அழுகையுடன்.

இபுறாஹிம் அங்கு சென்ற போது அவள் மட்டும் இருந்தாள் ரூம் மேட் யாருமில்லை அன்று வாரக்கடைசி என்பதால் எல்லாம் வெளியே போய்விட்டார்கள். பாதி சமைத்தும் சமைக்காததுமாக அப்படியே கிடந்தது. அவனை பார்த்ததும் 'ஓ' வென்று அழ தொடங்கிவிட்டாள்.

அப்ப நா சொன்னபோது ஒனக்கு சிரிப்பா இருந்துச்சு, இப்ப அழறே. இனி அழுவதில் பிரோஜனமில்லே, மொதல்லெ மனசெ தேத்திக்கோ. இது இயற்கையின் சீற்றம் என்று சமாதானப்படுத்தினான்.

'டிவியிலெ காண்பிக்கறதெ பாத்தா எங்க ஊர் மாதிரி தெரியுது. ஒன்னும் சரியா புலப்படலெ, எனக்கு என்னசெய்றதுன்னு புரியலெ.'

'இப்ப நீ ஊருக்கு போனைப் போடு, ஒன்னோட அப்பா அம்மாகிட்டெ பேசு.'

'டிவியெ பாத்ததிலேந்து போன் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன் லைன் போகமாட்டேன்கிறது. எல்லா லைனும் கட், என்ன செய்யறது?'

'இப்பொ இங்கே ராத்திரி பத்துமணி உங்க ஊர்லே என்ன நேரம் இப்பொ?'

'ராத்திரி மூனு மணி.'

'பூகம்பத்தாலெ லைன் எல்லாம் கட்டாயிருக்கும், பக்கத்து ஊர்லெ யாரவது ஒனக்கு சொந்தக்காரங்க இருக்காங்களா? இருந்தாங்கன்னா அவங்களுக்கு போன் பண்ணு.'

'இருக்காங்க, ஜாக்கர்தாவுலெ என் அக்கா இருக்கா, நா போன்லெ சொன்னபிறகுதான் அவளுக்கே தெரியுது. காலையிலெ சொல்றேன் என்கிறாள்.'

'சரி, வேறு யாருமில்லே?'

'ஒருத்தன் இருக்கான் என்னைத்தான் கட்டிக்கிவேன் என ஒத்தக்காலில் நின்றான். அவன் குடிகாரன்; குடிச்சுட்டு அடிப்பான் என்பதால் நான் மாட்டேனென்று சொல்லிப்புட்டேன். அதனாலெ எங்க குடும்பத்தோடு ஒறவு இல்லெ, எங்கோ அச்சையில் இருக்கானாம். அவனொட பழய நம்பர் இருந்துச்சு தேடிப்பாக்கனும்.'

'தேடிப்பாத்து போன் பண்ணு.'

'சரி, காலையிலெ பண்றேன்.'

'இப்பொ மொகத்தை தொடச்சிக்கிட்டு படு, நாளைக்கு வெள்ளிக்கிழமை. வெள்ளியும் சனியும் வாரந்திர ஹாலிடே. என்ன இருந்தாலும் நாளைக்கு இந்தோனேசியா எம்பாஸி இருக்கும். நான் நாளை காலையிலெ வாரேன், நாம் இரண்டு பேரும் எம்பாஸிக்குப் போய் விவரம் கேட்போம்.' இப்படி அவளை சமாதானப்படுத்திவிட்டு ரூமுக்கு வந்தாலும் இபுறாஹிமுக்கு தூக்கம் வரவில்லை. காலை மூன்று மணிக்கு எழுந்து மறுநாள் நோன்பு பிடிப்பதற்காக உணவு உண்டுவிட்டு படுத்தவன் அசந்து தூங்கிவிட்டான். மறு நாள் காலை நூராவிடமிருந்து போன் வந்தவுடன் அலறிஅடித்துக்கொண்டு எழுந்து போனை எடுத்தான்.

'ஹலோ இப்றாஹிம் தூங்காதே வா உடனே.'

'குளிச்சிட்டு அரை மணியில் வாரேன், அதுக்கு முந்தி உன்னுடைய பாஸ்போர்ட் காப்பி, ஐ டி கார்டு, ஊர்லெ உள்ளவங்க போட்டா; அட்ரஸ் மற்றும் வேறு ரிக்கார்டு இருந்தா எடுத்துக்கிட்டு கீழே வா, கார் பார்க்கிங் கிடைக்காது; டபுள் பார்க்கிங் பண்ணினா போலிஸ் முக்காலிஃபா(fine) போட்டுடுவான்.'

சரியாக 8-45 க்கு அவளை அழைத்துக்கொண்டு இந்தோனேசிய தூதரகம் இருக்கும் இடத்தை அடைந்தபோது அங்கு கூட்டம் நிறைந்திருந்தது. வந்திருந்தவர்களில் பெரும்பாலும் house maid களாக வேலைப்பார்க்கும் பெண்கள். ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமுமாக வரிசைப் படுத்திக்கொண்டிருந்தனர் போலிஸார். சற்று நேரத்தில் தூதரக அதிகாரி ஒருவர் வந்து வரிசையில் நின்றிருந்த எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்று பேச ஆரம்பித்தார்.

'தயவு செய்து எல்லோரும் அமைதியாக இருந்து நான் சொல்வதை கவனமாக கேளுங்கள், நாம் மிகப் பெரிய துன்பத்தில் இருக்கிறோம்; ஒவ்வொருவருக்கும் இந்த துன்பம் வலிமையாகத்தான் இருக்குமேயல்லாது குறைவாக இருக்கமுடியாது. சுமத்திரா தீவின் பதாங் மாவட்டத்தின் பதாங் ஜயா பகுதியை நேற்று இரவு 12-25க்கு பூகம்பம் தாக்கியிருக்கிறது. ரிக்டர் ஸ்கேலில் 8.2 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நூற்றாண்டிலேயே இது மிக கடுமையான நில நடுக்கம். இதனால் பதாங்ஜயாவை சுற்றியுள்ள 13 கிராமங்கள் பலத்த சேதத்தை அடைந்துள்ளன. சில ஊர்கள் அடியோடு அழிந்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. இதில் கோட்டாமறியா, பதாங்புவான், மரூப்கிஜயா ஆகிய மூன்று ஊர்களும் தரைமட்டமாகிவிட்டன. அந்த ஊரை சேர்ந்தவர்கள் யாரும் இருந்தால் முதலில் இந்த பக்கம் வந்து அமருங்கள். நீங்கள் யாரும் பதட்டப்படவேண்டாம், உங்களது பெயர்களை இங்கு பதிவு செய்யுங்கள், அதன் பிறகு மற்ற எல்லோரும் தங்களது பெயர்களை பதிவு செய்யுங்கள் என்று அவர் சொல்லவும், ஐயோ! எல்லாம் போயிடுச்சே என்று கத்திக்கொண்டே நூரா மயங்கி விழுந்தாள்.

ஆண்கள் பக்கம் இருந்த இபுறாஹிம் பதறியடித்துக்கொண்டு முன்னேற அவனை ஒரு அலுவலர் தடுத்து நிறுத்தி நீங்கள் யார் என்று கேட்க, நானும் அந்த பெண்ணும் ஒரே ஆபிஸில் வேலை செய்கிறோம், நான்தான் அழைத்துக்கொண்டு இங்கு வந்தேன் தயவு செய்து என்னை அனுமதியுங்கள் என்று கெஞ்ச, உங்கள் ID Card ஐ காண்பியுங்கள் என்று அலுவலர் மிரட்ட, அதை காண்பித்த பிறகு அவனை அனுமதித்தார்.

நூரா மயங்கி விழுந்ததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் தண்ணீரை அவள் முகத்தில் அடித்து மயக்கத்தை தெளிவிக்கவும் இபுறாஹிம் அவளை நெருங்கவும் சரியாக இருந்தது. மயக்கம் தெளிந்த அவளை காற்றோட்டமான ஓரிடத்தில் அமரவைத்து பக்கத்தில் தூதரக அலுவலர் ஒருவர் உதவிக்காக இருந்தார்.

இபுறாஹிமைக் கண்ட அவள், இப்றாஹிம் எனக்கு பயமா இருக்கு எங்கேயும் போயிடாதே, தயவு செய்து இங்கே இரு என்று சொல்லிவிட்டு அவனை என் அருகில் இருக்க அனுமதியுங்கள் என்று அந்த அலுவலரிடம் கேட்டுக்கொண்டாள்.

அதிகாரிகள் பொறுமையாக ஒவ்வொருவரிடமும் விபரங்கள் கேட்டு பதிவு செய்துக்கொண்டிருந்தனர். நூரா அவர்களை நெருங்கி, ஐயா நான் மரூப்கிஜயாவை சேர்ந்தவள், என் அம்மா அப்பா கணவர் என் இரண்டு குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை நீங்கள் சொல்வதைப் பார்த்தால்.. நினைக்கவே பயமாக இருக்கிறது, தயவு செய்து உண்மையை சொல்லுங்கள், அவர்கள் நிலமை என்ன என்று சொல்லுங்கள் என்று கண்ணீருடன் கெஞ்சினாள்.

அம்மா, எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம், இறந்தவர்களையும் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்டிருப்பவர்களையும் மீட்டுக்கொண்டிருக்கிறார்கள். மின்சாரம் டெலிபோன் எல்லாம் துண்டிக்கப்பட்டிருக்கிறது, ராணுவத்தினர் வந்து போர்கால அடிப்படையில் வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்தும் உதவிகள் வந்துக்கொண்டிருக்கின்றன. நீங்கள் இந்தோனேசியா செல்வதானால் அதற்கு எல்லா உதவிகளையும் செய்கிறோம். ஆனால் பதாங் ஏர்போர்ட் பாதிக்கப்பட்டுள்ளது நாளை சரியாகிவிடும், நீங்கள் ஜாக்கர்தா சென்றால் அங்கிருந்து சிறிய விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம் பதாங் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இந்த பாரத்தை பூர்த்தி செய்து எல்லா விபரங்களையும் கொடுங்கள், நாங்கள் உங்களுக்கு ஒரு அடையாள அட்டைத் தருகிறோம், அதை எடுத்துக்கொண்டு சென்றால் அங்கு எல்லா உதவிகளும் கிடைக்கும். என்று சொல்லிவிட்டு மேலும் விபரங்களுக்கு இந்த நம்பரில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் இது 24 மணி நேரமும் செயலில் இருக்கும் என்று ஒரு hot line நம்பரைக் கொடுத்தார். இந்தோனேசியாவில் தொடர்பு கொள்வதானால் இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று வேறு இரண்டு மூன்று எண்களைக் கொடுத்தார்.

'நூரா இப்பொ என்ன செய்யலாமென்று நினைக்கிறாய்?'

'நான் ஊருக்குப்போகலாமென்று நினைக்கிறேன். அதுதான் நல்லதாகப் படுகிறது, என்னால் இங்கே இருக்கமுடியாது.'

'அப்படியானால் அவர்கள் கொடுத்த பாரத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு அடையாள அட்டை வாங்கு, எனக்கு ஜும்ஆ தொழுக்கைக்கு நேரமாகிவிட்டது, நான் தொழுதுட்டு வந்து உன்னை அழைத்துப்போகிறேன். மற்றதெல்லாம் ரூமுக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்.' என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த பள்ளிவாசலுக்கு இபுறாஹிம் சென்றுவிட்டான்.

இதற்கிடையில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு தன் கம்பெனி ஜி எம் க்கு போன் பண்ணி விசயத்தை சொல்லி தன் நாட்டுக்குப் போக அனுமதியும் பாஸ்போர்ட் கம்பெனியில் இருப்பதால் பி ஆர் ஓ விடம் சொல்லி அதை பெற்றுக்கொள்ளவும் அனுமதி வாங்கியிருந்தாள்.

சரியாக 1-30க்கு வந்து நூராவை அழைத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானபோது, 'இப்றாஹிம் ரூமுக்குப் போகவேண்டாம் நான் ஜி எம்மிடம் லீவு கேட்டு வாங்கிவிட்டேன் எமர்ஜன்ஸி லீவாக பதினைந்து நாள் தந்திருக்கிறார். பாஸ்போர்ட்டை வாங்க பி ஆர் ஓ வைப் பார்க்கவேண்டும்.'

அவர்கள் இருவரும் அலுவலகம் சென்றபோது அங்கு ஜி எம்மின் உத்திரவின்பேரில் பி. ஆர். ஓ. இவளுக்காக காத்துக்கொண்டிருந்தார். தன்னுடைய பத்தாக்கா (work permit) வை கொடுத்துவிட்டு பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு ரூமுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது அவள் கண்கள் கலங்கியிருந்தன. அதை பார்த்தும் பார்க்காமலும் இருந்தான் இபுறாஹிம். எதாவது சொன்னால் அழுதுவிடுவாள் எனவே அவளாகவே பேசட்டும் என்று வாளாவிருந்தான்.

துக்கம் தொண்டையை முட்ட அவளாகவே தொடங்கினாள்..

'இப்றாஹிம், நோன்பு வச்சுக்கிட்டு எனக்காக கஷ்டப்படுறே, உனக்கு எப்படி நன்றி சொல்றதென்று தெரியலே. அந்த அதிகாரி சொன்ன செய்தி இன்னும் என் வயிற்றில் புளியை கரைச்சிக்கிட்டிருக்குது. நீ தொழப்போயிருந்த சமயத்தில் நான் இரண்டுமுறை என் அக்காவுக்கு போன் பண்ணினேன் லைன் கிடைக்கலே. ஒருவேலை அவள் எங்கள் ஊருக்குப் போயிருப்பாள் என்று தோனுகிறது, அவளிடமிருந்து போன் வந்தால்தான் எனக்கு ஆறுதலாக இருக்கும்.'

இபுறாஹிம் மௌனமாக இருந்தான்.

'நீ ஏன் பேசாமலிருக்கே? தயவு செய்து எதாவது சொல்.'

'நான் உனக்கு டிக்கட் எடுப்பது பற்றி யோசிச்சிக்கிட்டிருக்கேன்.'

'அதை சொல்லத்தான் நான் வாயெடுத்தேன், என்னிடம் இப்போது பணமில்லை, இந்த நேரத்தில் யாரிடம் கடன் வாங்குவது என்று தெரியலே. ரூம் மேட்டுக்களிடம் இருக்குமா என்று தெரியலே, தயவு செய்து உன்னிடம் பணம் இருந்தால் கொடு.'

'இதோ பார், நீ ரூமுக்குப் போய் புறப்படுவதற்கு ஆயத்தப்படு, நான் டிக்கட்டுடன் வருகிறேன்.' என்று சொல்லி அவளை இறக்கிவிட்டுவிட்டு டிராவல் ஏஜன்ஸியை நோக்கிப் போனான்.

தன்னுடைய கிரடிட் கார்டின் மூலம் சிங்கப்பூர் வழியாக ஜாக்கர்த்தா செல்லும் முதல் விமானத்திற்கு டிக்கட் எடுத்துக்கொண்டு வந்தபோது அவள் அழுதுகொண்டிருக்க ரூம் தோழிகள் சமாதானப்படுத்திக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது எதோ சம்திங் ராங் என்று ஊகித்தான்.

அவளாகவே சொன்னாள், 'இப்றாஹிம் என் அக்காவிடமிருந்து போன் வந்தது, அவள் எங்கள் ஊரில் இருக்கிறாளாம், ஆனால் எங்கள் வீடு இருக்கும் இடம் தெரியவில்லையாம், மிக மோசமாக இருக்கிறதாம், பிணங்களை அடையாளம் காண்பிக்கும்படி சொல்கிறார்களாம், என்னை உடனே வா எல்லாம் நேரில் பேசிக்கொள்ளலாம் என்று அழுகிறாள்.

'சரி, இந்தா டிக்கட். இரவு 9-40 மணிக்கு ஃப்ளைட் சிங்கப்பூருக்கு, அங்கிருந்து வேறு பிளேன் மாறி ஜாக்கர்த்தா போகனும். புறப்பட தயாரா இரு. நான் நோன்பு திறந்துட்டு வந்து அழைச்சிக்கிட்டு போறேன்.'

ஏழு மணிக்கே அவளை ஏர் போர்ட்டில் விட்டுவிட்டு ரூம் திரும்பியவன் அசந்துபோய் படுக்கையில் விழுந்தான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது. விழித்தபோது இரவு 12-30. லேசாக பசி வயிற்றை கிள்ளியது. கஃப்டேரியாவில் ஒரு பர்கரை விழுங்கிவிட்டு அதன்மேல் ஆரஞ்ச் ஜூசை அருந்திவிட்டு மீண்டும் தூங்க முயற்சித்தபோது தூக்கம் வரவில்லை. மாறாக நூரா தோன்றினாள்.

நீளமும் குட்டையுமில்லாத கருமையான வாரிவிட்ட கூந்தல்; பரந்த நெற்றி; மூன்றாம் பிறையை கவிழ்த்து வைத்ததுபோல சற்றே அடர்த்தியான புருவம்; உருண்டையான சிறிய கண்கள்; சப்பை என்று சொல்லமுடியாத சிறிய மூக்கு; சற்று தடித்த சிவந்த உதடுகள்; இட்டலிபோல் உப்பிய கன்னங்கள்; வட்டமான முகம்; மஞ்சாள் கலந்த வெண்மையான நிறம்; உருண்டையான கழுத்து; அளவான சரீரம்; ஆப்பிள் அளவில் திரண்ட அங்கங்கள்; வற்றிய வயிறு; சிறிய இடை; வாழைத்தண்டு போன்ற கால்கள் நான்கடிக்கும் மேலில்லாத உயரம் பார்ப்பதற்கு 26 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் என்று யாராலும் மதிக்கமுடியாது, பதினெட்டு வயது வாலைக்குமரிபோல் காட்சியளித்தால். மொத்தத்திற்கு சிட்டுக்குருவி.. ஊஹும் தேன் சிட்டு போலிருந்தாள். அவளுடைய உருவத்தைப்போலவே குரலிலும் இனிமை. அவள் அந்த receptionist chair ல் அமர்ந்து customer களை வரவேற்கும் முறையே அலாதியானது. அவள் குரலில் மயங்கி பல புதிய கஸ்டமர்கள் கம்பெனிக்கு கிடைத்துள்ளனர்.

மறு நாள் காலை 9 மணிக்குத்தான் ஜாக்கர்த்தா அடைவாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும் அவளையே அவன் மனம் சுற்றி வந்தது. ஏனென்று தெரியவில்லை, தான் வேலைப் பார்க்கும் கம்பெனியில் ஃபிலிப்பைனிகள், சிரிய பெண்கள், லெபனான் பெண்கள், ஏன் இந்தியப் பெண்கள்கூட இருக்கின்றனர். அவர்களிடமில்லாத அக்கறை இவளிடம் மட்டும் ஏன் வந்தது? ஒருவேளை வறுமையின் காரணமாக இருக்கலாமோ இல்லை தன்னைப் போன்று இவளும் தன் குடும்பத்தை சுமக்கிறாள் என்ற காரணமா? எதுவுமே விளங்கவில்லை. எண்ணம் மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது.

ஆம், ஒரு விடுமுறை தினம்-வெள்ளிக்கிழமை multi million order, ஒரு புதிய கஸ்டமருக்கு அவசரமாக material அனுப்பவேண்டும். அதற்கு shipment க்கான டாக்குமெண்ட் தயார் செய்துவிட்டு தங்களது இருப்பிடத்திற்கு திரும்பும்போது பேச்சு துவங்கியது. அவன் தன்னுடைய காரில் அழைத்துக்கொண்டு வரும்போது அவள்தான் ஆரம்பித்தாள்.

'இப்றாஹிம், உம் மென்று கார் ஓட்டாதே எதாவது பேசு, எனக்கு சும்மா இருக்கப் பிடிக்காது. நீ எப்போது இந்த கம்பெனியில் சேர்ந்தாய்? உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? எத்தனை குழந்தைகள்? உன் குடும்பத்தைப் பற்றி சொல்லேன் என்றாள்.

'ஏன் என் குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்போறாய்?'

'ஒனக்கு இஷ்டமில்லைன்னா சொல்லவேணாம், நான் என்னைப் பத்தி சொல்றேன், அதையாவது கேப்பியா? இல்லே....'

'கேக்கிறேன் சொல்லு.'

'நான் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பொறந்தவள். என் கூட பொறந்தவர்கள் ரெண்டு பேர். ஆக மூத்தவன் அண்ணன், அடுத்ததாக பொறந்தவள் அக்காள், நான் மூனாவதாக பொறந்தேன். எங்களுக்கு கொஞ்சம் விவசாய நிலமிருந்தது. அதிலிருந்து வருகிற வருமானம் எங்களுக்கு போதுமானதாக இருந்தது. தவிர அண்ணனும் என் கணவனும் அதாவது அப்போது அவர் என் அண்ணனுக்கு நண்பன் சேர்ந்து நடத்திய பிஸினஸ் எங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டு போனது. என் அக்காளுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைத்தார்கள், நல்ல வசதியான இடம். கல்யாணத்துக்குப் பிறகு அவள் தன் கணவனுடன் ஜாக்கர்தாவில் செட்டிலாகி விட்டாள். எப்பவாவது எங்கள் ஊருக்கு வருவாள், ஒரு வாரம் தங்கிவிட்டுப் போய்விடுவாள். இன்னும் கொஞ்ச நாள் தங்க சொன்னால் புள்ளைகளோட படிப்பு இருக்கு அது இது என்று காரணம் சொல்லிட்டு போய்விடுவாள். என் அப்பாதான் விவசாயத்தை கவனித்து வந்தார். நான் படித்தபிறகு எதாவது வேலைக்குப் போகிறேன் என்று சொன்னபோது என் கணவன் மறுத்துவந்தார், பிறகு என்ன நினைத்தாரோ அவரேதான் நம்முடைய கம்பெனியில் இந்தோனேசியா பிராஞ்சில் வேலை வாங்கிக்கொடுத்தார்.'

'உன் புருஷன் ஒனக்கு சொந்தமா?' இல்லே லவ் கிவ்வென்று எதாவதா?'

'என்னெ கட்டிக்கிற முறை பையன் ஒருத்தன் இருந்தான். அவன் பெயர் சுகர்தோ, அவன் குடிகாரன். குடிச்சிட்டு தினம் யார்கூடவாவது வம்பு வளத்துக்கிட்டு வருவான். என்னெ கட்டிக்கினும்னு ஒத்தக்கால்லெ நிண்டான். நான் ஒரேடியா மறுத்திட்டேன். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் விருப்பமில்லே. அவன் தொந்திரவு தாங்காமெ சின்ன வயசுலே என்னை இவருக்கு கட்டிவச்சாங்க. அண்ணாதான் எல்லா ஏற்பாடும். என்னுடைய அதிர்ஷம் எனக்கு பிடிச்ச கணவரா அமைஞ்சிட்டாரு.'

'அப்படி இருக்கும்போது இங்கே ஏன் வேலைக்கு வந்தே?'

'அதான் சொல்லிக்கிட்டு வாரேன்ல்ல, ஏன் குறுக்கே பேசுறே?'

'சரி பேசலே, மேலே சொல்லு.'

'இப்படி இருக்கும்போது பிஸினஸ் விசயமா என் அண்ணனும் புருஷனும் 'பாலி' போனாங்க, அங்கிருந்து திரும்பி வரும்போது கூடவே மீளாதுன்பத்தையும் இழுத்துக்கிட்டு வருவாங்க என்று யாருக்கு தெரியும்?'

'என்ன சொல்றே?'

'ஆமா, வர்ர வழியிலே ஒர் ஆக்ஸிடண்ட். அண்ணன் தான் கார் ஓட்டிக்கிட்டு வந்தான், எதிர்லெ வந்த லாரியிலே மோதாம இருக்க ஸ்பீடை குறைக்காம சைடு வாங்கியிருக்கான் வண்டி பள்ளத்திலெ உருண்டு அண்ணன் அவுட்; போய் சேர்ந்திட்டான், என் கணவருக்கு தலை முதுகு கை கால் எங்கு பார்த்தாலும் அடி, பிரக்கினை இழந்துட்டார். விதி விளையாட ஆரம்பித்துவிட்டது.'

'எங்களுக்கு சேதி கெடச்சு போனபோது என் கணவரை I.C.U. விலே வச்சிருந்தாங்க. நான் இடிஞ்சுப்போய்டேன், எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. போதாதற்கு என் கணவர் பொழச்சாலும் வேலை செய்வது கஷ்டம் என்று சொல்லிட்டாங்க. கூட என் அப்பாவும் அம்மாவும் இல்லாதிருந்தா நான் மயங்கி விழுந்திருப்பேன். யா அல்லாஹ்! எங்களை ஏன் சோதிக்கிறாய் என்று அழுவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை அப்போது.'

'ஒங்க அண்ணனை எங்கே அடக்கம் பண்ணினீங்க?'

'ஊருக்கு கொண்டுபோவனும்னா ரொம்ப சிரமப்படும் தவிர இவர்வேறு இப்படி இருக்கார் அதனாலெ அங்கேயே அடக்கம் பண்ணிட்டோம்.'

'இவரை ஒரு மாசத்துக்குமேலே ஆஸ்பத்திரியில் வச்சு பாத்தோம் இந்தோனேசிய பணத்துக்கு அம்பது லட்சம் ருப்பைய்யாவுக்கு மேலே செலவு. ஒரு வழியா ஊருக்கு அழைச்சிக்கிட்டு வந்து இப்பொ வீட்லெ வச்சுப் பார்க்கிறோம்.'

'நீ அங்கிருந்தா உன் புருசனுக்கும் ஒதவியா இருக்கும் இல்லையா?'

'இருக்கும்தான், அண்ணன் இறந்த பிறகு அப்பா ஒடிஞ்சுப் போய்ட்டார், விவசாயத்தை சரியா கவனிக்கிறதில்லெ, அதனாலெ குடும்பப் பொருப்பு என் தலையிலெ விழுந்திடுச்சு. இங்கே வந்தா சம்பளம் கூடுதலா கிடைக்கும், சில சுகத்தை இழந்தாலும் குடும்பத்தை நிலை நிறுத்தமுடியும்னு என் ஆபிஸிலே சொன்னாங்க அதனாலெ காக்காபுடிச்சு இங்கே மாத்திக்கிட்டு வந்தேன்.'

'இப்பொ உன் புருசன் எப்படி இருக்கார்? கொழந்தைங்க...?'

'இப்பொ எதையாவது பிடிச்சிக்கிட்டு கொஞ்சங்கொஞ்சம் நடக்க முயற்சிக்கிறாரு. கொழந்தைகளை அம்மா கவனிச்சிக்கிறாங்க.'

'உன் மாமியார் வீட்லேந்து யாரும் வர்ரதில்லையா?'

'பணமிருந்தா பத்தும் பறந்துவரும்.'

'ம்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள், சோகங்கள். இவ்வளவு பெரிய துக்கத்தை மனசுலெ வச்சுக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருக்கே பாரு, அதெ நெனச்சு பாராட்டுறேன்.'

'உன் பாராட்டு இருக்கட்டும். என்னைப் பத்தி சொல்லிட்டேன் உன்னைப் பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா...?'

'உனக்குள்ளே ஒரு சோகம் இருக்கிற மாதிரி எனக்குள்ளேயும் ஒன்னு ஒளிஞ்சிக்கிட்டு இருக்கு, ஆனா ஒனக்கு இடையிலே ஏற்பட்டது எனக்கு... நான் பொறந்த பிறகு வந்து ஒட்டிக்கொண்டது.' அதுவாக வரவில்லை; நாங்களாக இல்லை என் தந்தை வரவழைத்துக்கொடுத்த பரிசு. ஆனால் அதுதான் எனக்குள் ஒரு வெறியை ஏற்படுத்தி இந்த நிலைக்கு உயர்த்தியது. அது எனக்கு ஒரு சவால்.'

'என்ன சொல்றே? புரியலே!

'எங்களுக்கு பூர்வீகம் தமிழ்நாடு, திருநெல்வேலி பக்கம் பத்தமடை என்ற கிராமம்.'

'மும்பை இல்லே? அப்ப ஏன் அங்கே இருக்கீங்க?'

'அது ஒரு கதை, சொல்றேன் கேளு. நாங்க ஏழ்மையான குடும்பம்தான். பாய் தறி இருந்தது, பாய் நெய்து வியாபாரம் செய்து பிழைச்சுவந்தோம். அப்பொ என் அப்பா பம்பாயில் இருந்தார். அவர் நல்ல வசதியாக இருக்கிறார் என்று என் அம்மாவை கல்யாணம் செஞ்சுவச்சாங்க. அவர் என்ன வேலை செய்கிறார் என்றெல்லாம் விசாரிச்சாங்களா இல்லையான்னு தெரியாது. கல்யாணம் பண்ணியகையோடு என் அம்மாவை பம்பாய்க்கு
அழைச்சிக்கிட்டு வந்துட்டார்.

'மும்பையல்ல பம்பாய்னு சொல்றே!'

'இப்பத்தானே மும்பை முன்பு பம்பாய்.'

'நானும் என் இரண்டு தங்கச்சிகளும் பம்மாயில்தான் பிறந்தோம். நான்தான் மூத்தவன். அப்பா காலையில் வீட்டைவிட்டு போனார்னா ராத்திரிக்குதான் வருவார். பணம் அவர்கையில் நல்லா புரண்டுச்சு. பம்பாயிலே ஃபிளாட்டில் தங்கிருந்தோம். எனக்கு ஏழெட்டு வயசிருக்கும் அப்போது ஒரு நாள் திடுதிப்பென்று எங்க வீட்டுக்கு போலிஸ் வந்து என் அப்பாவை பிடிச்சிக்கிட்டு போய்ட்டாங்க. அப்ப நான் ஸ்கூல்லெ இருந்தேன். என்ன காரணம்னு தெரியலெ.'

'உங்க அம்மாவுக்கு தெரியாதா உங்க அப்பா என்ன வேலை செய்றார்ன்னு?'

'தெரியாது, கேட்டுக்கலெ அவரும் சொல்லவுமில்லெ. அப்பா இருக்கும்போது எங்க வீட்டுக்கு எப்பவாவது நிரையபேர் வருவாங்க எதோ பேசுவாங்க போய்டுவாங்க. என்ன பேசுறாங்கங்கிறதை அம்மா கண்டுக்கிறதில்லை.' அப்புறம்தான் தெரிஞ்சது அவர் ஒரு சாராய வியாபாரியிடம் வேலை செஞ்சார் என்று.'

'சாராயம் கேஸுக்கா போலிஸ் வந்துச்சு?'

'இல்லெ, ஒரு மர்டர் கேஸ். அப்பாவுடைய மொதலாளி எதோ ஒரு கொலை கேஸில் மாட்டிக்கிட்டான். தான் தப்பிப்பதற்காக என் அப்பாவை மாட்டிவிட்டுட்டான். கேஸ் நடந்துச்சு. எங்கள்ட்டெ இருந்த காசு நகை சொத்து எல்லாம் போய்டுச்சு. நாங்க குடிசைக்கு வந்துட்டோம்.'

'உங்க அப்பா மொதலாளி ஒதவி செய்யலையா?'

'செஞ்சான் எதோ ஒப்புக்கு. அப்பாவுக்கு ஆயுள் தண்டனை கொடுத்துட்டாங்க. அதுக்குமேலே அப்பீல் பண்ண எங்கக்கிட்டே காசில்லே. வறுமை தாண்டவமாடுச்சு, சோத்துக்கு லாட்டரி. இந்த நிலையிலே அம்மாவை ஊருக்கு போக அக்கம் பக்கத்திலெ உள்ள சிலபேர் சொன்னாங்க. அம்மா என் புருசன் வந்தாதான் போவேன்னு வைராக்கியமா இருந்துட்டாங்க.'

'வருமானத்துக்கு என்ன செஞ்சீங்க?'

'நாங்க இருந்தது கோலிவாடா என்ற பகுதி, அங்கு தமிழர்கள் ஜாஸ்தி. அவங்கல்லாம் ஒதவி செஞ்சாங்க. அந்த ஒதவியை வச்சிக்கிட்டு என் அம்மா பலகாரங்கள் சுட்டு வித்தாங்க, நாலைஞ்சு வீட்டுக்கு வீட்டு வேலை செஞ்சு எங்களை படிக்க வச்சாங்க.'

'நான் டிப்ளோமா முடிக்கிற சமயத்துலே அப்பா ரிலீஸாகி வந்தார். வந்தவர் எந்த வேலைக்கும் போகவில்லை; எந்த வேலையும் செய்யத் தெரியாது. பழைய மாதிரி காலையில் எழுந்திருச்சு வெளியே போனார்னா ராத்திரிக்குதான் வருவாரு.'

'எங்கே போவாரு?'

'எங்கே போவாரு! பழைய ஃபிரண்ஸோடு சீட்டாடிட்டு வருவாரு. குடும்பத்தைப் பத்தி எல்லாம் அவருக்கு கவலை இல்லை.'

'பழைய மொதலாளிக்கிட்டெ வேலை செய்யலமில்லையா?'

'அவன்தான் எங்களை மாட்டிவிட்டு பெட்டி படுக்கையோடு தன் சொந்த வூருக்கு, குஜராத்துக்குப் போய்ட்டானே!'

'நான் டிப்ளோமா முடிச்ச பிறகு வேலை தேடினேன், கிடைக்கலெ. கூலி வேலையெல்லாம் செஞ்சேன். கடைசியா ஒரு மார்வாடிகிட்டே சேல்ஸ்மேனா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கும்போது பேப்பரைப் பார்த்து இந்த வேலைக்கு அப்ளிகேஷன் போட்டேன். என் அதிஷ்டம் கிளிக்காயிடுச்சு. துபைக்கு வந்துட்டேன்.'

'வந்ததிலேந்து இந்த வேலைதான் செய்றியா?'

'இல்லை, நான் ஸ்டோர் அசிஸ்டண்டா வந்தேன். உனக்குத்தான் தெரியுமே, வர்ர கஸ்டமருக்கு மெட்டிரியலை எடுத்து லோடுபண்ற வேலன்னு. அப்புறமா ஸ்டோர் கீப்பரா ப்ரமோஷன் கெடச்சுது. ஸ்டோர் கீப்பரா இருக்கும்போது டிரைவிங் லைஸன்ஸ் எடுத்தேன். அதன் பிறகு அவுட் டோர் ஸேல்ஸ்மேன் பதவி கெடச்சுது. அப்பதான் என் வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்ட் ஆனது.'

'என்ன சொல்றே?'

'ஆமா, ஒரு ஈரானிய ஆயில் கம்பெனியோடு டீல் பண்ணி பல்க் ஆர்டர்; அஞ்சு மில்லியனுக்கு ஆர்டர் வாங்கினேன். அதுலே பூரிச்சுப்போன ஜெனரல் மேனேஜர் என்னை ஸேல்ஸ் இஞ்சினியராக்கி காரும் வீட்டு அலவன்ஸும் கொடுத்துட்டார்.'

'உன் அம்மா அப்பாவெல்லாம் என்ன செய்றாங்க?'

'பேங்க் லோன் போட்டு தங்குவதற்கு வூடு வாங்கினேன், இரண்டு தங்கச்சியையும் கட்டிக்கொடுத்திட்டேன், மூத்த தங்கச்சி இப்பொ பஹ்ரைனில் இருக்கிறாள். ஆனால் சின்ன தங்கச்சித்தான்....'

'சின்ன தங்கச்சி.......!?'

'டைவர்ஸ் ஆகி வீட்டில் இருக்கிறாள்.'

'ஏன்?'

'அவ புருசன் இரண்டு லட்சம் கொடு மூனு லட்சம் கொடு என்று பணம் கேட்டு தொந்திரவு படுத்தினான், அடித்தான், உதைத்தான் எல்லாம் வரதட்சனை கொடுமை மாதிரி. இப்படி கேடுகெட்டவன்கிட்டே வாழ்றதைவிட வாழாமல் இருப்பதுதான் நல்லது.'

'அப்பா என்ன செஞ்சிக்கிட்டு இருக்காரு இப்பொ?'

'நாட்டு சோக்காளி..'

'அப்டீன்னா....?'

'அப்டீன்னா வேலை எதுவும் செய்யாம கோயில்மாடு மாதிரி சுத்தி சுத்தி வர்ரது. அதாவது கூட்டாளிகளுக்கு டீ வாங்கி கொடுத்துக்கொண்டு பொழுது போக்குவது. அதாவது இவங்க நீட்டா டிரஸ் பண்ணிக்கிட்டு போவாங்க, இவங்களை எல்லோரும் மதிக்கனும். அதான் நாட்டு சோக்காளி.'

'இப்படி இந்தோனேசியாவிலும் இருக்காங்க. ஆம்பிளைங்க வூட்லெ உட்காந்துக்குவாங்க, பொம்பளைங்க நாங்க சம்பதிச்சுப் போடனும். நாங்க புருஷனை விட்டுகொடுத்திட மாட்டோம், உயிரையே வச்சிருப்போம், அதை அட்வாண்டேஜா எடுத்திக்கிறாங்க.'

போன் அலறியபோது இபுறாஹிமுடைய சிந்தனை கலைந்தது. மறுமுனையில் அம்மா பேசினார். சின்ன தங்கைக்கு வரன் ஒன்று வந்திருப்பதாகவும் நல்ல இடம், கொஞ்சம் அதிகமாக கேட்பதாகவும் பேசி முடிக்கவா என்று கேட்டார்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் முடியுங்கள் என்று சொன்னான்.

அப்பா, நான் இங்கே பேசி முடிக்கிறது இருக்கட்டும் உன் கல்யாணம் என்ன? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பே? இதோ பாரு நான் பாக்கிறது உனக்கு விருப்பமில்லைன்னா பரவாயில்லை, உனக்கு விருப்பமான பொண்ணு இருந்தா சொல்லு அதையே முடிச்சு வைக்கிறேன். என் கண் மூடுவதற்குள் உன்னை மாலையும் கழுத்துமாகப் பார்க்கனும் என்ற வழக்கமான அம்மாவின் புலம்பலுக்கு பதில் சொல்லிவிட்டு மறு நாள் நோன்பு வைப்பதற்காக அதிகாலை உணவை உண்டுவிட்டு உறங்கினான்.

-----------

இந்தோனேசியா...

இந்தோனேசிய நேரப்படி காலை பதினோரு மணிக்கு ஜாக்கர்தாவை அடைந்தாள். விமான நிலையத்திலேயே "பதாங் எர்த்குவேக்" என்று கவுண்டர் திறந்திருந்தார்கள். துபை தூதரகத்தில் கொடுத்த அடையாள அட்டையை காண்பித்தபோது தன் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாட்டை உடனே செய்தனர். அவளுக்கு அங்கே வேறொரு பூகம்பம் காத்திருக்கும் என்று அப்போது தெரியாது.

நூரா தன் சொந்த ஊரான மரூப்கிஜயாவை அடைந்தபோது அங்கே எதைப் பார்ப்பது யாரை தேடுவது, அக்காள் எங்கே இருக்கிறாள் எதுவுமே புரியவில்லை. அங்குள்ள நிலமையைப் பார்க்கும்போது படு பயங்கரமாக இருந்தது எங்கு பார்த்தாலும் கட்டிடங்களின் இடுபாடுகள் அவைகளுக்கிடையில் செஞ்சிலுவையினரும் ரெட் கிரஸண்ட் காரர்களும் ராணுவத்தினரும் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருப்பவர்களை மீட்பதிலும் பிணங்களை எடுப்பதிலும் மும்முரமாய் இருந்தனர். பொதுமக்கள் தங்கள் உறவினர்களை அடையாளம் காட்டிக்கொண்டும் இருந்தனர். எங்கு பார்த்தாலும் மக்களின் அழுகையும் கூக்குரலும் ஒப்பாரியுமாக இருந்தது.

நூரா தன் அக்காவைத் தேடிக்கொண்டிருந்தாள். பல பேர்களிடம் விசாரித்து கடைசியாக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கே அவளையும் அவள் கணவனையும் கண்டதும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

'நூரா நாம் மோசம் போய்ட்டோம்டி, எல்லாம் போயிடுச்சு, எதுவும் பாக்கி இல்லை.'

'என்ன சொல்றே நீ?'

'ஆமாம் நம் அம்மா அப்பா எல்லாம் போய் சேர்ந்திட்டாங்க. உன் புருசனும் பிள்ளைகளும்கூட போய்ட்டாங்க, நம்ம வீடு தரை மட்டமா ஆயிடுச்சு...'

'அக்கா, நீ அப்படீல்லாம் சொல்லாதே, இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கிட்டு உயிரோடு இருப்பாங்க, வா அங்கே போய் பார்க்கலாம்.'

'இல்லை, இங்கே வா காண்பிக்கிறேன்' என்று மார்ச்சுவரியில் மூடி வைத்திருந்த ஏற்கனவே அடையாளப் படுத்தியிருந்த சடலங்களைக் காண்பித்தாள்.
அவற்றை கண்டதும் "யா அல்லா..... நான் என்ன செய்வேன் என்று அழுதுக்கொண்டே நூரா மயங்கி விழுந்தாள். பக்கத்திலுருந்த மருத்துவர்கள் அவளை மயக்கம் தெளிவித்து சுய நிலைக்கு கொண்டுவந்தனர்.

'நூரா உனக்காகத்தான் காத்திருந்தோம். இங்கு ஆஸ்பத்திரியில் இடமில்லை எனவே சீக்கிரமாக அடக்கம் செய்யும்படி வற்புறுத்துகிறார்கள். அவர்கள் நிலமையும் அப்படி. ஆகவே சீக்கிரம் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வோம் என்று சொல்லிவிட்டு அன்று மாலையே அடக்கம் செய்தனர்.

மறு நாள் காலை நூரா, நம்மிடம் சொத்து என்று இருப்பது இது ஒன்றுதான் என்று ஒரு பையை நூராவிடம் நீட்டினார் அக்காளின் கணவன். அதில் அவள் குடும்ப ஐ டி கார்டு இருந்தது. இது உன் தந்தையின் சட்டைப் பாக்கட்டில் இருந்ததாம். இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய? என்று
கேட்க, இதை பத்திரமாக வைத்துக்கொள், இதை வைத்துக்கொண்டுதான் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் உதவிகளைப் பெறவேண்டும் என்று விளக்கினார். சரி இனி இங்கிருப்பதில் பிரயோஜனமில்லை நாம் ஜாக்கர்தாவுக்குப் போவோம், அங்கே இது சம்மந்தமான ஆபிஸில் தொடர்பு கொண்டு ஆகவேண்டியதை செய்வோம் என்றார்.

நூராவுக்கு மனமில்லைதான் என்றாலும் தன் அக்காளும், அவள் புருசனும் வற்புறுத்தியதால் வேறு வழி தெரியாமல் ஜாக்கர்தா சென்றனர். ஒரு வாரம் பத்து நாட்களாக பூகம்ப நிவாரண அலுவலகத்திற்கு தினமும் அலைந்தனர். முதல் நாள் அவர்களிடமிருந்து விபரங்களை கேட்டறிந்து குறித்துக்கொண்டதை தவிர வேறொன்றும் நடக்கவில்லை. கையூட்டு கொடுத்தால் பணிகள் சற்று வேகமாக நடக்கிறது. நூரா மனம் சோர்ந்தாள். தான் யாருக்காக துபை போனோமோ அவர்களெல்லாம் போய்சேர்ந்த பிறகு இனி எதற்கு போகவேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆளானாள். நீ இனி போய் என்ன ஆகப்போகிறது, இங்கேயே ஒரு வேலையில் சேர்ந்துக்கொண்டால் எனக்கு ஆறுதலாக இருக்கும் என்று அக்காளும் வற்புறுத்தினாள்.

இந்நிலையில் எப்படியோ மோப்பம் பிடித்து நூராவின் மீது மையல் கொண்டிருந்த சுகர்தோ திடீரென்று முளைத்தான். அச்சையிலிருந்த அவன் மரூப்கிஜயாவில் தேடி அலைந்துவிட்டு நேராக ஜாக்கர்தா வந்து தன்னை கல்யாணம் செய்துகொள்ளும்படி நூராவை வற்புறுத்தினான். அவளுக்கு சிறிதும் விருப்பமில்லை, மறுத்துப்பார்த்தாள், திட்டினாள், மிரட்டினாள், அவள் என்ன சொல்லியும் கேட்பதாக தெரியவில்லை. எனவே, சற்று பொறுத்திரு நான் துபை விசாவை கேன்ஸல் செய்துவிட்டு உன்னை கல்யாணம் செய்துக்கொள்கிறேன் என்று சமாதானம் செய்தாள்.

-----------


துபை...

நூராவை வழியனுப்பிய பிறகு இபுறாஹிம் வேலையில் பிஸியாகிவிட்டான். நிச்சயமாக அவள் போன் பண்ணுவாள் என்றுமட்டும் தெரியும். இதற்கிடையில் ஜெனரல் மேனேஜர், இபுறாஹிம் உட்பட வேறு சில அலுவலர்களை அழைத்து சில முக்கிய பணிகள் பற்றி ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். மீட்டிங் ரூமில் எல்லோரையும் அழைத்து பேசத்தொடங்கியபோது அவர் சொன்ன முதல் வார்த்தை, எல்லோருடைய மொபைல் போன்களை சைலண்டில் வைத்துவிடுங்கள், போன் வந்தால் பேசவேண்டாம். மீட்டிங் முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என்றார்.

இப்போது எல்லோரும் கவனமாகக் கேளுங்கள். நம்முடைய கம்பெனிக்கு புதிய ஆர்டர் வந்துள்ளது. பலத்த போட்டிக்கிடையில் இந்த ஆர்டரை நம் தலமை அலுவலகம் எடுத்திருக்கிறார்கள். தற்போது ஈராக் rebuild ஆகிக்கொண்டிருக்கிறது. அங்குள்ள ஆயில் ஃபீல்டுக்கு நிறைய சாமான்கள் தேவைப்படுகிறது. முக்கியமாக பைப்புகள், வால்வுகள், Non Return Valves, Double Regulating Valves, High Pressure Vessals இப்படி பல பொருட்கள் தேவைப்படுகின்றன. எனவே ஓவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டு அவரே பெயர்களை குறிப்பிட்டு அவரவர்களுக்கான பொறுப்பை ஒப்படைத்தார்.

மிஸ்டர் இபுறாஹிம், உங்களிடம் மிக முக்கியமான பொறுப்பை ஒப்படைக்கப்போகிறேன். இப்போது மார்க்கட்டில் சில சாமான்கள் விலை மிக அதிகமாக இருக்கிறது. அவை அமெரிக்காவில் மட்டும் உற்பத்தியாகிறது. ஆனால் தற்போது அதைவிட மேற்பட்ட தரத்தில் உங்கள் இந்தியாவில் குறிப்பாக திருச்சிறாப்பள்ளியிலுள்ள BHEL நிறுவனத்தில் உற்பத்தியாகிறது, விலையும் சற்று குறைவு. எனவே நீங்கள் அவர்களுடன் email ல் தொடர்பு கொண்டு பொருட்களுக்கு ஆர்டர் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது இரண்டுமுறை இபுறாஹிமுடைய போன் மௌனமாக அலறியது. அதை கவனித்த அவன் நம்பர் புதிதாக இருந்ததால் அது நூராவாகத்தான் இருக்கும் என்று ஊகித்துக்கொண்டு வேறு வழி இல்லாமல் அமைதியாக இருந்தான்.

மீட்டிங் முடிந்ததும் முதல் வேலையாக வந்த நம்பருக்கு டயல் செய்தபோது லைன் கிடைக்கவில்லை. இரண்டுமூன்று முறை முயற்சித்தும் பலனில்லை. சரி அவள் மீண்டும் தொடர்பு கொள்வாள் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது மீண்டும் அவன் போன் அலறியது.

'ஹலோ!'

'நான் நூரா பேசுறேன்..' என்றவள் மறு முனையில் அழ ஆரம்பித்துவிட்டாள்.

'அழாதே, விசயத்துக்கு வா, எப்படி இருக்கிறாய்?'

'எல்லாம் போயிடுச்சு, நான் அனாதையாகிட்டேன்' என்று அழுகையினூடே திக்கினாள்.

'என்ன சொல்றே? அழுகையை நிறுத்திட்டு சொல்லு.'

'எல்லோரும் இறந்துட்டாங்க.'

'எல்லோரும்னா?'

'எங்க குடும்பமே அழிஞ்சுப்போச்சு, நானும் அக்காவுமட்டும்தான் பாக்கி. இனி நான் அங்கே வந்து என்ன செய்யப்போறேன்?'

'அப்படியெல்லாம் சொல்லாதே! அங்குள்ள வேலையெல்லாம் முடிச்சிக்கிட்டு நீ இங்கே வா. வந்த பிறகு இங்கே இருப்பதா போவதா என்று முடிவு செய்துக்கொள்ளலாம்.'

'இல்லை இப்றாஹிம்..'

'நான் சொல்வதைக்கேள்' என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.

இருபது நாட்கள் கழித்து நூரா துபை வந்து தன் வேலையில் பொறுப்பேற்றபோது ஆபிஸிலுள்ளவர்கள் அனைவரும் அவளிடம் துக்கம் விசாரித்தனர். சிலர் ஆறுதல் சொன்னனர்; சிலர் மிகவும் வேதனைப் பட்டனர்; சிலர் அறிவுரை வழங்கினர். ஆனால் இபுறாஹிம் மட்டும் வரவில்லை. அவள் கண்கள் அங்குமிங்கும் துளாவியபோது, அதை உணர்ந்த கூட வேலை செய்யும் குளோரியா, அவன் ஆபிஸ் வேலையாக மஸ்கட் போயிருப்பதாக கூறினாள்.

மஸ்கட்டிலிருந்து திரும்பிய இபுறாஹிம், நூராவை கண்டபோது அவளுடைய கண்கள் நீரை சொரிந்துக்கொண்டிருந்தன. ஆபிஸில் அழக்கூடாது நாம் ரூமுக்குப் போய் பேசிக்கொள்ளலாம் என்று அமைதிப்படுத்தினான்.

அன்று மாலை ஆபிஸிலிருந்து தன் காரில் அழைத்துக்கொண்டுபோகும்போது நடந்ததை விளக்கிவிட்டு இனி என்ன செய்வது என்று தெரியவில்லை என்று குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

நன்றாக அழட்டும் என்று வாளாவிருந்திட்டான். அழுதால் மனத்திலுள்ள பாரம் சற்று குறையும்; ஒரு தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என்பது இபுறாஹிமுக்கு நான்றாகவே தெரியும். பத்து பதினைந்து நாட்கள் வரை எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை. அவளுடைய போக்கிலேயே விட்டுவிட்டு அவளுடைய மனப்போக்கில் எதாவது மாற்றம் வருகிறதா என்று கூர்ந்து கவனிது வந்தான். கொஞ்சமும் எந்த மாற்றமும் வராததைக் கவனித்த அவன் நூரா, ஆபீஸ் முடிந்ததும் கம்பெனி வண்டியில் போகவேண்டாம் என்னுடைய காரில் வா, உன்னை உனது ரூமில் விட்டுவிடுகிறேன் என்றான்.

உனக்கேன் சிரமம் என்று அவள் சொன்னபோது, இல்லை, எனக்கு சிரமமில்லை, கொஞ்சம் ஷாப்பிங் பண்ணவேண்டியிருக்கிறது நீ இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும் என்றான்.

அவளுடைய மன இருக்கத்தைப் போக்குவதற்காக முதல் நாள் ஷாப்பிங் மால், மறு நாள் பார்க் என்று ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு இடமாக அழைத்துக்கொண்டு சென்றான். இப்படியாக நான்கைந்து நாட்கள் கடந்தபின் ஒரு விடுமுறை தினம் மாலை கடற்கரைக்கு சென்றனர். அங்கு ஓரிடத்தில் அமர்ந்து மௌனமாக இருந்தனர். யார் பேச்சைத் தொடங்குவது என்று தெரியவில்லை. நூரா கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மௌனத்தை கலைக்கும் முகமாக இபுறாஹிம் லேசாக கனைத்துக்கொண்டு துவங்கினான்.

'நூரா....'

'...........'

'ந்நூ...ரா.....'

'ம்.....'

'நான் கூப்பிடுறேன் நீ ஏன் பேசாமலிருக்கிறாய்?'

'என்ன பேச சொல்றே? எனக்கு எதுவுமே பிடிக்கலெ..'

'என்னைக்கூடவா?'

'அப்படியல்ல, லைஃபே பிடிக்கலே!'

'ஏன் அப்படி சொல்றே?'

'என் நிலையில் நீ இருந்து பார்த்தா தெரியும்.'

'இதோ பார்! உன்னுடைய மன அழுத்தம் எனக்கு நல்லாவே புரியுது, நீ எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறாய் என்பது எனக்குப் புரியாமலில்லை. நீ நடந்த சம்பவத்தையே நினைச்சுக்கிட்டு இருந்தா உன்னுடைய துன்பம் கொறஞ்சிடுமா? நீ இதையே நினைச்சிக்கிட்டிருந்தா வீனா உடம்புக்குத்தான் கேடு! நீ அழுவதாலையோ அல்லது வேறொருத்தர்ட்டே சொல்லி மாள்றதாலெயோ போனவங்க திரும்ப வரப்போறதில்லை. என்னுடைய ஆசிரியர் அடிக்கடி ஒரு பழமொழி சொல்வார் "acceptance of inevitable is the first step of conquering happiness" என்று. தவிற்கமுடியாததை ஏற்றுக்கொள்ளத்தான் வேனும், நாமாக வரவழைத்துக்கொண்ட துன்பமல்ல; அது இறைவன் செயல்; அவன் எப்படி நாடி இருக்கிறானோ அப்படித்தான் நடக்கும். யார் யாருக்கு எப்படி இறப்பு இருக்கிறது என்று அவன் முடிவு செய்துள்ளானோ அதன்படித்தான் நடக்கும் அதில் ஒரு சகெண்ட் முந்தவும் செய்யாது ஒரு சகெண்டு பிந்தவும் செய்யாது. அதனாலெ நீ மனதை தேத்தித்தான் ஆகனும். மறக்கமுடியாத சம்பவம்தான், நீயோ நானோ என்ன செய்யமுடியும்? மறக்க முயற்சி செய்.'

அவன் சொல்லச் சொல்ல துன்பம் மேலிட பொங்கிக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு, 'இப்றாஹிம் நீ சொல்வதல்லாம் சரிதான். எனக்கென்று ஒரு வாழ்க்கை இருந்தது, இப்போது அது போய்விட்டது. எல்லாம் போனபிறகு நான் யாருக்காக வாழவேண்டும்? இங்கு இருப்பதினால் ஒரு மெஷின் லைஃப்தான் கிடைக்கும். நான் என் தாய் நாடு போவதுதான் நல்லது என்று எனக்குப் படுகிறது!' என்று தொண்டை அடைக்க சொல்லிக்கொண்டு எழுந்தாள்.

அப்போது அவள் கையை முதன்முறையாகப் பிடித்து அமரவைத்தான் இபுறாஹிம். அவன் கை பட்டதும் எதோ ஒரு உணர்வு தன்னுள் மின்சாரம்போல் பாய்வதைப் போன்று உணர்ந்த அவள் மறுப்பேதும் சொல்லாமல் அமர்ந்தாள்.

யார் இருக்கிறார்? யாருக்காக வாழவேண்டும் என்று ஏன் புலம்புகிறாய்? நான் இருக்கிறேன், எனக்காக நீ வாழ்ந்துத்தான் ஆகவேண்டும். என்று அவன் சொன்னபோது அவள் மனம் விசும்பியது; தனக்காக ஒரு ஜீவன் இருப்பதை உணர்ந்தபோது அவள் கண்கள் கண்ணீருடன் விரிந்தது!

இதோ பார்! நான் ஒரு முடிவோடுதான் பேசுகிறேன். நான் சொல்வதைக் கேட்டபிறகு உன் முடிவை சொல் என்ற புதிரோடு பேச தொடங்கினான்.

'நான் உன்னை நேசிக்கிறேன்; உன்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்; உன்னை என் வாழ்க்கைத் துணையாக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். உன்னுடைய சம்மதம் வேண்டும். இப்போதில்லாவிட்டாலும் இரண்டு நாள் கழித்து சொல், நல்ல செய்தியாக சொல்.'

'இப்றாஹிம் உனக்கு என்ன ஆகிவிட்டது? நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்குத் தாய். நீயோ கல்யாணம் ஆகாதவன்; உன் தாயார் ஒரு பெண்ணை கற்பனை செய்து வைத்திருப்பார்கள்.'

'இல்லை, என் முடிவுதான் என் தாயாரின் முடிவும்.'

'இதோ பார் இப்றாஹிம் நீ இந்தியன், நானோ இந்தோனேசியா. நம் இரண்டு நாட்டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு இவைகளெல்லாம் வேறு. இதையெல்லாம் சிந்தித்துப் பார்.'

'நூரா! மொழி கலாச்சாரம் எல்லாம் நாம் ஏற்படுத்திக்கொண்டது, அதாவது முன்னோர்கள் ஏற்படுத்தியது. அதையெல்லாம் குப்பையில் போடு. இரு மனம் ஒன்றானால் அவையும் ஒன்றாகிவிடும்.'

அவனுடைய உறுதியான முடிவை உணர்ந்த நூரா இரண்டு நாள் அவகாசம் கொடு என்று கேட்டுக்கொண்டாள்.

மறுநாள் ஆபீஸை விட்டு புறப்படும்போது, இப்றாஹிம் இன்றும் நான் உன்கூட வருகிறேன் என்று கூறிவிட்டு அவன்கூட சென்றாள். காரில் போகும்போது நேராக ஸ்டார் ஹோட்டலுக்கு போகும்படி உத்திரவிட்டாள். அங்கே சென்று ஐஸ்கிரீமை சுவைத்துக்கொண்டே பேச்சை தொடங்கினாள்.

'இப்றாஹிம், முந்திரிக்கொட்டை மாதிரி நீ இதுக்கு காசு கொடுக்கக்கூடாது, இது என்னுடைய ட்ரீட்.'

'O.K. உன் இஷ்டம்.'

'நான் ராத்திரி என் அக்காவிடம் பேசினேன், எனக்கு எது விருப்பமோ அதை செய்துக்கொள் என்று சொல்லிவிட்டாள். எனவே நான் உன் விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறேன், உன்னை மணந்துக்கொள்ள பரிபூரணமாக சம்மதிக்கிறேன். இப்பொ சந்தோஷம்தானே?'

'சரி, அப்படியானால் நீ மும்பைக்குப் புறப்பட தாயாராயிரு.'

'நீயும் இந்தோனேசியா வரனும்!'

'ஓ எஸ், நிச்சயம் வருகிறேன்'

ஒரு மாதத்திற்குப் பிறகு இருவரையும் ஏற்றிக்கொண்டு துபை இண்டர்நேஷனல் விமானத்தளத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மும்பையை நோக்கிப் பறந்தது.

-----00000-------
4-10-2007 திண்ணை இணைய இதழில் வெளிவந்தது