Showing posts with label இஸ்லாமியப் புலவர்கள். Show all posts
Showing posts with label இஸ்லாமியப் புலவர்கள். Show all posts

Sunday, November 7, 2010

புலவர் மெய்தீன்








ரசூல்(சல்) அவர்கள்மீது இஷ்க் வைத்த எத்தனையெத்தனைப் பேர்களில் புலவர் பெருமக்கள் ஒரு சாரார், புரவலர்கள் ஒரு சாரார், கவிஞர்கள் ஒரு சாரார். இப்படி எண்ணிலடங்காதவர்கள் எத்தனையோ? அவர்களில் ஒர் சிலரைத் தவிர பெரும்பாலானோர் அறியப்படாமலே இருக்கின்றனர். உலகுக்கு அறிமுகமாகாவிட்டாலும் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சொந்த ஊரிலேயே அறியப்படாமலேயே மண்ணாகிவிட்டனர். அவர்களில் எனதூர் மஞ்சக்கொல்லை என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் வாழ்ந்தவர் புலவர் மெய்தீன்.

நான் சிறுவனாக இருந்த போது எங்களூர் பைத்து சபைக்கு பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். இஸ்லாம் என்றாலே பிரிந்து இருப்பதுதானே. அதனால் நீயா நானா போட்டி வந்து எங்கள் சபை இரண்டாகப் பிரிந்தது. அதில் அவர் தெருவிலிருக்கும் சபைக்கு பாடல்கள் எழுதிக்கொடுத்தார், எங்களுக்கு கவிஞர் மதிதாசன், கவிஞர் நாகூர் சலீம் போன்றவர்கள் பைத்து எழுதிக்கொடுத்தனர்.

ஒவ்வொருத்தரும் அவங்கவங்க ஊரைப் பற்றி, அதன் சிறப்பைப் பற்றி இணையத்தில் எழுதியிருக்கிறார்கள். நாமும் நம் ஊரைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. விளைவு சென்ற ஜூலையில் ஊர் சென்ற போது செய்திகள் சேகரித்தேன். அப்போதுதான் புலவர் மெய்தீனைப் பற்றி நிறைய செய்திகள் கிடைத்தன. எனவே அதை தனிப் பதிகையாக இட முடிவு செய்து இதனைத் தருகிறேன்.

நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அவரைத் தெரியும். மெலிந்த ஒட்டிய உடம்பு, கருப்பு நிரம், அம்மைத் தழும்புள்ள முகம், அளவான மீசை, வெடுக்கென்ற நடை. அவரைப் பார்த்தால் யாரும் புலவர் என்று சொல்லமுடியாது. தன் புலமையை வெளிப்படுத்திக் கொள்ளாத எளிமையானவர். எளிமை தோற்றத்திலும் மட்டுமில்லை, பேச்சிலும் செயலிலும் இருந்தது.

இவரின் பாடல்கள் அனைத்தும் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளவனவாகவே இருந்தன. கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருந்த இவர் தனிப்பட்ட எவர் மீதும் பாடல்கள் புனைந்ததில்லை. எப்போதுமே கருப்புச் சட்டைப் போடும் அவர் நண்பர் பீர் முஹம்மது தந்தை பெரியாரைப் புகழ்ந்து அவரது கொள்கைகளைப் பாராட்டி ஒரு பாடல் எழுதித்தருமாறு ஒரு முறை வினவியபோது, நீ கெஞ்சிக்கூத்தாடினாலும் பெருமானாரைத் தவிர வேறு யார் மீதும் பாடல் புனையமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

கலைமாமணி கவி கா. மு. ஷரீஃபு இவருக்கு உறவினர் மட்டுமல்ல நண்பரும் ஆவார். ஒரு முறை கா. மு. ஷரீஃப் மஞ்சக்கொல்லை வந்திருந்தபோது இங்கே இருந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம் என் கூட மெட்ராஸ் வா, சினிமாவுக்குப் பாட்டு எழுத வாய்ப்பு வாங்கித் தருகிறேன், நிறைய சம்பாதிக்கலாம் என்றழைத்தபோது. எனக்கென்று ஒரு கொள்கை உண்டு, அதை விட்டு நீங்கமாட்டேன், தூய்மையான இஸ்லாத்தின் கொள்கையை விட்டுவிட்டு அசிங்கத்தனமாகப் பாட்டெழுத சொல்கிறாயா? அதை நீயே செய்துக்கொள் என்று மறுத்தவர் நம் புலவர் பெருமான்.

அவரது பாடல்களில் பெரும்பாலனவை நபிகள் கோமானைப் புகழ்ந்ததாகவே இருக்கின்றன, அவைகளில் சில:

"பாடுவோம் பாடுவோமே - புகழ்
பாடுவோம் பாருள
ஆளவந்தோன் நபி மீது......

நாடுவோம் நபி னடை
யதை யொழுக
நலனடைவீர்
பலனடைவீர் - புகழ் பாடுவோம்.."


நபிகள் கோமானைப் பின் பற்றி வாழ்ந்தால் நலன் மட்டுமல்ல பலனும் அடைவீர் எனவே நபிகள்பிரானைப் புகழ்ந்தால் மட்டும் போதாது அவர்களின் வழிமுறையையும் ஏற்று நடக்கவேண்டும் என்று அறிவுறுத்தும் அவர் வேறொரு பாடலில் நபிசொல் மறந்தால் நாம் என்ன நிலைக்கு ஆளாவோம் என்பதையும் எச்சறிக்கத் தவறவில்லை. இதோ:

"நன்கோன் நபிசொல்
நாம் மறந்தோம்
நலிவடைந்தோம் சோதரனே
நன்குணர் வாயே நீயே..!
நன்குணர் வாயே..!!"

"நாயகர் நாளிதுவே - நபி
நாயகர் நாளிது
நாம் புகழ்வோம்
களி கூறி"


என்று மீலாது நபியன்று பாடுவதற்காவே தனிப் பாடல் தீட்டிய புலவர். தன் மனம் சங்கடப்படும்போதெல்லாம் நபிகள் பெருமானார் அவர்களின் உதவியை நாடாமலிருந்ததில்லை.

"இரசூல் நபியே !
இது ஞாயமா - அண்டிடும்
ஏழை மீது கோபமா
இனி ஏது செய்வேன் - இரசூல் நபியே"

"மகா மேதையெனும் விளங்கும் நபியே
மனதோடு உமை நம்பினேன் பாரிலே
சதா நான் துன்பம் காண்பது ஞாயமோ
அதை தீர்க்காத தென்ன மாயமோ

உலகினில் வாழ்ந்த தீமையை மாற்றி
உயர்வினைத் தந்த சாதகரே..!"

என்று நபிகளாரிடம் வினவும் புலவர் நம்மையும் சிந்திக்கச் சொல்கிறார்

"சிந்தித்துப் பாராய் சோதரா - நபி சேவை
சிந்தித்துப் பாராய் சோதரா - நபி சேவையை

வட்டியினால் பல குடும்பத்தை
வாட்டியர் வம்பர்கள் என்றே - ஒரு
சட்டம் வகுத்த நம் தருமராம்
துட்டர்களின் சூதாட்டத்தை
துளைத்தனர் அன்றோ - சோதரா.."


சிந்தனை என்பது மனித சமுதாயத்துக்கு இறைவன் அளித்த அருட்கொடைகளில் ஒன்று. இறைவனே தன் திருமறையில் பல இடங்களில் சிந்தியுங்கள், சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன என்று மொழிகிறான். சிந்தனையினால் பெறும் பயனை நல்வழியில் செலவிடாமல் தீய வழியில் செலவிடவே பலரில் சிலர் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அங்கே அந்த சிலருக்கென்று தனிப் பயன் இருப்பதை வழிநடக்கும் பாமரர்களுக்குத் தெரிவதில்லை. எனவே இப்போதெல்லாம் அறிவை விட அகந்தையே முன்நிற்கிறது. இதை அன்றே எச்சரித்துள்ளார் நம் புலவர் பெருமான். இதோ....

"அல்லாஹ்வின் செயல் எல்லாம் நீ அறிவாய்
அகந்தைக் கொள்ளாதே - நபி
சொல் தள்ளாதே...!

நில்லாது உன் தேகம் எந்நேரம்
நீங்காது சந்தேகம்
பொல்லாத பாவ செயலைப் புரிந்து
பொழுதை வீன் கழிக்காதே
அழுது பின் சலிக்காதே..!

செல்லாது உன் வாதம் - ஆது
அவன் மகன் சத்தாதும்
கல்லான நெஞ்சன் நமுரூது பிர்அவ்ன்
கதி என்ன உணர்ந்தாயோ
நிலை என்ன தெரிந்தாயோ..!

வெல்லாது உன் அறிவு - இறைவன்
விதியினை இது தெளிவு
பாவவினை யனுகா இறையோனை-தொழுது
பலன் பெற முனைவாயா
நலம் மிகும் நினைவாயா..!"


ஆழமான கருத்துக்களை அள்ளித் தெளித்த புலவரவருக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் நெய்னார் முஹம்மது, இவர் டீகடை வைத்திருந்தார் இரண்டாமவர் ஜாஃபர் யூசுஃப், நல்ல அறிவாற்றல் பெற்ற இவர் பல கலைகளில் சிறந்து விளங்கி பலரின் பாராட்டைப் பெற்று முப்பதை நெருங்கும்போது விடைபெற்றுவிட்டார்.

புலவரைப் பற்றிய செய்திகளை சேகரிக்கும்போது அவருடைய புகைப் படம் கேட்டேன், தேடினேன், அவர் வீட்டிலும் இல்லை வேறு எங்கும் கிடைக்கவில்லை. அனால் ஒரு செய்தியை மட்டும் மகனார் சொன்னார், மஹான் ஷிப்ளி பாவா(ரஹ்) அவர்கள் மீது பாடல்கள் இயற்றி வைத்திருந்தார். அது யாரிடமும் கிடைக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தீயிட்டு எரித்துவிட்டேன், மற்ற பாடல்கள் அடங்கிய புத்தகம் செல்லரித்துவிட்டது என்று எந்த வருத்தமுமில்லாமல் சொன்னபோது எனக்கு வருத்தமாக இருந்தது. புலவரின் தந்தையும் புலவராகவே வாழ்ந்தவர் ஆனால் அவர் புலமை வழித்தோன்றல்களுக்கில்லை. புலமை என்பது இறைவன் அளிக்கும் அருள். அது தகுதி உள்ளவர்களுக்குத்தானே கிடைக்கும்.

நன்றி: தகவல்களும் சில பாடல்களும் தந்துதவியவர், மூத்த மகன் நெய்னார் முஹம்மது அவர்கள்

Thursday, August 19, 2010

தலாயில் கைராத்

அல் ஜஜூலி(ரஹ்)
(807- 870 ஹிஜிரி)






உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று புனிதக் குர் ஆனின் தோற்றுவாயில் நமக்குத் சொல்லித்தரும் இறைவன் மற்றுள்ள எல்லா அத்தியாயங்களிலும் என்னிடமே உதவித் தேடுங்கள், உங்கள் தேவைகளை நானே பூர்த்திச் செய்கிறேன் என்று அறுதியிட்டு உறுதிக்கூறுகிறான்.

அவனது உயர் படைப்பினமாகிய நாமும் அவனையே வணங்குகிறோம்; அவனிடமே அனைத்தையும் கோருகிறோம். ஆனால் நம்முடைய கோரிக்கை நிறைவேறுவதில்லை, நம்முடையத் தேவை பூர்த்தியடைவதில்லை. நாம் எவ்வாறு தொழுதாலும் எத்தனை முறை முறையிட்டாலும் நம்முடையத் தேவைகள் நிறைவேறுவதில்லை; குறைந்த பட்சம் பகுதியாகிலும் நிறைவேறியுள்ளதா என்றால் இல்லை என்ற பதிலே நிற்கிறது.

அப்படியானால் இறைவன் தன் வாக்குறுதியைத் தவறவிடுகிறானா? இல்லை "பிறகு" என்ற அலட்சிய மனப்பான்மையில் இருக்கின்றானா? இல்லை நமக்கு கேட்கத்தெரியவில்லையா? இல்லை நாம் கேட்கும் துஆவில் குறைபாடுகள் உள்ளனவா? கேள்வி அதன் வடிவிலேயே இருக்கிறது.

விடை............!

இறைவன் தன் நிலையிலிருந்து மாறுவதில்லை; வாக்குறுதியை மீறுவதில்லை; அவன் சரியாகவே இருக்கிறான். நமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, தெளிவில்லாமல் குழம்பிய மனத்தோடு கேட்கிறோம். வேறுவார்த்தையில் சொன்னால் குழப்பம் மனதில் இருப்பது மனதுக்கே தெரியவில்லை; சிந்தனைச் சிதறிகொண்டிருப்பது நமக்கும் தெரியவில்லை. மனதை எங்கோ வைத்துக்கொண்டு நாவை சுழற்றிகொண்டிருக்கிறோம் என்பதுதான் எதார்த்தம்.

"காலையில் கேட்கும் துஆ மாலைக்குள் நிறைவேறி இருக்கவேண்டும்; இரவில் கேட்கும் துஆ மறு நாள் நிறைவேறவேண்டும், அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் நிறைவேறவேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கேட்கும் துஆவில் குறைபாடு உள்ளது.

இறைவனிடத்தில் துஆ கேட்பதானால் வெறும் வார்த்தைகளால் கேட்கக்கூடாது. அவன் உள்ளத்தைப் பார்ப்பவன், எனவே மனதால் கேட்கவேண்டும். உடல், மனம், ஆன்மா இவை மூன்றும் இணைந்த நிலையில் கேட்கப்படும் துஆ உடனே கபூலாகும். வெறு வார்த்தையில் சொன்னால் எது நிறைவேறுமோ அதை மட்டுமே திரண்டிருக்கும் மனம் கேட்கும். மற்ற எதையும் கேட்காது.

"அல்லல்பட்டு, சங்கடப்பட்டு, மனம் நொந்துபோயிருப்பவனை ஏசாதீர்கள், அவன் கேட்கும் துஆ உடனே பலித்துவிடும்" என்று பெருமானார் அவர்கள் சொன்னதில் எவ்வளவு ஆழமான கருத்து இருக்கிறது என்பதை உற்றுப்பாருங்கள்" என்று ஹஜ்ரத் (அப்துல் வஹ்ஹாப் பாக்கவி) அவர்கள் சொன்னார்கள்.

துஆ கேட்பதில் மனத்தின் பங்கு பெருமளவு இருக்கிறது. மனதைக் கட்டுப்படுத்தி ஓர் நிலைக்குக் கொண்டுவருவது சாதாரணக் காரியமல்ல. பல இரவுகள் கண்விழித்து, உணவைத் துறந்து, ஆசையை அகற்றி அல்லல்கள் பல பட்டாலே மனத்திரட்சி வசமாகும்.

இத்தகைய சிரமங்கள், அவதிகள் வேண்டாமென்று ஒரு சில பெரியோர்கள், வலிமார்கள் சுலபமான சில வழிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். அத்தகையப் பெரியோர்களில் ஒருவரான ஹஜ்ரத் முஹம்மது பின் சுலைமான் அல் ஜஜூலி அவர்கள் "தலாயில் கைராத்" என்ற உயர்வான அவ்ராதை நமக்கு தந்திருக்கிறார்கள்.

அவ்ராது என்ற அரபி வார்த்தைக்கு தினம் ஓதக்கூடிய புகழ்மாலை என பொருள் கொள்ளலாம். அவர்கள் எழுதிய அதனை உற்று நோக்கினால் இறைவனைப் புகழ்ந்தவண்ணமாகவே இருக்கும். அப்படி புகழ்ந்துக்கொண்டு வரும்போது இடையில் ஒரு வரியில் சின்ன துஆ, பின் புகழ்ச்சி, இப்படியாக கடைசிவரை இருக்கிறது.

ஆழ்ந்து சிந்தித்தால் இறைவனைப் புகழ்ந்துக்கொண்டு வரும்போது அப்புகழ்ச்சியில் மனம் லயித்து ஆன்மாவுடன் சங்கமித்த நிலையில் முறையீட்டை இறைவனிடம் வைக்கப்படுகிறது. வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மனம் ஒன்றி கேட்கப்படும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதிப்பாட்டை இங்கு உருவாக்கி இருக்கிறார்கள் இமாமவர்கள். இவர்கள் இயற்றிய இவ்அவ்ராது இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல ஆப்ரிக்கா ஐரோப்பிய மேலை நாடுகளிலும் பரவலாக ஓதப்படுகிறது.

இமாம் அவர்களின் முழுப் பெயர் அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் சுலைமான் பின் அபு பக்கர் அல் ஜஜூலி அல் சிமாலி. இவர்கள் மொராக்கோ நாட்டின் ஜஜுலா பகுதியைச் சார்ந்த பெர்பெர் இனத்தைச் சார்ந்தவர்கள் தம் எட்டாம் வயதில் தந்தையை இழந்து தம் சகோதரர் ஈசா அவர்களுடன் மராகிஸ் பகுதியில் தன் ஆரம்ப வாழ்க்கை பகுதியை கழித்தார்கள்.

ஆரம்பக் கல்வியை தம் சொந்த ஊரிலும் பின் ஃபெஜ்(Fez) என்ற ஊரிலும் பயின்றார்கள். இளம்பருவத்திலே திருக்குரானை மனனம் செய்ததோடு மட்டுமல்லாமல் பிக்ஹ், அரபி மொழியியல், கணிதவியல் ஆகியவற்றை அபுல் அப்பாஸ் அல்ஹல்பானி மற்றும் அவரின் சகோதரர் அப்துல் அஜுஜ் ஆகியோரிடம் சற்றேரக்குறைய பதினாறு ஆண்டுகள் பயின்றார்கள். நீண்ட நாட்களாக நடந்துவந்த இனப்போராட்டக்காரணமாக புலம்பெயர்ந்து சற்றேரக்குறைய நாற்பதாண்டுகாலம் மக்கா, மதினா, பைத்துல் முகத்திஸ் ஆகிய நகர்களில் வாழ்ந்தவர்கள் தம் சொந்த ஊரான ஃபெஜ்(Fez) க்குத் திரும்பினார்கள். அங்குதான் "தலாயில் கைராத்" தை நிறைவுப் படுத்தினார்கள்.

ஒருமுறை பயணத்தின்போது ஒலு செய்வதற்காகத் தண்ணீர் தேவைப்பட்டது. அங்கிங்கும் சுற்றிப்பார்த்தபோது ஒரு கிணற்றைக் கண்டார்கள். ஓடிச்சென்று பார்த்தபோது தண்ணீர் ஆழத்தில் இருந்தது. மொள்வதற்கு வாளி வேண்டும். வாளி இருந்தால் கையிறு வேண்டும், இரண்டும் இல்லாத நிலையில் தண்ணீரை எப்படி மொள்ள முடியும்? கவலைக் கொண்டவர்களாக எதாவது உதவிக் கிடைக்குமா என்று அங்குமிங்கும் பார்த்தார்கள். தூரத்தே இதை கவனித்துக்கொண்டிருந்த ஒரு மங்கை அருகே வந்து கிணற்றில் துப்பினாள், உடனே தண்ணீர் பொங்கிக்கொண்டு மேல் மட்டத்திற்கு வந்தது. இதை கண்ணுற்ற இமாம் அவர்கள் எப்படி செய்தாய் என்று வினவினார்கள். பெருமானார் அவர்களின் ஆசியால் என்னால் செய்ய முடிந்தது என்று பதிலளித்தாள். இந்நிகழ்வே தலாயில் கைராத் எழுத காரணமாக அமைந்தது.

ஷாதலியா தரீக்காவை தம் வாழ்வில் இணத்துக்கொண்ட இவர்கள் சுமார் பதினாங்காண்டு காலம் தனிமையில் (கல்வத்து) இருந்தார்கள். தனிமைக்குப் பிறகு அசஃபி என்ற பகுதியில் வாழ்ந்த போது பல்லாயிரகணக்கானோர் அவர்களின் சீடர்களானர். இதனைக் கண்ணுற்ற அப்பகுதியின் ஆளுநர் அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆளுநரின் உத்திரவுக்கிணங்கி ஆப்ரகால் பக்கம் பயணமானார்கள். ஞானச் சுவைக்கு அடிமையான அவர்களின் சீடர்கள் கூடவே சென்றனர். அங்கும் தன் சீடர்களை ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுத்துவதில் தன் நேரத்தை செலவிட்டார்கள். முரிதீன்கள் எனப்படும் சீடர்கள் அதிகமானதன் காரணமாக தன் மணவர்களை பல பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்களின் ஷேக் அபூ அப்துல்லாஹ் முஹம்மது அல்ஸகீர் ஸஹலி மற்றும் ஷேக் அபூ முஹம்மது அப்துல் கரீம் அல்முந்திரி பிரபல்யமானவர்கள்.

இதை கண்ணுற்ற அவ்வாளுநர் பொறாமைத் தீயின் வெம்மையினால் அவர்களுக்கு நஞ்சூட்டிக் கொன்றார். காலை சுபுஹுத் தொழுகையின்போது அவர்கள் உயிர் பிரிந்தது. எழுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின் அவர்களை உடலை மரக்காஷ் என்ற ஊரில் மீண்டும் அடக்கம் செய்வதற்காகத் தோண்டியபோது எந்த கேடுமில்லாமல் சற்று முன்பு அடக்கம் செய்யப்பட்ட உடல் போலிருந்ததாக தி என் சைக்லோபீடியா ஆஃப் இஸ்லாம் 1957 லீடன் பதிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Sunday, March 7, 2010

பெரிய நூஹ் வலியுல்லாஹ்

வேத புராணம்


தலாக் கொடுக்கப்பட்ட அந்தப் பெண்ணை மீண்டும் மணமுடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. தன் மாஜி மாமனாரை அணுகி தான் செய்த இமாலயத் தவறை உணர்ந்துவிட்டதாகவும் மீண்டும் அந்தப் பெண்ணையே மணமுடித்துக் கொள்ள விரும்புவதாகவும் தன் உள்ளக் கிடக்கையை சொன்னான். அவருக்கோ தலைச் சுற்றல் ஏற்பட்டது.

சடுதியில் சாத்தியப்படாத விசயத்தை சாதாரணமாகச் சொல்கிறானே என்று. தம்பி, கல்யாணம் என்பது கிள்ளுக்கீரை அல்ல இஷ்டத்துக்கு முடிக்கவும் எடுக்கவும், உங்களால் நாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோமென்று தெரியுமா உங்களுக்கு? என்றார் பெண்ணின் தந்தை சற்று ஆத்திரமும் வேதனையும் கலந்த குரலுடன். அவனும் விடுவதாக இல்லை, என்னால் ஏற்பட்ட துன்பம் அனைத்துக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்,
அவற்றை நிவர்த்தி செய்கிறேன், தயவு செய்து முடியாது என்று மறுத்துவிடாதீர்கள் என்று கெஞ்சினான். சரி என்னை மட்டும் சாந்த விஷயமல்ல எல்லோரையும் கலந்தாலோசிக்கவேண்டும் என்றார்.

மார்க்கச் சட்டப்படி தலாக் கூறப்பட்ட ஒரு பெண்ணை அதே மாப்பிள்ளை கல்யாணம் செய்துக்கொள்ள முடியாது. அப்படி செய்வதானால் அந்தப் பெண்ணை வேரொருவருக்குத் திருமணம் செய்துக்கொடுத்து அவர் தலாக் கொடுத்து, நான்கு மாதம் பத்து நாள் இத்தா இருந்த பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும். ஒரு வேளை அந்தப் பெண் ஹமலாகிவிட்டால் குழந்தைப் பிறந்த பிறகே கல்யாணம் செய்யமுடியும்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் அதே மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்துவைக்கும் முடிவுக்கு வந்தனர். ஆனால் அதற்கு முன் வேரொருவருக்கு மணமுடித்துக் கொடுத்து உடன் தலாக் கொடுக்கப்படவேண்டுமே! இதற்கு யார் சம்மதிப்பார்கள்? வாலிபன் ஒருவன் நிச்சயமாக சம்மதிக்கமாட்டான் எனவே வயோதிகராக யாராவதும் கிடைப்பார்களா என்று தேடலானர்.

அதுகால் அங்கு பள்ளிவாசலுக்கு வந்தார் ஒரு முதியவர். பழுத்தப் பழம், வயது மதிப்பிடமுடியாது, குடும்ப வாழ்க்கையைக் கடந்தவர்; லாயக்கற்றவர். அவரை அணுகினர், பெரியவருக்கு விருந்து படைத்தனர். பின் மெதுவாக செய்தியை சொன்னார்கள்.

அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெரியவர், நானோ மவுத்தை நோக்கிக்கொண்டிருக்கிறேன், இந்த சமயத்தில் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்வித்தால் ஊர் சிரிக்கும் ஆகவே வேறு யாருக்காவது செய்து வையுங்கள் என்றார்.

அவர்கள் அவரை விடுவதாக இல்லை. ஒரு இரவு மட்டும், இன்று இரவு கல்யாணம் செய்துக்கொள்ளுங்கள் மறு நாள் காலை தலாக் கொடுத்துவிடுங்கள். மார்க்கச் சட்டப்படி நாங்கள் முதல் கணவனுக்கே மறுகல்யாணம் செய்து வைத்துவிடுகிறோம். தாங்கள் எப்படியாவது சம்மதியுங்கள் நீங்கள் கேட்கும் வெகுமதிகள் தருகிறோம் என்றனர்.

அவர் சற்று யோசித்துவிட்டு, சரி நான் சம்மதிக்கிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்று பீடிகைப் போட்டார். என்ன, என்ன சொல்லுங்கள் என்றனர்.

மறுநாள் காலையே தலாக் கொடுத்துவிடுகிறேன், ஆனால் அந்தப் பெண் அதாவது உங்கள் மகள் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் தலாக் கொடுக்கமாட்டேன் என்றார். அதை அவர்கள் ஏற்றனர்.

விரைவாகவே திருமணம் நடந்தேறியது, மணமக்கள் தனி அறைக்குத் தள்ளப்பட்டனர், பொழுது விடிந்ததும் தலாக் பெறுவதற்கு எல்லோரும் தயாராகி அம்முதியவரை அணுகி தலாக் கொடுக்க நிர்பந்தித்தனர்.

அவர் அமைதியாக நான் சொன்ன நிபந்தனைப் படி அந்தப் பெண்ணை வரவழைத்து என் முன்னால் சம்மதம் தெரிவிக்கச் சொல்லுங்கள் என்றார்.

வரவழைக்கப்பட்ட மணப்பெண் அமைதியாகச் சொன்னாள், "என் வாழ்நாள் முழுவது இம்முதியவரே என் புருஷன், இனி நான் வேறு யாரையும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள்.

இது சற்றேறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தமிழக எல்லையையொட்டி கேரளத்திலிருக்கும் பூவாறு என்ற ஊரில் நடந்தேறியதாகவும் அந்த முதியவர் பெரிய நூஹ் வலியுல்லாஹ் என்றும் வாய்மொழி வரலாறு ஒன்று உண்டு. ஆனால் இதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது; இப்படியும் நடந்திருக்கலாம் என்று நம்பாதிருக்கவும் முடியாது.

நாகையை அடுத்த மஞ்சக்கொல்லை என்ற எமது சிற்றூரில் அடங்கியிருக்கும் செய்யது அப்துல் காதர் என்ற வலியுல்லாஹ் அவர்களின் புதல்வராக காயல்பட்டணத்தில் பிறந்த அவர்கள் சிறு வயதில் திருவடிக் கவிராயர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்றிருக்கிறார். நபிகள் நாயகத்தின் மீது 'திருப்புகழ்' பாடிய காசிம் புலவர்
அவர்களும் அதே திருவடிக்கவிராயரிடம் பாடம் கற்றிருப்பதால் இருவரும் சக மாணவர்கள், சமகாலத்தவர்கள் என்ற செய்தி கிடைக்கிறது.

இவர்கள் மஞ்சக்கொல்லையில் தம் தந்தையுடன் தங்கிருந்து அங்கு அடக்கமாயிருக்கும் செய்யது அஹமது வலியுல்லாஹ் அவர்களிடம் மார்க்கக் கல்வி பயின்றதாகவும் பின்பு பரங்கிப்பேட்டை சென்று மஹ்மூது தீபி(ரஹ்) அவர்களிடம் ஆன்மீகக் கல்வி பயின்றதாகவும் சொல்லப்படுகிறது. பின் அவர்கள் பொன்னானி சென்று அங்கு சில காலம் ஆசிரியராகப் பணியாற்றியதாகவும், பின் தன் வாழ்நாள் முழுவதையும் ஞானப்பாட்டையில் செலவு செய்ததாகவும் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் எப்போது பூவாறு வந்தார்கள் என்ற செய்தி தெளிவாக இல்லை. அங்கேயே தம் இறுதி நாள்வரை தங்கியிருந்து வேதபுராணத்தை இயற்றியதாக சொல்லப்படுகிறது.

வேதபுராணம் 27 படலமும் 910 பாடல்களும் கொண்ட பெரும் நூல். இதற்கு பாண்டி மண்டலம் செவ்வல்மா நகரம் வித்துவான் எம். ஏ. நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். அதில் முதலாவதாக கலிமாக் காரணப் படலத்தில் 22 பாடல்கள் இருக்கின்றன. இவை அகமியத்தின் அடிப்படையை விளக்குகின்றன. அடுத்து தொழுகைப் படலம், இன்னிசைப் படலம், குத்துபா படலம், மிஃராஜ் படலம், நோன்பு படலம் என்று நீண்டுக்கொண்டே போகிறது. ஒவ்வொன்றிலும் அதனதன் அகமியத் தாக்கமே உள்ளது புறச்செய்திகள் என்பது குறைவு. ஆத்மீக அறிவு சிறிதாகிலும் உள்ளவர்களே படிக்கமுடியும்
மற்றவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது.

ஆனால் எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படியாக இல்முனிசாப் படலம் என்ற பாடல் தொகுப்பை யாத்தளித்துள்ளார்கள். இதில் 15 பாடல்கள் உள்ள இத்தொகுப்பில் கணவன் மனைவிக்கிடையே உடலுறவு இஸ்லாமிய முறைப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கியுள்ளார்கள். இஸ்லாத்தின் sexology பற்றிய ஒரே பாடலாகத்தானிருக்கும்.

"இருகண் முடித்தா னொருகண்னாலே
இல்லெனுந் தம்மா லிழுத்துவாங்கி
முருகு நூனிலே நுக்தாவிலே
முட்டுவ துமட்டும் சுல்புமட்டும்
பருகும் நுகத்துமேல் வாங்கிக்கட்டப்
பாகமறியாத மானுடர் கேண்மோ
சொருகுங் குழல்மங்கை ஹாலுடனே
சுகமாய் மதந்தீர்க்க வறியமாட்டீர்"
- பாடல்: 1

என்று தொடங்கி மனைவி என்பவள் வெறும் போகப் பொருளல்ல; கூடல் என்பது வெறும் உணர்ச்சியின் வடிகாலல்ல; அது எத்தகைய புனிதம் வாய்ந்ததாக இறைவன் அமைத்துள்ளான் என இப்பாடல்களில் விளக்கியுள்ளார்கள் என்பது இக்கடைசி வரிகளில் தெளிவாகிறது

".....ஒளிவு லாநபி முஹம்மதைவு
முவந்து மனதிலே யுறுதியாக்கித்
தெளிவா மனதிலே திறமதாக்கிச்
சேர்ந்து முஷாஹிதா செய்துவாவே"
- பாடல்: 15

இதன் முழுப்பாடலும் விரைவில் ஆபிதீன் பக்கங்களில் காணலாம் காயல் மாநகரம் ஈன்றெடுத்த புலவர்கள் பலர், அவர்கள் வெறும் புலவர்களாக மட்டும் இருந்துவிடாமல் இறை நேசர்களாக வாழ்ந்து இஸ்லாத்திற்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. வெறும் மார்க்கத்தோடு நின்றுவிடாமல் தமிழ் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்ட இவர்களை தமிழக மக்கள் மட்டுமல்ல, தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல, அந்த ஊர் மக்களும் மறந்துக்கொண்டிருக்கிறார்கள்.

Monday, February 15, 2010

ஞானி பீர்முஹம்மது(ரஹ்)



தக்கலை பீர் முஹம்மது அப்பா


இஸ்லாம் அகிலமெல்லாம் பரவியபிறகு அந்தந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் வாழ்வியலிலும் வழிபாட்டிலும் மார்க்கச் சட்டங்களைப் பின்பற்றி வந்தாலும் கலாச்சாரப் பண்பாட்டு முறையில் தங்கள் பகுதியின் சமூக நாகரீகத்திற்குட்பட்டே வாழ்ந்து வருகிறார்கள். உணவு, உடை, மொழி, சடங்கு, சம்பிரதாயங்களில் இவற்றை காணமுடிகிறது. இவை மேலோங்கி இஸ்லாம் முற்றிலும் மாறுபட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுவிடாமலிருக்க "ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப்
புதுப்பிக்கக்கூடியவர்கள் (முஜத்திதுகள்) தோன்றுவார்கள்" என பெருமானார் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

சூஃபியாக்கள் அல்லது ஞானிகள் என்றழைக்கப்படும் வலிமார்கள் இறைவணக்கத்தோடு நின்றுவிடாமல் அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி வளர்ச்சியிக்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். மக்களின் அறிவுத்தாகத்திற்கேற்ப இறைவிளக்கங்களை அள்ளித்தந்திருக்கிறார்கள். அரபியில் மட்டுமல்லாது வட்டார மொழியிலும் புலமை பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள். தமிழைப் பொருத்தவரை அவர்களின் பங்கு மகத்தானது; வரையறைக்கு அப்பாற்பட்டது. ஆனால் தூரதிருஷ்டவசமாக அவைகள் மறைக்கப்பட்டன; இன்று மறுக்கப்படுகின்றன.

தமிழ் புலவர்கள் விட்டுச் சென்ற மரபைத் தொடர்ந்து இறைநேசர்களான சூஃபிப் பெரியார்களும் மஸ்தான்களும் பக்திச்சுவை சொட்டச்சொட்ட இறையுணர்வில் தன்னை மறந்து இன்பலயத்தில் எண்ணிறந்த மெஞ்ஞானப் பாக்களைப் பாடியுள்ளனர்.

ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பற்ற இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே தலைசாய்க்கவேண்டும்; தான் என்ற அகந்தையை மாய்த்து ஏகனின் அடைக்கலம் அடையவேண்டும்; அண்டசராசரங்களுக்கும் அதிபதியான அவனின் அடிமை என்ற எண்ணம்
எப்போதும் இருக்கவேண்டும்; தன்னிடம் ஒன்றுமே இல்லை, தான் ஆட்டுவிக்கப்படுபவன், எல்லாம் அவனே என்ற மாறாத உணர்வு எந்தகாலமும் இருந்துக்கொண்டே இருக்கவேண்டும். அவனே உள்ளத்தில் குடி இருக்கிறான், உலகத்தின்மேல் அருள் மழை பொழிகிறான்; உயிர்பிக்கிறவனும் அவனே, மரிக்கச் செய்பவனும் அவனே; சுருங்கச் சொன்னால் 'தௌஹீது' என்பது அல்லாஹ்தான் என்ற உண்மையில் ஊறித் திளைத்த ஞானிகளில் ஒருவரான பீர் முஹம்மது அப்பா அவர்கள் தாம் பெற்ற நம்பிக்கையை நம் நெஞ்சிலும் பதிக்கின்றார்கள் இங்கே..

"தந்தையிலி தாரமிலி தானவனு நீயே
தன்மைகொ டெவர்க்குமொரு தாபரமு நீயே
மைந்தரிலி யன்னையிலி மன்னவனு நீயே
மண்ணிலடி யார்க்கிரணம் வழங்குவது நீயே
சிந்தைதனி லிடறுதனைத் தீர்த்தருள்வை நீயே
தேட்ட மறிந்தெனக்குதவி செய்பனு நீயே
அந்தமிலி நீயெனக்கோ ரிழிவு வராமல்
ஆதியே நானுன் னடைக்கலம தானேன்"
(1)

இஸ்லாமியப் புலவர்கள் இறைவனையும் அவனின் தூதர் பெருமானார் ரசூல்(சல்) அவர்களையும் புகழ்ந்து பாடுவதோடு நிறுத்திவிடாமல் சித்தர்களாகவும் இறை பித்தர்களாகவும் இருந்து அகமியத்தை, அகமியத்தின் ரகசியத்தை அள்ளித் தந்திருக்கிறார்கள். அத்தகைய சித்தர்கள் குணங்குடி மஸ்தான் சாஹிபு(ரஹ்) அவர்களும் தக்கலை பீர் முஹம்மது அப்பா(ரஹ்)அவர்களும் இன்னும் சிலருமாவார்கள்.

சித்தர்கள் என்றாலே இரும்பைப் பொன்னாக்கும் வித்தையைக் கற்றவர்கள் என்ற நம்பிக்கை பாமரர்களுக்குமட்டுமல்ல படித்தவர்களுக்கிடையேயும் இருந்து வந்தது; இன்னமும் இருந்து வருகிறது. ஆனால் இரும்பு போன்ற இதயத்தைப் பொன் போன்று மாற்றவைப்பவர்கள் என்ற எண்ணம் மட்டும் இல்லை. இவர்கள் பஞ்சை மனிதர்களுக்கு எப்பாலை ஊட்டத்தவறினாலும்
ஞானப் பாலை மட்டும் ஊட்டத் தவறியதே இல்லை. ஆனால் ஒரு சங்கடம்! எதனையும் நேரிடையாகச் சொல்லாமல் யாவற்றையும் மறைமுகமாகவே சொல்லியிருக்கிறார்கள்.

சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி பரிபாஷை சொற்களால் அலங்கரிக்கப்பட்டு படிப்பவர்கள் மயக்கமேற்படும் வகையில் அமைந்திருக்கும். இத்தகைய சொற்களிலிருந்து வரும் கருத்துக்கள் புடம்போட்ட பத்திரைமாற்று தங்கம்போல் துலங்கும். ஆனால் அவற்றின் உட்கருத்தைப் புரிந்துக்கொள்வது எளிதான காரியமன்று. இரும்பை தங்கமாக்கும் இரசவாதாம் எத்துனைக் கடினமானதோ அதைவிடக் கடினமானது அதன் உண்மைப் பொருளை அறிவது. இந்த இரசவாதம் அகமியத்தை மட்டுமே உணர்த்துகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

புறச்சடங்குள் இல்லாது அகமியத்தை அடையமுடியாது என்பதால் புறச்சடங்குகளைப் பற்றியும் அவற்றின் செயல்முறைகள் பற்றியும் அங்காங்கே விளக்கியுமிருக்கின்றார்கள். அண்டகோடிகள் படைக்குமுன்பாக 'கன்ஜு மஃக்ஃபி' என்றழைக்கப்படும் மறைவான பொக்கிஷமாக இருந்த இறைவனை, அவன் நிலைகளை, அவன் பண்புகளை அப்பா அவர்கள் விளக்குகிறார்கள் 'பிஸ்மில்க்குறம்' என்ற ஞானப்பாவில்.

"ஆதிபெரியோனே றப்பில் ஆலமீனேயாதி
அஹதுநிலைசமதாக ஆலநிரைந்தோனே
அஹதியத்திலுஹதியத்தும் வாகிதத்துமாகி
அரூபவுரூபத்துள்ளே தானல்லவோதாத்து
தாத்தல்லவோ பாத்தினது லாகிறுசிபாத்து
லாகிறுக்குள் பாத்தினானான் ரகசியத்தின் பொருளே...."


உலகிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் அருவமாக இருந்து நடத்தப்படுகிறதுதான் தாத்து என்றும் தாத்தை பாத்தின் - மறைவானது என்றும் சிபத்தை லாஹிர் - வெளிப்பாடானது என்றும் வெளிப்பட்ட பொருட்களில் மறைவாக இருப்பது மகா ரகசியமாக இருக்கிறது என்றும் நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் பொருள்படுத்துகிறார்கள்.

அவர்களின் வரலாறு அவர்களின் பாடல்கள்மூலமாகவே அறியமுடிகிறதே தவிர வேறு வகையில் அறியமுடியவில்லை. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அல்லது மாதிஹர் ரசூல் சதக்கத்துல்லா அப்பா (1632 - 1703)காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை கீழ் வரும் பாடல்மூலம் அறியமுடிகிறது.

"நினைவுடன் பொருளு நிறைந்திடும்வகைநீதீயும் பிசுமிலினோடே
அனந்தமுந்தெரிய அஹுமதருரைக்க ஆதிதன் கிருபையினாலே
கனசயமாரும்மவுலானாறூமி கழறினார் அகதியத்ததிலே
மனதுமகிழ அறிவையுமறிந்து வழுத்தினார்சதக்கத்துல்லாவே"


நினைவில் கலந்திருக்கின்ற எல்லா ஞானப் பொருள்களையும் கூட்டித் திரட்டி, பிஸ்மில்லா என்கிற திருநாமத்துடன் நமது நபிகள் நாயகம்(சல்) அவர்கள் அருளிச்செய்தார்கள். அதை ஒன்றாகத் திரட்டி ஹலரத் மௌலான ரூமி(ரஹ்) அவர்கள் தமது மஸ்னவி ஷரீஃபில் சொன்னார்கள். அதனை ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் மொழி பெயர்த்துச் சொல்ல அதை எனது ஞானமணிமாலை, மஃரிபத்துமாலை முதலிய நூல்களுக்குச் சரிபார்த்து உலகத்தார்கள் விளங்கிக் கொள்ளும்படியாக குறமாகப் பாடினேன். (2)

"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்
தன்பால னிக்கதையைச் சாற்றினான் - வெங்காயம்
சுக்கோ சிவனிருப்பன் சுரோணிதமோ வல்லவிஞ்சி
ஹக்கோவென் றுள்ளறிந்தக் கால்"


திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் சிறுமலுக்கர் என்பாரின் செல்வப்புதல்வராகப் பிறந்து இறைவனின் தன்மைகள் யாவையும் தன்னிடத்து வருவித்துக்கொண்டவர்கள். அவனில் தன்னை நுழைத்துக்கொள்ளும் நுட்பமான ஞானத்தைப் பெற்றிருந்த ஹுசைன் மன்சூர் ஹல்லாஜ்(ரஹ்) அவர்களின் வழிமுறையில் வந்துவிட்டவர் என்று பறைச்சாற்றுகிறார்கள்.
இஞ்சி, நீரும் ஈரமும் பெற்றுள்ளது, அது உலர்ந்துவிட்டால் சுக்காக மாறிவிடுகிறது, அதற்கு என்றும் அழிவில்லை. ஐம்புலன்களையும் அடக்கியாண்டு தூங்காமல் தூங்கி, சாகாமல் செத்து சமாதி நிலை எய்துவிடுகிறவர்களை அந்த சுக்குக்கும் மற்றவர்கள் அனைவரையும் வெறும் இஞ்சியாகவும் பரிபாஷை மூலம் காட்டுகிறார்கள் அப்பா அவர்கள்.(3)

தென்னாட்டு கஜ்ஜாலி என்ற புகழைப் பெற்ற இவர்களை எத்துனைபேருக்குத் தெரியும்?

நன்றி:
(1) இலக்கியப் பேழை - கே. பி. எஸ். ஹமீது, பாவலர் பதிப்பகம்.
(2) பிஸ்மில்க்குறம் ஞான விளக்கவுரை - செவ்வல் மாநகரம் மகாவித்துவான் எம்.ஏ. நெய்னா முகம்மது பாவலர்
(3) இலக்கியப் பேழை - கே. பி. எஸ். ஹமீது, பாவலர் பதிப்பகம்.

Friday, December 4, 2009

வாழ்வில் வெற்றி

‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது


ஆத்மாவிற்கும் மனித உடலுக்கும் தொடர்பு உண்டு என்பதை வேதாந்திகள், சித்தாந்திகள்
மட்டுமல்ல, மனத்தத்துவ ஆராய்ச்சி வல்லுனர்களும் கூறுகின்றனர். ஆத்மா என்பது என்ன?
ஆத்மாவிற்கும் மனித உடலுக்கும் இடையேயுள்ள உறவும் தொடர்பும் என்னென்ன? என்பதைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஏக இறைவன் பற்றிய எண்ணம் வராமல் போகாது.

மனித உடல், அதனுள் குடிகொண்டிருக்கும் ஆத்மா இவை இரண்டையும் படைத்து, இயக்கியும் வரும் இறைவன் ஆகிய மூவற்றிற்கும் இடையேயுள்ள பந்தத்தைச் சுற்றி எழுந்தவைதான் உலகின் மதங்கள் அனைத்தும். உடல் என்றோ ஒருநாள் மாய்ந்து கட்டையாகி விடுகின்றது. உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையேயுள்ள தொடர்பு மரணத்தோடு முடிந்து விடுகின்றது. பிறப்பதும், பிறந்து உயிர்வாழ்ந்த பின்னர் இறப்பதும் இயற்கையின் நியதிகள் என்றால் உடலோடு தொடர்பு கொண்டிருக்கும் ஆன்மாவிற்கும் மரணம் உண்டா?

ஆன்மா இறப்பதில்லை என்பது இஸ்லாமியக் கோட்பாடு. அங்ஙனமாயின் முடிவு என்ன? மரணம் என்பது மறு உலக வாழ்வுக்குப் புகும் வாயில். மரித்தபின் ஆன்மாவிற்கு வாழ்வு உண்டு. நரகம், சொர்க்கம் என்பதைப் பற்றிய தத்துவார்த்தங்கள் எல்லாம் ஆன்மாவைப்பற்றி நிற்பனவையே.

நபிபெருமானார் அவர்களிடம் ஆன்மா எத்தன்மையானது என்று ஒரு சமயம் கேட்கப்பட்டபோது அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்:

"ஆன்மா என்னுடைய 'அம்ரி'ல் உள்ளது."

இவ்வாறு விடை கூறும்படி திருநபியவர்களுக்கு இறைவன் அறிவித்தான். 'அம்ர்' - அம் என்ற பதத்திற்கு கட்டளை, மட்டுதிட்டம் இல்லாதது, விவரிக்க முடியாதது, சூக்கும உலகத்தைச் சார்ந்தது என பலபொருள்கள் உள்ளன. இப்பொருள்களிலிருந்து ஆன்மா இத்தன்மையதுதான் என விவரிக்க முடியாததாகப் படலாம், ஆனாலும் திருகுர்ஆனின் மற்றொரு திருவசனம், "நாம் அதில் 'மனித சரீரத்தினுள்' நம்முடைய உயிரை ஊதினோம்" என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நபிபெருமான் அவர்களும் ஆண்டவன் ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான் என திருவாய் மளர்ந்தருளியிருக்கிறார்கள். இங்கு சிந்திப்பவர்களுக்கு ஓருண்மை புலப்படுகின்றது. "தன்னுடைய உருவத்தில்" என்பது மனித சரீரத்தைக் குறிப்படுவதல்ல. ஏனனில் இறைவன் அரூபி; மட்டுதிட்ட மில்லாதவன்.

மேற்கூறிய திருகுர்ஆனின் திருவசனத்தையும் திருநபியவர்களின் திருமொழியையும் இணைத்துப் பார்த்தால் ஆன்மா இறைவனுடைய அம்சத்தின்பால் பட்டதென்பதும் அவனோடு மிக நெருங்கிய பந்தமுள்ள தென்பதும் தெரியவரும். இத்தகைய ஆன்மா உயிரென்றும் "ரூஹ்" என்றும் பேசப்படுகின்றது.

இத்தகைய ஆன்மா மனித சரீரத்தினுள் குடி கொண்டிருக்கின்றது. இந்த ஆன்மாவின் தீராத வேட்கைதான் எங்கிருந்து வந்ததோ அங்கு செல்ல வேண்டுமென்பது. ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதும், அடக்கி ஆள்வதும் அதன் வருங்கால வாழ்விற்கு வழிகோலுவதும், மனித உடலின், மனித மனத்தின் கடமைகளாகும். ஆன்மாவோ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சுதந்திரம் பெற்றிருப்பது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு மனிதன் அரும்பாடு படவேண்டும். அதைக் கட்டுப்படுத்தி பரிசுத்தப் படுத்துவதற்கோ மனிதன் மிகப் பெரும்பாடு படவேண்டும். ஐம்புலனாசைகளை அடக்கி உலக இச்சைகளை ஒதுக்கி இவ்வுலக வாழ்வைத் துறந்தும், துறவறம் பூண்டும் உடலையும் மனத்தையும் ஒழுங்குபடுத்தி ஆன்மாவை பரிபக்குவப்படுத்த வேண்டுமென்பது ஒரு மார்க்கத்தின் கொள்கை.

இஸ்லாமோ துறவறத்தை ஏற்றுக்கொள்வதில்லை. எண்ணம், சொல், செயல், மூன்றையும் ஒழுங்கு முறைக்குள் கொண்டுவந்து நித்திய வாழ்க்கையை நடத்தி சில சித்தாந்தங்களில் உறுதியான நம்பிக்கை வைத்துக்கொள்ளவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. ஆதி ஒருவன், தொழுகை ஐவேளை, நோன்புடைமை, போதியநல் ஏழைவரி, ஹஜ் ஆகியவை எல்லாம் இவ்வுலக வாழ் விலிருந்துகொண்டே மன, மொழி, மெய்களை ஒழுங்கு முறைக்குக் கொண்டுவருவதற்கே. மனிதன் எவ்வளவுதான் ஆற்றல் படைத்தவனாக இருப்பினும் அவன் ஆற்றல்கள் அனைத்தையும் மிஞ்சி நிற்கும் சக்தியொன்று அவனை ஆட்டுவிக்கின்றது. அச்சக்தியே அல்லாஹ். அவனின் அன்பைப் பெறுவதற்கு, அவனை அணுகி அணுகி அவன் பக்கமாக வர முயல்பவன் ஆன்மாவை பரிபக்குவப்படுத்தி அவன் வருங்கால சுக வாழ்விற்கு அடிகோலுபவனாவான்.

இவ்வுலக வாழ்வில் இறைவன் வழி நிற்பவன் மறுமை வாழ்வில் நற்பலன் எய்துகிறான். இங்கு தீய கர்மம் செய்தவன் மறு உலகில் தண்டனையையும், வேதனையையும் அனுபவிக்கிறான். "(இறைவா!)உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகின்றோம், நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! எவ்வழி அவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் சென்ற வழி. உன் கோபத்திற்குள்ளானவர்களோ, வழிதப்பியவர்களோ சென்ற வழியல்ல."

இறைவனை நேசிப்பது ஒன்றின் மூலமாகவே ஆன்மாவைப் பரிபக்குவப் படுத்தமுடியும். "ஒருவன் ஒரு சாண் அளவு என்னை நெருங்கினால், நான் ஒரு கெஜம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு கெஜம் அளவு என்னை நெருங்கினால் நான் இரண்டு கெஜம் அளவு அவனை நெருங்குவேன். அவன் என்னிடம் நடந்து வந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்வேன்." என இறைவன் நபிபெருமானவர்களுக்கு அறிவித்திருக்கிறான். இறைவனிடம் உண்மை அன்பிருந்தால் ஒருவன் மற்றெல்லாவற்றையும் விட இறைவனையே மிக மிக நேசிப்பான். அவன் ஒவ்வொரு செயலும் இறைவனின் கருத்தின்படியே நடக்கும். இறைநாட்டத்தில் நடப்பதன்றி வேறு எண்ணம் அவனிடம் இருக்காது. "உங்கள் பிதாக்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும். உங்கள் மனைவியரும், நீங்களும் முயன்று சேகரித்த பொருட்களும் குறைந்துபோகுமென நீங்கள் அஞ்சுகின்ற உங்கள் வியாபாரங்களும், நீங்கள் பிரியம் வைத்திருக்கும் உங்கள் வாசஸ்தலங்களும் ஆண்டவனை விடவும், அவனுடைய இரசூலைவிடவும், அவனின் பாதையில் முயற்சி செய்வதை விடவும் உங்களுக்கு அதிகம் பிரியமுள்ளதாக இருப்பின், இறைவனுடைய கட்டளை வருவதை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். இறைவன் வரம்பு மீறுகிறவர்களை நேர்வழியில் நடத்திச் செல்வதில்லை" என்று இறைவன் கூறுகிறான்.

மனிதன் இறையன்பு காரணமாக நேர்வழி செல்லத் தவறிவிட்டால் அவன் தன் ஆன்மாவிற்கு, அவன் தன் வருங்கால வாழ்வுக்கு ஊறு விளைவித்தவனாக ஆகிவிடுகின்றான். ஆன்மாவைப்
பக்குவப்படுத்தும் வழி வகைகளிலிருந்து தவறி விட்டவனாகிவிடுகின்றான். "முஹாசபா" வையும், "முராக்கபா" வையும், "முஷாஹிதா" வையும் கடைபிடிக்கத் தவறியவனாகி விடுகின்றான். இத்தகையவர்களின் ஆத்மா, மனித சரீரம் இறந்துவிட்டபின்னர் தான் பெறவேண்டிய உயர் பதத்திற்கு தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டதாக மாட்டாது.

"எவன் தன் ஆன்மாவைப் பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன் நிச்சயமாக வெற்றியடைந்து
விட்டான்; எவன் அதை பாவத்தில் புதைத்துவிட்டானோ அவன் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான்" என்பது திருமறையின் வசனம். "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவனிடம் செல், அவனிடம் நீ திருப்தி கொள், உன்மீது அவன் திருப்தியடைகிறான், நீ நல்லடியார்கள் குழுவில் சேர்ந்து என் சொர்க்கத்திடம் நீ நுழைந்து விடு" என இறைவன் கூறுவான் என்பது திருகுர்ஆனின் மற்றோரிடத்தில் வரும் வசனங்களாகும்.

இவ்வுலக வாழ்வில் சன்மார்க்கத்தின் வழிநின்று இறை நேசத்தால் பரிபக்குவப்படுத்தப்பட்ட
ஆன்மாவைப் பெற்றுவிட்டவர்களின் மரணம் எப்படி சம்பவிக்கும் என்பதை கவி அல்லாமா இக்பால் அவர்கள் ஓரிடத்தில் கூறுகிறார்:

"மூமின் என்பதைப் பற்றிய ஓரு அடையாளம் நான் சொல்லுகிறேன்
மரணம் அண்டி வருங்காலை அவன் உதட்டில் புன்னகைத் தழுவும்."


தூக்கம்போல் சாக்காடு என்பார்களல்லவா? இஸ்லாம் தூக்கத்தையும் ஒருவித மரண நிலை என்றே கருதுகிறது. இரவு துயில் சென்று காலை எழுவதற்கும், மரித்தபின் ஆன்மா விழித்தெழுவதற்கும், உலக வாழ்வில் கண்துயில்வதையும் பிற்றை நாள் உயிர்த்தெழுவதையுமே உவமானமாக சுட்டிக் காட்டுகின்றனர் இஸ்லாமிய ஆன்ம ஞான வல்லுனர்கள்.

நல்வாழ்வு வாழ்ந்து இறைபக்தியின் மூலம் ஆத்மாவைக் கட்டுப்படுத்தி மறுமை வாழ்வுக்குத்
தன்னை பக்குவப்படுத்தி இறைவனின் 'அம்ர்' என்ற ஆன்மா இறைவனின் பக்கமாக மிக மிக
அண்டிவரச் செய்து கொண்டவர்களின் மரணம் இன்பகரமானது, அல்லாதார் மரணம் துன்பமிக்கது.

இந்த தத்துவார்த்தங்களையெல்லாம், ஆன்னமஞான உண்மைகளையெல்லாம் உள்ளடக்கி நிற்கின்றது தக்களை பீர்முஹம்மது சாஹிபு ஒலியுல்லாஹ் அவர்களின் பக்திப் பரவசமிக்க ஆன்ம விசாரணை விருத்தப்பாவொன்று:


"ஆதியொருவனை மறந்துலகில்
அனேகம் பிழைகள் செய்தி றந்தாலங்கண்
நீதிபெறுமுயிர் தனையோ விண்ணோர்
நெறிசேருடலையோ கேட்பார் பின்னே
சோதியருட்படி நரகிலிட்டுச்
சுடும்போபடுந்துயரவனோ நாமோ
ஓதியுணர்ந்தோர்களடியேன் சொன்ன
வுண்மை யறிந்துரை சாற்று வீரே."



ஆதி ஒருவனை மறந்துவிட்டால் பிழைகள் யார்தான் செய்யமாட்டார்கள்? பிழைகள் அனேகம் செய்திருந்தால் மறுமையில் நீதி பெறும் உயிர்தனையோ பின்னர் நெறிசேர் உடலையோ விண்ணோர் கேட்பர். இரண்டையுமே கேட்கக்கூடும். உலக இச்சைகளின்பால் பட்டழிந்து ஆன்மாவைப் பரிபக்குவப் படுத்தாதவரின் உடலுக்கும் இங்கே விமோசனமில்லை. ஆங்கே உயிருக்கும் விமோசனமில்லை. பின் எதற்குத்தான் விமோசனம்? ஓதியுணர்ந்தோர் உண்மையறிய வேண்டும்; விளக்கம் தரவேண்டும் என்று தம்மை 'அடியேன்' நிலையில் வைத்து சூஃபிஞானக் கவிஞர் பீர் முஹம்மது சாஹிபு ஒலியுல்லாஹ் பாடலில் கேட்கும் கேள்வியில் ஒரு அலாதி பாவம் சுடர்விடுகிறது.


நன்றி: ‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது
பாவலர் பதிப்பகம் - சென்னை

Friday, November 13, 2009

ஞானியார் அப்பா(ரஹ்)

அழியா வெற்றி
‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது


‘பணமில்லாதவனுக்கு இவ்வுலகில்லை’ என்று சொல்லுகிறார்கள். பணத்தை ஒருவன் சம்பாதித்துவிடுகிறான். பெருஞ்செல்வத்தைத் திரட்டிக் குவித்து விடுகிறான். வீடு, மனை, நிலபுலன்கள், இன்னும் பரந்த சொத்துக்களுக்கு அதிபனாகி குபேர சம்பத்துப் படைததவனாகவும் ஆகிவிடுகிறான். தன் மனைவி மக்களுக்கு மட்டுமல்ல, தன் பிள்ளைகள், தன் பிள்ளைகளின் பிள்ளைகள் அனைவருக்கும், ஜன்ம ஜன்மத்திற்குச் சுகபோகத்தில் சுகித்திருக்கும் அளவுக்கு தனபாக்கியத்தை விட்டுச் செல்கிறான். அத்தகைய ஒருவனை வெற்றிகரமாக வாழ்ந்தவன், உலக வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் என்று மக்கள் கருதுகின்றனர்.

ஆயினும் நம்மிடையே வேறு சிலர் இருக்கின்றனர், இவர்கள் செல்வத்தால் வரும் வெற்றியை வெற்றி என்று கருதுவதில்லை. இவ்வுலக இன்பங்களில் திளைத்து உண்டு, உடுத்தி, உறங்கி பின்னொரு நாள் மறைந்து போகும் எந்த மனிதனும் வாழ்வில் வெற்றி கண்டவனல்லன் என்பது இவர்கள் கருத்து. இந்த பிரபஞ்சமே மாயை, இந்த மாயையில் சிக்குண்டு மண்ணில் வாழ்ந்து மடிந்து விடுபவர் பிறவிப் பயன் எய்தாதவராகி விடுகின்றனர். ஆகவே வாழ்வில் உண்மை வெற்றி காண விழைகிறவர் ஆசாபாசங்களைத் துறந்து, மண்ணுலக வாழ்க்கையை மறந்து மனிதப் பிறப்பெடுத்த பெரும்பயனை அனுபவிக்க , ஜன்ம சாபல்யம் பெற, யோகத்தில் ஆழ்ந்து விடவேண்டும்; நிஷ்டையில் இருந்துவிட வேண்டும்; வாழ்வின் பிறப்பினின்று விடுபட்டு, உலக பந்தங்களை அறுத்தொதுக்கி எங்கோ காட்டிலோ, மலையிலோ, குகையிலோ தவமிருந்து “நான்” எனும் அகந்தையை மாய்த்து இந்த கட்டையைத் தேயவிட்டுத் தேயவிட்டு முக்தி பெறவேண்டும். பரமாத்மா ஜீவாத்மாவோடு ஐக்கியமுற வேண்டும். இந்த ஐக்கியம் கைவரப் பெற்றவனே வாழ்வில் உண்மையான வெற்றி பெற்றவனாவான் என்று கருதுகின்றனர் பக்தரும், முக்தரும், சித்தரும், போதருமாகி, ஐம்புலன் அவித்து யோகத்திலும் ஞானத்திலும், சித்தாந்த, வேதாந்த வைராக்கிய, ஆன்மீகத் தத்துவார்த்த விசாரணையிலும் மூழ்கித் திளைக்கும் இந்த சிலவித்தகர்.

வாழ்வைத் துறந்து விடுவதையும், ஐம்புலன்களையும் அவித்துவிட்டு, சந்நியாசத்தை மேற்கொள்வதையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. பதி, பசு, பாசத் தத்துவத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சூஃபி ஞானிகளின் கோட்பாடுகளைக்கூட இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களுக்கு எதிரானவை என்று வைதீக இஸ்லாமிய ஞானிகள் எதிர்த்த சரித்திரம் உலகறிந்தது. ஹல்லாஜ் ரஹ்மத்துல்லாஹி காலம் தொடங்கி ஜலாலுதீன் ரூமி, இமாம் கஜ்ஜாலி, முஹைதீன் இபுனு அரபி அவர்கள் காலம் வரையுள்ள சூஃபி ஞான மேதைகளின் ஆன்மீகத் தத்துவங்கள் எவ்வாறு இறுதியில் இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கைக்கும் இதர இஸ்லாமிய புனித கருத்துக்களுக்கும் இயைந்தவாறு அமைந்துகொண்டன என்பதை விளக்குவதாகவே அமைந்துள்ளன.

இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளின்படி ஜீவாத்மா பரமாத்வாவோடு ஐக்கியப்படுவதென்பது இயலாத காரியம். ஏக இறைவன் வேறு, தனி மனிதனின் ஆன்மா வேறு, ஒன்றேதான் தெய்வம். அந்த ஒன்றோடு இன்னொன்று கலத்தல் என்பது என்றுமே சாத்தியமில்லை. ஒன்றோடு ஒன்று இயைந்து இரண்டாக முடியாது. ஏக தெய்வத்தைப் பொருத்தமட்டில் ஒன்றை இரண்டாகவோ அல்லது ஒன்றையும் இரண்டையும் சேர்த்து மூன்றாக்கி ஏக தெய்வத்திற்குப் பங்கம் விளைக்கும் பல தெய்வ தத்துவத்திற்கோ இஸ்லாம் இடம் கொடுக்க மறுத்தே வந்திருக்கிறது.

இஸ்லாமிய அடிப்படையைப் பொறுத்த வரையில் இறைஞான காரியங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் இவ்வுலக மனிதனுக்கு ஆன்மீகக் காட்சி வேண்டுமாயின் ஒருகால் சித்திக்கலாம். ஆனால் தனி மனிதனின் ஆன்மா இறைவனோடு கலந்து விடுவதென்பது மட்டும் ஒருபோதும் முடியாத காரியம்.

இந்த பின்னணியில் பார்க்கும்போதுதான் உலக வாழ்வில் உண்மையில் வெற்றி எனப்படுவது எது என்ற கேள்வி கூர்மையும் முனைப்பும் பெறுகிறது. மனிதராகிய நம் வாழ்வில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொன்றையும் உண்மையான வெற்றி எனக் கருதிகிறோமே, அவை ஒவ்வொன்றும் உண்மையில் வெற்றி எனக் கொள்ளத்தக்கவைதாமா?

எது வெற்றி? திரண்ட செல்வத்திற்கு அதிபதியாகி இவ்வுலக வாழ்வை இன்ப லாகிரியாக்கி, தன் மனைவி மக்கள், சுற்றம் கிளையனைத்தும் சுகமாக வாழ வழி செய்துவிட்டுச் செல்கிறானே அவன் வெற்றி வெற்றியா? வறுமையில் சிக்கிச் சுழன்று வாழ்வதாக நினைத்து தினமும் செத்து செத்துக் கொண்டிருக்கிறானே அவனும் அவனைச் சார்ந்தோரும் வாழும் வாழ்வு வெற்றியின் அடைப்படையில் அமைந்ததா? உலகம் பொய், வாழ்வு மாயை என நினைத்து தெய்வத்தோடு கலந்துவிட துறவறம் பூண்டு கடுந்தவம் செய்கிறார்களே அவர்கள் வாழ்வு வெற்றி தர வல்லதா?

இஸ்லாமிய ஏகத்துவ வழிபாட்டின் அடிப்படையிலும் இஸ்லாமியக் கோட்பாடுகளின் படியும் பார்த்தால் மேற்கூறிய எவையும் உண்மையில் வெற்றிகள் ஆகமாட்டா.

தனக்காக, தன் குடும்பத்தினருக்காக, தன் ஊரார், நாட்டாருக்காக, தன்னலத்தையே அகத் தளத்திற்கு கொண்டு செயலாற்றும் எந்த தனி மனிதனின் சாதனையையும் இஸ்லாம் வெற்றி என ஏற்றுக் கொள்ளாது. இஸ்லாத்தின் கோட்பாடுகளின்படி நோக்கின் தனிப்பட்டவனின் வெற்றி இறைவனுக்கு உகந்ததாக அமைய வேண்டும். உலகம் முழுவதற்குமே ஏற்றதாக இருக்கவேண்டும். அல்லாஹ்வின் குறிக்கோளை நிறைவேற்றி அவனின் மகிமைகளை விளக்குவதாக மிளிர வேண்டும். மனிதன்பால் இறைவன் வைத்திருக்கும் அருள் நோக்கை அர்த்தமுள்ளதாக்கி தனி மனிதனுக்கு இறவா வாழ்வளிக்கத்தக்க தன்மைத் தானதாக வெற்றி விளங்க வேண்டும் எனக் கொள்ளலாம்.

நினைத்ததை நினைத்த வண்ணம் செய்து முடித்துவிட்டு அதை நாம் முனைந்து பெற்ற வெற்றியென்றும் மற்றதெல்லாம் தோல்வி என்றும் கருதுவது போன்ற தவறு உலகில் வேறு எதுவும் இருக்கமுடியாது. வஞ்சனைக்கு வித்தூன்றி வரும் விளைவை வெற்றியெனக் கொள்வது நமது புத்தியின்மையையே காட்டும். மண் நாடி, பொன் நாடி, புலன் நாடும் பெண்நாடி பெறும் சுகத்தை வெற்றியென்று சொல்ல இயலுமா? சிந்தித்துப் பார்ப்போமாயின் வெற்றியின் தன்மை நமது சிந்தையில் எழும் எண்ணத்தின் தன்மையைப் பொறுத்தது. எண்ணம் சிறந்ததாக, உயர்ந்ததாக, இறைவனுக்கு உகந்ததாக இல்லாத வரையில் அவ்வெண்ணத்தின் விளைவை வெற்றி என்று கொள்ள இயலாது. எண்ணத்தில் ஈசன் ஒளி இல்லையெனில் வெற்றி இல்லை, எண்ணத்தில் நேர்மை இன்றேல் என்றைக்கும் எதிலுமே வெற்றியில்லை. எண்ணம் ஒரு பரம்பொருளாய், இதயம் ஒரு விண்ணகமாய் மாறாத வரையில் இந்த உலகில் எதிலும் வெற்றியில்லை. ஆகவே எண்ணத்தில் ஈசன் ஒளி ஏறிவிடில் தோல்வி இல்லை வெற்றிக்கு. தோல்வி இல்லாத வெற்றி சாகாத வெற்றி இந்தத் தரணியில் வேண்டும் எனில் நம் ஒவ்வொருவரும் பரம்பொருளின் தன்மைபெறப் பாடுபட வேண்டும். பரம்பொருளின் தன்மை பெற ஓயாமல் பாடும்படும் பொழுது நம்மை அறியாமலே நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தெய்வ குணங்கள் குடிபுகுந்து விடுகின்றன. தெய்வகுணம் குடிபுகுந்த இதயத்திலிருந்தெழும் எண்ணங்கள் நம்மை அழியாத வெற்றிக்கு இழுத்துச் செல்லுகின்றன.

இஸ்லாமிய ஏகத்துவத்தின்படி என்னதான் மனிதன் பாடுபட்டாலும், தவங்கிடந்தாலும் அவன் இறையோடு கலக்க முடியாது; ஐக்கியமாகிவிட முடியாது. ஆனால் அளவற்ற அருளாளனின் அடியார்களாக, சேவகர்களாக, அடிமைகளாக அந்த ஒப்பற்ற இறைவனின் அருள் வழியில் செயலாற்றுவதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து, தொல்லையும் குழப்பமும் நிறைந்த உலகில் சாந்தியையும் ஒழுங்கமைதியையும் நிலை நாட்டி, மன்பதை உய்ய வழிவகுப்போமானால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக படிப் படியாக நம்மை ஆண்டவன் பக்கம் உயர்த்திக் கொண்டவர்களாகிறோம்.

மனிதன் தனிப்பட்டவன்; தனித்தவன். ஆண்டவனும் தனித்தவனே, அவன் ஏகன், தன்னந்தனியன். ஆனால் தனித்தியங்குவோருள் எல்லாம் முற்ற முற்ற முழுமை பெற்ற பூரணன் என இமாம் அஹமது இப்னு ஹன்பல் அவர்களின் வியாக்கியானம் சொல்லுகிறது. மனிதன் தனியன், தனித்தியங்குபவன் எனினும் முழுமை பெற்றவனல்லன். பூரணமாகத் தனித்தியங்கும் வழி வகையறியாது தயங்கித் தயங்கித் திகைத்திருப்பவன். இந்த பூரணத்துவத்தை நோக்கிச் செயலாற்றுவதே அவனது இலட்சியமாக இருக்க வேண்டும். இதுவே இயற்கையின் நியதியும் உயிர்வாழ்க்கையின் தாத்பரியமுமாக இருக்கிறது. எந்த அளவிற்கு அவன் தன் எண்ணத்தால், சொல்லால், செயலால், முயன்று முயன்று முன்னேற வேண்டும் என்ற வெறியால் முழுமை பெறும் இலட்சியத்தின் பக்கமாக முனைகிறானோ அந்த அளவிற்கு ஆண்டவன் பக்கமாக அண்டி அண்டி வருகிறான். எந்த அளவிற்கு அவன் இந்த இலட்சியத்தினின்றும் பிறழ்ந்து பின்னோக்கிச் செல்லுகிறானோ அந்த அளவிற்கு அவன் ஆண்டவனை விட்டும் வெகு தூரத்திற்கு அப்பால் சென்றுவிடுகிறான். ஆண்டவனுக்கு அவனுக்கு இடைவெளி, தூரம், அதிகரிக்க அதிகரிக்க அவன் கீழ்படியின் கீழ்ப்படியினருகே நிற்கும் தாழ்ந்த மனிதனாகி, பஞ்சை மனிதப் பதராகி, தரத்தில் குறைந்து மிகச் சாதாரண வெறும் மனிதனாகி விடுகிறான். அத்தககயவனால் சாகா வரம் பெற முடியாது, அழியா வெற்றியை அடையவும் முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள இடைவெளி குறுகியும் அற்றும் வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மேற்படியின் மேற்படியை நோக்கி உயர்கிறான்; முழுமையின் பக்கமாக வருகிறான். ஆண்டவனின் அண்மையிலும் அண்மை வந்துவிடப் பார்க்கிறான். காலத்தை வென்று சாகா வரம் பெற்று அழியா வெற்றியையும் பெற்றுவிடுகிறான்.

‘தெய்வ குணங்களையும் பண்புகளையும் உன்னுள் நீ சிருஷ்டித்துக்கொள், உண்டு பண்ணிக்கொள்’ என்னும் தத்துவம் தொனிக்க நம் நபிகள் கோமானும், “தகல்லஹு ஃபீ அக்லாக்கல்லாஹ்” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். இப்படி பரம் பொருளின் தன்மைபெற பாடுபட்டு, பாடுபட்டு நம்மை நாம் தெய்வத்தின் பக்கமாக உயர்த்திக் கொள்ளும்போது நாம் அந்த ஏகத் தனி இறைவனோடு கலந்துவிட முடியாது. ஆனால் இறையோனின் தன்மைகளை, பண்புகளை, கல்யாண குணங்களை, அம்சங்களை ஓரளவாவது நம்முள் வருவித்துக் கொள்ளவும் கிரகித்துக் கொள்ளவும் இயலும். அவற்றுள் தோய்ந்து நாம் சுகிர்தமடையவும் கூடும்.

இவ்வித கடவுள் தன்மை பெற பாடுபடுவது நமது சுயநலத்திற்காக அல்ல என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இயற்கையையும் அதன் சக்திகளையும் வென்று, பஞ்ச பூதங்களையும் வெற்றிகொண்டு, மனித குலத்தின் சுபிட்சத்திற்கு வழிகோலுவதன் மூலம் இறைவனுக்குப் பணியாற்றுவதைவிட சிறந்த சேவை இருக்க முடியாதல்லவா? பஞ்ச பூதங்களின் சேர்க்கை என்ன? ஜடப்பொருள்களின் உள்ளுறைந்திருக்கும் இரகசியங்கள், அற்புதங்கள் யாவை? இவைபற்றி முழுவதும் அறியாது நாம் திகைத்திருந்தோம். இன்னும் திகைத்து நின்றோம். அணுவைத் துளைத்தோம், தகர்த்துத் தகர்த்துப் பிரித்தோம், பிளந்தெறிந்தோம். இதை மானிடத்தின் வெற்றி என்றும் கண்டோம்; கொண்டோம். இருப்பினும் காற்று, நீர், நெருப்பு, மண், வெளி ஆகியவற்றுள் மறைந்திருக்கும் சிருஷ்டியின் இரகசியங்கள் அனைத்தையும் நாம் அறிந்துவிட்டோம் என்றில்லை. அறியாத வரையில் அச்சக்திகள் அனைத்தும் மன்பதையின் முன்னேற்றத்திற்கும் உய்வுக்கும் முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன. மனிதகுலம் இத்தடைகளைத் தகர்த்தெறிய இயற்கையின் கட்டுகளை அறுத்தொதுக்கி வெற்றி கொள்ள செயல்கள் செய்வின் அச்செயல் இறைவனின் மாண்பினையே காட்டும் அல்லவா? மனிதன் நெருப்பை இரவின் இருளுக்கு ஒளியேற்றும் விளக்காக மாற்றினான். நஞ்சை நோய் தீர்க்கும் அருமருந்தாக மாற்றுவித்தான். வெறுங் கல்லினுள் சுடர் திணித்து மணியாக்கினான், களிமண்ணை அடித்தெடுத்துக் குடமாக்கினான். சிருஷ்டித்தான். தான் எனும் அகந்தையை வளர்த்து, பஞ்ச பூதங்களையும் வெல்லும் முயற்சியில் ஆண்டவனின் மாட்சியையும் அருள் ஞானத்தையும் பறைசாற்றினான். இன்றோ பூமியின் இழுப்புச் சக்தியையே தாண்டிப்போய் இங்கிருந்து நாம் சந்திரனையும் உடுக்களையும் பார்ப்பதுபோல் வானவெளியில் நின்று பூமியையே பார்க்கும் பாக்கியம் அவனுக்கு சித்தித்திருக்கிறது. நாமும் சிருஷ்டிக்கிறோம் இறைவனால் ஏவப்பட்டு, அவனின் சேவகர்களாக, அடிமைகளாக சிருஷ்டிக்கிறோம். “சிருஷ்டி கர்த்தாக்களுள் எல்லாம் மிகச் சிறந்த சிருஷ்டிகர்த்தா மாட்சி மிக்க ஆண்டவனே” என்னும் பொருள் தரும் திருமறையின் வசனம் நம்மை செயலாற்றத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. அச்செயலினால் நாம் வெற்றி பெறுகிறோம். இறைமாண்பின் அடிப்படையில் தோன்றும் இவ்வெற்றி அழியா வெற்றி. இந்த வெற்றிக்காக நாம் ‘நான்’ என்ற நம்முள் அடங்கிக் கிடக்கும் சக்திகள வெளிக் கொணருகிறோம். நாம் உணர்வையும் அறிவையும் வளர்க்கிறோம். நம் உணர்ச்சிகள் வலுவடைகின்றன. நம் அறிவு கூர்மைப் பெறுகிறது. அசாதாரண அறிவும் அபரிமிதமான ஆற்றலும் பெற்று நாம் அதியுன்னத அமானுஷ்யமான மனிதர்களாக ஆகிவிடுகிறோம். காலத்தையே வென்று சாகா வரமும் பெற்றுவிடுகிறோம். இத்தகைய பண்புகள் பெற்றவர்களாக மனிதகுலத்தின் ஒவ்வொருவரும் மாறிவிடும் பொழுது இலட்சிய உலகமே தோன்றிவிடுகிறது. இறைவனின் இலட்சியமும் வெற்றிபெறுகிறது. இறைவனுக்கு உகந்த இந்த வெற்றிச் சாதனைக்காய்த் தன்னையே அடக்கி ஆண்டும், கட்டுப்படுத்தியும், தன்னுள்ளே உறைந்தும் மறைந்தும் இருக்கும் சக்திகளை வெளிக் கொணர்ந்தும் அதியுன்னத மானிடனாக மாறி வையத்தை உய்விப்பவன், என்றும் மாளாத முழுமை பெற்றவன். அத்தகையவனை இறைவனின் பிரதிநிதி என்றும் ‘கலீபா’ என்றும் கொள்ளலாம் அல்லவா?

இயற்கையின் சக்திகளை ஆட்கொண்டு ஆண்டவனின் அடியானாக இருந்து அவனின் பேரருள் கொடையை நிதர்சனமாக்கிக் காட்டவல்ல செயற்கரிய காரியங்கள் செய்து அதியுன்னத மனிதனாகி இறவா வரம் தரும் அழியாத வெற்றிக்காக தவம் கிடக்கிறார் முஸ்லிம் ஞானி ஒருவர். இவ்வுலக வாழ்க்கை எனும் சிறையில் சிக்கி இலட்சியத்தையும் குறிக்கோளையும் மறந்து கேவலம் பஞ்சை மனிதனாக உழன்று இவ்வுலக வாழ்வில் தன்னை இழந்து விடுகிறவர்களை இந்த ஞானியார் வெறுக்கிறார். அழியாத வெற்றி பெறுகிறவன் தன்னைத் தான் இழந்து விடமாட்டான். ஆனால் இந்த உலகம் தன்னை அவனில் இழந்து விடும் என்று கூறுகிறவர் இந்த ஞானியார். தன் உள்ளத்திலும் உடலிலும் தன்னுள் எங்கும் அந்த ஒப்பற்ற ரஹ்மானின் அருள் நிறைந்து ததும்ப வேண்டும்; அவனின் அருள் ஞான போதத்தால் ஆண்டவவனின் அடியானாகிய தான் அழியாத வெற்றி பெற வேண்டும் என்று தவிக்கிறார் இவர். நிலையாத காயத்திற்கு ரஹ்மான் துணை கொண்டு நித்தியத்துவம் அளித்து காலத்தையும் வென்று “பகுமானம்” மிக்க புத்தி நுட்பம் பெற்று அழியாத வெற்றிபெற இந்தக் கோட்டாற்று ஞானியார் சாஹிப் அவர்கள் அருளாளனிடம் எப்படி வரம் கேட்கிறார் பாருங்கள்:

‘ரஹுமானே யென்னுள் மணியா யுருண்டு
நினைவாகி யெங்கும் நிறைவாய்
நிலையாத காய மதிலே நிறைந்து
நிலைகொண்டு நின்ற பொருளே
பகுமான மென்ற திகழாத புந்தி
பலபேத மாயுன் னடியேன்
பரஞான ஜோதி யருளான வின்பம்
பரவாத பாவி யானுஞ்
செகமீதி லிந்த முறையா விருந்து
திருடான பாவ வலையுள்
தினமூழ்கி வந்து மதினூ டுழைந்து
சிறைபட் டிருந்த வடியேன்
அகமீதி லுன்றன் அருள்ஞான போதம்
அடியார்க்கு ளீந்து னருளால்
அழியாத வெற்றி தரவேணு மென்னுள்
அருள்வா யெழுந் தருள்வாய்’


கன்னியா குமரி மாவட்டத்தில் இன்றைக்கு 280 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் ஹஜ்ரத் ஷெய்கு ஞானியார் சாஹிப் ஒலியுல்லாஹ் அவர்கள். மன்சூர் ஹல்லாஜு ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை ஞானகுருவாகக் கொண்டு அருள் ஞானம் பெற்றவர்கள். தன் ஞான குருவிடத்திருந்து கிடைத்த அகக் காட்சியின் விளைவாக எழுந்த நூற்றுக் கணக்கான பக்தி ரசப் பாடல்களை தமிழில் தந்தவர்கள். இப்பாடல்கள் ‘திருமெஞ்ஞான திருப்பாடல் திரட்’டாக வெளியிடப்பட்டு இறைஞான நூலாகத் திகழ்கின்றது.

இந்த சூஃபி ஞான வள்ளலார் மாபெரும் முஸ்லிம் முனிவராக விளங்கி பல அற்புதங்களை நிகழ்த்தி தம் காலத்து முஸ்லிம்களாலும் அல்லாதாராலும் ஞானியார் சாஹிப் எனப் போற்றப்பட்டு வாழ்ந்தவர்கள். மாபெரும் ஷெய்காகவும் இறைநேசராகவும் விளங்கி தமிழ் நாட்டில் தீன் பயிர் வளர்த்தவர்களில் ஒருவராவார். இவர்களின் மக்பரா கோட்டாற்றில் உள்ளது. இவர் வம்சத்தினர் ஞானியார் குடும்பத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். காலஞ்சென்ற மகாமதி, சதாவதானி ஷெய்கு தம்பி பாவலர் அவர்கள் ஞானியார் அப்பா வழிதோன்றலே.

இவர்களது பக்தி ஞானப் பாடல்கள் அனைத்தையும் படித்துணர்ந்து பொருள் தெரிந்து கொண்டவர்களாக சொல்லத்தக்க முஸ்லிம்கள் இன்று எத்தனைபேர் இருக்கிறார்கள் ?

நன்றி: ‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது
பாவலர் பதிப்பகம் - சென்னை