Monday, August 8, 2011

கலப்படமும் கஞ்சத்தனமும்

இரண்டு தினங்களுக்குமுன் ஆபிதீன் பக்கத்தில் ஜஃபருல்லாஹ் நானாவின் 'எல்லாமே' என்ற தலைப்பில் வந்த கவிதை கலப்படத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள். 'கலப்படம் உணவில் மட்டும் அல்ல, தொழுபவர்கள் வட்டி வாங்கினால், அதுவும் கலப்படம்தான்'

அதை படித்ததிலிருந்து என் சிந்தனை சுழன்றுகொண்டே இருந்தது. தொழுகையில் கலப்படம் மட்டுமா செய்கிறார்கள் அபகரிப்புமல்லவா செய்கிறார்கள். "அனாதைகளின் பொருள்களை எடுத்துக்காதீங்கப்பா, அவங்கள்ட சொத்தைப் பாதுகாத்து உரிய சமயத்தில் அளவில்
குறைவில்லாமல் கொடுத்துடங்க" ன்னு கால்நடைகள்(அல் அன்ஆம்) அத்தியாயத்தில் 152 வது வசனத்தில் சொல்கிறான்.

அனாதைகள்னா யாரு? தாய் தகப்பன் இல்லாதவங்க; அதரவு இல்லாதவங்க. அவங்களுக்கு ஞாயமா நடந்துக்குங்கன்னு நமக்கு சொல்றான். அப்பொ அல்லா யாரு? அவனும் அனாதிதானே! 'ஆதியும் அந்தியும் இல்லாத அனாதியானவன்' என்று சூஃபியாக்கள் சொல்றாங்களே! அப்படி இருக்கும்போது அவனுக்குள்ள தொழுகையிட அளவை குறைக்கலாமா? இது அனாதி சொத்தை அபகரிக்கற மாதிரியல்லவா?

பர்ளு தொழுகை பதினேழு ரக் அத்தை பிரிச்சுப் பிரிச்சு பெருமானார் கொடுத்துட்டாஹ, அதுலெ கையெ வைக்கமுடியலெ நம்மாலெ. ஆனால் ஷியாக்கள் கையெ வச்சுட்டாங்க. அதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை விட்டுத்தள்ளுங்க. ஆனா திராவிஹ்? ரமலானில் நோன்பிருந்து கொஞ்சம் அதிகப்படியா இறைவணக்கம் செய்தா ஈமான் பலப்படும், அந்த மனப்பான்மை அடுத்த ரமலான் வரை தொடரணும் என்பதற்காக திராவிஹைவைக் கொண்டுவந்தாஹ, மூணு நாள் தொழுதாஹ கூட்டம் அளவுக்கு மீறி வருவதைப் பார்த்து, தொடர்ந்து தொழுவித்தால் இது கடமயாகிவிடும் என்ற அச்சத்தால் பள்ளிவாசலுக்கு வராமல் தொழுதுகொள்ளுங்கள் என்று சஹாபாக்களிடம் சொல்லிவிட்டு வீட்டில் தொழுது கொண்டார்கள். ஆனால் எத்தனை ரக்அத் தொழுவித்தார்கள் என்ற ஹதீஸ் கிடையாது. நானும் தேடிப்பார்த்தேன் கெடைக்கலை.

திராவிஹ்வைப் பத்தி புகாரி ஷரீஃபில் பதிமூனு ஹதீஸ் இருக்கு அதே பதிமூனு முஸ்லிம் ஷரீஃபில் இருக்கு. அந்த பதிமூணுலெ ஒரு ஹதீஸ் மட்டும் தெளிவானதா இருக்கு. அதாவது அபு சலாமா இப்னு அப்துற்ரஹ்மான் என்கிற ஒரு நபி தோழர் அன்னை ஆயிஷ (ரலி) அவர்களிடம் 'கைஃப கான சலாத்துன் நபியி ஃபில் ரமலான' - ரமலானில் நபியுடைய தொழுகை எப்படி இருந்தது? என்று கேட்கிறார்கள். அன்னை ஆயிஷா (ரலி) பதில் அளிக்கிறார்கள்: 'லா ஃபில் ரமலான வஅலா ஃபில் கைரிஹி' - ரமலானில் மட்டுமல்ல மற்ற மாதங்களிலும் சரி அவர்கள் நான்கு ரக்அத் தொழுவார்கள்; அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதீர்! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதீர்! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று.

'லா ஃபில் ரமலான வஅலா ஃபில் கைரிஹி' என்ற ஒரே ஒரு வார்த்தையிலிருந்து நல்லா தெரியிது பெருமானார் அவர்கள் தொழுதது திராவிஹ் அல்ல தஹஜ்ஜத்(நடுநிசி தொழுகை) என்று. திராவிஹ் ரமலானில் மட்டும்தான், மற்ற மாதங்களில் கிடையாது. ஆனால் நம்ம ஆளுங்க எல்லாத்தையும் விட்டுட்டாங்க எட்டை மட்டும் எடுத்துக்கிட்டு திராவிஹ் 'எட்டு' தான் என்று அடம் பிடிக்கிறாங்க. வஹாபிஸம் உருவான நாட்டிலேயே இருபது ரக்அத் தொழுறாங்க, இந்த வஹாபி குஞ்சுகள் எட்டைவிட்டு எகிற மாட்டேன்கிறது. பெருமானார் அவர்கள் தொழுதது நாலு நாலா, இவங்க ரெண்டு ரெண்டா, அதுலேயும் கொழப்பம்.

சஹாபா பெருமக்களிடையே சரியா ஆதாரம் கிடைக்காததால் பள்ளிவாசல்லெ குழு குழுவா தொழுதுகிட்டு இருந்தாங்க. ஹஜ்ரத ஒமர் கத்தாப்(ரலி) அவர்கள்தான் அதை மாற்றி இருபது ரக்அத்து தொழுகையாக அமைத்தார்கள். அதை நாம் ஏற்று கொள்ளக்கூடாதா? பயான்
பண்ணும்போது உமர்(ரலி) அவர்களை முன்னுதாரணம் வைத்து பேசுகிறோம், தொழுகையில் அவர்கள் வழிமுறையை எடுத்துக்கொண்டால் என்ன? அல்லது புனிதமிகு ரமலான் மாதத்தில் அதிகமாகத் தொழுதால் என்ன குறைவு வரும்? இதில் ஏன் கஞ்சத்தனம்? குதிரைக்கு பட்டைக்
கட்டியதுபோல் இருக்காமல் ஹதீஸை சற்று அலசிப்பாருங்கள். 'சிந்தியுங்கள், சிந்தியுங்கள்' என்று அல்லாஹ் குர்ஆனில் அனேக இடத்தில் சொல்கிறான். சிந்தித்துப்பாருங்கள்...

No comments: