Saturday, July 30, 2011

ஜக்காத் எப்போது கொடுப்பது?

என் கண்ணோட்டத்தில் ஜக்காத்.

நோன்பு வருகிறது, ஜக்காத்தை எதிர்பார்த்து எத்தனை எத்தனை ஏழைகள் ஏக்கத்துடன் காத்திருப்பர், கொடுக்கும் கொடைவள்ளல்களும் எதிர்பார்ப்புடன் இருப்பர். கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் உள்ள இணைப்பை இந்த புனித ரமலான் ஏற்படுத்துகிறது. வேறு வார்த்தையில் சொன்னால் நோன்புடன் ஜக்காத்தை இணைத்துவிட்டோம். இது சரியா? இறைவன் என்ன சொல்கிறான்? என் அலசல். இது ஜூன் 25ல் ஆபிதீன் பக்கத்தில் வெளியானது, இப்போது பொருந்தும் என மீள் பதிவு செய்கிறேன். தவறு இருப்பின் சுட்டவும்.

த.மு.மு.க வுடைய அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ‘மக்கள் உரிமை’ பத்திரிக்கையில் வந்த கட்டுரை ஒன்றை எனது நண்பர் சிலாகித்து சொன்னார். அவர் த.மு.மு.க-வில் முக்கிய பொறுப்பு வகிப்பவர். அவர் சொன்ன அந்த கட்டுரை ‘தர்மம்’ பற்றியது, படித்துப் பார்த்தேன் அது கட்டுரை அல்ல. மாறாக பெருமானார் சொன்ன ஹதீஸ்களால் நிரப்பப்பட்ட ஒரு சிறிய தொகுப்பு.

இஸ்லாமியப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் அது தினசரியாக இருந்தாலும் சரி மாதப் பத்திரிக்கையாக இருந்தாலும் சரி சொல்ல வேண்டிய செய்தியை சொல்லாமல் அதை சார்ந்த ஹதீஸ்களையும் குர்ஆன் ஆயத்துக்களையும் எழுதி பக்கத்தை நிரப்பி வைக்கிறார்கள். இவை மக்களை சென்றடையும்போது வெறும் ஆயத்துக்களும் ஹதீஸ்களுமாக இருக்கின்றனவே ஒழிய அவற்றால் உண்டாகும் விளக்கம், பெறும் பயன், சமூக சீர்திருத்தம் இவைகள் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு விடுகிறார்கள். இதை செய்தால் நன்மை உண்டு, அல்லா சந்தோசப்படுவான், சொர்க்கம் கிடைக்கும். அதை செய்தால் தீமை, அதனால் அல்லாவின் சாபத்துக்கு ஆளாக நேரிடும், நாளை மறுமையில் நரகம், வேதனை என்று பயமுறுத்தல்கள் காணப்படுகின்றன. நாளை வரப்போவதைப் பற்றிய சிந்தனைச் செய்திகள் காணப்படுகிறதே தவிர இன்று ஆகவேண்டிய நடைமுறை இல்லை. நாளை மலரும் நல்லவைகளுக்கும் தீயவைகளுக்கும் இன்றைய எண்ணம், செயல்தான் காரணம் என்ற உண்மையை உணருவதில்லை.

பத்திரிக்கையில் வந்த கட்டுரையுடன் அல்லாஹ், ரசூல் தர்மத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பதை பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இது முழுமையானதல்ல, ஒரு சிறு நோட்டம். என்றாலும் பத்திரிக்கையைக் கொடுத்து இக்கட்டுரை எழுதப் பணிந்த அதிரை நண்பர் அஷ்ரஃப் அண்ணாவியாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

***

தர்மம் / ஜக்காத்

தர்மத்தின் முக்கிய நோக்கமே பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைப்பதே, ஏழைக்கும் செல்வந்தனுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கக் கூடாது; ஒரு கூட்டம் சுகபோகமாக வாழவும் வேறொரு கூட்டம் அடுத்தவேளை சோற்றுக்கு ஏங்கவும் கூடாது, குறைந்த பட்சம் யாசிக்காது வாழவேண்டும் என்பதே அதன் அடிப்படை சித்தாந்தம். இதை கருத்தில் கொண்டுதான் எல்லா மதங்களும், மதங்களற்ற சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்துகின்றன.

இந்த வகையில் இஸ்லாம் மற்ற எல்லாவற்றையும்விட சற்று மாறுபட்டு நிற்கிறது. தர்மம் என்றால் என்ன? அது எப்படி இருக்கவேண்டும்? யார் யாருக்கு கடமை ஆகிறது? எப்போது கொடுக்கவேண்டும்? எப்படி கொடுக்கவேண்டும்? இப்படி பல கோணங்களில் வரையறுத்து வைத்திருக்கிறது. இந்த வரையறை கொடுப்பவருக்கும் கொடுக்கப்படுபவருக்கும் பாதுகாப்பாகவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி: 08 இதழ்: 05 ஜூன் 17 to 23 இதழில் மூன்றாம் பக்கத்தில் ‘இறைமொழியும் தூதர் வழியும்’ என்ற பகுதியில் ‘தர்மம்’ என்ற தலைப்பில் புகாரி ஷரீஃபிலிருந்து எடுக்கப்பட்ட ஆறு ஹதீஸ்கள் இருக்கின்றன. “பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.” என தர்மத்தை வலியுறுத்தும் ஹதீஸும் அதை சார்ந்த மற்ற ஹதீஸ்களே இருக்கின்றன. ஒரு ஹதீஸுக்குக்கூட விளக்கம் இல்லை. இப்போதெல்லாம் தினசரி நாள்காட்டி தாள்களில் இறை வசனங்களும், நபி மொழிகளும் இருக்கின்றன. அரசியல், சமூக நிலை, மசோதா, இட ஒதுக்கீடு, கமிஷன் ரிப்போர்ட் என பல துறைகளை அலசுகிற அளவுக்கு பத்திரிக்கைகள் குர்ஆனையும். ஹதீஸையும் விளக்குவதில்லை.

இறைவன் ஜக்காத்தைப் பற்றி சொல்லும்போது தொழுகையோடு சேர்த்தே சொல்லுகிறான். “வ அக்கீமுஸ்ஸலாத்த வ ஆத்துஜக்காத்த…” அப்படி என்றால் எந்த அளவுக்கு தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து தினம் கடமையாக்கப்பட்டிருக்கிறதோ அதே போல் ஜக்காத்தும் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆனால் நாம் என்ன செய்கிறோம்..? ரமலான் மாதம் வந்துவிட்டால் ஜக்காத் கொடுக்கிறோம். அதாவது ஜக்காத்தை நோன்புடன் இணைத்துவிட்டோம்.

அது ஷிர்க் இது குஃப்ரு, அல்லா ரசூல் சொல்லாததை செய்து இணை வைக்கிறார்கள் என்று கத்தும் மாட(ல்)ர்ன் ஆலிம்கள்கூட இதை பற்றி சிந்திப்பதில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும் ஹதீஸை அடிப்படையாக வைத்து 40 க்கு 1 என்ற அடிப்படையில் நூத்துக்கு இரண்டரை ஜக்காத்தாக கொடுக்கவேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள்.

இது கணக்குபடி சரிதான், ஆனால் நூத்துக்கு இரண்டரை என்ற அடிப்படையில் பார்த்தால் 99 ரூபாய் வரை ஜக்காத் கடமை ஆகாது. நூறு ரூபாய் வந்தால்தான் ஜக்காத் கடமை ஆகிறது. இது முற்றிலும் தவறு. நாற்பதுக்கு ஒன்று என்ற அடிப்படையில் பார்த்தால் 39 ரூபாய் வரை ஜக்காத் கடமை ஆகாது. எப்போது நாற்பது ரூபாய் வந்துவிட்டதோ ஒரு ரூபாய் ஜக்காத் கொடுத்தாகவேண்டும். எண்பது ரூபாயானால் இரண்டு ரூபாய், பின் நூத்தி இருபதுக்கு மூன்று ரூபாய் ஆகும். நூறு ரூபாய் இருக்கும்போது ஜக்காத் கடமை ஆகாது. இதை எப்போது கொடுக்க வேண்டும்?

இறைவன், ஜக்காத்தை நோன்புடனோ அல்லது ஹஜ்ஜுடனோ சேர்த்து சொல்லாமல் தொழுகையுடன் சேர்த்து, சேர்த்து ஜக்காத்தை வலியுறுத்துகிறான். அப்படி வலியுறுத்துவதின் நோக்கமே தினமும் கொடுக்கவேண்டும் என்று தெளிவாகத் தெரிகிறது. தினம் கொடுக்க முடியாமல் போகும்பட்சத்தில் ஒரு வாரமோ பத்து நாட்களோ சேர்த்துக் கொடுக்கலாம். ஆனால் ஒரு வருடம் வரை சேர்த்து வைத்தால் அங்கு இவ்வளவா…? என்ற மலைப்பு ஏற்பட்டு நற்செயலை மனம் தடுக்கும்.

ஒரு மனிதனுக்கு உணவு, உடை , இருப்பிடம் இம்மூன்றும் அவசியம் என்றாலும் இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்துவிடலாம்; இருக்கும் உடையை உபயோகித்து நாட்களைக் கழிக்கலாம்; ஆனால் உணவு…..? எனவே அவ்வுணவைப் பெறுவதற்கான வழி வகை செய்யவேண்டும். அது பணமாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. பொருளாகவும் இருக்கலாம், உணவாகவும் இருக்கலாம். வறுமை ஒழியவேண்டும். இதை கருத்தில் கொண்டுதான் இறைவன் தொழுகையுடன் ஜக்காத்தை இணைத்திருக்கிறான் என்று தெளிவாகிறது.

முடியாதவனுக்கு நோன்பு கடமை ஆகாது, வசதியும் தெம்பும் இல்லாதவனுக்கு ஹஜ்ஜு கடமையாகாது. ஆனால் ஏழையாயிருந்தும் நாற்பதுக்குமேல் வருமானம் வந்தால் அங்கே ஜக்காத்து கடமையாகிவிடுகிறது. தொழுகை எந்த அளவுக்கு ஒருவனுக்கு முக்கியமோ அதே முக்கியம்தான் ஜக்காத்தும். நான்தான் ஏழையாயிற்றே எனக்கு ஜக்காத்து கடமை இல்லை என்று சொல்லமுடியாது. யாசிப்பையே தொழிலாக வைத்திருப்பவனுக்கும் இது பொருந்தும்.

ஒருவன் வறுமையில் இருக்கிறான் அல்லது உழைத்து சம்பாதிக்க முடியாத நிலை அல்லது ஆதரவற்ற வயோதிகம் அல்லது பிணி; கேள்விக்குறியாக இருக்கும் இத்தகையவர்களின் அன்றாட வாழ்வு; அவர்களிடம் போய் இதோ ரமலான் நெருங்கிக்கொண்டிருக்கிறது, உனக்குத்தான் தெரியுமே ரமலான் மாதம் முழுவதும் நான் வாரி வழங்குவேன் என்று சொன்னால்…?

அதற்காக ரமலானில் கொடுப்பது தவறு என்றோ அல்லது கொடுக்கக் கூடாது என்றோ பொருள் கொள்ளக்கூடாது. ரமலானில் மட்டும் கொடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. இந்த தவறை காலங்காலமாக ஒவ்வொரு நாட்டிலும் செய்துகொண்டிருப்பதால் ரமலானில் கொடுத்தால் அதிக நன்மை தரும் என்ற கருத்து ஒவ்வோர் மனதிலும் ஆழமாக வேரூன்றிவிட்டது.

“ஒரு பேரிச்சை பழத்தையேனும் தர்மம் செய்யுங்கள்” என்று பெருமானார் கூறுவது, அது வறுமையை நீக்காவிட்டாலும் பசியை தணிக்கும் என்ற நோக்கம் அங்கே காணப்படுகிறது. “அடுத்தவீட்டுக்காரன் பசித்திருக்கும்போது தான் மட்டும் உண்பவர் என்னை சேர்ந்தவர் அல்ல” என்கிறார்கள். அப்படியென்றால் நீ முஸ்லிமே அல்ல என்ற பொருள் அங்கே தொனிக்கிறது. “எந்த விருந்து ஏழைகளுக்கு பங்கு கொடுக்கவில்லையோ அந்த விருந்து நான் வெறுக்கிற விருந்து” என்கிறார்கள். விருந்தில்கூட தர்மத்தை பெருமானார் அவர்கள் நிலைநாட்டுகிறார்கள்.

எப்படிச் செய்யவேண்டும்? அதையும் அழகாகச் சொல்கிறது இஸ்லாம். ’வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது’ அந்த அளவுக்கு ரகசியமாக செய் என்கிறார்கள் பெருமானார் அவர்கள். சுருங்கச் சொன்னால் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் மட்டுமே தெரியவேண்டிய ஒன்று விழாவாக இருக்கக்கூடாது.

இஸ்லாம் சொல்லும் வழியில் தர்மம் செய்து வந்தால் ’வறுமைக்கோட்டுக்கு கீழே…’ என்ற நிலை வருவது எங்ஙனம்…?

No comments: