Monday, February 15, 2010

ஞானி பீர்முஹம்மது(ரஹ்)



தக்கலை பீர் முஹம்மது அப்பா


இஸ்லாம் அகிலமெல்லாம் பரவியபிறகு அந்தந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் வாழ்வியலிலும் வழிபாட்டிலும் மார்க்கச் சட்டங்களைப் பின்பற்றி வந்தாலும் கலாச்சாரப் பண்பாட்டு முறையில் தங்கள் பகுதியின் சமூக நாகரீகத்திற்குட்பட்டே வாழ்ந்து வருகிறார்கள். உணவு, உடை, மொழி, சடங்கு, சம்பிரதாயங்களில் இவற்றை காணமுடிகிறது. இவை மேலோங்கி இஸ்லாம் முற்றிலும் மாறுபட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுவிடாமலிருக்க "ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப்
புதுப்பிக்கக்கூடியவர்கள் (முஜத்திதுகள்) தோன்றுவார்கள்" என பெருமானார் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

சூஃபியாக்கள் அல்லது ஞானிகள் என்றழைக்கப்படும் வலிமார்கள் இறைவணக்கத்தோடு நின்றுவிடாமல் அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி வளர்ச்சியிக்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். மக்களின் அறிவுத்தாகத்திற்கேற்ப இறைவிளக்கங்களை அள்ளித்தந்திருக்கிறார்கள். அரபியில் மட்டுமல்லாது வட்டார மொழியிலும் புலமை பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள். தமிழைப் பொருத்தவரை அவர்களின் பங்கு மகத்தானது; வரையறைக்கு அப்பாற்பட்டது. ஆனால் தூரதிருஷ்டவசமாக அவைகள் மறைக்கப்பட்டன; இன்று மறுக்கப்படுகின்றன.

தமிழ் புலவர்கள் விட்டுச் சென்ற மரபைத் தொடர்ந்து இறைநேசர்களான சூஃபிப் பெரியார்களும் மஸ்தான்களும் பக்திச்சுவை சொட்டச்சொட்ட இறையுணர்வில் தன்னை மறந்து இன்பலயத்தில் எண்ணிறந்த மெஞ்ஞானப் பாக்களைப் பாடியுள்ளனர்.

ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பற்ற இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே தலைசாய்க்கவேண்டும்; தான் என்ற அகந்தையை மாய்த்து ஏகனின் அடைக்கலம் அடையவேண்டும்; அண்டசராசரங்களுக்கும் அதிபதியான அவனின் அடிமை என்ற எண்ணம்
எப்போதும் இருக்கவேண்டும்; தன்னிடம் ஒன்றுமே இல்லை, தான் ஆட்டுவிக்கப்படுபவன், எல்லாம் அவனே என்ற மாறாத உணர்வு எந்தகாலமும் இருந்துக்கொண்டே இருக்கவேண்டும். அவனே உள்ளத்தில் குடி இருக்கிறான், உலகத்தின்மேல் அருள் மழை பொழிகிறான்; உயிர்பிக்கிறவனும் அவனே, மரிக்கச் செய்பவனும் அவனே; சுருங்கச் சொன்னால் 'தௌஹீது' என்பது அல்லாஹ்தான் என்ற உண்மையில் ஊறித் திளைத்த ஞானிகளில் ஒருவரான பீர் முஹம்மது அப்பா அவர்கள் தாம் பெற்ற நம்பிக்கையை நம் நெஞ்சிலும் பதிக்கின்றார்கள் இங்கே..

"தந்தையிலி தாரமிலி தானவனு நீயே
தன்மைகொ டெவர்க்குமொரு தாபரமு நீயே
மைந்தரிலி யன்னையிலி மன்னவனு நீயே
மண்ணிலடி யார்க்கிரணம் வழங்குவது நீயே
சிந்தைதனி லிடறுதனைத் தீர்த்தருள்வை நீயே
தேட்ட மறிந்தெனக்குதவி செய்பனு நீயே
அந்தமிலி நீயெனக்கோ ரிழிவு வராமல்
ஆதியே நானுன் னடைக்கலம தானேன்"
(1)

இஸ்லாமியப் புலவர்கள் இறைவனையும் அவனின் தூதர் பெருமானார் ரசூல்(சல்) அவர்களையும் புகழ்ந்து பாடுவதோடு நிறுத்திவிடாமல் சித்தர்களாகவும் இறை பித்தர்களாகவும் இருந்து அகமியத்தை, அகமியத்தின் ரகசியத்தை அள்ளித் தந்திருக்கிறார்கள். அத்தகைய சித்தர்கள் குணங்குடி மஸ்தான் சாஹிபு(ரஹ்) அவர்களும் தக்கலை பீர் முஹம்மது அப்பா(ரஹ்)அவர்களும் இன்னும் சிலருமாவார்கள்.

சித்தர்கள் என்றாலே இரும்பைப் பொன்னாக்கும் வித்தையைக் கற்றவர்கள் என்ற நம்பிக்கை பாமரர்களுக்குமட்டுமல்ல படித்தவர்களுக்கிடையேயும் இருந்து வந்தது; இன்னமும் இருந்து வருகிறது. ஆனால் இரும்பு போன்ற இதயத்தைப் பொன் போன்று மாற்றவைப்பவர்கள் என்ற எண்ணம் மட்டும் இல்லை. இவர்கள் பஞ்சை மனிதர்களுக்கு எப்பாலை ஊட்டத்தவறினாலும்
ஞானப் பாலை மட்டும் ஊட்டத் தவறியதே இல்லை. ஆனால் ஒரு சங்கடம்! எதனையும் நேரிடையாகச் சொல்லாமல் யாவற்றையும் மறைமுகமாகவே சொல்லியிருக்கிறார்கள்.

சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி பரிபாஷை சொற்களால் அலங்கரிக்கப்பட்டு படிப்பவர்கள் மயக்கமேற்படும் வகையில் அமைந்திருக்கும். இத்தகைய சொற்களிலிருந்து வரும் கருத்துக்கள் புடம்போட்ட பத்திரைமாற்று தங்கம்போல் துலங்கும். ஆனால் அவற்றின் உட்கருத்தைப் புரிந்துக்கொள்வது எளிதான காரியமன்று. இரும்பை தங்கமாக்கும் இரசவாதாம் எத்துனைக் கடினமானதோ அதைவிடக் கடினமானது அதன் உண்மைப் பொருளை அறிவது. இந்த இரசவாதம் அகமியத்தை மட்டுமே உணர்த்துகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

புறச்சடங்குள் இல்லாது அகமியத்தை அடையமுடியாது என்பதால் புறச்சடங்குகளைப் பற்றியும் அவற்றின் செயல்முறைகள் பற்றியும் அங்காங்கே விளக்கியுமிருக்கின்றார்கள். அண்டகோடிகள் படைக்குமுன்பாக 'கன்ஜு மஃக்ஃபி' என்றழைக்கப்படும் மறைவான பொக்கிஷமாக இருந்த இறைவனை, அவன் நிலைகளை, அவன் பண்புகளை அப்பா அவர்கள் விளக்குகிறார்கள் 'பிஸ்மில்க்குறம்' என்ற ஞானப்பாவில்.

"ஆதிபெரியோனே றப்பில் ஆலமீனேயாதி
அஹதுநிலைசமதாக ஆலநிரைந்தோனே
அஹதியத்திலுஹதியத்தும் வாகிதத்துமாகி
அரூபவுரூபத்துள்ளே தானல்லவோதாத்து
தாத்தல்லவோ பாத்தினது லாகிறுசிபாத்து
லாகிறுக்குள் பாத்தினானான் ரகசியத்தின் பொருளே...."


உலகிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் அருவமாக இருந்து நடத்தப்படுகிறதுதான் தாத்து என்றும் தாத்தை பாத்தின் - மறைவானது என்றும் சிபத்தை லாஹிர் - வெளிப்பாடானது என்றும் வெளிப்பட்ட பொருட்களில் மறைவாக இருப்பது மகா ரகசியமாக இருக்கிறது என்றும் நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் பொருள்படுத்துகிறார்கள்.

அவர்களின் வரலாறு அவர்களின் பாடல்கள்மூலமாகவே அறியமுடிகிறதே தவிர வேறு வகையில் அறியமுடியவில்லை. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அல்லது மாதிஹர் ரசூல் சதக்கத்துல்லா அப்பா (1632 - 1703)காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை கீழ் வரும் பாடல்மூலம் அறியமுடிகிறது.

"நினைவுடன் பொருளு நிறைந்திடும்வகைநீதீயும் பிசுமிலினோடே
அனந்தமுந்தெரிய அஹுமதருரைக்க ஆதிதன் கிருபையினாலே
கனசயமாரும்மவுலானாறூமி கழறினார் அகதியத்ததிலே
மனதுமகிழ அறிவையுமறிந்து வழுத்தினார்சதக்கத்துல்லாவே"


நினைவில் கலந்திருக்கின்ற எல்லா ஞானப் பொருள்களையும் கூட்டித் திரட்டி, பிஸ்மில்லா என்கிற திருநாமத்துடன் நமது நபிகள் நாயகம்(சல்) அவர்கள் அருளிச்செய்தார்கள். அதை ஒன்றாகத் திரட்டி ஹலரத் மௌலான ரூமி(ரஹ்) அவர்கள் தமது மஸ்னவி ஷரீஃபில் சொன்னார்கள். அதனை ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் மொழி பெயர்த்துச் சொல்ல அதை எனது ஞானமணிமாலை, மஃரிபத்துமாலை முதலிய நூல்களுக்குச் சரிபார்த்து உலகத்தார்கள் விளங்கிக் கொள்ளும்படியாக குறமாகப் பாடினேன். (2)

"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்
தன்பால னிக்கதையைச் சாற்றினான் - வெங்காயம்
சுக்கோ சிவனிருப்பன் சுரோணிதமோ வல்லவிஞ்சி
ஹக்கோவென் றுள்ளறிந்தக் கால்"


திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் சிறுமலுக்கர் என்பாரின் செல்வப்புதல்வராகப் பிறந்து இறைவனின் தன்மைகள் யாவையும் தன்னிடத்து வருவித்துக்கொண்டவர்கள். அவனில் தன்னை நுழைத்துக்கொள்ளும் நுட்பமான ஞானத்தைப் பெற்றிருந்த ஹுசைன் மன்சூர் ஹல்லாஜ்(ரஹ்) அவர்களின் வழிமுறையில் வந்துவிட்டவர் என்று பறைச்சாற்றுகிறார்கள்.
இஞ்சி, நீரும் ஈரமும் பெற்றுள்ளது, அது உலர்ந்துவிட்டால் சுக்காக மாறிவிடுகிறது, அதற்கு என்றும் அழிவில்லை. ஐம்புலன்களையும் அடக்கியாண்டு தூங்காமல் தூங்கி, சாகாமல் செத்து சமாதி நிலை எய்துவிடுகிறவர்களை அந்த சுக்குக்கும் மற்றவர்கள் அனைவரையும் வெறும் இஞ்சியாகவும் பரிபாஷை மூலம் காட்டுகிறார்கள் அப்பா அவர்கள்.(3)

தென்னாட்டு கஜ்ஜாலி என்ற புகழைப் பெற்ற இவர்களை எத்துனைபேருக்குத் தெரியும்?

நன்றி:
(1) இலக்கியப் பேழை - கே. பி. எஸ். ஹமீது, பாவலர் பதிப்பகம்.
(2) பிஸ்மில்க்குறம் ஞான விளக்கவுரை - செவ்வல் மாநகரம் மகாவித்துவான் எம்.ஏ. நெய்னா முகம்மது பாவலர்
(3) இலக்கியப் பேழை - கே. பி. எஸ். ஹமீது, பாவலர் பதிப்பகம்.

No comments: